Milky Mist

Wednesday, 2 July 2025

இவர்கள் பாரதப்பிரதமரின் தையல் கலைஞர்கள்! ஒரு வியப்பூட்டும் வெற்றிக்கதை

02-Jul-2025 By பி.சி. வினோஜ் குமார்
அகமதாபாத்

Posted 22 Feb 2018

ஒரு குடும்பத்தில் வருவாய் ஈட்டக்கூடிய தலைவராக இருப்பவர், திடீரென, குடும்பத்தைத் துறந்து சந்நியாசியாகப் போவது என முடிவு எடுத்தால், அந்தக் குடும்பத்தின் நிலை என்னவாகும் என்று கற்பனை செய்து பாருங்கள். ஐந்து குழந்தைகளையும், அவர்களது தாயையும், தங்களுக்கு தாங்களே கவனித்துக் கொள்ளட்டும் என்று அம்போவென விட்டு விட்டுச் சென்று விட்டார் அந்த குடும்பத்தின் தலைவர்.

நிச்சயமாக இது ஒரு கொடூரமான அனுபவமாக இருந்திருக்கும். ஜித்தேந்திரா சவுகான், பிபின் சவுகான் ஆகியோருக்கு இந்த அனுபவம் ஏற்பட்டது. இவர்களின் தந்தைதான் சந்நியாசியானவர்.   இச்சூழலில் அந்த குடும்பம் தங்கள் பாரம்பர்யமான டெய்லரிங் தொழிலை முன்னெடுத்தது. அதில் கடினமாக உழைப்பதைத் தவிர அவர்களுக்கு வேறு வழி இருக்கவில்லை.

https://www.theweekendleader.com/admin/upload/jan1-15-LEAD1.jpg

ஜிதேந்திரா சவுகான்(வலது) மற்றும் பிபின் சவுகான், குழந்தையாக இருக்கும்போதே டெய்லரிங் கடைகளில் பணியாற்றி வந்தவர்கள் இவர்கள்


அகமதாபாத்தைச் சேர்ந்த ஜிதேந்திரா, பிபின்  சகோதரர்கள், பிரதமர் நரேந்திரமோடியின் தனிப்பட்ட டெய்லர்களாக இருக்கின்றனர். தவிர, 225 கோடி ரூபாய் ஆண்டு வருவாய் தரும் ஆண்கள் ஆடையகத்தின் சங்கிலித் தொடர் நிறுவனமான ஜேட் ப்ளூ-வின் (Jade Blue) உரிமையாளர்களாகவும் இருக்கின்றனர். குழந்தைகளாக இருக்கும்போதே அவர்கள், டெய்லரிங் கடைகளில் பணியாற்றி இருக்கின்றனர். கடினமான உழைப்பின் மூலம் திறனை வளர்த்துக்கொண்டனர். 1981-ம் ஆண்டு தங்கள் சொந்தக் கடையை  அவர்கள் தொடங்கினர். இப்போது உற்சாகமான தொழில் முனைவுப் பயணத்தை மேற்கொண்டிருக்கின்றனர்.

இன்றைக்கு, சகோதரர்கள் இருவரும் அவர்கள் கனவு கண்ட வாழ்க்கையை வாழ்கின்றனர். பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் அரசியல் ஆலோசகர் அகமதுபடேல், மற்றும் தொழிலதிபர்கள் கவுதம் அதானி, கர்சன்பாய் படேல் உள்ளிட்ட அதிகாரம் மிக்க நபர்களுக்கு உடைகள் தைத்துக் கொடுக்கின்றனர்.

நாடு முழுவதும் உள்ள இவர்களின் கடைகளில் 1200 ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். பணக்காரர்களுடனும், புகழ் பெற்றவர்களுடனும் அவர்கள் பழகுகின்றனர். தொழில் ரீதியாக, உலகம் முழுவதும் பயணிக்கின்றனர்.

