500 ரூபாயில் ஓர் ‘ஏழைகளின் ஏர்கண்டிஷனர்’!
30-Oct-2024
By ஜி சிங்
கொல்கத்தா
ஏழைகளின் ஏர் கண்டிஷனர் என்று இதை அழைக்கலாம். வங்கதேசத்தில் மின்சாரம் இல்லாமல் அறைகளுக்குக் குளிரூட்டும் ஒரு ஏர்கண்டிஷனர் ஏழைகளுக்கு வரபிரசாதமாகத் திகழ்கிறது.
நியூயார்க்கில் உள்ள விளம்பர நிறுவனம் கிரே. அதன் வங்கதேசக் கிளை டாக்காவில் உள்ள ஐடி நிறுவனமான கிராமீன் இண்டெல் சோசியல் பிசினஸ் லிமிடட் என்கிற நிறுவனத்துடன் இணைந்து இந்த குளிரூட்டிகளை உருவாக்கி உள்ளது. இதை ஈகோ கூலர் என்று அழைக்கிறார்கள். கோடைக்காலத்தில் வெப்பநிலை 45 டிகிரிக்கும் மேல் உயரும்போது மின்வெட்டால் தவிக்கும் ஏழை மக்களுக்கு இது உதவியாக உள்ளது.
|
குடிசைக்குள் ஈகோகூலர் பொருத்தப்பட்டதால் புன்னகை செய்கிறார் ஒருவர்
|
ஆசிஷ் பால் என்பவர் கிரே நிறுவனத்தில் கிரியேட்டிவ் சூப்பர்வைசர். அவரது மனதில் உதித்தது இந்த ’ஈகோ கூலர்’ இது பயன்படுத்தப்பட்ட ப்ளாஸ்டிக் பாட்டில்களால் உருவாக்கப்படுகிறது. அறையின் ஜன்னலில் இதைப் பொருத்திவிட்டால் அறைக்குள் வெப்பநிலையை ஐந்து டிகிரி செல்சியஸ் குறைக்கிறது.
“என் மகனுக்கு வீட்டில் பாடம் சொல்லித்தரவந்த இயற்பியல் ஆசிரியர் வாயுக்களின் அழுத்தம், வெப்பநிலையின் விளைவுகள் ஆகியவை பற்றிச் சொல்லிக் கொடுத்தார். இதை நானும் கேட்டபோது எனக்கு இந்த யோசனை பிறந்தது. நாடுமுழுக்க மின்வெட்டு இருப்பதால் மின்சாரம் இல்லாமல் இயங்கும் இந்த ஈகோ கூலரை உருவாக்கினேன்,” சொன்னார் ஆசிஷ்.
பல்வேறு பரிசோதனைகளுக்குப் பின் 2015-ல் தற்போது பயன்பாட்டில் இருக்கும் மாதிரியை உருவாக்கினார்.
காற்றின் அளவை விரிவாக்குவதன்மூலம் அதன் அழுத்தத்தில் உருவாகும் மாறுதலின் மூலம் வெப்பத்தைக் குறைக்கலாம் என்கிற தத்துவம் மூலம் இது வேலை செய்கிறது.
இரண்டு லிட்டர் ப்ளாஸ்டிக் பாட்டில்களை பாதியாக வெட்டி அவற்றை வரிசையாகப் பொருத்துவதன் மூலம் தேவையான காற்று உள்ளே வந்து வெப்பநிலையைக் குறைக்கிறது.
ஏழு நாட்கள் தன் குழுவுடன் இந்த கருவியின் பயன்பாட்டை சோதனை செய்து உறுதிப்படுத்தினார் ஆசிஷ்.
|
ப்ளாஸ்டிக் போர்டு, ப்ளாஸ்டிக் பாட்டில்களைப் பயன்படுத்தி தன்னார்வலர்கள் இதை உருவாக்குகிறார்கள்
|
டின் தகடுகளால் ஆன குடிசைகளில் பெரும்பாலான ஏழைகள் வங்கதேசத்தில் வாழ்கிறார்கள். அவர்களுக்கு கோடைகாலம் கொடுமையானதாக இருக்கும் என்கிற ஆசிஷ், இந்த கூலர் மிகவும் உதவிகரமாக உள்ளது என்கிறார்.
