Milky Mist

Thursday, 18 September 2025

தனியார் விமான சேவையைத் தொடங்கத் தகுதிபெற்ற முன்னாள் ஆலைத் தொழிலாளி!

18-Sep-2025 By ஜி.சிங்
கொல்கத்தா

Posted 16 Jun 2017

ஓர் ஆலைத்தொழிலாளியாக வாழ்க்கையைத் தொடங்கி கோடீஸ்வரனாக ஆகியிருப்பவர் ராஜ்குமார் குப்தா. 300 பேர் இவரிடம் வேலை பார்க்கிறார்கள். மேற்கு வங்கத்தில் உள்ள ஹூக்ளி மாவட்டத்தில் இருக்கும் ரிஷ்ரா என்ற இடத்தில் குடியிருப்பு ஒன்றைக் கட்டினார். இதுதான் இவர் எடுத்துச் செய்த முதல் கட்டட வேலை. அதுவும் அப்பகுதியில் யாரும் ப்ளாட் வாங்க முன்வர மாட்டார்கள் என்று எல்லோரும் சொன்னபோது செய்த வேலை!

1984ல் தன் வீட்டருகே நடைப்பயிற்சி போய்க்கொண்டிருந்தபோது காலியான ஓர் இடத்தைப் பார்த்தார். அங்கே ப்ளாட் கட்டினால் என்ன என்று நினைத்தார். அந்த இடத்தை 1.25 லட்சரூபாய்க்கு வாங்கி, அங்கே ஒரு குடியிருப்பைக் கட்டினார். இதிலிருந்து அவரது வெற்றிகள் தொடர்ந்தன.

https://www.theweekendleader.com/admin/upload/sep11-15-LEAD1.jpg

 க்ளைவ் சாலையில் 150 சதுர அடி வாடகை அலுவலகத்தில் குப்தா தன் தொழிலைத் தொடங்கினார்.


குப்தாவின் வெற்றிக்கதை மிக முக்கியமானது. கடின உழைப்பு, பணிவு, கவனமான ஈடுபாடு ஆகியவற்றுடன் பெரிய கனவு கண்டு சாதித்துள்ளார் குப்தா.

கொல்கத்தாவைச் சேர்ந்த முக்தி குழுமத்தின் தலைவர் இவர். விருந்தோம்பல், பொழுதுபோக்கு, ரியல் எஸ்டேட் ஆகிய துறைகளில் ஈடுபடும் இவர் 1960களில் கொல்கத்தா வந்தபோது எதிர்க்கொண்ட போராட்டங்களை இன்னும் நினைவில் வைத்துள்ளார்.

“நான் மிக ஏழ்மைமையான குடும்பத்தில் பிறந்தேன். ஒருவேளை சோற்றுக்கே திண்டாட்டம். என் அப்பா செய்துவந்த தொழில் நலிவுற்று இருந்தது.

“வாழ்க்கை தினப்போராட்டமாகவும் அடிப்படைத்தேவைகளே பெரிய விஷயங்களாக இருந்தன,” -எழுபது வயதாகும் குப்தா தன் சொந்த ஊரான பஞ்சாப்பில் உள்ள பிரோஸ்பூர் வாழ்க்கையை திரும்பிப்பார்க்கிறார்.

1960-ல் அவரது அண்ணன் கொல்கொத்தாவுக்கு பிழைப்பு தேடி நகர்ந்தார். குப்தாவும் பின் தொடர்ந்தார்.

”நகருக்கு வந்தபின் பல வேலைகளை பார்த்தேன். அம்பாசடர் கார்கள் தயாரிக்கும் ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் நிறுவனத்தில் மேற்பார்வையாளராக வேலை கிடைத்தது. மாத சம்பளம் 150 ரூ. பத்தாண்டுகள் அங்கே வேலை பார்த்தேன்.”

1974-ல் அவர் தன் கனவுகளைப் பின் தொடர முடிவுசெய்து வேலையை விட்டார். தொழிலில் இறங்க எப்போதும்போல் ஒரு தடைக்கல் வந்து நின்றது: பணம்!

ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் நிறுவனத்துக்கு சில பொருட்களை செய்து தருவது அவர் தொடங்கிய தொழில். அவருக்கு 5000 ரூபாய் தேவைப்பட்டது. நண்பர்களிடம் கடன் வாங்கி  150 சதுர அடியில் ஒரு சிறு அலுவலகத்தை க்ளைவ் சாலையில் ஆரம்பித்தார்.

பாலிகுஞ்சேவில் இன்று தன்னுடைய ஐந்து நட்சத்திர ஹோட்டலில், ஏசி அறையில் அமர்ந்துள்ள குப்தா, தன் எளிய தொடக்கத்தை எண்ணி பெருமை கொள்கிறார்.

நான்கு ஆண்டுகள் உழைத்த பின்னர்தான் ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் நிறுவனத்தின் பெரிய ஆர்டர்கள் பெற முடிந்தது. ஆர்டர்களை சப்ளை செய்துகொண்டிருந்த போதுதான் ஆரம்பத்தில் சொன்ன அந்த காலி இடம் அவர் கண்ணில் பட்டது.

நண்பர்களிடம் இந்த இடத்தில் குடியிருப்புகளைக் கட்டி விற்கலாம் என்று சொன்னபோது சிரித்தார்கள். இந்த பகுதியில் பிளாட்களை யாரும் வாங்க மாட்டார்கள். சொந்தமாக வீடுகட்டிக்கொள்வதையே விரும்புவார்கள் என்பதே காரணம்.

“ஆனால் நான் முடிவில் உறுதியாக இருந்தேன்,” அவர் மலர்ந்த முகத்துடன் கூறுகிறார். நமது இரண்டு மணி நேர சந்திப்பு முழுக்க அவர் இந்த மலர்ந்த முகத்துடனேயே இருந்தார்

ஆரம்பத்தில் ப்ளாட்களை வாங்க யாரும் வராததுபோல் தோன்றியது. அவர் சில சலுகைகளை அறிவித்தார். அதைத்தொடர்ந்து அவை விற்பனை ஆயின.

இப்போது அவருக்கு கொல்கத்தாவில் சொந்தமாக ஒரு ஐந்து நட்சத்திர ஓட்டல், பல்திரை அரங்கு, பல ரியல் எஸ்டேட் திட்டப்பணிகள் உள்ளன. மெர்சிடிஸ் போன்ற கார்களை வைத்திருக்கிறார். கொல்கத்தாவின் இதயப்பகுதியில் வீடு உள்ளது. நேர்மை, உண்மை, நம்பிக்கை இவையே தன் வெற்றிக்கான மூன்று மந்திரச்சொற்கள் என்கிறார் அவர்.

https://www.theweekendleader.com/admin/upload/sep11-15-LEAD2.jpg

நேர்மை, உண்மை, நம்பிக்கை ஆகியவையே தன் வெற்றிக்குக் காரணம் என்கிறார் குப்தா


“இந்த மூன்று குணங்களும் இருந்துவிட்டால் நீங்கள் விரும்பியதை அடைவதில் இருந்து யாரும் தடுக்க முடியாது. நான் நேர்மையுடன் தரத்தில் குறைவைக்காமல் பணிபுரிந்துள்ளேன்.

“அனைவருடனும் நல்லுறவு பேணுதல் சிரமமான நேரங்களில் எனக்குக் கை கொடுத்துள்ளது,” என்று சொல்கிறார் அவர்.

தன் முதல் குடியிருப்புப் பணி மட்டும் இல்லாமல் முக்தி சேம்பர்ஸ் என்கிற க்ளைவ் சாலை வணிகக்கட்டடத்தையும் தன் வெற்றிக்கதைகளில் ஒன்றாக முன்வைக்கிறார் அவர். 1980களில் கட்டப்பட்ட இந்த கட்டடம் முக்கியமான இடத்தில் உள்ளதோடு சுற்றிலும் பாரம்பரிய அமைவிடங்களைக் கொண்டுள்ளது.

