நேர்மைக்குப் பரிசாக 41 முறை பணியிட மாற்றம்..! அசராத ஐ.பி.எஸ் அதிகாரி ரூபா!
11-Sep-2024
By உஷா பிரசாத்
பெங்களூரு
18 ஆண்டுகள் பணியில், 41 முறை பணியிடமாற்றம் செய்யப்பட்டிருக்கும் ரூபா டி மௌத்கில், கர்நாடகாவில் 2000ம் ஆண்டு ஐ.பி.எஸ் அதிகாரி ஆனவர். 1980கள் மற்றும் 1990-களில் தமது துணிச்சலான பணியால் போலீஸ் துறையில் அதிர்வை ஏற்படுத்திய கிரண்பேடிக்கு அடுத்து மிகவும் ஊக்கமான பெண் அதிகாரி என்று பேசப்படுபவர்.
மிக அண்மை காலத்தில், இந்த கனல் பறக்கும் அதிகாரி தேசிய அளவில் தலைப்பு செய்திகளில் இடம் பிடித்தார். கடந்த ஆண்டு ஜூலை மாதம், பெங்களூரில் உள்ள பரப்பனா அக்ரஹாரா மத்திய சிறையில் சிறைத்துறை டி.ஐ.ஜி-யாக இருந்தபோது சிறையில் பெரும் அளவு நடைபெற்ற விதிமுறை மீறல்களை வெளிக்கொண்டு வந்தார். அது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
|
ரூபா மவுத்கில், பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் தமிழக அரசியல்வாதி சசிகலாவுக்கு சிறப்பு வசதிகள் செய்து தரப்பட்டதாக வெளிப்படுத்தினார். (புகைப்படங்கள்: சாக்கேரி ராதாகிருஷ்ணா)
|
சிறைத்துறை டி.ஐ.ஜி-யாக அவர் 17 நாட்கள் மட்டுமே பணியாற்றமுடிந்தது. இந்த விதிமீறலைக் கண்டுபிடித்தபின் போக்குவரத்துத் துறை மற்றும் சாலை பாதுகாப்புத்துறைக்கு மாற்றப்பட்டார். பின்னர் ஆறு மாதத்துக்குள்ளாக, டிசம்பர் 31-ம் தேதியன்று ஐ.ஜியாக பதவி உயர்வு பெற்றாலும் ஓரம் கட்டப்பட்டு ஊர்காவல் படைக்கு மாற்றப்பட்டார். இப்போது அங்குதான் அவர் பணியாற்றி வருகிறார்.
அவரது பணிமாறுதல்களுக்குக் காரணம் அவரது நேர்மையும் அஞ்சாமையும்தான். இந்த பணி மாற்றங்களால் ரூபா நடுங்கியிருப்பார் என்று யாராவது நினைத்தால் அது தவறு. அவர் அதே துணிச்சலுடன் இருக்கிறார்.
“நான் செய்யும் பணிக்கு விருதாக பணியிட மாற்றம் என்ற பெயரில் தண்டனை அளிக்கப்படுகிறது. இதுவரை நான் 41 முறை பணியிட மாற்றம் செய்யப்பட்டிருக்கிறேன். எனினும் இவையெல்லாம் எனது பணியைச் செய்வதில் இருந்து என்னை மாற்றிவிட வில்லை,” என்று சிரித்தபடி சொல்கிறார்.
விரைவான செயல் திறன், உறுதியான தீர்மானங்கள் ஆகியவற்றைக் கொண்ட நெஞ்சுரமிக்க போலீஸ் அதிகாரியாக ரூபா திகழ்கிறார். இதன்காரணமாக, ஆணாதிக்கம் மிகுந்த காவல்துறையில் அவர் உயர்ந்து நிற்கிறார். காவல்துறை அதிகாரிகளிலேயே இவர் வித்தியாசமான பிறவியாக இருக்கிறார்.
