கோடிகளை அள்ளிக்கொடுத்த ஆரோக்கிய உணவு தயாரிப்பு
14-Jan-2025
By பி சி வினோஜ் குமார்
சென்னை
இவர், சிறுவயதில் நடுத்தரக் குடும்பச் சூழலில் வளர்ந்தார். மாதம் 350 ரூபாய் மாதச் சம்பளத்தில் மருந்து தயாரிப்பு நிறுவனம் ஒன்றின் விற்பனைப் பிரதிநிதியாக பணியைத் தொடங்கினார்.
ஆனால், இதில் சுவாரஸ்யம் என்னவென்றால், 48 கோடி ரூபாய் வருவாய் தரும் ஆரோக்கிய உணவு நிறுவனத்தின் தலைவராக ஒரு உயர் நிலையை அடைந்தபின்னரும், தொடர்ந்து அவர் ஒரு எளிய வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார். இந்த நிதி ஆண்டில் அவரது நிறுவனம் 100 கோடி ரூபாய்க்கும் நெருக்கமாக வருவாய் ஈட்டி இருக்கிறது.
|
ஐ.எஸ்.ஏ.கே.நாசர் ஒரு மருத்து நிறுவனத்தின் விற்பனைப் பிரநிதியாக தமது பணியைத் தொடங்கினார். மன்னா பிராண்ட் ஆரோக்கிய உணவு தயாரிக்கும் சதர்ன் ஹெல்த் புஃட்ஸ் நிறுவனத்தின் நிறுவனர். (புகைப்படங்கள்; ஹெச்.கே.ராஜசேகர்)
|
“நான் ஒரு உயர்ந்த இடத்தில் இருக்கலாம், தவிர சொந்தமாக ஒரு காரும் இருக்கிறது.ஆனால், அதற்காக நான் ஐந்து நட்சத்திர உணவு விடுதியில் சாப்பிடுவதை விரும்புவதில்லை. நான் ஒரு எளிய வாழ்க்கை வாழ்வதையே விரும்புகிறேன். சாதாரண விடுதிகளில் தங்குவேன்,” என்கிறார் 55 வயதாகும் நாசர். இவர், மன்னா பிராண்ட் என்ற பெயரில் ஆரோக்கிய உணவுப் பொருட்களை தயாரிக்கும் சென்னையைச் சேர்ந்த சதர்ன் ஹெல்த் புஃட்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக இருக்கிறார்.
புகழ் பெற்ற சரவணபவன் ரெஸ்டாரண்ட்தான் தாம் உணவு உண்ணும் நல்ல உணவகம் என்று அவர் மதிப்பிடுகிறார். எனினும், இப்போது அந்த உணவகம் பெரும் பணக்காரர்களுக்கான ரெஸ்டாரண்ட்களில் ஒன்றாக இருப்பதாக அவர் உணர்கிறார்.
“சங்கீதா அல்லது அஞ்சப்பர் ரெஸ்ட்ராண்ட்டில் சாப்பிடுவதை நான் வசதியாக உணர்கிறேன்,” எனும் நாசர், கருத்தரங்குகளில் பங்கேற்கச் செல்லும் போது அல்லது தேவைப்படும் சூழல்களில் ஸ்டார் ஹோட்டல்களிலும் என்ன உணவுகள் இருக்கின்றன என்று ஒரு கை பார்ப்பதுண்டு என்றும் சொல்கிறார்.
நாசர் பணத்தின் மதிப்பை புரிந்திருக்கிறார். 1980-களில், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ., படிப்பில் சேர்ந்த மூன்று மாதத்தில் விலகத் தீர்மானிக்கிறார். தமது குடும்பத்தின் பொருளாதாரச் சூழலில் தாம் மேலும் ஒரு பளுவாக இருக்கக்கூடாது என்று நினைக்கிறார்.
|
எளியவாழ்க்கையை முன்னெடுத்துச் செல்வதையே நாசர் விரும்புகிறார்
|
“நான் ஹாஸ்டலில் தங்கியிருந்து படித்தேன். என்னுடைய கட்டணத்தைச் செலுத்துவதற்கு என் தந்தை மிகவும் சிரமப்பட்டார். வார்த்தைகளால் அந்த கஷ்டத்தை அவர் வெளிப்படுத்தியதில்லை. எனினும், எனக்குள் நான் அதனை உணர்ந்தேன். ஒரே நேரத்தில் அவரால் 6 குழந்தைகளையும் பணம் செலவழித்துப் படிக்க வைக்க முடியவில்லை,” என்கிறார் நாசர். திருநெல்வேலியில் உள்ள எம்.டி.டீ கல்லூரியில் இயற்பியலில் இளங்கலைப்பட்டம் பெற்றுள்ள நாசர், தமது குடும்பத்தின் இரண்டாவது குழந்தையாகப் பிறந்தவர்.
