சுற்றுச்சூழலுக்கும் பங்களிப்பு; வருவாயும் அதிகரிப்பு! வழிகாட்டுகிறார் டெல்லியில் வாழும் ஜெய்!

சோபியா டேனிஷ் கான் Vol 2 Issue 31 புதுடெல்லி 28-Jul-2018

1995-ம் ஆண்டில் அவர், 750 ரூபாய்க்கு ஒரு சைக்கிள் வாங்கி, தமது தொழிலைத் தொடங்கினார். இதுதான் அவரது ஒரே ஒரு முதலீடு. இன்றைக்கு அவரது தொழில் நிறுவனத்தின் மாத வருவாய் 11 லட்சம் ரூபாய். எனினும், பணம் சம்பாதிப்பதை விடவும், அவரது பணி முக்கியத்துவம் வாய்ந்தது.

ஜெய் பிரகாஷ் சவுத்ரியும் (அவருடன் பணியாற்றுகிறவர்களுக்கு  ‘சாந்து சார்’), அவருடன் பணியாற்றும் சில புரட்சிகர சிந்தனை கொண்டவர்களும், இந்த உலகத்தை கொஞ்சம், கொஞ்சமாக மாற்றி விடலாம் என்று நம்புகிறார்கள்.

http://www.tamil.theweekendleader.com/backend/web/article/images/01-03-18-01jp1.jpg

சாஃபாய் சேனா(Safai Sena) சுமார் 12000 குப்பை பொறுக்கும் தொழிலாளிகளுக்கு  ஆதரவளிக்கிறது. அவர்களிடம் இருந்து பழைய கழிவுப்  பொருட்களை வாங்கிக் கொள்கிறது. அவற்றைத் தரம்பிரித்து மறு சுழற்சி செய்யும் நிறுவனங்களிடம் விற்று விடுகின்றனர். (புகைப்படங்கள்: நவ்நிதா)


டெல்லியில் கடந்த 24 ஆண்டுகளாக வசித்து வரும் அவர், சுற்றுச்சூழலை பாதுகாக்கச் சிறப்பான பணியைச் செய்து வருகிறார். அதே நேரத்தில் தமக்காகச் சம்பாதிக்கவும் செய்கிறார்.

42 வயதான ஜெய், சாஃபாய் சேனாவை உருவாக்கினார். உள்ளூரில் உள்ள குப்பைகள் மற்றும் பழைய கழிவுப் பொருட்கள் சேகரிப்பவர்களுக்கான  அமைப்பு இது. வீடுகள் மற்றும் அலுவலகங்களில் சேரும் குப்பைகளை வாங்கித் தரம்பிரித்து, மறுசுழற்சிக்காக விற்பனை செய்கின்றனர்.

சாஃபாய் சேனா, முக்கியமான குப்பை கொட்டும் இடங்களில் இருந்து குப்பைகளைச் சேகரித்து, பிளாஸ்டிக் பொருட்களை பிரித்து மறுசுழற்சி செய்யும் தொழிற்சாலைக்கு அனுப்புவார்கள். மக்கும் கழிவுகளை உரமாக மாற்றி விற்பனை செய்கின்றனர்.

பீகார் மாநிலம் முன்ஜரில் 1976-ம் ஆண்டு மார்ச் 18-ம் தேதி பிறந்தவர் ஜெய். அவரது குடும்பத்தில் உள்ள ஐந்து மகன்களில் மூத்தவர். உள்ளூர் அரசுப் பள்ளியில் படித்தார். அங்குதான் கல்வி கட்டணம் அவர்களுக்கு ஏற்றதாக குறைவாக இருந்தது. அவரது குடும்பத்தில் அவரும், அவருடன் பிறந்த நான்கு பேரும்   எந்த வித கவலைகளும் இல்லாமல் சந்தோஷமாக இருந்தனர்.

 “நான் பத்தாம் வகுப்பு முடித்துத் தேர்வு எழுதிய பின்னர், விவசாயியான என் தந்தை ஒருவரால் மட்டும் என்னுடைய மேற்படிப்புக்கான செலவுகளையோ அல்லது உணவுக்கான செலவுகளையோ மற்றும் எங்களுடைய பெரிய குடும்பத்துக்கான இதர செலவுகளையோ செய்ய முடியாது என்பதை உணர்ந்தேன்,” என்கிறார் ஜெய். “எனவே, வேலைக்காக வெளியூர் செல்ல வேண்டும் என்று தீர்மானித்தேன். ஆனால், என் தாய் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தார். ஆனால், என் குடும்பத்துக்காகக் கூடுதல் வருவாய் ஈட்ட வேண்டும் என்பது எனக்குப் புரிந்தது.”

