ஒரு பொருளாதாரப் பேராசிரியரின் ஆயிரம் கோடிக் குழுமம்!
15-Sep-2025
By பி சி வினோஜ் குமார்
சென்னை
நன்றாகப் படிக்கக்கூடிய மாணவர், மாணவர் சங்கத் தலைவராகவும் இருப்பது மிகவும் அரிது. 1000 கோடிகள் புரளும் பிஜிபி குழுமத்தின் தலைவர் பழனி ஜி பெரியசாமி இந்த அரிதான வகையைச் சேர்ந்தவர். இவரது குழுமம் ஹோட்டல்கள், சர்க்கரை, நிதி, ரியல் எஸ்டேட், கல்வி ஆகிய துறைகளில் இயங்குகிறது
திருச்சியில் உள்ள புனித ஜோசப் கல்லூரியில் பிஏ பொருளாதாரம் படித்தவர். பல்கலைக்கழக தங்கப்பதக்கம் பெற்றவர். சென்னையில் மாநிலக்கல்லூரியில் முதுகலைப் படிக்கும்போது(1960-62) மாணவர் மன்றத் தலைவராகவும் தேர்வானார்.
|
சென்னையில் உள்ள தன் முக்கிய விடுதியான லே ராயல் மெரிடியன் முன்பாக டாக்டர் பழனி ஜி பெரியசாமி (படங்கள்: ஹெச்.கே.ராஜசேகர்)
|
நாமக்கல் அருகே உள்ள முத்துக்காப்பட்டியைச் சேர்ந்தவர் பெரியசாமி. முனைவர் படிப்புக்காக அமெரிக்கா சென்றபோது அவர் தொழில்துறையில் இறங்கினார். அத்துடன் பின்னர் 1973- 1987 வரை பால்டிமோர் பல்கலைக்கழகத்திலும் பணிபுரிந்தார்.
அமெரிக்காவில் பணிபுரிந்த பல வசதியான இந்திய மருத்துவர்கள் வரிச்சலுகைகள் பற்றி இவரிடம் ஆலோசனை பெற்றனர். பொருளாதாரம் படித்தவர் என்பதால் அவரால் சரியாக வழிகாட்டமுடிந்தது.
அவர்களின் நன்மதிப்பைப் பெற்றபின் பெரியசாமி பிஜிபி தொழில் மற்று நிதித்துறை ஆலோசனை நிறுவனத்தை 1976-ல் தொடங்கினார். 33 இந்தியர்கள் அதில் முதலீடு செய்தனர். அமெரிக்காவில் ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்யத்தொடங்கினார்.
ஆரம்பத்தில் கெண்டக்கியில் லூயிஸ்வில்லியில் ஒரு குடியிருப்பு வளாகத்தில் 260000 டாலர்கள் முதலீடு செய்தனர். 15 மாதங்கள் கழித்து நல்ல லாபத்துக்கு விற்பனை ஆனது. இதனால் ஊக்கம் பெற்ற பெரியசாமி தொடர்ந்து முதலீடுகள் செய்து லாபம் பெற்றார்.
“நிறைய நிறுவனங்களை உருவாக்கினோம், அதிக கட்டடங்களையும் ஷாப்பிங் மால்களையும் வாங்கினோம். கட்டடங்களை சீர்செய்து வாடகைக்கு விட்டோம். பின்னர் அவற்றை லாபத்துக்கு விற்றோம்,” என்கிறார் 78 வயதாகும் பெரியசாமி. சென்னையில் அவருடைய லே ராயல் மெரிடியன் ஹோட்டலில் நமது சந்திப்பு நிகழ்ந்தது.