தென்தமிழகத்தில் உள்ள திருநெல்வேலியைச் சேர்ந்த நாசர், நடுத்தர வகுப்புக்கும் கீழே உள்ள குடும்பத்தில் பிறந்தவர். அவருடைய தாய்,தந்தை இருவரும் பள்ளி ஆசிரியர்கள்.
எம்.பி.ஏ., படிப்பில் இருந்து விலக வேண்டும் என்று மனதில் தீர்மானித்துக் கொண்ட நாசர், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இருந்து கோயம்புத்தூர் சென்றார். அங்கு, அப்போதுதான் ஹோட்டல் ஒன்றில் ரிஷப்ஷன் மேனேஜராக சேர்ந்திருந்த தனது நண்பரைப் பார்க்கச் சென்றார். இந்த விஷயத்தை அவர், தம் பெற்றோரிடம் கூடச் சொல்லவில்லை.
ஏதோ ஒரு விதிதான் அவரை அந்த ஹோட்டலுக்கு அழைத்துச் சென்றது என்று சொல்ல வேண்டும். அந்த ஹோட்டலில் டேப்லெட்ஸ் இந்தியா என்ற மருந்து தயாரிப்பு நிறுவனம், மெடிக்கல் ரெப்பரசன்டேட்டிவ் வேலைக்கு ஆட்கள் நியமிப்பதற்கான உடனடி ஆட்தேர்வை நடத்திக்கொண்டிருந்தது. அந்த நேர்முகத்தேர்வுக்காக பெரும் எண்ணிக்கையிலானவர்கள் அங்கு வந்திருந்தனர்.
அந்த நேர்முகத்தேர்வில் பங்கேற்று தமது அதிர்ஷ்டத்தைப் பரிசோதிக்க நாசர் திட்டமிட்டார். “நான் எந்த ஒரு சான்றிதழையும் என்னுடன் எடுத்துச் செல்லவில்லை. அவர்கள் ஒரு விண்ணப்பம் கொடுத்தனர். அதை பூர்த்தி செய்து கொடுத்து, வெறுமனே விண்ணப்பித்தேன். பின்னர் நேர்முகத்தேர்வில் பங்கேற்றேன். எனக்கு அந்த நிறுவனத்தில் வேலை கிடைத்தது,” என்றார் நாசர்.
இந்த வேலையில்தான் சேர வேண்டும் என்ற குறிக்கோளுடன் எல்லாம் நாசர் இருக்கவில்லை. முதலில் கிடைத்த வேலையில் சேர்ந்து விட்டார்.
10-ம் வகுப்பு இறுதித் தேர்வில் பள்ளியில் முதலாவதாக வந்தார். பள்ளியில் மாணவர் தலைவராகவும் இருந்தார். கல்லூரி மாணவர் யூனியன் தலைவராகவும் இருந்திருக்கிறார். எப்போதுமே அவர் பிறரின் கவனத்தை ஈர்ப்பதில் வல்லவராக இருந்தார். எனவே விற்பனைப் பிரதிநிதி வேலையை மிகவும் விரும்பினார்.
“விற்பனைப் பிரதிநிதியாகத்தான் ஒருவர் முன்னேற முடியும். திறமையையும் ஒருவர் வெளிப்படுத்த முடியும். இது ஒரு அற்புதமான அனுபவம். பல வழிகளில் நாம் எல்லோருமே விற்பனை பிரதிநிதிகள்தான். நம் நோக்கங்கள் மற்றும் யோசனைகளை நம் குடும்பத்துக்கு உள்ளேயே நாம் விற்றுக்கொண்டுதான் இருக்கிறோம்,” என்று உறுதிபடக் கூறுகிறார்.
இயல்பில் நாசர், அதீத உள்ளுணர்வு கொண்டவர். இது அவரது வலிமையாக இருக்கிறது. அந்த வலிமை அவரது தொழில் முறையில் நிரூபிக்கப்பட்டிருக்கிறது.