ஒருவேளை 50 ஆண்டுகளுக்கு முன்பு, அவர்களை நீங்கள் சந்தித்திருந்தால், இந்தச் சிறிய குழந்தைகள், தங்களின் குடும்பத்தினருடன், அகமதாபாத்தின் புறநகரில் உள்ள மிகச்சிறிய அறையில் வாழ்ந்ததைப் பார்த்திருக்கலாம். அவர்கள் இப்போது வாழ்க்கையில் அடைந்திருக்கும்  உயரத்தை எட்டுவார்கள் என்பதை கற்பனை கூட செய்து பார்த்திருக்க முடியாது.

ஆறாவது தலைமுறையாக டெய்லரிங் தொழிலில் ஈடுபடும் அந்தக் குடும்பத்தினர், அகமதாபாத்தில் இருந்து 100 கி.மீ தொலைவில் உள்ள லிம்பிடி என்ற சிறு நகரத்தில் இருந்து வந்திருக்கின்றனர்.

ஐந்து பேர் கொண்ட அந்தக் குடும்பத்தில் கடைசியாகப் பிறந்தவர் பிபின். அவருக்கு நான்கு வயதாக இருக்கும்போதுதான், 1966-ம் ஆண்டு அவர்களின் தந்தை சிமன்லால் சவுகான், வீட்டை விட்டு வெளியேறி சந்நியாசி ஆனார்.

“எங்கள் தந்தை சிறந்த டெயலராக இருந்தார். கச்சிதமாகத் துணிகளைத் தைக்கக் கூடியவர். பல இடங்களுக்கு அவர் பயணித்திருக்கிறார். லிம்பிடி, மும்பை மற்றும் கொல்கத்தாவில் கடைகள் தொடங்கினார். ஆனால், எந்த ஒரு இடத்திலும் மூன்று முதல் நான்கு மாதங்களுக்கு மேல் தங்க மாட்டார்.”

“ஆன்மீகத்தில் ஈடுபாடு உள்ளவராக அவர் இருந்தார். இளகிய மனம் படைத்தவர். யார் ஒருவரும் சட்டை இல்லாமல் வந்தால், தம்முடைய சட்டையைக் கழட்டி அவர்களுக்குப் போட்டு விடுவார்,” என்கிறார் இப்போது 53 வயதாகும் பிபின்.

https://www.theweekendleader.com/admin/upload/jan1-15-LEADstaff.jpg

தங்களின் ஊழியர்களுடன் பிபின் மற்றும் ஜிதேந்திரா இருவரும். அவர்களிடம் இப்போது 1000-த்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றுகின்றனர்.


அகமதாபாத்தில் உள்ள சபர்மதி ஆஸ்ரமம் அருகே, ஒரு டெய்லரிங் கடை வைத்திருந்த சமயத்தில்தான், பிபினின் தந்தை குஜராத் மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற ஆன்மீகத் தலமான ஜூனாகாத் மலைக்குச் சென்று சந்நியாசம் எடுத்துக் கொண்டார்.

“சபர்மதி ஆஸ்ரமம் அருகே அமைக்கப்பட்டிருந்த  அந்தக் கடை, சவுகான் டெய்லர்ஸ் என்று அழைக்கப்பட்டது. அந்தக்  கடை மீது என் தந்தை மிகவும் பற்றுதல்  கொண்டிருந்தார். அந்தக் கடை பற்றி சினிமா திரையரங்குகளில் ஸ்லைடு மூலம் விளம்பரம் செய்தார்,” என்கிறார் பிபின்.

அந்த நாட்களில் அவர்கள் குடும்பம் மரியாதைக்குரிய வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருந்தது. ஆனால், அவர்களின் தந்தை ஆன்மீக வாழ்க்கைப் பாதைக்குச் சென்ற உடன், அவர்களின் நிலைமை மோசமானது.

அவர்களின் தந்தை, துறவு பூண்ட ஆண்டில், அவர்களது குடும்பம் அகமதாபாத்தில் உள்ள ரத்னாபோல் என்ற இடத்துக்கு இடம் பெயர்ந்தது. அவர்களை அவர்களின் தாய் வழி தாத்தா, தாய்மாமன் ஆகியோர்தான் காப்பாற்றினர். அவர்களின் தாய்மாமா ஒரு குர்தா உடை விற்கும் கடை வைத்திருந்தார். அந்த கடைக்கு மக்வானா பிரதர்ஸ் என்று பெயர் வைத்திருந்தார்.

