Milky Mist

Wednesday, 30 October 2024

தோல்வியுடன் தொடங்கினார்! ஆனால் இன்று 1500 கோடிகள் புரளும் கடலுணவு ஏற்றுமதியாளர்!

30-Oct-2024 By ஜி சிங்
ஒடிசா

Posted 21 Dec 2017

“எதிர்பாராமல் நடக்கும் ஒரு விபத்துபோலத்தான், நான் தொழிலதிபர் ஆனேன்,” என்கிறார் தாரா ரஞ்சன் பட்நாயக். தாமே கடலில் குதித்து, நம்பிக்கை எனும் ஆதாரத்தைப் பிடித்துக் கொண்டு வெற்றிகரமாக, பாதுகாப்பாக கடலில் நீந்தி அவர் வந்திருக்கிறார். இந்த அவரது வெற்றிக்கதை, பிறரையும்  ஊக்குவிக்கக்கூடியதாக இருக்கிறது.

64 வயதாகும் இந்தத் தொழிலதிபர், வழக்கறிஞர்கள் குடும்பத்தில் இருந்து வந்தவர். அவரும், அவர்கள் குடும்பத்தினரைப் போல வழக்கறிஞர் ஆகவேண்டும் என்றுதான் நினைத்தார். ஆனால், அவரது வாழ்க்கை அவரை வேறு ஒரு வித்தியாசமான வழியைத் தேர்ந்தெடுக்க வைத்தது. 1985-ம் ஆண்டு, ஃபால்கான் மரீன் எக்ஸ்போர்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தைத் தொடங்கினார். கடந்த 15 ஆண்டுகளாக, அவரது நிறுவனம், நாட்டின் மிகப்பெரிய கடல் உணவுப் பொருட்கள் ஏற்றுமதி நிறுவனமாகத் திகழ்கிறது.

https://www.theweekendleader.com/admin/upload/12-12-17-05fish6.JPG

முதன் முதலில் மீன் பிடித் தொழிலில் ஈடுபட்டு, அதில் தோற்றபின்னர், தாரா ரஞ்சன் பட்நாயக், ஃபால்கான் மரீன் எக்ஸ்போர்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தை 1985-ல் தொடங்கினார். (புகைப்படங்கள்; டிக்கான் மிஸ்ரா)

 

இப்போது, ஒடிசாவில், கிடைக்கும் 65% கடல் உணவுகளைக் கொள்முதல் செய்யும் நிறுவனமாக ஃபால்கான் நிறுவனம் திகழ்கிறது.  5,000 ஊழியர்கள் அவர்களின் நிறுவனங்களில் பணியாற்றுகின்றனர்.  கடல் உணவு ஏற்றுமதி நிறுவனம் தவிர, பட்நாயக் ஸ்டீல், அலோயிஸ் லிமிடெட் மற்றும் ஃபால்கான் ரியல் எஸ்டேட் லிமிடெட்  ஆகிய நிறுவனங்களுடன் அவர்களின் ஆண்டு வருவாய் 2016-17ம் ஆண்டில் 1500 கோடி ரூபாயாக உயர்ந்தது. அடுத்த நிதி ஆண்டில் 2000 கோடி ரூபாய் ஆண்டு வருவாய் ஈட்ட வேண்டும் என்று இலக்கைக் கொண்டிருக்கின்றனர்.

தாரா ரஞ்சன், மெப்டா (மரீன் பொருட்கள் ஏற்றுமதி வளர்ச்சி அமைப்பு) எனும், ஏற்றுமதியாளருக்கான நாட்டின் உயர்ந்த மதிப்புள்ள விருதை கடந்த 15 ஆண்டுகளாகப் பெற்று வருகிறார்.

வானத்தில் உயரப் பறக்க வேண்டும் எனும் எண்ணத்தில் விருப்பம் கொண்டவர் என்பதால், ஃபால்கான் என்று தமது நிறுவனத்துக்குப் பெயர் வைத்தார். ஆனால், இது போன்று தமது நிறுவனம் உயரும் என்று அவர் நினைத்துக் கூடப் பார்த்த தில்லை.

ஒடிசாவின் கியோஞ்ச்ஹரில் உள்ள ஆனந்த்பூர் சப்டிவிஷனில் 1953-ம் ஆண்டு மார்ச் 14-ம் தேதி தாரா ரஞ்சன் பிறந்தார். பத்மநாபா பட்நாயக் எனும் சிவில் வழக்கறிஞரின் மகனாக,  எட்டுப் பிள்ளைகளில்  நான்காவது மகனாகப் பிறந்தார்.