ரவி என்ற நண்பருடன், முன்ஜரில் இருந்து டெல்லிக்கு ரயில் ஏறினார் ஜெய். அவர்கள் கிராமத்தைச் சேர்ந்த ஒருவர், டெல்லி கன்னாட்பிளேஸ் பகுதியில் இருக்கிறார் என்பது அவர்கள் இருவருக்கும் தெரியும். ஆனால், கன்னாட்பிளேஸில் எந்த இடத்தில் இருக்கிறார் என்பது பற்றி அவர்களுக்குத் தெரியாது. டெல்லியில் உள்ள புகழ் பெற்ற காட்டேஜ் எம்போரியத்தில் பணியாற்றி வந்த அவரைத் தேடிப்பிடிக்க அவர்களுக்கு மூன்று நாட்கள் ஆனது. அவர்களிடம் பணம் ஏதும் இல்லை. எனவே அப்போது வரை அவர்கள் சாப்பிடக் கூட இல்லை.

http://www.tamil.theweekendleader.com/backend/web/article/images/01-03-18-01jp2.jpg

ஜெய்யிடம் 70 பேர் பணியாற்றுகின்றனர். அவர்களின் குழந்தைகளுக்கு சிந்தன்(Chintan)  என்கிற தன்னார்வ நிறுவனம் கல்வி அளித்து வருகிறது.


கன்னாட்பிளேஸ் பகுதியில், ஒருவர், அனுமன் கோவிலுக்கு எதிரே அமர்ந்து கொண்டு அங்கு வரும் பக்தர்களுக்கு மருதாணி போட்டு கொண்டு இருந்ததை இருவரும் பார்த்தனர். அந்த நபர், அவர்களுக்கு உணவும், தங்குவதற்கு இடமும் கொடுத்தார். அதே பகுதியில் இருந்த பழ விற்பனையாளர் ஒருவர் ஜெய்க்கு தினமும் 20 ரூபாய் சம்பளத்தில் உதவியாளர் வேலை தருவதாகக் கூறினார்.

இப்படித்தான் 1994-ம் ஆண்டு, ஜெய்யின் டெல்லி வாழ்க்கை தொடங்கியது. காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை பழக்கடையில் பணியாற்றினார். அதன் பின்னர், கூடுதல் சம்பாத்தியத்துக்காக நான்கு மணி நேரம் எம்போரியத்தில் கட்டடம் கட்டும் பணி செய்தார். எனவே சிறிது நேரம்தான் அவரால் தூங்க முடிந்தது.

மிகவும் கடினமாக உழைத்தபோதிலும், போதுமான அளவுக்கு அவரால் சம்பாதிக்க முடியவில்லை. எனவே, நம்பிக்கையிழந்த அவர், மூன்று மாதத்தில் தமது சொந்த கிராமத்துக்கேத் திரும்பி விட்டார். “ஆனால், இந்த முறை உரிய முறையில் பணியாற்ற வேண்டும் என்ற மறு தீர்மானத்துடன், மீண்டும் ஒரு மாதத்தில் டெல்லி திரும்பினேன்,” என்கிறார் ஜெய். “நண்பர்கள் மூலம், கோலே சந்தையில் உள்ள ராஜா பஜாரில் ஒரு கபாடி கிடங்கு (பழைய கழிவுப்  பொருட்கள் கிடங்கி) உரிமையாளரை நான் சந்தித்தேன். அவருக்காக வேலை பார்த்தேன்.”

பகலில் பழைய கழிவுப் பொருட்களை சேகரிப்பார். இரவில், வாட்ச்மேன் ஆக பணியாற்றினார். மாதம் 3000ரூபாய் சம்பாதித்தார். “அப்போது பருவமழைகாலம். கூரை வழியே மழை நீர் ஒழுகிக் கொண்டே இருக்கும். நான் இன்னொரு ஓரத்தில் இரவெல்லாம் உட்கார்ந்திருப்பேன்,” என்று நினைவு கூர்கிறார்.

