Milky Mist

Saturday, 27 April 2024

ஒரு தாயின் தேடலில் பிறந்த நிறுவனம்! 100 கோடி வருவாயைத் தொடும் வெற்றிக்கதை!

27-Apr-2024 By சோபியா டேனிஷ்கான்
புதுடெல்லி

Posted 20 Oct 2020

தமது குழந்தைக்காக பராமரிப்புப் பொருட்கள் என்னென்ன இருக்கின்றன என்று தேடத்தொங்கினார் ஓர் அம்மா. அந்த தேடலானது அத்தாயை சொந்தமாக ஒரு ஸ்டார்ட் அப் நிறுவனம் தொடங்குவதை நோக்கி இட்டுச் சென்றது. மாலிகா தத்  சதானி என்கிற அந்த தாய் இப்போது  100 கோடி ரூபாய் ஆண்டு வருவாயைத் தொடும் நிறுவனமாக நான்காவது ஆண்டில் அதை மாற்றி உள்ளார்.

 தமது சொந்த முயற்சியில் ரூ.15 லட்சத்துடன் அமிஷி கன்ஸ்யூமர் டெக்னாலஜிஸ் பிரைவேட் லிமிடெட் என்ற ஸ்டார்ட் அப் நிறுவனத்தை மாலிகா  2016ஆம் ஆண்டு தொடங்கினார். பிரவசத்துக்குப்பின்னர் தாயின் உடலில் ஏற்படும் கோடுகளை அகற்றும்  க்ரீம், தாய்பால் கொடுப்பதற்கான பொருட்கள், புதிய தாய்மார்களுக்கான முக, முடி பாதுகாப்பு ஆகியவற்றுக்கான பொருட்களின் விற்பனையை த மாம்ஸ் கோ என்ற பிராண்ட் பெயரில் இந்திய சந்தையில் தொடங்கினார்.  


தமது இரண்டு மகள்களுடன் த மாம்ஸ் கோ நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி மாலிகா தத்  சதானி(புகைப்படங்கள்: சிறப்பு ஏற்பாடு


நிறுவனத்தின் முதலாம் ஆண்டில், ஆண்டு வருவாய் ரூ.2 லட்சமாக இருந்தது. அடுத்த ஆண்டு இது ரூ.24 லட்சமாக அதிகரித்தது. பின்னர் ஆண்டு தோறும் மூன்று மடங்கு என்ற அடிப்படையில் வருவாய் வளர்ச்சியடையத் தொடங்கியது.

இன்றைக்கு த மாம்ஸ் கோ, தாய்மார்கள் மற்றும் புதிதாக பிறக்கும் குழந்தைகளுக்கான தோல் பாதுகாப்பு பொருட்கள் உள்ளிட்ட 31 வகையான பொருட்களைத் தயாரிக்கிறது. டயாபர் அணிவதால் ஏற்படும் அரிப்பை தடுப்பதற்கான க்ரீம் விலை ரூ.199 ஆக இருக்கிறது. பல்வேறு வகைப் பொருட்கள் கொண்ட பரிசு பெட்டிகள் விலை ரூ.2499 .  

38 வயதாகும் மாலிகா தமது வாழ்க்கையை திரும்பிப் பார்க்கிறார்.  வாழ்க்கை உற்சாகமாக இருக்கிறது. ஒரு ராணுவ அதிகாரியின் மகளாக வளர்கிறார். வேலைக்கு சேருகிறார். எம்.பி.ஏ படிப்பதற்காக வேலையில் இடைவெளி விடுகிறார். பின்னர் மீண்டும் வேலைக்குச் செல்கிறார். திருமணம் செய்து கொள்கிறார். குழந்தையைப் பெற்று வளர்க்கிறார். இப்போது சுறுசுறுப்பான ஒரு தொழில்முனைவோராக ஆகி இருக்கிறார். ராணுவ அதிகாரியின் மகள் என்ற வகையில், நாடு முழுவதும் பல இடங்களில் அவர் வாழ்ந்திருக்கிறார்.