”இந்த  கட்டட கட்டுமானத்திட்ட மதிப்பு 4 கோடி ரூபாய்கள். என்னிடம் இருந்தது சில லட்சங்களும் 150 சதுர அடியில் ஒரு சிறு அலுவலகமும்தான்.

இதற்கான ஒப்பந்தத்தைத் தருவதற்கு முன்பாக அதன் உரிமையாளர்கள் என் அலுவலகத்தை வந்து பார்த்திருந்தால் ஓடியே போயிருப்பார்கள். ஒரே ஒரு குமாஸ்தா மட்டுமே அந்த சின்ன அறையில் இருப்பார். ஆனால் நான் மிகுந்த நம்பிக்கையுடன் பேசி அந்த ஒப்பந்தத்தைப் பெற்றேன். என்னுடைய நிஜமான நிதி நிலைமை தெரியாமல் பார்த்துக்கொண்டேன்,” என்கிறார் குப்தா.

இந்த குழுமம் 2003-ல் தன் செயல்பாடுகளை விரிவு படுத்தி பொழுதுபோக்குத்துறையில் ஈடுபட்டது, முக்திவேர்ல்ட் என்ற பல்திரை அரங்கை, உணவக வசதியுடன் ஏற்படுத்தியது.  இங்கு லண்டன் பாரிஸ் மல்டிப்ளக்ஸ் என்ற அரங்கும் கோல்டுப்ரிக் என்ற பல உணவு வகைகள் கிடைக்கும் உணவகமும் உண்டு.

ஐந்து ஆண்டுகள் கழித்து முக்தி குழுமம், பாலிகுஞ்சேவில் கார்ல்சன் ரெசிடார் ஹோட்டல் குழுமத்துடன் இணைந்து பார்க் ப்ளாசா கொல்கத்தா ஹோட்டலைக் கட்டியது.  இது 200 கோடி மதிப்புடையது. இந்தியாவின் கிழக்குப் பகுதியில் கார்ல்சன் ரெசிடார் குழுமத்தால் நிர்வகிக்கப்படும் முதல் ஹோட்டல் இதுவாகும்.

இந்த ஐந்து நட்சத்திர ஹோட்டலில் 92 அறைகள் உள்ளன. 14,800 சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ளது.

ஒரு கட்டத்துக்குப் பிறகு குப்தாவின் வெற்றிப்பயணம் எளிதாக இருந்திருக்கும் என்று எண்ண வேண்டாம். அவரது பாதையில் தோல்விகளும் உண்டு.

அவருக்குப் பெரும் ஏமாற்றமாக அமைந்தது, அவர் தொடங்க விரும்பிய முக்தி ஏர்வேய்ஸ் தொடங்கப்படாமலே போனதுதான். 1990களில் விமானப்போக்குவரத்துத்துறையில் வளர்ச்சி ஏற்பட்டபோது அவர் தன் தனியார் விமான சேவையைத் தொடங்க முயன்றார்.

“செய்தித்தாள்களில் புதிய விமான நிறுவனங்கள் தொடங்கப்படுவது பற்றி விளம்பரங்கள் வந்துகொண்டிருந்தன. எனக்கும் ஒரு விமான நிறுவனம் தொடங்க வேண்டும் என்று தோன்றியது.  அது எளிதல்ல என்பது எனக்குத்  தெரியவில்லை. முடியாத எதையும் முடித்துக்காட்டுவேன் என்று நம்பினேன்.”

தன் கனவை நனவாக்க அவர் தொழில்நுட்பங்களைக் கற்றுக்கொண்டார். அத்துடன் அதற்காக பத்தாண்டுகள் முயற்சி செய்தார். ஆனால் ஹர்ஷத் மேத்தா ஊழலால் ஏற்பட்ட இந்திய பொருளாதார சிக்கல், விமானப்போக்குவரத்துத் துறையில் ஏற்பட்ட சரிவு ஆகியவற்றால் அவர் தன் கனவைக் கைவிட நேர்ந்தது.

