Milky Mist

Friday, 26 April 2024

இனிக்கும் வெற்றியைப் பரிசளித்த கசப்பான வாழ்க்கைப் போராட்டங்கள்! அடையாறு ஆனந்தபவனின் சுவையான வெற்றிக் கதை!

26-Apr-2024 By பி சி வினோஜ் குமார்
சென்னை

Posted 19 Jan 2019

1970-ம் ஆண்டுக்கு பின்னோக்கிப் பயணிக்கலாம். தமிழ்நாட்டின் தென் பகுதியில் உள்ள ராஜபாளையத்தில் இருந்த ஒரு விவசாயக் குடும்பத்துக்குச் சொந்தமாக கிராமத்தில் இருந்த விவசாய நிலம்  அரிதான ஒரு புழுதிப் புயலால் தாக்கப்பட்டு சீரழிந்தது. இதனால், அந்த நிலத்தில் சாகுபடி செய்யமுடியாத நிலை ஏற்பட்டது.

இந்த சூழலால் குடும்பத்தலைவரான திருப்பதி ராஜாவுக்கு இதயமே நொறுங்கிப்போயிற்று.  தங்களுடைய 8 ஏக்கர் நிலத்தில் நெல், கரும்பு உள்ளிட்டவற்றை  அவர் பயிரிடுவது வழக்கம். தவிர, மேலும் அதிக  பரப்பிலான நிலத்தில் பயிரிட வேண்டும் என்ற நோக்கத்தில் நிலத்தைக் குத்தகைக்கு எடுப்பதற்காக அந்த சமயத்தில் கடன் வேறு வாங்கி இருந்தார்.

https://www.theweekendleader.com/admin/upload/05-01-19-02ab2.jpg

கே.டி.சீனிவாச ராஜா (படத்தில் இருப்பவர்), அவரது சகோதரர் கே.டி. வெங்கடேசன் இருவரும் பள்ளியில் இருந்து இடையிலேயே நின்று விட்டனர். தங்களுடைய தந்தையின் இனிப்புக் கடையில் உதவியாக சேர்ந்தனர். இதுதான் இன்றைக்கு 700 கோடி ரூபாய் வர்த்தகம் தரும் தொழிலாக அடையாறு ஆனந்தபவன் என்ற பிராண்ட் பெயரில் வளர்ந்திருக்கிறது. (புகைப்படங்கள்: ரவிக்குமார்)


நகரில் அவருக்குச் சொந்தமாக ஒரு சிறிய இனிப்புக் கடை இருந்தது. ஆனால், அந்தக் கடை நன்றாகப் போகவில்லை. விவசாயத்தில் இருந்தும் வருமானம் இல்லாததால், அவர் கடனில் மூழ்கினார்.

“குடும்பத்தில் உள்ள எல்லோரும் சேர்ந்து தற்கொலை செய்து கொள்ளலாம் என்றுகூட என் தந்தை எண்ணினார், அந்த சமயத்தில் நாங்கள் அந்த அளவுக்கு ஏழ்மையிலும், பசியிலும் உழன்றோம்,” என்கிறார் நான்கு வாரிசுகள் உள்ள அக்குடும்பத்தில் கடைசியாகப் பிறந்த கே.டி. சீனிவாச ராஜா.  கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 1,800 கோடி ரூபாய் என்ற அபார  மதிப்பைத் தொட்ட  அடையாறு ஆனந்தபவன் என்ற புகழ் பெற்ற சங்கிலித் தொடர் இனிப்பு கடைகளைத் தொடங்கும் முன்பு, தமது குடும்பம் சந்தித்தப் போராட்டங்களை அவர் நம்மிடம் பகிர்ந்து கொண்டார்.

நல்லவேளையாக தற்கொலை செய்து கொள்ளும் திட்டத்தை கைவிட்டதற்காக அவரது தந்தைக்கு நன்றி சொல்ல வேண்டும். வாழ்க்கைப் போராட்டத்தில் நீடித்திருக்க வேண்டும் என்பதை அவர் தேர்ந்தெடுத்தார். குடும்பம் புயலைக் கடந்து வலுவாக எழுந்து நின்றது. அவர்கள் நாடு முழுவதும் இனிப்புக்கடைகளைத் தொடங்கினர். உலகம் முழுவதும் பரவினர். ஆயிரக்கணக்கான பேருக்கு வேலைவாய்ப்புகள் அளித்தனர். ஊழியர்களுக்கு இலவசமான உணவும், தங்குமிடமும் தருகின்றனர்.

