Milky Mist

Friday, 26 April 2024

6 பொருட்களில் தொடங்கியவர்கள், 50-க்கும் மேற்பட்ட பொருட்களை தயாரிக்கின்றனர்! இரண்டே ஆண்டுகளில் இமாலய வெற்றி!

26-Apr-2024 By சோபியா டேனிஷ்கான்
புதுடெல்லி

Posted 21 Feb 2019

தங்கள்  குழந்தை அகஸ்தியாவுக்கு எக்ஸிமா என்ற தோல் அலர்ஜி உருவானதைக் கண்டு காஸால்(30), வருண் அலாக்(33) இருவரும் அதிர்ந்தனர். அவனது தோலில் சிவப்பு தடிப்புகள் தோன்றுவதுடன், அந்த சின்னஞ்சிறு குழந்தைக்கு அரிக்கவும் செய்தது. எனவே,தீங்கு விளைவிக்காத விஷமற்ற குழந்தைப்பயன்பாட்டுப் பொருட்களைத் தேடி கடைகடையாக ஏறி இறங்கினர்.

“எங்கள் மகனுடைய நிலைமை மோசமாகாமல் இருக்க விஷத்தன்மை அற்ற இயற்கை பொருட்களைஉபயோகிப்பது மட்டுமேதான் ஒரே வழி. ஆனால், இந்தியாவில் தயாரிக்கப்படும் பெரும்பாலான குழந்தைப் பாதுகாப்புப் பொருட்கள் எல்லாமே விஷத்தன்மை உள்ளதாக இருந்தன. போதுமான தரத்தை உறுதி செய்வதாக இல்லை,” என்கிறார் காஸால். எனவே, வெளிநாட்டுக்கு செல்லும் நண்பர்கள், உறவினர்களிடம் தோலைப் பாதுகாக்கும் விஷத்தன்மையற்ற அழகுசாதனப் பொருட்களை வாங்கி வரும்படி கேட்டனர்.

https://www.theweekendleader.com/admin/upload/12-10-18-03mom1.jpg

.2016-ம் ஆண்டு காஸால், வருண் இருவரும் மமார்த் (Mamaearth) என்ற விஷத்தன்மையற்ற தோல்பாதுகாப்புப் பொருட்களைத் தயாரிக்கத் தொடங்கினர்.(படங்கள்:நவ்நிதா)

 

விரைவில் தங்கள் நண்பர்களில் சிலரும் இதே பிரச்னையை எதிர்கொள்வதை இவர்கள் உணர்ந்தனர். ஒரு தொழில் வாய்ப்பு அவர்களுக்கு முன்பு இருப்பதை  உணர்ந்தனர்.

வருண் இந்துஸ்தான் யுனிலீவர், இன்ஃபோசிஸ் மற்றும் டெல்லியில் உள்ள கோகோ கோலா நிறுவனத்திலும் பணியாற்றி இருக்கிறார். அங்கே மூத்த பிராண்ட் மேலாளராக இருந்தபோது கோக் ஜீரோ-வை அவர்தான் கையாண்டார். காஸால், தகவல் தொழில்நுட்பத் துறையில் பெருநிறுவனங்களின் பயிற்சியாளராக இருந்தார்.

இந்தத் தம்பதி, 2016-ம் ஆண்டு களத்தில் குதித்தனர். அதே ஆண்டு ஜூன் மாதம் ஹோனசா கன்ஸ்யூமர் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தைத் தொடங்கினர். டிசம்பர் மாதத்தில், கர்ப்பிணி பெண்கள், குழந்தை பிரசவித்த பெண்கள், புதிதாய் பிறந்த குழந்தைகள் ஆகியோருக்கு விஷத்தன்மையற்ற தோல்பாதுகாப்புப் பொருட்களை அறிமுகம் செய்தனர். பேபி லோஷன், கொசு விரட்டி உள்ளிட்ட பொருட்களை முதன் முதலாக தயாரிக்கத் தொடங்கினர்.

