2015 வெள்ளம் மற்றும் 2016 வார்தா புயலை துல்லியமாய் கணித்த தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜானின் வாழ்க்கை கதை
03-Dec-2024
By பி.சி. வினோஜ்குமார்
சென்னை
சென்னையில் 1994-ல் புயல் கரையைக் கடந்தபோது பிரதீப் ஜானுக்கு வயது 12. வேகமான காற்றையும் மழையையும் பார்த்தார். மணிக்கு 100 கிமீ வேகத்தில் வீசிய காற்று சென்னையில் பலத்த சேதத்தை உருவாக்கியது.
“அந்த இரவு இன்னும் நினைவில் உள்ளது. அண்ணாநகர் மேற்கில் நாங்கள் வசித்தோம். நான் ஏழாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன். நள்ளிரவில் புயல் கரையைக் கடந்தது. புயல்காற்றின் ஓலத்தையும் மரங்கள் முறியும் சப்தத்தையும் கேட்டேன்,” என்கிறார் பிரதீப் ஜான். சென்னையைச் சேர்ந்த சுதந்தரமான வானிலை கணிப்பாளரான இவருக்கு முகநூலில் மட்டும் 2.43 லட்சம் பேர் பின் தொடர்பவர்களாக உள்ளனர்.
|
சென்னையில் 2015ல் வெள்ளம் வந்தபோதும், 2016 வார்தா புயலின்போதும் பிரதீப் துல்லியமான கணிப்புகளைத் தந்தார் (படங்கள்: ஹெச் கே ராஜசேகர்) |
அதற்கு இரு ஆண்டுகள் கழித்து மூன்று நாட்களில் 700 மிமி என்ற மிக அதிகமான மழையை சென்னை பெற்றது. மழையின் கோரத்தாண்டவத்தால் சென்னையின் தெருக்கள் மிதந்தன, மின்சாரம் தடைப்பட்டது. வீட்டு மாடியில் இருந்து மழையைப் பார்த்துக்கொண்டே இருந்தார் பிரதீப்.
மழை மீதான காதல் அதன் பின்னர் அவருக்கு மாறவே இல்லை. ஆண்டுகள் ஆகஆக அது வளர்ந்துகொண்டே சென்றது. பல்வேறு இடங்களில் மழைப்பொழிவைக் கவனிக்க ஆரம்பித்தார். பின்னர் இது தொடர்பாக இணையத்தில் எழுதவும் ஆரம்பித்தார்.
இப்போது 34 வயதாகும் பிரதீப் தன் ‘Tamil Nadu Weatherman’ என்ற முகநூல் பக்கத்தில் துல்லியமாகப் பருவ நிலையைக் கணித்ததன் மூலம் சமூக ஊடகப் பிரபலமாக உருவெடுத்துள்ளார். 2015 டிசம்பரில் சென்னையைத் தாக்கிய வெள்ளம், 2016-ல் தாக்கிய வார்தா புயல் ஆகியவற்றின் போது அவரது கணிப்புகள் அவரைப் பிரபலமாக்கின.
“2008-ல் ப்ளாக் ஒன்றை இணையத்தில் தொடங்கி, மழைப்பொழிவு பற்றிய தகவல்களை பதிவேற்றி வந்தேன். இண்டியன் வெதர்மேன், வேகரீஸ், கியா வெதர் போன்ற பருவநிலை தளங்களுக்கும் பங்களித்து வந்தேன்,” என்கிறார் பிரதீப்.
2012-ல் அவர் தன் முகநூல் பக்கத்தைத் தொடங்கினார். 2015 நவம்பர் - டிசம்பரில் சென்னையில் வெள்ளம் ஏற்படுவதற்கு முன்புவரை அவருக்கு ஆயிரத்துக்கும் குறைவான பின் தொடர்பவர்களே இருந்தனர்.
“அந்த வெள்ளம் ஒரு திருப்புமுனை. மழை பற்றிய என் பதிவுகள் வைரல் ஆயின. டிசம்பர் மத்தியில் எனக்கு 60,000 லைக்குகள் இருந்தன, தினமும் 3000 செய்திகள் வந்தன, “ நினைவுகூர்கிறார் பிரதீப்.
