Milky Mist

Wednesday, 29 October 2025

ஏழு லட்சம் முதலீடு! இரண்டு கோடி வருவாய்! மலைக்க வைக்கும் மலைத்தேன் வணிகத்தில் கொடிகட்டிப் பறக்கும் தம்பதி!

29-Oct-2025 By உஷா பிரசாத்
பெங்களூரு

Posted 11 Jun 2021

கர்நாடகா மாநிலம் தண்டேலியில் மேற்கு தொடர்ச்சி மலையில் மலையேற்றத்தில் ஈடுபட்டிருந்த 24 வயதான மிதுன் ஸ்டீபன், ரம்யா சுந்தரம் இருவரும் வனத்தில் உள்ளூர் பழங்குடியின மக்கள் தேன் எடுக்கும் காட்சியைப் பார்த்தனர்.

2014ஆம் ஆண்டு நடைபெற்ற இந்த நிகழ்வு இருவரின் மனதிலும் பதிந்து விட்டது. அதே ஆண்டில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். அடுத்த ஆண்டு வனத்தில் இருந்து எடுக்கப்படும் தேன் விற்பனையை, ஹனி மற்றும் ஸ்பைஸ் என்ற பெயரில் தங்களது சொந்த சேமிப்பான ரூ.7 லட்சம் முதலீட்டில் தொடங்கினர்.

  ரம்யா சுந்தரம் மற்றும் மிதுன் ஸ்டீபன் இருவரும் ஹனி மற்றும் ஸ்பைஸ் நிறுவனத்தை வனத்தில் இருந்து கிடைக்கும் தேனை சந்தைப்படுத்துவதற்காக 2014ஆம் ஆண்டு தொடங்கினர்.(புகைப்படங்கள்: சிறப்பு ஏற்பாடு

ஹனி மற்றும் ஸ்பைஸ் நிறுவனம் நேரடியாக வாடிக்கையாளர்களுக்கு தனது இணையதளத்தின் வாயிலாக விற்பனை செய்கிறது. அதுமட்டுமல்லாமல் அமேசான் மற்றும் ஃபிளிப்கார்ட்டில் இணைய வழியிலான சில்லரை வணிகத்தில் கடந்த ஆண்டு ரூ.2 கோடி ஆண்டு வருவாய் ஈட்டினர். இந்த ஆண்டு அதன் வருவாய் ரூ.3.5 கோடியை எட்ட உள்ளது.  

நாடு முழுவதும் உள்ள மக்கள் அவர்களிடம் இருந்து தேன் வாங்குகின்றனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக அமெரிக்கா, சிங்கப்பூரில் உள்ள வாடிக்கையாளர்களுக்கும் தேன் விநியோகிக்கின்றனர்.

  பெங்களூரை சேர்ந்த மிதுன் மற்றும் ரம்யா இருவரும் தண்டேலியில் வனப்பகுதியில் தேன் எடுப்பதை பார்த்ததில் இருந்து, வனத்தில் இருந்து எடுக்கப்பட்ட  தேன் ஏன் கடைகளில் விற்கும் தேனில் இருந்து மாறுபட்டுள்ளது என ஆறுமாதங்கள் ஆராய்ச்சியில் ஈடுபட்டனர்.  

“தண்டேலியில் பழங்குடியினரை சந்திக்கும் வரை, சில்லரை சந்தையில் பாட்டிலில் அடைக்கப்பட்ட தேன் விற்பனை ஆவது பற்றி மட்டுமே நாங்கள் அறிந்திருந்தோம்,” என்று சொல்லும் மிதுன்,தங்கள் நிறுவனத்தைத் தொடங்குவதற்கான எண்ணமான விதை தோன்றியது குறித்து நினைவு கூர்ந்தனர்.

    “வனத்தில் இருந்து கிடைக்கும் தேன் லேசான புளிப்பு சுவையுடன் இருப்பதை உணர்ந்தோம். அது வித்தியாசமான நயம் மற்றும் வண்ணத்தைக் கொண்டிருந்தது. பல்வேறு பிராண்ட்களில் சூப்பர் மார்க்கெட்களில் மற்றும் பெரிய கடைகளில் விற்கப்பட்ட தேன்கள் ஒரே சுவையில் மிகவும் இனிப்பாக இருந்தன.”

