ஐம்பது லட்சம் சொந்தப்பணத்தில் அரிசி ஏடிஎம் உருவாக்கிய அரிய மனிதர்! பொது முடக்க காலத்தில் பசிப்பிணி போக்கினார்!
21-Nov-2024
By உஷா பிரசாத்
ஹைதராபாத்
ஒருவர் தாம் கஷ்டப்பட்டு உழைத்த பணத்தை அறப்பணிகளுக்காக செலவழிக்கும்போது, அவரது செயலை அவரது குடும்ப உறுப்பினர்கள் ஆதரிப்பது கேள்விக்குறிதான். ஆனால், ஐதராபாத் நகரைச் சேர்ந்த ராமு தோசபதி(42) தன் மனைவி ஷில்பா, மகன்கள் அர்ஜூன், ஆர்யான் ஆகியோரின் ஆதரவைப் பெற்ற அதிர்ஷ்டசாலியாக இருக்கிறார். தொடர்ந்து அவர் சேவைப் பணிகளில் ஈடுபட இவர்கள் தங்களின் சொந்த தேவைகளைக் கூட தியாகம் செய்து விட்டனர்.
அவரது குடும்பம் ஏழைகள் பசியாற உதவியளித்து வருகிறது. குறிப்பாக, கொரோனா தொற்று பொது முடக்கம் உச்சத்தில் இருந்தபோது புலம்பெயர் தொழிலாளர்கள் பிறரிடம் இருந்து எந்த உதவியும் பெற இயலாமல் அவதிப்பட்டனர். அவர்களுக்கு வேலை இல்லை. சொந்த ஊர்களுக்குச் செல்ல போக்குவரத்து வசதிகளும் கிடைக்கவில்லை. தேசமே அவர்களின் துயரத்தால் ஈர்க்கப்பட்டது. அவர்களுக்கு உதவிக்கரம் நீட்டினார் இவர்.
தமது மனைவி ஷில்பா மற்றும் மகன்கள் அர்ஜூன், ஆர்யன் ஆகியோருடன் ராமு தோசபதி |
ராமு இப்போது இடிஜி குளோபல் எனும் மென்பொருள் நிறுவனத்தின் ஒரு பிரிவான ஈவன்ட்ஸ் நவ் என்ற நிறுவனத்தில் தலைமை செயல் அதிகாரியாக இருக்கிறார். இவர் ஐதராபாத்தில் உள்ள வேலையின்றி தவித்த புலம் பெயர் தொழிலாளர்கள் மற்றும் உதவிகள் தேவைப்படும் மக்களுக்கு ரூ.50 லட்சம் மதிப்பிலான மளிகைப் பொருட்கள் அடங்கிய பைகளை விநியோகம் செய்துள்ளார். உஸ்மானியா பல்கலைக்கழகத்தில் மனித வள மேலாண்மையில் எம்பிஏ பட்டம் பெற்றவரான அவர், மாதம் தோறும் ரூ.2 லட்சம் ரூபாய் வரை தமது வருவாயில் இருந்து சேவைகளுக்காக செலவழிக்கிறார். தமது குடும்பத்துக்காக வாங்க நினைத்த மூன்று படுக்கை அறை கொண்ட அபார்ட்மெண்ட்டுக்காக சேமித்து வைத்திருந்த ரூ.25 லட்சம் பணத்தையும்கூட அவர் கூடுதலாக சேவைகளுக்காகப் பயன்படுத்தினார். 2006-ஆம் ஆண்டு ஒரு சாலை விபத்தில் இருந்து மீண்டு வந்ததில் இருந்து தேவைப்படும் மக்களுக்கு உதவி செய்யும் பழக்கத்தை மேற்கொண்டு வருகிறார். கடந்த ஏப்ரல் மாதம் பொதுமுடக்கத்தின் போது, தமது அபார்ட்மெண்ட்டுக்கு வெளியே அரிசி ஏடிஎம்(எனி டைம் மீல்ஸ்) –ஐ அமைத்தார். லட்சுமம்மா என்பற பெண் காவலாளி ஒருவரால் ஈர்க்கப்பட்டே அவர் இதனைச் செய்யத் தொடங்கினார். தெலங்கானா மாநிலத்தின் நல்கோண்டா மாவட்டத்தில் உள்ள நக்ரேகால் மண்டலில் நில சுவான்தார் குடும்பத்தில் இருந்து வந்தவர் ராமு. அவர் இப்போது லால்பகதூர் நகரில் உள்ள இரண்டு படுக்கை அறை கொண்ட நவீன பிளாட்டில் வசித்து வருகிறார். கடந்த ஏப்ரல் மாதத்தில் ஒரு நாள், கோழி இறைச்சி கடையில் லட்சுமம்மாவை சந்தித்தார். அங்கு அவர் ரூ.2000 கொடுத்து 10 கிலோ கோழி இறைச்சி வாங்குவதைப் பார்த்தார். அந்தப் பகுதியில் உள்ள புலம் பெயர் தொழிலாளர்கள் சிலருக்காக அவர் கோழி இறைச்சி வாங்கியது தெரியவந்தது. லட்சுமம்மாவின் செய்கை அவருக்கு ஆச்சர்யமளித்தது. ராமு அவருடன் உரையாடினார். “பொதுமுடக்கம் காரணமாக வேலை இழந்த தொழிலாளர்கள் கடந்த இரண்டு நாட்களாக பசியோடு இருக்கின்றனர். இவர்களால் சொந்த ஊர்களுக்கும் போக முடியவில்லை. என்னால் இயன்றதை அவர்களுக்குச் செய்கின்றேன்,” என லட்சுமம்மா கூறினார்.
