Milky Mist

Wednesday, 22 October 2025

பஸ் டிக்கெட் பதிவு செய்துகொண்டிருந்தவர் இப்போது பல பேருந்துகளுக்கு உரிமையாளர்!

22-Oct-2025 By ஜி சிங்
ராஞ்சி

Posted 12 Oct 2017

ராஞ்சியில் சின்ன பேருந்துநிலையத்தில் பயணச்சீட்டு பதிவு செய்யும் வேலையில் இருந்தவர் கிருஷ்ண மோகன் சிங்(51). தன்னுடைய கடின உழைப்பில் முன்னுக்குவந்திருக்கிறார். இன்று அவர் பல பேருந்துகளைச் சொந்தமாக வைத்திருக்கிறார். அவரது போக்குவரத்து நிறுவனம் சந்திரலோக் ஆண்டுக்கு 30 கோடி வருவாய் பெறுகிறது. 

வெற்றி அவருக்கு எளிதாகக் கிடைக்கவில்லை. கடின உழைப்புதான் வெற்றி தேடித்தந்தது.  24 ஆண்டுகளுக்கு முன் ஆகஸ்ட் 1993-ல் அவர் முதல் பேருந்தை வாங்கினார். அதன்பின்னர் ஒவ்வொரு பேருந்தாக வாங்கித் தொழிலை விரிவுபடுத்தினார். 

https://www.theweekendleader.com/admin/upload/07-10-17-02bus1.JPG

 பயணச்சீட்டு முன்பதிவு செய்பவராக இருந்த கிருஷ்ன மோகன் சிங், இப்போது 15 பேருந்துகளும், ராஞ்சியில் ஒரு பெட்ரோல் நிலையமும் வைத்துள்ளார் (படங்கள்: மோனிருல் இஸ்லாம் மல்லிக்)


இப்போது அவர் 15 பேருந்துகளை அம்மாநிலத்தில் ஓட்டுகிறார். ராஞ்சியில் பெட்ரோல் பம்ப் வைத்துள்ளார். கோடிக்கணக்கில் சொத்து வைத்துள்ளார். 60 பேர் அவரிடம் வேலை பார்க்கிறார்கள்.

ஆனால் 30 ஆண்டுகளுக்கு முன் இது எதுவும் அவரிடம் இல்லை.

 ராஞ்சியில் பிப்ரவரி 3, 1966ல் கிருஷ்ண மோகன் ஆறு குழந்தைகளில் இரண்டாவதாகப் பிறந்தார்.  ராஞ்சியில் மத்திய அரசு நிறுவனத்தில் அவரது அப்பா சாதாரண ஊழியர்.

 “அவரது சம்பளம் 200 ரூ. அது போதுமானதாக இல்லை. அவர் உணவுக்காகவே கடுமையாக உழைக்கவேண்டி இருந்தது,” என்கிறார் கிருஷ்ண மோகன்.

மனைவி மற்றும் நான்கு குழந்தைகளுடன் வசதியான வீட்டில் இப்போது வசிக்கும் அவர் தன் கடினமான காலகட்டத்தை நினைவுகூர்கிறார்.  கிருஷ்ண மோகன் அரசுப் பள்ளிகளில்தான் படித்தார். ராஞ்சி பல்கலைக்கழகத்தில் சமூகவியலில் முதுகலைப் பட்டம் பெற்றார்.

பள்ளிச் சீருடைகள் கூட அப்பாவால் வாங்கித்தர முடியாது. பள்ளிக்கட்டணம் குறைவு. அப்பா மத்திய அரசு ஊழியர் என்பதால் கட்டணச்சலுகை கிடைத்தது. எனவே என்னால் அதிக செலவின்றி படிக்கமுடிந்தது.”

இரண்டு பசுக்கள் இருந்தன. அது உதவியாக இருந்தது. “ பால் கறந்து வீடுகளுக்கு விற்போம்,” நினைவுகூர்கிறார் கிருஷ்ண மோகன்.