அப்போது அதேபோல் இன்னொரு பெருமழை பொழியப்போகிறது என்ற வதந்தி சென்னை மக்களை அஞ்ச வைத்தது. அதற்குப் பயந்து மக்கள் வெளியேறுவதாக தகவல்கள் ஊடகங்களில் வந்தன. சில ஜோசியர்கள், பிபிசி போன்ற சர்வதேச தொலைக்காட்சியும் கூட இன்னொரு வெள்ளம் உறுதி என்றனர். ஆனால் பிரதீப் அப்படி எந்த கணிப்பும் செய்யவில்லை. அவரைப் பின் தொடர்பவர்களுக்கு நிம்மதி கிடைத்தது. அவர் சொன்னபடியே நடந்தது. சென்னை மக்களிடையே பிரதீப்பின் மதிப்பு உயர்ந்தது.
|
பிரதீப் ஜான் கடந்த 20 ஆண்டுகளாக மழைப்பொழிவைக் கூர்ந்து கவனிப்பவர் |
“பல்வேறு இடங்களிலிருந்து கிடைக்கும் தகவல்களைக் கொண்டு கணிப்புகளைச் செய்கிறேன். அரசு வானிலை மையத்துக்குக் கிடைக்கும் அதே தகவல்களே எனக்கும் கிடைக்கின்றன. புயல்களின் போது அவர்களுக்கு இன்னும் கொஞ்சம் கூடுதலாக பிரத்யேகத் தகவல்கள் கிடைக்கலாம். ஆனால் தகவல்களை ஒப்புநோக்கிக் கணிக்கும் திறமையே முக்கியமானது,” என்கிறார் பிரதீப். வார்தா புயல் பற்றி வானிலை மையம் அறிவிப்பதற்கு முன்பே விளக்கமாகத் தன் முகநூல் பக்கத்தில் அவர் விவரித்துவிட்டார்.
“சென்னையை புயல் தாக்குவதற்கு இரு நாட்கள் முன்னதாக வானிலை மையம் புயல் ஆந்திரத்தின் நெல்லூரைத் தாக்கும் என்று அறிவித்தது. ஆனால் நான் அது சென்னையை நோக்கி வருகிறது என்று அறிவித்தேன். மறுநாள் காற்றின் வேகம் மணிக்கு 100 கிமீக்கு அதிகமாக இருக்கும் என்றும் கணித்தேன்.”
திறந்த வெளிகளில் நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு முன்பும் வெளியூர் பயணங்களின் போதும் இப்போது மக்கள் இவரிடம் ஆலோசனை கேட்கிறார்கள்.
“அவர்கள் பயணம் மேற்கொள்ளும் இடத்தின் பருவநிலை பற்றி நான் ஆய்வு செய்திருந்தால் அவர்களுக்கு உதவ முயல்வேன். உதாரணத்துக்கு குன்னூர் என்று வைத்துக்கொண்டால் அங்கே வழக்கமாக இரவில் மழை பெய்யும். காலையில் நின்றுவிடும்..
“சென்னையில் கோடைமழை இரவில் மட்டுமே பொழியும். வேலை முடிந்து வீட்டுக்குத் திரும்புபவர்கள் இடிமின்னலுடன் கூடிய மழையில் சிக்கிக்கொள்வர். தாழ்வழுத்த நிலை அல்லது புயல் உருவாகும் சூழல் ஆகியவை உருவாகும் காலம் தவிர சென்னையில் கோடைக்காலத்தில் பகலில் மழை இருக்காது,” இருபது ஆண்டுகளாக மழையை ஆராயும் தன் அனுபவத்தில் இருந்து கூறுகிறார் அவர்.