ஆறுமாதங்களில், இரண்டு வேலைகளில் இருந்தும் விலகி விட்டார். சொந்தமாகத் தொழில் தொடங்கினார். பழைய கழிவுப் பொருட்கள் தொழிலில் உள்ள பிரச்னைகளைப் புரிந்து கொண்டதில் இருந்து, தனியாகத் தொழில் செய்வது எனத் தீர்மானித்தார். தனியாகத் தொழிலில் இறங்குவதற்கு பல்வேறு காரணங்கள் இருந்தன.

அது குறித்து விவரிக்கிறார். “முதலாவதாக, என்னிடம் பணம் இல்லை. இந்த வேலைக்கு முதலீடு தேவைப்படவில்லை. இரண்டாவதாக, எந்த ஒரு அதிகாரியிடமும் இதற்காக அனுமதி வாங்க வேண்டிய தேவை இல்லை. முதலில் தீர்மானித்த உடனே, வேலையில் இறங்கிவிட்டேன்.”

கொஞ்சம்போல சேர்த்துவைத்திருந்த பணத்தில், சைக்கிள் ஒன்றை அவர் வாங்கினார். பழைய கழிவுப் பொருட்களை சேகரிப்பதற்காக வீடு வீடாகச் சென்றார். மக்கள் தங்கள் வீடுகளில் இடத்தை அடைத்துக் கொண்டிருக்கும் தேவையற்றப் பொருட்கள் அகற்றப்படுவதாக நினைத்தனர். அத்துடன், அவற்றைக் குப்பையில் போடுவதற்குப் பதில் கொஞ்சம் பணமும் கிடைத்தது, மக்களுக்கு மகிழ்ச்சியாக இருந்தது. பழைய கழிவுப் பொருட்களில் இருந்து நல்ல சம்பாத்தியம் கிடைத்தது. அதை ஒரு டீலரிடம் ஜெய் விற்றார்.

தினமும் 150 ரூபாய்க்கும் அதிகமாக வருமானம் கிடைக்கத் தொடங்கியது. விரைவிலேயே நான்கு நண்பர்கள் சேர்ந்தனர். ராஜா பஜாரில் சொந்தமாக  கிடங்கு ஒன்றை திறந்தனர்.

“நான்கு பங்குதாரர்களுடன் இணைந்து பணியாற்றத் தொடங்கினேன். அவர்கள் பல்வேறு பகுதிகளுக்குச் செல்வார்கள். பழைய கழிவுப் பொருட்களை வாங்கி வருவார்கள். இறுதியாக நாங்கள் மொத்தமாக அதனை விற்பனை செய்தோம்,” என்று விவரிக்கிறார் ஜெய். “நாங்கள் ஒரு நிறுவனமாக வளர்ச்சி அடையத் தொடங்கினோம். எங்களுக்கு நல்ல லாபம் கிடைத்தது.”

வாழ்க்கை என்பது ஜெய்-க்கு ஒரு ரோஜா படுக்கையாக இல்லை. 1996-97ம் ஆண்டில் டெல்லி மாநகராட்சி அதிகாரிகள் அவ்வப்போது  அவரை இடையூறு செய்ததால், நன்றாகச் சென்று கொண்டிருந்த ஜெய்யின் தொழில் பாதிப்பு அடையத் தொடங்கியது. அதே நேரத்தில் போலீஸாரும், அடிக்கடி அவரைத் தொந்தரவு செய்ய ஆரம்பித்தனர். அமைதியாகத் தொழில் செய்ய வேண்டும் என்றால் லஞ்சம் கொடுக்க வேண்டும் என்று இரண்டு தரப்பினரும் கேட்டனர்.

http://www.tamil.theweekendleader.com/backend/web/article/images/01-03-18-01jp5.jpg

ஜெய்யின் நிறுவனம், மறுசுழற்சியில் ஈடுபடுவதால், 962133 மெட்ரிக் டன் அளவுக்கான பசுமைக்குடில் வாயுக்கள் வெளியேறுவது குறைந்ததாகக் கணக்கிடப்பட்டுள்ளது


சிந்தன் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தை நடத்தி வந்த பாரதி சதுர்வேதி என்ற பெண்ணிடம் அறிமுகம் ஏற்பட்டது. அதுவே அவரது நிலையை மாற்றியது. 1999-ம் ஆண்டு பாரதி சதுர்வேதி, குப்பை சேகரிப்பாளர்கள் குறித்து ஒரு புள்ளி விவரம் சேகரித்தபோது ஏற்பட்ட அறிமுகம். இவர்தான் ஜெய்யின் குருவாக, கவுரவ ஆலோசகராக எல்லாம் கலந்த ஒருவராக இருக்கிறார். பாரதி, தமது வாழ்க்கையை மாற்றியதாக ஜெய் சொல்கிறார்.

