Milky Mist

Friday, 26 April 2024

ஒரு தினக்கூலியின் மகன் சமூகப்பொறுப்புள்ள கோடீசுவரர் ஆக உயர்ந்த கதை!

26-Apr-2024 By சோமா பானர்ஜி
மும்பை

Posted 06 Mar 2017

மங்களூருக்கு அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த தினக்கூலி ஒருவரின் மகன் விபி லோபோ. 47 வயதாகும் அவர் இப்போது கோடீசுவரராக உயர்ந்துள்ளார். ரியல் எஸ்டேட் தொழிலில் இறங்கி ஆறே ஆண்டுகளில் (2010-16) 75 கோடி மொத்த வர்த்தகம் நிகழ்த்தி உள்ளார். இவர் இதயமுள்ள, சமூகப்பொறுப்புள்ள தொழிலதிபராக இருப்பதுவும் குறிப்பிடத்தகுந்த விஷயம்.

டி3 அர்பன் டெவலப்பர்ஸ் என்பது இவரது நிறுவனம். மூன்றாம் அடுக்கில் வரும் நகரங்களில் பட்ஜெட் வீடுகளை இண்டர்காம், வைபை, நூலகம் உள்ளிட்ட வசதிகளுடன் கட்டித்தருகிறார் இவர். இப்போது 500 கோடி மதிப்பிலான கட்டுமானத் திட்டங்கள் கைவசம் இருக்கின்றன. 

இந்தியாவின் சிறு நகரங்களில் விலைமலிவான வீடுகளை சாதாரண மக்களுக்காக நவீன வசதிகளுடன் கட்டும் நோக்கைக் கொண்டது விபி லோபோவின் நிறுவனம் ( படங்கள்: அசார் கான்)


மங்களூருவில் இருந்து 50 கிமீ தள்ளி இருக்கும் வோக்கா கிராமத்தில் ஏழு பேருடன் பிறந்தவர் லோபோ. மிகவும் ஏழ்மை. உள்ளூர் பள்ளியில்தான் அவர் படிக்க முடிந்தது. லோபோவின் பயணம் பல்வேறு பிரச்னைகளுக்கு இடையில் மெல்ல படிப்படியாக நிகழ்ந்தது ஆகும். ஒவ்வொரு செங்கல்லாக பார்த்துப்பார்த்துப் பார்த்து தன் சாம்ராஜ்யத்தை அவர் நிறுவி உள்ளார்.

 “தினக்கூலிகளாக இருந்த என் பெற்றோருக்கு சம்பளம் பணமாகக் கிடைக்காது. தினசரி தேவைக்கு உதவும் அரிசி போன்ற பொருட்களே அளிக்கப்படும். எங்கள் பள்ளிக்குக் கட்டணம் செலுத்த அவர்களிடம் பணம் இருக்காது,’’ என்று நினைவுகூர்கிறார் லோபோ.

கிராமத்தில் இருந்து 25 கிமீ தூரத்தில் இருந்த ஒரு உயர்நிலைப்பள்ளியில் சிலர் உதவியுடன் பத்தாம் வகுப்பு முடித்தான் சிறுவன் லோபோ. மங்களூரு நகரில் புனித தாமஸ் தேவாலயத்தைச் சேர்ந்த பாதிரியார்கள், அருட்சகோதரிகள் உதவியுடன் 12 ஆம் வகுப்பு முடித்தான். அடுத்தது என்ன? வீட்டில் வறுமை அவனை நோக்கி வெறித்தது. ஒருவேளை சோற்றுக்கே திண்டாட்டம். பக்கத்து வீடுகளில் இருந்து பப்பாளி, மாம்பழத்தைப் பறித்துவந்து வயிறுகளை நிரப்பவேண்டும். லோபாவின் இரண்டு மூத்த சகோதரர்கள் வறுமையால் பள்ளிக்கே சென்றதில்லை. ஒரு நாள் கையில் ஐம்பது ரூபாயுடன் பெற்றோருக்கே சொல்லாமல் ஒரு அரசு பஸ்ஸில் ஏறி மும்பைக்கு கிளம்பிவிட்டான் லோபோ.

