பிரியாணி தேசத்தை மிரட்டும் டிபன் சென்டர்
21-Nov-2024
By மா.ச. மதிவாணன்
திண்டுக்கல்
திண்டுக்கல் நகரில் தலப்பாகட்டி, வேணு, பொன்ராம், பங்காரு, துளசி, ஆச்சீஸ், ஜேபி என்பவை அறியப்பட்ட பிரபல பிரியாணி ஹோட்டல்கள். தலப்பாகட்டி பிரியாணி ஹோட்டல் வெளிநாடுகளிலும் கூட கிளைகளை திறந்திருக்கிறது. திண்டுக்கல்லுக்கு சென்றால் பிரியாணிதான் சாப்பிட வேண்டும் என்ற பொதுமக்களின் ரசனையை மாற்றி வருகிறது ஸ்ரீகாமாட்சி டிபன் சென்டர்.
வேணு பிரியாணி ஹோட்டல் அமைந்திருக்கும் அதே சாலையில் மொய்தீன் பிச்சை சந்தில் இந்த உணவகம் அமைந்துள்ளது. இந்த தெருவை பார்க்கும் போது ஏதோ அக்ரஹாரத்துக்குள் நுழைந்தது போல் நீண்டு கிடக்கிறது. வீடுகளும் பழமையானவையாக காட்சி தருகின்றன. இவற்றில் 100 ஆண்டுகளுக்கும் மேலான பழங்கால கட்டிடம் ஒன்றின் வாசலில் நம்மை வரவேற்கிறது ஸ்ரீகாமாட்சி டிபன் சென்டர்.
அசைவம், சைவப் பிரியர்களை ஒரு சேர சுண்டி இழுக்கும் அற்புத சுவைமிகு உணவகமாக திகழ்கிறது ஸ்ரீ காமாட்சி டிபன் சென்டர் (படம்: செந்தில் குமரன் - பிரதிநிதித்துவத்திற்காக மட்டும்)
|
நாம் உள்ளே நுழைந்த போது பெண்கள் குழந்தைகளுடன் வந்து இட்லி, சப்பாத்தி, ஊத்தப்பம், அடை என வரிசையாக ஆர்டர் செய்து விட்டு காத்திருப்பதை பார்க்க முடிந்தது. நாமும் இட்லியில் தொடங்குவோம் என ஆர்டர் செய்துவிட்டு பொறுத்திருந்தோம். ஓரிரு நிமிடங்களிலேயே சூடான இட்லி வாழை இலைக்கு வந்து சேர்ந்தது. என்ன குழம்பு இருக்கிறது? என நாம் கேட்க ஆட்களைத் தேடும் போது ‘நாட்டுக் கோழி’ குழம்பு, ஈரல் குழம்பு என அடுத்தடுத்து பெரும் பெரும் கிண்ணங்களில் வைத்தனர்.
இந்த இரண்டு குழம்புகளை ஊற்றினால் இட்லி அப்படியே கரைந்து வயிற்றுக்குள்ளே போவதே தெரியவில்லை. அடுத்ததாக மட்டன் குழம்பு சார் இது என்று வெள்ளை நிறத்தில் பாயாசம் போல் ஒரு கிண்ணத்தில் வைத்தனர். என்னங்க இது மட்டன் குழம்புக்கான நிறமே இல்லை என உரிமையாளர் பாலுவை அழைத்து கேட்டோம்.. புன்னகையுடனும் பொறுமையுடனும் பேச தொடங்கிய பாலு, இது ஒருவகை மட்டன் குழம்பு. முழுமையாக நாங்களே தயாரிக்கும் மசாலாக்களைத்தான் இங்கே பயன்படுத்துகிறோம்.
ஸ்ரீகாமாட்சி டிபன் சென்டரில் வயிற்றை மிரட்டாதது போல விலைகளும் அச்சுறுத்துவது இல்லை
|
மர செக்குகளில் ஆட்டி எடுக்கப்படும் எண்ணெய் மட்டும்தான் பயன்படுத்துகிறோம். பொதுவாக மட்டன், சிக்கன் போன்ற அசைவ உணவுகளை ஒரு அளவுக்கு சாப்பிட்டாலே மசாலா வயிற்றை அடைத்துவிடும். ஆனால் நமது உணவகத்தில் சொந்த தயாரிப்பு மட்டுமே என்பதால் நீங்கள் எவ்வளவு சாப்பிட்டாலும் ஒருபோதும் தெகட்டாது என கூறி முடிப்பதற்குள் நம்மை ஆச்சரியப்பட வைத்தது பக்கத்து டேபிளில் இருந்து வந்த ஆர்டர் குரல். சற்று முன்னர்தான் இதே வெள்ளை நிறத்திலான மட்டன் சாப்ஸை வெளுத்துக் கொண்டிருந்த அந்த வாடிக்கையாளர், இப்போது ஊத்தாப்பமும் தக்காளி குழம்பும் கொண்டு வாங்க என்றார்.