  பெரும் அளவிலான தேன் உற்பத்தியின் போது அதீத வடிகட்டுதல் மற்றும் சூடு படுத்துதல் செயல்பாட்டின் போது தூய தேனில் இருக்கும் நன்மை தரும் பொருட்கள் அழிந்து விடுகின்றன.
மிதுன் மற்றும் ரம்யா இருவரும் 2010ஆம் ஆண்டு பெங்களூருவில் சந்தித்தனர். அதில் இருந்து மலையேற்றங்களுக்கு செல்ல ஆரம்பித்தனர்  


“மலர்களில் இருந்து தேனீக்கள் எடுக்கும் தேனைப் பொறுத்தே அதன் நயமும், வண்ணமும் சுவையும் வேறுபடுகிறது என்பதை நாங்கள் புரிந்து கொண்டோம்,” என்றார் மிதுன்.   “முக்கியமான பிராண்ட்கள் விற்கும் தேன் ஒரே சுவையில் இருப்பதற்குக் காரணம் அவர்கள் தங்களது உற்பத்தியில் ஒரே நிலைத்தன்மையை  நிர்வகிப்பதுதான். வாடிக்கையாளர்களும் அதற்குப் பழகிவிட்டனர்.”  

மிதுன், ரம்யா இருவரும், இயற்கையான வடிவத்திலான தேனுக்கு ஒரு சந்தை அவசியம் இருக்க வேண்டும் என்று உணர்ந்தனர். அவர்களின் எண்ணத்தின் வேரில் அந்த வணிக யோசனை உதித்தது.

  “நாங்கள் நீண்ட நேரம் காஃபி ஷாப்களில் உட்கார்ந்து யோசனை செய்தோம். ஜெனு குருபாஸ் (தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டம், கர்நாடகா மாநிலம் மைசூரு, குடகு மாவட்டங்களில் வாழ்கின்றனர்) போன்ற பழங்குடியினர், தங்கள் வாழ்வாதாரத்திற்காக தேன் எடுப்பதன் மூலம் வருவாய் ஈட்டுகின்றனர்,” என்றார் மிதுன்.  

பழங்குடியினர்களுடன் பணியாற்றி அவர்களின் வாழ்வில் சமூக மாற்றத்தை ஏற்படுத்தும் யோசனை மற்றும் அவர்களிடம் இருந்து தேன் வாங்குவதும் இளம் பொறியாளர்களுக்கு ஈர்ப்பாக இருந்தது. ஆழ்ந்த வனப்பகுதிக்குள் தங்களை முன்னெடுத்து செல்லும் வகையில், சிறிய விவசாயிகள், தன்னார்வலர்கள், சுய உதவி குழுக்கள், இந்தியாவின் பன்முகத்தன்மை கொண்ட பகுதிகளில் உள்ள உள்ளூர் பழங்குடியினர் ஆகியோருடன் பணியாற்றும் வகையில் நிறுவனத்தைத் தொடங்குவது என்று முடிவு செய்தனர்.  

ஹனி மற்றும் ஸ்பைஸ் நிறுவனத்துக்காக மிதுன், ரம்யா இருவரும் சூளகிரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட பகுதிகளிலும், பெங்களூருவை சுற்றி உள்ள காப்புக்காடுகள், ஒடிசா, சத்தீஸ்கர், உத்தரகாண்ட், கேரளா வனப்பகுதிகளிலும் எடுக்கப்படும் தேனை கொள்முதல் செய்கின்றனர்.   முதல் ஆண்டில் அவர்கள் முகநூல் வாடிக்கையாளர்களிடம் இருந்து பின்னூட்டங்களை பெற்றனர்.

“எங்கள் பொருட்களை சந்தைப்படுத்த வேளாண் சந்தைகள், தெருவோர சந்தைகளில் பங்கேற்பதை வாடிக்கையாகக் கொண்டோம்,” என்றார் மிதுன் “எங்களது தேனை வாங்கி உபயோகித்தவர்கள், மேலும் கூடுதலாக வாங்குவதற்காக எங்களைத் தேடி வந்தனர். இந்த சந்தையை கைப்பற்ற, பெரும் வாய்ப்பு இருப்பதை அப்போது நாங்கள் உணர்ந்தோம்.”