இந்தியாவின் சிறு நகரங்களில் விலைமலிவான வீடுகளை சாதாரண மக்களுக்காக நவீன வசதிகளுடன் கட்டும் நோக்கைக் கொண்டது விபி லோபோவின் நிறுவனம் ( படங்கள்: அசார் கான்)


 “நான் அங்கே உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த லாரி  ஓட்டுநர்களுடன் தங்கினேன். அவர்களுக்கு சிறுசிறு உதவிகள் செய்வேன். சப்பாத்தி செய்ய கற்றுக்கொண்டேன். தினமும் பத்து டாக்ஸிகளைக் கழுவுவேன். ஒரு டாக்ஸிக்கு இரண்டு ரூபாய் வீதம் 20 ரூபாய் கிடைக்கும்,’’ என்கிறார் லோபோ.
மறுநாள் காலையில் மும்பை மத்திய பேருந்து நிலையத்தில் இறங்கிய லோபோவுக்கு அந்த பேருந்தின் ஓட்டுநர் தெற்கு மும்பையில் இருந்த கொலாபாவில் சுந்தர் நகர் என்கிற குடியிருப்புக்கு வழிகாட்டினார். அது ஏழைமக்கள் வசிக்கும் சேரிப்பகுதி. புதிய வாழ்க்கை தொடங்கியது.

ஒரு பாக்கெட் டிக்‌ஷனரியை வாங்கி இந்தி, ஆங்கிலம் கற்றுக்கொண்டார். தினமும் ஆங்கில பத்திரிகையும் வாங்கிப் படித்துவந்தார். மெதுவாக அங்கே ஒரு சலவைக்கடையில் வேலைக்குச் சேர்ந்தார். சில மாதங்களில் மாதம் வருமானம் 1200 ரூபாய் கிடைக்க ஆரம்பித்தது.

அதன் பின்னர்தான் எங்கே இருக்கிறேன் என்பது  பற்றி வீட்டுக்கு கடிதம் போட்டார். 200 ரூபாய் பணமும் அனுப்பி வைத்திருக்கிறார். சலவைக் கடையில் அறிமுகமான ஒரு பணக்காரர் லோபோவை மேலும் படிக்கத்தூண்டினார். சூட், டை அணிந்து தினமும் அலுவலகம் செல்லும் ஆசை லோபோவுக்குள் துளிர் விட்டது. மும்பைக்கு வந்த ஆறுமாதங்களில் வணிகவியலில் இளங்கலைப் பட்டம் படிக்க ஒரு தொண்டு நிறுவனம் நடத்திய இரவுக்கல்லூரியில் சேர்ந்தார் லோபோ.

 “எனக்கு 4-5 மணி நேரம்கூட தூங்க கிடைக்கவில்லை. டாக்ஸி கழுவுதல், ஓட்டுநர்களுக்கு வேலைகள் செய்தல், துணி அயர்ன் செய்தல் இவற்றுடன் இரவுக்கல்லூரிக்கும் போகவேண்டும். மத்தியான வேளைகளில் எனக்கு ஓய்வு கிடைக்கும். அந்த நேரத்தில் டைப்பிங் கற்றுக்கொள்ள ஓடினேன். ஸ்டெனோகிராபர் வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கை’’.

லோபோவிடம் பிஎம்டபிள்யூ கார் இருக்கிறது, ஆனால் ஒரு கிமீ தூரத்தில் இருக்கும் அலுவலகத்துக்கு நடந்தே செல்வார். லோக்கல் ட்ரெயின், பேருந்து, ஆட்டோவில் பயணம் செய்யவே விரும்புவார்.

 

லோபோவுக்கு ஜெனரல் ட்ரேடிங் கார்ப்பரேஷன் என்ற நிறுவனத்தில் 1986-ல் முதல் வேலை கிடைத்தது. அது அலுவலக உதவியாளர் வேலை.  அறிவியல் ஆய்வக கருவிகளை விற்கும் நிறுவனம் அது.,

தன்னுடன் இரவுக்கல்லூரியில் படித்த சகமாணவனிடம் இந்த வேலை பற்றிக் கேள்விப்பட்டு சேர்ந்தார் லோபோ. பதினைந்தே நாளில் அந்த கம்பெனியின் முதலாளி லோபோவின் திறமையைக் கண்டுபிடித்துவிட்டார். லோபோவுக்கு நல்ல பயிற்சி அளித்து விற்பனைப் பிரதிநிதி ஆக்கினார். 

