Milky Mist

Thursday, 18 April 2024

முன்னாள் இந்திய கூடைப்பந்து விளையாட்டு வீரர் ரூ.300 கோடி ட்ராவல்ஸ் நிறுவனத்தை உருவாக்கின வெற்றி கதை

18-Apr-2024 By தேவன் லாட்
மும்பை

Posted 15 Dec 2017

1964ஆம் ஆண்டு, வெறும் 4 டாக்ஸிக்களுடன், சின்ன போக்குவரத்து நிறுவனமாக ஆரம்பிக்கப்பட்ட ஒன்று, இன்று பிரம்மாண்டமான போக்குவரத்து நிறுவனமாக மாறியுள்ளது.

பிரசன்னா பர்பிள் மொபிலிடி சொல்யுஷன்ஸ் தனியார் நிறுவனம் (Prasanna Purple Mobility Solutions Pvt. Ltd), பிரசன்னா பர்பிள் என்ற பெயரில் பிரபலமாகியிருக்கும் இந்த நிறுவனம், இன்று இந்தியா முழுவதும் 85 நகரங்களில் 1200 பஸ்கள் மற்றும் கார்கள் கொண்ட பெரிய படையையே வழிநடத்தி வருகிறது. இதில் பிரசன்னா பர்பிள் நிறுவனத்துக்கு சொந்தமான பஸ்களின் எண்ணிக்கையே 700.

https://www.theweekendleader.com/admin/upload/11-11-17-03purple1.jpg

பிரசன்னா பட்வர்த்தன், தேசிய கூடைப்பந்தாட்ட வீரர். மூட்டு காயம் காரணமாக விளையாட முடியாமல், தனது தந்தையின் வியாபாரத்தில் இணைந்து, இன்று அதை ரூ.300 கோடி வருவாய் பெறும் நிறுவனமாக மாற்றியுள்ளார் (படம்: அனிருத்தா ராஜாந்தேகர்)


பிரசன்னா பட்வர்த்தன், பிரசன்னா பர்பிள் நிறுவனத்தின் தலைவர், நிர்வாக இயக்குநர். மஹாராஷ்ட்ரா கூடைப்பந்தாட்ட அணியின் தலைவராக இருந்தவர். இந்தியாவுக்காகவும் விளையாடியுள்ளார். அந்த ஆளுமை இன்றும் அவரிடம் பிரதிபலித்துக்கொண்டிருக்கிறது.  

இன்று பிரசன்னா மூன்று நிறுவனங்களை நடத்தி வருகிறார். தலைமை நிறுவனம் பிரசன்னா பர்பிள் மொபிலிடி சொல்யூஷன்ஸ் (நகரங்களிடையே மற்றும் நகரத்துக்குள் பயணிகள் பஸ் இயக்கம், நிறுவனங்கள் மற்றும் பள்ளிகளுக்கான பஸ் இயக்கம், உள்நாடு மற்றும் வெளிநாடு சுற்றுலா திட்டம்), மேலும் இரண்டு துணை நிறுவனங்கள் - பிரசன்னா ட்ரான்ஸ்போர்ட் நெட்வொர்க் பிரைவேட் லிமிடட் (Prasanna Transport Network Pvt. Ltd) மற்றும் ஸ்மைல்ஸ்டோன் மோட்டல்ஸ் பிரைவேட் லிமிடட் (Smilestone Motels Pvt. Ltd).

பிரசன்னா பர்பிளின் பங்குதாரர் நிறுவனம் ஆம்பிட் ப்ராக்மா, தனியார் சமபங்கு (ஈக்விட்டி) நிறுவனம். அவர்கள் தான் 2009ஆம் ஆண்டு முதலீடு செய்து, தலைமை நிறுவனத்தின் 64 சதவித பங்குகளை தற்போது வைத்துள்ளார்கள்.

1964ல் ஆரம்பிக்கப்பட்ட சிறிய நிறுவனம் பிரசன்னா ட்ராவல்ஸ்,  2010ஆம் ஆண்டு தனது பெயரை நவீன யுகத்துக்கு ஏற்றார் போல பிரசன்னா பர்பிள் என்று மாற்றிக்கொண்டது.