2000ஆம் ஆண்டில் 250 அறைகள் கொண்ட லே ராயல் மெரிடியன் திறக்கப்பட்டது. அது ஐந்து நட்சத்திர டீலக்ஸ் ஹோட்டல். பிஜிபி குழுமத்தின் அங்கமான 88 கோடிகள் வர்த்தகம் செய்யும் அப்பு ஹோட்டல்ஸ் லிமிடட் நிறுவனத்துக்கு உரிமையானது. இதே நிறுவனத்துக்கு கோவையில் லே மெரிடியன், கும்பகோணத்தில் ரிவர்சைட் ரிசார்ட்ஸ் அண்ட் ஸ்பா ஆகிய ஹோட்டல்கள் உள்ளன.
|
பிஜிபி நிறுவனத்தின் அங்கமான அப்பு ஹோட்டல்ஸ் லிமிடட், ஹோட்டல் லே மெரிடியனை நடத்துகிறது
|
இக்குழுமம் தரணி சுகர்ஸ் அண்ட் கெமிக்கல்ஸ் என்ற 369 கோடிகள் வர்த்தகம் செய்யும் நிறுவனம், தரணி பைனான்ஸ் லிமிடட், தரணி டெவலப்பர்ஸ் பிரைவேட் லிமிடட் போன்ற நிறுவனங்களையும் நடத்துகிறது. சுமார் 300 வெளிநாடுவாழ் இந்தியர்களின் முதலீட்டில் இவற்றை பழனிசாமி நிறுவியுள்ளார்.
அரியலூரில் உள்ள தரணி சிமெண்ட்ஸ் இவர் தமிழ்நாட்டில் உருவாக்கிய முதல் நிறுவனம். 1987-ல் உருவாக்கப்பட்ட இது ஆதித்ய பிர்லா குழுமத்துக்கு 1998ல் 65 கோடிக்கு விற்கப்பட்டது.
தமிழ்நாட்டில் பல கல்விநிலையங்களை நடத்தும் பிஜிபி கல்வி நல சங்கம் இவரால் உருவாக்கப்பட்டது.
"வெளிநாடுகளில் உள்ள நண்பர்கள் என்னை நம்பி முதலீடு செய்ய முன்வந்ததால்தான் இவற்றை என்னால் ஆரம்பிக்க முடிந்தது. நான் ஓய்வு எடுக்காமல் உழைத்து அவர்களின் முதலீட்டில் லாபத்தைப் பெற்றுத்தருகிறேன்,” என்கிறார் பெரியசாமி.
தன் பள்ளிநாட்களை அவர் பசுமையாக நினைவில் வைத்துள்ளார். சாதாரண நிலையில் இருந்து மேலே வந்தவர் அவர்.
"கிராமப்புறத்தில் வளர்ந்தவன் நான். அங்கு எங்களுக்கு நிறைய விவசாய நிலம் இருந்தது. நெல், மரவள்ளி, புகையிலை, கடலை பயிரிட்டோம்.
|
பத்தாம் வகுப்பு வரை தமிழ்வழியில் படித்த பெரியசாமி பொருளாதாரத்தில் தங்கப்பதக்கம் பெற்றார்
|
“பத்தாம் வகுப்பு வரை தமிழ் வழியில் படித்துவிட்டு காரைக்குடி அழகப்பா கல்லூரியில் பியூசி ஆங்கில வழியில் படித்தேன்,” என்கிற பெரியசாமி அவரது குடும்பத்தில் ஐந்தாவது குழந்தை. அவருக்கு நான்கு அக்காக்களும் ஒரு தம்பி, தங்கையும் உண்டு.
சின்ன வயதில் தந்தையின் பால் பெரிதும் ஈர்க்கப்பட்டார். தந்தை எல்லோரையும் மதித்ததையும் அறுவடை முடிந்ததும் தொழிலாளர்களுக்கு அளித்துவிட்டுத்தான் மீதியை வீட்டுக்கு கொண்டுவருவார் என்பதையும் பெருமையுடன் நினைவுகூர்கிறார்.
“அனைவரிடமும் அன்பாக இருப்பார். எங்கள் கிராமத்திலும் சாதிய பாகுபாடுகள் இல்லை.
