Milky Mist

Friday, 19 April 2024

பாலில் இருந்து பன்னீருக்கு… உழைப் ‘பால்’ உயர்ந்து 120 கோடிக்கும் மேல் வர்த்தகம் செய்பவர்!

19-Apr-2024 By பி.சி. வினோஜ்குமார்
ஈரோடு

Posted 23 Jun 2017

 தொழில்துறையில் இறங்கியபோது அவருக்கு சாதகமாக எதுவும் இல்லை. அவருக்கு 16 வயது. எட்டாம் வகுப்பில் தோற்றிருந்தார்.  அவரது அப்பா நடத்திக்கொண்டிருந்த பால் தொழில் தடுமாறி, மூடும் நிலையில் இருந்தது.

சதீஷ்குமார் விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர். ஈரோடுக்கு அருகே ஒரு கிராமத்தில் அவர்களுக்கு 20 ஏக்கர் நிலம் இருந்தது. அவருடைய ஒரே பலம்: அவர் சவால்களைச் சந்திக்க தயாராக இருந்தார். பெரிதாக கனவுகாணத்  துணிந்திருந்தார்.

https://www.theweekendleader.com/admin/upload/jan17-15-LEAD1.jpg

 ஈரோடு அலுவலகத்தில் தன் குழுவுடன் சதிஷ்குமார், எம்டி, மில்கிமிஸ்ட்

இன்று தன் 40 வயதில் சதீஷ்குமார் மில்கி மிஸ்ட் என்கிற பால்பொருட்கள் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர். அவரது பொருட்கள் அமுல், ஹட்சன் ஆகிய பிராண்ட்களுடன் கடும் போட்டியில் உள்ளன.

“2013-14ல் எங்கள் வர்த்தகம் 121 கோடிகள். 2020ல் 3000 கோடிகள் வர்த்தகம் செய்யவேண்டும் என்பது என் இலக்கு” என்கிறார் சதீஷ். 2007-08-ல் இந்நிறுவனத்தின் வர்த்தகம் 13 கோடியில் தான் இருந்தது. இன்று இந்நிறுவனம் இவ்வளவு வளர்ச்சி பெற்றிருக்கிறது என்பதிலேயே அவரது நம்பிக்கைக்கான காரணத்தைப் புரிந்துகொள்ளலாம்.

13 கோடியில் இருந்து, 2008-09-ல் 25 கோடிகளாகவும்  2009-10ல் 35 கோடிகளாகவும்  2010-11ல் 39 கோடிகளாகவும் 2011-12-ல் 48 கோடிகளாகவும்  2012-13-ல் 69 கோடிகளாகவும் 2013-14-ல்  121 கோடிகளாகவும் வர்த்தகம் வளர்ந்துள்ளது.  இவர்களின் வர்த்தகத்தில் 40 சதவீதம் பன்னீர் விற்பனையிலும், 30 சதவீதம் தயிர் விற்பனையிலும் கிடைக்கிறது.

ஈரோட்டில் இருந்து 10 கிமீ தொலைவில் உள்ள சித்தோடு என்ற இடத்தில் மில்கி மிஸ்ட் தயாரிப்பு நிலையம் உள்ளது. அங்கு 300 தொழிலாளர்கள் பணிபுரிகிறார்கள். பன்னீர், வெண்ணெய், தயிர், சீஸ் வகைகள், நெய், லஸ்ஸி, பாலாடை, பாயாசம் போன்றவை தயாரிக்கப்படுகின்றன. பெரும்பாலான பொருட்கள், பாதி- தானியங்கி முறைகளில் தயார் ஆகின்றன. கடுமையான தரக்கட்டுப்பாடு உள்ளது என்று நமக்கு அந்நிலையத்தை சுற்றிக்காண்பிக்கும் ஊழியர் ஒருவர் விளக்குகிறார்.


1992ல் தன் பள்ளிப்படிப்பை நிறுத்திவிட்ட, சிறு நகரத்தைச் சேர்ந்த இவர் எப்படியொரு வெற்றிக்கதையை நிகழ்த்திக்காட்டினார்?