“என் தந்தைக்கு அடிக்கடி பணியிடமாற்றம் இருக்கக் கூடிய வேலை என்பதால், எங்களது குடும்பம், நாடு முழுவதும் பல்வேறு கலாசாரங்களின் தாக்கங்களில் வாழ்ந்தது,” என்று விவரிக்கிறார் மாலிகா. “ராஜஸ்தானில் உள்ள கோடாவில் சோஃபியா பள்ளியில் நான் 12-ம் வகுப்பு முடித்தேன். பின்னர் புனேவில் பொறியியல் படித்தேன். அப்போதுதான் நான் முதன்முதலாக வீட்டில் இருந்து படிப்பதற்காக தனியாகச் சென்று தங்கினேன். பட்டப்படிப்பு முடித்த உடன், டெல்லியில் உள்ள சிஎம்எஸ் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனத்தில் மைய மேலாளராக வேலை பார்த்தேன். அங்கு வருபவர்களை பயிற்சி மாணவர்களாக சேர்க்க வேண்டியதுதான் என்னுடைய பணியாக இருந்தது.”




மாலிகா 2017-ம் ஆண்டு மாம்ஸ் கோ குழந்தைகளுக்கான பொருட்களை தொடங்கினார்



 ஓர் ஆண்டு கழித்து மும்பையில் உள்ள வெலிங்கர் மேலாண்மை நிறுவனத்தில் எம்பிஏ படிப்பது என்று தீர்மானித்தார். எம்பிஏ முடித்த பின்னர் ஐசிஐசிஐ வங்கியில்  உதவி மேலாளராகப் பணியில் சேர்ந்தார். அகமதாபாத்தில் ஐஐஎம்-இல் எம்பிஏ பட்டம் பெற்ற மோஹித்தை 2008-ஆம் ஆண்டு  திருமணம் செய்து கொண்டார்.

மோஹித் அப்போது மெக்கின்சி நிறுவனத்தில் ஆலோசகராகப் பணியாற்றி வந்தார். ஒன்றரை வருடம் கழித்து மோஹித்துக்கு லண்டன் மெக்கின்சியில் வேலை கிடைத்தது. 2010-ம் ஆண்டு டிசம்பரில் அப்போது மாலிகா மூன்றுமாதம் கர்ப்பமாக இருந்தார். வேலையை விட்டு விலகியவர், கணவருடன் லண்டன் சென்றார்.

“எனக்கு அங்கே நிறைய நேரம் கிடைத்தது. உண்மையில் புதிய கலாசாரம் மற்றும் புதிய வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருந்தேன். எங்கள் நண்பர்களுக்குள் நாங்கள்தான் முதன் முதலில் குழந்தை பெற்ற தம்பதியாக இருந்தோம். சொந்த கலாசாரம் மதிப்புகளின் அடிப்படையில் முடிவுகளை எடுத்தோம். என் முதல் குழந்தையான மைராவை, மூன்று மாதத்தில் வகுப்பில் சேர்த்தோம். ஏன் நாங்கள் இதனை செய்கின்றோம் என்று என் குடும்பம் புரிந்து கொள்ளவில்லை. எனினும், எங்களுக்கே உரிய வழியில் மைராவை வளர்த்தோம்,” என்று தமது முதலாவது தாய்மை அனுபவத்தை விவரிக்கிறார் மாலிகா.

ஒரு வயது ஆன குழந்தையையும் உடன் அழைத்துக் கொண்டு 2012-ம் ஆண்டு இந்தியா திரும்பிய பின்னர், லண்டனில் உபயோகித்த குழந்தை பராமரிப்புப் பொருட்கள் ஏதும் இங்கு கிடைக்கவில்லை. வெளிநாட்டில் இருந்து அவர் அவைகளைப் பெற்று வந்தார்.

