Milky Mist

Friday, 26 April 2024

அன்று 20,000 ரூபாய் முதலீடு! இன்றைக்கு கோடிகள் புரளும் நிறுவனம்!

26-Apr-2024 By பார்தோ பர்மான்
டெல்லி

Posted 02 Oct 2017

ஒன்பது வருடங்களுக்கு முன்பு ரகு கன்னா, இரண்டு பேரின் உதவியுடன், தமது தொழிலைத் தொடங்கினார். அவரது பெற்றோர் 20 ஆயிரம் ரூபாய் ஆரம்ப முதலீடாகக் கொடுத்தனர். இன்றைக்கு, ரகு ஒரு கோடீஸ்வரர். அவரது நிறுவனம், ஆண்டுக்கு 32 கோடி ரூபாய் வர்த்தகம் செய்கிறது.

மெகா, மெரு, ஈஷி, டேப் கேப்ஸ் போன்ற ரேடியோ டாக்சிகளில் பல்வேறு பிராண்ட்களின் விளம்பரங்களை  நீங்கள் பார்த்திருக்கலாம். அப்போது, இந்தப் புதிய டிரென்ட்டை ஆரம்பித்தது யார் என்ற கேள்வி உங்களுக்குள் எழுந்திருக்கலாம். இதற்குச் சரியான பதில் ரகு கன்னா என்பதுதான். இவர் கேஷ்யுவர்டிரைவ் மார்கெட்டிங் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக இருக்கிறார். அவுட்டோர் அட்வர்டைசிங்கின் ஒரு பகுதியாக இருக்கும், டிரான்சிட் அட்வர்டைசிங் என்ற மாற்றுச் சிந்தனையுடன் கூடிய புதிய முறை விளம்பர உத்தியைத் தொடங்கியவர் இவர்தான்.

https://www.theweekendleader.com/admin/upload/23-09-17-05newlead1.jpg

ரகு கன்னா, கேஷ்யுவர்டிரைவ் என்ற, டாக்சி, லாரிகள், பேருந்துகள் உள்ளிட்ட வாகனங்களில் வெளிப்புறம் மற்றும் உட்புறங்களில் விளம்பரம் செய்யும் நிறுவனத்தை 20 ஆயிரம் ரூபாய் முதலீட்டில் 2008-ம் ஆண்டில் தொடங்கினார் (புகைப்படங்கள்:பார்த்தோ பர்மான்)


தற்போதைக்கு,  ஒரு மாதத்தில், அவரது  நிறுவனம் 10 ஆயிரம் ரேடியோ டாக்சிகள், 45 ஆயிரம் ஆட்டோக்கள் (வட இந்தியாவில் 30,000, பெங்களூர், ஐதராபாத் மற்றும் சென்னையில் தலா 5000 ), விஆர்எல் லாஜிஸ்டிக் நிறுவனத்தின் 30-40 சதவிகித 600 லாரிகள் மற்றும் 100 பெருநிறுவனங்கள், தனியார் மற்றும் பள்ளி பேருந்துகள் ஆகியவற்றில் பிராண்ட் விளம்பரங்களைச் செய்கிறது.

ஸ்டேண்டேர்டு சார்டட் பேங்க், சிட்டி பேங்க், சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா, பஞ்சாப் நேஷனல் பேங்க், தேனா பேங்க், யூகோ பேங்க், எல்.ஐ.சி., யுனெட்டெட் இன்ஷூரன்ஸ், நேஷனல் இன்ஷூரன்ஸ், சப்வே, பிட்சா ஹட், ரேபக், டைம்ஸ் நவ், கூகுள், பெப்சி, கோக், நெஸ்லே, ஐ.டி.சி, சன்பர்ன்(ஈவன்ட்), வோடபோன், ஏர் டெல், ரிலையன்ஸ் உள்ளிட்ட தொலைதொடர்பு நிறுவனங்கள் போன்ற 500-க்கும் மேற்பட்ட முக்கியமான  பிராண்ட்களை வாடிக்கையாளர்களாகக் கொண்டிருக்கின்றனர்.

ஐ.ஐ.டி முன்னாள் மாணவரான ரகு, தமது 22-வது வயதில் டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரகத்துக்கு விசா நேர்காணலுக்காகச் சென்றார். தூதரகத்துக்குச் சென்று விட்டு வீடு திரும்பும் போது, டிராபிக் ஜாமில் மாட்டிக் கொண்டார்.

