மற்றவர்களால் செய்யக்கூடியவற்றைச் செய்து நேரத்தை நீங்கள் வீணாக்காதீர்கள்!
30-Oct-2024
By ரூப்ளீன் பிரசாத்
ஹைதெராபாத்
“நேரம் பறந்துசெல்கிறது என்பது கெட்ட செய்தி
நீங்கள்தான் அதன் பைலட் என்பது நல்ல செய்தி’’
மைக்கேல் அல்ட்ஷூலர்
இன்று உலகம் மிக வேகமாகிவிட்டது. நேரமே பணம் என்று ஆகிவிட்ட சூழலில் மக்கள் நேரத்தின் பின்னால் ஓடிக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் வாழ்க்கை காலண்டர்களாலும் கடிகாரங்களாலும் நிர்ணயிக்கப்படுகிறது.
நேரத்தை நிர்வகிக்கத் தொடங்குமுன் உங்கள் எதிர்காலத்துக்கான பார்வையை உருவாக்குங்கள் (படம்: freeimages.com/ Thomas van den Berg) |
பருவகாலங்களின் கழிதலில் காலம் அறியப்பட்ட ஒரு சமயம் இருந்தது, நேரத்தைப் போக்க என்ன செய்வது என்று தெரியாமல் இருந்தார்கள். ஆனால் இப்போது நேரமே கிடைக்காத சூழலில் எல்லோரும் பந்தயத்தில் ஓடிக்கொண்டிருக்கிறார்கள். நேரத்தை சேமிக்க என்ன வழியென்று தேடிக்கொண்டிருக்கிறார்கள்.
அய்யோ நிறைய வேலை செய்ய வேண்டி இருக்கிறதே, நிறைய கடமைகளை முடிக்கவேண்டுமே, நேரமே இல்லையே என்று அதிகம் பேர் எண்ணுகிறார்கள். வேலை அதிகரிக்க அதிகரிக்க, நாளில் இன்னும் அதிக நேரம் இருந்தால் நல்லது என விரும்புகிறார்கள். ’வேலை கடினமானது, இடையீடுகள் அதிகம். நேரமோ குறைவு,’ என்று இவர்களின் நிலையை சரியாக விளக்குகிறார் ஆடம் ஹோக்ஸ்சைல்டு. நிறைய செய்வதற்கு இவ்வளவு குறைவான நேரம் இருப்பது முன்னெப்போதும் நடந்தது இல்லை. என்று ஒருமுறை ரூஸ்வெல்ட் கூறினார்.
நேரம் உண்மையில் அரிதானது. வெற்றிகரமானவர்களுக்கும் வெற்றி பெறாதவர்களுக்கும் இடையில் நேரத்தைச் சரியாகப் பயன்படுத்தாமையே வித்தியாசமாக விளங்குகிறது.
நாள் முழுக்க வேலை நீள்கிறது; களைப்பாக உள்ளது என்று பலர் நினைக்கிறார்கள். இதெல்லாம் வேலை அதிகம் இருப்பதால் அல்ல. நேரத்தை சரியாக நிர்வகிக்கமுடியாததால்தான். ‘நமக்கெல்லாம் நேரம்தான் அதிகம் தேவைப்படுகிறது. ஆனால் அதை மிக மோசமாகப் பயன்படுத்துகிறோம்," என்று சரியாகச் சொல்கிறார் வில்லியம் பென்.
பொதுவாக வாழ்க்கை வேகமாகிவிட்டது. உலகம் போட்டி நிறைந்தது ஆகிவிட்டது. ஒவ்வொரு நொடியும் முக்கியம். போட்டியில் வெல்லவேண்டுமென்றால் கடின உழைப்பு மட்டும் போதாது. நேரத்தை சரியாக நிர்வகித்து, புத்திசாலித்தனமாக உழைக்கவேண்டும்.
நேரம் மிக அரிதான பொருள் என்று பீட்டர் ட்ரக்கர் ஒருமுறை சொன்னார். ஆனால் ஒரு நாளில் 24 மணி நேரங்கள் உள்ளன. சரியாகப் பயன்படுத்தினால் நிறைய நேரம் மிச்சம் இருக்கும்.
நேர நிர்வாகம் என்பது நீங்கள் அதைச் செய்ய முடிவெடுப்பதில் தொடங்குகிறது. தினந்தோறும் திட்டம் வகுத்துக்கொள்வது மிக முக்கியம். அதை எப்படி நிறைவேற்றுகிறோம் என கவனிக்கவேண்டும். தெண்டமாக செலவழியும் நேரங்களைக் கண்டறிந்து, உங்கள் நேரத்தை எப்படிச் செலவழிப்பது என்று தெரிவு செய்யத் தொடங்குவீர்கள்.
நேர நிர்வாகத்தை இப்படிச் சிறப்பாக விளக்கலாம்: முதலில் வந்தது என்ன? திசைகாட்டும் கருவியா? கடிகாரமா? நேரத்தை நிர்வகிக்கும் முன் எங்கு செல்கிறோம் என்று தெரிந்துகொள்வது முக்கியம். நமது தேர்வுகளும் இலக்குகளும் என்ன? நமது திசை என்ன என்று தெரிந்துகொள்ளவேண்டும்.