தமிழக அரசியல்வாதியும், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழியுமான சசிகலா. சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். சிறை துறை டி.ஐ.ஜி-யாக சிறிது காலம் பணியாற்றிய ரூபா, சசிகலாவுக்கு விதிகளை மீறி சிறையில் சிறப்பு வசதிகள் செய்யப்பட்டிருப்பதை வெளிச்சதுக்குக் கொண்டு வந்தபொழுது பலரின் எரிச்சலுக்கு ஆளானார்.
இதில், பல்வேறு விஷயங்களை அவர் வெளிக்கொணர்ந்தார். சசிகலாவுக்கு தனிப்பட்ட உபயோகத்துக்காக 5 சிறை அறைகள் மற்றும் கூடுதலாக 150 ச.அடி பாதை ஆகியவையும் அவரது தனிப்பட்ட உபயோகத்துக்காகத் தரப்பட்டிருந்தன. பார்வையாளர்களுடன் பேசுவதற்காக, கண்காணிப்புக் கேமரா வசதிகள் இல்லாத சிறப்பு அறை ஒன்றும் கொடுக்கப்பட்டிருந்தது. சசிகலாவுக்கு வசதிகள் செய்து கொடுப்பதற்காக சிறை டி.ஜி.பி- உட்பட சில அதிகாரிகளுக்கு 2 கோடி ரூபாய் தரப்பட்டதாகவும் ரூபா குற்றம் சாட்டினார்.
|
ரூபா பணியிட மாற்றம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, 200 கைதிகள் உண்ணாவிரதம் இருந்தனர்.
|
அவரது இந்தப் பணிகுறித்து நடவடிக்கை எடுத்து உத்தரவு போடுவதற்கு பதில்,மாநில அரசானது அவரை அந்த பணியில் இருந்து இடம்மாற்றம் செய்தது. ஆனால், எதிர்பாராத இடத்தில் இருந்து அவருக்கு ஆதரவு கிடைத்தது. ஆம். ரூபாவின் பணியிட மாற்றத்துக்கு எதிராக 200 சிறைகைதிகள் உண்ணாவிரதம் இருந்தனர். முன்பு ரூபா, சிறை கைதிகளிடம் பேசி, அவர்களது குறைகள் பற்றிக் கேட்டறிந்திருந்தார். அவர்களது குறைகளைத் தீர்ப்பதாகவும் உறுதி அளித்திருந்தார்.
அவரது பணியிடமாற்றம் பணி விதிமுறைகளுக்கு மாறானது என்று நீதிமன்றத்தில் முறையீடு செய்யும்படி ரூபாவிடம் சிலர் கூறினர். ஆனால், அதுபோல் அவர் முறையிடவில்லை. “பணியில் சேர்ந்த ஒரு ஆண்டுக்குள் நான் பணியிடம் செய்யப்படுவது கர்நடாகா போலீஸ் சட்டத்துக்கு எதிரானது. ஒரு ஐ.பி.எஸ் அதிகாரியின் பணியிடம் என்பது ஒரு ஆண்டு, என்று சட்டத்திருத்தம் செய்யப்பட்டிருக்கிறது. இது விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டால், பணியிட மாற்றத்துக்கு எதிரான என்னுடைய முறையீட்டுக்கு பலன் இருந்திருக்கும்,”என்று விவரிக்கிறார்.
“இந்த விஷயம் குறித்து பலர் எனக்கு அறிவுரை கூறினர். ஆனால், இதனை எதிர்த்து முறையீடு செய்யப்போவதில்லை என்று தீர்மானமாக இருந்தேன். சுயலாபத்துக்காக, அந்தப் பதவியையே பிடித்துக் கொண்டிருப்பதாக மக்கள் நினைப்பதை நான் விரும்பவில்லை. எங்கே என்னை பணி அமர்த்தினாலும், என்னுடைய பணியை அக்கறையாகவும், நேர்மையாகவும் செய்வேன். நான் ஒரு இடத்தில் பணியாற்றி விட்டு, வேறு இடத்துக்குப் பணியிட மாற்றம் செய்யப்படும்போது, அங்கு பணியாற்றியபோது என்ன நடந்தது என்பது பற்றி நான் கவலைப்பட மாட்டேன்,” என்றும் ரூபா சொல்கிறார்.