“இயல்பிலேயே நான் ஒரு சுறுசுறுப்பான அதி தீவிர நபராக இருக்கிறேன்,” என்று தன்னைப் பற்றிய மதிப்பீட்டை ஏற்றுக் கொள்கிறார்.
|
வளமான எதிர்காலம்; ஆர்கானிக், இயற்கை உணவுப் பொருட்கள் என்ற வகையில் மன்னா உற்பத்திப்பொருட்களுக்கு, ஆதரவான ஒரு சூழல் இருக்கிறது. எங்கள் பொருட்களில் எந்த ஒரு பதப்படுத்தும்பொருட்களோ அல்லது எந்த ஒரு செயற்கை வண்ணங்களோ இல்லை.
|
நாசர், 1983-ல் டேப்லெட்ஸ் இந்தியா நிறுவனத்தில் கோயம்புத்தூரில் விற்பனைப் பிரதிநிதியாகப் பணியில் சேர்ந்தார். அதற்கு அடுத்த ஆண்டு, பதவி உயர்வு கொடுக்கப்பட்டு கேரளமாநிலம் எர்ணாகுளத்தில் பணி அமர்த்தப்பட்டார்.
1988-ம் ஆண்டு அந்தப் பணியில் இருந்து விலகியவர், ஹேலியோஸ் பார்மாசூட்டிக்கல்ஸ் நிறுவனத்தில் தமிழகத்தின் விற்பனைப்பிரிவு தலைவராக மதுரையில் பணியில் சேர்ந்தார்.
“அந்த காலகட்டத்தில் என் தந்தைக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. எனவே, அவரைக் கவனித்துக் கொள்ளவேண்டி இருந்தது. இதன்காரணமாக, மதுரையில் இருந்து பணியாற்றும் வகையில் ஒரு புதிய வேலையைத் தேடி அதில் சேர்ந்தேன்,” என்றார் நாசர்.
1989-ல் நாசரின் தந்தை உயிரிழந்தார். அதன்பின்னர், அவர் சென்னையில் குடும்ப நண்பர் ஒருவர் நடத்தி வந்த சிமெண்ட் மற்றும் உர பைகள் தயாரிக்கும் நிறுவனத்தில் விற்பனைப் பிரிவு மேலாளராகப் பணியில் சேர்ந்தார். நாசருக்கு 50 ஆயிரம் ரூபாய் மாதச்சம்பளம் கிடைத்தது.
1990-களின் மத்தியில், சொந்தமாக ஒரு தொழில் தொடங்குவது குறித்து சிந்திக்கத் தொடங்கினார். பார்மாசூட்டிக்கல் பின்னணியில் பணியாற்றி இருந்ததால் அது சார்ந்த ஒரு நிறுவனம் தொடங்கலாம் என்று நாசர் நினைத்திருந்தார். உணவுத் தொழில் சார்ந்த நிறுவனத்தில் இருந்த அவரது நண்பரின் மனைவி, ஆரோக்கிய உணவு சார்ந்த தொழில் தொடங்கலாம் என்று நாசருக்கு அறிவுறுத்தினார்.
2000-ம் ஆண்டில் தம்முடைய சேமிப்பு, நிலங்கள், நகைகள் ஆகியவற்றை விற்றுக் கிடைத்த பணத்தில் சதர்ன் ஹெல்த் ஃபுட்ஸ் என்ற நிறுவனத்தைத் தொடங்கினார். .
40 லட்சம் ரூபாய் சொந்தப்பணம், நண்பர்கள், உறவினர்களிடம் கடனாக வாங்கிய பணம் எல்லாம் சேர்த்து, அந்த நிறுவனத்தில் ஒரு கோடி ரூபாய் முதலீடு செய்தார்.
40 ஊழியர்களுடன், சத்துமாவு என்று அழைக்கப்படும் மேம்படுத்தப்பட்ட மன்னா ஹெல்த் ஃபுட் நிறுவனத்தைத் தொடங்கினர். சத்துமாவு என்பது, தமிழகத்தில் பொதுவாக தானியங்களை கலந்து அரைத்து வீட்டிலேயே தயாரிக்கப்பட்டு குழந்தைகளுக்குத் தரப்படும் பாரம்பரிய உணவாக இருந்து வந்தது.
