மூவாயிரம் திருமணங்களை சொந்த செலவில் நடத்திவைத்திருக்கிறார் இந்த வைரவியாபாரி!
11-Sep-2024
By தேவன் லாட்
சூரத்
சூரத்தைச் சேர்ந்த தொழில் அதிபர் மகேஷ் சவானி, தமக்கு 2000 மகள்கள் இருப்பதாகச் சொல்கிறார். ஒரு வழியில் பார்த்தால், அது உண்மைதான். மேலும் இந்த மகள்களின் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கவும் கூடும்.
தாய், தந்தை இல்லாத, யாரும் அற்ற பெண்களுக்கு மகேஷ் திருமணம் செய்து வைக்கிறார். ஆண்டுக்கு 300 திருமணங்களை நடத்தி வைப்பதால், அவரது பெயர் செய்திகளில் அடிபடுகிறது.
|
தந்தை இல்லாத பெண்களுக்கு கடந்த 2010-ம் ஆண்டில் இருந்து, மகேஷ் சவானி திருமணம் செய்து வைக்கிறார் (புகைப்படம்: சிறப்பு ஏற்பாடு).
|
சூரத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்தோம். வாழ்க்கையில் பல்வேறு ஏற்ற, இறக்கங்களை அவர் சந்தித்திருக்கிறார். அதில் ஒரு நிகழ்வுதான் அவரை இரக்கம் உள்ள கொடையாளராக மாற்றி இருக்கிறது.
“2008-ம் ஆண்டு, ஈஸ்வர்பாய் என்ற என்னுடைய உறவினர் இறந்து விட்டார். அவரது இரண்டு மகள்களுக்கு திருமணம் நடப்பதற்கு முன்பு அவர் இறந்து விட்டதால், அவர்கள் குடும்பம் வேதனையில் தவித்தது,” என்று விவரிக்கிறார் மகேஷ். “அவர்களது தந்தையின் இடத்தில் இருந்து நான் அவர்களைக் கன்னிகாதானம் செய்தேன். அவர்களின் திருமணத்துக்காக 10 லட்சம் ரூபாய் செலவானது.”
இதுபோன்று பல பெண்கள் தந்தை இல்லாமல் மகேஷைப் போன்ற ஒரு தந்தை தேவைப்படும் நிலையில் இருந்தனர். பல பெண்கள், பெற்றோர் இல்லாமலும் அல்லது திருமணத்துக்கு செலவழிக்கப் பணம் இல்லாமலும் இருந்தனர். .
ஒரு முன்னாள் வைரவியாபாரியும், இப்போதைய ரியல் எஸ்டேட் அதிபருமான மகேஷிடம் (48) போதுமான அளவுக்குப் பணம் இருந்தது. பி.பி.சவானி குழுமம் எனும் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் கீழ் ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபடும் அவருக்கு அதிக அளவுக்குப் பணம் கிடைக்கிறது. தமது சொந்த மன திருப்திக்காக 2010-ம் ஆண்டில் இருந்து இதுபோல யாரும் அற்ற பெண்களுக்கு திருமணம் செய்து வைக்கிறார்.
சவுராஷ்டிராவின் ரான்பாரதா கிராமத்தில் செல்வ, செழிப்பான குடும்பத்தில் பிறந்தவர் அவர். மகேஷ் தம்மை ஒரு அதிர்ஷ்டசாலியாக நினைக்கிறார். அவருடைய தந்தை வல்லபாய் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர். ஒரு தொழிலாளியாக வாழ்க்கையைத் தொடங்கிய அவரது தந்தை, மெல்ல, மெல்ல வைர வியாபாரத்தில் ஈடுபட்டார். இந்தத் தொழிலைத்தான் மகேஷூம் அவரது சகோதரர்களும் விரிவாக்கம் செய்திருக்கின்றனர்.