“எங்களிடம் ஒரு சிகப்பு நிற சூட்கேஸ் இருந்தது. பயணத்தின் போது என் கணவர் அதனை எடுத்துச் செல்வார். மோஹித் ஒவ்வொரு முறை வெளிநாட்டில் இருந்து திரும்பிய பின்னரும், அந்த சூட்கேஸ் நிறைய மைராவுக்கான பொருட்களாகவே இருக்கும். சில சமயம் அவருடைய பொருட்களை வைப்பதற்கு கூட இடம் இல்லாமல் போகும்,” என்று நினைவு கூர்கிறார் மாலிகா.



 கணவரும் நிறுவனத்தின் துணை நிறுவனருமான மோஹித் சதானியுடன் மாலிகா



  “ஈரப்பதமூட்டும் களிம்புகள், டயாபர்கள் மற்றும் துடைப்பான்கள் போன்ற குழந்தைகளுக்கான பொருட்களை வெளிநாடுகளில் இருந்து திரும்பி வரும் நண்பர்களிடம் வாங்கி வரச்சொன்னோம். ஆனால், நாளடைவில் இது சிரமமாக மாறியது. எனவே, இந்திய பிராண்ட்களுக்கு நான் மாறினேன்.”    

மாலிகா இரண்டாவது குழந்தைக்காக கருவுற்றிருந்தபோது, மூத்த மகளான மைராவுக்கு தோலில் அழற்சி காரணமாக அரிப்பு ஏற்பட்டது. குழந்தைகள் நல மருத்துவர்கள், ஒரு குறிப்பிட்ட களிம்பை உபயோகிக்கக் கூடாது என்று கூறினர். அதனால்தான் அந்த அழற்சி ஏற்படுகிறது என்றும் கூறினர்.

“மருத்துவர் என்னிடம் களிம்பை மாற்றும்படி சொன்னார்.  ஒரு சிறிய விஷயம் எப்படி என் குழந்தைக்கு மிகுந்த வேதனையை ஏற்படுத்தியது என்று தெரிந்தது. இதைத் தொடர்ந்து தோல் எவ்வாறு உடம்பின் பெரிய உறுப்பாக இருக்கிறது என்று நான் படித்தேன். மைராவுக்கு தோலின்மேல் ஏதேனும் உபயோகிக்க வேண்டும் என்றால், மிகவும் கவனமாக இருந்தேன். மோஹித் அடிக்கடி வெளிநாடு செல்லாத நிலையில், நண்பர்களிடம் மைராவுக்கான பொருட்களை வாங்கி வரும்படி சொன்னோம்.”

மாலிகாவுக்கு இரண்டாவது குழந்தை, குழந்தைப் பருவ ஆஸ்துமா நோயுடன் பிறந்தது.  “எனவே நாங்கள் அவள் மீது மிகுந்த அக்கறையுடன் தீவிரமாக கவனம் செலுத்தினோம். ஆஸ்துமாவை அதிகரிக்கும் என்பதால் நாங்கள் வாசனைத் திரவியங்கள், ஒவ்வாமை ஏற்படுத்தும் பொருட்களை உபயோகிக்கவில்லை. நீங்கள் கவனமாக இருந்தால் உங்கள் குழந்தை மேம்படும் என்று மருத்துவர் கூறினார். இந்த சமயத்தில், பல முகநூல் குழுக்களிடம் ஆலோசனை செய்து குழந்தைகளுக்கான பல்வேறு இயற்கைப் பொருட்களை கண்டறிந்தேன். அப்படித்தான் த மாம்ஸ் கோ பிறந்தது, “ என்ற தகவலை அவர் பகிர்ந்தார்.