ராமு வழங்கும் மளிகைப் பொருட்களை வாங்குவதற்காக வரிசையில் காத்திருக்கும் மக்கள் |
சம்பாதிக்கும் குறைந்த அளவு பணம் முழுவதையும் இந்த வழியில் செலவழித்து விட்டால், எப்படி குடும்பத்தை சமாளிப்பீர்கள் என்று லட்சுமம்மாவிடம் கேட்டுள்ளார். அதற்கு அவர், “நான் இந்த நகரத்தில் வாழ்பவள். உள்ளூர் மொழியும் எனக்குத் தெரியும். இங்கிருக்கும் யாரிடமாவது என்னால் உதவி கேட்டுப் பெற முடியும். ஆனால், இந்த புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உதவி செய்யவோ அல்லது அவர்களை இங்கு யாரும் நம்பவோ மாட்டார்கள்,” என்றார். ராமுவைப் பொறுத்தவரை, அவர் ஏற்கனவே சமூக சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்ததால், அந்தப் பெண்மணியின் வார்த்தைகள் அவருக்குள் செயலை தூண்டுவதற்கு போதுமானதாக இருந்தது. “ஒரு பெண் காவலாளியால் இந்த அளவாவது செய்ய முடியும் எனில், நான்கு சுவருக்குள் உட்கார்ந்து கொண்டு நான் என்ன செய்து கொண்டிருக்கின்றேன் என்று எண்ணினேன். என்னால் இயன்றதை செய்வதற்கு அவர் ஊக்குவிக்கும் வகையில் இருந்தார்,” என்றார் ராமு. ஆரம்பத்தில் தம் வீட்டுக்கு அருகில் தங்கியிருக்கும் புலம் பெயர் தொழிலாளர்களுக்கு உணவு சமைத்து வழங்கத் தொடங்கினார். அந்த குழுவில் இருக்கும் யாரேனும் ஒருவருக்கு கொரோனா தொற்று வந்து விட்டால், மற்ற எல்லோருக்கும் பிரச்னையாகக் கூடும் என்பதை உணர்ந்தார். எனவே சமைத்த உணவாகக் கொடுக்காமல் அரிசி, பருப்பு, எண்ணெய், மைதா, டீத்தூள், சர்க்கரை, உப்பு, மஞ்சள் மற்றும் இதர பொருட்கள் கொண்ட மளிகைப் பொருட்கள் அடங்கிய பைகளை அவர்களுக்கு விநியோகிக்கத் தொடங்கினார். அவரின் உதவிகள் காரணமாக சுமார் 200 புலம்பெயர் தொழிலாளர்கள் நடந்தே சொந்த ஊர்களுக்குச் செல்வது தடுக்கப்பட்டது. “கட்டப்பட்டுக் கொண்டிருக்கும் கட்டடங்களில் அவர்களைத் தங்க வைப்பது என்றும், தினமும் அவர்களுக்கு உணவு கொடுப்பது என்றும் மீண்டும் ரயில் சேவை தொடங்கும் வரை அவர்களை கவனித்துக் கொள்வது என்றும் நான் அவர்களுக்கு வாக்குறுதி கொடுத்தேன்,” என்றார் அவர். ராமுவின் சேவைகள் குறித்த தகவல் நாளடைவில் பலரிடம் பரவியதை அடுத்து உள்ளூர் தொழிலாளர்கள், ஆட்டோ, வாடகை கார் ஓட்டுநர்கள் மற்றும் வீட் டுப் பணியாளர்கள் என ஐதராபாத்தின் பல பகுதிகளில் இருந்தும் உதவி கேட்டு பலர் வந்தனர். “காலை 6 மணியில் இருந்து என்னுடைய அபார்ட்மெண்ட்டுக்கு வெளியே உதவி கேட்டு பலர் காத்திருக்க ஆரம்பித்தனர்,” என்றார் ராமு. தமது பக்கத்து வீட்டுக்காரர்கள் தனக்கு ஒத்துழைப்பு நல்கியதற்கும் அவர் நன்றி சொல்கிறார். தமது அபார்ட்மெண்ட்டுக்கு முன்பு மரத்தடியில் தமது அரிசி ஏடிஎம்-ஐ ராமு திறந்துள்ளார். அங்கு தெலுங்கு மொழியில் ஒரு அறிவிப்பு பலகை தொங்குகிறது; “வெறும் வயிற்றோடு உறங்க செல்லாதீர்கள். இங்கே வந்து 24 மணி நேரமும் உணவு தானியத்தைப் பெற்றுக் கொள்ளுங்கள்.” பெருநிறுவனங்கள், நண்பர்களிடம் இருந்து அவரது அரிசி ஏடிஎம்-க்கு உதவிகள் கிடைத்தது. தவிர ராமுவிடம் பணம் இல்லாத சமயங்களில் மளிகை பொருட்கள் அடங்கிய பைகள் வாங்குவதற்கு அமெரிக்காவில் இருந்து மாதவி லதா என்ற பெண்ணும் உதவி செய்கிறார்.