கடந்த காலங்களில் திருப்பதி ராஜா, கடுமையான சூழல்களை எதிர்கொண்டார். 10 வயதாக இருக்கும் போது அவர், வீட்டில் இருந்து வெளியேறி சென்னைக்குச் சென்றார். அங்கே அவர் ஒரு உணவகத்தில் டேபிள் துடைக்கும் வேலையில் ஈடுபட்டார். பின்னர், சமையல் செய்பவருக்கு உதவி ஆளாகச் சேர்ந்தார். மூத்த சமையலரிடம் இருந்து எல்லா வகையான இனிப்புகளையும் செய்வதற்குப் பழகிக் கொண்டார்.

“சில ஆண்டுகள் கழித்து அவர் ராஜபாளையம் திரும்பினார். பின்னர், அவர் மும்பை சென்றார். அங்கே அவர் 19 ஆண்டுகள் வரை இருந்தார்,”  என்கிறார் சீனிவாச ராஜா. “மும்பையின் மாதுங்கா பகுதியில் தமிழர் ஒருவருக்குச் சொந்தமான மளிகைக்கடையில் பணியாற்றினார். பின்னர், ஒரு டெக்ஸ்டைல் மில்லில் வேலை பார்த்தார். ஒரு சிறிய தொழிலில் ஈடுபட முயற்சி செய்தார். தமிழகத்தில் உள்ள கும்பகோணத்தில் இருந்து இட்லி பாத்திரங்களை வாங்கி வந்து, மும்பையில் விற்றார்.’’

https://www.theweekendleader.com/admin/upload/05-01-19-02ab4.jpg

கே.டி.சீனிவாசன், அடையாறு ஆனந்தபவனின் வணிகச் செயல்பாடுகளுக்கான பொறுப்பாளராக இருக்கிறார்.


திருப்பதி ராஜா, தந்தையின் அறிவுரையை ஏற்று, ராஜபாளையத்துக்குத் திரும்பி வந்தார். தொடர்ந்து குடும்பத்தினருடன் இருந்தார். நெல், கரும்பு பயிரிட்டார். அதேசமயம் தன் இனிப்பு தயாரிக்கும் திறனையும் விடக்கூடாது என்பதால், 1960ம் ஆண்டு ராஜபாளையத்தில் குரு ஸ்வீட்ஸ் என்ற சிறு இனிப்புக் கடையையும் தொடங்கினார்.

இதற்கிடையே, விவசாயத்தில் நல்ல வருவாய் கிடைத்ததால், திருப்பதி ராஜா  மேலும் நிலங்களை குத்தகைக்கு எடுத்து, விவசாய நடவடிக்கைகளை விரிவாக்கம் செய்தார். ஆனால், புழுதிப் புயலால் அவரது திட்டம் தவிடுபொடியானது. அதனால் நெருக்கடியான சூழல் ஏற்பட்டது.

இந்த அதிர்ச்சிக்குப் பின்னர், 1970-களின் மத்தியில் திருப்பதி ராஜா பெங்களூரு செல்வது என்று முடிவு எடுத்தார். அடிமட்டத்தில் இருந்து வாழ்க்கையை கட்டமைப்பது என்று முடிவு செய்தார். பெங்களூரு சீனிவாசபுரத்தில் ஒரு இனிப்புக்கடையைத் தொடங்கினார். இது அவரது குடும்பத்துக்கு நல்ல திருப்பத்தைக் கொடுத்தது. 

சீனிவாசா ஸ்வீட்ஸ் என்று அந்தக் கடை அழைக்கப்பட்டது. இந்த சமயத்தில் திருப்பதி ராஜாவுக்கு அவரது மனைவியும், இரண்டு பிள்ளைகளும் ஆதரவு கொடுத்தனர். அவரது இரண்டு பிள்ளைகளும் கடையில் வேலைபார்க்க வேண்டும் என்பதற்காக பள்ளியில் இருந்து நின்று விட்டனர். ஒரு பெட்ரூம், ஹால், கிச்சன் மட்டுமே கொண்ட சிறிய வீட்டில் வசித்தபடியே, அந்தக் குடும்பம், தங்கள் தொழிலை ஒவ்வொரு செங்கலாக கட்டமைத்தது.

https://www.theweekendleader.com/admin/upload/05-01-19-02ab1.jpg

நிறுவனத்தின் இயக்குனராக சேர்ந்துள்ள வெங்கடேஷனின் மகனான வி.விஷ்ணு சங்கருடன் (இடது ஓரம்) இரண்டு சகோதரர்களும் இருக்கின்றனர். 