அமிஷி கன்ஸ்யூமர் டெக்னாலஜிஸ் நிறுவனம் 2016-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. அதன் பிராண்ட் த மாம்ஸ் கோ., 2017-ம் ஆண்டு மார்ச் மாதம் தொடங்கப்பட்டது. “ஆரம்பத்தில் ஏஞ்சல் முதலீட்டாளர்களிடம் இருந்து ஒரு கோடி ரூபாய் பெற்று எங்களது பயணத்தைத் தொடங்கினோம்,” என்றார் மாலிகா. மாலிகா, மோஹித் மற்றும் இன்னொரு ஊழியரான விஞ்ஞானி ஒருவருடன் நிறுவனம் தொடங்கப்பட்டது. விஷத்தன்மையற்ற பொருட்களை அந்த விஞ்ஞானி உருவாக்கினார்.   ” பொருட்களின் ஆக்கம் எங்களுடையது.  தயாரிப்பும் பேக்கேஜிங்கும் வெளி நபர்களிடம் கொடுத்துள்ளோம். பின்னர் மும்பை, பெங்களூரு, டெல்லி மற்றும் குருகிராமில் உள்ள நான்கு கிடங்குகளுக்கு அவை அனுப்பப் படுகின்றன. ஒவ்வொரு பொருளும் முழுவதுமாக தரப்பரிசோதனை செய்யப்படுகிறது. அனைத்து நேரமும் என் குடும்பத்தினர் அந்தப் பொருட்களைப் பயன்படுத்துகின்றனர். நல்லதைத் தவிர வேறு எதையும் நாங்கள் நம்புவதில்லை,” என்றார் மாலிகா.

இன்றைக்கு குருகிராமில் உள்ள  தலைமை அலுவலகத்தில்  த மாம்ஸ் கோ-வில் 54 ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். 2017-ம் ஆண்டு செப்டம்பரில் இந்த நிறுவனம் டிஎஸ்ஜி கன்ஸ்யூமர் மற்றும் சாமா கேப்பிட்டல் என்ற நிறுவனத்துடன் இணைந்து 1 மில்லியன் அமெரிக்க டாலர்(6.5 கோடி ரூபாய்) நிதி திரட்டியது. 2020 செப்டம்பரில்  இந்த நிறுவனம் சாமா கேப்பிட்டல் மற்றும் டிஎஸ்ஜி கன்ஸ்யூமர் பார்ட்னர்களுடன் இணைந்து 8 மில்லியன் அமெரிக்க டாலர்களை திரட்டியது. 


54ஊழியர்களுக்கான தலைமைப் பொறுப்பில் மாலிகா இருக்கிறார்

தங்களது பொருட்கள் இப்போது வெளிநாட்டு பிராண்ட்களுக்கு இணையாக மதிப்பிடப்பட்டுள்ளது தமக்கு பெரும் திருப்தியளிப்பதாக மாலிகா கூறுகிறார்.

மால் ஒன்றில் அவர் இருந்தபோது, அங்கு வந்த ஒரு பெண், அவரிடம் வந்து அவரது தயாரிப்புபொருட்களுக்காக நன்றி சொன்னார். இது தம்முடைய நேசத்துக்கு உரிய தருணம் என்று கூறுகிறார் மாலிகா.

“இதைப் பார்த்து என் மாமியார் அசந்துபோனார். இன்னொரு தருணத்தில், அடுத்த நாள் துபாய் செல்லும் விமானத்தைப் பிடிக்க இருந்த  ஒரு பெண் எனக்கு போன் செய்தார். கர்ப்பிணியான அவரது நாத்தனார்  மறுநாள் காலையே மாம்ஸ் கோ பொருட்கள் வேண்டும் என்று அவரிடம் கேட்டிருக்கிறார்.  அட, வெளிநாட்டில் இருந்து இத்தகைய பொருட்களை வாங்குவது மாறி, வெளிநாட்டுக்கு இந்தியாவில் இருந்து நமது தயாரிப்பு போகிறதே என சந்தோஷப்பட்டேன். எங்களுடைய சிறிய பயணத்தில் இது எனக்கு மிகவும் அழகான தருணம்!” என்றார் மாலிகா.     