“என் அப்பாவுக்கு ரெட்டி சமூகத்தைச் சேர்ந்த ஒரு நண்பரும் இஸ்லாமிய நண்பரொருவரும் உண்டு. ரெட்டி குடும்பத்தில் இருந்து நல்ல சைவ சாப்பாடும் இஸ்லாமிய குடும்பத்தில் இருந்து பிரியாணியும் பண்டிகைக் காலங்களில் கிடைக்கும்,” புன்னகையுடன் கூறுகிறார்.
|
ஹோட்டல் லே ராயல் மெரிடியனில் பழனி பெரியசாமி தன் ஊழியர்கள் சிலருடன்
|
சிறுவனாக இருக்கும்போது மகாத்மா காந்தி, ஆப்ரஹாம் லிங்கன், நேரு ஆகியோரின் வாழ்க்கை வரலாற்றைப் படித்து அவர்களால் கவரப்பட்டார்.
ஒரு கட்டத்தில் பெரியசாமி சிவில் சர்வீஸில் சேர விரும்பினார். "பியூசியில் சேர சான்றிதழ்களில் சான்றொப்பம் வாங்க தாசில்தார் அலுவலகம் சென்றேன். அங்கே கையொப்பத்துக்கு ஒரு ரூபாய் லஞ்சம் கேட்டனர்.
“நான் கொடுக்கமறுத்தேன். எனவே என்னைப் பலநாள் அலையவிட்டனர். இறுதியாக ஒரு ஐஏஎஸ் அதிகாரியிடம் சான்றொப்பம் வாங்கினேன். எனவே நானும் ஐஏஎஸ் அதிகாரி ஆக விரும்பினேன். அதன் மூலம் பலருக்கு காசுவாங்காமல் சான்றொப்பம் வழங்க எண்ணினேன்,” அவர் நினைவு கூர்கிறார்.
திருச்சி புனித ஜோசப் கல்லூரியில் பொருளாதாரம் சேர்ந்ததே சிவில்சர்வீஸ் தேர்வு எழுதும் இலக்குடன் தான். ஆனால் அவர் முதுகலை முடிக்கும் போது போட்டித்தேர்வுக்கான வயது வரம்பு தாண்டிவிட்டது.
ஆனால் 640 ரூ சம்பளத்தில் தனியார் நிறுவனம் ஒன்று அவருக்கு வேலை தர முன்வந்தது.
|
எதிர்காலம்: பெரியசாமி தன் பேரன் விக்ரமுடன்
|
அந்த வேலைக்குப் போயிருந்தால் அவர் வாழ்க்கை திசை மாறி இருக்கும். அவர் தன் துறைத்தலைவர் பேராசிரியர் வேலாயுதம் என்பவர் ஆலோசனையில் பேரில் கோவை பிஎஸ்ஜி கலைக்கல்லூரியில் விரிவுரையாளராக குறைந்த சம்பளமாக 245 ரூபாய்க்குச் சேர்ந்தார்.
ஓராண்டு கழித்து புதுச்சேரி தாகூர் கலைக்கல்லூரியில் சேர்ந்து 1964-67 வரை வேலை பார்த்தார். பின்னர் முனைவர் படிப்புக்காக அமெரிக்கா சென்றார்.
தாகூர் கல்லூரியில் இருந்தபோது என்சிசியில் செகண்ட் லெப்டினெண்ட் ஆனார். அது கெசட்டட் பதவி ஆகும். சான்றொப்பம் இடும் அவரது கனவு நனவானது.