பிரசன்னா பட்வர்த்தனின் கதை, குடும்ப வியாபாரத்தை செய்ய நினைப்பவர்களுக்கு உந்துதலாக மட்டுமல்ல, அதை வெற்றிகரமாக விரிவுபடுத்தி, பெருக்கவும் வழி காட்டும்.

1962ல், பூனாவில் ஒரு கூட்டுக் குடும்பத்தில் பிறந்த பிரசன்னா, வளரும்போது, ஒரே வீட்டில் 24 நபர்களுடன் இருந்தவர். வழக்கமான மஹாராஷ்ட்ரிய நடுத்தர வர்க்க குடும்பத்தில் இருந்தது போலவே அவரது வாழ்க்கை இருந்தது. நூதன் மராத்தி பள்ளியில் படித்து, ஃபெர்கூஸனில் அறிவியல் பட்டப்படிப்பு முடித்து, வணிக மேலாண்மை முதுகலை பட்டப்படிப்பை சிம்பியாஸிஸில் முடித்தார்.

"எனது மாமா ஒரு உணவகம் மற்றும் பால் வியாபாரம் செய்து வந்தார். அவரது வாதேஷ்வர் உணவகத்துக்கு இன்று பல கிளைகள் உள்ளன. ஆனால் எனது இளம் வயதில் அவர்களிடம் ஒரு உணவகம் தான் இருந்தது," என்கிறார் பிரசன்னா.

https://www.theweekendleader.com/admin/upload/11-11-17-03purple3.jpg

பிரசன்னா பர்பிள் இன்று 3000 ஓட்டுநர்களை வைத்து நடக்கிறது. ஆனால் ஆரம்பத்தில் ஓட்டுநர்கள் பற்றாக்குறை காரணமாக, பிரசன்னாவே பேருந்து ஓட்டியுள்ளார்.

 

பிரசன்னாவின் தந்தை வாடகை கார் சேவையை நடத்தி வந்தார். அவரது ஒரே வாடிக்கையாளர் பூனா பல்கலைக்கழகமே. அவர்களின் பேராசிரியர்கள் மற்றும் விசேஷ ஆசிரியர்களின் போக்குவரத்துக்காக கார் தேவைப்பட்டது. அப்போது அவர்களுக்கு போதிய வருமானம் கிடைத்துள்ளது.

பிரசன்னாவின் தந்தை கேஷவ் வாமன் பட்வர்த்தன், பூனே பல்கலைக்கழகத்தின் ஒரே ஒப்பந்ததாரர் என்பதால் அனைத்து வியாபாரமும் அவருக்கே கிடைத்தது.

1985ல், பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர், பேராசிரியர்கள் தனித்தனியாக டாக்ஸியில் வருவதற்கு பதில் ஒரே காரில் இணைந்து வருமாறு கூறினார். அதனால் தேவைப்படும்போது மட்டுமே டாக்ஸிக்கள் வரவழைக்கப்பட்டன. இது வியாபரத்தை கடுமையாக பாதித்தது. ஏனென்றால் அவர்களுக்கு வேறு வாடிக்கையாளர்கள் கிடையாது.

இந்த காலம் பிரசன்னா ட்ராவல்ஸுக்கு மோசமானதாக இருந்தது. நிறுவனத்தை மூடும் அளவுக்கு நிலை மாறியது. வியாபாரத்தின் திடீர் சரிவால் குடும்பத்துக்கான வருமானத்திலும் சரிவு ஏற்பட்டது.

அப்போதுதான் குடும்பத்தின் வறுமை நிலையை மாற்ற தான் உதவ வேண்டும் என்று முடிவெடுத்துள்ளார் பிரசன்னா. அந்த வருடம் தான் அவர் மேலாண்மை படிப்பை முடித்திருந்தார். தனது தந்தை தொலைநோக்குடன் திட்டமிட, டிசம்பர் 1985ல் இருந்து, பிரசன்னா ட்ராவல்ஸில் அவர் வேலை செய்ய ஆரம்பித்தார்.