நில்பாமாடி, தவுலாடியா, படூரியா, மடொன்ஹாடி, காலேயா போன்ற அதிகம் வெப்பநிலை நிலவும் கிராமங்களில் இக்கருவி பொருத்தப்பட்டுள்ளது. இணைய தளம் மூலமாக இந்த கூலர் செய்யும் வித்தையை உலகெங்கும் 25000 பேர் பதிவிறக்கம் செய்துள்ளனர் என்று கிரே டாக்க நிறுவனம் கூறி உள்ளது. இதை வணிகரீதியில் விற்பனை செய்யும் எண்ணம் அவர்களுக்கு இல்லை. ஏழைகளுக்குப் பயன் தருவதே இவர்களின் நோக்கம்.
கிராமப்புர வங்க தேசத்தில் கிராமீன் ஐடி நிறுவன ஊழியர்கள் இந்த கருவியை எப்படிச் செய்வது என்று சொல்லித்தரும் பணியிலும் ஈடுபட்டுள்ளனர்.
|
ஒரு குடிசையில் ஈகோகூலர் பொருத்தப்படுகிறது
|
கிரே டாக்காவின் கிரியேட்டிவ் இயக்குநர் ஜெய்யானுல் ஹக், “இந்த கூலர்கள் இந்த யோசனையின் நிலைத்த தன்மையின் காரணமாக வெகுவேகமாப் பிரபலம் ஆகிவருகின்றன,” என்று கூறுகிறார்.
வளரும் நாடுகளில் உள்ளவர்கள் இந்த முறையைப் பயன்படுத்தி, ஏழைமக்கள் வசதியாக வாழ வழி செய்யுமாறு கோரிக்கை வைக்கிறார்.
பயன்படுத்தப்பட்ட பாட்டில்களை வைத்துச் செய்யும் இந்த குளிரூட்டியைச் செய்ய 500 ரூபாய்தான் ஆகும்!
அதிகம் படித்தவை
-
500 ரூபாயில் ஏசி!
வங்கதேசத்தில் கோடையில் 45 டிகிரி வெப்பநிலை உயரும். அங்கு டின் தகடுகளால் செய்யப்பட்ட குடிசைகளில் வாழும் ஏழைமக்கள் பெரும் சிரமப்படுவர். அவர்களுக்கு தனியார் நிறுவனம் ஒன்று வெறும் 500 ரூபாயில் ‘கூலர்கள்’ செய்து கொடுத்து அவர்களுக்கு உதவுகின்றது. ஜி சிங் தரும் கட்டுரை
-
கரண்டியால் எடுத்த வெற்றி
ப்ளாஸ்டிக் கரண்டிகளால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதைக் கண்டு வருந்திய நாராயணா பீசாபதி, அவற்றுக்கு மாற்றாக, கரண்டியையும் சாப்பிட்டால் என்ன என்று யோசித்தார். பிறந்தது புதிய தொழில்! ஆண்டுக்கு 2 கோடி வர்த்தகம் செய்கிறார் அவர். கட்டுரை: அஜுலி துல்சியான்
-
குளிர்விக்கும் முயற்சி
மத்தியப்பிரதேசத்தின் இந்தூரின் ப்ரனவ் மோக்ஷ்மார் என்கிற கண்டுபிடிப்பாளர் உருவாக்கி உள்ள கலப்பு ஏசி கருவி, நமது மின் கட்டணத்தை 90 சதவீதம் சேமிக்க வல்லது. கடந்த ஆண்டு ஜனவரியில் உருவான இந்த நிறுவனம் ஒரு கோடி ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளது