குறைந்த விலை அதிக தர மருத்துவ சேவையை கொல்கத்தாவுக்கும் வெளியேவும் தர சராஃப் விரும்புகிறார்
10-Nov-2024
By ஜி.சிங்
கொல்கத்தா
தன் சகோதரனின் எரியும் சிதையின் முன் எடுத்த உறுதி அது. அதன்படி தியோ குமார் சராஃப், ஏழைகளுக்கு குறைந்த விலையில் தரமான மருத்துவ சேவை செய்யும் மருத்துவமனைகளைக் கட்டி ஆயிரக்கணக்கான ஏழைகளைக் காப்பாற்றி உள்ளார்.
கொல்கத்தாவில் ஆனந்தலோக் குழும மருத்துவமனைகளின் நிறுவனர் தியோ குமார் சராஃப் (73). இவர் மருத்துவர் அல்ல. வறுமையின் கோரப்பிடியை நேரில் பார்த்தவர்.
|
கொல்கத்தாவில் 1981-ல் நான்கு அலுவலர்களுடன் பயன்படாத ஒரு காரேஜில் தியோ குமார் சராஃப் சிகிச்சை மையம் தொடங்கினார். அது ஆனந்தலோக் குழும மருத்துவமனைகளாக வளர்ந்துள்ளது. (படங்கள்: மோனிருல் இஸ்லாம் மல்லிக்) |
மிகக் குறைந்த விலையில் ஏழைகளுக்கு மருத்துவ வசதிகளை வழங்க இதுவே காரணம். அரசு மருத்துவமனைகளை விட இங்கே கட்டணம் குறைவு.
இதய பைபாஸ் அறுவை சிகிச்சைகளை 85,000 ரூபாய் செலவில் வழங்குகிறது. எல்லா செலவும் இதில் அடங்கும். இது வெளியே வாங்குவதில் கால்பங்குதான். பத்தாயிரம் பேருக்கும் மேல் இதனால் பயன்பெற்றுள்ளனர்.
ஆனந்தலோக் மருத்துவனையில் ஆஞ்சியோ கிராபிக்கு 9,000 ரூபாய்தான். வெளியே 30,000 ரூபாய். தினமும் படுக்கை வாடகை 75 ரூபாய்தான்.
பொது சேவைக்காக சுயதுயரத்தால் உந்தப்பட்டு தொடங்கப்பட்ட இந்த மருத்துவமனையானது 1981ல் நான்கு பணியாளர்களுடன் ஒரு காரேஜில் கொல்கத்தாவில் தொடங்கப்பட்டது,
இப்போது 1,500 பேர் வேலை செய்யும் ஏழு மருத்துவமனைகள் கொண்ட சங்கிலித்தொடர் மருத்துவமனையாக உள்ளது,
சராஃப்பை தாதா(அண்ணா) என்று அழைக்கிறார்கள். தெற்குகொல்கத்தாவில் பவானிபூரில் நான்கு குழந்தைகளில் மூத்தவராக பிறந்தார். ஒரு தம்பி, இரண்டு தங்கைகள். நடுத்தரக் குடும்பம்.
தந்தையின் குடும்ப வன்முறைக்கு சிறுவயதில் இலக்கானார். ‘’அவரைப் பொருளாதார ரீதியில் சார்ந்து இருந்தோம். எனவே சகித்துக்கொண்டோம்,’’ அவரது 250 படுக்கைகள் கொண்ட சால்ட் லேக் மருத்துவமனையில் நம்மிடம் பேசினார்.
15 வயதாக இருக்கும்போது இவரது அம்மா கோபி தேவி பிள்ளைகளை அழைத்துக்கொண்டு கணவரைப் பிரிந்து கொல்கத்தாவில் புராபசாரில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டார்.
|
ஆனந்த லோக்கில் தினசரி படுக்கை வாடகை 75 ரூ |
1959-ல் 16 வயதாக இருந்த சராஃப், 250 ரூபாய் சம்பளத்துக்கு கணக்கு உதவியாளராக ஒரு தனியார் நிறுவனத்தில் வேலைக்குப் போனார்.