“நிறைய உழைத்தேன். பணமும் நேரமும் செலவு செய்தேன். ஆனாலும் முடியவில்லை. வெளிநாட்டு விமான நிறுவனங்கள் பின்வாங்கிவிட்டன. திட்டத்தைக் கைவிடவேண்டியதாயிற்று,” அவர் சொல்கையில் ஏமாற்றம் முகத்தில் படருகிறது.

ஏழைக்குழந்தைகளுக்கு கல்வி என்பது அவரது கனவுகளில் ஒன்று, சமூக சேவைக்கு நேரம் செலவிட முடியவில்லை என்ற வருத்தமும் அவருக்கு உண்டு. அவர் செய்யும் பொதுநலச் சேவைகள் பற்றிக் கூற மறுக்கும் அவர் கையில் காசு இல்லாத போதே பொதுநலச் சேவைகளில் ஈடுபட்ட அனுபவம் தனக்கு உண்டு என்கிறார்.

“1970களில் ரிஷ்ரா ரயில் நிலையத்தில்  குடிநீர் வசதி இல்லை. அப்போதே நண்பர்களுடன் சேர்ந்து தண்ணீர்ப்பானை ஏற்பாடு செய்துள்ளேன்.

“நாங்கள் ஒரு ஹோமியோபதி கிளினிக்கும் தொடங்கி ஒரு மருத்துவரை பணியில் அமர்த்தி ஏழைகளுக்கு உதவி செய்யப் பணித்தோம்.  சமூகத்துக்கு உதவி செய்யவேண்டியது நம் கடமை,” என்கிறார் அவர்.

https://www.theweekendleader.com/admin/upload/sep11-15-LEAD3.jpg

மனைவி, குழந்தைகளுடன் குப்தா



அவரது ஆர்வத்தை அவரது மகள் முக்தா நிறைவேற்றுகிறார்.  நகரில் குடிசைப்பகுதிகளில் வாழும் சுமார் 300 குழந்தைகளின் கல்விக்காக தன்னார்வத் தொண்டு நிறுவனம் ஒன்றும் அவர்  நடத்துகிறார். அந்நிறுவனம் பல விருதுகளையும் வாங்கி இருப்பதாக குப்தா கூறுகிறார். குப்தாவுக்கு நான்கு குழந்தைகள் இருக்கிறார்கள்.

 ஓய்வு பெறும் வயதை அடைந்தாலும்  குப்தா இன்னும் உழைப்பை நிறுத்தவில்லை. அவரது கனவுகள் இன்னும் பெரிதாகவே உள்ளன.  அவர் இரண்டாம் அடுக்கில் இருக்கும் இந்திய நகரங்களில் ஒரு ஸ்மார்ட் சிட்டி கட்டுமானம் செய்யவேண்டும் என்று விரும்புகிறார்.

“நான் உழைப்பை விரும்புபவன். ஒரு கனவு நனவானால் மறுகனவில் கவனம் செலுத்துவேன். வாழ்க்கை ஒரு பயணம். என் பயணம் வெற்றி பெறுவதற்கான பயணம்.”

இளைய தலைமுறைக்கு அவர் கூற விரும்புவது என்ன? “அகங்காரம் இல்லாமல் பணிவுடன் உழையுங்கள்.  தோல்விக்கு அகங்காரமே முதல் காரணம். மகிழ்ச்சியாக இருக்கவேண்டுமானால் பிறரையும் மகிழ்ச்சியாக வைத்திருங்கள்.  உங்களுக்கு அனைத்தையும் அளித்திருக்கும் இந்த தேசத்தையும் சமூகத்தையும் நினைவில் வைத்திருங்கள்.”

நம் சந்திப்பை நிறைவு செய்யும் குப்தா இவ்வாறு கூறுகிறார்: “கூட்டத்தில் நடக்காதீர்கள். உங்கள் சொந்த பாதையை உருவாக்குங்கள். வெற்றி பெறுவீர்கள்.”