அசைவம் சாப்பிட்டுக் கொண்டே சைவத்தையும் ஒரு பிடி பிடிக்கிறாரே என வியப்பாக பார்த்துக் கொண்டிருக்க மீண்டும் நம் இருக்கை அருகே வந்தார் உரிமையாளர் பாலு. “நாங்கள் டிபன் மட்டும்தான் போடுகிறோம். காலை மற்றும் இரவு நேரம்தான். பொதுமக்களுக்கு சுவையிலும் விலையிலும் ஒரு சிறு அசவுகரியமும் இல்லாத வகையில் அசைவம், சைவம் இரண்டையும் தர வேண்டும் என்கிற ஒரே நோக்கத்தில்தான் 1990களில் இந்த ஹோட்டலை தொடங்கினோம். இன்றுவரை அதை நாங்கள் முழுமையாக கடைபிடிக்கிறோம்.
"காலை டிபனுக்கு மட்டன் சாப்ஸ், நாட்டு கோழி குழம்பு என அசைவத்தில் தருகிறோம். சைவம் விரும்புவோருக்கு இட்லி, புளிக்குழம்பு தருகிறோம். மாலையில் மட்டன், சிக்கன், முட்டை வகைகள் அனைத்தும் கிடைக்கும். அதேபோல் சைவ பிரியர்களுக்கு தக்காளி குழம்பு, கெட்டி சட்னி, அடை அவியல் என வெரைட்டியை தருகிறோம்," என கூறினார். அப்போது நம் இலையில் ஆம்லேட் வைக்கப்பட்டது. வழக்கமான உணவகங்களை விட இது சுவையாக இருக்கிறதே என நினைத்துக் கொண்டிருந்த போது சின்ன வெங்காய மூட்டைகள் வந்து குவிந்து கொண்டிருந்தன.
(படம்: செந்தில் குமரன் - பிரதிநிதித்துவத்திற்காக மட்டும்)
|
அதை நாம் உன்னிப்பாக கவனிப்பதை பார்த்த ரெகுலர் வாடிக்கையாளர் ஆறுமுகம், ”இங்க ஒரு போதும் பெரிய வெங்காயம் போடுவதே இல்லை. அதை பயன்படுத்துவது மிகவும் எளிது. ஆனால் சின்ன வெங்காயம் சீராக நறுக்கி அதை மட்டுமே பயன்படுத்துகின்றனர். சின்ன வெங்காயத்தை பயன்படுத்துவது கடினமானதும் கூட. அதான் இந்த ருசிக்கு மிக முக்கிய காரணம் என்றார்.
பொதுவாக திண்டுக்கல் பிரியாணி ஹோட்டல்களில் விலையை கேட்கும்போதே சற்றே தலை சுற்றத்தான் செய்யும். ஆனால் ஸ்ரீகாமாட்சி டிபன் சென்டரில் வயிற்றை மிரட்டாதது போல விலைகளும் அச்சுறுத்துவது இல்லை. கணிசமான விலையில் அனைவரும் சாப்பிட்டுச் செல்லும் வகையிலேயே இருப்பதும் திருப்தியையே தருகிறது.
6 இட்லியும் ஒரு ஆம்லேட்டும் சாப்பிட்டது போதும் என கை கழுவிவிட்டு கவுண்ட்டர் பக்கம் திரும்பிய போது வயிற்றில் இன்னும் இடம் இருக்கிறதே...சாப்பிட்ட மாதிரியே தெரியவில்லையே என தோன்றியது... அதனால் கூடுதலாக ஒரு ஊத்தப்பமும் இன்னொரு ஆம்லேட்டும் ஆர்டர் செய்தோம்.
ஸ்ரீகாமாட்சி டிபன் சென்டர் முகப்பு
|
எந்த உணவகமாக இருந்தாலும் கால் பிளேட் பிரியாணி சாப்பிடுவதற்கே வயிறு அடைத்துவிடுகிறது. ஆனால் மசாலாக்கள் நிரம்பிய அசைவ குழம்புகளை ஒரு கை பார்த்துவிட்டு சைவத்திலும் ‘உழவு’ செய்துவிட்டு வயிறு அடைக்காமல் இருப்பதே உணவு தயாரிப்பின் கைபக்குவம்தான் என்பதை உணர வைத்தது திண்டுக்கல் ஸ்ரீகாமாட்சி டிபன் சென்டர்.
அதிகம் படித்தவை
-
குளுகுளு இடங்கள்
இந்தக் கோடை விடுமுறையில் குளிர்பிரதேசங்களுக்குச் செல்ல விரும்புகிறீர்களா? உங்கள் மனதில் வழக்கமான இடங்களே தோன்றுகிறதா? இங்கே அவ்வளவாக பிரபலமாகாத ஏழு இடங்களைப் பற்றி ரேணுகா சிங் எழுதுகிறார். அவை வழக்கமான இடங்களுக்குப் பக்கத்தில் இருப்பவையே
-
அசத்தல் 'டிபன்’ ஸ்டால்
தமிழ்நாட்டின் பிரியாணி தேசம் என்கிற மகுடம் சூட்டி நிற்கிறது திண்டுக்கல். இதே நகரில் அசைவம், சைவப் பிரியர்களை ஒரு சேர சுண்டி இழுக்கும் அற்புத சுவைமிகு உணவகமாக 20 ஆண்டுகளுக்கும் மேலாக திகழ்கிறது ஸ்ரீ காமாட்சி டிபன் சென்டர்