“அது ஒரு புகழ் பெற்ற கடை. தினமும் அங்கு 100 குர்தாக்கள் வரை அவர்கள் தைப்பார்கள். ஜிதேந்திரா, பிபின் ஆகிய எங்கள் இருவருக்கும் மூத்த சகோதரர் தினேஷ்  அந்தக் கடையில் வேலைபார்த்தார். அடிப்படை திறன்களை கற்றுக் கொண்டார். நாங்கள் அனைவரும் பள்ளியில் இருந்து வந்த பின்னர், அங்கே வேலைக்குச் செல்வோம்,” என்கிறார் பிபின்.

காலை 6 மணி முதல் நள்ளிரவு வரை அவர்களின் தாய், மிகவும் கடினமாக உழைத்தார். “ஹெம்மிங் ஒர்க், பட்டன் வைப்பதில் அவர் நிபுணராக இருந்தார்,” என்கிறார் பிபின். தந்தை இல்லாத குறையை நிறைவு செய்யும் வகையில், குழந்தைகளை வளர்க்க அவர்களின் தாய், இருமடங்காக உழைக்க வேண்டி இருந்தது.

https://www.theweekendleader.com/admin/upload/jan1-15-LEADtape.jpg

தந்தையைப் போலவே பிபினும், கச்சிதமாக உடை தைக்கும் டெய்லராக இருக்கிறார்.


பிபின், அவரது இரண்டு சகோதரர்கள், இரண்டு சகோதரிகள் அனைவருமே நகராட்சிப் பள்ளியில் படித்தனர்.

“எங்களைப் படிக்க வைத்ததில் எங்கள் தாத்தா, மாமா இருவருக்குத்தான் நாங்கள் நன்றிக்கடன் பட்டிருக்கிறோம். நாங்கள் ஒவ்வொருவரும் ஒரு கல்லூரி பட்டமாவது வாங்கிட வேண்டும் என்பதில் அவர்கள் உறுதியாக இருந்தனர்,” என்கிற பிபின், உளவியலில் பட்டப்படிப்பு முடித்துள்ளார். 

தாத்தா, மாமா உதவியுடன் தினேஷ் என்ற அவர்களின் மூத்த சகோதரர், தமது 22-வது வயதில், அதாவது 1975-ம் ஆண்டில் சொந்தமாக ஒரு டெய்லரிங் கடையைத் திறந்தார். அதற்கு தினேஷ் டெய்லர்ஸ் என்று பெயர் வைத்தார்.

அப்போது பிபினுக்கு 15 வயது. அவர் பள்ளிக்கு சென்று கொண்டிருந்தார். 19-வயதான ஜிதேந்திரா அப்போது கல்லூரி சென்று கொண்டிருந்தார். அந்தத் தருணத்தில்தான் தினேஷ் சொந்தக் கடையைத் தொடங்கினார். பள்ளி, கல்லூரி முடித்தபின்னர், இவருவரும் தினேஷ் கடைக்குச் சென்று டெய்லரிங் தொழில்நுணுக்கங்களைக் கற்றுக் கொண்டனர்.

“ஜிதேந்திரா தினமும் 14-15 மணி நேரங்கள் வரை வேலை பார்ப்பார். தினமும் 16 சட்டைகள் தைப்பார். இதுபோன்று தைப்பது அவ்வளவு எளிதல்ல. இருந்தும் அவர் அதனைச்செய்தார்,” என்றார் பிபின். அவரது சகோதரரின் ஆசியுடன், அவரும் சேர்ந்து சூப்பர்மோ கிளாத்திங் மற்றும் மென்ஸ்வேர் என்ற துணி மற்றும் டெய்லரிங் கடையை 1981-ம் ஆண்டு அகமதாபாத்தில் திறந்தனர்.

https://www.theweekendleader.com/admin/upload/jan1-15-LEADclothes.jpg

நாடு முழுவதும் 51 ஜேட் ப்ளூ கடைகள், 168,193 ச.அடி பரப்பளவில் பரந்து விரிந்து இருக்கின்றன.