 “ஆய்வகக் கருவிகளை விற்பதில் எனக்கு பெரும் திறன் உருவானது. எங்கள் வாடிக்கையாளர்கள் என்னை வேதியலில் முதுகலை படித்தவன் என்று நினைத்தார்கள்,’’ என்கிறார் லோபோ.

லோபோவின் நம்பிக்கை உயர்ந்தது. நாடுமுழுக்க டெல்லி யுனிவர்சிட்டி, ஜேஎன்யூ, அவுரங்காபாத் பல்கலைக்கழகம், தேசிய வேதியியல் ஆய்வகம், பிட்ஸ் பிலானி போன்ற இடங்களுக்கு பயணம் செய்யும் வாய்ப்பு கிடைத்தது.

‘’இன்றும் கூட எனக்கு வேலைதந்த என்  முதல் முதலாளி அவருடைய பணியாளர்களுக்கு பயிற்சி அளிக்க என்னைத் தான் அழைப்பார். என் தொழில் வாழ்க்கைக்கு அடித்தளம் அமைத்தவர் அவர்தான்,’’ என்கிற லோபோ பல கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் கல்வி நிறுவனங்களுக்கும் பயிற்சி அளிப்பவராக இருக்கிறார். மங்களூருவில் உள்ள சஹ்வாத்ரி பொறியியல் கல்லூரியில் சிறப்பு பேராசிரியர் ஆகவும் உள்ளார்.

மும்பை அலுவலகத்தில் தன்னுடைய சில ஊழியர்களுடன் லோபோ

 

தன் பத்தொன்பதாவது வயதில் 20,000 ரூபாய் சேமித்து வைத்திருந்த லோபோ மும்பையில் ஒரு அறை மற்றும் சமையலறை கொண்ட ஒரு வீட்டை நண்பர் ஒருவருடன் இணைந்து 60,000 ரூபாய்க்கு வாங்கினார். தன் தம்பிகளை ஊரிலிருந்து மும்பைக்கு வரவழைத்தார். அவர்களும் பகலில் பகுதி நேர வேலைகள் செய்தவண்ணம் லோபோ படித்த அதே இரவுக்கல்லூரியில் படித்தனர்.

ஐந்து வருடங்கள் ஜெனரல் டிரேடிங் கார்ப்பரேஷனில் வேலை பார்த்தபின் அதிலிருந்து விலகினார். ஹெச்சிஎல்லில் இரண்டு ஆண்டுகள், பின்னர் கோராடியா போர்ஜிங் லிமிடட் நிறுவனத்தில்  பிராந்திய நிர்வாகியாக உயர்ந்தார். அப்போது அவருக்கு வயது 25. பின்னர் 1994-ல் மஸ்கட்டில் ஒரு கலைக்கூடத்தை நிர்வகிக்கும் வேலைக்குப் போனார். அப்போது கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த தன் சகோதரிகளின் திருமணத்துக்காக அவர் நிறைய சம்பாதிக்க வேண்டி இருந்தது.

மஸ்கட்டில் இருந்து திரும்பியதும் 1997-ல் எவர்ஷைன் பில்டர்ஸ் என்ற ரியல் எஸ்டேட் கம்பெனியில் சேர்ந்தார். பின்னர் ஐந்து ஆண்டுகள் கழித்து மும்பையில் பெரிய ரியல் எஸ்டேட் கம்பெனியானஅகர்வால் குழுமத்திலும் பின்னர் மார்க் குழுமத்திற்காக சென்னையிலும் பணி புரிந்தார்.  2007-ல் மும்பைக்கே எவர்ஷைன் நிறுவனத்தின் சிஇஓ வாகத் திரும்பினார்.

