Milky Mist

Friday, 26 April 2024

தோல்வியின் பிடியில் இருந்து மீண்டிருக்கும் இந்த மூங்கில் தொழிலதிபர்கள் கதை படுசுவாரசியமானது!

26-Apr-2024 By அஜுலி துல்ஸயன்
ஹைதராபாத்

Posted 18 May 2017

பதினோரு ஆண்டுகளுக்கு முன்பாக  ஹைதராபாத்தில் ஒரு இளம் தம்பதி தங்கள் இல்லத்துக்கு  சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காத சோபா செட் வாங்க விரும்பினார்கள். இதற்கான தேடலில் அவர்கள் திரிபுராவில் உள்ள ஒரு கிராமத்தைச் சென்றடைந்தனர். இந்திய-வங்க தேச எல்லையில் இருந்த அந்த கிராமத்தில் அவர்களுக்கு புதிய தொழில் தொடங்கும் யோசனை முதன்முதலாகத் தோன்றியது.

இந்த தொழிலால் சுத்தமாக எல்லாவற்றையும் இழக்கும் நிலைக்கு வீழ்ந்து, 60 லட்சரூபாய் கடனுக்கும் ஆளானார்கள். ஆனால் இப்போது ஒரு கோடிரூபாய் அளவுக்கு விற்கும் அளவுக்கு மீண்டிருக்கிறார்கள். இவர்களின் வெற்றிக்கதையைக் கேட்போமா?

https://www.theweekendleader.com/admin/upload/may2-17-bamboo1.jpg

ஹைதராபாத்தில் உள்ள பேம்பூ ஹௌஸ் இந்தியா என்னும் நிறுவனத்தின் உரிமையாளர்களான பிரஷாந்த் லிங்கம், அவரது மனைவி அருணா கப்பகாண்டுலா


ஆறு ஆண்டுகளுக்கு முன்பு பேம்பூ ஹௌஸ் இந்தியாவின் உரிமையாளர்களான பிரஷாந்த் லிங்கம், அவர் மனைவி அருணா கப்பகாண்டுலா இருவரும் பெரும் கடன் சுமையில் இருந்தனர்.

“என்னால் அந்த காலகட்டத்தை மறக்கமுடியாது. ஒரு வேளை சாப்பாட்டுக்கே திண்டாடிய நாட்கள் அவை. எங்களுக்கு அது ஒரு பாடம், ” என்கிறார் பிரஷாந்த்.

பிரஷாந்த் தன் தந்தையை இழந்தார். அருணாவின் தந்தையும் தொடர்ந்து மரணமடைந்தார். நிலைமை இன்னும் மோசமாகிவிட்டது. கடன் தொல்லையால் இருந்த நகையெல்லாம் விற்றார்கள்.

குடும்பம், நண்பர்களிடமிருந்து பிரஷாந்த் தொடர்ந்து கடன் வாங்கினார்.  ஷங்கர்பள்ளியில் ஒரு மேலாண்மைக்கல்லூரியில் உரையாற்றியபோது அவர் கால் உடைந்துவிட்டது. அருணாவுக்கு குழந்தை பிறந்ததும் உடல்நலம் குன்றிவிட்டது. இருவரும் சிகிச்சை எடுக்கவேண்டி வந்தது.

இருந்தாலும் 2012ல் அவர்களுக்கு கிடைத்த ஒரு வாய்ப்பு நன்றாக அமைந்தது. தொழில் வளர்ச்சி அடைந்தது. அடுத்த மூன்று ஆண்டுகளில் 150 மூங்கில் வீடுகளை அமைத்தார்கள். (சதுர அடிக்கு 500 ரூபாய் என்ற வீதத்தில்). பெரும்பாலும் அவை பண்ணைவீடுகள் அல்லது பென்ட்ஹௌஸ்கள்.

