Milky Mist

Sunday, 21 December 2025

சக்கை போடு போடும் சலவைத் தொழிலாளியின் மகன்! பெருநிறுவனத்தில் உச்சம் தொட்டவரின் வெற்றிக்கதை!

21-Dec-2025 By சோமா பானர்ஜி
மும்பை

Posted 09 Apr 2018

மிகவும் எளிமையான பின்னணியில் இருந்து பெருநிறுவனத்தில் உயர் பதவி வரை தொட்டிருக்கிறார் பிகாஷ் சவுத்ரி. அவரது கதை, அதிக வசூலைக் குவிக்கும் பாலிவுட் சினிமாவைப் போன்றிருக்கிறது.  தெற்கு மும்பையில் உயர் வகுப்பினர் வசிக்கும் பகுதியில் உள்ள மிகப் பெரிய, ரசனையுடன் கூடிய அலங்கரிக்கப்பட்ட அபார்ட்மெண்ட் வீட்டில்  ஜெ.எஸ்.டபிள்யூ ஸ்டீல் (JSW Steel) நிறுவனத்தின் கருவூல இணை துணைத்தலைவராக இருக்கும் பிகாஷை நான் சந்தித்தேன்.

போக்ஸ்வாகன் வென்டோ,  ரெனால்ட் டஸ்டர் (Volkswagen Vento and Renault Duster)ஆகிய விலை உயர்ந்த கார்கள் அவரது காரேஜில் நிறுத்தப்பட்டிருக்கின்றன. 11 வயதாகும் சிண்டி என்று அழைக்கப்படும் பீகிள் நாய் ஒன்று, அறைக்குள் உள்ளேயும், வெளியேயும் சென்று வந்தபடி இருக்கிறது.  அங்கே தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் தொடர்பான விலை உயர்ந்த காஃபி டேபிள் புத்தகங்கள் உள்ளன. அவை அவரது புத்தகம் படிக்கும் ஆர்வத்தை வெளிப்படுத்துகின்றன.

https://www.theweekendleader.com/admin/upload/aug12-16-LEAD1.jpg

மும்பையில் உள்ள தமது அபார்ட்மெண்டில் பிகாஷ் சவுத்ரி (புகைப்படங்கள்: ரோஹன் போட்தார்)


“வேலை வாய்ப்புத் தொடர்பாக ஒரு பாதையை உருவாக்கிக் கொள்வது அல்லது ஒரு இலக்கை நிர்ணயித்துக்கொள்வது என்பதில் எல்லாம் எனக்கு நம்பிக்கை இல்லை.  ஆனால், என்னால் எவ்வளவு முடிகிறதோ அந்த அளவுக்கு முன்னேற வேண்டும் என்று முயற்சி செய்கிறேன்,” என்று சொல்கிறார் 40 வயதாகும் பிகாஷ். வாழ்வில் கடினமான பாதையைக் கடந்து வந்திருக்கிறார்.

அவரது குழந்தை பருவத்தின் நாட்களை அறிந்து கொள்ள, அவருடன் சில ஆண்டுகளுக்கு முந்தைய காலத்துக்குப் பயணிக்கலாம். அவரது வாழ்க்கை ஒரு அழகான கதைபோல இருக்கிறது. ஏழ்மையில் ஆழந்துள்ள, கொடிய, சூழலில் வசிக்கும் யாராவது ஒருவருக்கு அவரது கதை ஒரு நம்பிக்கையைத் தரலாம்.

சலவைத் தொழிலாளியின் மகனான பிகாஷ், கொல்கத்தாவில் 10க்கு 15 அடி சிறிய அறையில், இரண்டு சகோதரிகள், மாமாவின் குடும்பத்தினர் உட்பட 8  பேருடன் வாழ்ந்தவர்.