“எங்களிடம் இருக்கும் எல்லாவற்றுக்கும் பின்னணியில் இருப்பவர் என் தந்தைதான்,” என்று உண்மையைச் சொல்கிறார் மகேஷ். “நாங்கள் வெறுமனே இதனை முன்னெடுத்துச் செல்கிறோம். சில எண்ணிக்கைகளைச் சேர்ந்திருக்கிறோம் அவ்வளவுதான். அவருடைய வாழ்க்கைதான் எனக்கு ஊக்கமாக இருக்கிறது”
மகேஷின் தந்தை, வைர நகைகள் தயாரிக்கும் ஒரு நிறுவனத்தில் மாதம் தோறும் 125 ரூபாய் சம்பாதித்தார். ஒவ்வொரு ரூபாயையும் சேமித்தார். 1978-ம் ஆண்டு ஒரு மிஷின் வைத்து, சொந்தமாக ஒரு வைர நிறுவனத்தைத் தொடங்கினார். தமது குடும்ப உறுப்பினர்களுக்கும் பயிற்சி கொடுத்தார். அவர் தொடங்கிய தொழில் பின்னர், பெரிதாக மாறியது. 2004-ம் ஆண்டு அந்த நிறுவனத்தின் ஆண்டு வருவாய் 150 கோடி ரூபாயாக இருந்தது.
|
ஒரு தந்தையின் ஸ்தானத்தில் இருந்து, பெண்களுக்குத் திருமணம் செய்து வைப்பது, மகேஷூக்கு பெரும் மகிழ்ச்சியையும் திருப்தியையும் ஏற்படுத்துகிறது. (புகைப்படங்கள்: மனோஜ் பாட்டீல்)
|
மகேஷ், சாத்னா வித்யாலயா பள்ளியில் படித்தார். பின்னர், பெங்களூருவில் உள்ள தயானந்த சாகர் பல்கலைக்கழகத்தில் சிவில் இன்ஜினியரிங்கில் டிப்ளமோ பெற்றார். ”படிப்பில் நான் சுமார்தான். எனினும், எப்படியோ சமாளித்து டிப்ளமோ வாங்கி விட்டேன்!” என்று சிரிக்கிறார்.
படித்து முடித்த உடன் மகேஷ், தந்தையுடன் தொழிலில் ஈடுபட்டார். தந்தையுடன் கூடவே அமர்ந்திருந்து, தொழிலின் அனைத்து நுணுக்கங்களையும், நுட்பங்களையும் கற்றுக்கொண்டார்.
“1990-ம் ஆண்டு இந்தத் தொழிலில் நானும் ஒருவனாகச் சேர்ந்தேன். மேலும் அதிகமாக வைரங்களை தயாரித்தேன். என் தந்தை மாதம் தோறும் 35000 வைரங்களைத் தயாரித்தார். ஆனால், நான் ஒரு மாதத்தில் மூன்று லட்சம் வைரங்களை தயாரிக்கத் தொடங்கினேன்,” என்கிறார் மகேஷ். தந்தையின் தொழிலை விரிவு படுத்தி, பெல்ஜியம், ஹாங்காங் மற்றும் மும்பையில் மகேஷ் கிளைகளைத் தொடங்கினார்.
2003-ம் ஆண்டு வரை தொழில் உச்சத்தில் இருந்தது. அதன் பின்னர் வைர இறக்குமதி தொடர்பாக சில வழக்குகளில் மகேஷ் சிக்கிக்கொண்டார்.
“2003-2007 வரையிலான அந்த நான்கு ஆண்டுகள், மிகவும் வெறுப்பு மிக்கதாக இருந்தது. மிகுந்த மன உளைச்சலில் இருந்தேன். 2004-ம் ஆண்டு மும்பைக்கு இடம் மாறினேன். அதன் பின்னர் மூன்று ஆண்டுகள் பெல்ஜியத்தில் இருந்தேன்,” என்கிறார் மகேஷ். “என் குடும்பம் எனக்கு ஆதரவாக இருந்தது. எனக்கு ஊக்கம் கொடுத்தது.”