பிரஷாந்த் எம்பிஏவை பாதியில் விட்டவர். படிப்பில் ஆர்வமில்லாத மாணவர். இப்போது 40 வயதாகும் அவர் இளம் தொழில்முனைவோருக்குச் சொல்ல அருமையான கதையை வைத்துள்ளார்.

“எனக்கு எப்போதும் படிப்பில் ஆர்வம் இல்லை,” என்கிற பிரஷாந்த் தன் நிறுவனத்தில் தன்னை  'தலைமை தொழிலாளி’ என்று அழைத்துக்கொள்கிறார். சிஇஓ, சிஓஓ என்றெல்லாம் தன்னைச் சொல்வதில்லை!

ஹைதராபாத்தில் உள்ள கோட்டியில் விவி கல்லூரியில் பனிரெண்டாம் வகுப்பு முடித்தார் பிரஷாந்த். தொடர்ந்து பொருளாதாரம், வணிகவியலில் பட்டம்.  40% மதிப்பெண்களுடன் தேர்ச்சி. ஓஸ்மானியா பல்கலைக்கழகத்தில் பெற்றோர் வற்புறுத்தலால் எம்பிஏ சேர்ந்தார்.

ஒரு செமஸ்டருக்கு மேல் அங்கு அவரால் தாக்குப்பிடிக்கமுடியவில்லை. ஓடிவந்துவிட்டார். எம்பிஏ முடிக்காத நிலையில் யாரும் வேலைதரவும் தயாராக இல்லை. 2001-ல் அவர் சொந்தமாகத் தொழில்செய்ய முடிவுசெய்தார். முடிவைக்கணிக்க முடியாத பல நிகழ்வுகள் தொடங்கின.  

2001-2002-ல் ஒரு நண்பர் தன் நிறுவனத்தில் பங்குதாரராகச் சேர்ந்து தொழில் செய்ய வாய்ப்பு அளித்தார். சீனாவில் இருந்து எல்பிஜி வாயுவால் இயங்கும் கீஸர்கள் மற்றும் சில பொருட்கள் இறக்குமதி செய்யும் நிறுவனம் அது.

https://www.theweekendleader.com/admin/upload/may2-17-bamboo%20house.JPG

ஒரு லட்சரூபாயில் கூட மூங்கில் இல்லம் செய்யலாம்



பிரஷாந்த் நடுத்தரவர்க்கம். அவர் அப்பா ரஷ்ய செய்தித்தாளான நோவாஸ்திக்கு இந்திய நிருபராக இருந்து பின்னர் கம்யூனிஸ்ட் கட்சியின் செய்தித்தாளான நியூஏஜில் பணிபுரிந்தார். அம்மாவோ தனியார் நிறுவனத்தில் மனிதவளப்பிரிவில் வேலை செய்தவர்.

பிரஷாந்த் தன் அம்மாவின் சகோதரியிடம் 10,500 ரூபாய் வாங்கி அந்த நிறுவனத்தில் முதலீடு செய்தார். அந்த நண்பர் இது தேவை இல்லை என்று சொன்னபோதும்.  எல்பிஜி கீஸர்கள் மூலம் பெரும் தொழிலதிபர் ஆகலாம் என்று அவர் கணக்குப்போட்டார். நான்கு ஆண்டு கழித்து விலகியபோது அந்நிறுவனம் 3.5 கோடி விற்பனை செய்துகொண்டிருந்தது. பிரஷாந்த் மாதம் ஒரு லட்சம் சம்பாதித்துக்கொண்டிருந்தார்.