மூன்று தலைமுறைகளுக்கு முன்பு, பீகார் மாநிலம் அராரா மாவட்டத்தில் இருந்து அவரது குடும்பம் இடம் பெயர்ந்து, தெற்கு கொல்கத்தாவில் உள்ள பவானிப்பூர் பகுதியில் செட்டில் ஆனது. அந்த காலகட்டங்கள் மிகவும் கடினமானவை.  சில நேரங்களில் சிறிதளவு உணவுதான் இருக்கும். அப்போது, அதை குழந்தைகளுக்குக் கொடுத்து விட்டு, அவரது பெற்றோர், மாமா, அத்தை ஆகியோர் வெறும்வயிற்றுடன் இரவில் தூங்கச் செல்வதை பிகாஷ் பார்த்திருக்கிறார். 

https://www.theweekendleader.com/admin/upload/aug12-16-LEADcar.jpg

கொல்கத்தா ஐஐஎம்-ல் பட்டம் முடித்த உடன், பிகாஷ் ஒரு லாபகரமான பெருநிறுவனத்தில் பணிக்குச் சென்றார்


“என்னுடைய ஏழ்மையான பின்னணி அதிக அளவுக்கு எனக்குக் கவலை அளிக்கவில்லை,” என்கிறார் பிகாஷ். “எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல், எப்படிச் சந்தோஷமாக வாழ்வது என்பதை, என் தந்தையிடம் இருந்து நான் கற்றுக் கொண்டேன்.”

வாஷிங் மிஷின் இல்லாத அந்த நாட்களில், பிகாஷின் தந்தை, அருகில் உள்ள நடுத்தர வகுப்பினர் வசிக்கும் குடியிருப்பு பகுதிகளில் வீடு வீடாகச் சென்றுஅழுக்குத் துணிகளை சேகரித்து வந்து துவைத்து, அயர்ன் செய்து கொடுப்பார். அப்படி போகும் போது, 80-களில் கிரிக்கெட் வீரராக இருந்த அருண்லால், அவரது மனைவி தேப்ஜானி வீட்டுக்குச் சென்று அழுக்குத்துணிகளை எடுத்து வந்து அவரது தந்தை துவைத்து அயர்ன் செய்து கொடுப்பார். 

அவருடைய தாய் கேட்டுக்கொண்டதற்கிணங்க, அவர்களுடைய வீட்டுக்கு அருகில் உள்ள ஜூலியன் டே  பள்ளியில் பிகாஷ் சேர்க்கப்பட்டார். அங்கு 4வது கிரேடு வரை இலவசமாகப் படித்தார். அதன்பின்னர் 5வது கிரேடில் இருந்து கட்டணச் சலுகையில் படிக்க ஆரம்பித்தார்.

அவருடைய குடும்பத்தில் பிகாஷ் மட்டும்தான் முதன் முதலாக ஆங்கில மீடியம் பள்ளியில் படித்தார். எனினும், ஆங்கில மொழியில் படிப்பதற்கு அவருக்கு உதவி தேவைப்பட்டது. எனவே, தேப்ஜானியிடம் சொல்லி, மகன் பிகாஷுக்கு ஆங்கிலம் கற்றுத் தரும்படி கேட்டார். அப்போது பிகாஷுக்கு 12 வயது. இதுதான் அவரது வாழ்க்கையில் திரும்புமுனை ஏற்படுத்திய குறிப்பிடத்தக்க தருணம்.

அப்போது வரைக்கும் கூட, பிகாஷ்  அதிக கவனம் செலுத்தி பாடங்களைப் படிக்கவில்லை. ”வீட்டுப் பாடத்தை முடிப்பேன். தேர்வுகளில் சராசரியான மதிப்பெண் எடுப்பேன். அவ்வளவுதான்,” என்று அவர் நினைவு கூர்கிறார்.

“என்னுடைய குழந்தைப் பருவத்தில் இருந்தே எனக்கு விளையாட்டில் விருப்பம் உண்டு. குறிப்பாகக் கால்பந்து விளையாட்டு என்றால் எனக்கு மிகவும்  பிடிக்கும். பள்ளி முடிந்த உடன் பக்கத்தில் இருக்கும் பூங்காவுக்குச் சென்று, மாலை வரை விளையாடுவேன். வீட்டில் விளையாடப் போதுமான இடம் இல்லாததால்,  பூங்காவில் அதிக நேரம் விளையாடினாலும், அது குறித்து என் தாய் கவலைப்பட மாட்டார்.”