வழக்கில் இருந்து விடுதலை பெற்ற உடன், மகேஷ் சூரத் திரும்பினார். ரியல் எஸ்டேட் தொழிலுக்கு மாறினார். 2008-ம் ஆண்டு ரியல் எஸ்டேட் நிறுவனத்தைத் தொடங்கிய அவர், உடனடியாக வெற்றி பெற்றார். ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்களுக்கு ஒப்பந்தங்கள் மேற்கொண்டார்.
|
மகேஷ் முன்னிலையில், ஒரு பெண் திருமணம் செய்து கொள்கிறார். (புகைப்படம்: சிறப்பு ஏற்பாடு)
|
“பி.பி.சவானி குழுமம் என்ற பெயரில் நாங்கள் இந்தத் தொழிலில் ஈடுபடுகிறோம். மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், குஜராத் மற்றும் ராஜஸ்தானில் வீடுகள், நகர்கள், பள்ளிகள், பல்கலைக்கழங்கள் மற்றும் மருத்துவமனைகள் கட்டினோம்,” என்கிறார் மகேஷ்.
இன்றைக்கு, மகேஷ் தம்முடைய சகோதரர்களான ரமேஷ், ராஜேஷ் ஆகியோருடன் இணைந்து ஆயிரம் கோடி ரூபாய் ஆண்டு வருவாய் தரும் பி.பி.சவானி குழுமத்தை நடத்தி வருகிறார். மகேஷின் மகன் மிதுல், லண்டனில் எம்.பி.ஏ முடித்த உடன், இப்போது சவானி குழுமத்தில் இணைந்திருக்கிறார். இரண்டாவது மகன் மோகித், நியூசிலாந்தில் எம்.பி.ஏ படித்து வருகிறார்.
2010-ம் ஆண்டில், மகேஷ், முதலாவது மெகா திருமண நிகழ்வை நடத்தினார். திருமணத்துக்கான விண்ணப்பப் படிவங்களை மருத்துவமனைகளில் கொடுத்தார். பெற்றோர் இல்லாத பெண்கள் திருமணத்துக்காக உதவி செய்யப்படும் என்று கூறினார். இந்த விண்ணப்பப் படிவங்களில் இருந்து தகுதியான பெண்களைத் தேர்வு செய்தார்.
“பெற்றோர் இல்லாத பெண்கள் என்று உறுதியாகத் தெரிந்த பின்னர், மேக்-அப் பொருட்கள், அவர்கள் தேர்ந்தடுக்கும் உடைகள் என எல்லாவற்றுக்கும் நாங்கள் பணம் செலுத்தி விடுவோம்,” என்கிறார் மகேஷ்.
|
மகேஷின் பி.பி.சவானி குழுமத்தின் ஆண்டு வருவாய் 1000 கோடி ரூபாய்க்கும் மேல் இருக்கிறது. (புகைப்படம்: மனோஜ் பாட்டீல்)
|
ஒவ்வொரு திருமணத்துக்கும் 4-5 லட்சம் ரூபாய் செலவாகிறது. ஒவ்வொரு ஆண்டும், பல்வேறு மதங்களைச் சேர்ந்த, ஜாதிகளைச் சேர்ந்த 250 ஜோடிகள் சூரத்தில் உள்ள பி.பி.சவானி பள்ளி மைதானத்தில் கூடுவர். இந்த மெகா திருமண நிகழ்வில் அவர்கள் அனைவருக்கும் திருமணம் நடைபெறும்.
பி.பி. குழுமம் இதுவரை 3000 திருமணங்களை நடத்தி வைத்திருக்கிறது. அதே போல சூரத்தில் உள்ள 260 பள்ளிகளில், தந்தையை இழந்த மாணவர்கள் 3000 பேருக்கான கல்வி செலவு முழுவதையும் ஏற்றுக்கொள்கின்றனர். அந்த மாணவர்கள் குறைந்தது 12ம் வகுப்பு வரையாவது படிக்கவேண்டும் என மகேஷ் உறுதியாக இருக்கிறார்.