காருக்கு வெளியே வேடிக்கைப் பார்த்தபடி வந்தார். அப்போது அவருக்கு முன்பு நின்று கொண்டிருந்த ஒரு லாரியின் பின்னால் எழுதப்பட்டிருந்த ஒரு வாசகம் ரகுவின் கண்ணில் பட்டது. அப்போதுதான் அவருக்குத் திடீரென ஒரு யோசனை தோன்றியது. கார்களில், ஏன் அட்வர்டைசிங் செய்யக் கூடாது என்று சிந்தித்தார். 

இப்போது 32 வயதாகும் ரகு, ”தேசம் முழுவதும் உள்ள வாகனங்களில் பிராண்ட் விளம்பரங்கள், சேவைகளை அளிக்கின்றோம். டாக்சிகள், தனியார் பேருந்துகள், பெருநிறுவனங்களின் பேருந்துகள், பள்ளிப் பேருந்துகள், ஆட்டோக்கள் உள்ளிட்ட அனைத்துவிதமான வாகனங்களும்தான் எங்களது விளம்பர இலக்கு,” என்று சொல்கிறார்.

கேஷ்யுவர்டிரைவ், ஒரு பிரைவேட் லிமிடெட் நிறுவனமாக இருக்கிறது. இதில் ரகுவும், அவரது தாயும் இயக்குனர்களாக இருக்கின்றனர். மூன்றாது நபர் யாரும் இதில் இல்லை. முழுக்க, முழுக்க 100 சதவிகிதம் ஈடுபாட்டுடன் கூடிய உரிமையாளர்களாக இருவரும் இருக்கின்றனர். “இதுதான் என்னுடைய முதல் வேலை,” என்று சிரிக்கிறார் ரகு.

20ஆயிரம் ரூபாய் முதலீட்டுடன், ஒரு இணையதளத்தை உருவாக்கி 2008-ம் ஆண்டு தமது நிறுவனத்தைத் தொடங்கினார். அப்போது பிராண்ட் ஆன் வீல்ஸ் என்று தமது நிறுவனத்துக்கு பெயர் வைத்திருந்தார்.  ஒரு வருடம் கழித்து கேஷ்யுவர்டிரைவ் என்று  பெயரை மாற்றினார். தொடக்கத்தில் அவரையும் சேர்த்து மூவர் மட்டுமே இருந்தனர். இன்றைக்கு அவரது நிறுவனத்தின் ஊழியர்கள் எண்ணிக்கை 88 ஆக இருக்கிறது.

https://www.theweekendleader.com/admin/upload/23-09-17-05newcar2.jpg

வாடிக்கையாளர்களிடம் இருந்து ஆர்டர் முழுமையாகக் கிடைக்கும் முன்பு, அந்த விளம்பரம் வாகனங்களில் எவ்வாறு இடம் பெறும் என்பது குறித்து மாதிரியை செய்து காட்டுகிறார்


எந்த ஒரு சவால்களும் இல்லாத வெற்றி சாத்தியம் இல்லை. “ஏதாவது புதிதாக உருவாக்க வேண்டும் என்பது மிகவும் சிரமமான ஒன்று,” என்கிறார் ரகு. “கார் உரிமையாளர்கள், டாக்சி நிறுவனங்கள் மற்றும் விளம்பரம் தருகின்றவர்களுடன் இணைந்து செயல்படுவது என்பது முதல் மூன்று ஆண்டுகள் மிகவும் சிக்கலாக இருந்தது. தொழிலதிபர்களிடம், புதிய ஊடகத்தில் விளம்பரம் செய்யும் சிந்தனையை உருவாக்குவது மிகவும் கடினமாக இருந்தது,” என்கிறார். அவர்களுக்கு அது பரிசோதனை காலமாக இருந்தது. 2008-09-ம் ஆண்டு உலகப் பொருளாதாரம் வீழ்ச்சி என்பதில் தொழில்கள் மூழ்கி இருந்தன. பரிசோதனையான முயற்சிகளில் முதலீடு வீணாகி விடக் கூடாது என்பதில் தொழில் நிறுவனங்கள் உறுதியோடு இருந்தன.

