அவசர உதவிக்கு தாதா ஆம்புலன்ஸ்! மேற்கு வங்க மலைகிராமத்தில் பைக்கில் மனிதநேயப் பணி செய்யும் கரிமுல்!
21-Nov-2024
By குருவிந்தர் சிங்
கொல்கத்தா
மேற்கு வங்கத்தின் ஜல்பைகுரி மாவட்டத்தில் உள்ள 20 கிராமங்களில் தோராயமாக 70 ஆயிரம் பேர் வசிக்கின்றனர். அந்த பிராந்தியத்தில் தேசிய ஆம்புலன்ஸ் 108 சேவைகள் இல்லாததால், 55 வயது கொண்ட கரிமுல் ஹக் என்பவர் எந்த ஒரு அவசர மருத்துவ உதவிக்கும் அழைக்கக் கூடியவராக இருக்கிறார்.
இரவோ பகலோ எந்த ஒரு நேரமாக இருந்தாலும் ஆம்புலன்ஸ் தாதா என்று அன்புடன் அழைக்கப்படும் கரிமுல், தமது சைரன் ஒலிக்கும் மோட்டார்சைக்கிள் ஆம்புலன்ஸ் உடன் சம்பவ இடத்துக்கு வந்து விடுகிறார், நோயாளியை அழைத்துக் கொண்டு, 50 கி.மீ தொலைவுக்கு அருகில் இருக்கும் மருத்துவமனைக்குச் செல்கிறார்.
நோயாளிகளை 50 கிமீ தொலைவில் இருக்கும்
மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்ல கரிமுல் ஹக் இந்த மோட்டார்பைக்கை 1997ஆம் ஆண்டில் இருந்து உபயோகிக்கிறார்.
(புகைப்படங்கள்: சிறப்பு ஏற்பாடு)
|
இந்த கிராமங்களில் முறையான சாலை வசதி இல்லை. காட்டு விலங்குகள் வசிக்கும் வனப்பகுதிகளால் சூழப்பட்டுள்ளன. இதன்காரணமாக முன் எப்போதையும் விட கரிமுல்லின் சேவைக்கு அதிக தேவை உருவாகி இருக்கிறது. “1997-ஆம் ஆண்டு நான் இந்த சேவையை தொடங்கியதில் இருந்து 5,500-க்கும் மேற்பட்ட நோயாளிகளை கிராமங்களில் இருந்து மருத்துவமனைகளுக்கு கொண்டு சென்றிருக்கின்றேன்,” எனும் கரிமுல், தலபரி கிராமத்தைச் சேர்ந்த ஒரு தேயிலைத் தோட்ட பணியாளர். நாட்டின் நான்காவது உயரிய விருதான பத்ம ஸ்ரீ விருதைப் பெற்றிருக்கிறார். “1995-ஆம் ஆண்டு என் அம்மாவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. உடனடியாக மருத்துவசிகிச்சை அளிக்க வேண்டி இருந்தது. நான் வீடு வீடாகச் சென்று உதவி கேட்டேன். ஆனால், ஒரு ஆம்புலன்சோ அல்லது அவரை அழைத்துச் செல்லக் கூடிய எந்த ஒரு வாகனமோ கிடைக்கவில்லை,” என்று தமது வாழ்க்கையில் நடந்த துயரம் நிறைந்த நிகழ்வை நினைவு கூர்கிறார். இந்த சம்பவம்தான், அவரை அவசர மருத்துவ உதவி கோரும் குடும்பங்களிடம் இரக்கம் காட்டும் மனிதராக மாற்றியது. “உடனடி மருத்துவ உதவி இல்லாததால், என் அம்மா, வீட்டிலேயே மாரடைப்பு ஏற்பட்டு இறந்து விட்டார். இந்த நிகழ்வு என் மனதை நொறுக்கியது. இதே போன்று வேறு யாரும் பாதிக்கப்படக் கூடாது என்று நான் சபதம் எடுத்தேன்.” கரிமுல் ஒரு எளிய வாழ்க்கை வாழ்கிறார். தமது மனைவி அஞ்சுயா பேகம், ராஜேஷ், ராஜு ஆகிய மகன்கள் அவர்களது மனைவிகள், பேரக்குழந்தைகளுடன் ஒரு சிறிய தகரக்கொட்டகை வீட்டில் வசிக்கிறார். அவரது தாய் மரணம் அடைந்து இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அவருடன் தேயிலைத் தோட்டத்தில் பணியாற்றி வந்த சக ஊழியரான அஜிசுல், பணியில் இருந்தபோது திடீரென நிலைகுலைந்து விழுந்தார். “அவர் என் கண்முன்னே கீழே விழுந்தார். அவரை என்னுடைய பைக்கில் அழைத்துக் கொண்டு 50 கி.மீ தாண்டி இருந்த மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றேன். அவர் பிழைத்துக்கொண்டார்,” என்றார் கரிமுல்.