சதீஷின் தந்தைக்கு தொழிலின் மீது ஆர்வம் உண்டு. 1983-ல் அவர் ஒரு விசைத்தறி யூனிட்டை தன் சகோதரருடன் இணைந்து தொடங்கியவர். ஆனால் அது நன்றாகப் போகவில்லை என்பதால் அதை மூன்று ஆண்டுகளில் விற்றுவிட்டார்.

பின்னர் சகோதரர்கள் இருவரும் பால் தொழில் செய்தார்கள். “பால் வாங்கி அதைக் குளிரூட்டி பெங்களூருக்கு கேன்களில் அனுப்பினார்கள். தினமும் 3000 லிட்டர்கள் பால் விற்றனர்,” என்கிறார் சதீஷ்.

ஆனால் அந்த முயற்சி தொடரவில்லை. 1992ல்  சதீஷின் அப்பா தொழிலை மூடிவிட முடிவு செய்தார். அச்சமயத்தில்தான் சதீஷ், உள்ளே நுழைந்து சாதிக்க முனைந்தார்.

“படிப்பை நிறுத்திவிட்டு தொழிலில் இறங்க நான் முடிவு செய்தபோது குடும்பத்தில் எதிர்ப்பு பெரிதாக இல்லை. அவர்கள்  என் ஆர்வத்தை அனுமதித்தனர்,” என்கிறார் சதீஷ். அச்சமயம் ஈரோட்டில் உள்ள இந்தி கல்வி நிலையத்தில் படித்துக்கொண்டிருந்தார்.

தொழிலுக்காக யோசனைகளைத் தேடிக்கொண்டிருந்தபோது பெங்களூரில் ஒருவர் பாலில் இருந்து பன்னீர் தயாரிப்பதை அறிந்தார்.

 “நாம் ஏன் பன்னீர் செய்யக்கூடாது என்று நினைத்தேன். ஆனால் அதை எப்படிச் செய்வது என்று தெரியவில்லை. உதவக்கூடிய யாரையும் தெரியவில்லை. தகவல்களைப் பெறுவது அப்போது எளிது அல்ல,” அவர் சொல்கிறார்.

பாலைச் சூடாக்கி வினிகரைச் சேர்த்தால் பன்னீர் கிடைக்கும் என்று தெரிந்தது. அதைச் செய்துபார்த்து செய்துபார்த்து அந்த முறையை மேம்படுத்தினார்கள். நல்ல தரமுள்ள பன்னீர் செய்ய முடிந்தது.

1993-ல் சதீஷ் தாங்கள் முதலில் தயாரித்த 10 கிலோ பன்னீரை பெங்களூருக்கு ஒரு பையில் போட்டு அனுப்பினார்.  “ஆரம்பத்தில் நாங்கள் பன்னீரை மொத்தமாக விற்றோம். எங்களுக்கு பிராண்ட் பெயர் எதுவும் இல்லை. 1995-ல் தினமும் 50- 100 கிலோ பன்னீர் விற்க முடிந்தது,” என்கிறார்.

1995 – ல் அவர்கள் பால் விற்கும் தொழிலில் இருந்து முழுவதும் விலகி, வாங்கும் அனைத்து பாலையும் பன்னீர் செய்யப் பயன்படுத்தினர்.
 இரண்டு ஆண்டுகள் கழிந்தன. அவர்கள் விற்கும் பன்னீர் அளவு அதிகரித்ததும் சில்லரை விற்பனை செய்யலாம் என்று சதீஷ் முடிவெடுத்தார்.

https://www.theweekendleader.com/admin/upload/sathish1.jpg

அடுத்த ஆண்டுகளில் 100 சதவீத வளர்ச்சி இருக்கும் என்று சதீஷ் நம்புகிறார் (படம்: ஹெச்.கே.ராஜசேகர்)


“எங்களுக்கு ஒரு பிராண்ட் பெயர் தேவைப்பட்டது. ஒரு இணைய தள கடைக்குச் சென்று பெயரைத் தேடினேன். மில்கி மிஸ்ட் என்ற பெயர்  கிடைத்தது. அது எளிதில் உச்சரிக்கக்கூடியதாகவும் ஞாபகத்தில் நிற்பதாகவும் எல்லோருக்கும் பிடிக்கக்கூடியதாகவும் இருந்தது. பிராந்திய, மத அடையாளம் இருக்கக்கூடாது என்பதில் கவனமாக இருந்தேன்,” என்கிறார் அவர்.