ஆனால், சசிகலா வழக்கைப் பொறுத்தவரை, அது முடிந்துவிடவில்லை. ஊழல் தடுப்புப் பிரிவு(ஏசிபி) விசாரணைக்கு இந்த வழக்கை அரசு மாற்றி உள்ளது.
“சசிகலா என்ன செய்கிறார். அவர் எவ்வாறு நடத்தப்படுகிறார் என்று நான் கவலைப்படப்போவதில்லை. அது என்னுடைய வேலை அல்ல. நான் என்ன வேலை செய்தேன் என்பதில்தான் எனக்கு ஈடுபாடு இருக்கிறது. இந்த வழக்கில் உரிய முடிவு ஏற்படும் வகையில் எடுத்துச் செல்வேன். இதுதான் என்னுடைய கடமை. இப்போது இந்த வழக்கை ஏ.சி.பி எடுத்துள்ளது. அவர்கள் முறையான, விரைவான விசாரணை நடத்துவார்கள் என்று நினைக்கிறேன்,” என தேசம் முழுக்க அவரைத் தெரியச்செய்த அந்த முக்கியமான வழக்கு குறித்துக் கூறுகிறார்.
|
சசிகலா வழக்கில் அவர் குற்றம் சாட்டியது குறித்து ஏ.சி.பி இப்போது விசாரித்து வருகிறது. முறையான, விரைவான விசாரணை நடைபெறும் என்று ரூபா நம்புகிறார்.
|
இதைப் போல கடந்த காலங்களிலும் அரசியல்வாதிகளுக்கு எதிராக ரூபா செயல்பட்டிருக்கிறார். 2013-ம் ஆண்டு, பெங்களூருவில் நகர ஆயுதப்படை போலீஸ் பிரிவில் டி.சி.பி-யாக இருந்தபோது, முன்னாள் முதல்வர் எடியூரப்பா உட்பட எம்.பி-க்கள், எம்.எல்.ஏ-க்களுக்கு அதிகாரப்பூர்வமற்ற வகையில் தரப்பட்டிருந்த பாதுகாப்பு வாகனங்கள், கூடுதல் ஆர்டர்லிகளை வாபஸ் பெற்றார். இதன்காரணமாக அந்தப் பணியில் இருந்து அவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
2004-ம் ஆண்டு, தார்வாட் மாவட்ட போலீஸ் எஸ்.பி-யாக இருந்தபோது, உள்ளூர் நீதிமன்றம் ஒன்று, அப்போதைய மத்தியப் பிரதேச முதல்வர் உமாபாரதிக்கு எதிராக, ஜாமீனில் வெளிவரமுடியாத பிடிவாரண்ட் பிறப்பித்தது. அந்த உத்தரவை ரூபா செயல்படுத்தி அவரை கைது செய்தார். இதனைத் தொடர்ந்து உமாபாரதி தமது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். மிகவும் உயர்ந்த பதவியில் இருந்தவர் தொடர்புடையதாக இந்த வழக்கு இருந்தது. ஆனால், ரூபாவுக்கு இது வழக்கமான பணிதான். இன்றையநாள் வரை இது ஒரு எளிதான சவாலாகத்தான் அவருக்கு இருக்கிறது.
பெங்களூருவில் இருந்து 260 கி.மீ தொலைவில் உள்ள தாவன்கரேவில் பிறந்து வளர்ந்தவர் ரூபா. இந்த நெஞ்சுரமிக்க போலீஸ் அதிகாரி ஒரு ஹிந்துஸ்தானி பாடகி என்பதும் பரதநாட்டிய நடனம் ஆடுபவர் என்பதும் பலருக்கு நம்புவது கடினமாக இருக்கும் இதுதவிர அவரது கல்லூரி நாட்களின் போது, இரண்டு முறை மிஸ் தாவன்கரேவாகத் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். .