கனமழை பெய்யும் காலங்களில்
உள்ளூர் ஆற்றின் குறுக்கே உள்ள இந்த தற்காலிக மூங்கில் பாலத்தை உபயோகிக்க முடியாது
|
“உரிய நேரத்தில் சிகிச்சை கிடைத்ததால் அவரது உயிர் காப்பாற்றப்பட்டதாக நான் உணர்ந்தேன். அவர் குணம் அடைந்த சம்பவமானது, ஒரு பைக் ஆம்புலன்ஸ் தொடங்கலாம் என்ற யோசனையை எனக்கு அளித்தது. மோசமான சாலைகள், சுற்றிலும் வனப்பகுதிகள் சூழ்ந்த பகுதி என்பதால் நான்கு சக்கர ஆம்புலன்ஸ் இந்த பிராந்தியத்துக்கு ஏற்றதாக இருக்காது.” அவரது மோட்டார்பைக் ஆம்புலன்ஸ்தான் அதற்கு விடையாக இருந்தது. தான் செய்வது சரிதானா என்ற சந்தேகம் இருந்தாலும் பின்வரும் சம்பவம் அதை தீர்த்துவைத்தது. “பாம்புக்கடிக்கு உள்ளான ஒரு நோயாளியை நான் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றேன். ஒரு பாலத்தைக் கடந்தபோது ஆம்புலன்ஸ்(நான்குசக்கர வாகனம்) வாகனம் ஒன்றைப் பார்த்தேன். அந்த ஆம்புலன்சிலும் பாம்புக் கடிக்கு உள்ளான ஒரு நோயாளி இருந்தார். அது போக்குவரத்தில் சிக்கிக் கொண்டது,” என்று நினைவு கூர்கிறார். “அந்த ஆம்புலன்ஸ் அடுத்த மூன்று மணி நேரத்துக்கு அந்த இடத்தில் இருந்து நகர முடியவில்லை. நோயாளி இறந்து விட்டார். ஆனால், என்னுடைய நோயாளியை உரிய நேரத்துக்கு மருத்துவமனைக்கு கொண்டு சென்றேன். அவரது உயிரைக் காப்பாற்றினேன்.” எனினும், ஆரம்ப கட்டத்தில் உள்ளூர்வாசிகள் இவரது சேவையின் மீது நம்பிக்கை கொள்ளவில்லை. “அண்டை வீட்டார் கூட, என்னுடைய முயற்சியைப் பார்த்து சிரித்தனர். எனக்கு பைத்தியம் பிடித்துவிட்டதாக சிலர் கருதினர். பிறர் என்னுடைய சேவைக்கு உள்நோக்கம் கற்பித்தனர். ஆனால் பணமோ அல்லது ஊக்கத்தொகையோ பெற்றுக் கொள்ளாமல் மக்களின் உயிரைக் காக்கும் பணியைத் தொடர்வது என்று நான் தீர்மானமாக இருந்தேன்,” என்றார் கரிமுல்.