இதன் விளைவாக, கிழக்கு டெல்லியில், ப்ரீத் விகார் பகுதியில் அவர் தொடங்கிய இந்த நிறுவனம் 2010-ம் ஆண்டுதான் முழு அளவில் செயல்பாட்டுக்கு வந்தது. அப்போது ரிலையன்ஸ் மியூட்சுவல் பண்ட்  மட்டுமே ஒரே ஒரு வாடிக்கையாளர்.  இன்ஷூரன்ஸ் ஏஜென்ட்டாக இருந்த ரகுவின் நண்பர், கார் வைத்திருந்தார். அந்த காரில்தான் முதன் முதலில்  ரிலையன்ஸ் நிறுவனத்தின் விளம்பரத்தை வெளியிட்டார். இந்த முதல் வெற்றியின் காரணமாக இப்போதும் கூட ரிலையன்ஸ், ரகுவின் வாடிக்கையாளராக இருக்கிறது.

வினயில் ஷீட்டில் விளம்பரங்களை உருவாக்கி, வாடிக்கையாளர்களிடம் செயல்விளக்கம்  செய்து காண்பித்து, அதுஎப்படி காரில் விளம்பரப்படுத்தப்படும் என்பதை விளக்குவார். இந்த செயல்விளக்கத்தில் வாடிக்கையாளர் திருப்தியடைந்து  சம்மதம் தெரிவித்த உடன், வாகனங்களில் விளம்பரம் வெளியிடப்படுகிறது.

ரகுவின் நிறுவனம், டெல்லி, மும்பை, பெங்களூரு, மற்றும் சண்டிகர் ஆகிய நான்கு கிளைகளுடன் செயல்படுகிறது. ஐதராபாத், சென்னை, கொல்கத்தா நகரங்களில் துணை அலுவலகங்களும் செயல்படுகின்றன.

https://www.theweekendleader.com/admin/upload/23-09-17-05newcar1.jpg

இமாசல பிரதேசத்தில் ரகுவின் தந்தை பால் மற்றும் பிரட் வகைகளின் விநியோகஸ்தராக இருக்கிறார்.


ரகு, சிம்லாவில் இருந்து வந்தவர். அவரது குடும்பத்தின் ஒரே வாரிசு அவர்தான். ரகுவின் தந்தை பூபேந்தர் குமார் கன்னா, இமாசல் பல்கலைக்கழகத்தில் 2012-ம் ஆண்டுவரை அரசியல் அறிவியல் துறை பேராசிரியர் ஆக பணியாற்றினார். ரகுவின் தாய் ப்ரவீன் கன்னா, ரகுவின் தொழிலில் ஈடுபடுவதற்கு முன்பு வரை குடும்பத் தலைவிதான். ரகுவின் தொழில் முனைவு பயணத்தில் அவருக்கும் மிக  முக்கியப் பங்கு உண்டு.

சிம்லாவில் உள்ள செயின்ட் எட்வர்ட் பள்ளியில் ரகு படித்தார். பாடத்தைத் தவிர நல்ல கூடுதல் திறமைகளைப் பெற்றிருந்தார். ஆனால், போதுமான அளவு படிக்கமாட்டார். ஆறாம் வகுப்பில் இந்தி, வரலாறு ஆகிய இரண்டு பாடங்களிலும் பெயில் ஆகிவிட்டார்.

திருமதி.விஜி, என்ற ரகுவின் இந்தி ஆசிரியர் அவருக்கு ஆசிரியராக மட்டுமின்றி, பள்ளியில் அவரது ஹவுஸ் அணியின் ஆசிரியராகவும் இருந்தார். இவர்தான் ரகுவின் வாழ்க்கையில் முக்கிய பங்காற்றியவர். இந்தி பாடத்தில் ரகு இரண்டு மதிப்பெண்கள் குறைவாகப் பெற்று தோல்வி அடைந்தார். எனவே, அவரிடம் சென்று தமக்கு சலுகை மதிப்பெண் அளிக்கும்படி கேட்டார்.