“நடுத்தர குடும்பத்துக்கே உரிய வாழ்க்கை முறைஇருந்தது. என்னுடைய தந்தை கீழ் நீதிமன்றங்களில் வாதாடும் ஒரு வழக்கறிஞராக இருந்தார். எங்களுக்கான அடிப்படைத் தேவைகள் எல்லாம் பூர்த்தி அடைந்திருந்தன,” எனும் தாரா ரஞ்சன், புவனேஸ்வர் நகரில் உள்ள தமது நிறுவனத்தின் தலைமை அலுவலகமான ஃபால்கான் ஹவுசில் அமர்ந்திருக்கிறார்.

1954-ம் ஆண்டில் ஆனந்த்பூரில் உள்ள அரசுப் பள்ளியில் தமது ஆரம்பக் கல்வியை அவர் தொடங்கினார். பின்னர், பாத்ராக் சென்ற அவர், பாத்ராக் கல்லூரியில் அறிவியல் படிப்பதற்காக 1969-ல் சேர்ந்தார். அங்கு ஹாஸ்டலில் தங்கினா். ஆனால், அடுத்த ஒரு ஆண்டில் அந்தக் கல்லூரியில் இருந்து விலகிவிட்டார். அங்கு அடிக்கடி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதின் காரணமாக கல்லூரிக்கு அடிக்கடி விடுமுறை விடப்பட்டது. இது அவரது படிப்புக்கு இடையூறாக இருந்தது.

எனவே, அவர் கியோஞ்ஹர் திரும்பினார், அங்கே 1970 முதல் 1971-ம் ஆண்டு வரை தமது அறிவியல் படிப்பைத் தொடர்ந்தார். ஆனால், மீண்டும் படிப்பில் இருந்து விலகினார். அவருக்கு அறிவியல் மீது இருந்த ஆர்வம் குறைந்து விட்டது. 1972-ல் கியோஞ்ஹரில் உள்ள ஆனந்தபூர் கல்லூரியில் கலைப் பிரிவில் சேர்ந்தார். இங்குதான் தம்முடைய பட்டப்படிப்பை அவர் முடித்தார்.

https://www.theweekendleader.com/admin/upload/12-12-17-05fish1.JPG

தாரா ரஞ்சன், சட்டம் படித்தார். எனினும், ஒரு நண்பரின் தூண்டுதலின் பேரில், தொழில் அதிபராகவே இருந்து விட்டார்.


மதுசூதன் சட்டக்கல்லூரியில் இடம் கிடைத்தபோது, அங்கு சேருவதற்காக 1973-ல் கட்டாக் சென்றார். “என் குடும்பத்தில் உள்ள எல்லோரும் வழக்கறிஞர் ஆனது போல நானும் ஒரு வழக்கறிஞர் ஆக விரும்பினேன். ஆனால், என் விதி எனக்காக வேறு ஒரு திட்டத்தை வைத்திருந்தது,” என்று முகம் முழுக்க புன்சிரிப்புடன் சொல்கிறார்.

‘ஒரு விபத்து போல தொழிலதிபர்’ஆன விதம் குறித்து அவர் நம்மிடம் விவரித்தார். அவரது நண்பரும், அவருடன் படித்தவருமான ஜெ ரஹ்மத், 1975-ம் ஆண்டில், அவருடைய வாழ்க்கைப் பாதையை மாற்றினார். “மீன்பிடி படகு வாங்கி, அதில் முதலீடு செய்யும்படி அந்த நண்பர் கூறினார்,” என்கிறார் தாரா ரஞ்சன்.

“இந்தத் தொழில் குறித்து இதற்கு முன்பு நான் எதுவுமே அறிந்ததில்லை என்பதால் அது குறித்து எனக்கு எந்த ஒரு யோசனையும் இல்லை. ஆனால், அந்த நண்பர், ‘நாம் இருவரும் சேர்ந்து இந்தத் தொழிலில் ஈடுபடலாம்,’ என்று வற்புறுத்தினார். எனவே, நான் அதற்குச் சம்மதம் தெரிவித்தேன். நாங்கள், ஒடிசா மாநில நிதி கழகத்தில் இரண்டு லட்சம் ரூபாய் கடன் பெற்றோம். மூன்று அல்லது நான்கு படகுகளை வாங்கினோம். நாங்கள் இருவருமே சரி சமமான பங்குதாரர்களாக இருந்தோம்.”