“முந்திரிபருப்பு,பாதம் போன்ற கொட்டை வகைகள், சிறுதானியங்கள், தானியங்கள், பருப்பு வகைகளைக் கொண்டதாக, முழுவதும் ஒரு இயற்கை உணவாக அது இருந்தது,” என்றார் நாசர். அவரது நிறுவனத்தின் 40 சதவிகித வருவாயை மன்னா ஹெல்த் ஃபுட் இன்றளவும் ஈட்டித் தருகிறது.
“முதல் நாளில் இருந்தே வெற்றிகரமாக விற்பனை நடந்தது. இந்தப் பொருளை விற்பதற்கு எந்தவிதப் பிரச்னையும் ஏற்படவில்லை. தேவைக்கு ஏற்ப இருப்பு இல்லாமலும், விநியோகிக்க முடியாமலும் விநியோகத்தில் சில சவால்களைச் சந்தித்தோம். எனினும், எங்களது தயாரிப்பு அதன்போக்கில் நன்றாக விற்பனை ஆனது.”
|
சந்தையில் 60 விதமான மன்னா தயாரிப்புகள் விற்கப்படுகின்றன.
|
தொடக்கத்தில் ஆறு மாதங்கள், சென்னையில் மட்டும் அவர்கள் விற்பனை செய்தனர். ஆறு மாதங்கள் கழித்து தங்கள் வணிகத்தில் மேலும் சில பொருட்களைச் சேர்த்தனர். தமிழகத்தின் இதர பகுதிகளுக்கும் தங்களது விற்பனையை விஸ்தரித்தனர். அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் அவர்களின் தயாரிப்புகள் அனைத்து தென்மாநிலங்களிலும் விற்பனை செய்யப்பட்டது.
“முதல் ஆண்டில் 45 லட்சம் ரூபாய் வருவாய் கிடைத்தது. மூன்று ஆண்டுகள் கழித்து, நாங்கள் மசாலாப் பொருட்கள் தயாரிக்கும் ஒரு பிரிவைத் தொடங்கினோம். இதற்கு அதிக உழைப்பை முதலீடாகக் கொடுக்க வேண்டும் என்று நாங்கள் உணர்ந்திருக்கவில்லை. இதனால், பெரும் இழப்பு ஏற்பட்டது. முடிவில் சராசரியாக நான்கு கோடி ரூபாய் கடனுடன் அந்த இழப்பு முடிவுக்கு வந்தது,” என்று தனது அனுபவத்தை நினைவு கூர்ந்தார்.
2004-ம் ஆண்டில் மசாலா தொழிலால் நாசர் பாதிக்கப்பட்டார். துபாயில் எண்ணெய் நிறுவனத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த, மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படித்திருந்த தமது இளைய சகோதரர் சையது சாஜனை அழைத்து வந்தார்.
நாசரை விட அவர் 15 வயது இளையவர், சாஜனை ஒரு மகனைப் போலவே நாசர் கருதினார். “என் தந்தை இறந்தபோது, அவர் 11 வயது சிறுவனாக இருந்தார். அது முதல், எங்களுடன் அவர் வசித்து வந்தார்,” என்றார்.
நாசரின் நிறுவனத்தில் இப்போது, சராசரியாக 500 பேர் பணியாற்றுகின்றனர். இழப்பில் இருந்து ஒரு சீரான நிலையுடன் நிறுவனம் மீளத் தொடங்கியது. இழப்பின் விரிசலில் கூட 2008-ம் ஆண்டு 9 கோடி ரூபாய் வருவாய் என்ற சாதனையை நாசரின் நிறுவனம் அடைந்தது.
“2012-ம் ஆண்டில் கடன் இல்லாத நிலையை அடைந்தோம். பின்னர் புதிய தயாரிப்புகளை அறிமுகம் செய்தோம்.நிறுவனத்தின் வளர்ச்சியில் கவனத்தைச் செலுத்தினோம். 2012-ம் ஆண்டில் 30 தயாரிப்புகளைக் கொண்டிருந்த நாங்கள், இன்றைக்கு 60-க்கும் அதிகமான தயாரிப்புகளுடன் சந்தையில் இருக்கிறோம்,” என்றார் நாசர்.