“பள்ளியில் டான்ஸ் போட்டி நடைபெறுவதாக இருந்தது. எனவே, அதற்கான பயிற்சியில் நான் தீவிரமாக ஈடுபட்டிருந்தேன். இதைத்தான் எனது ஆசிரியரிடம் விவரமாகக் கூறினேன்,”என்று நினைவு கூறுகிறார். “அதற்கு அவர், ‘இப்போது சலுகை மதிப்பெண் கொடுத்தால். அதுவே உனக்குப் பழக்கமாகி விடும்’ என்றார். இதுதான் என்னுடைய வாழ்க்கையை மாற்றியது.”

ஆறாம் வகுப்புக்குப் பின்னர், அவரது படிப்பில் முன்னேற்றம் இருந்தது. எட்டாம் வகுப்பில், மூன்றாவது ரேங்கில் தேர்ச்சி பெற்றார். இதன் பிறகுதான் தன்னிடம் இருக்கும் திறமையை நம்பத் தொடங்கினார். பள்ளிப் படிப்பு முடித்த உடன், சண்டிகரில் உள்ள தேவானந்த் ஆங்கிலோ-வேதிக் கல்லூரியில் சேர்ந்தார். அங்கு அறிவியல் பிரிவில் பள்ளி மேல்படிப்பை முடித்தார்.

பள்ளிப்படிப்பை முடித்த உடன், கவுகாத்தி ஐஐடி-யில் சேர்ந்தார். ஆனால், அவரது ஐஐடி சூழல் எளிமையானதாக இல்லை. வடிவமைப்புப் படிப்பில்தான் அவருக்கு இடம் கிடைத்தது. ஆனால், அந்தப் படிப்பை அவர் விரும்பாததால், அதில் இருந்து இடையிலேயே நின்றார்.

மீண்டும் அவர் ஐஐடி நுழைவுத் தேர்வை 2004-ம் ஆண்டு எழுதினார்.  மீண்டும் கவுகாத்தி ஐஐடியிலேயே இடம் கிடைத்தது! ஆனால், இந்த முறை சிவில் இன்ஜினீயரிங் படிப்பு. “என்னுடன் படித்தவர்கள் எல்லாம் எனக்கு சீனியர்களாக இருந்தனர்” என்று சிரிக்கிறார் ரகு.

அவரது படிப்பில் 2005-ம் ஆண்டு ஒரு திருப்பு முனை ஏற்பட்டது. மீண்டும் அவர் தன்னுடைய பாடப்பிரிவை மாற்றினார். “ஐஐடி கவுகாத்தியில் முதல் 10 சதவிகித மாணவர்களில் ஒருவராகத் தேர்ச்சி பெற்றேன்,” என்று விவரிக்கும் ரகு, “முதல் ஆண்டில் ஒரு மாணவர் முதல் 10 சதவிகிதத்துக்குள் வந்து விட்டால், அவர் தம்முடைய பாடப்பிரிவை மாற்றிக் கொள்ளலாம். எனவே, நான் எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன்  பிரிவுக்கு  மாற்றிக் கொண்டேன். ஐஐடி கவுகாத்தியில் மூன்று அடையாள அட்டைகளை நான் ஒருவன் மட்டும்தான் வைத்திருந்தேன்.”

ஐஐடி-யில் படிக்கும் போது, இரண்டு ஆராய்ச்சி உதவித் தொகைகளைப் பெற்றார். ரோம் நகரில் 2006-ம் ஆண்டிலும், பாரீஸ் நகரில் 2007-ம் ஆண்டிலும் ஆராய்ச்சியில் ஈடுபட்டார். ”இரண்டாம் ஆண்டு மாணவர்களில் நான் ஒருவன் மட்டும்தான் வெளிநாடுகளில் உதவித்தொகையுடன் கூடிய பயிற்சி பெற்றேன்.” என்று ரகு பெருமிதத்துடன் கூறுகிறார். 

ஐஐடி முடித்த உடன், மேற்படிப்பு படிப்பதற்காக, லண்டன் ஸ்கூல் ஆப் எக்கனாமிக்ஸில் சேரத் திட்டமிட்டார். ஆனால், அது நடக்கவில்லை. “நான் இந்தியா திரும்பியதும், சொந்தமாகத் தொழில் தொடங்குவதற்காக மேற்படிப்புப் படிக்க நினைத்தேன்,” என்று விவரிக்கிறார் ரகு.

