மின் கட்டணத்தை 90 சதவீதம் குறைக்கும் கலப்பு ஏசி
10-Nov-2024
By நரேந்திரா கௌசிக்
புதுடெல்லி
இந்தூரில் உள்ள கண்டுபிடிப்பாளரான ப்ரனவ் மோக்ஷ்மார் ஒரு ஏசியை உருவாக்கி உள்ளார். அது வழக்கத்தில் உள்ள ஏசி கருவிகள் எடுத்துக்கொள்ளும் மின்சாரத்தில் பத்துசதவீதமே செலவழிப்பதாகச் சொல்கிறார் அவர்.
வேறு சொற்களில் சொல்வதென்றால் அவர் உருவாக்கியிருக்கும் ’காற்று கலப்பு குளிர்விப்பான்கள்’ நம் ஏசி கட்டணத்தில் 90 சதவீதம் சேமிக்கும்.
|
ப்ரணவ் உருவாக்கிய காற்று கலப்பு குளிர்விப்பான். ( புகைப்படங்கள்: சிறப்பு ஏற்பாடு) |
ப்ரனவ் உருவாக்கியிருக்கும் கலப்பு ஏசி தயாரிக்கும் வாயு இந்தியா என்கிற நிறுவனத்தின் இணையதளம், இது வழக்கமான குளிர்விப்பான்களை கம்ப்ரஸ்ஸருடன் இணைக்கும் புதிய தொழில்நுட்பத்தைக் கொண்டிருக்கும் உலகின் முதல் குளிர்விக்கும் கருவி என்று குறிப்பிடுகிறது.
இயற்கையான காற்றோட்டத்தை குளிர்விப்பதற்காகப் பயன்படுத்துகிறது. சூழலைக் கெடுக்கும் ஆபத்தான வேதிப்பொருட்களைத் தவிர்க்கிறது.
வாயு கிளாசிக், வாயு கம்பர்ட், வாயு ஸ்மார்ட் என மூன்று மாடல்கள் வீட்டு உபயோகத்துக்கும், தொழிற்சாலை உபயோகத்துக்கு வாயு எம் ஐ ஜி24 என்ற மாடலும் உள்ளன.
வழக்கமான 2 டன் ஏசி 7,20,000 வாட் மின்சாரத்தை ஒரு மாதத்துக்கு பயன்படுத்துகிறது. அதேசமயம் வாயு ஏசி பயன்படுத்துவதோ 75,000 வாட்கள்தான். முன்னது 720 யூனிட் மின்சாரத்தைச் செலவழிக்கும். வாயு ஏசியோ 75 யூனிட்களை மட்டும் பயன்படுத்தும்.
|
கண்காட்சியில் வாயு தயாரிப்புகள் |
அறைக்கு வெளியே வெப்பநிலை 30டிகிரி செல்சியஸுக்கும் 45 டிகிரி செல்சியஸுக்கும் இடையில் இருக்கும்போது வாயு ஏசிகள் அறைக்குள் வெப்பத்தை 16 டிகிரி செல்சியஸில் இருந்து 30 டிகிரி செல்சியஸூக்குள் வைக்க வல்லவை என்கிறார் ப்ரனவ்.
ப்ரனவ் வணிகவியல் பட்டதாரி. ஹெச்விஏசி (சூடேற்றம், குழாய்கள், ஏசி) பிரிவில் பட்டயம் பெற்றுள்ளார். சாம்சங், கேரியர், எல்ஜி ஆகிய நிறுவனங்களில் 1996- 2008 வரை பணிபுரிந்துள்ளார்.
வேலையை விட்டபின் ஏசி மாட்டியும் சர்வீஸும் செய்துதரும் ஏர் சொல்யூஷன்ஸ் என்ற நிறுவனத்தை தொடங்கினார்.
இந்த சமயத்தில் வாயு ஏசிக்கான ஆரம்ப மாடலை வடிவமைத்தார். தன் வீட்டிலும் அலுவலகத்திலும் பொருத்தினார்.