“பத்தாம் வகுப்புக்குப் பின்னர், நான் பள்ளியில் இருந்து நின்று விட்டேன்,” எனும் சீனிவாச ராஜா ராஜபாளையத்தில் உள்ள அரசு பள்ளியில் தமிழ் மீடியத்தில் படித்தார். “என் தந்தை இனிப்புகள் செய்வார். அவருக்கு என் தாய் உதவி செய்வார். நான் அருகில் உள்ள கடைகளுக்கு அந்த இனிப்புகளை சப்ளை செய்வதற்காகச் செல்வேன். என்னுடைய (மூத்த) சகோதரர் கே.டி.வெங்கடேசன் கடையைப் பார்த்துக் கொள்வார்.”

இது போன்ற எளிய தொடக்கத்தில் இருந்து அவர்களது குடும்பம் நீண்ட நெடிய பாதையைக் கடந்து வந்திருக்கிறது. இப்போது அவர்களது குடும்பம் 12000 சதுர அடி கொண்ட ஒரு பெரிய வீட்டில் வசிக்கிறது. தென் சென்னையில் முக்கியமான பகுதியில் மூன்று தளங்களைக் கொண்டதாக அந்த வீடு இருக்கிறது. சீனிவாச ராஜாவுக்கு சொந்தமாக சில அதி நவீனரக கார்கள் இருக்கின்றன. அதில் அவருக்கு விருப்பமானது, வால்வோ எக்ஸ்சி90 பெட்ரோல் எலக்ட்ரிக் ஹைபிரிட் எஸ்யுவி காராகும். 

அவரது பெற்றோர் ஏற்கனவே இறந்து விட்டனர். எனினும் அவர்களது நினைவுகளை தொடர்ந்து மனதில் வைத்திருக்கிறார். அவர்களது மார்பளவு உருவச் சிலைகளை அவரது வீட்டின் நுழைவாயிலில் வைத்திருக்கின்றார். தவிர வீட்டின் உள்ளே பெரிய டிராயிங்க் அறையிலும் வைத்திருக்கிறார்.

அடையாறு ஆனந்தபவன் ஸ்வீட்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் இப்போது 700 கோடி ரூபாய் வருவாய் ஈட்டும் நிறுவனமாக 8000-த்துக்கும் அதிகமான ஊழியர்களுடன் செயல்படுகிறது.  அமெரிக்கா, மலேசியா மற்றும் சிங்கப்பூர் உட்பட உலக அளவில் அதன் கிளைகள் உள்ளன.

“அமெரிக்காவில் இரண்டு, மலேசியா, சிங்கப்பூரில் தலா ஒன்று என எங்களுக்கு 140 கடைகள் உள்ள. பல கடைகளுடன் ஏ2பி சைவ உணவகங்களும் இணைந்திருக்கின்றன,” என்கிறார் சீனிவாச ராஜா.“முதன் முதலாக ஏ2பி உணவகம், பாண்டிச்சேரியில் 2000 ம் ஆண்டு தொடங்கப்பட்டது.”

https://www.theweekendleader.com/admin/upload/05-01-19-02ab5.jpg

அம்பத்தூரில் உள்ள அடையாறு ஆனந்தபவனின் மையப்படுத்தப்பட்ட கிச்சனில் ஊழியர்கள்.


சீனிவாசா ஸ்வீட் கடையுடன் அவர்கள் குடும்பம் நின்று இருக்கலாம்.  ஆனால், 1979-ம் ஆண்டு பெங்களூருவில் நடைபெற்ற தமிழர்களுக்கு எதிரான வன்முறையில் அவர்களது தொழில் பாதிக்கப்பட்டது. எனவே, அவர்களது குடும்பம் சென்னைக்கு இடம் பெயர்ந்தது. பெங்களூரு கடையை கவனித்துக் கொள்ளும்படி சீனிவாசா ராஜாவிடம் விட்டு விட்டுச் சென்றனர்.

1979-ம் ஆண்டில் திருப்பதி ராஜா, அவரது மூத்த மகன் கே.டி.வெங்கடேசன் இருவரும் சென்னையில் வண்ணாரப்பேட்டைப் பகுதியில் ஸ்ரீஆனந்தபவன் என்ற பெயரில் முதல் கடையைத் தொடங்கினர். சீனிவாச ராஜா 1988-ம் ஆண்டு பெங்களூரில் உள்ள கடையை மூடிவிட்டு, சென்னையில் தன் தந்தை மற்றும் சகோதரருடன் இணைந்து கொண்டார்.