ஆனால் பிரசன்னாவின் லட்சியம் அது அல்ல. அவருக்கு கூடைப்பந்தாட்ட வீரர் ஆக வேண்டுமென்று ஆசை.  இந்தியாவுக்காக அவர் விளையாடியிருந்தார். பின்னர் மஹாராஷ்டிர அணியின் பயிற்சியாளராகவும் இருந்திருக்கிறார். ஆனால் ஒரு மூட்டு காயம் அவரை  விளையாட்டுத் துறையிலிருந்து விலக்கி வைத்தது.

தான் விளையாட்டு வீரர் ஆகியிருந்தால் இதெல்லாம் நடந்திருக்காது, ஒரு வேளை ரயில்வே துறை ஊழியனாக மாறியிருப்பேன் என்று விளையாட்டாக கூறுகிறார் பிரசன்னா. அந்த காயம் துன்பத்தில் வந்த இன்பம் போல ஆகிவிட்டது என்கிறார் பிரசன்னா.

தனது தந்தையின் வியாபரத்துக்குள் நுழைந்த பிரசன்னா, முதலில் அலுவலகத்தை புதுப்பித்தார். அவர்கள் வைத்திருந்த ஃபியட் மட்டும் அம்பாசிடர் கார்களை நேர்த்தியாக்கினார்.

"எல்லாவற்றையும் மறுசீரமைக்க 6 மாதங்கள் ஆனது. காருக்குள் குளிர் சாதன வசதி, திரைச்சீலைகள், பாட்டு கேட்க வசதி, ஓட்டுநர்களுக்கு சீருடை, பயணிகளுக்கு குடிநீர், படிக்க செய்தித்தாள் என ஒவ்வொரு காருக்கும் ரூ.5000 செலவழித்தேன். ஆரம்பத்தில் பேராசிரியர்கள் மட்டுமே பயணித்தனர். ஆனால் அந்த நிலையில் கார்ப்பரேட் நிறுவனங்களை வாடிக்கையாளர்களாக பெற முயற்சித்தோம்."

https://www.theweekendleader.com/admin/upload/11-11-17-03purple4.jpg

பிரசன்னா டிராவல்ஸ் இந்தியாவின் 10 நகரங்களில் இயங்கி வருகிறது


மறுசீரமைக்கப்பட்ட கார்கள், புதிய வாடிக்கையாளர்கள் என பிரசன்னா நிறுவனத்தை படிப்படியாக கட்டமைத்தார். நிறுவனத்தின் வருவாய் இரு மடங்கு, மூன்று மடங்கானது. 1985ல் வருடம் ரூ.3 லட்சம் என்றிருந்த வருவாய், அடுத்த பத்து வருடங்களில் வருடம் ரூ.10 கோடி ஆனது.

நான் வணிக மேலாண்மை பட்டப்படிப்பு படித்ததால், வியாபாரம் பற்றிய அறிவு எனக்கிருந்தது. ஆனால் புது வாடிக்கையாளர்களை பிடிப்பதுதான் கடினமாக இருந்தது. நான் ஆரம்பத்தில் ஒவ்வொரு அலுவலகமாக நடந்து செல்வேன். எங்கள் டாக்ஸி சேவை வேண்டுமா என்று கேட்பேன். அல்லது எனது முகவரி அட்டை சரியான நபரின் கைக்கு போகும் என்ற நம்பிக்கையில் அந்த அலுவலக காவலாளியிடம் கொடுத்துவிட்டு வருவேன்,என ஆரம்ப காலத்தை நினைவுகூர்கிறார் பிரசன்னா.

இவரது முதல் வாடிக்கையாளர் ஃபிலிப்ஸ், பிறகு டெல்கோ. அடுத்து வியாபாரம் பெருக ஆரம்பித்து பல பெரிய நிறுவனங்கள் இவர்களின் வாடிக்கையாளர்களாக மாறினார்கள். ஒவ்வொரு வருடமும் வருவாய் இரட்டிப்பாகும். புதிய கார்களும், டெம்போக்களும் வாங்கப்பட்டன.