 
 
 
 
 

அதிகம் படித்தவை

  • He sold garments on the footpath, now his turnover is Rs 60 crore

    உழைப்பால் உயர்ந்த நாயகன்

    பெங்களூருவில் நடைபாதையில் துணிகள் விற்பவராகத் தொழிலைத் தொடங்கியவர் ராஜா. இன்றைக்கு 60 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் செய்யும் நிறுவனங்களை நடத்தி வருகிறார். இத்தனைக்கும் பத்தாம் வகுப்புடன் படிப்பை பாதியில் விட்டவர் இவர். உஷா பிரசாத் எழுதும் கட்டுரை

  • How a family built a successful business with fruits after suffering losses in their first venture

    வெற்றியின் சுவை

    கொல்கத்தாவில் ஒரு ஐஸ்கிரீம் பிராண்ட் வீழ்ச்சி அடைந்து, உரிமையாளரின் குடும்பம் 30 லட்சரூபாய் கடனில் தத்தளித்தது. 22 வயதே ஆன மூத்தமகன் களமிறங்கி வெற்றி பெற்ற கதை இது. இயற்கையான பழங்களில் இருந்து இனிப்பான ஐஸ்கிரீம் பிறந்தது. கட்டுரை: ஜி சிங்

  • He started transport business with a single lorry, but today owns 4,300 vehicles

    போக்குவரத்து தந்த வெற்றிப்பயணம்

    தந்தைக்கு உதவியாக பதிப்புத் தொழிலில் இருந்த சங்கேஸ்வர் , சாதிக்கும் ஆசையில் போக்குவரத்துத் தொழிலில் இறங்கினார். பெரும் நஷ்டங்களுக்குப் பின்னர் வெற்றிகளைக் குவித்த அவர் இன்று வி.ஆர்.எல் லாஜிஸ்டிக் நிறுவனத்தின் தலைவர். உஷா பிரசாத் எழுதும் கட்டுரை

  • Dosamatic makers

    தோசைப் ப்ரியர்கள்

    பலருக்கு தோசை சாப்பிடப்பிடிக்கும். ஆனால் அதை கல்லில் ஊற்றி சுடுவதற்கு? தமிழரும்தோசைப் பிரியருமான ஈஸ்வர் தமது நண்பர் சுதீப் உடன் சேர்ந்து இதற்காக தோசாமேட்டிக் மிஷினை கண்டுபிடித்தார். இன்றைக்கு நாடு முழுவதும் ஈஸ்வரின் தோசாமேட்டிக் இடம் பிடித்திருக்கிறது. உஷா பிரசாத் எழுதும் கட்டுரை

  • From milk to paneer.. how an entrepreneur built a company that has crossed Rs 120 crore turnover

    ‘பன்னீர்’ செல்வம்!

    இது மில்கி மிஸ்ட் நிறுவன நிர்வாக இயக்குநர் சதீஷ்குமாரின் வெற்றிக்கதை. எட்டாம் வகுப்பில் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு தந்தையின் தடுமாறிய தொழிலை தூக்கி நிறுத்தி, அதற்குப் புது அடையாளம் கொடுத்த சதீஷ்குமாரின் வெற்றிக்கதையை விவரிக்கிறார் பிசி வினோஜ் குமார்

  • the life story of journalist nakkheeran gopal

    துணிச்சலின் மறுபெயர் நக்கீரன் கோபால்

    புலனாய்வு இதழியல் வரலாற்றில் தனிமுத்திரை பதித்தவர் நக்கீரன் கோபால், 1988ம் ஆண்டு அவர் நக்கீரன் இதழைத் தொடங்கியது முதல் இப்போது வரை துணிச்சல் மிகுந்த பத்திரிகையாளராக பீடுநடை போடுகிறார். அவரது வார்த்தைகளிலேயே அவரது வாழ்க்கை கதை...