ஒரு சாலை விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியதில் இருந்து ஏழைகளுக்கு சேவை செய்வது என ராமு சபதம் எடுத்திருக்கிறார் |
2006-ஆம் ஆண்டு மே மாதம் வரை ராமுவும் மற்றவர்களைப் போல ஒரு சராசரி நபராக இருந்தார். அவருடைய சொந்த வேலைகளை மட்டும் கவனித்து வந்தார். அந்த ஒரு சாலை விபத்துதான் நல்ல சேவை மனப்பான்மை உள்ளவராக அவரை மாற்றியது. தமது ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தபோது, ஒருவர் மீது மோதாமல் இருக்க முயற்சித்தபோது, ஸ்கூட்டரில் இருந்து கீழே விழுந்து விட்டார். அப்போது ராமு ஹெல்மெட் அணிந்திருக்கவில்லை. எனவே அவருடைய முகத்தில் காயங்கள் ஏற்பட்டன. மூக்கில் இருந்தும் காதுகளில் இருந்தும் ரத்தம் வழிந்தது. மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு எக்ஸ்ரே எடுத்த மருத்துவர்கள், அவருக்கு எந்த அளவு காயம் ஏற்பட்டிருக்கிறது என்பதற்காக அதன் முடிவு வருவதற்காக காத்திருந்தனர். “அந்த சமயத்தில், என்னுடைய மனைவி முதல் குழந்தைக்காக கர்ப்பம் தரித்திருந்தார். நான் இல்லையெனில் அவருக்கும் குழந்தைக்கும் என்ன நேருமோ என்ற அச்சத்தில் இருந்தேன்,” என்று நினைவு கூர்ந்தார் ராமு. “மருத்துவமனை படுக்கையில் படுத்திருந்தபடி, எனக்கு இன்னொரு வாழ்க்கையை கொடுக்கும்படி கடவுளிடம் வேண்டிக் கொண்டேன். எனக்கு இரண்டாவது வாய்ப்பு வழங்கப்பட்டால், என்னுடைய வருவாய் முழுவதையும் ஏழைகளுக்கும் மற்றும் தேவைப்படுவோருக்கும் கொடுப்பேன், சமூகத்துக்காக சேவை செய்வேன் என்று சபதம் மேற்கொண்டேன்.” எக்ஸ்ரே முடிவுகள் வந்ததும், அதனை ஆய்வு செய்த மருத்துவர்கள் மோசமான காயங்கள் ஏதும் இல்லை என்று கூறினர். சில வாரங்களில் அவர் குணம் அடைந்தார். விரைவிலேயே மீண்டும் வேலைகளைத் தொடங்கினார். முதல் விஷயமாக அவர் ஒரு இயக்கத்தைத் தொடங்கினார். ‘நான் முட்டாள் அல்ல. போக்குவரத்து விதிகளை மதித்து நடப்பேன்’ என குறுகிய தூரம் என்றாலும் கூட ஹெல்மெட் உபயோகிக்க வேண்டும் என இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு அறிவுறுத்தினார்.