https://www.theweekendleader.com/admin/upload/aug12-16-LEADchair.jpg

இளம் வயதில், கால்பந்து விளையாட்டு வீரர் ஆக இருந்தபோது, 1989-1991-வரை கொல்கத்தாவில் இருந்த முதல் டிவிஷன் ஃபுட்பால் கிளப்பில் யெங்க் பெங்கால் அணிக்காக விளையாடி இருக்கிறார்


1989 முதல் 1991 வரை,  முதல் டிவிஷன் ஃபுட்பால் கிளப்பில், யெங்க் பெங்கால் (Young Bengal) அணிக்காக மிட்ஃபீல்டர் ஆக தேர்வாகும் அளவுக்கு போதுமான திறன் பெற்றிருந்தார்.

“கால்பந்து கிளப் மூலமாக ஆண்டுக்கு 10,000 ரூபாய் வரை நான் சம்பாதித்தேன். அதே நேரத்தில் கிளப்பில் உள்ள கேண்டீனில் இருந்து எனக்கு உணவும் கிடைத்தது,” என்கிறார் அவர். பயிற்சிக்குச் செல்லும்போது டிராவல் அலவன்ஸ், உள்ளூர் போட்டிகளில் பங்கேற்கச் செல்லும்போது, டி-சர்ட்கள்,  துண்டுகள் ஆகியவை கிடைக்கும். அந்த நேரத்தில் இவை எல்லாமே அவருக்கு உதவிகரமாக இருந்தன.

கிழக்கு பெங்கால் கிளப்பின் சப் ஜூனியர் டிவிஷனிலும் பிகாஷ் விளையாடினார். அவரது கால்பந்து விளையாடும் நண்பர்களும் பூங்காவும், அவருக்கு இரண்டாவது வீடாகவே மாறி விட்டன.

ஒவ்வொரு நாளும், பிகாஷுக்கு தேப்ஜானி ஆரஞ்ச் ஸ்குவாஷ் கொடுப்பார். படிப்பதற்காக பிகாஷுக்கு அவர் கொடுக்கும் ஊக்கமாக அது இருந்தது. அப்போது பிகாஷ் 8-ம் வகுப்புப் படித்துக் கொண்டிருந்தார். அருண் லால், அவரது மனைவி இருவரும் பிகாஷ் படிப்பதற்கான கல்விக் கட்டணம் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளையும் ஏற்றுக் கொண்டனர்.

லாலுக்கு குழந்தைகள் இல்லை. பிகாஷ் உடனான அவர்களின் பாசம் ஆழமாக வேரூன்றியது. அவர்கள் இருவரும், பிகாஷை பெற்றெடுக்காத அதே நேரத்தில் இரண்டாவது பெற்றோராகவே மாறிவிட்டனர்.   அப்படித்தான் பிகாஷ் அவர்களை அழைத்தார்.

அசெம்ப்ளி ஆஃப் காட் சர்ச் ஸ்கூலில் ( Assembly of God Church School) படித்த கடைசி பள்ளி காலம் முழுவதும் அவர்கள் கவனிப்பில் இருந்தார்.

வாழ்வாதாரத்துக்கான வேலை என்ற வகையில், மிகவும் அக்கறையுடன் படிக்க வேண்டும் என்றும், படிப்பு ஒன்றுதான் மிகவும் நம்பகத்தன்மை கொண்டதாக இருக்கும் என்றும் பிகாஷுக்கு  அருண்லால் அறிவுறுத்தினார். எனவே கால்பந்து விளையாடும் ஆர்வத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டு,  பிகாஷ் படிப்பில் கவனம் செலுத்தினார்.

https://www.theweekendleader.com/admin/upload/aug12-16-LEADdaughter.jpg

தமது மூன்று வயது குழந்தை அருணிமா உடன் பிகாஷ் விளையாடுகிறார். அருண் லால் உடனான பாசத்தால், தமது மகளுக்கு அந்தப் பெயர் வைத்தார்


கொல்கத்தா செயின்ட் சேவியர் கல்லூரியில் வணிகவியல் பட்டம் பெற்றார். படிப்பதில் கவனம் செலுத்தும் விதமாக, கல்லூரி காலம் முழுவதும் லால் குடும்பத்துடன் தங்கியிருந்தார். அதன் தொடர்ச்சியாக கல்கத்தா பல்கலைக்கழகத்தில் வணிகவியலில் முதுகலைப்பட்டம் பெற்றார்.