அடிப்படையான சில பரிசோதனைகள் செய்வதற்கு கரிமுல்லுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது |
விரைவிலேயே நிலைமை மாறியது மக்களிடம் இருந்து கரிமுல்லுக்கு அவசர அழைப்புகள் வரத்தொடங்கின. இரவு நேரத்தில் கூட உதவி கேட்டு அழைப்புகள் வந்தன. வழக்கமில்லாத நேரம் என்றெல்லாம் அவர் எதையும் கருதுவதில்லை. உற்சாகத்துடன் கூடிய அவரது சேவைக்கு மக்களிடம் இருந்து மரியாதையும் அன்பையும் அவர் பெற்றார். பல தருணங்களில் வனப்பகுதிகளில் விலங்குகளை எதிர்கொள்ளும்போது அவரது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. “நாங்கள் அடர்ந்த வனப்பகுதியால் சூழப்பட்டுள்ளோம். யானைகள் மற்றும் இதர வன விலங்குகள் வாழ்கின்றன. மருத்துவமனைக்கு செல்வதற்கு வனத்தைக் கடந்துதான் நாங்கள் செல்கின்றோம்,” என்றார் அவர். “வனவிலங்குகள் மட்டும் பிரச்னை அல்ல. மழைக்காலங்களில் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும்போது, உள்ளூரில் உள்ள பாலத்தை கடப்பது என்பது மிகவும் சிக்கல்வாய்ந்ததாக இருக்கிறது. அப்போது நாங்கள் மாற்றுப்பாதையில் நீண்ட தூரம் சென்று மருத்துவமனையைச் சென்றடைவோம். தாமதமாக செல்வது நோயாளியின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும்.” கரிமுல், நோயாளிகளுக்கு முதல் உதவி அளிப்பதற்கு மருத்துவர்களால் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளார். பழங்குடியினர் பகுதிகளில் தினமும் பலரின் உடல் நலத்தை பரிசோதிக்கும் பணியைத் தொடங்கி இருக்கிறார். சில ஆண்டுகளுக்குமுன்பு, முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனமான பஜாஜ், அவரது பைக்கை தரம் உயர்த்திக் கொடுத்தது. தண்ணீர் புகாத ஸ்ட்ரெச்சர் மற்றும் ஆக்சிஜன் சிலிண்டர் எடுத்துக் செல்வதற்கான வசதியையும் அது செய்து கொடுத்தது.
ஒரு குழந்தையை கரிமுல் மருத்துவமனைக்குக் கொண்டு செல்கிறார் |
கரிமுல் மாதம் ரூ.5000 சம்பளத்தில் ஒரு தேயிலைத் தோட்டத்தில் சூப்பர்வைசராகப் பணியாற்றுகிறார். மருத்துவமனைகளுக்கு நோயாளிகளை அழைத்துச் செல்வதற்கு மற்றும் இதர சேவைப் பணிகளுக்கு அவர் எந்த கட்டணமும் வசூலிப்பதில்லை. நாடு முழுவதும் உள்ள நல்லமனம் படைத்தோர் நிதி உதவி அளிப்பதைக் கொண்டு அவர் பணிகளைச் செய்கிறார். அண்மையில் கொரோனா தொற்று பொதுஊரடங்கின் போது, வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் உள்ளிட்ட 1,200 பேர்களுக்கு உணவு தானியங்கள் அடங்கிய பைகளை அவர் வழங்கினார். தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டபின்னர், கொரோனா தொற்று உள்ள நோயாளிகளைத் தொடர்ந்து அவர் தமது பைக் ஆம்புலன்ஸ் வாயிலாக மருத்துவமனைகளுக்குக் கொண்டு சென்றார். “மாவட்ட மருத்துவமனையில் உள்ள மருத்துவர்களிடம் தொடர்ந்து தொடர்பு கொண்டிருந்தேன். கொரோனா தொற்று அறிகுறிகொண்ட நோயாளிகள் குறித்து எனக்குத் தெரிய வந்த உடன் அவர்களுக்கு தகவல் தெரிவிப்பேன். டாக்டர்களின் அறிவுரைப்படி நான் பரிசோதனை செய்வேன். நோயாளியின் நிலை மிகவும் கவலைக்குரியதாக இருந்தால், நான் அவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வேன்,” என்றார் அவர். கரிமுல் இப்போது தமது வீட்டின் அருகே ஒரு சிறிய கிளினிக் கட்டி இருக்கிறார். “அருகில் அவசரத்துக்கு செல்ல எந்த ஒரு மருத்துவமனையும் இல்லை. பெரிய மருத்துவமனைகளுக்கு நோயாளிகளை மாற்றுவதற்கு முன்னர், எங்களுடைய கிளினிக்கில் மருத்துவ உதவிகளை நோயாளிகளுக்கு வழங்குகின்றோம், இந்த சேவைக்கு எந்தவித கட்டணமும் வசூலிப்பதில்லை,” என்றார் அவர்.