மும்பையின் என் அனுபவத்திலிருந்து நான் கற்றது சாமானியமக்களுக்கு மலிவு விலையில் நல்ல வீடு வாங்குவது மிகவும் சிரமம் என்பதே. சிறு நகரங்களில் இதுபோன்ற தரமான வீடுகளை மலிவாகக் கட்டித்தரும் நிறுவனங்களே இல்லை,’’ என்கிறார் லோபோ. இதை உணர்ந்ததாலும் தனக்கு ரியல் எஸ்டேட் துறையில் இருந்த அனுபவத்தாலும் சொந்தமாக நிறுவனம் தொடங்க நினைத்தார். டி3 அர்பன் டெவலப்பர்ஸ் உருவானது.

ஆரம்பகட்டத்தில் பெருமளவு  முதலீட்டை என் மைத்துனரான கேப்டன் செட்ரிக் பெர்னாண்டஸ் அளித்தார். மஸ்கட்டில் இருக்கும் இன்னொரு நண்பரும் உதவி செய்தார். பின்னர் ஆயிரம் ரூபாயில் இருந்து சில கோடிகள் வரை நிறைய பங்குதாரர்களும் முதலீடு செய்தனர்.

மனைவி மற்றும் குழந்தைகளுடன் லோபோ


“முன்பு எனக்கு வேலை கொடுத்த நிறுவன உரிமையாளர்கள் அனைவரும் என் நிறுவனத்தில் முதலீடு செய்தனர். என்னிடம் பணிபுரியும் ஊழியர்களும் பங்குதாரர்களே. ரியல் எஸ்டேட் துறையில் ஒரு இன்போசிஸ் போல் என் நிறுவனம் உருவாகவேண்டும் என்பது என் கனவு’’

அவருடைய நிறுவனங்களின் கட்டுமானத்திட்டங்களில் ஒன்பது ஷிமோகா, ஹூப்ளி, மங்களூரு ஆகிய  இடங்களில் கடந்த ஆறு ஆண்டுகளில் நிறைவேற்றப்பட்டன. மங்களூருவில் 400 குடியிருப்புகளைக் கொண்ட இரண்டு திட்டங்கள் பாதி முடிவடைந்த நிலையில் உள்ளன. மும்பை மற்றும் பெல்லாரியில் 600 குடியிருப்புகளைக் கொண்ட  சில திட்டங்கள் மேற்கொள்ளப்பட உள்ளன.

இன்று லோபாவிடம் ஒரு பிஎம்டபிள்யூ 5 சீரீஸ் கார் உள்ளது. மேற்கு மும்பையில் உயர்வசதி குடியிருப்பு இருக்கிறது. ஆனாலும் ஒரு கிமீ தூரத்தில் உள்ள அலுவலகத்துக்கு அவர் நடந்தே செல்கிறார். ரயில், பேருந்து, ஆட்டோக்களில் பயணம் செய்வதையே விரும்புகிறார்.

அவருடைய 18 வயது மகளும் 12 வயது மகனும் மும்பையின் சிறந்த கல்வி நிலையங்களில் படிக்கிறார்கள். ஆனாலும் அவர்கள் பொதுப்போக்குவரத்தையே பயன்படுத்துகிறார்கள். லோபோ பழங்கள் காய்கறிகளை சாலையோர விற்பனையாளர்களிடமே வாங்கும் பழக்கத்தைக் கடைப்பிடிக்கிறார்.

 “நான் பழசை மறக்கவில்லை. என்னால் முடிந்த அளவுக்கு நான் அவர்களுக்குச் செய்யவிரும்புகிறேன்,’’ என்கிறார் லோபோ. டி3 ஹோப் அறக்கட்டளை என்ற பெயரில் அவர் நடத்தும் நிறுவனம் 100 ஏழைக்குழந்தைகளை ஆங்கிலவழிப்பள்ளிகளில் படிக்கவைக்கிறது.

“இந்தியாவில் ஏழையாக இருப்பது குற்றம். ஏழ்மையில் இருந்து வெளியே வருவதற்கான ஊக்கம் இல்லாமல் பலர் இருக்கிறார்கள். என்னுடைய அறக்கட்டளை ஏழ்மையிலிருந்து கல்வியின் மூலம் விடுபடுவதற்கான ஊக்கத்தைதர விழைகிறது. அதேபோல் வளமான வாழ்க்கை நோக்கி உழைத்து முன்னேற உந்துதலையும் தருகிறோம்,’’ என்கிறார் லோபோ.