நல்கொண்டா மாவட்டத்தில் ஒரு விவசாயக்குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர் ராமு. |
பள்ளி ஆசிரியராக இருக்கும் ஷில்பா, ராமுவின் மனித நேய பணிகளுக்கு முழுவதும் ஆதரவாக இருக்கிறார் |
2014ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் லோக்சட்டா கட்சியின் சார்பில் லால் பகதூர் நகரில் இருந்து போட்டியிட்டார். ஆனால், வெற்றி பெறவில்லை. அவருக்கு கௌரமான அளவில் 9,000 வாக்குகள் கிடைத்தன. “நான் அரசியலில் ஈடுபட்டிருந்தால், மேலும் பல மக்களிடம் என் சேவை சென்று சேர்ந்திருக்கும் என்று நான் கருதினேன்,” என்றார் அவர். ஐதராபாத்தில் அண்மையில் பெய்த கனமழையால் பாதிப்பு ஏற்பட்டபோது, தெருக்களில் வெள்ளநீரில் சென்று குடிநீர், உணவு, பால் மற்றும் மளிகைப் பொருட்களை தேவைப்படும் மக்களுக்கு வழங்கினார். பசியோடு இருக்கும் மக்களுக்கு தன்னார்வலர்களின் உதவியுடன் அவரது அரிசி ஏடிஎம் தொடர்ந்து உணவு அளிக்கும். “ஆயிரக்கணக்கான மக்களுக்கு சேவை செய்யும் வாய்ப்பை இந்த கொரோனா பெருந்தொற்று எனக்குக் கொடுத்திருக்கிறது,” என்று விடைபெறுகிறார் இந்த அரிய மனிதர்!
அதிகம் படித்தவை
-
நல்ல மனம்
குஜராத்தைச் சேர்ந்த வைர வியாபாரி மற்றும் ரியல் எஸ்டேட் உரிமையாளர் மகேஷ் சவானி பெற்றோர்கள் இல்லாத பெண்களுக்கு திருமணம் செய்து வைக்கிறார். இதுவரை 3000 திருமணங்களை நடத்தி வைத்திருக்கும் அவர், அவர்களின் திருமணச் செலவுகளை முழுமையாக ஏற்றுக் கொள்கிறார். தேவன் லாட் எழுதும் கட்டுரை
-
குப்பைக்கு குட் பை!
மக்கள் வெறுக்கும் குப்பைதான் அவரது வாழ்க்கை. ஆம். டெல்லியில் குப்பைகள், கழிவுப் பொருட்களை சேகரித்து தலைநகரின் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கிறார் பீகாரைச் சேர்ந்த ஜெய் பிரகாஷ் சவுத்ரி. சோஃபியா டானிஸ் கான் எழுதும் கட்டுரை
-
பைக் ஆம்புலன்ஸ்
மனிதநேயப் பணிக்காக பத்மஸ்ரீ விருது பெற்றிருக்கும் கரிமுல் ஒரு எளிய மலைகிராமத்து மனிதர். அவரது தாய் உடல்நலம் குன்றியபோது உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முடியாமல் அவர் இறந்துவிட்டார். தாயின் மரணம் கரிமுல் மனதில் சேவைமீது நாட்டத்தை ஏற்படுத்தியது. குருவிந்தர் சிங் எழுதும் கட்டுரை.
-
உதவிக்கு சபதமிட்டவர்
1963-ல் தன் சகோதரனின் சிதையில் ஏழைகள் யாரும் இனி மருத்துவ சேவை கிடைக்காமல் உயிரிழக்கக்கூடாது என்று தியோ குமார் சராஃப் முடிவெடுத்தார். இன்று அவரது மருத்துவமனை, கார்பரேட் மருத்துவமனைகளுக்கு குறைந்த கட்டணத்துடன் சவால் விடுகிறது. ஜி சிங் கட்டுரை
-
ஆட்சிக் கனவு
ஐ.ஏ.எஸ் அதிகாரி ஆக வேண்டும் என்ற கனவுடன் இரண்டு முறை நேர்முகத்தேர்வு வரை சென்றவர் கனகராஜ். ஆனால், அவரது கனவு நனவாகவில்லை. எனினும் சோர்ந்து போகாமல், பல இளைஞர்களின் ஐ.ஏ.எஸ் கனவை நனவாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார். பி.சி.வினோஜ் குமார் எழுதும் கட்டுரை
-
அதிரடி ஐபிஎஸ் ரூபா!
ஐ.பி.எஸ் அதிகாரி ஆக வேண்டும் என்ற கனவுகளுடன் வளர்ந்தவர் ரூபா. கனவு நனவாகிய பின்னர், நேர்மையாகப் பணியாற்றிய இந்த கர்நாடக் பெண் ஐபிஎஸ் அதிகாரிக்குப் பலனாகக் கிடைத்தது அடிக்கடி பணியிட மாற்றங்களே. எனினும், தன் பாதையில் இருந்து அவர் விலகவில்லை. உஷா பிரசாத் எழுதும் கட்டுரை.