“என்னுடைய வாழ்க்கை நிலையை அவர் மாற்றினார். எந்த பக்கம் நான் செல்ல வேண்டும் என்றும் அவர் அறிவுரை கூறினார்,” என்கிறார் ஜெய்.

சிந்தன் எடுத்த புள்ளிவிவரம், பழைய கழிவுப் பொருட்கள் மற்றும் குப்பை சேகரிப்பாளர்கள் சுற்றுச்சூழலுக்கு எவ்வாறு உதவிகரமாக இருக்கிறார்கள் என்பதையும், டெல்லியை தேவையற்ற பொருட்கள் அற்ற, பிளாஸ்டிக் இல்லாத சூழலை ஏற்படுத்த முயற்சிக்கிறார்கள் என்பதையும் வெளிப்படுத்தியது.

1999 ஆண்டு பழைய கழிவுப்பொருட்கள் சேகரிப்பாளர்கள் வர்த்தகம் செய்யும் இடங்களில் சிந்தன் நிறுவனம் பயிற்சி முகாம்களை நடத்தியது. தங்கள் உரிமைகள் மற்றும் அவர்கள் எவ்வாறு அதிகமாக சம்பாதிக்கலாம் என்றும், துன்புறுத்தும் அதிகாரிகளை எப்படி சமாளிப்பது என்பது குறித்தும் எடுத்துக் கூறப்பட்டது.

ஜெய்யின் பெரிய நகர்வு 2009-ஆம் ஆண்டு நடந்தது. ஜெ.பி. என்ஜினியரிங் என்ற பெயரில் தமது நிறுவனத்தை ஜெய் பதிவு செய்தார். அவர்தான் அந்த நிறுவனத்தின் உரிமையாளர்.

உள்ளூர் குப்பை சேகரிப்பாளர்கள், கிடங்கு உரிமையாளர்கள், வர்த்தகர்கள், மறுசுழற்சி செய்யும் நிறுவனங்கள் ஆகியவை சாஃபாய் சேனாவின் உறுப்பினர்களாக உள்ளனர். இன்றைக்கு டெல்லி மற்றும் காசியாபாத்தில் 12000 பேர் உறுப்பினர்களாக இருக்கின்றனர். அது ஏற்படுத்திய தாக்கம் அளவிடமுடியாததாக இருக்கிறது.

காசியாபாத்தில் உள்ள போபுராவில் இருக்கும் ஜெய்யின், பெரிய கிடங்குக்கு அவர்கள் குப்பைகளைக் கொண்டு வருவார்கள். அங்கு இருக்கும் 70 ஊழியர்கள் குப்பையை தரம்பிரிப்பார்கள். பின்னர் அதனை மறுசுழற்சி செய்யும் நிறுவனங்களுக்கு விற்பனை செய்வார்கள். அல் மேதேப் (Al Mehtab) என்ற அவர்களின் மறுசுழற்சி நிறுவனத்தில் டன் கணக்கிலான  பிளாஸ்டிக் கழிவுகளை மறுசுழற்சி செய்வார்கள்.

ஜெய்யின் நிறுவனம், சிந்தன் இருவரும் பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் நோக்குடனும் செயல்படுகின்றனர். அவர்கள் நிறுவனங்களில் பணியாற்றுவோரில் 40 சதவிகிதம் பேர் பெண்கள்.  ஊழியர்களின் குழந்தைகளுக்கு சிந்தன் இலவச கல்வி அளிக்கிறது. அந்தக் குழந்தைகளுக்கு நல்ல பள்ளிகளில் உரிய கல்வி கிடைப்பதையும் அவர்கள் உறுதி செய்கின்றனர்.