“நான் ஏப்ரல் மே மாதங்களில் கிராமத்துக்குச் செல்வேன். கையெழுத்துத் தேவைப்படும் மாணவர்கள் என்னிடம் வந்து பெற்றுச் செல்வார்கள்,” என்கிறார் பெரியசாமி.
|
ப்ரூக்ளின் மருத்துவமனையில் எம்ஜிஆர் மற்றும் ஜானகி அம்மாவுடன் பெரியசாமி ( படம்: சிறப்பு ஏற்பாடு)
|
அதிமுக நிறுவனரான எம்ஜிஆருடன் ஏற்பட்ட நட்பு அவரது வாழ்வின் உச்சகட்டம். 1981-ல் எம்ஜிஆர் அமெரிக்கா வந்தபோது பெரியசாமி அவரை முதலில் சந்தித்தார். வாஷிங்டன், மேரிலேண்ட், வர்ஜீனியா ஆகிய தமிழ்ச்சங்கங்களின் தலைவராக பெரியசாமி அப்போது இருந்தார். எம்ஜிஆரின் பயணங்களை உடன் இருந்து கவனித்ததில் நல்ல நட்பு உருவானது.
பின்னர் 1984-ல் எம்ஜிஆரின் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு நியூயார்க் ப்ரூக்ளின் மருத்துவமனையில் பெரியசாமி ஏற்பாடுசெய்தார்.
எம்ஜிஆர் ப்ருக்ளின் மருத்துவமனையில் இருக்கும்போது தமிழக சட்டமன்றத்துக்கு தேர்தல் வந்தது. ஆண்டிப்பட்டி தொகுதியில் எம்ஜிஆர் சார்பில் வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டது.
“அவரது வீடியோவை மருத்துவமனையில் பதிவு செய்து அனுப்பியது என்னுடைய யோசனைதான். அது பல வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தது,” என்கிறார் பெரியசாமி.
|
பிஜிபி கல்வி மற்று நல சங்கம் நடத்தும் கல்வி நிறுவனங்களை பெரியசாமியின் துணைவியார் விசாலாட்சி கவனித்துக் கொள்கிறார்
|
இ்ந்த வீடியோ பேருதவியாக இருந்தது. எம்ஜிஆர் வென்று மீண்டும் முதலமைச்சர் ஆனார்.
“சிலர் நான் எம்ஜிஆரின் உதவியுடன் வளர்ந்ததாக தவறாக நினைக்கிறார்கள். ஆனால் நான் அமெரிக்காவில் நிறைய சம்பாதித்து சரியாக முதலீடு செய்தேன்.
“நாங்கள் தொழில் தொடங்கும்போது எங்கள் பணத்தை முதலீடு செய்வோம். பின்னர் வங்கியில் கடன் வாங்குவோம். முறையாக திருப்பி அடைப்போம்,” என்கிற இவர் 1972-ல் பிட்ஸ்பர்க் பல்கலையில் முனைவர் பட்டம் பெற்றவர்.
பெரியசாமியின் மனைவி விசாலாட்சி பிபிஏ படித்தவர். சிஸ்டம் அனாலிஸ்ட் தகுதியும் கொண்டவர். இவர்களின் கல்வி நிலையங்களைக் கவனித்துக்கொள்கிறார்.
1964ல் திருமணம் நடந்தபோது இவருக்கு 25 வயது. விசாலாட்சிக்கு 17. “என் கடினமான நேரங்களில் அவர் துணை நின்றுள்ளார்,” என்கிறார் பெரியசாமி.
|
குடும்பம்: நிற்போரில் இடமிருந்து வலம்: மருமகன் ரோனன், பேரன் விக்ரம், மகள்கள் ஜெயந்தி, ஆனந்தி, நளினி. அமர்ந்திருப்போர்: சாந்தி, விசாலாட்சி, பெரியசாமி
|
அவருக்கு நான்கு மகள்கள். மூத்தவர் ஜெயந்தி நியூஜெர்சியில் மனநல மருத்துவர். அவருக்கு விக்ரம் என்ற மகன் இருக்கிறார். மேலும் இரு மகள்கள் சாந்தி (மனவியலில் முனைவர் பட்டம்), நளினி (எம்பிஏ) அமெரிக்காவில் வாழ்கிறார்கள்
மூன்றாவது மகள் ஆனந்தி சென்னையில் உள்ளார். மேரிலாந்தில் டௌசன் பல்கலையில் தொழில் நிர்வாகம் படித்துள்ள இவர் தந்தைக்குத் துணையாக உள்ளார்.