  முதல் ஆண்டில், ஹனி மற்றும் ஸ்பைஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் ரூ.10 லட்சம் அளவில் வணிகத்தில் ஈடுபட்டனர். 2015ஆம் ஆண்டு மத்தியில் இணைய வழி விற்பனையை அவர்கள் தொடங்கினர். அப்போது முதல் அவர்கள் விற்பனை ஒவ்வொரு ஆண்டும் 100 சதவிகிதம் அதிகரிக்கத் தொடங்கியது.   இணைய தள சில்லரை விற்பனையாளராக இருப்பதால், வாடிக்கையாளர்களிடம் தங்கள் பொருட்கள் வாயிலாக நேரடியாக அணுகுகின்றனர். தங்கள் தேனின் தனித்தன்மை பற்றியும் விவரிக்கின்றனர்.

  “பாட்டிலில் அடைக்கப்பட்ட தேனை விடவும், எங்கள் தேன் எப்படி சுவையாக இருக்கும் என்று எங்கள் வாடிக்கையாளர்களுக்கு நாங்கள் எடுத்துச் சொன்னோம்,” என்றார் மிதுன்.

“பெரிய நிறுவனங்கள் அதீத வடிகட்டும் செயல்பாடுகளை பின்பற்றுகின்றனர். மகரந்தங்களை கூட அவர்கள் நீக்கி விடுகின்றனர். நாங்கள் இயற்கையான தேனை விற்கின்றோம். சூடுபடுத்தப்படுவதுடன்  அடிப்படையான வடிக்கட்டுதல் மட்டுமே அதில் மேற்கொள்ளப்படுகிறது.”
2015ஆம் ஆண்டு முதல் ரம்யா முழு நேர வணிகத்தில் ஈடுபட்டு வருகிறார்.


வணிகத்தில் முக்கியமான மேம்பாடாக, தேன் எங்கிருந்து கிடைக்கிறது என்ற தகவல்களை வாடிக்கையாளர்களிடம் பகிர்ந்து கொள்கின்றனர். “தேன் பாட்டிலில் க்யூஆர் குறியீடு அச்சிட்டுள்ளோம். அந்த குறியீட்டை வாடிக்கையாளர்கள் மொபைலில் ஸ்கேன் செய்யும் போது தேன் எங்கிருந்து எடுக்கப்பட்டது எந்த மாதத்தில் சேகரிக்கப்பட்டது என்ற தகவல்களை தெரிந்து கொள்ள முடியும்,” என்றார் மிதுன்.

  இது தவிர அவர்கள் தேனுடன் இஞ்சி, துளசி ஆகிய இயற்கை பொருட்கள் சேர்க்கப்பட்ட மதிப்பு கூட்டப்பட்ட தேனையும் விற்கின்றனர்.   இன்றைக்கு, அவர்கள் காட்டுத்தேன், பதப்படுத்தப்படாத தேன், பாறை தேன், ஆப்பிள் சிடர் வினிகர், ஆரோக்கியமான பழரசங்கள் உள்ளிட்ட ஊட்டச்சத்து நிறைந்த உணவுகள் உதடு சாயம், ஷாம்பு போன்ற தனிநபர் அழகு சாதனப் பொருட்கள் பல வகையான பொருட்களையும் கூட அவர்கள் விற்பனை செய்கின்றனர். 

  அழகுசாதன பொருட்களை தயாரிப்பதற்கு தனியாக தயாரிப்பு முறை தேவைப்படுகிறது என்பதால் உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ஒரு நிறுவனத்துக்கு அவுட்சோர்சிங் கொடுத்துள்ளனர். இதர பொருட்களை பெங்களூருவில் யெலகங்காவில் உள்ள 4,000 ச.அடி கொண்ட வாடகை இடத்தில் 14 பேர்களுடன் செயல்படும் இடத்தில் தயாரிக்கின்றனர்.

