தேநீர்தான் விற்கிறார், மாத வருமானமோ 50 லட்சம் ரூபாய்! ஒரு ஆடிட்டரின் அசத்தல் தொழில்!
09-Dec-2023
By நரேந்திர கௌசிக்
புதுடெல்லி
புதுடெல்லியைச் சேர்ந்த ராபின் ஜா, நிஜமாகவே தேநீர் கோப்பையில் புயலைக் கிளப்புகிறார். 2013-ம் ஆண்டு அவரது தேநீர் விற்கும் நிறுவனத்தின் மாத வருமானம் 2 லட்சம் ரூபாய் ஆக இருந்தது. இந்த நான்கு வருடத்துக்குள் அந்த வருவாய் மாதம் 50 லட்சம் ஆகி இருக்கிறது. தேநீர் மற்றும் நொறுக்குத் தீனிகள் விற்பனையில்தான், இது போன்று 2400 சதவிகிதம் அவருக்கு வருவாய் அதிகரித்திருக்கிறது.
ராபின்(30) ஒன்றும், நமது தெரு மூலையில் இருக்கும் சாதாரண டீ கடை வைத்திருப்பவர் அல்ல. புதுடெல்லியில் டீபாட் (tpot) எனும் 21 சங்கிலித் தொடர் டீ பார்களைத் தொடங்கி இருப்பவர்.
|
2020-ம் ஆண்டுக்குள் நாடு முழுவதும் 200 டீபாட் பார்களைத் தொடங்க வேண்டும் என்று டீ பாட்டின் தலைமைச் செயல் அதிகாரி ராபின் ஜா, இலக்கு நிர்ணயித்துள்ளார். படங்கள்: நவ்நீதா
|
ஒரு சார்டட் அக்கவுண்டண்ட் ஆன அவர், எர்னஸ்ட்&யெங்க் ((E&Y),) நிறுவனத்தின், இணைத்தல் மற்றும் கையகப்படுத்துதல் பிரிவின் நிர்வாகியாக இருந்தார். இவ்வளவு விரைவாக வளர்ச்சியடைவோம் என்று ஒருபோதும் கனவில் கூட அவர் நினைத்துப் பார்த்ததில்லை.
எர்னஸ்ட்&யெங்க் நிறுவனம், குளோபல் கன்சல்டன்ட்ஸ் ப்ரோடிவிட்டி ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியபோது கிடைத்த சம்பளத்தின் சேமிப்பு, சில நண்பர்களின் உதவிகள் , அஜித் குமார் என்ற சந்தை நிர்வாகி, ஆசாத்கான் எனும் சார்ட்டட் அக்கவுண்டண்ட் ஆகியோரிடம் வாங்கியது உட்பட 2013-ம் ஆண்டின் தொடக்கத்தில் ஆரம்ப முதலீடாக, 20 லட்சம் ரூபாய் திரட்டினார். தெற்கு டெல்லியில் மாளவியா நகரில் முதல் டீ கடை தொடங்கினார்.
முன்னதாக, 2012-ம் ஆண்டு ஏப்ரல் 13-ம் தேதி அவர்கள் ஷிவந்தா அக்ரோ ஃபுட்ஸ் எனும் ஒரு பிரைவேட் லிமிடெட் கம்பெனியைத் தொடங்கினர். அதில் ஜா, சி.இ.ஓ வாகவும், ஆசாத் கான், செயலாக்கத் தலைவராகவும், அஜித் குமார் சந்தைப் பிரிவின் தலைவராகவும் இருந்தனர்.
“நான் எர்னஸ்ட்&யெங்க் நிறுனத்தில் பணியாற்றும் போது, புரமோட்டர்ஸ், நிறுவனர்கள் மற்றும் ஸ்டார்ட் அப் உரிமையாளர்களிடம் பேசியிருக்கிறேன். அப்போது, ஏதாவது ஒன்றைச் சொந்தமாகத் தொடங்க வேண்டும் என்ற எண்ணம் எனக்குள் தோன்றியது,” என்கிறார் ராபின். “அவர்கள் ஒவ்வொருவரும் ஒரு நோக்கத்தைக் கொண்டிருந்தனர். நானும் ஏதாவது செய்ய வேண்டுமா என்று என்னை நானே கேட்டுக் கொண்டேன்.”
|
டீபாட் பாரில், தேநீர் தவிர, தாய், இட்டாலியன், கான்டினென்டல் நொறுக்குத் தீனிகளும் விற்கின்றனர்.
|
தொழில் தொடங்குவது குறித்து நண்பர்களுடன் தீவிரமாக ஆலோசனை செய்தார். அதன் பின்னர்தான் தேநீர் விற்பனை நிறுவனம் தொடங்க வேண்டும் என்று முடிவு செய்தார். ராஞ்சியில் ஒரு வங்கியின் மேலாளராக இருக்கும் அவரது தந்தை நரேந்திர ஜா, அவரது தாய் ரஞ்சனா ஜா ஆகிய இருவரும், இந்தத் தொழில் யோசனைக்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். இது வெற்றி பெறுமா என்று பயந்தனர். இறுதியில் மகனுக்காக விட்டுக் கொடுத்தனர்.
தமது செயல் திட்டத்தை முன்னெடுப்பதற்காக தேநீர் கடை சந்தையின் நிலை, தேநீருக்கான தேவைக்கும், விநியோகத்துக்கும் இடையேயான நிலை குறித்த சர்வே போன்ற ஆய்வுகளில் ஜா ஈடுபட்டார்.
தொழில் நடைமுறைகளை உருவாக்கும் தமது அனுபவத்தைக் கொண்டு, பல்வேறு தேயிலைத் தோட்டங்கள், டெல்லியில் உள்ள கஃபேக்களில் தேநீர் வல்லுநர்களைத் தேடிச் சென்று பார்த்தார்.
|
இறுதியாக கடந்த 2013-ம் ஆண்டு தெற்கு டெல்லியில் மாளவியா நகர் மெயின் மார்க்கெட்டில், 800 ச.அடி வாடகை இடத்தில் டீபாட் பிறந்து வடிவம் பெற்றது. ஆரம்ப கட்டத்தில் 10 ஊழியர்கள் பணியாற்றினர். 25 வகையான தேநீர் மற்றும் சில நொறுக்குத் தீனிகளும் விற்றனர்.
“சின்னதாகத் தொடங்க விரும்பினோம்,” என்று ராபின் நினைவு கூறுகிறார். டெல்லிப் பல்கலைக்கழகத்தின் ராம்ஜாஸ் கல்லூரியில் பி.காம் படித்த ராபின், அங்கிருந்து விலகி, தொலைத் தொடர்பு கல்வி முறையில் வணிக வியலில் பட்டம் பெற்றார். அதே நேரத்தில் சார்டர்ட் அக்கவுண்டண்சியும் முடித்தார். தொடக்கத்தில், இந்தச் சங்கிலித் தொடர் கடைகளைத் தொடங்க வேண்டும் என்ற நோக்கத்தைக் கொண்டிருக்கவில்லை அவர்.
டீபாட் வெற்றி பெறுமா இல்லையா என்று உறுதியாகத் தெரியாத நிலையில் எர்னெஸ்ட்&யெங்ஸ் நிறுவனத்தில் 2013-ம் ஆண்டு ஜூன் வரை பணியாற்றினார். அந்த நேரத்தில், அவருக்குள் சுயமாக இருக்கும் தொழில் முனைவு திறன், அவரை அவரது நிறுவனத்துக்காக முன்னெடுத்துச் சென்றது.
தம்முடைய திட்டங்களை முன்னெடுத்துச் செல்வதற்காகவும், தவறுகளை சரி செய்வதற்காகவும் மாளவியா நகர் டீபாட் கடையில் முதல் மூன்று மாதங்கள் வாடிக்கையாளர்களின் கருத்துகளைப் பெற்றார்.
|
உங்களுடைய சொத்தக் கடையில் சாப்பிடுவதில் இருக்கும் ஆனந்தம் வேறு எதிலும் இல்லை.
|
இந்த ஆய்வுகள் மூலம், அவருடைய வாடிக்கையாளர்கள் 25-35 வயதுக்கு உட்பட்டவர்கள் என்பது தெரிய வந்தது. அலுவலகம் செல்வோர் தேநீர் குடிக்க தினமும் வந்து செல்வதும் தெரிந்தது.