அவர்கள் சென்னை அடையாறில் 1988-ல் இரண்டாவது கடையைத் தொடங்கினர். அதன் பின்னர் அவர்கள் சீராக வளர்ச்சி அடைந்தனர். ஸ்ரீஆனந்தபவன், அடையாறு ஆனந்தபவன் ஆக மாறியது. 1992-ல் புரசைவாக்கத்தில் மூன்றாவது கடையைத் தொடங்கினர். அதனைத் தொடர்ந்து விரைவிலேயே அடுத்தடுத்து கடைகள் தொடங்கினர்.

“நாங்கள் புதிய வகையிலான இனிப்புகளை அறிமுகம் செய்தோம்,” என்று பகிர்ந்து கொள்கிறார் சீனிவாச ராஜா. எப்படி இந்த தொழிலில் இதர நிறுவனங்களில் இருந்து வித்தியாசப்படுகிறோம் என்றும் சொன்னார். “ராஜஸ்தான், பஞ்சாப் மற்றும் உ.பி மாநிலங்களில் இருந்து ஆட்களைக் கொண்டு வந்து, அந்த இடங்களின் பிரபலமான இனிப்பு வகைகளைச் செய்கிறோம். இங்கே அந்த இனிப்பு வகைகள் வாடிக்கையாளர்களிடம் பெரும் வரவேற்பை பெறுகின்றன,”

1994-ம் ஆண்டில் அவர்களின் ஆண்டு வருவாய் 100 கோடி ரூபாயைத் தாண்டியது. 2000-ம் ஆண்டில் சென்னையில் 20 கிளைகள்தொடங்கினர். 150 கோடி ரூபாய் ஆண்டு வருவாயை அடைந்தனர்.

“நாங்கள் வளர்ச்சி அடைவதற்காக ஏஜென்சி வழியைத் தேர்ந்தெடுக்கவில்லை,” என்கிறார் சீனிவாச ராஜா. அவர்களின் தொழில் முறைபற்றி விவரித்தார். “நாங்கள் எங்கள் சொந்த முதலீடுகளைச் செய்தோம். அல்லது எங்களிடம் கட்டடங்களைக் கொடுக்கும் நில உரிமையாளர்களிடம் (முன்பணம் அல்லது வாடகை இல்லை) வருவாயை பகிர்ந்து கொள்ளுதல் என்ற அடைப்படையில் ஒப்பந்தம் செய்கிறோம். தொழிலாளர்களையும், எங்கள் பொருட்களையும் முதலீடு செய்கிறோம்.”

140 கடைகளில் 15 கடைகள் வருவாய் பகிர்ந்து கொள்ளுதல் அடிப்படையில் உருவாக்கப்பட்டவை. பிற கடைகள் எல்லாம் நிறுவனத்தைச் சார்ந்தவை. 130 கடைகளில் நிறுவனத்துக்குச்சொந்தமாக ஐந்து கடைகள் உள்ளன. இதர கடைகள் எல்லாம் வாடகை கட்டடங்களில் செயல்பட்டு வருகின்றன. 

https://www.theweekendleader.com/admin/upload/05-01-19-02ab3.jpg

அடையாறு ஆனந்த பவனின் தலைவர்களுக்கு அருகே நிறுவனர் மற்றும் அவரது மனைவியின் மார்பளவு சிலைகள்.


2000-ம் ஆண்டில், உணவகத் தொழிலில் ஈடுபடுவது என்ற முக்கியமான முடிவு எடுத்தனர். அடையாறு ஆனந்தபவன் இனிப்புக்கடைகளிலேயே ஏ2பி உணவகங்களை அமைத்தனர். அது நிறுவனத்தின் உயர் நிலையை அடைவதற்கு முக்கியமாக உதவியதுடன், அவர்களின் கடைகளுக்கு மேலும் அதிகம்பேர் வந்தனர். பிராண்ட்டின் பெயர் மேலும் அதிகப்பேரிடம் சென்றடைந்தது.