அதிகம் படித்தவை
-
எளிமையான கோடீசுவரர்
திரையரங்கில் காண்டீனில் வேலை பார்த்தவர் அவர். அன்று அவருக்கு மாதச் சம்பளம் 90 ரூபாய் மட்டுமே. இன்று அவர் 1800 கோடி ருபாய் நிறுவனம் ஒன்றின் உரிமையாளர். தன் வாழ்க்கை வெற்றிக்கதையை மசுமா பர்மால் ஜாரிவாலிடம் சொல்கிறார்
-
மீண்டும் மீண்டும் வெற்றி!
பிரஸூன், அங்குஷ் என்ற இளைஞர்கள் ஏற்கெனவே இரண்டு நிறுவனங்களை வெற்றிகரமாக நடத்தி, பிறரிடம் விற்று விட்டனர். இப்போது இந்திய பாரம்பர்யமிக்க நொறுக்குத் தீனி வகைகளை வெற்றிகரமாக விற்பனை செய்கின்றனர். சோஃபியா டேனிஷ்கான் எழுதும் கட்டுரை
-
அம்பிகாவின் நம்பிக்கை!
ஒரு முறை அல்ல, இரண்டு முறை அல்ல. பலமுறை நண்பர்களால் ஏமாற்றப்பட்டபோதும், மீண்டும் ஃபீனிக்ஸ் பறவை போல எழுந்து வந்தார் அம்பிகா பிள்ளை. இவர் டெல்லியில் புகழ் பெற்ற முடி திருத்தும் கலைஞர் மற்றும் ஒப்பனைக் கலைஞர். சோஃபியா டேனிஷ் கான் எழுதும் கட்டுரை
-
கைவினைக்கலை அரசி
பீகாரின் கட்டுப்பாடுகள் மிக்க கிராமத்தில் வளர்ந்த பெண் அவர். திருமணத்துக்குப் பின் மும்பை வந்த அவர், கவின்கலைப்படிப்பை முடித்தார். இன்றைக்கு மும்பையில் ஆண்டுக்கு ஒரு கோடி ரூபாய் அளவுக்கு வருவாய் ஈட்டும், மறு சுழற்சி செய்யப்பட்ட அட்டைகளில் ஃபர்னிச்சர் செய்யும் நிறுவனம் நடத்தி வருகிறார். தேவன் லாட் எழுதும் கட்டுரை.
-
மொறுமொறு வெற்றி!
சிராக் குப்தா அமெரிக்காவுக்கு மேல்படிப்பு படிக்கச் சென்று அங்கேயே ஆண்டுக்கு ஒரு லட்சம் டாலர் தரும் வேலை பார்த்துக்கொண்டிருந்தவர். பின்னர் இந்தியா திரும்பி நண்பருடன் இணைந்து பாப்கார்ன் தயாரிக்கும் தொழிலை வெற்றிகரமாக செய்து வருகிறார். சோஃபியா டேனிஷ் கான் எழுதும் கட்டுரை
-
கலக்குங்க கரோலின்!
பெற்றோரால் பாதுகாப்பாக வளர்க்கப்பட்ட பெண் கரோலின் கோம்ஸ். தந்தை இறந்த பின்னர், வெளிநாட்டில் எம்எஸ் படித்து விட்டு, தமது சொந்த அனுபவத்தின் பெயரில் உருவாக்கிய மூலிகை பொருட்கள் தயாரிக்கும் ஸ்டார்ட் அப் நிறுவனத்தை தொடங்கி வெற்றிகரமாக நடத்தி வருகிறார். சோபியா டேனிஷ் கான் எழுதும் கட்டுரை.