அவரது பெற்றோர் இருவரும் மத்திய அரசு அதிகாரிகளாக இருந்து ஓய்வு பெற்றவர்கள். அவருடைய தந்தை ஜே.எஸ்.திவாகர் டெலிகாம் இன்ஜினியராக இருந்தவர். அவருடைய தாய் ஹேமாவதி, அஞ்சல் துறையில் பணியாற்றியவர். அவருக்கு ரோஹினி என்ற ஒரு தங்கை இருக்கிறார். ஐ.ஆர்.எஸ் அதிகாரியான அவர் சென்னையில் உள்ள வருமானவரித்துறை அலுவலகத்தில் இணை ஆணையராகப் பணியாற்றுகிறார்.
ரூபாவின் பெற்றோர் தங்களது மகள்களை நன்றாகப் படிக்கும் படியும், ஆட்சிப் பணிகளுக்குச் செல்லும்படியும் ஊக்குவித்தனர். ரூபா எப்போதுமே படிப்பில் புத்திசாலியாக இருப்பார். பத்தாம் வகுப்பு, 12-ம் வகுப்புகளில் மாநில அளவில் ரூபா ரேங்க் பெற்றிருக்கிறார்.
“என்னுடைய தாய், வேலைக்குச் செல்பவர் என்றாலும், எங்களுடன் நன்கு நேரம் செலவழிப்பார். நானும் என்னுடைய சகோதரியும், என் தாயைப் பார்த்து வளர்ந்தோம்,” என்று ரூபா பகிர்ந்து கொள்கிறார். “எனவே நாங்கள் அவரைப் போல பணியாற்ற வேண்டும் என்று உறுதி எடுத்துக் கொண்டோம். என்னைப் பொறுத்தவரை, அந்த உறுதியில் இருந்து பின்வாங்கி,ஒரு வீட்டு வேலை செய்யும் மனைவியாக இருப்பேன் என்ற கேள்வி எழவில்லை. என்னுடைய தாய் ஒரு முற்போக்கான பெண். எனவே, அதே வழியில் அவரது மகள்களையும் வளர்த்தெடுத்தார்.”
|
ரூபா தம்முடைய கல்லூரி நாட்களில், இரண்டு முறை மிஸ் தாவன்கரே பட்டம் வென்றிருக்கிறார்.
|
2000ம் ஆண்டு ரூபா காவல் பணியில் சேரும் போது அவருக்கு 24 வயதுதான். முதல் முயற்சியிலேயே யு.பி.எஸ்.சி தேர்வில் தேர்ச்சி பெற்று, அகில இந்திய அளவில் 43-வது ரேங்க்கும், அவரது பேட்ச் ஐ.பி.எஸ் பயிற்சியில் 5வது ரேங்க்கும் பெற்றவர். அவர் ஒரு சிறந்தத் துப்பாக்கிச் சுடும் வீராங்கனை. இ்ந்த துப்பாக்கி சுடும் திறமையை அவர் என்.சி.சி கேடர் மற்றும் தேசிய போலீஸ் அகாடெமியில் நடந்த ஐ.பி.எஸ் பயிற்சியின் போதும் நிரூபித்திருக்கிறார்.
மிக இளம் வயதிலேயே, ரூபா காக்கி யூனிபார்ம் அணிவதில் விருப்பம் கொண்டிருந்தார். “எனக்கு எட்டு வயதாக இருந்தபோதே, எனக்கு என் தந்தை ஒரு கனவைக் கொடுத்தார். நீ ஒரு ஐ.ஏ.எஸ் அல்லது ஐ.பி.எஸ் அதிகாரியாக வர வேண்டும் என்று சொன்னார். நிர்வாகப் பணிகள் மற்றும் போலீஸ் பணிகள் குறித்து எனக்கு அவர் விளக்குவார். அந்த இளம் வயதில். அவர் சொன்னதை நான் பிடித்துக் கொண்டேன். எனவே, என் மண்டைக்குள் அப்போதே ஐ.பி.எஸ் நுழைந்து விட்டது,” நினைவுகூறுகிறார் ரூபா.
