ஐ ஏ எஸ் தேர்வில் தோற்றாலும் 10 ஆண்டுகளில் 17 ஐ.ஏ.எஸ், 27 ஐ.பி.எஸ் அதிகாரிகளை உருவாக்கிய சாதனையாளர்
11-Sep-2024
By பி சி வினோஜ் குமார்
கோயம்புத்தூர்
ஒரு பின்னடைவைக் கூட வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்டதற்கு உன்னதமான உதாரணம், பி.கனகராஜ். சிவில் சர்வீஸ் தேர்வில் இரண்டு முறை இறுதி நேர்காணல் வரை சென்றும் கூட அவரது ஐ.ஏ.எஸ் அதிகாரி ஆக வேண்டும் என்ற கனவு நிறைவேறவில்லை. எனினும், அந்தச் சூழலில் இருந்து விடுபட்டு தன்னைத்தானே உயர்த்திக் கொண்டு, இளைஞர்கள் கனவை நனவாக்கும் வகையில் தமது வாழ்க்கையை அவர் அர்ப்பணித்திருக்கிறார்.
“சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்காக என்னை நானே தயார்ப்படுத்திக் கொண்டபோது, நான் பெற்ற அந்த அறிவை, பிறரும் உபயோகிக்க வேண்டும் என்றும், அது இளைஞர்களுக்குப் பலன் அளிக்க வேண்டும் என்றும் தீர்மானித்தேன்,” என்கிறார் கனகராஜ். ஐ.ஏ.எஸ் தேர்வுக்கான இலவச பயிற்சியாளர் என்று தம்மை அவர் அழைத்துக் கொள்கிறார்.
|
கோயம்புத்தூரில் பேராசிரியர் பி.கனகராஜ், நடத்தும் ஐ.ஏ.எஸ் பயிற்சி வகுப்பில் 400 மாணவர்கள் பங்கேற்கின்றனர். படங்கள்: ஹெச்.கே.ராஜசேகர்
|
கோவை அரசு கலைக்கல்லூரியில் அரசியல் அறிவியல் துறையின் துணைப் பேராசிரியராக கனகராஜ் பணியாற்றுகிறார். எழுபதுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் சிவில் சர்வீஸில் சேர இவர் அளித்த பயிற்சி உதவி உள்ளது. அதில் 17 ஐ.ஏ.எஸ்-கள், 27 ஐ.பி.எஸ்களும் அடக்கம்.
சிவில் சர்வீஸ் தேர்வு எழுதுவோர்களுக்கு, கனகராஜ் பொதுக் கல்வி மற்றும் அரசியல் அறிவியல் ஆகிய பாடங்களை எடுக்கிறார்.
“என்னுடைய சேவையை இலவசமாக வழங்கி வருகிறேன். நான் எனது மாணவர்களிடம் நான் உங்களுக்குப் பாடம் சொல்லிக் கொடுத்துள்ளதால் எனக்கு இதைச் செய்யுங்கள் என்று எப்போதும் நாடிவரமாட்டேன் என்று உறுதி அளிக்கிறேன். ஆனால் நீங்கள் எதையாவது செய்ய விரும்பினால் இந்த சமூகத்துக்குச் செய்யுங்கள் என்று கூறுவேன்.’“
“இப்போது, என்னுடைய வகுப்பில் 400 மாணவர்கள் பயிற்சி பெறுகின்றனர். வார நாட்களில், என்னுடைய கல்லூரி பணி நேரம் முடிந்த பின்னர், மாலை 4 மணி முதல் 6.30 மணி வரை நான் வகுப்புகள் எடுப்பேன். ஞாயிற்றுக்கிழமைகளில், என்னுடைய வகுப்புக்கு மாணவர்கள் அதிக அளவில் வருவார்கள். எந்த வித இடைவெளியும் இல்லாமல் காலை 10 மணி முதல் மதியம் 2.30 மணி வரை வகுப்புகள் எடுப்பேன்.”
“என்னுடைய இந்தப் பணியை நான் புனிதமாகக் கருதுகிறேன். கடந்த எட்டு ஆண்டுகளில், நெருங்கிய உறவினர்கள் இறந்து போனதால், ஆறு ஞாயிற்றுக்கிழமைகள் மட்டும் வகுப்புகளை எடுக்க முடியாமல் போயிருக்கிறது.” என்கிறார் கனகராஜ் (47). போன் மூலமும், ஸ்கைப் வழியாகவும், நாட்டின் பிற பகுதிகளில் உள்ள மாணவர்களுக்கும் அவர் வகுப்புகள் எடுக்கிறார்.