“இந்தப் பணிதான் எனக்கு உண்மையிலேயே சந்தோஷத்தை அளிக்கிறது,” என்கிறார் புன்னகையுடன் மகேஷ். ஒரு வைர வியாபாரியாக இருந்து, இன்றைக்கு ஒரு ரியல் எஸ்டேட் தொழில் மன்னனாக உயர்ந்திருக்கிறார். ஒரு கொடையாளராக அவரது பயணம் உண்மையில் நம்மை ஈர்க்கக் கூடியதாக இருக்கிறது.
அதிகம் படித்தவை
-
மழைக்காதலன்
வானம் கறுத்து மேகங்கள் சூழும்போது சென்னைவாசிகள் வானொலி அல்லது டிவியின் வானிலை அறிவிப்புக்காக காத்திருப்பதில்லை. அவர்கள் பிரதீப் ஜானின் முகநூல் பக்கத்துக்குச் செல்கிறார்கள். சென்னையின் பிரத்யேக வானிலை அறிவிப்பாளரைச் சந்திக்கிறார் பிசி வினோஜ் குமார்
-
வேகமான செயல்பாட்டாளர்!
சமீப காலத்தில், எந்த அரசியல் பின்னணியோ, சாதிய பின்புல அணிதிரட்டலோ இல்லாமல், தமிழக அரசியலில் திரும்பிப் பார்க்கவைத்த ஓர் இளம் செயற்பாட்டாளர் திருமுருகன் காந்தி. குண்டர் சட்டத்தில் சிக்க வைக்கப்பட்டிருக்கும் இவரைப் பற்றி எழுதுகிறார் ராதிகா கிரி
-
பைக் ஆம்புலன்ஸ்
மனிதநேயப் பணிக்காக பத்மஸ்ரீ விருது பெற்றிருக்கும் கரிமுல் ஒரு எளிய மலைகிராமத்து மனிதர். அவரது தாய் உடல்நலம் குன்றியபோது உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முடியாமல் அவர் இறந்துவிட்டார். தாயின் மரணம் கரிமுல் மனதில் சேவைமீது நாட்டத்தை ஏற்படுத்தியது. குருவிந்தர் சிங் எழுதும் கட்டுரை.
-
குப்பைக்கு குட் பை!
மக்கள் வெறுக்கும் குப்பைதான் அவரது வாழ்க்கை. ஆம். டெல்லியில் குப்பைகள், கழிவுப் பொருட்களை சேகரித்து தலைநகரின் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கிறார் பீகாரைச் சேர்ந்த ஜெய் பிரகாஷ் சவுத்ரி. சோஃபியா டானிஸ் கான் எழுதும் கட்டுரை
-
உதவிக்கு சபதமிட்டவர்
1963-ல் தன் சகோதரனின் சிதையில் ஏழைகள் யாரும் இனி மருத்துவ சேவை கிடைக்காமல் உயிரிழக்கக்கூடாது என்று தியோ குமார் சராஃப் முடிவெடுத்தார். இன்று அவரது மருத்துவமனை, கார்பரேட் மருத்துவமனைகளுக்கு குறைந்த கட்டணத்துடன் சவால் விடுகிறது. ஜி சிங் கட்டுரை
-
அரிசி ஏடிஎம்!
ஹைதராபாத்தை சேர்ந்த ராமு தோசபதி 2006-ஆம் ஆண்டு ஒரு சாலை விபத்தை எதிர்கொண்டார். அதில் இருந்து உயிர் பிழைத்து வந்ததில் இருந்து நற்கொடையாளராக மாறி விட்டார். புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு அவர் ஏற்படுத்திய அரிசி ஏடிஎம் பேருதவியாக இருந்திருக்கிறது. உஷா பிரசாத் எழுதும் கட்டுரை.