‘’மாதம் 125 ரூபாய் வாடகைக்கு ஒரு வீட்டுக்கு குடிபோனோம். அப்போது வீட்டிலிருந்து ஆபீசுக்கு பஸ் கட்டணம் 20 பைசா. ஆனாலும் 11 கிமீ நடந்து சென்று அதைச் சேமித்தேன். வீட்டில் நான் மட்டுமே சம்பாதித்ததால் இப்படி,’’ என்று நினைவுகூர்கிறார் சராஃப்.
1963. இது அவருக்குக் கொடூரமான மறக்கமுடியாத ஆண்டு. 18 வயதான அவரது தம்பி கிருஷ்ணகுமார் உடல்நலமின்றி படுத்தான். ‘’அவனைச் சேர்த்த தனியார் மருத்துவமனை 2 யூனிட் ரத்தம் கேட்டது. அதன் விலை 60 ரூபாய். அப்போது என்னால் அந்த பணத்தைத் திரட்ட முடியவில்லை.’’
கிருஷ்ணா இறந்துவிட்டான், சராஃப் உடைந்துபோனார். அவனது சிதையில் தன் சகோதரனைப் போல யாரையும் வறுமையால் இறக்கவிடக்கூடாது என்று சபதம் எடுத்தார்.
‘’ஏழைகள் குறைந்த கட்டணத்தில் மருத்துவச் சேவை பெறுவதற்காக உழைப்பேன் என்று உறுதி எடுத்துக்கொண்டேன்,’’ என்று சொல்கிறார்.
அடுத்த 18 ஆண்டுகள் சராஃபுக்கு பல பொறுப்புகள். அம்மாவை, மனைவியை, இரு குழந்தைகளைக் கவனிக்க வேண்டும். மாதம் 5,000 ஊதியம் கிட்டியது. அவர் 1960ல் கட்டுமானப் பொருட்கள் அளிக்கும் தொழிலைத் தொடங்கியிருந்தார்.
ஆயினும் தன் சபதத்தை மறக்கவில்லை.
‘’ இடமும் பணமும் தாருங்கள். ஒரு மருத்துவசாலை திறக்கவேண்டும் என்று பலரிடமும் கேட்டேன். யாரும் முன்வரவில்லை.’’
|
இந்த மண்பாத்திரத்தில்தான் சராஃப் காலை நடைப்பயிற்சியின் போது பிச்சை பெற்று ஆரம்பகாலத்தில் மருத்துவமனை நடத்தினார் |
அவருடைய முயற்சி வீண்போகவில்லை. கொல்கத்தாவின் அப்போதைய தலைமைச் செயலாளர் பிஆர் குப்தா இவரைப் பற்றிக் கேள்விப்பட்டு 500 சதுர அடியில் இருந்த ஒரு கராஜை அளித்தார்.
1981, ஜூலை 11-ல் மருத்துவசாலை தொடங்கிற்று. குழந்தை மருத்துவம், கண், டிபி ஆகியவற்றுக்கு முக்கிய கவனம் அளிக்கப்பட்டது. 10 ரூபாய்க்கு கண்ணாடிகள் வழங்கப்பட்டன. விலை உயர்ந்த டிபி மாத்திரைகள் ஏழு நாளைக்கு 2 ரூபாயில் வழங்கப்பட்டன.
‘’அதை நடத்த மாதம் 3000 ரூபாய் தேவைப்பட்டது. அதற்காக டியூசன்கள் எடுத்து சம்பாதித்தேன். காலை நடையின் போது பிச்சை போடும்படி வேண்டுவேன். ஒரு ரூபாயோ இரு ரூபாயோ எதைக் கொடுத்தாலும் பெற்றுக்கொள்வேன்.’’
மெல்ல மெல்ல அவரது சேவை ஊடகங்கள் மூலமாகத் தெரிய ஆரம்பித்தது. மாநில அரசு சார்பில் அப்போதைய முதல்வர் ஜோதிபாசு 1982ல் அவரை தலைமைச் செயலகத்துக்கு அழைத்தார்.