2006-ல் அருணாவுடன் திருமணம் ஆனது. பெற்றோர் பார்த்து செய்த திருமணம். பிரஷாந்தின் பெற்றோர் வீட்டில் முதல் தளத்தில் போட ஒரு சோபா செட் வாங்க விரும்பினர் இந்த இளம் தம்பதியினர். அது இயற்கைக்கு உகந்ததாக இருக்கவேண்டும். உள்ளூர் கடைகளில் எதுவும் திருப்தியாக இல்லை. கூகுளில் கண்ட சில மூங்கில் பொருட்கள் அவர்களுக்குப் பிடித்திருந்தன

மூங்கில் இயற்கையுடன் இயைந்த ஒன்று என்பதால் அவர்களுக்குப் பிடித்திருந்தது. விசாரித்து ஓர் இடத்தை அடைந்தார்கள்.

அது இந்திய வங்கதேச எல்லையில் திரிபுராவின் சிம்னா மாவட்டத்தில் உள்ள கட்லமாரா கிராமம். பசுமையான மூங்கில்கள் அதிகம் உள்ள இடம்.  உள்ளூர் சந்தைகளில் மூங்கில் பொருட்கள் செய்து விற்பதே கிராமவாசிகளின் வாழ்வாதாரம். இவர்களுக்கு ஒரு யோசனை உதித்தது.

“எங்களுக்குத் திடீரென மூங்கில் இல்லங்கள் அமைத்தால் என்ன என்று தோன்றியது. இதுதான் எங்கள் தொழில் என்று முடிவெடுத்தோம்,” என்கிறார் இந்த இளம் தொழிலதிபர். உலகமெங்கும் மூங்கில் இல்லங்கள் பரவலாக இருந்தாலும் இந்தியாவில் அவை இல்லை என்பது தெரிந்தது.

https://www.theweekendleader.com/admin/upload/may2-17-bamboo2.jpg

பேம்பூ ஹௌஸ் இந்தியா நிறுவனம் புனேவில் பெற்ற 20 லட்ச ரூபாய் மதிப்பிலான பண்ணை வீட்டுத் திட்டம் முக்கியமானது.



“அது ஒரு புதிய முயற்சி. ஆழமாக ஆய்வு செய்தோம். 2003-ல் வெளியான திட்டக்கமிஷன் ஆய்வு ஒன்று இந்திய மூங்கில் சந்தை 2015ல் 26000 கோடி அளவுக்கு விரிவடையும் வல்லமை கொண்டது என்று சொன்னது. சீனாவுக்கு அடுத்தபடியாக அதிக மூங்கில் இங்குதான் உற்பத்தி ஆகிறது.’’

ஆனால்  பிரஷாந்தும் அருணாவும் முக்கியமான ஒரு விஷயத்தைக் கவனிக்க மறந்துவிட்டார்கள். இந்திய வனச்சட்டம் 1927 –ன் படி மூங்கிலை அறுவடை செய்யவோ, வேறிடத்துக்கு எடுத்துச்செல்லவோ வனத்துறை அனுமதி பெறவேண்டும்.  இதில் சிக்கலான மாநில மத்திய அரசு சட்டங்கள் இருந்தன. இது ஒரு சவாலாக அமைந்தது.

ஹைதராபாத்தில் உப்பல் என்ற இடத்தில் அரை ஏக்கர் நிலத்தை கடன் வாங்கி லீசுக்கு எடுத்தார் பிரஷாந்த். 25 பேரை வேலைக்கு வைத்து ஒரு தொழிலகம் தொடங்கினார்.

பேம்பூ ஹௌஸ் இந்தியா நிறுவனம் தொடங்கப்பட்டது. வடகிழக்கு மாநிலங்களில் அரசியல் ரீதியாக குழப்பம் நிரம்பியதால் அபாயம் இருந்தாலும் முன்னேறினார்கள். கௌஹாத்தியில் ஒரு வெடிகுண்டு தாக்குதலில் பிரஷாந்த் உயிர்தப்பினார். அவரது வழிகாட்டி இறந்துபோனார். உள்ளூர் வனவாசிகள் அவரை இரண்டுமுறை பிடித்துவைத்துக்கொண்டு, பின்னர் போக அனுமதித்தனர்.