அவர்கள், கடலில் சென்று மீன் பிடிக்கும் பணியில் ஈடுபடுவதற்காக பத்துப்பேரை வேலைக்கு அமர்த்தினர். மீன்பிடித்தொழில் எப்படி இருக்கிறது என்று பார்ப்பதற்காக மீன்பிடிப்பவர்களுடன், சில நேரம் அவர்களும் உடன் சென்றனர். கடலில் கணிக்க முடியாத அளவுக்கு அலைகள் உயரமாக எழுந்தன. அந்த நேரத்தில் படகு கவிழக்கூடிய நிலை ஏற்பட்டது. இது ஒரு அபாயகரமான வேலை என்று திரும்பி வந்தனர்.

இந்தத் தொழில் தோல்வியில் முடிவடைந்தது. "இதில் போதுமான தொழில் அறிவு இல்லாததால், எங்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டது,” எனும் தாரா ரஞ்சன், “கடனை திருப்பிச் செலுத்துவதற்காக என்னுடைய படகை விற்பனை செய்தேன். அது ஒரு சோதனையான காலகட்டம்....”

எனினும், அவர் நம்பிக்கையை இழக்கவில்லை. அந்தத் தொழிலில் தொடர்புகளை உருவாக்கினார். அதன் விளைவாக1978-ல் ஒடிசாவில் பெரிய ஏற்றுமதி நிறுவனங்களுக்கு இறால் மீன்களை விற்பனை செய்தார்.

“மீனவர்களிடம் இருந்து நேரடியாக இறால் மீன்களை வாங்கினேன். அவற்றை பெரிய ஏற்றுமதியாளர்களிடம் விற்பனை செய்தேன்,” என்று விவரிக்கிறார். “என்னுடைய தொழிலில் அளவிடமுடியாத நஷ்டம் ஏற்பட்டபோதிலும், எங்கே எப்படி பணம் சம்பாதிப்பது என்ற அனுபவத்தை நான் பெற்றேன்.”

https://www.theweekendleader.com/admin/upload/12-12-17-05fish3.JPG

 ஃபால்கான் தொழிற்சாலையின் ஒரு பிரிவில் தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர்.


அடுத்த ஏழு ஆண்டுகளில் அவர் தொடர்ந்து, ஏற்றுமதியாளர்களுக்கு இறால் விற்பனை செய்தார். வெளிநாடுகளில் உள்ளவர்களுக்கும் இறால் விற்பனை செய்தார். இதன் மூலம் அவர் வர்த்தகத் தொடர்புகளை கட்டமைத்தார்.

1985-ம் ஆண்டு புவனேஸ்வர் நகரில் ஃபால்கான் மரீன் எக்ஸ்போர்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தைத் தொடங்கினார். அவர் நிறுவனம் வளர்ச்சியை நோக்கிப் பயணித்தது. 1987-88ல் நிறுவனத்தின் ஆண்டு வருவாய்4.66 கோடி ரூபாயாக இருந்தது.

“எங்களது தயாரிப்புகளை பேக்கேஜ் செய்யும் நிறுவனத்தை விலைக்கு வாங்கினோம். விரைவிலேயே  பதப்படுத்தும் பிரிவு தொடங்கலாம் என்று முடிவு செய்தேன்,” என்கிறார்.

1993-ம் ஆண்டு புனவேஸ்வர் நகரில் மஞ்சேஸ்வர் பகுதியில் 15 ஏக்கரில் முதல் பதப்படுத்தும் பிரிவைத் தொடங்கினார். அதில் தாரா ரஞ்சன் 20 கோடி ரூபாயை முதலீடு செய்தார். 20 கோடி ரூபாய் முதலீட்டில் பாரதீப்பில் 1994-ம் ஆண்டு 14 ஏக்கரில் இரண்டாவது பதப்படுத்துதல் பிரிவைத் தொடங்கினார். இந்த இரண்டு பிரிவுகளையும் வங்கியில் கடன் பெற்றுத் தொடங்கினார். பின்னர் அந்தக் கடனை திருப்பிச் செலுத்தினார்.

1990-91-ல் நிறுவனத்தின் ஆண்டு வருவாய் 12.5 கோடி ரூபாய்க்கும் மேல் அதிகரித்தது. ஆண்டுக்கு 850 டன் வரை ஏற்றுமதி செய்தனர். “நிறுவனம் சீராக வளர்ச்சி அடைந்தது. எங்களுடைய வாடிக்கையாளர்கள் பெரும்பாலும் அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களாக இருந்தனர்,”என்று நினைவு கூறும் அவர், “1999-ம் ஆண்டு ஒடிசாவில் புயல் தாக்கியபோது, கடினமான சூழலைச் சந்தித்தோம். பாரதீப் தொழிற்சாலையில் வைத்திருந்த பொருட்கள் மூழ்கி விட்டன. இதனால் 2 கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்பட்டது. மஞ்சேஸ்வர் பிரிவில் மட்டும் 60-70 லட்சம் ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்பட்டது.”