இருவரும் சேர்ந்து வங்கி கடன் வாங்கி, 1.50 லட்சம் ரூபாய் முதலீட்டுடன், பழைய அகமதாபாத் நகரில் எல்லீஸ் பாலம் அருகே ஒரு வணிக வளாகத்தில் 250 சதுர அடிப் பரப்பில், ஒரு கடையைத் திறந்தனர். இன்றைக்கு சிஜி ரோடு பகுதியின் அடையாளமாக இருக்கும் ஜேட் ப்ளூ கடையில் இருந்து, குறைந்த தூரத்தில்தான் அவர்களின் முந்தைய கடை இருந்தது.

சூப்பர்மோ என்பது, அவர்களின் தொடக்க இடமாக இருந்தது. தங்களுக்குள் ஒருவருக்கு ஒருவர் மேம்படுத்திக் கொண்டு, வலுவுக்கு மேல் வலுவாக வளரத் தொடங்கினர்.

ஜிதேந்திரா தொலை நோக்குப் பார்வை கொண்டவர். நிறுவனத்தின் வளர்ச்சிக்காக அவர் திட்டமிடுகிறார். “அவர் எப்போதுமே தீவிரமான ஆர்வமுள்ளவராக இருப்பார்,”  எனும் பிபின், கற்பனை வளம் கொண்டவராக இருக்கிறார்.

1980-ம் ஆண்டு, குறைந்த அளவே பிரபலமான டெய்லர்களாக அவர்கள் இருந்தபோதிலும் பெரும் லட்சியம் கொண்டிருந்தனர். 1980-களில், பிபின் தம்முள் இருக்கும் முன்னேறும் தீயை அணையாமல் பார்த்துக் கொண்டார். பிரதமர் உள்ளிட்ட புகழ் பெற்ற மனிதர்களுக்கு உடைகள் தைக்கவேண்டும் என்ற ஆசை அந்த தீ.


அவர்களின் வாடிக்கையாளர்களில் ஒருவர் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் கீழ்மட்ட நிர்வாகி.  எளிதாக சுருங்காத பாலிஸ்டர் காதி துணியில் அரை கையுடன் கூடிய குர்தாவை அந்த நபர் விரும்பினார். அவர் பின்னாளில் பிரதமர் ஆவார் என்பது பிபினுக்குத் தெரிந்திருக்கவில்லை. ஆம் அவர் அவர் பெயர் நரேந்திரமோடி! அவர்களின் தொழில் சீராக வளர்ச்சி அடைந்தது. மோடி, கவுதம் அதானி போன்றவர்கள் தாங்கள் வளர்ச்சி அடைவதற்கு முன்பே இவர்களிடம் ஆடை தைக்க வருகிறவர்களாக இருந்தனர்.

“1989-ம் ஆண்டில் இருந்து மோடி வாடிக்கையாளராக இருக்கிறார்,” என்கிறார் பிபின். ஆண்டுக்கு சில முறைகள், குர்தாவுக்கு அளவு எடுப்பதற்காக அந்த வி.ஐ.பி வாடிக்கையாளரை அவர் சந்திப்பது வழக்கம். 

https://www.theweekendleader.com/admin/upload/jan1-15-LEADfamily.jpg

மனைவிகளுடன், சகோதரர்கள்


முன்னாள் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா இந்தியா வந்தபோது, அவரைச் சந்தித்த பிரதமர் மோடி அணிந்திருந்த ஆடை பெரிதும் பேசப்பட்டது. கோட் உடன் கூடிய பந்த்கலா எனப்படும் உடையில் நரேந்திர தாமோதரதாஸ் மோடி என்ற பெயரை மோனோகிராம் முறையில் பதித்துத் தைத்தவர் பிபின்.

டி பீக் பாயிண்ட்(D’ Peak Point) என்ற பிராண்ட் பெயரில், 1986-ல் அவர்கள் ஆயத்த ஆடைகள் தயாரிக்கத் தொடங்கினர்.

ஒன்பது ஆண்டுகள் கழித்து, 1995-ம் ஆண்டு அவர்கள் ஜேட் ப்ளு என்ற பெயரில் தங்களை மறு நிர்மாணம் செய்தனர். அகமதாபாத்தில் சிஜி சாலையில் உள்ள வணிக வளாகத்தில் 2800 ச.அடி இடத்துக்குக் கடையை மாற்றினர்.