சில்லரை விற்பனையில் இறங்கியதும் எந்திரங்களில் முதலீடு செய்தனர். சிறிய அளவில் 5 லட்ச ரூபாய் போட்டு ஆரம்பித்தனர். 1998-ல் 10 லட்ச ரூபாய் வங்கிக்கடன் பெற்று பாதி- தானியங்கி ஆலை ஒன்று அமைத்தனர். அதிலிருந்து ஒவ்வொரு காலகட்டத்திலும் எந்திரங்களை மேம்படுத்திக்கொண்டே வருகிறார்கள்.

தொண்ணூறுகளின் கடைசியில் மில்கி மிஸ்ட் பன்னீர் சென்னை, பெங்களூரு, கோயம்புத்தூர் ஆகிய நகரங்களில் சில கடைகளில் மட்டும் கிடைத்தது. அப்போது மொத்தமாக விற்பனை செய்வதிலேயே அவர்களின் 80 சதவீத வர்த்தகம் நடந்து வந்தது.

2001ல் தங்கள் தொழிலகத்தை வாடகை இடத்தில் இருந்து சித்தோட்டில் சொந்த இடத்துக்கு  மாற்றினர். அப்போது அவர்களின் விற்பனை ஆண்டுக்கு 2 கோடி ரூபாய்கள்.

அப்போது பால் பாக்கெட்டுகள் விற்பதிலும் ஈடுபட்டனர். சதீஷ் அது தவறு என்று இப்போது கூறுகிறார்.

பாலை விற்க நிறைய இலவச சலுகைகளை அறிவித்தனர். ஆனால் விரைவில் பன்னீர் செய்வதற்கு தேவையான பால் கிடைக்காமல் போனது.
2005ல் பால் பாக்கெட்டுகள் விற்பனையை நிறுத்தினர். பால் பொருட்களின் மீது மட்டும் கவனம் செலுத்த முடிவு செய்தனர். கோவா, நெய் போன்றவற்றைச் செய்து மொத்தமாக விற்றனர்.

2007ல் தங்கள் நிறுவன சின்னத்தை உருவாக்கி, பிராண்டை விளம்பரப்படுத்தினர். 2008-10ல் தங்கள் குளிர்சாதன வசதிகள், நிர்வாக நடைமுறைகள்,  தென்னிந்திய விநியோகச் சங்கிலி ஆகியவற்றை வலுப்படுத்தினர்.


2010-ல் மில்கி மிஸ்ட்டுக்காக முதல் டிவி விளம்பரம் வெளியிடப்பட்டது. அது தென்னிந்தியாவின் லட்சக்கணக்கான மக்களிடையே நல்ல அறிமுகம் கொடுத்தது. 

“டிவி விளம்பரம் நல்ல  தெளிவான அறிமுகம் அளித்தது. மில்கி  மிஸ்ட் என்றாலே பன்னீருடன் தொடர்புப் படுத்தித்தான் பார்க்கவேண்டும். மற்ற நிறுவனங்களுக்கு பன்னீர் அவர்களின் பல பொருட்களில் ஒன்று. ஆனால் எங்களுக்கு பன்னீர்தான் அடையாளம்.

“இன்று நாங்கள்தான் அதிகமாக ப்ரெஷ் பன்னீர் உருவாக்குவதில் முதலிடத்தில் உள்ளோம். 2010ல் தினமும் 3 டன்கள் பன்னீர் தயாரித்தோம். அது 15 டன்களையும் தாண்டி உயர்ந்தது,” என்கிறார் சதீஷ்.

2011க்குப் பின்னால் நிறுவனம் வேகமாக வளர்ந்தது. சந்தையில் குளிர்பெட்டிகளை அறிமுகப்படுத்தியதும் அவர்களின் பொருட்களை மக்கள் மனதில் பதியவைக்க உதவியது.

“பெரும்பாலான கடைகளில் பெப்சி, கோக் குளிர்சாதனப்பெட்டிகளே இருக்கும். எங்கள் பொருட்களை அதில் வைக்க முடியாது. எனவே  நாங்களும் குளிர்பெட்டிகளை அளிக்க முடிவுசெய்தோம்,” என்கிறார் சதீஷ்.