இதற்கு மிகச்சிறந்த உதாரணம் லோபோ தான். இல்லையா?


 
 
 
 
 

அதிகம் படித்தவை

  • How heath food turned into multi-crore rupee business

    உணவு கொடுத்த கோடிகள்

    நடுத்தரக் குடும்பம் ஒன்றில் பிறந்து மருந்துக் கம்பெனி ஒன்றில் மாதம் 350 ரூபாய் சம்பளத்துக்கு வேலை பார்த்தவர், இன்றைக்கு 100 கோடி ரூபாய் வருவாய் ஈட்டும் ஆரோக்கிய உணவு தயாரிப்பு நிறுவனத்தின் தலைவராக உயர்ந்திருக்கிறார். பி.சி.வினோஜ் குமார் எழுதும் கட்டுரை

  • Success story of a Wireman

    ஒரு வயர்மேனின் வெற்றிக்கதை

    வேலைக்கு நேர்காணலுக்குச் செல்ல, பேருந்து பயணத்துக்கு பணம் இல்லாத நிலையில் தன் பாட்டியிடம் 20 ரூபாய் வாங்கிக் கொண்டு சென்றவர் ராம்தாஸ் மான்சிங் மானே. இன்றைக்கு ஆண்டுக்கு 30 கோடி ரூபாய் வருவாய் ஈட்டும் தொழில் குழுமங்களின் தலைவராக இருக்கிறார். தேவன் லாட் எழுதும் கட்டுரை

  • Inspiring story of crorepati entrepreneur who makes cloth blags from discarded hotel bed sheets

    குப்பையிலிருந்து கோடிகள்

    அமெரிக்காவில் தூக்கி எறியப்படும் படுக்கை விரிப்புகளை ஜெய்தீப் சஜ்தே வாங்குவார். இந்தியாவில் உள்ள தொழிற்கூடத்தில் அவற்றை வண்ணமிகு பைகளாக மாற்றுவார். கடந்த ஆண்டு அவர் இத்தொழிலில் பெற்றது 4 கோடி ரூபாய்கள். பி சி வினோஜ்குமார் எழுதும் கட்டுரை

  • Redesigning small shops

    மளிகையில் மலர்ச்சி!

    தந்தையின் மளிகைக்கடையை புதுப்பித்து விற்பனையை அதிகப்படுத்தினார்  வைபவ் என்ற இளைஞர். இதே போல் பிற மளிகைக் கடைகளையும் நவீனப்படுத்தும் தொழிலைத் தொடங்கி இரண்டு ஆண்டுகளிலேயே ஒரு கோடிக்கும் மேல் வருவாய் ஈட்டி உள்ளார் இவர். சோபியா டேனிஷ் கான் எழுதும் கட்டுரை.

  • Honey is  wealth

    மலைத்தேன் தந்த வாய்ப்பு!

    மிதுன் ஸ்டீபன், ரம்யா சுந்தரம் இருவரும் பொறியியல் பட்டதாரிகள். பெங்களூரில் சந்தித்துக் கொண்ட அவர்கள் மலையேற்றம் மேற்கொள்ளும் ஆர்வத்தில் ஒன்றிணைந்து, பரஸ்பரம் வாழ்க்கை துணையாக இணைந்தனர். ஆண்டுக்கு 2 கோடி ரூபாய் வருவாய் ஈட்டும் பாரம்பரியமான கலப்படமற்ற தேன் வர்த்தகத்திலும் கொடிகட்டிப் பறக்கின்றனர். உஷா பிரசாத் எழுதும் கட்டுரை

  • bottom to top

    உழைப்பின் வெற்றி!

    காதல் திருமணம் செய்து கொண்டதால், பெற்றோர் ஒதுக்கப்பட்டனர். மும்பை புறநகரில் ஒழுகும் வீட்டில் குழந்தைப் பருவத்தை கழித்த ராஜேஷ், இன்றைக்கு மும்பை, சென்னை உள்ளிட்ட நகரங்களில் ரியல் எஸ்டேட் செய்து கொழிக்கிறார். குர்விந்தர் சிங் எழுதும் கட்டுரை