1988-ல் முதுகலைப் பட்டம் பெற்றபின்னரும் அவருக்கு வேலை கிடைக்கவில்லை. அவரது அண்ணன் பவன்குமார் சிங், வீட்டருகே இருந்த பேருந்து நிலையத்தில் பயணச்சீட்டு பதிவுசெய்பவராக வேலை பார்த்தார். அவருக்கு கிருஷ்ண மோகன் உதவி செய்தார்.

“குடும்பத்தின் நிதிநிலைமை சரியாக இல்லை. எனவே அண்ணனுக்கு உதவிகரமாக அந்த வேலைக்குப் போனேன். எனக்கு கமிஷன் கிடைக்கும்.”

https://www.theweekendleader.com/admin/upload/07-10-17-02bus3.JPG

 1993ல்  கிருஷ்ண மோகன் ராஞ்சியிலிருந்து பாட்னாவுக்கு முதல் பேருந்து சேவையைத் தொடங்கினார்

 அடுத்த ஆறு ஆண்டுகளுக்கு கிருஷ்ண மோகனும் அவரது அண்ணாவும் பேருந்து பயணச்சீட்டுகளை பதிவு செய்துகொண்டிருந்தனர். அதில் அவர்கள் 2.4 லட்சரூபாய் சேமித்தனர்.

இந்த சமயத்தில் எனக்கு போக்குவரத்துத் துறையில் நல்ல அனுபவம் கிடைத்தது. என்னுடைய சொந்த பயணச் சேவையைத் தொடங்கும்போது இது உதவியாக இருந்தது.” என்கிறார் அவர்.

1993 ல் அவர் சுமன் தேவியை மணந்தார். அவர் கிருஷ்ணமோகனின் சொந்த ஊரான வைஷாலியைச் சேர்ந்தவர்.

அதிகம் சம்பாதிக்கத் தொடங்கவேண்டிய நேரம் இது என்று அவர் முடிவு செய்தார். சகோதரர்கள் பேருந்து வாங்க திட்டமிட்டனர். பேருந்தின் சேசிஸ் விலையே 4 லட்சம். அவர்களிடம் அவ்வளவு பணம் இல்லை. “ஒரு லட்ச ரூபாய் கொடுத்துவிட்டு  மீதி வெளியே 12 சதவீத வட்டிக்கு வாங்கினோம். பேருந்தின் வெளிப்பாகத்தைக் கட்ட 2.3 லட்சரூபாய் தேவை. ஒரு லட்ச ரூபாய் கொடுத்துவிட்டு மீதியைப் பேருந்தை ஓட்டிக் கிடைத்த லாபத்தில் கொஞ்சம் கொஞ்சமாகக் கட்டினோம்.”

ராஞ்சியிலிருந்து பாட்னாவுக்கு முதல் பேருந்தை ஓட்டினார்கள். நியூ சந்திரலோக் என்பது பேருந்து நிறுவனப் பெயர்.

https://www.theweekendleader.com/admin/upload/07-10-17-02bus2.JPG

தனக்குச் சொந்தமான பெட்ரோல் நிலையத்தில் கிருஷ்ண மோகன்


மார்ச் 1994ல் அவர் இரண்டாவது பேருந்தை வாங்கினார். “கடன் கொடுத்தவர், பேருந்தின் வெளிப்புறத்தைக் கட்டியவர் இருவரின் நம்பிக்கையையும் சரியான நேரத்தில் கடனைத்திருப்பிக் கட்டியதின் மூலம் பெற்றேன். அவர்கள் கூடுதலாக கடன் அளிக்க ஒப்புக்கொண்டார்கள். இரண்டாவது பேருந்துக்கு 8 லட்ச ரூபாய் முழுவதும் கடன். சம்பாதித்து அந்தக் கடனையும் அடைத்தேன்.”

1997ல் அவரிடம் மூன்று பேருந்துகள் இருந்தன. 12 லட்ச ரூபாய் ஆண்டுக்கு வருவாய் இருந்தது. 1998-ல் 16 லட்ச ரூபாய்க்கு இரண்டு பேருந்துகள் வாங்கினார். அதற்கும் 12% வட்டிக்கு  கடன் வாங்கினார். ராஞ்சியிலிருந்து சிவானுக்கு பேருந்து சேவை தொடங்கப்பட்டது.