நெருங்கிய வாடிக்கையாளரான என்.ஜி.பாட்டீல் என்ற தொழில் அதிபர், வலியுறுத்தியதன் பேரில், இந்த வளர்ச்சிக்கான அடியை அவர்கள் எடுத்து வைத்தனர். வங்கிக் கடன்கள், பாட்டீலின் சில உதவிகள் எல்லாம் சேர்த்து இந்த விரிவாக்கம் நடந்தது.  

“சர்வதேச சந்தையில் எங்களது ஆடை வகைகள் நிலைத்து நிற்கும் வகையில், ஒரு பிராண்ட் பெயரை நாங்கள் யோசனை செய்தோம்.  எங்கள் ஆங்கில பெயரின் முதல் எழுத்துக்களைக் ஜே (ஜிதேந்திரா), பி(பிபின்) கொண்டு அது இருக்கவேண்டும் என விரும்பினோம்.  விளம்பர நிறுவனம் ஒன்றில் பணியாற்றிய எங்களுடைய நண்பர் ஒருவர், ஆறுமாதங்களில், ஜேட் (முக்கியத்துவம் வாய்ந்த கல்), ப்ளூ (ஆண்களுக்கு விருப்பமான வண்ணம்), என்ற பெயருடன் வந்தார்,”  என்கிறார் பிபின்.

இருபது ஆண்டுகளுக்குப் பிறகு, ஜேட் & ப்ளு, அதே கட்டடத்தில் 20,000 ச.அடியில் கார்ப்பரேட் அலுவலகம், ஒரு கிடங்கு ஆகியவற்றுடன் வளர்ந்துள்ளது.

நாடு முழுவதும்,  இப்போது அவர்களுக்கு 168,193 ச.அடி-யில் 51 கடைகள் இருக்கின்றன. இந்த சில்லரை விற்பனைக் கடைகளில் தங்களுடைய ஜேட் ப்ளூ மற்றும் க்ரீன் ஃபைபர் உள்ளிட்ட ஆண்கள் ஆயத்த ஆடைகள் முதல் இதர பிராண்ட் ஆடைகளையும் விற்பனை செய்கின்றனர்.

https://www.theweekendleader.com/admin/upload/jan1-15-LEADsons.jpg

ஜிதேந்திரா  மகன் சாம்பவ் (இடமிருந்து இரண்டாவதாக இருப்பவர்) மற்றும் பிபின் மகன் சித்தேஷ் இருவரும் குடும்பத்தொழிலில் இணைந்திருக்கின்றனர்.


‘மோடியின் குர்தா’ மற்றும் ‘மோடியின் ஜாக்கெட்’ இரண்டும் அவர்களின் கடைகளில் அதிகம் விற்பனையாகும் உடைகளாக இருக்கின்றன.

குடும்பத்தின் புகழ்பெற்ற டெய்லரிங் பாரம்பர்யத்தை சவுகான்கள் தொடர்கின்றனர். இன்றைய நாட்களில், இந்த வேலைக்குத் திறன் வாய்ந்தவர்கள் கிடைப்பது மிக எளிதானதாக இல்லை. அவர்களின் கடைகளில், அகமதாபாத், சூரத், ஐதராபாத், புனே மற்றும் ஜெய்ப்பூர்  கடைகளில் டெய்லரிங் பணிகளையும் செய்து தருகின்றனர்.

“கச்சிதமான உடைகள் வேண்டும் என்றால், துணிகளை எடுத்து தைப்பது மட்டும்தான் வாடிக்கையாளர்களுக்குத் திருப்தி தருவதாக இருக்கும்,” என்கிறார்  பிபினின் மகனான சித்தேஷ் சவுகான்(26). இவர், லண்டன் ஸ்கூல் ஆஃப் ஃபேஷன் பயிற்சி நிறுவனத்தில் வடிவமைப்பு படிப்பை முடித்திருக்கிறார்.