ஒரு ரூபாய் லீசுக்கு 3200 சதுர அடி நிலத்தை சால்ட் லேக் பகுதியில் ஏழை மக்களுக்கு மருத்துவமனை கட்டுமாறு அளித்தார்.
ஆனால் கட்டடம் கட்ட பணம் வேண்டும். இரண்டு ஆண்டுகளாக எதுவும் நடக்கவில்லை. ஜோதிபாசுவுக்கு வருத்தம். மீண்டும் தன்னை வந்து பார்க்குமாறு அழைப்பு விடுத்தார். சராஃப் சென்றிருந்த தினம், ஒரு பணக்காரர் முதலமைச்சரைப் பார்க்க வந்திருந்தார். ஒரு லட்சரூபாய் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு அளிக்க அவர் விரும்பினார். பாசு, ‘இங்கே வேண்டாம். சராஃபுக்கு அதை அளியுங்கள்’ என்று கேட்டுக்கொண்டார்.
|
தன் மருத்துவமனையில் கிழிந்துபோன விரிப்புகளை ஆடையாக்கி பல ஆண்டுகள் சராஃப் அணிந்தார் |
15 லட்ச ரூபாய் செலவில் 1984ல் ஆறு படுக்கைகளும் தீவிர இதய சிகிச்சை பிரிவும் கொண்ட மருத்துவமனை 1984ல் உருவானது. இதற்காக சராஃபின் தாய் தன் நகைகளை விற்று 2.5 லட்சம் அளித்தார். இன்னும் பலரும் கொடைகளை அளித்தனர்.
1988ல் இதய நோயாளி ஒருவர் 17 நாட்கள் அங்கே தங்கியிருந்தார். அவருக்கு கட்டணமாக 1,700 ரூபாய் மட்டுமே வசூலிக்கப்பட்டது. ஆச்சரியத்தில் அவர் நெகிழ்ந்து உருகிப்போனார். உடனே சால்ட் லேக் பகுதியில் தனக்கு இருந்த 2,880 சதுர அடி நிலத்தை தானமாக மருத்துவமனைக்கு அளித்துவிட்டார்.
24 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை 1993-ல் இப்படித்தான் உருவானது.
தற்போது ஆனந்தலோக், மருத்துவமனை மற்று ஆய்வகங்கள் கொண்ட சங்கிலித்தொடராக உருவெடுத்துள்ளது. சால்ட் லேக் பகுதியில் 350 படுக்கைகள் வசதிகளுடன் நான்கு மருத்துவமனைகள், கொல்கத்தாவில் இருந்து 40 கிமீ தொலைவில் பாராசாத் அருகே பாதுரியா என்ற இடத்தில் 15 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை, கொல்கத்தாவில் இருந்து 200 கிமீ தொலைவில் புர்த்வான் மாவட்டத்தில் ரானிகுஞ்ச் என்ற இடத்தில் 200 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை, ஜார்க்கண்டில் சாக்குலியாவில் 16 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை ஆகியவை இதில் அடங்கும்.
சராஃப் அன்றும் இன்றும் ஒரே மாதிரிதான் இருக்கிறார். ஒரு திருமணத்துக்குச் சென்றிருந்தாராம். அழுக்கான, ஆனால் தான் வழக்கமாக அணியும் வெண்ணிற ஆடையில் இருந்தார். யாரும் அவரிடம் பேசவில்லை. அப்போது அங்கு வந்திருந்த புகழ்பெற்ற தொழிலதிபர் பிகே பிர்லா கண்ணில் சராஃப் பட்டார். உடனே அவர் அருகே வந்து கையைப்பற்றிக் குலுக்கி, அவரது சேவைக்குப் பாராட்டு தெரிவித்தார். அதன் பின்னே மற்றவர்களும் இவரை அறிந்துகொண்டிருக்கிறார்கள். இதுபோல் நிறைய சம்பவங்கள்.