எமது நியூ சந்திரலோக் நிறுவனத்துக்கு நல்ல பெயர் இருந்தது. எனவே கடன் வாங்குவது சிரமமாக இல்லை,” விளக்குகிறார்  கிருஷ்ண மோகன்.

2000 வது ஆண்டில் அவர் மேலும் இரு பேருந்துகளை 19 லட்ச ரூபாய்க்கு வாங்கினார். இந்த பேருந்துகள் ராஞ்சி – சிவான் தடத்திலேயே இயக்கப்பட்டன. அவரிடம் அப்போது ஏழு பேருந்துகள் இருந்தன. ஆண்டு வருவாய் 50 லட்ச ரூபாய்!

2003-ல் அவரது பேருந்துகள் எண்ணிக்கை பத்து ஆக அதிகரித்தது. புதிய தடங்களில் அவற்றை ஓட்டினார். ஜார்க்கண்ட் மாநில தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத் தலைவராகவும் அவர் ஆனார்.

https://www.theweekendleader.com/admin/upload/07-10-17-02bus4.JPG

நிதி நெருக்கடிகள் நிறைந்த வாழ்க்கையிலிருந்து ஆரம்பித்து இப்போது வளமான வாழ்க்கை


எங்கள் தொழில் 10 பேருந்துகள் வந்தபின்னர் மேலும் உயர ஆரம்பித்தது,” என்கிறார் கிருஷ்ண மோகன். ஆண்டு வருவாய் 80 லட்சத்தைத் தாண்டியது.

 “பழையவற்றுக்கு ரிப்பேர் செலவே மாதாந்திர கடன் தொகையை விட அதிகம். எனவே நாங்கள் பேருந்துகளை புதிதாக மாற்ற ஆரம்பித்தோம்.  புதிய பேருந்துகளாக இருப்பதால் வாடிக்கையாளர்களும் விரும்பினர்,” என்று சொல்கிறார் அவரது சகோதரர் பவன்.

உட்காரும் வசதியிலிருந்து, படுக்கும் வசதியாக பேருந்துகள் மாற்றப்பட்டன. இருக்கைகள் 60 ஆக உயர்த்தப்பட்டன. இதுவும் வருமானம் உயர வழிவகுத்தது.

2015-ல் 13 பேருந்துகள் இருந்தன. பீஹார், ஜார்க்கண்டில் வேறுபட்ட வழித்தடங்களில் அவை ஓடின. ஆண்டு வருவாய் 10 கோடியை எட்டியது.

"தற்போது எங்கள் ஆண்டு வருவாய் 30 கோடியாக உள்ளது. வைஷாலி  மாவட்டத்தில் 8 கோடி மதிப்புள்ள 35 ஏக்கர் நிலம் வாங்கியுள்ளோம். கடந்த ஆண்டு நான் வாங்கிய பெட்ரோல் நிலையம் மூலம் மாதம் 1 லட்சம் வருமானம் கிடைக்கிறது,” என்கிறார் கிருஷ்ணமோகன்.

https://www.theweekendleader.com/admin/upload/07-10-17-02bus5.JPG

 தன் சகோதரர் பவன்குமார் சிங்குடன் கிருஷ்ண மோகன்


எதிர்காலத்தில் மேலும் ஆறு பேருந்துகளை வாங்கிக் கிராமப்புறங்களில் ஓடவிட இருப்பதாக அவர் கூறுகிறார். “எங்களுக்கு நல்ல சேவை செய்யும் நிறுவனம் என்ற பெயர் உள்ளது. அதை மேலும் வலுப்படுத்த விரும்புகிறேன்,” என்று பெருமையுடன் கூறுகிறார்.

கிருஷ்ணமோகன் பலருக்கும் நலத்திட்ட உதவிகளும் செய்கிறார். அறுவை சிகிச்சைக்காக ஏழைகளுக்கு உதவியும் செய்கிறார்.