ஆகவே, நேரத்தை நிர்வகிக்கத் தொடங்குமுன் உங்கள் எதிர்காலத்துக்கான பார்வையை உருவாக்குங்கள். அதை முன்னிட்டு நீண்ட கால மற்றும் குறுகிய கால இலக்குகளை உருவாக்குங்கள். நேரத்தை நிர்வகிக்க இலக்குகள் முக்கியம். ஏனெனில் அவை நீங்கள் பயணிக்க ஒரு திசையையும் சென்றடைய ஓர் இலக்கையும் தருகின்றன. வேலைகளைச் சரியாகச் செய்யாததால்தான் சரியாக நேரத்தை நிர்வகிக்கமுடியவில்லை என்பதல்ல. சரியாகத் திட்டமிடாமல் வேலையைத் தொடங்காதீர்கள். கவனமான திட்டமிடல் மிக முக்கியம். தயாரிப்புக்காகச் செலவிடும் நேரம் எப்போதும் வீண்போவதில்லை.
காலையிலேயே அந்த நாளைத் திட்டமிட்டுத் தொடங்கி அதைப் பின்பற்றுபவன் கையில் மிகவும் பிசியான வாழ்க்கையின் குறுக்குவெட்டுப் பாதையை எளிதாகக் கடக்க வழிகாட்டும் ஒரு கயிற்றின் நுனி இருக்கிறது, என்று விக்டர் ஹ்யூகோ சொன்னார்.
ஒவ்வொரு நாளையும் திட்டமிடுங்கள். காலையில் என்னென்ன செய்யவேண்டும் என்று பட்டியல் போடுங்கள். எதைச் செய்து முடிக்கவேண்டும் என்பது பற்றி ஒரு புரிதல் வைத்துக்கொள்ளுங்கள். அதன் பின்னர் குறிப்பிட்ட கால அளவுக்குள் வேலை செய்யுங்கள். வேலைகளை பல பிரிவுகளாகப் பிரித்து செய்யுங்கள். நேரத்தைக் கவனத்தில் கொள்ளுங்கள். பெரிய வேலையை சின்ன சின்ன துண்டுகளாக எளிதாக்கிக்கொள்ளுங்கள். தேவையின் வரிசைப்பிரகாரம் அந்த நாளின் வேலைகளை முடியுங்கள்.
நீண்ட நேரம் வேலை செய்யாதீர்கள், வேலைகளை ஒன்றன் பின் ஒன்றாக தொடர்ந்து செய்யாதீர்கள். இரு வேலைகளுக்கு இடையில் போதுமான நேரம் இருக்கட்டும். சிறு ஓய்வுகள் எடுத்து ரிலாக்ஸாக இருங்கள்.
கட்டுப்பாடு நேர மேலாண்மையில் முக்கியமானது. சபலத்துக்கு இடம் கொடுக்காதீர்கள். முக்கியமில்லாத வேலைகளும் இடையூறுகளும் உங்களை ஆக்கிரமிக்கவிடாதீர்கள். முக்கிய வேலைகளை உடனே செய்யுங்கள். அடுத்தவர்கள் செய்துவிடக்கூடிய வேலைகளையும், தேவையே இல்லாத வேலைகளைச் செய்யாமல் இருப்பது மிக முக்கியம்.
அதிகம் உழைக்காதீர்கள். ஓய்வுக்குத் திட்டமிடுங்கள். ஆரோக்கியமாக வாழுங்கள். ஒழுங்காக சாப்பிடுங்கள். நிறைய ஓய்வெடுங்கள். இது அழுத்தத்தை அகற்றும். சோர்வைத் தவிர்க்கும். உங்கள் கவனம் அதிகரிக்கும். உற்சாகமாக இருப்பதால் உங்கள் திறன் மேம்படும்.
நேரம் இருப்பது மட்டுமல்ல நேர மேலாண்மை என்பது, அதைச் சரியாகப் பயன்படுத்துவதும் நேர்மறையான பலன்களைப் பெறுவதும்தான்.
எறும்புகளும்தான் சுறுசுறுப்பாக பிசியாக இருக்கின்றன. அது மட்டுமே போதுமானது அல்ல. நாம் எதற்காக பிஸியாக இருக்கிறோம் என்பது முக்கியம் என்றார் ஹென்றி டேவிட் தோரோ.
கட்டுரையாளர் முன்னேற்ற வழிகாட்டி, பேச்சாளர், மற்றும் கண்மருத்துவர். ‘Principles of Success Made Easy – 14 Easy Steps to Climb the Ladder of Success’ என்ற நூலை எழுதி உள்ளார்.
அதிகம் படித்தவை
-
எல்லாம் நேரம்தான்!
இன்றைய வேகமான உலகில் நேரத்தைச் சரியாக நிர்வகிப்பது மிகவும் முக்கியமானதாகும். இதைப் பற்றிக்கூறும் ரூப்லீன் பிரசாத் நேரத்தை மேலாண்மை செய்வது பற்றிய வழிகளை நமக்குச் சொல்கிறார். அத்துடன் அவற்றைப் பிரபலமானவர்களின் மேற்கோள்களை வைத்து விளக்குகிறார்