அவர்கள் தங்கள் சொந்த சேமிப்பு, சில ஏன்ஜல் முதலீட்டாளர்களின் நிதி உதவி ஆகியவற்றையும் கொண்டு தங்கள் தொழிலுக்காக 90 லட்சம் ரூபாய் முதலீடு செய்தனர். ”இரண்டு ஆண்டுகளுக்குள் எங்களின் சில்லறை விற்பனை வருவாய் 20 கோடி ரூபாயை எட்டியது. நாடு முழுவதும் 120 முக்கிய நகரங்களில் எங்களின் பொருட்கள் கிடைத்தன. அமேசான், நைகா, பர்ஸ்ட்கிரை போன்ற இ-காமர்ஸ் இணையதளங்கள் மற்றும் எங்களின் சொந்த இணையதளம் வாயிலாகவும் பொருட்களை விற்றோம்,” என்கிறார் வருண்.

தொடக்ககாலத்தில் இருந்து தங்கள் பயணத்தைப் பற்றிக் கூறும் காஸால், “ஆறு பொருட்களுடன் நாங்கள் தொடங்கினோம். இப்போது எங்களிடம் தாய்-குழந்தைகள் பிரிவில் மட்டும் 50-க்கும் மேற்பட்ட பொருட்கள் இருக்கின்றன. மூங்கிலை அடிப்படையாக க் கொண்ட குழந்தைகளை துடைப்பதற்கான சுற்றுச்சூழலுக்கு ஏற்ற தோல் நலனுக்கு ஏற்ற பொருள் உள்ளிட்டவற்றை தயாரிக்கின்றோம்.” அரிப்பைபோக்கும் களிம்புகள், பிரவசத்தால் ஏற்படும் தழும்புகள், கோடுகளைப் போக்கும் களிம்புகள், முதுகு வலி, பாதவலி, முகத்தில் உபயோகிக்கப்படும் க்ரீம்கள், முடி உதிர்வைத் தடுக்கும் க்ரீம்கள் ஆகியவற்றையும் விற்கின்றனர். 99 ரூபாய் பொருள் முதல், எல்லாப் பொருட்களும் அடங்கிய கிட் 1700 ரூபாய் வரையிலும் கிடைக்கிறது.

இந்த ஆண்டின் தொடக்கத்தில், மமார்த்-தில் ஷில்பா ஷெட்டி பிராண்ட் அம்பாசிட்டராக இணைந்திருக்கிறார். தவிர, 1.6 கோடி ரூபாய் முதலீடு செய்திருக்கிறார். மேலும், விஷத்தன்மையற்ற பொருட்கள்தான் உடல் நலனுக்கு ஏற்றவை என்பதையும் அவர் நம்புகிறார். மேலும் ஃபயர்சைடு வென்சூர்ஸ், ஸ்டெல்லரிஸ் வென்சூர்ஸ் பங்குதாரர்களிடம் இருந்து 40 லட்சம் டாலர்களை கூர்கானில் தொடங்கப்பட்ட இந்த தொழில் நிறுவனம் பெற்றிருக்கிறது.

https://www.theweekendleader.com/admin/upload/12-10-18-03mom3.jpg

மாஎர்த், 25 நபர்கள் கொண்ட குழுவுடன் பணியாற்றுகிறது வெளிநபர்களிடம் இருந்து பொருட்களைத் தயாரித்து வாங்குகின்றனர்.