உள்ளூர் மக்களுக்காக கரிமுல் கட்டியுள்ள கிளினிக் |
இப்போது அவரது கிராமத்துக்கு அருகில் ஆற்றுக்குக் குறுக்கே அமைக்கப்பட்டுள்ள மூங்கில் பாலத்துக்குப் பதில் அரசு ஒரு நிரந்தர பாலம் அமைக்க வேண்டும் என்று கரிமுல் விரும்புகிறார். “கனமழை பெய்யும்போது, மூங்கில் பாலத்தின் மேலே பயணிப்பது அபாயகரமானதாக இருக்கிறது. மருத்துவமனைக்குச் செல்ல நீண்டதூரம் மாற்றுப் பாதையில் நான் செல்கின்றேன். நிரந்தர பாலம் அமைக்கப்பட்டால், பயண நேரம் என்பது வெறும் 15 கி.மீ ஆக குறையும், “ என்று மிகுந்த எதிர்பார்ப்புடன் நம்மிடம் அவர் சொல்கிறார். அவரது கோரிக்கை விரைவில் நிறைவேறட்டும்.
அதிகம் படித்தவை
-
குப்பைக்கு குட் பை!
மக்கள் வெறுக்கும் குப்பைதான் அவரது வாழ்க்கை. ஆம். டெல்லியில் குப்பைகள், கழிவுப் பொருட்களை சேகரித்து தலைநகரின் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கிறார் பீகாரைச் சேர்ந்த ஜெய் பிரகாஷ் சவுத்ரி. சோஃபியா டானிஸ் கான் எழுதும் கட்டுரை
-
அரிசி ஏடிஎம்!
ஹைதராபாத்தை சேர்ந்த ராமு தோசபதி 2006-ஆம் ஆண்டு ஒரு சாலை விபத்தை எதிர்கொண்டார். அதில் இருந்து உயிர் பிழைத்து வந்ததில் இருந்து நற்கொடையாளராக மாறி விட்டார். புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு அவர் ஏற்படுத்திய அரிசி ஏடிஎம் பேருதவியாக இருந்திருக்கிறது. உஷா பிரசாத் எழுதும் கட்டுரை.
-
பைக் ஆம்புலன்ஸ்
மனிதநேயப் பணிக்காக பத்மஸ்ரீ விருது பெற்றிருக்கும் கரிமுல் ஒரு எளிய மலைகிராமத்து மனிதர். அவரது தாய் உடல்நலம் குன்றியபோது உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முடியாமல் அவர் இறந்துவிட்டார். தாயின் மரணம் கரிமுல் மனதில் சேவைமீது நாட்டத்தை ஏற்படுத்தியது. குருவிந்தர் சிங் எழுதும் கட்டுரை.
-
உதவிக்கு சபதமிட்டவர்
1963-ல் தன் சகோதரனின் சிதையில் ஏழைகள் யாரும் இனி மருத்துவ சேவை கிடைக்காமல் உயிரிழக்கக்கூடாது என்று தியோ குமார் சராஃப் முடிவெடுத்தார். இன்று அவரது மருத்துவமனை, கார்பரேட் மருத்துவமனைகளுக்கு குறைந்த கட்டணத்துடன் சவால் விடுகிறது. ஜி சிங் கட்டுரை
-
அதிரடி ஐபிஎஸ் ரூபா!
ஐ.பி.எஸ் அதிகாரி ஆக வேண்டும் என்ற கனவுகளுடன் வளர்ந்தவர் ரூபா. கனவு நனவாகிய பின்னர், நேர்மையாகப் பணியாற்றிய இந்த கர்நாடக் பெண் ஐபிஎஸ் அதிகாரிக்குப் பலனாகக் கிடைத்தது அடிக்கடி பணியிட மாற்றங்களே. எனினும், தன் பாதையில் இருந்து அவர் விலகவில்லை. உஷா பிரசாத் எழுதும் கட்டுரை.
-
ஆட்சிக் கனவு
ஐ.ஏ.எஸ் அதிகாரி ஆக வேண்டும் என்ற கனவுடன் இரண்டு முறை நேர்முகத்தேர்வு வரை சென்றவர் கனகராஜ். ஆனால், அவரது கனவு நனவாகவில்லை. எனினும் சோர்ந்து போகாமல், பல இளைஞர்களின் ஐ.ஏ.எஸ் கனவை நனவாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார். பி.சி.வினோஜ் குமார் எழுதும் கட்டுரை