தென்மாநிலங்கள் தவிர, ஒடிசா, பீகார், சத்தீஸ்கர், மேற்கு வங்கம் மற்றும் வட கிழக்கு மாநிலங்களிலும் வணிகத்தை விரிவு படுத்தினர்.
கடந்த ஆண்டு, ஃபுல்க்ரூம் வென்சூர் இந்தியா என்ற நிறுவனம் நாசரின் நிறுவனத்தில் 30 கோடி ரூபாயை முதலீடு செய்து, 33 சதவிகிதப் பங்குகளை வாங்கியது. நாசரும், அவரது சகோதரும் மீதம் இருந்த பங்குகளை சம அளவில் வைத்திருந்தனர்.
இயற்கை உணவுக்குச் சாதகமான சூழல் நிலவுவதாக உணர்ந்திருக்கும் நாசர் , “செயற்கையாகத் தயாரிக்கப்படும் உணவுப் பொருட்களில் இருந்து மக்கள் விலகத் தொடங்கி விட்டனர். இயற்கை உணவுப் பொருட்கள், பாரம்பரிய உணவுப் பொருட்களை நோக்கி நகர்கின்றனர்.கடந்த 15 ஆண்டுகளில் நாங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறோமோ அதற்குப் பலனாக அடுத்து வரும் 10 ஆண்டுகளுக்கு தகுந்த வரவைப் பெற முடியும்,” என்று நம்பிக்கை தெரிவித்தார்.
மன்னா தயாரிப்புகள், கெட்டுப்போகாமல் இருப்பதற்கு எந்தவித ரசாயனமும் சேர்க்கப்படுவதில்லை. இதனால், அந்தத் தயாரிப்புகளின் காலாவதி காலம் குறைவுதான். எனினும் நாசர் அதற்காகக் கவலைப்படவில்லை.
|
நாசர், களத்தில் செயல்படும் நபராக இருக்கிறார். பல்வேறு நகரங்களுக்குச் சென்று, கள அளவில் சந்தை நிலவரம் எப்படி இருக்கிறது என்று ஆய்வு செய்து வருகிறார்.
|
“எங்களது போட்டியாளர்கள் அவர்களின் தயாரிப்புகளுக்கு (காலவதி காலம்)24 மாதங்கள் என்று சொல்லும்போது, நான் எங்களது பொருட்களுக்கு 12 மாதங்கள்தான் என்று சொல்வேன்.ஒரு நல்ல தயாரிப்பை விற்கிறேன் என்பதால் அதற்கு இன்னும் மதிப்புக் கூடுகிறது,” என்று காரணங்களை அடுக்குகிறார்.
நாசர், ரோட்டரி சங்கத்தில் உள்ளார். 2014-15-ம் ஆண்டில் சென்னை மற்றும் புறநகர் பகுதியின் ரோட்டரி மாவட்டம் 3230-ன் கவர்னராக இருந்தார்.
நாசர், தமது பயணத்தின்போது புத்தகங்கள் வாசிப்பதில் ஈடுபாடு கொண்டிருக்கிறார். பயணத்தின்போது அந்தந்த ஊர்களின் சந்தை நிலவரம் பற்றித் தெரிந்து கொள்ள களத்துக்கு தனது நிறுவனத்தின் விற்பனைப் பிரதிநிதிகளுடன் நாசரும் செல்வார்.
“என்னுடைய நிறுவனத்தின் விற்பனைப் பிரதிநிதிகள் கடைகளுக்குச் செல்லும் போது அவர்களுடன் பைக்கில் பின்னால் அமர்ந்து கொண்டு நானும் செல்வேன். இவ்வாறு செல்லும் போதுதான், களத்தில் உங்களால் மக்களிடம் இருந்து நிறையக் கற்றுக்கொள்ள முடியும்,” என்றார் நாசர்.
வாழ்க்கை வரலாறு, மேலாண்மை தொடர்பான புத்தகங்களைப் படிப்பதில் அவர் விருப்பம் கொண்டிருக்கிறார். குருசரண் சிங் எழுதிய நல்லவராக இருப்பதில் உள்ள பிரச்னைகள் (The difficulty of being good) என்ற புத்தகம் நாசருக்கு விருப்பமான புத்தகம். முடிவுகள் எடுப்பதற்கான நுண்ணறிவுத்திறனை இந்தப் புத்தகம் கொடுத்ததாக அவர் கூறுகிறார்.