  தமிழ்நாட்டில் உள்ள கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் எனும் சிறிய நகரில் இருந்து வந்தவர் மிதுன். அவருடைய தந்தை மாநில வேளாண்மை துறையில் பணியாற்றுகிறார். அவருடைய தாய் கல்லூரி முதல்வராக பணியாற்றுகிறார்.   மார்த்தாண்டம், பாரம்பரியமாக தேனீ வளர்ப்புக்கு பெயர் பெற்றதாகும். அந்தப் பகுதியில் பல்வேறு தேனீ வளர்ப்பு விவசாயிகள் உள்ளனர். ஆனால், போதுமான நிலம் இருந்தும் கூட, மிதுன் குடும்பம் தேன் தொழிலில் ஈடுபட வில்லை.  

“தேனீ வளர்ப்பவர்கள் வைத்த தேன் பெட்டிகளை எங்கள் வீட்டின் பின்புறம் வைத்திருந்தோம்,”  என்று பகிர்ந்து கொள்கிறார் மிதுன். “எங்கள் தோட்டத்திற்கு மகரந்த சேர்க்கை தேவைப்பட்டது. தேனீ வளர்ப்பவர்களுக்கு தேன் தேவைப்பட்டது. நான் அதைப் பார்த்துத்தான் நான் வளர்ந்தேன். தேன் குறித்த இந்த அறிவு தான் எனக்கு இருந்தது.”  

மிதுன், தனது சொந்த ஊரில் பள்ளி படிப்பை முடித்தார். சென்னையில் உள்ள புனித ஜோசப் பொறியியல் கல்லூரியில் மின், மின்னணுவியல் மற்றும் தகவல் தொடர்பு பொறியியல் பட்டம் பெற்றார்.   ரம்யா பெங்களூருவைச் சேர்ந்தவர். கேந்திர வித்யாலயாவில் பள்ளிப் படிப்பை முடித்தார். பெங்களூருவில் உள்ள ராஜீவ் காந்தி பொறியியல் கல்லூரியில் கணினி அறிவியல் பொறியியல் முடித்தார்.   அவருடைய தந்தை பெங்களூருவில் உள்ள மத்திய மின் ஆராய்ச்சி மையத்தில் விஞ்ஞானியாக இருக்கிறார். 

சென்னையில் இருந்து பெங்களூருவுக்கு வேலை தேட சென்றபோது 2010ம் ஆண்டு இந்த தம்பதியினர் சந்தித்து கொண்டனர். அவர்கள் அடிக்கடி மலையேற்றம் சென்றனர். இதன் வாயிலாக அவர்களுக்கு இடையேயான உறவு வலுப்பெற்றது.
  தேனீ வளர்ப்பது பொதுவான சூழலாக இருக்கும் தமிழகத்தின் மார்த்தாண்டத்தை சேர்ந்தவர் மிதுன்

பொறியியல் பட்டதாரிகள் என்பதையும் தாண்டி, 9 முதல் 5 மணி வேலையாக இல்லாமல் ஏதேனும் சொந்தமாக சொந்தமாக செய்ய வேண்டும் என இருவரும் விரும்பினர்.   பல்வேறு ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் மென்பொருள் முன்னெடுப்பில் ப்ரீலேன்சராக மிதுன் பணியாற்றி இருக்கிறார். ரம்யா, பெருநிறுவனங்களின் நிகழ்வு திட்டமிடல் பணியில் ப்ரீலேன்சராக இருந்தார்.

  2015ஆம் ஆண்டு ரம்யா தனது வேலையில் இருந்து விலகி, ஹனி மற்றும் ஸ்பைஸ் நிறுவனத்தில் கவனம் செலுத்தத் தொடங்கினார். மிதுன் இதில் முழு நேரமாக ஈடுபடுவதற்கு மேலும் மூன்று ஆண்டுகள் எடுத்துக் கொண்டார்.   இந்த தம்பதிக்கு நிதிஷ் என்ற மூன்றரை வயது மகன் உள்ளார்.  

2021 ஆம் ஆண்டின் குறிக்கோளாக , இந்த தம்பதி சூப்பர் மார்க்கெட்கள் மற்றும் நவீன வணிக கடைகள் போன்ற இணையம் சாரா விற்பனைகளில் ஈடுபடவும், மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பிய நாடுகளின் சந்தைகளில் ஈடுபடவும் திட்டமிட்டுள்ளது. அதே போல வெளியிடங்களில் இருந்து நிதி உதவி பெறவும் சில முதலீட்டாளர்களை அவர்கள் அணுகி உள்ளனர்.