அவரின் முன்பு பல்வேறு வாய்ப்புகள் இருந்தன. ஏன் ரகு தொழில் அதிபராக விரும்பினார்? ஒரு வேளை அது அவரது பரம்பரை ரத்தத்தில் இருந்திருக்கலாம்.

https://www.theweekendleader.com/admin/upload/23-09-17-05newcar.JPG


மறைந்த அவருடைய தாத்தா, ஆர்.எல்.கன்னா, இமாசல் மாநிலத்தில் பால் மற்றும் பிரட் விநியோகஸ்தராக இருந்தார். ரகுவின் தந்தை அவருக்கு உதவியாக இருந்தார். தாத்தா மறைவுக்குப் பின்னர், ஓய்வு பெற்ற அவரது தந்தை அந்தத் தொழிலைக் கவனித்துக் கொண்டார்.

“சிம்லாவில் ராம் பஜாரில் நிறையவே நான் கற்றுக் கொண்டேன்,” என்கிறார் ரகு. “நான் குழந்தையாக இருக்கும்போது, கடைக்காரர்கள் எப்படி இருக்கிறார்கள். எவ்வாறு தொழில் செய்கின்றனர் என்பதை உற்று நோக்கியபடியேதான் வளர்ந்தேன்.”

அவரது தாத்தாவிடம் இருந்தோஅல்லது ராம்பஜாரின் காய்கறிக்கடைக்காரர்களிடம் இருந்தோ, மிக இளம் வயதிலேயே தொழிலின் நுணுக்கங்களை எல்லாம் அவர் கற்றுக் கொண்டார்.

2008-ம் ஆண்டு அமெரிக்கா செல்வதற்கு திட்டமிட்ட ரகு, அதற்காக விசாவுக்கு விண்ணப்பம் செய்தார். ஆனால், அந்தத் திட்டத்தைக் கைவிட்டார். அதற்கு அவருடைய நண்பர் ஹர்மான் என்பவர்தான் காரணம். அவரால் ஈர்க்கப்பட்ட ரகு, இந்தியாவில் தங்கி இருந்து, கேஷ்யுவர்டிரைவ் என்ற நிறுவனத்தைத் தொடங்கினார்.

“அவரிடம் ஆலோசனை கேட்பதற்காகச் சென்றேன். நான் அமெரிக்கா போவதற்கான காரணங்கள் குறித்து என்னிடம் அவர் கேட்டார்,”என்று நினைவு கூறும் ரகு, “நான் அமெரிக்கா சென்றால், அங்கிருந்து ஸ்கைப் வழியே தொடர்பு கொள்ளும் ஒரு மகனாக மாறிவிடுவேன் என்றும், என்னுடைய பெற்றோருடன் இந்தியாவிலேயே இருப்பது நல்லது என்றும் கூறினார்.”
 

https://www.theweekendleader.com/admin/upload/23-09-17-05newcar3.jpg

பயணம் செய்வதும், புதிய இடங்களைக் கண்டுபிடிப்பதும் ரகுவுக்கு விருப்பமானது


தம் முடிவுக்காக ரகு ஒரு போதும் வருந்தியதில்லை. அவருடைய தொழில் ஆண்டுக்கு, ஆண்டு நல்ல வளர்ச்சியை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. ஆனால், அவருக்கு அதிர்ஷ்டம் கொடுத்த ஆண்டு என்று சொன்னால் அது 2014 ஆண்டுதான். அந்த ஆண்டில்தான் அவர் பல்லவி என்ற பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார். டெல்லியில் இருந்து நொய்டாவுக்கு பெரிய அலுவலகத்துக்கு மாறினார். இந்த தம்பதியினருக்கு இப்போது ஷபீர் எனும் இரண்டு வயது மகன் இருக்கிறான்.

எதிர்காலத்துக்கான திட்டம் குறித்து பேசியவர், “நான் எப்போதும் என் முதுகில் ஒரு பையை மாட்டிக் கொண்டே திரிவேன்,”என்று கூறுபவர், “முறையாக ஹோட்டல் ரூம் முன்பதிவு செய்யாமல் இலக்கில்லாமல் பயணிப்பேன், நான் ஒரு கடற்கரை காதலன்,” என்று சொல்லும் அவர், கடற்கரையில் ஏதாவது ஒரு இடத்தில் தங்குவதைத்தான் அவர் விரும்புகிறார். "15-16 ஆண்டுகாலம் சிம்லா வாழ்க்கைக்குப் பிறகு, எனக்கு மலைகள் போதும் போதும் என்று ஆகிவிட்டன,” என்று சிரிக்கிறார்.