ஆரம்பகாலத்தில் கிட்டத்தட்ட ஒன்பது ஆண்டுகள் தன் மருத்துவமனையின் பழைய விரிப்புகளைக் கொண்டுதான் ஆடைகள் தைத்துக்கொண்டார். “பணம் சம்பாதித்தாலும் கூட எளிமையாக வாழ விரும்பினேன்,’ என்கிறார் அவர்.
ஆண்டுதோறும் 50 கோடிரூபாய் மருத்துவமனையில் புரள்கிறது. மிகக்குறைவாக கட்டணம் வாங்கினாலும் கூட நல்ல லாபமே கிடைக்கிறது. 2015-16 –ல் அவர்கள் 11 கோடி லாபம் பெற்றனர்.
அதிகம் படித்தவை
-
வேகமான செயல்பாட்டாளர்!
சமீப காலத்தில், எந்த அரசியல் பின்னணியோ, சாதிய பின்புல அணிதிரட்டலோ இல்லாமல், தமிழக அரசியலில் திரும்பிப் பார்க்கவைத்த ஓர் இளம் செயற்பாட்டாளர் திருமுருகன் காந்தி. குண்டர் சட்டத்தில் சிக்க வைக்கப்பட்டிருக்கும் இவரைப் பற்றி எழுதுகிறார் ராதிகா கிரி
-
அதிரடி ஐபிஎஸ் ரூபா!
ஐ.பி.எஸ் அதிகாரி ஆக வேண்டும் என்ற கனவுகளுடன் வளர்ந்தவர் ரூபா. கனவு நனவாகிய பின்னர், நேர்மையாகப் பணியாற்றிய இந்த கர்நாடக் பெண் ஐபிஎஸ் அதிகாரிக்குப் பலனாகக் கிடைத்தது அடிக்கடி பணியிட மாற்றங்களே. எனினும், தன் பாதையில் இருந்து அவர் விலகவில்லை. உஷா பிரசாத் எழுதும் கட்டுரை.
-
குப்பைக்கு குட் பை!
மக்கள் வெறுக்கும் குப்பைதான் அவரது வாழ்க்கை. ஆம். டெல்லியில் குப்பைகள், கழிவுப் பொருட்களை சேகரித்து தலைநகரின் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கிறார் பீகாரைச் சேர்ந்த ஜெய் பிரகாஷ் சவுத்ரி. சோஃபியா டானிஸ் கான் எழுதும் கட்டுரை
-
மழைக்காதலன்
வானம் கறுத்து மேகங்கள் சூழும்போது சென்னைவாசிகள் வானொலி அல்லது டிவியின் வானிலை அறிவிப்புக்காக காத்திருப்பதில்லை. அவர்கள் பிரதீப் ஜானின் முகநூல் பக்கத்துக்குச் செல்கிறார்கள். சென்னையின் பிரத்யேக வானிலை அறிவிப்பாளரைச் சந்திக்கிறார் பிசி வினோஜ் குமார்
-
பைக் ஆம்புலன்ஸ்
மனிதநேயப் பணிக்காக பத்மஸ்ரீ விருது பெற்றிருக்கும் கரிமுல் ஒரு எளிய மலைகிராமத்து மனிதர். அவரது தாய் உடல்நலம் குன்றியபோது உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முடியாமல் அவர் இறந்துவிட்டார். தாயின் மரணம் கரிமுல் மனதில் சேவைமீது நாட்டத்தை ஏற்படுத்தியது. குருவிந்தர் சிங் எழுதும் கட்டுரை.
-
அரிசி ஏடிஎம்!
ஹைதராபாத்தை சேர்ந்த ராமு தோசபதி 2006-ஆம் ஆண்டு ஒரு சாலை விபத்தை எதிர்கொண்டார். அதில் இருந்து உயிர் பிழைத்து வந்ததில் இருந்து நற்கொடையாளராக மாறி விட்டார். புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு அவர் ஏற்படுத்திய அரிசி ஏடிஎம் பேருதவியாக இருந்திருக்கிறது. உஷா பிரசாத் எழுதும் கட்டுரை.