மமார்த் தலைமை தாயான காஸால், தமது நிறுவனத்தின் தனித்தன்மை வாய்ந்த விற்பனை முன்னெடுப்புகளைப் பகிர்ந்து கொண்டார். “எங்கள் நிறுவனம் தாய்களால், தாய்களுக்காக, தாய்களின் வழியே நடத்தப்படுகிறது. கருத்தியல், முயற்சி, சோதனை மற்றும் தயாரிப்புகளை வடிவமைத்தல் ஆகியவற்றை முன்னெடுப்பதற்காக, உதவுவதற்காக எங்கள் குழுவில் 200 இளம் தாய்மார்கள் உள்ளனர்,” என்கிறார் அவர், “ஆரம்பத்தில் அவர்கள், எங்கள் பொருள்களை உபயோகித்து அது குறித்து கருத்துச் சொல்வார்கள். அதன்பின்னர்தான், அந்த பொருள் விற்பனைக்காக உற்பத்தி செய்யப்படும். சமூக வலைதளங்களில், எங்களுடைய விஷமற்ற பொருள்களை பற்றி எடுத்துச் சொல்வதற்காக 350 தாய்மார்கள் எங்கள் வசம் உள்ளனர்.”

அவர்களின் தொழில் முறையில் தனித்தன்மை வாய்ந்த ஒரு செயல் என்னவெனில், மூன்றாம் நபர் தயாரிப்பு நிறுவனங்களிடம் பொருள்களை தயாரித்து வாங்கி, அதனைச் சந்தைப்படுத்துவதில்தான் கவனம் செலுத்துகின்றனர். சமூக வலைத்தளங்களில் பொருள்களின் சந்தைப்படுத்துதலை முன்னெடுத்தல், பேக்கேஜ்களை வடிவமைத்தல், பிராண்டிங் செய்தல், சந்தைப்படுத்துதல் ஆகியபணிகளை மேற்கொள்ள 25 பேர்களைக் கொண்ட குழு ஒன்று ஒரு வாடகைக்கட்டடத்தில் இயங்கி வருகிறது.

பாதுகாப்பு சான்றுடன் தயாரிக்கப்பட்ட பிராண்ட் என்று ஆசியாவின் முதல் பிராண்ட் என்ற பெருமையை மமார்த் பெற்றுள்ளது. தங்களின் உற்பத்தி பொருட்களின் பேக்கேஜின் மேற்பகுதியில் அந்தப் பொருளைத் தயாரிக்க என்னென்ன பொருட்களைப் பயன்படுத்தினோம் என்ற பட்டியலைத் தருகின்றனர். இந்த பொருட்களில் இதுவரை அறியப்பட்ட 8000 விதமான விஷப்பொருட்கள் ஏதும் இல்லை.

“எங்களுடைய சொந்த ஆய்வகத்தில் பொருட்களை பரிசோதிக்கிறோம். பொருட்கள் பரிசோதனை செய்யப்பட்ட உடன், அவை பாதுகாப்பானவை என்று அறிவிக்கப்படுகிறது. நுண்ணுயிர் சோதனைக்கும் அனுப்பி, அந்த பொருட்களை பயன்படுத்தும் குறிப்பிட்ட காலகட்டத்தில் எந்தவித நுண்ணுயிர் தாக்கத்துக்கும் ஆட்படாது என்பதையும் உறுதி செய்கிறோம்,” என்கிறார் காஸால்.

https://www.theweekendleader.com/admin/upload/12-10-18-03mom2.jpg

அவர்களின் பொருட்கள் சந்தைப்படுத்தப்படுவதற்கு முன்பு, கடுமையான சோதனைகளுக்கு உட்படுத்தப்படுகின்றன.


பெருநிறுவனங்களில் 12 ஆண்டுகள் பணியாற்றிய பின்னர், கடைசியாக கோகோகோலா நிறுவனத்தில் இருந்து வருண் கடந்த 2016-ல் விலகி மமாஎர்த் நிறுவனத்தைத் தொடங்கினார். ஆரம்ப காலகட்டத்தில் அவர்கள் தங்களிடம் இருந்த பணம் எல்லாவற்றையும் தொழிலில் முதலீடு செய்து விட்டனர். எனவே , முதலில் சில மாதங்கள் உறுதியான வருமானம் ஏதும் இன்றி கடினமான சூழலில் இருந்தனர்.