 
 
 
 
 

அதிகம் படித்தவை

  • No soil, no land, agriculture revolution in terrace in chennai

    மண்ணில்லா விவசாயம்

    ஹைட்ரோபோனிக்ஸ் என்கிற மண் இல்லாமல் விவசாயம் செய்யும் நவீன தொழில்நுட்பத்தை தொழில்முயற்சியாகக் கைக்கொண்டு வெற்றிபெற்றுள்ளார் சென்னையைச் சேர்ந்த ஸ்ரீராம் கோபால். ப்யூச்சர் பார்ம்ஸ் என்கிற அவரது நிறுவனம் வேகமாக வளர்கிறது. பி சி வினோஜ்குமார் எழுதும் கட்டுரை

  • fulfilling the dream of his grandfather

    தாத்தா சொல்லை தட்டாதே

    ஆயூஷ் லோஹியா மிகவும் இளம் வயதில் குடும்பத்தொழிலில் பொறுப்பேற்றார். தாத்தாவின் வழிகாட்டலில் குடும்பத்தின் தொழில்களில் பல நுணுக்கங்களைக் கற்றுக் கொண்டார். வாகன சந்தையில் 500 கோடி ரூபாய் இலக்குடன் செயல்படுகிறார். சோஃபியா டேனிஷ் கான் எழுதும் கட்டுரை.

  • cool Business

    குளிர்ச்சியான வெற்றி

    குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த நான்கு கிராமத்து இளைஞர்கள், தந்தையின் கைபிடித்து ஒரு சிறு நகருக்கு வந்தவர்கள். இவர்கள் ஒரு வெற்றிலை பாக்கு கடையில் இருந்து கோடிகளைக் குவிக்கும் ஐஸ்கிரீம் தயாரிப்பு நிறுவனமாக மாறி இருக்கிறார்கள். பல ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வெற்றி பெற்றிருக்கும் இவர்களின் கதையை குருவிந்தர் சிங் எழுதுகிறார்.

  • His success story which reads like a film script aptly started in a cinema hall

    எளிமையான கோடீசுவரர்

    திரையரங்கில் காண்டீனில் வேலை பார்த்தவர் அவர். அன்று அவருக்கு மாதச் சம்பளம் 90 ரூபாய் மட்டுமே. இன்று அவர் 1800 கோடி ருபாய் நிறுவனம் ஒன்றின் உரிமையாளர். தன் வாழ்க்கை வெற்றிக்கதையை மசுமா பர்மால் ஜாரிவாலிடம் சொல்கிறார்

  • Beauty as Business

    எடை, தடை, அதை உடை!

    தீக்‌ஷா சாப்ரா என்ற இளம் பெண் திருமணத்துக்குப் பின் குண்டாகி விட்டார். ஒரு கட்டத்தில் அவருக்கு, ஆத்தாடி, நாம இவ்ளோ குண்டாகிவிட்டோமே என்று தோன்ற, உடல் எடையைக் குறைத்து மீண்டும் அழகியாக மீண்டார். தன் அனுபவத்தைக் கொண்டு அதையே மற்றவர்களுக்கு ஆலோசனையாக வழங்கி இப்போது பணம் ஈட்டுகிறார். சோஃபியா டேனிஷ் கான் எழுதும் கட்டுரை.

  • country chicken hero

    நாட்டுக்கோழி நாயகன்

    ஐபிஎம், சிட்டிபேங்க் என்று பெருநிறுவனங்களில் உயர் பதவிகளை வகித்தவர் செந்தில்வேலா. இந்த உயர் பதவிகளை எல்லாம் உதறித் தள்ளிவிட்டு உள்நாட்டு கோழி இனங்களை மீட்டெடுக்கும் தீவிரத்துடன் கோழிப்பண்ணை தொடங்கி உயர்ந்திருக்கிறார். இரண்டே ஆண்டில் ஆண்டு வருமானம் 1.2 கோடிகளாக ஆகி உள்ளது. உஷா பிரசாத் எழுதும் கட்டுரை.