தமிழகம், கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் 25 அடையாறு ஆனந்தபவன் கடைகள் உள்ளன. “இந்தியா முழுவதும் உள்ள அனைத்து தேசிய நெடுஞ்சாலைகளிலும் 200 கி.மீ-க்கு ஒன்று வீதம் எங்கள் கடைகள் இருக்க வேண்டும் என்பதே எங்களது இலக்கு,” என்றார் சீனிவாச ராஜா.

சென்னை(50 கடைகள்), பெங்களூரு (36 கடைகள்) என இரண்டு நகரங்களிலும் அடையாறு ஆனந்தபவன் அதிக கடைகளைக் கொண்டுள்ளது. இரண்டு நகரங்களிலும் தனித்தனியே மையப்படுத்தப்பட்ட கிச்சன் உள்ளது. அங்கே உணவு தயாரிக்கப்பட்டு, பல்வேறு கடைகளுக்கு விநியோகிக்கப்படுகிறது.

சென்னையில், அம்பத்தூரில் உள்ள கிச்சனில், ஒரு தொழிற்சாலை போல, மனிதர்களின் குறைவான பங்களிப்புடன்  அதிக அளவு தானியங்கி இயந்திரங்களின் மூலம் பெரும்பாலான இனிப்பு வகைகளை தயாரிக்கின்றனர்.

55 வயதான சீனிவாச ராஜா, பெரும் பணம் மற்றும் அதிக வசதிகளுடன் கூடிய வாழ்க்கையைத் துரத்திச்செல்வதை விடவும் வாழ்க்கை மேலானது என்பதை தாமதமாக உணர்ந்து கொண்டதாக்க் கூறுகிறார். “2015-ம் ஆண்டு சென்னை மழை வெள்ளத்தின் போது, வாழ்க்கை குறித்த எனது கருத்தில் மாற்றம் ஏற்பட்டது. சில மணி நேரம் மின்சாரம் ஏதும் இன்றி இருந்தோம். தரைத்தளத்தில் வெள்ள நீர் புகுந்து விட்டது. பாதுகாப்புக் கருதி, மின்சாரத்தை நிறுத்தி வைத்து விட்டோம்.”

அவர்களது ஊழியர்கள், ஒரு ஜெனரேட்டரை  உயரமான இடத்தில் பொருத்தி மின் இணைப்பு அளித்தபோது அவர் மனம் மாற்றம் கொண்டிருந்தது. “எங்களுக்கு உணவு தேவைப்பட்டபோது கிடைக்கவில்லை. அப்போதுதான், பணம் மட்டுமே எல்லாவற்றையும் செய்து விடாது என்பதை நான் படிப்பினையாக உணர்ந்தேன்,” என்கிறார் அவர் தன்னடக்கத்துடன். 

ஆரோக்கியமான உணவு வகைகளை சமைக்கும் ஒரு உலகப் புகழ்பெற்ற செஃப் ஆக இந்த தலைமுறையினர் அடையாளம் காணும் வகையில் தம் அடையாளத்தை விட்டுச் செல்ல வேண்டும் என்பதுதான் அவரது எதிர்காலத்திட்டமாக இருக்கிறது. “சத்துகள் நிறைந்த உணவு தயாரிப்பது குறித்து நான் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறேன். இது, உங்களுக்கு தேவையான புரோட்டின், மினரல்கள் மற்றும் ஓமேகா 3 போன்ற, ஆரோக்கியமான உடலுக்குத் தேவையானதைக் கொடுக்கும்,” என்கிற இவருக்கு பூஜா, பவித்ரா, பிரார்த்தனா ஆகிய மூன்று மகள்கள், ஒரு மகன் ஸ்ரீ விஷ்ணு உள்ளனர்.

https://www.theweekendleader.com/admin/upload/05-01-19-02ab6.jpg

கே.டி.சீனிவாச ராஜா, கே.டி.வெங்கடேசன் ஆகிய இரு சகோதரர்களும் தங்களுடைய மனைவிகள், சகோதரிகள், குழந்தைகள் மற்றும் குடும்பத்தினருடன்.


அவரது மூன்று குழந்தைகள் அவருடைய தொழிலில் சேர விரும்புகின்றனர். இளையவர், பிரார்த்தனா 12ம் வகுப்புப் படிக்கிறார். ராணுவத்தில் சேரும் ஆவலில் உள்ளார். அவருடைய சகோதரர் மகன் வி.விஷ்ணு சங்கர், ஏற்கனவே இந்த நிறுவனத்தில் இயக்குனராக இருக்கிறார். நிறுவனத்தின் தினசரி நடவடிக்கைகளில் ஈடுபாடு கொண்டுள்ளார்.