  இருவருக்கும் பொதுவான நண்பரான ஆகாஷ் உடன் இந்த தம்பதி, உற்சாகத்தை பகிர்ந்து கொள்கிறது. நிறுவனத்தை நிறுவிய குழுவுடன் பங்கேற்ற அவர், எம்பிஏ படிப்பதற்கு சில காலம் இடைவெளி விட்டு, இப்போது மீண்டும் அவர்களுடன் இணைந்திருக்கிறார். 

 
 
 
 
 

அதிகம் படித்தவை

  • Selling comfort

    கம்பளிகளின் காதலன்!

    பெட்ஷீட்கள் மீது விருப்பம் கொண்ட புனித் பட்னி, அதையே வாய்ப்பாக மாற்றி தொழிலில் ஈடுபட ஆரம்பித்தார். இன்றைக்கு ஆண்டுக்கு ரூ. 9.25 கோடி வருவாய் ஈட்டும் இரண்டு நிறுவனங்களை கட்டமைத்திருக்கிறார். உஷா பிரசாத் எழுதும் கட்டுரை

  • Redesigning small shops

    மளிகையில் மலர்ச்சி!

    தந்தையின் மளிகைக்கடையை புதுப்பித்து விற்பனையை அதிகப்படுத்தினார்  வைபவ் என்ற இளைஞர். இதே போல் பிற மளிகைக் கடைகளையும் நவீனப்படுத்தும் தொழிலைத் தொடங்கி இரண்டு ஆண்டுகளிலேயே ஒரு கோடிக்கும் மேல் வருவாய் ஈட்டி உள்ளார் இவர். சோபியா டேனிஷ் கான் எழுதும் கட்டுரை.

  • The story of a bamboo entrepreneur couple who built a profitable business after initial losses

    மூங்கிலைப்போல் வலிமை

    ஒரு சோபா செட் வாங்குவதற்கான பயணத்தில் அவர்கள் சென்றடைந்த இடம் திரிபுராவில் ஒரு கிராமம். அங்கேயே உருவாகிறது ஒரு தொழிலுக்கான யோசனை. மூங்கில் இல்லங்களை உருவாக்கும் பிராஷாந்த் லிங்கம், அருணா கப்பகாண்டுலா தம்பதி பற்றி அஜுலி துல்ஸயன் தரும் கட்டுரை

  • His success story which reads like a film script aptly started in a cinema hall

    எளிமையான கோடீசுவரர்

    திரையரங்கில் காண்டீனில் வேலை பார்த்தவர் அவர். அன்று அவருக்கு மாதச் சம்பளம் 90 ரூபாய் மட்டுமே. இன்று அவர் 1800 கோடி ருபாய் நிறுவனம் ஒன்றின் உரிமையாளர். தன் வாழ்க்கை வெற்றிக்கதையை மசுமா பர்மால் ஜாரிவாலிடம் சொல்கிறார்

  • The success story of an entrepreneur who started a restaurant chain serving traditional Odiya food

    ஒடிஷாவின் சுவை!

    ஒரிய பாரம்பரிய உணவுவகைகளைப் பரிமாறும் எந்த உணவகமும் ஒடிஷாவில் இல்லை என்பதை உணர்ந்த டெபஷிஷ் பட்நாயக், தானே முன் வந்து 2001-ல் உணவகங்களை ஆரம்பித்தார். 7 உணவகங்கள் , 6 கோடி ரூபாய் விற்பனை என்று வளர்ந்திருக்கும் அவரது பாதையை விவரிக்கிறார் ஜி சிங்

  • வறுமையில் இருந்து செழிப்புக்கு

    இப்போது 3600 கோடி ரூபாய் மதிப்புள்ளதாக இருக்கும் தைரோகேர் நிறுவனத்தை உருவாக்கியவரான ஆரோக்கியசாமி வேலுமணி, ஒரு கையில் சிலேட், மறு கையில் மதிய உணவு சாப்பிட தட்டு- ஆகியவற்றுடன் அரசுப்பள்ளிக்குச் சென்றவர். அவரது வெற்றிக்கதையை விளக்குகிறார் பி சி வினோஜ் குமார்