“நேர்மை, கடின உழைப்பு, வேலையில் உறுதி ஆகியவை கனவுகளை நனவாக்கும்,” என்பதே அவர் இளம் தொழில் முனைவோருக்குத் தரும் செய்தி.


 
 
 
 
 

அதிகம் படித்தவை

  • costly Mangoes

    மாம்பழ மனிதர்

    மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த சங்கல்ப் சிங் பரிஹார் தமது பழப்பண்ணையில் உலகிலேயே மிக அதிக விலை கொண்ட மாம்பழத்தை விளைவிக்கிறார். விரைவில் அவரது வருமானம் ராக்கெட் வேகத்தில் உயர இருக்கிறது. சோபியா டேனிஷ்கான் எழுதும் கட்டு்ரை

  • Tutoring online

    தனி ஒருவன்

    இருபத்து மூன்று வயதாகும் அஸ்ஸாம் இளைஞர் ராஜன் நாத், பத்து மாதத்தில் 35 லட்சம் வருவாய் ஈட்டி கலக்குகிறார். இவர் போட்டித் தேர்வு எழுதுவோருக்கு உதவ இ-போஸ்டல் நெட்ஒர்க் என்ற ஸ்டார்ட் அப் நிறுவனத்தை தனி ஆளாக தொடங்கி வெற்றி பெற்றிருக்கிறார். உஷா பிரசாத் எழுதும் கட்டுரை.

  • Girl Power

    கலக்குங்க கரோலின்!

    பெற்றோரால் பாதுகாப்பாக வளர்க்கப்பட்ட பெண் கரோலின் கோம்ஸ். தந்தை இறந்த பின்னர், வெளிநாட்டில் எம்எஸ் படித்து விட்டு, தமது சொந்த அனுபவத்தின் பெயரில் உருவாக்கிய மூலிகை பொருட்கள் தயாரிக்கும் ஸ்டார்ட் அப் நிறுவனத்தை தொடங்கி வெற்றிகரமாக நடத்தி வருகிறார். சோபியா டேனிஷ் கான் எழுதும் கட்டுரை.

  • juice at low price

    பத்து ரூபாய் பழரசம்!

    பிரபு காந்திகுமார் அமெரிக்காவில் ஆண்டுக்கு ரூ.48 லட்சம் சம்பளம் வாங்கிக் கொண்டிருந்தார். குடும்பத்தொழிலைக் கவனிக்க கோவை திரும்பினார். இப்போது பழரசங்கள் தயாரிக்கும் தொழிலில் ஆண்டுக்கு ரூ. 35 கோடி வருவாய் தரும் சாம்ராஜ்யத்தை ஐந்தே ஆண்டுகளில் கட்டமைத்திருக்கிறார். உஷா பிரசாத் எழுதும் கட்டுரை.

  • Food for night

    இரவுக் கடை

    கொல்கத்தாவைச் சேர்ந்த மூன்று நண்பர்கள் இணைந்து நள்ளிரவில் பசித்தவர்களுக்கு உணவு டெலிவரி செய்யும் சேவை தொடங்கினர். தொடக்கத்தில் ஒரு ஆர்டர் கூட கிடைக்கவில்லை. இப்போது மாதம்தோறும் 1800 ஆர்டர்கள் மூலமாக 8 லட்சம் வருவாய் ஈட்டுகின்றனர். ஜி.சிங் எழுதும் கட்டுரை.

  • Master of cookery books

    சமையல் ராணி

    நித்தா மேத்தாவின் கணவர் மருந்துத் தொழிலில் ஈடுபட்டிருந்தார். ஒரு கட்டத்தில் அது பின்னடைவைச் சந்தித்தது. அந்த சமயத்தில், சமையல் கலையை மாணவர்களுக்குக் கற்றுக் கொடுத்து வருமானம் ஈட்டிய நித்தா மேத்தா, இன்றைக்கு பல கோடிகள் குவிக்கும் தொழில் நிறுவனங்களுக்கு உரிமையாளர் ஆகியிருக்கிறார். சோபியா டேனிஸ்கான் எழுதும் கட்டுரை