 
 
 
 
 

அதிகம் படித்தவை

  • delhi dosa king

    ஒரு மசால்தோசையின் வெற்றி!

    கேரளாவைச் சேர்ந்த கேசவன் குட்டி, சிறுவயதில் கடினமான சூழலில் வளர்ந்தவர், டெல்லியில் தமிழ்ப்பள்ளியில் கேன்டீனில் வேலை பார்த்து தொழில் கற்றுக் கொண்டவர், இன்றைக்கு டெல்லியில் மூன்று ரெஸ்டாரண்ட்கள் நடத்துகிறார். தினமும் 60 ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கிறார். சோபியா டேனிஷ்கான் எழுதும் கட்டுரை

  • From milk to paneer.. how an entrepreneur built a company that has crossed Rs 120 crore turnover

    ‘பன்னீர்’ செல்வம்!

    இது மில்கி மிஸ்ட் நிறுவன நிர்வாக இயக்குநர் சதீஷ்குமாரின் வெற்றிக்கதை. எட்டாம் வகுப்பில் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு தந்தையின் தடுமாறிய தொழிலை தூக்கி நிறுத்தி, அதற்குப் புது அடையாளம் கொடுத்த சதீஷ்குமாரின் வெற்றிக்கதையை விவரிக்கிறார் பிசி வினோஜ் குமார்

  • organic farming

    அர்ச்சனாவின் அசத்தல் வெற்றி!

     பொறியியல் படித்து முடித்த உடன் தொழில் ஒன்றைத் தொடங்கிய அர்ச்சனாவுக்கு தோல்விதான் கிடைத்தது. எனினும் மனம் தளராமல் தனது கணவருடன் இணைந்து இயற்கை வேளாண் பண்ணை முறையில் ஈடுபட்டார். இப்போது வெற்றிகரமாக இயற்கை முறையில் விளைந்த காய்கறிகளை வாடிக்கையாளர்களுக்கு கொடுக்கிறார். அர்ச்சனாவின் வெற்றிப்பயணம் குறித்து உஷா பிரசாத் எழுதும் கட்டுரை.

  • overseas educator

    ஆந்திர சிவாஜி!

    தொழில் தொடங்கும் ஆசையில் அதிக சம்பளம் தரும் அமெரிக்க வேலையை விட்டுவிட்டு ஆந்திராவில் தொழில் தொடங்கினார் அரவிந்த் அரசவில்லி என்னும் இளைஞர். ஒன்பது ஆண்டுகள் ஆனநிலையில் 30 கோடி ரூபாய் வர்த்தகம் செய்யும் நிறுவனங்களின் உரிமையாளராக உள்ளார்.  சோபியா டேனிஷ்கான் எழுதும் கட்டுரை

  • Speed gears

    வேகமும் வெற்றியும்

    திருச்சி கைலாசபுரத்தில் பிறந்து வளர்ந்த அன்சார், சிறுவயதில் மெக்கானிக் ஷாப்புகளில் பொழுதைப் போக்குவது வழக்கம். இன்றைக்கு இந்தியாவின் முன்னணி ரைடிங் கியர்கள் உற்பத்தி நிறுவனத்தின் உரிமையாளராக உயர்ந்திருக்கிறார். ரூ.10 கோடி ஆண்டு வருவாய் ஈட்டும் வகையில் அவரது நிறுவனம் வளர்ந்திருக்கிறது. உஷா பிரசாத் எழுதும் கட்டுரை

  • Designing  success path

    வெற்றியை வடித்தவர்!

    கொல்கத்தாவை சேர்ந்த சிஏ பட்டதாரி இவர். டிசைனில் உள்ள ஆர்வத்தால், கிராபிக் டிசைன் நிறுவனத்தைத் தொடங்கினார். சர்வதேச வாடிக்கையாளர்களை குறிவைத்து இன்று மிக வெற்றிகரமாக தொழிலில் ஈடுபட்டு வருகிறார். ஜி.சிங் எழுதும் கட்டுரை