இழப்பில் இருந்து நிறுவனம் மீளத் தொடங்கியது. நிறுவனத்தை ஒரே சீராக ரஞ்சன் நிர்வகித்தார். “இழப்பில் இருந்து பாடம் கற்றுக் கொண்டோம்.புதிய உத்திகளைத் திட்டமிட்டோம்,” என்கிறார் தாரா ரஞ்சன். “இறால் உற்பத்தி செய்வதற்கு சிறு விவசாயிகளை ஊக்கப்படுத்தினோம். அதற்கு தேவையான மூலப்பொருட்கள் மற்றும் தொழில்நுட்ப உதவிகளை அளித்தோம். அவர்கள் உற்பத்தி செய்த இறால்களை நாங்களே கொள்முதல் செய்தோம்.”

https://www.theweekendleader.com/admin/upload/12-12-17-05fish5.JPG

தமது குழுமத்தின் ஆண்டு வருவாய் ரூ.2000 கோடியைத் தொட வேண்டும் என்பதை, இப்போது தாரா ரஞ்சன் இலக்காகக் கொண்டுள்ளார்.


விவசாயிகள் தங்களது சிறிய நிலத்தில், இறால் உற்பத்தி செய்து ஃபால்கான் நிறுவனத்துக்கு அதனை விற்பனை செய்தனர். இதன் மூலம் விவசாயிகளின் நிதி நிலைமை வலுவடைந்தது. “இப்போது வரை 5,000-த்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் எங்களோடு பணியாற்றுகின்றனர்,” என்கிறார் தாரா ரஞ்சன்.

2000-01ல் நிறுவனத்தின் ஆண்டு வருவாய் ரூ.157 கோடியை தாண்டியது. ஒவ்வொரு ஆண்டும் 3,100 டன் கடல் உணவுகளை அவர்கள் ஏற்றுமதி செய்தனர்.

இந்த நிறுவனம் 2006-ம் ஆண்டில், இரும்புத் தொழிலில் நுழைந்தது. பட்நாயக் ஸ்டீல் மற்றும் அலோயிஸ் லிமிடெட் என்ற பெயரில் நிறுவனங்களைத் தொடங்கினார். ஒடிசாவில் உள்ள ஜோராவில் 120 ஏக்கரில் 200 கோடி ரூபாய் முதலீட்டில் ஒருங்கிணைந்த இரும்பு தொழிற்சாலைப் பிரிவாக அது இருந்தது.

லண்டனில் எம்.பி.ஏ படித்துவிட்டு வந்த ரஞ்சனின் மகன் ப்ராத்தஜித் பட்நாயக், 2008-ம் ஆண்டில் அவரது தந்தையுடன் தொழிலில் இணைந்தார். அதே ஆண்டில், ரியல் எஸ்டேட் தொழிலிலும் அவர்கள் நிறுவனம் கால்பதித்தது. ஃபால்கான் ரியல் எஸ்டேட் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தை அவர்கள் தொடங்கினர்.

புவனேஸ்வர் மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் 300 ஏக்கர் நிலங்களை அவர்கள் நிறுவனம் வைத்திருந்தது. 45 கோடி ரூபாய் முதலீட்டில் 120 அப்பார்ட்மெண்ட்களைக் கட்டினர்.

https://www.theweekendleader.com/admin/upload/12-12-17-05fish4.JPG

தமது மகன் பார்த்தாஜீத் பட்நாயக் மற்றும் மருமகள் பிரியங்கா மொகந்தியுடன் தாரா ரஞ்சன்.


“நாங்கள் மூன்று நிறுவனங்களை நடத்துகிறோம்,”  என்று பார்த்தாஜீத் சொல்கிறார். கடல் உணவுகளில் மட்டும் கவனம் செலுத்தும் அவர்கள், இறால் தவிர மேலும் சில கடல் உணவுகளையும் ஏற்றுமதி செய்ய இருக்கிறோம் என்கிறார். “ஆசியாவிலேயே மிகப்பெரிய கடல் உணவு ஏற்றுமதியாளராக மாற வேண்டும் என்பதுதான், எங்கள் குறிக்கோள்,” என்று அவரது நிறுவனத்தின் இலக்கு குறித்து சொல்கிறார்.