தம்முடைய வாழ்க்கையின் நோக்கமே, தினமும் படுக்கையில் இருந்து எழும்முன்பு, சொல்லும் எளிய நான்கு வரிகளில் தான் இருக்கிறது என்கிறார் சீனிவாச ராஜா. “நான் ஒரு நல்ல கணவனாக இருக்க வேண்டும், ஒரு நல்ல தந்தையாக, நிறுவனத்தின் ஒரு நல்ல உரிமையாளராக,  இந்த சமூகத்துக்கு உபயோகமான ஒரு குடிமகனாக இருக்க வேண்டும்.” நல்ல வேண்டுதல்!


 
 
 
 
 

அதிகம் படித்தவை

  • How did daily wager son become crorepati

    கனவுகளைக் கட்டுதல்

    தினக்கூலியின் மகனான விபி லோபோ கையில் 50 ரூபாயுடன் மங்களூர் அருகே உள்ள ஒரு கிராமத்திலிருந்து மும்பை வந்தவர். ஆறு ஆண்டுகளில் 75 கோடி ரூபாய் வர்த்தகம் செய்திருக்கும் நிறுவனத்தை அவர் இப்போது நடத்துகிறார். இது எப்படி? சோமா பானர்ஜி எழுதுகிறார்

  • The LED Magician of Rajkot

    ஒளிமயமான பாதை

    மாதம் ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் ரப்பர் ஸ்டாம்ப் விற்கும் நபராக இருந்தவர் ஜிதேந்திர ஜோஷி. இந்தியாவுக்கு எல்.இ.டி தொழில் நுட்பத்தை அறிமுகப்படுத்தியவர். இப்போது 8 கோடி ரூபாய் ஆண்டு வருவாய் தரும் எல்.இ.டி உற்பத்தியில் ஈடுபட்டு வருகிறார். மாசுமா பார்மால் ஜாரிவாலா எழுதும் கட்டுரை

  • Success story of indigo airlines

    உயரப் பறத்தல்

    விமானப்போக்குவரத்து துறை படுபாதாளத்தில் இருந்தபோது, தொழில் நேர்த்தியுடன் விமானப் போக்குவரத்து சேவையைத் தொடங்கிய ராகுல், ராகேஷ் இருவரும் இன்று இன்டிகோ என்ற உயரப்பறக்கும் விமான நிறுவனத்தின் உரிமையாளர்களாக இருக்கின்றனர். ஷெல்லி விஷ்வஜித் எழுதும் கட்டுரை

  • Mumbai couple's juice chain doing roaring business

    வெற்றியின் ஜூஸ்

    நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த காதலர்கள் அவர்கள். இணைந்து சொந்தமாக பல தொழில்கள் செய்து, இப்போது மும்பையில் பழச்சாறு விற்பனையில் கொடி கட்டிப் பறக்கிறார்கள். அவர்களின் சுவாரசியமான வெற்றிக்கதையைத் தருகிறார் பி சி வினோஜ்குமார்

  • Digital Success Story

    இணைந்த கைகள்

    நடுத்தரக் குடும்பங்களைச் சேர்ந்த ரோகித், விக்ரம் இருவரும் எம்.பி.ஏ., படிக்கும் போது நண்பர்கள் ஆனார்கள். இருவரும் சேர்ந்து டிஜிட்டல் சேவை நிறுவனத்தைத் தொடங்கினர். ஆரம்பத்தில் ஒரு லட்சம் ரூபாய் ஆண்டு வருவாய் ஈட்டியவர்கள் இன்று 12 கோடி ரூபாய் வருவாய் ஈட்டுகின்றனர். குர்விந்தர் சிங் எழுதும் கட்டுரை

  • Innovating mind

    ஆர்வத்தால் அடைந்த வெற்றி

    ஆர்வம் காரணமாக எலெக்ட்ரானிக் சாதனங்களை பழுது நீக்க கற்றுக் கொண்ட கூடலிங்கம், அந்த திறனை முதலீடாகக் கொண்டு காற்று சுத்திகரிக்கும் சாதனத்தை தயாரிக்கத் தொடங்கினார். இன்றைக்கு வெற்றிகரமாக கொரோனா தொற்றை தடுக்கும் சாதனத்தை தயாரிக்கும் பணியில் இறங்கி உள்ளார். சோஃபியா டேனிஷ் கான் எழுதும் கட்டுரை