1988ல், பிரசன்னா தனது முதல் பஸ் சேவையை தொடங்கினார். குளிர்சாதன வசதி இருக்கும் பஸ்களை, ரூ.10 லட்சம் முதலீட்டில் வாங்கினார். தங்களிடமிருந்த 25 கார்கள், 6 டெம்போக்களில், 4 கார்களையும், 2 டெம்போக்களையும் விற்றார்.

ஆரம்பத்தில் மஹாபலேஷ்வரிலிருந்து பூனாவுக்கு பஸ் வசதி ஆரம்பிக்கப்பட்டு அது தோல்வியடைந்தது. பிறகு ஜால்கானில் இருக்கும் சங்கீதம் டிராவல்ஸுடன் கூட்டு வைத்து, பூனா ஜல்கான் சேவையை ஆரம்பித்திருக்கிறார்கள். அவர்கள் பக்கம் ஜல்கானிலிருந்து ஒரு பேருந்து, இவர்கள் பக்கம் பூனாவிலிருந்து ஒரு பேருந்து என ஒப்பந்தம் போட்டு, அதன் மூலம் நல்ல லாபமும் கிடைத்துள்ளது.

அடுத்த 4 வருடங்களில், பிரசன்னா, கோல்ஹாபூர், அகோலா, பெங்களூர் என பூனாவிலிருந்து பல இடங்களுக்கு போக்குவரத்து சேவையை தொடங்கினார். பிரசன்னா டிராவல்ஸுக்க்கு இந்த பேருந்து சேவையே பிரதான வியாபாரமானது. 2009ல், ஆம்பிட் ப்ரக்மாவின் முதலீடும் கிடைத்தது.

அதே வருடம், பிரசன்னா பொது தனியார் கூட்டாக, ஜல்கானிலும், இந்தோரிலும் குடிமை நிர்வாகத்துடனும் ஒப்பந்தம் செய்து கொண்டு, நகரங்களுக்கிடையேயான பேருந்து சேவையை ஆரம்பித்தார்.

விரைவில், பிரசன்னா ட்ராவல்ஸ், தங்கள் வியாபாரத்தை பூனா, லூதியானா, டெல்லி மற்றும் அகமதுநகர் என 10 நகரங்களில் விரிவாக்கியது. இது பொது தனியார் நிறுவனங்களின் கூட்டை அனுமதிக்கும் ஜவஹர்லால் நேரு தேசிய நகர புதுப்பித்தல் திட்டம் மூலமாக சாத்தியமானது.

https://www.theweekendleader.com/admin/upload/11-11-17-03purple2.jpg

பிரசன்னா நேரடியாக களத்தில் இறங்கி வேலைகளை மேற்பார்வை பார்ப்பவர்


இந்த நாட்களில், பெரும்பாலான வருவாய் சிறிய, நகரங்களுக்கிடையேயான பேருந்து சேவையில் தான் கிடைத்தது. நீண்ட தூரத்துக்கு விமானங்களையே வாடிக்கையாளர்கள் விரும்பினர்.

நகர போக்குவரத்தை பொருத்தவரையில், நடத்துனரை மாநில அரசு தரும், ஓட்டுநர் பிரசன்னா ட்ராவல்ஸை சேர்ந்தவர். வியாபாரம் லாபகரமாக நடந்தது. ஆனால் அதிகமான சுங்கவரி மற்றும் பெட்ரோல் டீசல் விலை அதிகரிப்பால் லாபம் பாதிக்கப்பட்டது.

இந்த நம்பிக்கை கதையின் முக்கிய அம்சமே பிரசன்னாவின் குணம் தான். அவர் எந்த வேலையையும் தாழ்வாக நினைக்காமல், தானாகவே இறங்கி ஒவ்வொரு வேலையையும் செய்துள்ளார்.