டெல்லி மாநகராட்சிக்குச் சொந்தமான குப்பைக் கொட்டும் இடங்களில் மோசமான வாடை அடிக்கிறது. “முற்றிலும் குப்பைகள் அற்ற கொள்கையை டெல்லி மாநகராட்சி கடைபிடித்தால், இதுபோன்ற குப்பை கொட்டும் இடங்களைத் தவிர்க்கலாம்,”என்கிறார் ஜெய். “வீடுகள் எங்கு இருக்கின்றனவோ அங்கேயே குப்பைகளை நிர்வகிக்கும் வகையில் உரக்குழிகளை அமைக்கலாம். செடிகளுக்குத் தேவையான உரங்களைத் தயாரிக்கலாம். இதர கழிவுகளை மறுசுழற்சி நிறுவனங்களுக்கு அனுப்பலாம்.”

ஒரு டன் குப்பையில் இருந்து ஜெ.பி நிறுவனம் 150 கிலோ உரம் தயாரிக்கிறது. இதனை தேவைப்படும் அலுவலகங்கள், வீடுகளுக்கு விற்பனை செய்கின்றனர். அவர்கள் டெல்லியின் 20 சதவிகித குப்பைகளை மட்டும்தான் கையாளுகின்றனர். ஆனால், ஏற்கனவே அவர்கள் 962133 மெட்ரிக் டன் அளவு பசுமைக் குடில் வாயுக்கள் வெளியேறுவதை குறைத்திருக்கின்றனர்.

இந்த ஒட்டுமொத்த செயல்பாடுகளில் இருந்து நிறுவனத்துக்கு மாதம் தோறும் 11 லட்சம் ரூபாய் வருவாய் கிடைக்கிறது. “இந்தப் பணத்தைக் கொண்டு ஊழியர்களுக்கு சம்பளம், வாடகை, பில்கள் ஆகியவற்றை செலுத்துகிறோம். இது என்னுடைய லாபம் மட்டும் அல்ல,” என்று விளக்கம் அளிக்கிறார் ஜெய்.

ஜெய்யின் சம்பளம் 40,000 ரூபாய். லாபமும் இல்லை, நஷ்டமும் இல்லை என்ற அடிப்படையில் அவரது நிறுவனம் இதுவரையிலும் இயங்கி வருகிறது.

http://www.tamil.theweekendleader.com/backend/web/article/images/01-03-18-01jp3.jpg

இந்த உரம், மக்கும்குப்பையில் இருந்து தயாரிக்கப்படுகிறது. சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது.


இப்போது ஜெய்யும், சிந்தன் தன்னார்வ நிறுவனத்தின் உறுப்பினர்களும் இணைந்து பள்ளிகள், குடியிருப்போர் நலசங்கங்களில் பயிற்சி முகாம்களை நடத்துகின்றனர். குப்பைகள் அற்ற முறையில் வாழ்வது குறித்து பயிற்சிகளை முன்னெடுக்கின்றனர். வீட்டில் குப்பைகளைக் கொண்டு உரம் தயாரிப்பது எப்படி சாத்தியமாகிறது என்பதை விளக்குகின்றனர்.

பிளாஸ்டிக் இல்லாத எதிர்காலத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற லட்சத்தியத்துடன் ஜெய் இருக்கிறார். மயூர் விஹார் அருகே கோட்லாவில் மனைவியுடன் அவர் வசிக்கிறார். தம்முடைய சொந்த கிராமத்தில் பள்ளிகள், கல்லூரிகள் கட்டி இலவசமாக கல்வி அளிக்க வேண்டும் என்று அவர் விரும்புகிறார். அவரது 11 வயது மகள், 9 வயது மகன் இருவரும் டெல்லியில் உள்ள நல்ல பள்ளிகளில் படிக்கின்றனர். 

ஒரே ஒரு விஷயம்தான் அவரைக் கோபப்படுத்துகிறது. “மக்கள் எங்களுக்கு மரியாதை அளிப்பதில்லை,” என்கிறார் ஜெய். “மக்கள் எங்களுக்கு உரிய மரியாதை அளிக்க வேண்டும் என்று விரும்புகிறேன். நாங்கள் பணத்துக்காக மற்றும் வேலை பார்க்கவில்லை. சுற்றுச்சூழல் நலனுக்காகவும்தான் பணியாற்றுகிறோம்.”

அதிகம் படித்தவை

  • Monday, April 06, 2020