முதல் நிலைத் தேர்வு மற்றும் முதன்மைத் தேர்வுகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, தற்போது பணியில் இருக்கும் மற்றும் ஓய்வு பெற்ற அரசு அதிகாரிகளைக் கொண்டு மாதிரி நேர்காணல் பயிற்சியை அவர் அளிக்கிறார்.
முறையான வழிகாட்டலைப் பெற்றிருந்தால், நேர்முகத்தேர்வு நிலையில், கனகராஜ் வென்றிருப்பார். எனவே, தம்மைப் போல எந்த ஒரு மாணவரும், போதுமான பயிற்சி இல்லாமல் பாதிக்கப்படக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார்.
|
கனகராஜ் நடத்தும் ஐஏஎஸ் பயிற்சி மையத்தில் பங்கேற்பதற்கு எந்த ஒரு கட்டணமும் இல்லை
|
பாடங்கள் குறித்து நாளிதழ்களில் கட்டுரை எழுதுவதைத் தவிர, ‘ஐ.ஏ.எஸ் நேர்முகத்தேர்வில் வெற்றி பெற சிறப்பான வழிகள்’ என்ற புத்தகத்தையும் கனகராஜ் எழுதி இருக்கிறார்.
தமிழகத்தில் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள குருவாடிபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் கனகராஜ். விவசாயக் குடும்பத்தில் பிறந்த அவர், பத்தாம் வகுப்பு வரை தமிழ் மீடியத்தில் படித்தார்.
சென்னை லயோலா கல்லூரியில் ஆங்கில இலக்கியத்தில் பட்டம் பெற்றார். பின்னர் புதுடெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியலில் எம்.ஏ., எம்.பில், பி.எச்டி பட்டங்கள் பெற்றார்.
“என் வாழ்க்கையில் கடைபிடிக்கும் நல்ல பண்புகளை இந்த இரண்டு கல்வி நிறுவனங்களும் எனக்குக் கற்றுத் தந்திருக்கின்றன,” என்கிறார் பெருமையுடன் கனகராஜ். இந்த இரு கல்லூரிகளைத் தேர்வு செய்ய அவை சிறப்பான சாதனையாளர்களை உருவாக்கும் நிறுவனங்கள் என்பதே காரணம் என்கிறார் அவர்.
ஐ.ஏ.எஸ் பயிற்சி அளிப்பதை ஆரம்பத்தில் அவர் ஒரு சிறிய அளவில்தான் தொடங்கினார். டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் படித்த சில மாணவர்கள், 2003-ம் ஆண்டு சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்குத் தயாராகினர். அப்போது கனகராஜ் உதவியை அவர்கள் நாடினர்.
|
கோயம்புத்தூரில் உள்ள ‘உயர் கல்வி மையம்’ கட்டடத்தின் முன்பு கனகராஜ்.
|
ஆரம்ப கட்டத்தில் அவர்களுக்காக தமது வீட்டில் இருந்தபடி ஐ.ஏ.எஸ் பயிற்சி வகுப்புகளை நடத்தினார். 2008-ம் ஆண்டு அவரது இரண்டு மாணவர்கள் ஐ.பி.எஸ் அதிகாரிகள் ஆனார்கள். இந்தச் சாதனையை உள்ளூர் ஊடகங்கள் வெளியிட்டன.
“தென் இந்தியாவிலேயே முதன் முறையாக அஜிதா பேகம் என்ற இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த முதல் பெண் ஐ.பி.எஸ் ஆகப் பணியில் சேர்ந்தார். இன்னொரு மாணவரான எஸ். அருள்குமாருக்கு, இமாசலப்பிரதேச மாநில கேடரில் ஐ.ஏ.எஸ் பணி ஒதுக்கப்பட்டது. எனினும், தனது கனவுப் பணியான ஐ.பி.எஸ்ஸையே அவர் தேர்வு செய்தார்,” என்கிறார் கனகராஜ்.
இந்த இரண்டு பேரின் வெற்றிக்கதைகளை ஊடகங்களில் படித்த மாணவர்கள் பலர், கனகராஜின் பயிற்சி வகுப்புகளில் சேர ஆர்வம் காட்டினர். ஆனால், அவரது வீட்டில் அத்தனை பேரையும் சேர்த்துப் பயிற்சி அளிக்கப் போதுமான இடம் இல்லை.
தாம் பணியாற்றிய கல்லூரிக்கு, பயிற்சி வகுப்புகளை மாற்றினார். மூத்த ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.ஆர்.எஸ் அதிகாரிகளை அழைத்து வந்து, மாணவர்களுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் அவர்களை உரையாற்ற வைத்தார்.