ஆனால் பன்னீருக்காக மட்டும் குளிர்பெட்டிகளைப் பயன்படுத்துவது வீண் என்று அவர் புரிந்துகொண்டார். இப்போது தென்னிந்திய நகரங்களில் சுமார் 2200 மில்கி மிஸ்ட் குளிர் பெட்டிகளை (300 லிட்டர், 600 லிட்டர்) அவர்கள் அளித்துள்ளனர். 

https://www.theweekendleader.com/admin/upload/jan17-15-LEAD3(1).jpg

பள்ளிப்படிப்பை பாதியில் விட்டு ஜெயித்த தங்கள் தந்தையைப் பார்த்து வீட்டில் குழந்தைகள் நாங்கள் மட்டும் ஏன் படிக்கவேண்டும் என்று கேட்கிறார்களாம்


“முதலில் தயிர், பின்னர் சீஸ், யோகர்ட் மற்றும் மேலும் பல பொருட்களை கடந்த நான்கு ஆண்டுகளில் தயாரித்து விற்கிறோம்,” என்கிறார் சதீஷ்.

 2012-ல் தினமும் 40,000- 50,000 லிட்டர் பால் வாங்கிக்கொண்டிருந்தார்கள் அது இப்போது 1.7 லட்சத்தைத் தாண்டி விட்டது. ஈரோடு, சேலம், திருப்பூர், நாமக்கல், திண்டுக்கல் போன்ற மாவட்டங்களில் 25,000 விவசாயிகளிடம் நேரடியாக பால் வாங்குகிறார்கள். அப்பகுதிகளில் குட்டியாக ஒரு வெண்மைப்புரட்சியே நடக்கிறது.

“நேரடியாக வாங்குவதால் விவசாயிகள் 5 ரூபாய் அதிகம் பெறுகிறார்கள். கிராமங்களில் 600 பால் பெறும் மையங்கள் வைத்துள்ளோம். அங்கு பால் தரம் பரிசோதிக்கப்படுகிறது,” என்கிறார் சதீஷ்.

பன்னீர் சந்தையை எதிர்காலத்தில் மேலும் விரிவாக்க சதீஷ் திட்டமிட்டுள்ளார். அத்துடன் தென்னிந்தியாவில் பன்னீர் மற்றும் பிற பால் பொருட்களை  அதிகமாக உணவில் பயன்படுத்தச் ஊக்கப்படுத்தும் திட்டங்களும் உள்ளன.

“பிரபல சமையல் கலைஞர் சஞ்சீவ் கபூருடன் இணைந்து பன்னீர் மற்றும் பிற பால்பொருட்களைக் கொண்டு 100 உணவு வகைகளைத் தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டோம். இவை எளிதாக தரவிறக்கம் செய்யக்கூடிய வகையில் இலவச  செயலிகளாகக் கிடைக்கும்,”
 

சதீஷின் மனைவி அனிதா, ஒரு கணினிப் பட்டதாரி. இரு குழந்தைகளான சஞ்சய், நிதின் ஆகியோரை அனிதாவே கவனித்துக்கொள்கிறார்.
“அவருக்கும் தொழிலில் ஆர்வம் உண்டு. எல்லா முக்கிய அம்சங்களையும் அவரிடம் பகிர்ந்துகொள்வேன். நான் முழுக்கவனத்தையும் தொழில் மீது குவித்துள்ளதால்  அவர் இல்லத்தில் குழந்தைகளைப் பார்த்துக்கொள்வது என்று முடிவெடுத்தோம்,” என்கிறார் அவர்.

ஆனாலும் குடும்பத்தில் சதீஷ் எதிர்கொள்ளும் ஒரு பிரச்னை உண்டு. எட்டாம் வகுப்போடு படிப்பை நிறுத்தியவரான சதீஷ் இவ்வளவு சாதித்திருக்கும்போது  படிப்பதால் என்னதான் பிரயோசனம் என்று அவரது இரண்டாவது மகன் கேள்வி எழுப்புவதுதான் அது!