யாரும் முதலில் இதை நம்பவில்லை. ஆச்சரியப்பட்டார்கள். சிப்ளா நிறுவனத்தின் மூத்த அதிகாரி ஒருவர் இந்த ஏசியால் கவரப்பட்டார். அவருடைய யோசனையின் பேரில் ப்ரனவ் 2009-ல் காப்புரிமைக்கு விண்ணப்பித்தார். 2014-ல் அதன் ஆணை வெளியிடப்பட்டது.
|
டாக்டர் பிரியங்கா, வாயு நிறுவனத்தில் மேலாண்மை இயக்குநர். இந்த ஏசியின் காப்புரிமையை விற்கவேண்டாம் என்று தடுத்தவர் |
நிறைய நிறுவனங்கள் ப்ரனவிடன் காப்புரிமையைப் பெற முன்வந்தன. ஒரு முதன்மை நிறுவனத்துக்கு அவர் விற்க முன்வந்தார். ஆனால் அவரது மனைவி ப்ரியங்கா, விற்பதைத் தடுத்தார். அவர் மார்க்கெடிங்கில் எம்பிஏவும் நிர்வாகவியலில் பிஎச்டியும் பெற்றவர்.
வாயு இந்தியா என்ற சொந்த நிறுவனத்தைத் தொடங்கினார்கள்.
வங்கிகளை அணுகி நிதியுதவி கோரியபோது அவர்களுக்கு மறுப்பே பதிலாகக் கிட்டியது.
2015-ல் மத்தியபிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான், ஒரு கண்காட்சியில் இந்த ஏசியைக் கண்டார். அவர்களுக்கு நிதி உதவி கிட்டுவதில் பிரச்னை இருப்பதை அறிந்து ஒரு கோடி ரூபாய் கடன் வழங்குமாறு கார்ப்பரேஷன் வங்கிக்கு உத்தரவிட்டார்.
2016 ஜனவரியில் நிறுவனம் தொடங்கப்பட்டு சிறப்பாக நடைபெற்றுவருகிறது.
|
ஸ்ப்ளிட் ஏசியை உருவாக்க ப்ரியங்காவும் பிரனவும் திட்டமிடுகிறார்கள் |
வாயுக்குப் பதிலாக தண்ணீரைப் பயன்படுத்தி இயங்கும் ஸ்பிளிட் ஏசிக்கு இந்த நிறுவனம் காப்புரிமைக்காக காத்திருக்கிறது.
நட்சத்திரக் குறியீடு கொண்ட ஏசிகளை விட இந்த ஸ்ப்ளிட் ஏசி 50 சதவீத செலவிலேயே குளிர்விக்கும் என்கிறார் ப்ரனவ். ‘ ’ஆறுமாதங்களுக்கு ஒரு லிட்டர் நீர் இருந்தால் போதும்,’’ என்று அவர் சொல்கிறார்.
’’இந்த காப்புரிமை வந்தபின் இப்போது புழக்கத்தில் இருக்கும் ஏசிகளை இந்த புதிய மாடலுக்கு மாற்றமுடியும். உங்கள் பழைய ஏசியைத் தூக்கி எறியவேண்டாம். அதை 10 நட்சத்திரக் குறியீடு கொண்ட மின்சாரம் சேமிக்கும் ஏசியாக மாற்றித்தருவோம்,’’ உறுதி அளிக்கிறார் பிரனவ்.
2016-ல் மார்ச் – ஜூன் மாதங்களில் 500 யூனிட்களை ஐந்து மாநிலங்களில் விற்றுள்ளனர்.
இதுவரை வாயு இந்தியா ஒரு கோடி ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளது. 2017-18-ல் 20 கோடி ரூபாய் விற்பனை இலக்கு நிர்ணயித்துள்ளார்கள்.
தற்போதிருக்கும் ஏசிகள், குளிர்விப்பான்கள் தயாரிப்பாளர்களின் போட்டியை எப்படிச் சமாளிக்கிறார்கள்?
“அவர்கள் அவர்களுக்கு உரிய இடத்தில் உள்ளார்கள். எமது கலப்பு குளிர்விப்பான் புதிய தொழில்நுட்பம். இதன் விலை குளிர்விப்பானுக்கும் ஏசிக்கும் இடையில் வரும்.’’ என்கிறார் டாக்டர் ப்ரியங்கா.
இந்த கருவியின் ஆரம்பகட்ட மாடல் விலை 12,990. இதன் உயர்ரகங்கள் 20,000 – 26,990 வரை விலை உள்ளவை. ஆனால் மற்ற வழக்கமான ஏசிகள் 42,990 -95,000 வரை விலை உள்ளவை.