இதையடுத்து, அலுவலகங்கள் அருகில் டீபாட் தொடங்குவது என்று முடிவு செய்தார். அதன்படி முதன் முதலாக குருகிராமில் 2014-ம் ஆண்டு ஜூனில் இபிப்போ (ibibo) என்ற முன்னணி ஆன்லைன் பயணமுன்பதிவு நிறுவனத்தின் வளாகத்தில் டீபாட் தொடங்கினார். “அலுவலகம் இருக்கும் பகுதியில் வாடிக்கையாளர்களை ஒருங்கிணைப்பது எளிதாக இருந்தது,” என்று அவர் சுட்டிக்காட்டுகிறார்.
டிபாட்டின் 21 கடைகளில் பாதிக்கடைகள் புதுடெல்லி, கே.ஜி.மார்க்., நொய்டா, உலக வர்த்தக டவர் போன்ற இடங்களில் அலுவலகங்கள் அமைந்திருக்கும் பகுதிகளில் இருக்கின்றன.
மீதம் உள்ள கடைகள், சந்தைகள், மெட்ரோ ரயில் நிலையங்கள், இந்திரா காந்தி சர்வதேச விமானநிலையம் ஆகிய இடங்களில் அமைந்திருக்கின்றன.
இன்றைக்கு ராபினின் டீபாட் கடைகளில் பிளாக், ஊலாங்க், கிரீன், வொய்ட், ஹெர்பல் உள்ளிட்ட வகைகளில் 100க்கும் மேற்பட்ட விதவிதமான தேநீர் விற்பனை செய்கின்றனர்.
அசாம் மற்றும் டார்ஜிலிங்கில் உள்ள தேயிலை தோட்டங்களுடன் இணைந்து டீபாட் ஒவ்வொரு ஆண்டும் புதிய சுவையான ஐந்து வகை தேநீரை அறிமுகம் செய்கின்றனர்.
|
ராபினின் வாழ்க்கை கப் & சாசருக்குள் சுழன்று கொண்டிருக்கிறது.
|
முழுமையான டீ-நாஷ்டா என்பதுதான் அவர்களின் கோஷமாக இருக்கிறது. குக்கீஸ், மஃப்பின்ஸ், சான்ட்விட்ச், வடா பாவ், கீமா பாவ் உள்ளிட்ட மேலும் பல்வேறு வகையான தாய், இத்தாலியன் மற்றும் கான்டினென்டல் நொறுக்குத் தீனிகளை டீபாட் விற்பனை செய்கிறது.
“தரத்தில் கட்டுப்பாடு, தொலைநோக்கு, எங்கள் வாடிக்கையாளர்களைப் புரிந்து கொள்ளுதல் ஆகியவையே எங்கள் வெற்றியின் ரகசியங்கள்,” என்கிறார் ராபின்.
டீபாட் கட்டமைத்ததோடு இல்லாமல், 2020-ம் ஆண்டுக்குள் நாடு முழுவதும் 10 முக்கியமான நகரங்களில் 200 கடைகளைத் தொடங்க வேண்டும் என்று திட்டமிட்டிருக்கிறார். ஹெர்பல், ஊலாங்க் எனும் சீனர்கள் அருந்தும் தேநீர் மற்றும் பால் இல்லாத கருப்பு டீ ஆகியவற்றுக்குத்தான் எதிர்காலம் இருக்கிறது என்று நம்புகிறார்.
ஜாஸ்பெர் ஃபோர்ட் (Jasper Fforde) என்ற இங்கிலாந்து நாவலாசிரியர் தம்முடைய ஷேட்ஸ் ஆஃப் கிரே(Shades of Grey,) என்ற நாவலில் இப்படி எழுதி இருக்கிறார்.. “ஒரு வெந்நீர் குளியல், ஒரு கப் டீ ஆகியவற்றின் மூலம் சரிசெய்ய முடியாத எந்த பிரச்னையும் இந்த பூமியில் இல்லை.”