கல்லூரியில் படித்த காலம் முழுவதும், தமது சொந்த செலவுகளுக்காக, டியூஷன் எடுத்தார். தவிர கூடுதலாக பகுதி நேர வேலைகளையும் பார்த்தார். பட்டமேற்படிப்புப் படிக்கும்போது, லால் குடும்பத்தினர், கேட் தேர்வுக்கு அவரை தயார் படுத்தினர். அதிலும் அவர் எளிதாகப் பாஸ் செய்து,  இன்னொரு மைல்கலை எட்டினார். அவருடைய மதிப்பெண்ணுக்கு உயர் தரம் கொண்ட ஐஐஎம்-ல் (IIM) படிக்க இடம் கிடைத்தது. ஆனால், அவர் ஐஐஎம் கொல்கத்தாவில் படிப்பதையே விரும்பினார். அவரது இரண்டு குடும்பத்தினருக்கு அருகில் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அவர் இந்த முடிவை எடுத்தார்.

அதன்பிறகு வேறு எதுவும் அவரைத் தடுத்து நிறுத்தவில்லை. டாய்ச்சே வங்கியில் (Deutsche Bank)  பணியாற்றி, பின்னர், கிரெடிட் அக்ரிகோல் நிறுவனத்தில் பணியாற்றியவர்,  அதனைத் தொடர்ந்து எச்.டி.எஃப்.சி மற்றும் சிங்கப்பூரின் மல்டிநேஷனல் டி.பி.எஸ் வங்கி ஆகியவற்றில் பணியாற்றினார். அதன் பின்னர் தான் ஜெ.எஸ்.டபிள்யூ ஸ்டீல் நிறுவனத்தில் பணியில் சேர்ந்தார்.

அவர் வழக்கமான பெருநிறுவன அதிகாரி அல்ல. எப்போதெல்லாம் நேரம் கிடைக்கிறதோ அப்போதெல்லாம், தம்முடைய பள்ளிகால நண்பர்களுடன் சேர்ந்து இன்றும் கூட கால்பந்து விளையாடுகிறார். 

https://www.theweekendleader.com/admin/upload/aug12-16-LEADdog.jpg

புகைப்படத்துக்கு போஸ்: பிகாஷ் உடன் சிண்டி


பிகாஷ்  காம்னா என்பவரை திருமணம் செய்திருக்கிறார். அவரது மனைவி பிளாட்டினம் கில்டு நிறுவனத்தில், சந்தை ஆலோசனை தலைவராக இருக்கிறார். முன்பு தங்களிடம் இருக்கும் கொஞ்சப்பணத்திலும் பிகாஷுக்காக சினிமா, உணவகம் என செலவழித்த நண்பர்களுடன் இன்னும் பிகாஷ் நட்புடன் இருக்கிறார்.

நன்றியுணர்வையும் அன்பையும் வெளிப்படுத்தும் வகையில்,  அருண் லால், தேப்ஜானி-க்கு மெர்சிடிஸ் பென்ஸ் காரை, பிகாஷ் பரிசாகக் கொடுத்திருக்கிறார். அருண் லாலை வாழ்க்கை முழுவதும் நினைவு கொள்ளும் வகையில் தமது குழந்தைக்கு அருணிமா என்று பெயர் வைத்திருக்கிறார்.

அவர்கள் ஒரு பங்களா வாங்குவதற்கும் பிகாஷ் உதவி  செய்துள்ளார். தவிர பிகாஷ் தமது சொந்தத் தந்தைக்கும் ஒரு பிளாட் வாங்கிக் கொடுதிருக்கிறார்.

பிகாஷ் பகிர்ந்து கொள்வதிலும், கொடுப்பதிலும் விருப்பம் உள்ளவர். ஆனால், எந்தவித சத்தமும் இல்லாமல் உதவி செய்வார். “யாருக்கெல்லாம் உதவி தேவைப்படுகிறதோ அல்லது யார் என்னிடம் உதவி கேட்கிறார்களோ அவர்களுக்குச் சாத்தியமான என்னுடைய உதவிகளைச் செய்ய முயற்சி செய்வேன்,” என்கிறார் அவர். “அது குறித்து நான் வெளிப்படையாக பேச மாட்டேன்.”