பல ஆண்டுகளாக நிறுவனத்தைக் கட்டமைப்பதிலும், வளர்த்தெடுப்பதிலும் அதிக கவனம் செலுத்தியவர், நிறுவனத்தைப் பார்த்துக் கொள்ள மகன் வந்ததை அடுத்து, தமக்காக நேரம் செலவிடவும், வீட்டில் அதிக நேரம் செலவிடவும் விரும்புகிறார்.

தாரா ரஞ்சன் பட்நாயக்கின் மேஜிக் மந்திரம்- நேர்மை, அர்ப்பணிப்பு உணர்வுடன் கூடிய கடின உழைப்பு. இந்த எளிய முறைதான் வெற்றி எனும் சிகரத்தை அவருக்குப் பெற்றுத்தந்தது.


 
 
 
 
 

அதிகம் படித்தவை

  • Glossy in glass

    கண்ணாடியால் ஜொலிப்பவர்!

    ஷாதன் சித்திக் பிறந்தது ஒரு நடுத்தரக் குடும்பம்.  அவர்  12 ஆம் வகுப்புப் படிக்கும்போது தந்தை இறந்து விட்டார். பிறகு சகோதரர் உதவியுடன் பொறியியல் பட்டப்படிப்பை முடித்தவர், இப்போது கண்ணாடி விற்பனைத் தொழிலில் ஜொலிக்கிறார். குருவிந்தர் சிங் எழுதும் கட்டுரை.

  • Best seller

    கூச்சத்தை வென்றவர்

    டெல்லியைச் சேர்ந்த பாவனா ஜூனேஜா சிறுவயதில் மிகவும் கூச்சம் சுபாவம் கொண்டவராக இருந்தவர். அவருடைய தாயின் வழிகாட்டலில் சிறந்த விற்பனையாளராக மாறி சாதனை புரிந்தார். இன்றைக்கு அவர் ரூ.487.5 கோடி ரூபாய் ஆண்டு வருவாய் ஈட்டும் வணிக சாம்ராஜ்யத்தையே உருவாக்கி இருக்கிறார். சோஃபியா டேனிஷ்கான் எழுதும் கட்டுரை.

  • How a rickshaw puller became a crorepati in Ranchi

    அதிர்ஷ்டத்தைக் கொடுத்த பன்றிகள்

    மோஹர் சாகு, தம்முடைய 12 வயதில், ஒரு கூலி தொழிலாளியாக அவரது வாழ்க்கையைத் தொடங்கினார். இப்போது 51 வயதில் ஒரு பன்றி வளர்ப்புப் பண்ணையின் உரிமையாளராக ஆண்டுக்கு ஒரு கோடி ரூபாய் வருவாயைத் தொடும் அளவுக்கு உயர்ந்திருக்கிறார். ஜி.சிங் எழுதும் கட்டுரை!

  • The LED Magician of Rajkot

    ஒளிமயமான பாதை

    மாதம் ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் ரப்பர் ஸ்டாம்ப் விற்கும் நபராக இருந்தவர் ஜிதேந்திர ஜோஷி. இந்தியாவுக்கு எல்.இ.டி தொழில் நுட்பத்தை அறிமுகப்படுத்தியவர். இப்போது 8 கோடி ரூபாய் ஆண்டு வருவாய் தரும் எல்.இ.டி உற்பத்தியில் ஈடுபட்டு வருகிறார். மாசுமா பார்மால் ஜாரிவாலா எழுதும் கட்டுரை

  • Success from the campus

    வென்றது கல்லூரிக் கனவு!

      கார்த்திக் ஒரு பிரபலமான ஹோட்டல் குழுமத்தின் வணிக வாரிசு. அவருக்கு தாமே ஏதாவது சொந்தமாக செய்ய வேண்டும் என்ற உந்துதல். எனவே கல்லூரி படிக்கும்போதே பயண ஏற்பாட்டாளராக தொழில் செய்தார். படிப்பு முடிந்த உடன் தொழிலில் முழுமையாக மூழ்கி வெற்றி பெற்றார். சோஃபியா டானிஸ்கான் எழுதும்  கட்டுரை.

  • Even in your forties you can start a business and become a successful businessman

    நாற்பதிலும் வெல்லலாம்!

    பெரும்பாலானோர் ஓய்வுபெறுவதைத் திட்டமிடும் வயதில்அதாவது 40 வயதைத் தாண்டிய நிலையில் கொல்கத்தாவைச்சேர்ந்த மூன்று பேர் தங்கள் பிஎப், கிராஜுட்டி பணத்தைப் போட்டுதொழில் தொடங்கினார்கள். ஆறு ஆண்டுக்குப் பின்னால் என்ன ஆனது? ஜி.சிங் எழுதும் கட்டுரை