இன்று பிரஷாந்த் மலர்ச்சியுடன் இருக்கிறார். அவருக்கு சர்வதேச அங்கீகாரம் கிடைத்துள்ளது. புனேவில் 20 லட்சரூபாயில் கிடைத்த பண்ணை வீடு கட்டும் திட்டம் இவருக்கு கிட்டியதில் பெரிய திட்டம். ஹைதராபாத்தில் ஒரு லட்சரூபாயில்  கட்டிய வீடு இவர் செய்ததில் மிகவும் சிறியது.

சராசரியாக ஒரு இல்லத்துக்கு 2.5 லட்சரூபாய். தீப்பிடிக்காத அமைப்பு, நீரால் கெடாத அமைப்பு போன்றவை இதில் அடக்கம். வசதியான வாடிக்கையாளர்களுக்கான வசதியான வீடுகளே இவரது இப்போதைய இலக்கு.

https://www.theweekendleader.com/admin/upload/may2-17-bambooworkers.jpg

ஹைதராபாத்தில் உள்ள தொழிலகத்தில் 20 ஆதிவாசி மூங்கில் கலைஞர்களும் வேலை செய்கிறார்கள்.


இப்போது இவரது குழுவில் 20 ஆதிவாசிகள் முழுநேர ஊழியர்களாக உள்ளனர். அவர்களின் தங்குமிடம், மருத்துவம், உணவு, குழந்தைகளின் கல்வி ஆகியவற்றையும் கவனித்துக்கொள்வதுடன் மாதம் 15,000-20,000 சம்பளமும் தருகிறார்.

கிராமப்புற, நகர்ப்புற பகுதிகளில் பேம்பூ ஹௌஸ் இந்தியா ஆண்டுக்கு 10,000 – 15,000 பேருக்கு வேலைவாய்ப்பு தருகிறது.  உலகெங்கும் உள்ள மேலாண்மை கல்லூரிகள் இவரது தொழிலை ஆராய்ந்துள்ளன. “உலகவங்கி என்னுடைய தொழிலை மூங்கிலை மாற்று கட்டடப் பொருளாகப் பயன்படுத்தும் திட்டத்துக்காக ஆராய்ந்தது மிக முக்கியமான ஒன்றாகும்,” என்கிறார் பிரஷாந்த். 

2016-ல் அமெரிக்க சிந்தனையாளர் அமைப்பான நெக்ஸ்ட்பில்லியன் அவரை உலகின் முக்கிய 100 சமூகத் தொழிலதிபர்களில் ஒருவராக பட்டியல் போட்டது.

ஹைதராபாத் கார்ப்பரேஷனுடன் பேருந்து நிழலகங்களை  பிளாஸ்டிக் பாட்டில்கள், டையர்கள் கொண்டு உருவாக்கவும் பிரஷாந்த் ஒப்பந்தம் செய்துள்ளார். டையர்களைக் கொண்டு உருவான குடங்களை நகரில் உள்ள தாவரங்களுக்கு வைக்கவும் திட்டமிட்டுள்ளார். பள்ளிகள், கல்லூரி மாணவர்களை ப்ளாஸ்டிக் பாட்டில்கள் சேர்ப்பதில் ஈடுபட வைப்பதும் இவர் திட்டம்.

வார நாட்களில் கடுமையாக வேலை செய்யும் பிரஷாந்த், வார இறுதியில் மனைவி அருணா மற்றும் மகள் தான்யாவுடன நீண்ட பைக் பயணங்கள் செய்கிறார். பழைய படங்கள் பார்க்கிறார்.

”என்னிடம் இருப்பதைக் கொண்டு மகிழ்ச்சி அடைகிறேன். விரும்பிய வேலையைச் செய்வதில் கூடுதல் மகிழ்ச்சி,” என்கிற இவர் மூங்கில் தொழிலை எடுத்துச் செய்ய விரும்பும் இளம் தொழிலதிபர்களுக்கு உதவி செய்வதில் ஆர்வமாக உள்ளார்.