வாயு இந்தியாவுக்கு எட்டு மாநிலங்களில் 16 டீலர்கள் உள்ளனர். நாடு முழுக்க விரிவாக்கும் திட்டம் உள்ளது.
ரஷ்யாவில் பீட்டர்ஸ்பர்க்கில் நடந்த கண்காட்சியில் வாயு குளிர்விப்பான்கள் செயல்பாட்டைப் பார்த்தபின்னர் மேகாலயா அரசு ஷில்லாங்கில் ஒரு விளக்க உரைக்காக வாயு இந்தியாவை அழைத்துள்ளது. அந்த அரசின் ஆர்டர்கள் கிடைக்கும் என்று ப்ரனவும் பிரியங்காவும் நம்புகிறார்கள்.
|
மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடுவுக்கு ப்ரியங்கா விளக்கம் அளிக்கிறார் |
ஐக்கிய அரபு அமீரகம், ஆப்ரிக்கா போன்ற இடங்களில் இருந்தும் இது பற்றி ஆர்வம் எழுந்துள்ளது. விரைவில் இவற்றை ஏற்றுமதியும் செய்ய இருக்கிறார்கள்.
"இந்தூரைச் சேர்ந்த ஏஞ்சல் இன்வெஸ்டர் ஒருவரின் நிதி உதவிக்காகக் காத்திருக்கிறோம். அது கிடைத்ததும் நாட்டுக்கு வெளியேவும் விரிவு படுத்துவோம்,’’ என்கிறார் ப்ரியங்கா
ப்ரணவ் காப்புரிமை பெறுவதற்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இந்த வாயு ஏசியைப் பயன்படுத்தி வருகிறார் பிரணவின் பக்கத்து வீட்டுக்காரர் ஆன மருத்துவர் நிதின் சாகு. “இதைப் பயன்படுத்துவதில் எனக்கு எந்த பிரச்னையும் எழுவது இல்லை. 41 டிகிரி வெயிலிலும் அறைக்குள் சுகமாக இருக்கிறது,’’ என்கிறார்.
பிரதமர் நரேந்திர மோடியின் ஸ்டார்ட் அப் இந்தியா மற்றும் ஸ்டேண்ட் அப் இந்தியா திட்டத்தில் மத்தியபிரதேசத்தில் இருந்து தெரிவான ஒரே நிறுவனம் வாயு இந்தியா மட்டுமே. அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் சார்பில் தெரிவு செய்யப்பட்ட 40 புத்தாக்க கண்டுபிடிப்புகளில் இந்த நிறுவனமும் இடம் பெறுகிறது.
அதிகம் படித்தவை
-
குளிர்விக்கும் முயற்சி
மத்தியப்பிரதேசத்தின் இந்தூரின் ப்ரனவ் மோக்ஷ்மார் என்கிற கண்டுபிடிப்பாளர் உருவாக்கி உள்ள கலப்பு ஏசி கருவி, நமது மின் கட்டணத்தை 90 சதவீதம் சேமிக்க வல்லது. கடந்த ஆண்டு ஜனவரியில் உருவான இந்த நிறுவனம் ஒரு கோடி ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளது
-
கரண்டியால் எடுத்த வெற்றி
ப்ளாஸ்டிக் கரண்டிகளால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதைக் கண்டு வருந்திய நாராயணா பீசாபதி, அவற்றுக்கு மாற்றாக, கரண்டியையும் சாப்பிட்டால் என்ன என்று யோசித்தார். பிறந்தது புதிய தொழில்! ஆண்டுக்கு 2 கோடி வர்த்தகம் செய்கிறார் அவர். கட்டுரை: அஜுலி துல்சியான்
-
500 ரூபாயில் ஏசி!
வங்கதேசத்தில் கோடையில் 45 டிகிரி வெப்பநிலை உயரும். அங்கு டின் தகடுகளால் செய்யப்பட்ட குடிசைகளில் வாழும் ஏழைமக்கள் பெரும் சிரமப்படுவர். அவர்களுக்கு தனியார் நிறுவனம் ஒன்று வெறும் 500 ரூபாயில் ‘கூலர்கள்’ செய்து கொடுத்து அவர்களுக்கு உதவுகின்றது. ஜி சிங் தரும் கட்டுரை