“இந்த காலகட்டத்தில், வருணின் பெற்றோர் பெரிதும் ஆதரவாக இருந்தனர். அவருடைய தந்தை பிரிண்டிங் தொழிற்சாலை நடத்தி வந்தார். அவரது தாய் பேங்க் ஆப் பரோடாவில் பணியாற்றினார். எங்கள் குடும்பத்தின் முதுகெலும்பாக அவர்கள் திகழ்ந்தனர். நாங்கள் வெளியே போன நேரத்தில் அவர்கள்தான் எங்கள் மகனைப் பார்த்துக் கொண்டனர்,” என்கிறார் காஸால். இப்போது அவரது மகன் அகஸ்தியாவுக்கு மூன்றரை வயதாகிறது.

காஸாலின் தந்தை கார் உதிரிபாகங்கள் விற்கும் ஷோரும் நடத்தி வருகிறார். அவரின் தாய் வீட்டைக் கவனித்துக் கொள்கிறார். 2011ம் ஆண்டு வருணை திருமணம் செய்து கொண்டபின்னர், நியூயார்க்கில் உள்ள அகடாமியில் ஆறுமாதம் ஃபைன் ஆர்ட்ஸ் கோர்ஸ் படிப்பதற்காக 2013-ம் அமெரிக்கா ஆண்டு சென்றார். அவருக்கு ஓவியங்கள் பிடிக்கும். இப்போதும் நியூயார்க்கில் அவரது ஓவியங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

இந்தியா திரும்பிய பின்னர், கருத்தரித்தார். அகஸ்தியாவை பெற்றெடுத்தார். தங்கள் மகனைப் பற்றி காஸால் நம்மிடம் பகிர்ந்து கொள்கிறார். ”எனது அன்றாட வேலைகள் காலை 4.30 மணிக்குத் தொடங்கும், எழுந்த உடன் நடைப்பயிற்சி செய்கிறேன். அகஸ்தியாவுக்கான காலை உணவை வருண் தயாரிப்பார். பின்னர் அவனை நான் பள்ளிக்கு கொண்டு சென்று விட்டு வருவேன். காலை 8 மணிக்கு அலுவலகம் செல்வேன். 12 மணி வரை பணியாற்றுவேன். பின்னர் அகஸ்தியாவை பள்ளியில் இருந்து திரும்பவும் அழைத்து வருவேன்.

https://www.theweekendleader.com/admin/upload/12-10-18-03mom4.jpg

மகன் அகஸ்தியாவுடன் வருண், காஸால்.

 

“நாங்கள் இருவரும் சேர்ந்து மதிய உணவு சாப்பிடுவோம். பின்னர் அவனை படுக்க வைத்து விட்டு அலுவலகத்துக்குத் திரும்புவேன். வருண் அவனுடன் இரவில் சிறிது நேரம் செலவிடுவார். இப்போது நாங்கள் இரண்டு குழந்தைகளை வளர்க்கிறோம். அதில் எங்களது ஸ்டார்ட் அப் நிறுவனம் ஒன்று. இன்னொன்று அகஸ்தியா,” என்றபடி சொல்லி சிரிக்கிறார் காஸால்.

தம் மனைவியுடன் பணியாற்றுவது குறித்த அனுவபங்களை பகிர்ந்து கொள்கிறார் வருண், "எங்களுக்குள் வித்தியாசங்கள், அதிருப்திகள் ஏற்படும்போது ஏற்கனவே அதை எப்படி சரி செய்திருக்கிறோம் என்ற குறித்த புரிதல் கொண்டிருக்கிறோம். எனவே, மனைவியுடன் பணியாற்றுவதில் இந்த பெரிய சாதகம் இருக்கிறது. என்னை ஆதரிப்பதற்காக இங்கே அவர் இருக்கிறார் என்ற புரிதல் இருக்கிறது. எனவே அவர் மீது எனக்கு நம்பிக்கை ஏற்படுகிறது. எல்லை வரம்பு எது என்பது எங்களுக்குப் புரிந்திருப்பதால், ஒருவருக்கு ஒருவர், சவால்களை மேற்கொள்கிறோம்.”