அப்போது கோவை மாநகராட்சி கமிஷனராக இருந்த, அன்சுல் மிஸ்ரா கல்லூரிக்கு வருகை தந்தபோது, கனகராஜின் சேவையைக் கண்டு ஈர்க்கப்பட்டார். அதன் பின்னர், கோவை மாநகராட்சிப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு உயர் கல்வி விழிப்புணர்வு மற்றும் வேலை வாய்ப்புகள் குறித்த பயிற்சி வகுப்புகள் எடுக்கும்படி கனகராஜிடம் கேட்டுக்கொண்டார்.
|
ஞாயிற்றுக்கிழமைகளில், காலை 10 மணி முதல் மதியம் 2.30 மணி வரை இடைவெளி இன்றி கனகராஜ் வகுப்புகள் எடுக்கிறார்.
|
இந்தப் பயிற்சி வகுப்புகள் எடுப்பதற்காக, டாக்டர் நஞ்சப்பா சாலையில், உயர் படிப்பு மையம் என்ற அமைப்பை மாநகராட்சி தொடங்கியது. இந்த மையத்தில் ஐ.ஏ.எஸ் பயிற்சி வகுப்புகள் நடத்த கனகராஜுக்கு அனுமதி தரப்பட்டது.
மாநகராட்சி பள்ளிக் குழந்தைகளுக்காக மென் திறன், ஆங்கில தகவல் தொடர்பு திறன், டிஜிட்டல் மற்றும் உணர்வு மேலாண்மை ஆகியவற்றில் கனகராஜ் பயிற்சிகளை வழங்குகிறார்.
மாநிலத்தின் இதர பகுதிகளில் உள்ள பழங்குடியின மற்றும் கிராமத்து குழந்தைகளுக்காக ‘எதிர்காலத்துக்கான அதிகாரம் பெறுதல்’ என்றழைக்கப்படும் முயற்சித் திட்டத்தை நான்கு ஆண்டுகளுக்கு முன்பு கனகராஜ் விரிவாக்கம் செய்தார்.
ஐ.ஏ.எஸ் பயிற்சி வகுப்புகளில் படிக்கும் மாணவர்கள், அவரின் இந்த முயற்சிக்கு உதவுகின்றனர். “என்னிடம் பயிற்சி பெறும் மருத்துவம், பொறியியல், மேலாண்மை மற்றும் சட்டப்படிப்பு பின்புலம் உள்ள மாணவர்கள், இந்த திட்டங்களை நடத்த உதவுகின்றனர்,” என்கிறார் கனகராஜ்.
|
உருவாகிக்கொண்டிருக்கும் பல அருள்குமார்கள், அஜிதா பேகம்களுடன் கனகராஜ்
|
கனகராஜின் இரண்டு மாணவர்களில் ஒருவர் அஜிதா பேகம். கடந்த 2007-ம் ஆண்டு அவர் ஐ.பி.எஸ் ஆனார். இப்போது அவர் கேரளமாநிலம், கொல்லம் ரூரல் எஸ்.பி-யாகப் பணியாற்றுகிறார். கடந்த 2005-ம் ஆண்டு முதன் முறையாக கோவை, அரசு கலைக்கல்லூரியில் தமது வழிகாட்டியான கனகராஜை சந்தித்தை அவர் நினைவு கூறுகிறார்.
கோயம்புத்தூரைச் சேர்ந்த அஜிதா பேகம், அப்போதுதான் பி.காம் முடிந்திருந்தார். அடுத்ததாக எம்.பி.ஏ படிக்க வேண்டும் என்று விரும்பினார். அப்போது அவருடைய தோழியின் தந்தை, சிவில் சர்வீஸ் தேர்வு எழுதலாம் என்று அவருக்கு ஆலோசனை கூறினார். இதையடுத்து கனகராஜை சந்திக்க அவர் ஏற்பாடு செய்தார்.
“சிவில் சர்வீஸ் தேர்வு எழுதுவது குறித்து எனக்கு எந்த ஒரு யோசனையும் இல்லை. நான் கனகராஜ் சாரை, என்னுடைய தந்தையுடன் சென்று அவரது கல்லூரியில் சந்தித்தேன். எங்களுடன் அவர் இரண்டரை மணி நேரம் பேசினார். ஐ.ஏ.எஸ் ஆனவர்கள் குறித்த உதாரண நபர்கள் பற்றி அவர் எங்களிடம் கூறினார்.”
“சிவில் சர்வீஸ் தேர்வு எழுதுவது எளிமையானது என்ற கருத்தை என்னிடம் உருவாக்கினார். என்னுடைய நம்பிக்கையை ஊக்குவித்தார்,” என்று நினைவு கூறுகிறார் 2008-ம் ஆண்டு பேட்ச் ஐ.பி.எஸ் அதிகாரியான அஜிதா பேகம். சிவில் சர்வீஸ் தேர்வு எழுதிய இரண்டாவது முயற்சியிலேயே அவர் தேர்ச்சி ஆனார்.