 
 
 
 
 

அதிகம் படித்தவை

  • School teacher becomes successful street food vendor

    தள்ளு வண்டியில் அள்ளும் லாபம்!

    புதுடெல்லி அருகே குர்கானில் வசிக்கும் ஊர்வசியின் கணவர் ஒரு விபத்தில் காயம் அடைந்து படுத்த படுக்கையானார். எனவே, குடும்பத்தை வழி நடத்த தெருவோர உணவுக்கடையைத் தொடங்கி சாதித்திருக்கிறார் ஊர்வசி. சோபியா டேனிஷ் கான் எழுதும் கட்டுரை

  • How the son of a government school teacher became a great scientist

    ஒரு விஞ்ஞானியின் கதை

    குறைந்த செலவில் சந்திரனுக்கும் செவ்வாய்க்கும் விண்கலன்கள் அனுப்பியதற்காகப் பாராட்டப்படுகிறவர் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை. சின்னவயதில் அண்ணாதுரை ஏழ்மையைத் தன் சிக்கனத்தைக் கடைப்பிடிக்கும் திறனால் வென்றது பற்றி எழுதுகிறார் பி சி வினோஜ் குமார்

  • Romance and Business

    ஆதலால் காதல் செய்வீர்!

    இளம்வயதில் வீட்டை விட்டு வெளியேறி காதல் திருமணம் செய்து கொண்ட ஒரு தம்பதி, இன்றைக்கு ஆண்டுக்கு ரூ.6 கோடி வருவாய் தரும் வகையிலான சங்கிலித்தொடர் ரெஸ்டாரெண்ட்களை வெற்றிகரமாக கட்டமைத்துள்ளனர். அவர்கள் செய்த முதலீடு எண்பதாயிரம் ரூபாய் மட்டுமே.  சோபியா டேனிஷ்கான் எழுதும் கட்டுரை

  • How two college friends started a successful business

    மீண்டும் மீண்டும் வெற்றி!

    பிரஸூன், அங்குஷ் என்ற இளைஞர்கள் ஏற்கெனவே இரண்டு நிறுவனங்களை வெற்றிகரமாக நடத்தி, பிறரிடம் விற்று விட்டனர். இப்போது இந்திய பாரம்பர்யமிக்க நொறுக்குத் தீனி வகைகளை வெற்றிகரமாக விற்பனை செய்கின்றனர். சோஃபியா டேனிஷ்கான் எழுதும் கட்டுரை

  • juice Maker's success story

    ஒரு ஜூஸ் குடிக்கலாமா?

    வசதியான குஜராத்தி குடும்பத்தில் பிறந்தவர் ஹேமங்க் பட். தந்தையின் தொழில் நஷ்டமடைந்ததால், 18 வயதில் மும்பையில் இன்ஷூரன்ஸ் ஏஜென்ட்டாக வாழ்க்கையைத் தொடங்கியவர், சங்கிலித்தொடர் ரெஸ்டாரெண்ட்கள், ஜூஸ் கடைகளைத் தொடங்கி வெற்றி பெற்றார். அன்வி மேத்தா எழுதும் கட்டுரை

  • toilet business

    புதுமையின் காதலன்!

    அபிஷேக் நாத்தை பல்மருத்துவப் படிப்பதற்காக குடும்பத்தினர் பெங்களூரு அனுப்பினர். அவரோ ஏழு மாதங்களுக்குள் படிப்பில் இருந்து விலகிவிட்டார். ஹோட்டல் மேனேஜ் மெண்ட் முடித்து கேட்டரிங் நடத்தி தோல்வியடைந்தார். இப்போது லூ கஃபே எனும் சங்கிலித்தொடர் கஃபேவை வெற்றிகரமாக நடத்தி வருகிறார். குருவிந்தர் சிங் எழுதும் கட்டுரை.