 
 
 
 
 

அதிகம் படித்தவை

  • Home made food flowing unlimited

    வீட்டுச்சாப்பாடு

    சுவையான மட்டன் குழம்பு, ரத்தப் பொறியல், குடல் கறி, தலைக்கறி, ஈரல், பிராய்லர் சிக்கன், நாட்டுக்கோழி சிக்கன் வகைகள், மீன் குழம்பு... ஆ... அம்புட்டும் அன்லிமிடட்! எங்கே எங்கே...? ஈரோடு மாவட்டம் சீனாபுரத்தில் ஒரு தம்பதி வீட்டிலேயே நடத்தும் புகழ்பெற்ற உணவகம் பற்றி உஷா பிரசாத் எழுதும் கட்டுரை

  • Powered by solar

    போராடி வெற்றி!

    டிசிஎஸ் நிறுவனத்தில் நல்ல வேலையில் இருந்த  கரன் சோப்ரா, திடீரென அந்த வேலையை விட்டுவிட்டு எல்இடி விளக்குகள் விற்பனையில் ஈடுபட்டு அதில் தோல்வியை கண்டார். எனினும் விடா முயற்சியுடன் போராடி, இப்போது ஆண்டுக்கு 14 கோடி வருவாய் ஈட்டுகிறார். உஷா பிரசாத் எழுதும் கட்டுரை.

  • success story of a shampoo maker

    ஷாம்பூ மனிதர்!

    தமிழ்நாட்டின் ஒரு சிறிய நகரத்தில் சுதந்திரமாக சுற்றித்திரிந்த இளைஞர், 15 ஆயிரம் ரூபாய் முதலீட்டில் ஷாம்பூ தயாரிப்பு நிறுவனம் தொடங்கினார். அது கடின உழைப்பு, வித்தியாசமான விளம்பர உத்திகளால் இன்றைக்கு 1450 கோடி ரூபாய் ஈட்டும் நிறுவனமாகி இருக்கிறது. பி சி வினோஜ் குமார் எழுதும் கட்டுரை

  • fresh farm produce

    பண்ணையிலிருந்து வீட்டுக்கு!

    கிராமத்தில் பிறந்து வளர்ந்த செல்வகுமார் தன் வேர்களுக்குத் திரும்பி இருக்கிறார். பெங்களூரு நகரில் பார்த்த வேலையை விட்டுவிட்டு கோவைக்குத்  திரும்பி வந்து வில்ஃபிரஷ் நிறுவனத்தைத் தொடங்கி விவசாயிகளுக்கும் வாடிக்கையாள்ர்களுக்கு பலன் தரும் முயற்சியில் வெற்றி பெற்றுள்ளார். உஷா பிரசாத் எழுதும் கட்டுரை.

  • He sold garments on the footpath, now his turnover is Rs 60 crore

    உழைப்பால் உயர்ந்த நாயகன்

    பெங்களூருவில் நடைபாதையில் துணிகள் விற்பவராகத் தொழிலைத் தொடங்கியவர் ராஜா. இன்றைக்கு 60 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் செய்யும் நிறுவனங்களை நடத்தி வருகிறார். இத்தனைக்கும் பத்தாம் வகுப்புடன் படிப்பை பாதியில் விட்டவர் இவர். உஷா பிரசாத் எழுதும் கட்டுரை

  • Bareilly’s  king of oil

    மலையளவாகப் பெருகிய கடுகு!

    உபியில் பரேலி என்ற சிறுநகரில் கன்ஷ்யாம் குடும்பம் பரம்பரையாக கடுகு எண்ணெய் தொழிலில் ஈடுபட்டு வந்தது.  அதை தற்காலத்துக்கு ஏற்றவாறு  மாற்றி உபியின் எண்ணெய் அரசராக உயர்ந்திருக்கிறார் கன்ஷ்யாம் கண்டேல்வால். சோபியா டேனிஷ் கான் எழுதும் கட்டுரை.