குளியல் விருப்பத்தேர்வுதான். ஆனால் தேநீர்- தவிர்க்க முடியாத ஒன்று!
அதிகம் படித்தவை
-
மெத்தென்று ஒரு வெற்றி
மாதவன் தமது 55 வது வயதில் சொந்த தொழில் தொடங்கினார். 30 ஆண்டுகள் கர்ல் ஆன் நிறுவனத்தில் பணியாற்றிய அனுபவம் அவருக்கு சொந்த தொழிலில் வெற்றியைக் கொடுத்தது. இன்றைக்கு மெத்தை சந்தையில் உயர்ந்து நிற்கிறார் மாதவன். பி.சி.வினோஜ் குமார் எழுதும் கட்டுரை
-
கோடிகளுக்கு ஒரு டாக்ஸி பயணம்!
சிறுவனாக இருக்கும்போது பசியே பெரிய எதிரி. பிச்சை எடுத்து வாழ்ந்தார். மூன்று ஆண்டுகள் ஓர் அலுவலக துப்புரவுத்தொழிலாளியாகவும் வேலை பார்த்தவர். இப்போது 40 கோடிக்கு டாக்ஸி தொழிலில் வர்த்தகம் செய்யும் அந்த மனிதரின் வாழ்க்கையை உஷா பிரசாத் விவரிக்கிறார்
-
பண்ணையிலிருந்து வீட்டுக்கு!
கிராமத்தில் பிறந்து வளர்ந்த செல்வகுமார் தன் வேர்களுக்குத் திரும்பி இருக்கிறார். பெங்களூரு நகரில் பார்த்த வேலையை விட்டுவிட்டு கோவைக்குத் திரும்பி வந்து வில்ஃபிரஷ் நிறுவனத்தைத் தொடங்கி விவசாயிகளுக்கும் வாடிக்கையாள்ர்களுக்கு பலன் தரும் முயற்சியில் வெற்றி பெற்றுள்ளார். உஷா பிரசாத் எழுதும் கட்டுரை.
-
மாற்று யோசனை தந்த வெற்றி
ஐஐடி மாணவர் ரகு, அமெரிக்கா செல்லும் திட்டத்தை கைவிட்டு, 20 ஆயிரம் ரூபாய் முதலீட்டில் வாகனங்களில் விளம்பரம் செய்யும் மாற்று யோசனையில் ஒரு நிறுவனம் தொடங்கினார். இன்றைக்கு அவரது நிறுவனம் ஆண்டுக்கு 32 கோடி ரூபாய் வருவாய் ஈட்டுகிறது. டெல்லியில் இருந்து பார்தோ பர்மான் எழுதும் கட்டுரை
-
அநாதை இல்லத்திலிருந்து அமெரிக்காவுக்கு
அநாதை இல்லத்திலிருந்து அமெரிக்காவுக்கு அவருக்கு 16 வயதில் திருமணம். தினக்கூலி 5 ரூபாய்க்கு வேலை பார்த்தார். வளர்ந்ததோ அனாதை இல்லத்தில். இன்று அந்த பெண் 15 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வணிகம் செய்யும் ஒரு நிறுவனத்தின் உரிமையாளர். அஜுலி துல்சியான் இந்த வெற்றிக்கதையை விவரிக்கிறார்
-
புதுமையான உணவு
குடும்பத்தின் வறுமையைப் போக்க எட்டு வயதில் டீ விற்கத் தொடங்கியவர் விஜய் சிங் ரத்தோர். இன்றைக்கு ஜானி ஹாட் டாக் என்ற விந்தையான பெயரைக் கொண்ட உணவகத்தின் உரிமையாளர். ஒரு ஹாட் டாக்கை 30 ரூபாய்க்கு விற்கும் அவர் ஆண்டுக்கு 3.5 கோடி ரூபாய் வருவாய் ஈட்டுகிறார். ஆகான்ங்ஷா துபே எழுதும் கட்டுரை.