தொழில்துறையில் எழும் சவால்களுக்கு பதில் தந்துவிடுகிற சதீஷுக்கு இந்த கேள்விக்குப் பதில் தருவது சற்று சிரமமாகவே உள்ளது!


 
 
 
 
 

அதிகம் படித்தவை

  • Selling comfort

    கம்பளிகளின் காதலன்!

    பெட்ஷீட்கள் மீது விருப்பம் கொண்ட புனித் பட்னி, அதையே வாய்ப்பாக மாற்றி தொழிலில் ஈடுபட ஆரம்பித்தார். இன்றைக்கு ஆண்டுக்கு ரூ. 9.25 கோடி வருவாய் ஈட்டும் இரண்டு நிறுவனங்களை கட்டமைத்திருக்கிறார். உஷா பிரசாத் எழுதும் கட்டுரை

  • Girl from Mountain

    மலைக்க வைக்கும் வளர்ச்சி!

    உத்தரகாண்ட் மாநிலத்தின் குக்கிராமத்தில் பிறந்தவர் கீதா சிங். ஐம்பதாயிரம் ரூபாய் முதலீட்டில் தொடங்கி,  இன்றைக்கு டெல்லியில் ஆண்டுக்கு 7 கோடி ரூபாய் வருவாய் தரும் நிறுவனத்தின் உரிமையாளராக இருக்கிறார். சோபியா டேனிஷ்கான் எழுதும் கட்டுரை

  • Milk tech

    பண்ணையாளரான பொறியாளர்!

     அமெரிக்காவில் இன்டெல் நிறுவனத்தில் வேலையை விட்டுவிட்டு இந்தியா திரும்பிய இளைஞர் கிஷோர் இந்துக்குரி. இப்போது 100 மாடுகளைக் கொண்டு பால் பண்ணை அமைத்து ஆண்டுக்கு ரூ.44 கோடி வர்த்தகம் ஈட்டும் நிறுவனமாக வெற்றிகரமாக நடத்தி வருகிறார். சோபியா டேனிஷ் கான் எழுதும் கட்டுரை

  • Girl Power

    கலக்குங்க கரோலின்!

    பெற்றோரால் பாதுகாப்பாக வளர்க்கப்பட்ட பெண் கரோலின் கோம்ஸ். தந்தை இறந்த பின்னர், வெளிநாட்டில் எம்எஸ் படித்து விட்டு, தமது சொந்த அனுபவத்தின் பெயரில் உருவாக்கிய மூலிகை பொருட்கள் தயாரிக்கும் ஸ்டார்ட் அப் நிறுவனத்தை தொடங்கி வெற்றிகரமாக நடத்தி வருகிறார். சோபியா டேனிஷ் கான் எழுதும் கட்டுரை.

  • Teacher who founded her own school

    பள்ளிக் கனவுகள்

    பள்ளி தொடங்க வேண்டும் என்பது பாலி பட்நாயக்கின் நீண்ட நாள் கனவு. வெறும் முப்பதாயிரம் ரூபாயில் பள்ளி தொடங்கிய இந்த ஆசிரியை, இன்று தன் ஆசிரியர்களுக்கு மாதாமாதம் சம்பளத்தொகையாகவே ஒரு கோடி ரூபாய் தரும் அளவுக்கு தன் கனவை நனவாக்கி உள்ளார். குர்விந்தர் சிங் எழுதும் கட்டுரை

  • The success story of a Small-Time Contractor who became owner of a Rs 2,000 Crore Turnover Company

    போராடு, வெற்றிபெறு!

    பள்ளியில் படிக்கும்போதிலிருந்தே வீட்டின் வசதியின்மை காரணமாக சின்ன சின்ன வேலைகள் செய்து சம்பாதித்துப் படித்தவர் ஹனுமந்த் கெய்க்வாட். இன்று பிரதமர் இல்லம், நாடாளுமன்றம் உள்ளிட்ட பல இடங்களில் ஒப்பந்தப் பணிகளை எடுத்துச் செய்யும் பிவிஜி என்ற நிறுவனத்தை நடத்துகிறார். ஆண்டு வருவாய் 2000 கோடி! தேவன் லாட் எழுதும் வெற்றிக்கதை