ரூபா, என்.சி.சி-யில் சேர்ந்து ஏ, பி மற்றும் சி சான்றிதழ்கள் பெற்றார். “நான் 1990-ம் ஆண்டு 9-ம் வகுப்புப் படித்துக் கொண்டிருந்தபோது, கர்நாடகா-கோவா இயக்குனரகத்தின் ஜூனியர் விங்க் என்.சி.சி-யில் இடம் பெற்றேன். புதுடெல்லியில் நடந்த குடியரசு தின முகாமில், எங்கள் முன் கிரண்பேடி உரையாற்ற வந்தார். அவரால் நான் ஈர்க்கப்பட்டேன். ஐ.பி.எஸ் அதிகாரி ஆக வேண்டும் என்று நினைத்தேன்,” என்கிறார் ரூபா. கடந்த ஆண்டுக்கான சிறப்பானப் பணிக்கான குடியரசு தலைவர் விருது பெற்றவரில் ரூபாவும் ஒருவர்.
முனிஷ் மௌத்கில் என்ற ஐ.ஏ.எஸ் அதிகாரியை ரூபா திருமணம் செய்துள்ளார். அவர் பெங்களூருவில், சர்வே மற்றும் செட்டில்மெண்ட் & லேண்ட் ரிக்கார்ட் துறையில் ஆணையராக இருக்கிறார். அவர்களுடைய திருமணம் ஒரு இனிமையான முறையில் நிச்சயிக்கப்பட்டது. ரூபா அந்தத் தருணங்களை நினைவு கூறுகிறார். “அவர் 1998 பேட்ச் ஐ.ஏ.எஸ் அதிகாரி. முனிஷ் என்னைவிட இரண்டு ஆண்டு சீனியர். முனிஷ் மும்பை ஐ.ஐ.டி-யில் படித்தவர் என்றும், திருமணம் ஆகாதவர் என்றும் தெரியும்.”
“எனினும் அவரை நான் சந்தித்தது இல்லை. எங்கு அவர் பணியாற்றுகிறார் என்று எனக்குத் தெரியும். அவரது முகவரியை வாங்கினேன். அவருக்கு கடிதம் எழுதும்படி என்னுடைய பெற்றோரிடம் கூறினேன். அவர்களும் எழுதினர். என்னுடைய தந்தைக்கு கடிதம் எழுதிய அவர், என்னை திருமணம் செய்து கொள்ள சம்மதம் தெரிவித்திருந்தார். எங்களுடைய திருமணம் அவரது மால்கன்கிரி வீட்டில் நடைபெற்றது.”
இந்த இரண்டு அதிகாரிகளும் ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர். ரூபா மற்றும் முனிஷ் இருவரும் ஒருவருக்கு ஒருவர் இணைபிரியாத ஜோடியாக இருக்கின்றனர்.
|
ரூபா, முனிஷ் உடனான திருமணத்தை தனிச்சிறப்பு வாய்ந்த முறையில் திட்டமிட்டார்.
|
“என்னை விட என் கணவர் மிகுந்த அறிவுள்ளவர் என்பதை நான் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். பொதுவாக நான் என்னுடைய எண்ணங்களில் தெளிவாக இருப்பேன். சில விஷயங்களில் மேலும் தெளிவு பெறுவதற்காக அவருடைய அறிவுரையைக் கேட்பேன். அதிகாரப்பூர்வமாக நான், உறுதியான முடிவுகள் எடுக்கும்போது என்னை எப்போதுமே அவர் ஊக்குவிப்பார். என்னுடைய முடிவுகளுக்கு ஆதரவாக இருப்பார்,” என்கிறார் ரூபா. இந்த தம்பதிக்கு அனகா (12) என்ற மகளும், ருஷில் (8) என்ற மகனும் உள்ளனர்.
இந்த சூப்பர் போலீஸ் அதிகாரி, பெண்கள் எதிர்மறையான எண்ணங்களில் இருந்து வெளியேறினால், ஊக்கமுடன் இருந்தால், எதையும் செய்ய முடியும் என்று நம்புகிறார்.