சொற்களை விட செயல் வலிமையானது அல்லவா?


 
 
 
 
 

அதிகம் படித்தவை

  • From Pavement to pedastal

    இருளில் இருந்து வெளிச்சத்துக்கு

    கொல்கத்தாவின் ஆயிரக்கணக்கான நடைபாதை வாசிகளைப் போல மிகவும் ஏழ்மையான வாழ்க்கை வாழ்ந்தவர் ஜிலியன். இன்றைக்கு ஆண்டுக்கு கோடிக்கணக்கான ரூபாய்களைக் குவிக்கும் எழுத்தாளராக, பேச்சாளராக இருக்கிறார். ஜி.சிங் எழுதும் கட்டுரை

  • Innovating mind

    ஆர்வத்தால் அடைந்த வெற்றி

    ஆர்வம் காரணமாக எலெக்ட்ரானிக் சாதனங்களை பழுது நீக்க கற்றுக் கொண்ட கூடலிங்கம், அந்த திறனை முதலீடாகக் கொண்டு காற்று சுத்திகரிக்கும் சாதனத்தை தயாரிக்கத் தொடங்கினார். இன்றைக்கு வெற்றிகரமாக கொரோனா தொற்றை தடுக்கும் சாதனத்தை தயாரிக்கும் பணியில் இறங்கி உள்ளார். சோஃபியா டேனிஷ் கான் எழுதும் கட்டுரை

  • Man who worked in salon owns Rs 11 crore turnover company

    அழகான வெற்றி

    கிராமத்தில் சாணி வறட்டி தட்டியதில் இருந்து முடிதிருத்தும் வேலை வரை கௌரவ் ராணா செய்யாத தொழில் இல்லை. டிப்ளமோ படிப்பு முடித்து, இப்போது 11 கோடி வர்த்தகம் செய்யும் அழகுச்சேவை நிறுவனம் நடத்தும் 24 வயது இளைஞரின் வெற்றிக்கதை இது. பிலால் ஹாண்டூ கட்டுரை

  • Digital Success Story

    இணைந்த கைகள்

    நடுத்தரக் குடும்பங்களைச் சேர்ந்த ரோகித், விக்ரம் இருவரும் எம்.பி.ஏ., படிக்கும் போது நண்பர்கள் ஆனார்கள். இருவரும் சேர்ந்து டிஜிட்டல் சேவை நிறுவனத்தைத் தொடங்கினர். ஆரம்பத்தில் ஒரு லட்சம் ரூபாய் ஆண்டு வருவாய் ஈட்டியவர்கள் இன்று 12 கோடி ரூபாய் வருவாய் ஈட்டுகின்றனர். குர்விந்தர் சிங் எழுதும் கட்டுரை

  • Kamath started Rs 108 crore turnover icecream business with Rs 1 lakh

    ஐஸ்க்ரீம் மனிதர்

    கர்நாடகாவில் ஏழையாக பிறந்து, மும்பையில் இன்றைக்கு பிரபலமான ஐஸ்க்ரீம் நிறுவனத்தின் தலைவராக ஆகியிருக்கிறார் காமத். இது மண்குடிசையில் இருந்து மாளிகைக்கு உயர்ந்திருக்கும் அவரது வாழ்க்கைக் கதை. சோமா பானர்ஜி எழுதும் கட்டுரை

  • Bouquet shop started with Rs 5,000 is now doing Rs 200 crore turnover

    காதல் தந்த வெற்றி

    பீகார் மாநில இளைஞர் விகாஸ் குத்குத்யா, டெல்லியில் இருக்கும் தமது காதலிக்கு பிறந்த நாள் வாழ்த்துச் சொல்லப் போனார். அங்குதான் அவருக்கு ஒரு புதிய தொழில் யோசனை தோன்றியது. இன்று அவர் 200 கோடி ரூபாய் வருவாய் ஈட்டும் பொக்கே மலர் விற்பனை நிறுவனத்தின் உரிமையாளர். பிலால் ஹாண்டு எழுதும் கட்டுரை