சித்தேஷ், அவரது சகோதரி குஷாலி இருவரும் நிறுவனத்தின் இ-வணிகத்தை நிர்வகித்துக் கொள்கின்றனர். ஜிதேந்திராவின் மகன் சாம்பவ், நிர்வாகத்தைக் கவனித்துக் கொள்கின்றார். சவுகான்களின் குடும்ப தொழில் ஏழாவது தலைமுறையின் பிரதிநிதித்துவத்துடன் நடைபோடுகிறது. 


 
 
 
 
 

அதிகம் படித்தவை

  • A plan to provide education to poor children and eradicate poverty

    பந்தன் என்னும் பந்தம்

    மிகவும் எளிய பின்னணி கொண்ட சந்திர சேகர் கோஷ், கிராமப்புற மகளிரின் நிலை கண்டு மனம் நொந்தார். அவர்களுக்கு உதவ அவர் தொடங்கிய பந்தன் என்ற சிறுகடன் நிறுவனம் ஏராளமான பெண்களின் வாழ்க்கையை மாற்றியதுடன் இன்று வங்கியாக வளர்ச்சி பெற்றுள்ளது. ஜி சிங் எழுதும் கட்டுரை

  • Young Mattress seller success story

    மெத்தைமேல் வெற்றி!

    கொல்கத்தாவை சேர்ந்த கபீர் சித்திக் என்ற இளைஞர், மெத்தைகள் விநியோகஸ்தராக இருந்து, தொழிலில் நஷ்டம் அடைந்தார். அதிலிருந்து பாடம் கற்றுக் கொண்டு சிறிய பெட்டியில் எடுத்துச் செல்லும் புதுமையான மெத்தைகளை தயாரித்து வெற்றி பெற்றிருக்கிறார். சோபியா டேனிஷ்கான் எழுதும் கட்டுரை

  • Wow! They sell 1.5 lakh momos everyday

    சுவை தரும் வெற்றி

    கொல்கத்தாவைச் சேர்ந்த கல்லூரி நண்பர்களான வினோத்துக்கும் சாகருக்கும் மொமோ என்கிற உணவுப் பண்டத்தை சாப்பிடப் பிடிக்கும். இருவரும் சேர்ந்து மோமொ விற்பதையே தொழிலாக்கினார்கள். இன்று 100 கோடி மதிப்பில் அத்தொழில் வளர்ந்துள்ளது. ஜி சிங் எழுதும் கட்டுரை

  • Innovating mind

    ஆர்வத்தால் அடைந்த வெற்றி

    ஆர்வம் காரணமாக எலெக்ட்ரானிக் சாதனங்களை பழுது நீக்க கற்றுக் கொண்ட கூடலிங்கம், அந்த திறனை முதலீடாகக் கொண்டு காற்று சுத்திகரிக்கும் சாதனத்தை தயாரிக்கத் தொடங்கினார். இன்றைக்கு வெற்றிகரமாக கொரோனா தொற்றை தடுக்கும் சாதனத்தை தயாரிக்கும் பணியில் இறங்கி உள்ளார். சோஃபியா டேனிஷ் கான் எழுதும் கட்டுரை

  • Success story of indigo airlines

    உயரப் பறத்தல்

    விமானப்போக்குவரத்து துறை படுபாதாளத்தில் இருந்தபோது, தொழில் நேர்த்தியுடன் விமானப் போக்குவரத்து சேவையைத் தொடங்கிய ராகுல், ராகேஷ் இருவரும் இன்று இன்டிகோ என்ற உயரப்பறக்கும் விமான நிறுவனத்தின் உரிமையாளர்களாக இருக்கின்றனர். ஷெல்லி விஷ்வஜித் எழுதும் கட்டுரை

  • He Lost heavily two times, but bounced back to build Rs 250 Crore turnover business

    தோல்விகளில் துவளாத வெற்றியாளர்

    தந்தையின் உணவகத்தில் உதவியாளராக இருந்த சரத்குமார் சாகு, இன்றைக்கு 250 கோடி ரூபாய் ஆண்டு வர்த்தகம் செய்யும் நிறுவனத்தின் உரிமையாளராக இருக்கிறார். ஆரம்ப கட்டத்தில் தோல்விகளைச் சந்தித்தபோதும் அதனால் அவர் துவண்டு விடவில்லை. ஜி.சிங் எழுதும் கட்டுரை