கேரளாவில் நடந்த ஒரு நிகழ்வில், அஜிதா ஒரு புதிய அலையையே ஏற்படுத்தினார். திருவனந்தபுரம் டிசி.பி-யாக அவர் இருந்தபோது, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, பொது இடங்களில் பெண்களுக்கு எதிரான ஈவ் டீசிங்கை தடுக்க ஃபெம் ரோந்து (Fem Patrol) என்ற ரோந்து முறையை அறிமுகப்படுத்தினார். இதன் மூலம் பெண்களுக்கு எதிராக கொடுமைகள் குறைந்தன. இந்த திட்டம் இப்போது கேரளாவின் பிற பகுதிகளுக்கும் விரிவு படுத்தப்பட்டுள்ளது.
மேலும் பல சிவில் சர்வீஸ் தேர்வு வெற்றியாளர்களை உருவாக்கி, அவர்கள் கனவை நனவாக்குவது என்று கனகராஜ் நம்பிக்கை கொண்டுள்ளார். தமது இந்த இயக்கத்துக்கு, மனைவி வெண்ணிலா மற்றும் தம் இரண்டு பிள்ளைகளும் முழு மனதுடன் ஆதரவு தெரிவிப்பதாகக் கூறுகிறார்.
அதிகம் படித்தவை
-
பைக் ஆம்புலன்ஸ்
மனிதநேயப் பணிக்காக பத்மஸ்ரீ விருது பெற்றிருக்கும் கரிமுல் ஒரு எளிய மலைகிராமத்து மனிதர். அவரது தாய் உடல்நலம் குன்றியபோது உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முடியாமல் அவர் இறந்துவிட்டார். தாயின் மரணம் கரிமுல் மனதில் சேவைமீது நாட்டத்தை ஏற்படுத்தியது. குருவிந்தர் சிங் எழுதும் கட்டுரை.
-
வேகமான செயல்பாட்டாளர்!
சமீப காலத்தில், எந்த அரசியல் பின்னணியோ, சாதிய பின்புல அணிதிரட்டலோ இல்லாமல், தமிழக அரசியலில் திரும்பிப் பார்க்கவைத்த ஓர் இளம் செயற்பாட்டாளர் திருமுருகன் காந்தி. குண்டர் சட்டத்தில் சிக்க வைக்கப்பட்டிருக்கும் இவரைப் பற்றி எழுதுகிறார் ராதிகா கிரி
-
அரிசி ஏடிஎம்!
ஹைதராபாத்தை சேர்ந்த ராமு தோசபதி 2006-ஆம் ஆண்டு ஒரு சாலை விபத்தை எதிர்கொண்டார். அதில் இருந்து உயிர் பிழைத்து வந்ததில் இருந்து நற்கொடையாளராக மாறி விட்டார். புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு அவர் ஏற்படுத்திய அரிசி ஏடிஎம் பேருதவியாக இருந்திருக்கிறது. உஷா பிரசாத் எழுதும் கட்டுரை.
-
குப்பைக்கு குட் பை!
மக்கள் வெறுக்கும் குப்பைதான் அவரது வாழ்க்கை. ஆம். டெல்லியில் குப்பைகள், கழிவுப் பொருட்களை சேகரித்து தலைநகரின் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கிறார் பீகாரைச் சேர்ந்த ஜெய் பிரகாஷ் சவுத்ரி. சோஃபியா டானிஸ் கான் எழுதும் கட்டுரை
-
ஆட்சிக் கனவு
ஐ.ஏ.எஸ் அதிகாரி ஆக வேண்டும் என்ற கனவுடன் இரண்டு முறை நேர்முகத்தேர்வு வரை சென்றவர் கனகராஜ். ஆனால், அவரது கனவு நனவாகவில்லை. எனினும் சோர்ந்து போகாமல், பல இளைஞர்களின் ஐ.ஏ.எஸ் கனவை நனவாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார். பி.சி.வினோஜ் குமார் எழுதும் கட்டுரை
-
மழைக்காதலன்
வானம் கறுத்து மேகங்கள் சூழும்போது சென்னைவாசிகள் வானொலி அல்லது டிவியின் வானிலை அறிவிப்புக்காக காத்திருப்பதில்லை. அவர்கள் பிரதீப் ஜானின் முகநூல் பக்கத்துக்குச் செல்கிறார்கள். சென்னையின் பிரத்யேக வானிலை அறிவிப்பாளரைச் சந்திக்கிறார் பிசி வினோஜ் குமார்