“சுமார் 200 பேருக்காவது இந்தப் புத்தகத்தை நான் பரிசாகக் கொடுத்திருக்கிறேன்,” என்றார்.
நாசருக்கு திருமணம் ஆன இரண்டு மகள்கள் இருக்கின்றனர். அவர்களில் மூத்தவர், ஆர்கிடெக்ட் ஆக இருக்கிறார். இரண்டாவது மகள் ஒரு பல் மருத்துவராக இருக்கிறார்.
“என் மகள்கள், எதையும் தங்களது சொந்த விருப்பத்தின்படியே தேர்வு செய்கின்றனர். அவர்கள் ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்ததில்லை. மகள்கள் சொந்தக்காலில் நிற்பதற்கு என் மனைவி, வாழ்க்கை குறித்த அறிவுரைகளை அவர்களுக்கு வழங்கி இருக்கிறார்,” என்றார் நாசர்.
அதிகம் படித்தவை
-
கண்டெய்னரில் கண்ட வெற்றி!
இரண்டு முறை தொழில் தொடங்கி தோல்வியடைந்தார் இக்பால் தங்கல். இருப்பினும் முயற்சியில் தளராமல் மூன்றாவது முறையாக கண்டெய்னர் வீடுகள், அலுவலகங்கள் கட்டமைக்கும் தொழிலில் ஈடுபட்டு வெற்றி பெற்றுள்ளார். சோபியா டேனிஷ் கான் எழுதும் கட்டுரை
-
கனவுகளைக் கட்டுதல்
தினக்கூலியின் மகனான விபி லோபோ கையில் 50 ரூபாயுடன் மங்களூர் அருகே உள்ள ஒரு கிராமத்திலிருந்து மும்பை வந்தவர். ஆறு ஆண்டுகளில் 75 கோடி ரூபாய் வர்த்தகம் செய்திருக்கும் நிறுவனத்தை அவர் இப்போது நடத்துகிறார். இது எப்படி? சோமா பானர்ஜி எழுதுகிறார்
-
மொறுமொறு வெற்றி!
சிராக் குப்தா அமெரிக்காவுக்கு மேல்படிப்பு படிக்கச் சென்று அங்கேயே ஆண்டுக்கு ஒரு லட்சம் டாலர் தரும் வேலை பார்த்துக்கொண்டிருந்தவர். பின்னர் இந்தியா திரும்பி நண்பருடன் இணைந்து பாப்கார்ன் தயாரிக்கும் தொழிலை வெற்றிகரமாக செய்து வருகிறார். சோஃபியா டேனிஷ் கான் எழுதும் கட்டுரை
-
கம்யூனிஸ்ட் தொழிலதிபர்!
கன்னியாகுமரியில் ஒப்பந்த தொழிலாளராக இருந்தவர், டீக்கடை வைத்திருந்தவர் ஆகிய பின்னணியைக் கொண்டவர் மம்மது கோயா. இன்று 1500 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் செய்யும் விகேசி காலணிகள் நிறுவனத்தின் தலைவர். அவரது வெற்றிக்கதையை எழுதுகிறார் ரெனிதா ரவீந்திரன்
-
பிஸ்கட்டில் விளைந்த தங்கம்!
அவர் சாதாரண மளிகைக்கடைக்காரரின் மகன். குடும்பத்துக்குப் போதுமான அளவுக்கு வருமானம் இல்லை. இருந்தும் பெரிதாக யோசித்து பிஸ்கட் நிறுவனம் தொடங்கினார். இன்று 100 கோடிக்கும் மேல் விற்பனை செய்யும் ப்ரியா புட் ப்ராடக்டஸ் உருவான கதை இது. கட்டுரை: ஜி சிங்
-
பழையதில் பிறந்த புதிய ஐடியா!
டெல்லியில் பிறந்து வளர்ந்த சகோதரர்களான கவுரவ் கக்கர், அங்குர் கக்கர் இருவரும் பெருநிறுவனங்களில் அதிக சம்பளம் தரும் பணிகளில் இருந்தனர். வெளிநாட்டு தூதர்கள் நம் நாட்டில் இருந்து வெளியேறும் போது விற்பனை செய்யும் பழைய மரச்சாமான்களை வாங்கி விற்கும் தொழில் வாய்ப்பை பயன்படுத்தி இந்த சகோதரர்களும் முன்னேறினர். உஷா பிரசாத் எழுதும் கட்டுரை