இந்த மழைக்காதலன் ஒவ்வொரு ஆண்டும் அதிகமாக மழைபொழியும் ஏதாவது ஓரிடத்துக்குச் செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார். வால்பாறையில் சின்னக்கல்லார், நீலகிரியில் தேவலா ஆகியவை இந்த பட்டியலில் உள்ளவை.
|
ஒவ்வொரு ஆண்டும் அதிகம் மழைப்பொழிவு பெறும் இடங்களில் ஒன்றுக்காவது செல்வது பிரதீப்பின் வழக்கம் |
பிரதீப் மேகாலயாவில் உள்ள சிரபுஞ்சிக்கு ஒரு ஜனவரியில் சென்றார். இது உலகிலேயே அதிகம் மழை பெறுவதில் அதே மாநிலத்தில் உள்ள மாசின்ராமுக்கு அடுத்த இடத்தில் உள்ளது. அவர் சென்றபோது வறட்சியில் அடிபட்ட இடம்போல் அது இருந்தது. ஏனெனில் காசி மலைத்தொடரில் உள்ள அந்த இடத்தில் பொழியும் மழை, கீழே உள்ள வங்கதேசத்துக்குக் வடிந்து செல்லும் நிலையில் அதன் அமைப்பு உள்ளது.
இந்தப் பயணங்கள் அவருக்கு நல்ல அனுபவங்களைத் தந்துள்ளன.
பிரதீப்பின் மனைவி ஹானா ஷாலினி பயோடெக்னாலஜி படித்தவர். “சென்னையில் மழை பொழியும்போது அவர் என் முகநூல் பக்கத்தைக் கவனிப்பார். அதிகமான கேள்விகள் வரும்போதும் அவற்றுக்கு நான் பதில் தராதிருக்கும்போதும், தேவையான கூடுதல் விவரங்களைப் பதியுமாறு கூறுவார்,” என்கிற பிரதீப் தமிழ்நாடு நகர்ப்புற கட்டமைப்புக்கான நிதிநிறுவனத்தில் துணை மேலாளராகப் பணிபுரிகிறார்.
தமிழக அரசின் பல்வேறு உள்கட்டமைப்பு மற்றும் வளர்ச்சிப் பணிகளுக்கான ஆலோசகர்களைக் கண்டறிவது அவரது பணி.
அண்ணாநகரில் உள்ள எஸ்பிஓஏ பள்ளியில் படித்த பிரதீப், சத்யபாமாவில் கணிப்பொறியியல் படித்துள்ளார். சென்னைப் பல்கலையில் நிதித்துறையில் எம்பிஏ முடித்தவர், மூன்று ஆண்டுகள் வேலை இல்லாமல் இருந்தார். ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை கிடைத்தது அங்கு ஓரக்கிள் பைனான்ஸ் கற்றுக்கொண்டார். 2008-ல் அவர் இன்போலைன் என்ற நிதிச்சேவை நிறுவனத்தில் வாடிக்கையாளர் உறவுகள் மேலாளராகப் பணிக்குச் சேர்ந்தார். “பழைய மகாபலிபுரம் சாலையில் ஐடி பூங்காக்களுக்கு வெளியே நின்று எங்களிடம் டிமேட் கணக்குகள் தொடங்குமாறு கேட்டு துண்டுப்பிரசுரங்கள் வழங்கியிருக்கிறேன்.
|
மழை பார்த்தலை விட எதுவும் பிரதீப்புக்குப் பெரிதில்லை |
“அது கஷ்டமான காலகட்டம். பங்குச் சந்தை சரிந்திருந்தது. எங்கள் சேவையைப் பெற குறைவான ஆட்களே இருந்தனர்,” அவர் கூறுகிறார்.
அச்சமயத்தில் தான் எம்பிஏ படித்தது சரிதானா என்றுகூட அவருக்குத் தோன்றி இருக்கிறது. ஏனெனில் அவருடைய சகாக்கள் பலர் மென் பொருள் துறையில் நல்ல பதவிகளுக்குச் சென்றிருந்தனர்.
ஆனால் ஓராண்டில் அவருக்கு தமிழக அரசின் நிறுவனத்தில் வேலை கிடைத்து, வாழ்வில் முன்னேற்றம் உருவானது.