“எதைக்கண்டும் பயப்படத் தேவையில்லை. அச்சத்தின் பெரிய விஷயமே, அச்சப்படுவதுதான். எந்த ஒரு தருணத்திலும், அச்சத்துக்குள் நாம் சென்று விடக் கூடாது. அச்சம் இல்லாமல் இருந்தால்தான் சாதகமான எண்ணங்கள் நம்மைப் பின் தொடரும். அதைத்தான் நானும் பின்பற்றுகிறேன்,”என்று முடிக்கிறார் அவர்.
அதிகம் படித்தவை
-
நல்ல மனம்
குஜராத்தைச் சேர்ந்த வைர வியாபாரி மற்றும் ரியல் எஸ்டேட் உரிமையாளர் மகேஷ் சவானி பெற்றோர்கள் இல்லாத பெண்களுக்கு திருமணம் செய்து வைக்கிறார். இதுவரை 3000 திருமணங்களை நடத்தி வைத்திருக்கும் அவர், அவர்களின் திருமணச் செலவுகளை முழுமையாக ஏற்றுக் கொள்கிறார். தேவன் லாட் எழுதும் கட்டுரை
-
அரிசி ஏடிஎம்!
ஹைதராபாத்தை சேர்ந்த ராமு தோசபதி 2006-ஆம் ஆண்டு ஒரு சாலை விபத்தை எதிர்கொண்டார். அதில் இருந்து உயிர் பிழைத்து வந்ததில் இருந்து நற்கொடையாளராக மாறி விட்டார். புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு அவர் ஏற்படுத்திய அரிசி ஏடிஎம் பேருதவியாக இருந்திருக்கிறது. உஷா பிரசாத் எழுதும் கட்டுரை.
-
அதிரடி ஐபிஎஸ் ரூபா!
ஐ.பி.எஸ் அதிகாரி ஆக வேண்டும் என்ற கனவுகளுடன் வளர்ந்தவர் ரூபா. கனவு நனவாகிய பின்னர், நேர்மையாகப் பணியாற்றிய இந்த கர்நாடக் பெண் ஐபிஎஸ் அதிகாரிக்குப் பலனாகக் கிடைத்தது அடிக்கடி பணியிட மாற்றங்களே. எனினும், தன் பாதையில் இருந்து அவர் விலகவில்லை. உஷா பிரசாத் எழுதும் கட்டுரை.
-
குப்பைக்கு குட் பை!
மக்கள் வெறுக்கும் குப்பைதான் அவரது வாழ்க்கை. ஆம். டெல்லியில் குப்பைகள், கழிவுப் பொருட்களை சேகரித்து தலைநகரின் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கிறார் பீகாரைச் சேர்ந்த ஜெய் பிரகாஷ் சவுத்ரி. சோஃபியா டானிஸ் கான் எழுதும் கட்டுரை
-
ஆட்சிக் கனவு
ஐ.ஏ.எஸ் அதிகாரி ஆக வேண்டும் என்ற கனவுடன் இரண்டு முறை நேர்முகத்தேர்வு வரை சென்றவர் கனகராஜ். ஆனால், அவரது கனவு நனவாகவில்லை. எனினும் சோர்ந்து போகாமல், பல இளைஞர்களின் ஐ.ஏ.எஸ் கனவை நனவாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார். பி.சி.வினோஜ் குமார் எழுதும் கட்டுரை
-
பைக் ஆம்புலன்ஸ்
மனிதநேயப் பணிக்காக பத்மஸ்ரீ விருது பெற்றிருக்கும் கரிமுல் ஒரு எளிய மலைகிராமத்து மனிதர். அவரது தாய் உடல்நலம் குன்றியபோது உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முடியாமல் அவர் இறந்துவிட்டார். தாயின் மரணம் கரிமுல் மனதில் சேவைமீது நாட்டத்தை ஏற்படுத்தியது. குருவிந்தர் சிங் எழுதும் கட்டுரை.