அப்படி ஒருமுறை, 1988ல், ஓட்டுநர் பற்றாக்குறையால் ஜல்கானிலிருந்து அவரது பேருந்தை மூன்று நாட்கள் அவரே ஓட்டியுள்ளார். முன்பதிவு செய்த பயணிகள் இருந்ததால் இந்த வேலையை அவரே செய்தார். ஆனால் இதெல்லாம் சொந்த நிறுவனத்தை நடத்தும்போது நாம் எதிர்கொள்ளும் சவால் என்று சொல்கிறார் பிரசன்னா.

பிரசன்னாவுக்கு பஸ் ஓட்ட தெரியாது. ஆனால் கிடைத்த நேரத்தில், தன்னிடம் வேலை செய்த ஓட்டுநர்களிடமே அதை கற்றுள்ளார். இன்று அவர்களிடம் 3000 ஓட்டுநர்கள் இருக்கின்றனர். "ஆனால் அன்று யாரும் இல்லை," என்று சிரிக்கிறார் பிரசன்னா.

பிரசன்னா பர்பிள், அவர்களது நிறுவன  ஓட்டுநர்களுக்கு பயிற்சி தருகிறது. மேலும் ஓட்டுநர் பயிற்சி பள்ளிகளையும் நடத்தி வருகிறது. கோவாவுக்கு, டெல்லிக்கும் சுற்றுலா பஸ் சேவையை ஆரம்பித்துள்ளனர். மும்பையின் மின்சார விநியோக மற்றும் போக்குவரத்து கழகத்துடன் இணைந்து மும்பையிலும் ஒரு சேவை தொடங்க திட்டமிட்டுள்ளனர். ஆனால் இப்போதைக்கு இந்த திட்டங்கள் நிலுவையில் உள்ளன.

வெளிநாடுகளுக்கு சென்றுள்ள பிரசன்னா, இந்திய பொது போக்குவரத்தால் சர்வதேச தரத்தை அடைய முடியும் என்று நம்புகிறார். நமது அரசாங்கம் பொதுப்போக்குவரத்துக்கு போதிய கவனம் தருவதில்லை என்றும், அது பிரதானமாக வேண்டுமென்றும், மக்கள் கார்களை விடுத்து பொதுப்போக்குவரத்தை அதிகம் பயன்படுத்த வேண்டும் என்றும் பிரசன்னா நினைக்கிறார்.

ஜிபிஎஸ் கண்காணிப்பு உள்ளிட்ட மேம்பட்ட சேவைகளை, தொழில்நுட்பங்களை தங்கள் பயணிகளுக்கு வழங்க வேண்டும் என்று திட்டமிட்டுள்ளார் பிரசன்னா.

1986ல் மோனிகா என்பவரை திருமணம் செய்து கொண்டார் பிரசன்னா. பிரசன்னா மோனிகா  தம்பதிக்கு இரண்டு மகன்கள். மூத்த மகன் சவுரவ் நிறுவனத்தின் சரக்கு போக்குவரத்து சேவையை பார்த்துக் கொள்கிறார். இளைய மகன் ஹர்ஷவர்த்தன், காலணி தயாரிப்பு நிறுவனத்தை சொந்தமாக நடத்தி வருகிறார்.

இன்று, நேரம் கிடைக்கும்போதெல்லாம் வெளிநாடுகளுக்கு பயணப்பட்டு, அங்கு பொதுப்போக்குவரத்து எப்படி இருக்கிறது என்பதை அலசுகிறார் பிரசன்னா. அதன் மூலம் இந்தியாவில் தனது சேவைகளில் மாற்றங்கள் கொண்டு வருகிறார்.

விளையாட்டில் யாரும் நிரந்தர நண்பனோ, எதிரியோ இல்லை என்று அவர் கற்ற தந்திரம் வியாபரத்திலும் அவருக்கு உதவியுள்ளது.

"நான் கூடைப்பந்து விளையாடுவதை நிறுத்திவிட்டாலும், அது என் வாழ்க்கையில் பல விஷயங்களை கற்பித்துள்ளது. நான் மஹாராஷ்டிராவுக்காக விளையாடும்போது மற்ற மாநில வீரர்கள் என் எதிரி. ஆனால், இந்தியாவுக்காக விளையாடும்போது அவர்கள் என் நண்பர்களாகிவிட்டார்கள்.