திரும்பிப்பார்க்கையில் அவருக்குத் தான் தேர்வு செய்த வாழ்க்கை பற்றி எந்த வருத்தங்களும் இல்லை. அவரது ஆறுவயதாகும் ஒரே மகள் லாரா அபிகைல் யுகேஜி படிக்கிறார். தன் வாழ்வைச் சமாளிக்க ஒரு வேலை பார்த்துக்கொண்டே தனக்குப் பிடித்தமான மழையைப் பின் தொடர்வதைச் செய்கிறார் சென்னை மக்களுக்கு ‘பக்கத்துவீட்டில் இருக்கும் வானிலைக் ஆய்வாளராக’ தன் சேவையைத் தொடர்கிறார்.
அதிகம் படித்தவை
-
மழைக்காதலன்
வானம் கறுத்து மேகங்கள் சூழும்போது சென்னைவாசிகள் வானொலி அல்லது டிவியின் வானிலை அறிவிப்புக்காக காத்திருப்பதில்லை. அவர்கள் பிரதீப் ஜானின் முகநூல் பக்கத்துக்குச் செல்கிறார்கள். சென்னையின் பிரத்யேக வானிலை அறிவிப்பாளரைச் சந்திக்கிறார் பிசி வினோஜ் குமார்
-
வேகமான செயல்பாட்டாளர்!
சமீப காலத்தில், எந்த அரசியல் பின்னணியோ, சாதிய பின்புல அணிதிரட்டலோ இல்லாமல், தமிழக அரசியலில் திரும்பிப் பார்க்கவைத்த ஓர் இளம் செயற்பாட்டாளர் திருமுருகன் காந்தி. குண்டர் சட்டத்தில் சிக்க வைக்கப்பட்டிருக்கும் இவரைப் பற்றி எழுதுகிறார் ராதிகா கிரி
-
உதவிக்கு சபதமிட்டவர்
1963-ல் தன் சகோதரனின் சிதையில் ஏழைகள் யாரும் இனி மருத்துவ சேவை கிடைக்காமல் உயிரிழக்கக்கூடாது என்று தியோ குமார் சராஃப் முடிவெடுத்தார். இன்று அவரது மருத்துவமனை, கார்பரேட் மருத்துவமனைகளுக்கு குறைந்த கட்டணத்துடன் சவால் விடுகிறது. ஜி சிங் கட்டுரை
-
அதிரடி ஐபிஎஸ் ரூபா!
ஐ.பி.எஸ் அதிகாரி ஆக வேண்டும் என்ற கனவுகளுடன் வளர்ந்தவர் ரூபா. கனவு நனவாகிய பின்னர், நேர்மையாகப் பணியாற்றிய இந்த கர்நாடக் பெண் ஐபிஎஸ் அதிகாரிக்குப் பலனாகக் கிடைத்தது அடிக்கடி பணியிட மாற்றங்களே. எனினும், தன் பாதையில் இருந்து அவர் விலகவில்லை. உஷா பிரசாத் எழுதும் கட்டுரை.
-
ஆட்சிக் கனவு
ஐ.ஏ.எஸ் அதிகாரி ஆக வேண்டும் என்ற கனவுடன் இரண்டு முறை நேர்முகத்தேர்வு வரை சென்றவர் கனகராஜ். ஆனால், அவரது கனவு நனவாகவில்லை. எனினும் சோர்ந்து போகாமல், பல இளைஞர்களின் ஐ.ஏ.எஸ் கனவை நனவாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார். பி.சி.வினோஜ் குமார் எழுதும் கட்டுரை
-
குப்பைக்கு குட் பை!
மக்கள் வெறுக்கும் குப்பைதான் அவரது வாழ்க்கை. ஆம். டெல்லியில் குப்பைகள், கழிவுப் பொருட்களை சேகரித்து தலைநகரின் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கிறார் பீகாரைச் சேர்ந்த ஜெய் பிரகாஷ் சவுத்ரி. சோஃபியா டானிஸ் கான் எழுதும் கட்டுரை