"நாம் முதலாளியா இல்லையா என்பது நாம் எங்கிருக்கிறோம் என்பதை பொருத்தே," என்று புன்னகையுடன் முடிக்கிறார் பிரசன்னா.


 
 
 
 
 

அதிகம் படித்தவை

  • The colour of success is green

    ஏற்றம் தந்த பசுமை

    ஐ.ஐ.டியில் பட்டம் பெற்றவர் வெறும் மூவாயிரம் ரூபாய் சம்பளத்துக்கு வேலையில் சேர்ந்து, கடினமாக உழைத்து இன்றைக்கு மூன்று நிறுவனங்களின் உரிமையாளராக உயர்ந்திருக்கிறார். அவரது நிறுவனங்களின் ஆண்டு வருவாய் 71 கோடி ரூபாய். உஷா பிரசாத் எழுதும் கட்டுரை.

  • Success Story of Detox Juice maker

    இளமையில் புதுமை

    சிந்தூரா போரா படித்தது கம்ப்யூட்டர் நெட் ஒர்க். ஆனால், உடல் நலன், சுகாதாரம் குறித்த ஆர்வத்தின் காரணமாக உடல் நஞ்சு நீக்கும் பழச்சாறு வகைகளை தயாரிப்பில் இறங்கினார். புதுமையும், பொறுமையும் அவருக்கு வெற்றி தந்தது. பிரனிதா ஜோனலாகெட்டா எழுதும் கட்டுரை

  • A hot sale

    புதுமையான உணவு

    குடும்பத்தின் வறுமையைப் போக்க எட்டு வயதில் டீ விற்கத் தொடங்கியவர் விஜய் சிங் ரத்தோர். இன்றைக்கு ஜானி ஹாட் டாக் என்ற விந்தையான பெயரைக் கொண்ட உணவகத்தின் உரிமையாளர். ஒரு ஹாட் டாக்கை 30 ரூபாய்க்கு விற்கும் அவர் ஆண்டுக்கு 3.5 கோடி ரூபாய் வருவாய் ஈட்டுகிறார். ஆகான்ங்ஷா துபே எழுதும் கட்டுரை.

  • A Rs 1500 crore turnover brand is headed by a communist

    கம்யூனிஸ்ட் தொழிலதிபர்!

    கன்னியாகுமரியில் ஒப்பந்த தொழிலாளராக இருந்தவர், டீக்கடை வைத்திருந்தவர் ஆகிய பின்னணியைக் கொண்டவர் மம்மது கோயா. இன்று 1500 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் செய்யும் விகேசி காலணிகள் நிறுவனத்தின் தலைவர். அவரது வெற்றிக்கதையை எழுதுகிறார் ரெனிதா ரவீந்திரன்

  • Dosamatic makers

    தோசைப் ப்ரியர்கள்

    பலருக்கு தோசை சாப்பிடப்பிடிக்கும். ஆனால் அதை கல்லில் ஊற்றி சுடுவதற்கு? தமிழரும்தோசைப் பிரியருமான ஈஸ்வர் தமது நண்பர் சுதீப் உடன் சேர்ந்து இதற்காக தோசாமேட்டிக் மிஷினை கண்டுபிடித்தார். இன்றைக்கு நாடு முழுவதும் ஈஸ்வரின் தோசாமேட்டிக் இடம் பிடித்திருக்கிறது. உஷா பிரசாத் எழுதும் கட்டுரை

  • fashion success

    இளம் சாதனையாளர்

      பொறியியல் படித்திருந்தாலும் ஃபேஷன் துறை மீதுதான் நிதி யாதவுக்கு ஆர்வம். எனவே அந்த ஆர்வத்தின் அடிப்படையில் ஃபேஷன் தொழிலை தொடங்கி ஆண்டுக்கு ரூ.137 கோடி வருவாய் தரும் நிறுவனமாக கட்டமைத்துள்ளார். சோபியா டேனிஷ்கான் எழுதும் கட்டுரை