Milky Mist

Thursday, 13 June 2024

தண்ணீர் சேமிப்புக்கு வாழ்வை அர்ப்பணித்தவர்!

13-Jun-2024 By ருச்சிதா
தும்கூர்

Posted 13 Apr 2017

மனித உடலில் எல்லோருக்க்கும் அறுபது சதவீதம் நீராலானது என்றால் இந்த மனிதருக்கு நூறு சதவீதம் நீர்தான் போலிருக்கிறது! அய்யப்ப மசாகி, 59, நீர் பற்றிய பாரம்பரிய அறிவை நவீன தொழில்நுட்பத்துடன் இணைத்து நீரை திறம்படப் பயன்படுத்தும் மாயாஜாலம் தெரிந்தவர்.

இவர் லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார். 500 ஏரிகளை உருவாக்கியது 2000 ஆழ்துளைக் கிணறுகளை நீர் நிரம்பச் செய்ததும்தான் இவரது சாதனை.  அதுமட்டுமல்ல 4200 இடங்களுக்கும் மேல் தண்ணீர் சேமிப்புத்திட்டங்களை உருவாக்கியிருக்கிறார் இவர்.

https://www.theweekendleader.com/admin/upload/sep18-15-LEAD1.jpg

மசாகி எழுபதுக்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள்,  200க்கும் மேற்பட்ட அடுக்குமாடிக் குடியிருப்புகள் ஆகியவற்றில்  மழைநீர் சேகரிப்புத் திட்டங்கள் அமைத்துள்ளார். படங்கள்: (ஹெச்.கே.ராஜசேகர்)


பெங்களூருவில் இருந்து 70 கிமீ தள்ளி இருக்கும் தும்கூரில் இருந்து அவரது சிலாமாத்துர் பண்ணைக்குக் கிளம்பினோம்.  அங்கு நீர் சேமிப்பு, பயன்பாடு குறித்து புதுமையான பரிசோதனைகளைச் செய்கிறார். தும்கூரில் இருந்து 90 கிமீ தொலைவில் இருக்கும் ஹிந்துபூர் சென்று அங்கிருந்து 26 கிமீ சென்றால் அந்த இடத்தை அடையலாம்.

கர்நாடகத்தில் இருந்து ஆந்திர எல்லைக்குள் நுழைந்ததும் சாலையில் முள் நிறைந்த கருவை மரங்கள். நிலம் வெப்பத்துடன், தூசியுடன் காணப்பட்டது. ஹைதராபாத் நெடுஞ்சாலையில் ஒரு உணவகத்தில் அய்யப்பா மசாகியைச் சந்தித்தோம்.

அங்கிருந்து 3 கிமீ பயணம் செய்தால் சிலாமாத்துர் கிராமத்தை அடையலாம். அங்குதான் அவரது பண்ணை உள்ளது.

இந்தியா இதுவரை இல்லாத நீர்ப்பிரச்னையை எதிர்கொள்ளும் நிலையில் உள்ளது. உலக மூலஆதாரங்கள் அமைப்பு இன்னும் 15 ஆண்டுகளில் தேவையைவிட 50 சதவீதம் தண்ணீர் குறைவாகக் கிடைக்கும் என்கிறது. மத்திய நீர் ஆணையம், 634 பில்லியன் கன மீட்டரில் இருந்து நீர் தேவை 2025-ல் 1,093 பில்லியன் கனமீட்டராக உயரும் என்கிறது. 2050ல் இது 1,447 பிகமீ ஆக உயருமாம். இது அச்சுறுத்தும் கணக்குதான்!

மசாகி நாட்டின் தண்ணீர்ப் பிரச்னையைத் தீர்ப்பேன் என்று சொல்கிறார். இந்த பண்ணையைப் பார்த்தால் நம்மால் அவர் சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியும். ஒரு ஆண்டுக்கு முன்பாக இந்த 200 ஏக்கர் நிலம் பாறைகள் நிறைந்து, காய்ந்த பனைகள் கொண்டதாக இருந்தது.  அதன் உரிமையாளர் நிலத்தை வாங்க வந்த மசாகிக்கு மரை கழண்டு விட்டதாகக் கருதினார்.

https://www.theweekendleader.com/admin/upload/sep18-15-LEAD2.jpg

நீர் சேமிப்புக்கு முக்கியமானது மழையின் ஒவ்வொரு துளியையும் சேமிப்பதே என்பது மசாகியின்  நம்பிக்கை


அந்த நிலத்தில் 84 ஏக்கர்கள் நிலம் பசுமையான தாவரங்களால் நிரம்பி உள்ளது. கேழ்வரகு போன்ற தானியங்கள், மரக்கன்றுகள், தக்காளி, வெங்காயம், மிளகாய், காய்கறிகள் விளைந்துள்ளன.  வெளியிலிருந்து இந்த பண்ணைக்குத் தண்ணீர் கொண்டு செல்லத் தேவை என்பதே முக்கியமானது.

மசாகி நான்கு குளங்களை வெட்டியுள்ளார். ஐந்து ஆழ்துளைக் குழாய்கள், பல நீண்ட குழிகள் ஆகியவற்றையும் அமைத்துள்ளார்.  இவை நீரை சேமிப்பதுடன் நிலத்தடி நீரையும் சேர்க்கின்றன. இங்கு பணியாற்றும் விவசாயிகளுக்கு மாதம் 16,000 ரூபாய் சம்பளம், தங்க இடம் அளிக்கப்பட்டிருக்கிறது. நிலத்தில் விளைவதை உணவுக்கு வைத்துக்கொள்ளலாம்.

மசாகியின் பல பணிகளை, திட்டங்களைக் கவனித்துக்கொள்ளும் நீர்ப் போராளிகள் இந்த பணியாளர்களை வழி நடத்துகின்றனர்.

’’ஏன் அவர்களுக்கு நீர்ப் போராளிகள் என்று பெயர் என்று யோசிக்கிறீர்களா?’’ என்று கேட்கும் மசாகி, ‘’அடுத்த உலகப்போர் தண்ணீருக்காக நடக்கும் என்று வாசித்துள்ளேன். எங்கள் நீர்ப்போராளிகள் கல்வி கற்ற விவசாயிகளும் இளம் ஆர்வலர்களும் அடங்கிய குழு. அவர்கள் இந்த போரைத் தடுக்க போராடுகிறவர்கள்.

‘’நீர் சேமிப்புக்கான புதிய வழிகளைக் கண்டு நம் விவசாயிகள் அஞ்சுகிறார்கள். பாரம்பரியமான அவர்களின் முறைகள் தோற்கும்போது தற்கொலை செய்துகொள்கிறார்கள். என்ன மழை கிடைக்கிறதோ அதை வைத்து நமது வறண்ட நிலங்களை உயிர்ப்பிக்க முடியும்.’’

வெற்றுச் சொற்கள் அல்ல. மசாகி, விவசாயம் தொடர்பான தவறான நம்பிக்கைகளை தொடர்ந்து உடைப்பவர். இயற்கையின் போக்கை சார்ந்துதான் விவசாயி இருக்கவேண்டும் என்ற நம்பிக்கையும் அதில் ஒன்று.

‘’நமது விவசாயிகள் மழை பெய்யும்போது சோம்பேறியாகவும் குளிர்காலத்தில் சொகுசாகவும் இருக்கிறார்கள். தண்ணீர் இல்லாத கோடையில் விழித்துக்கொள்கிறார்கள்.

”விவசாயத்தையும் ஒரு தொழிலாக ஏன் செய்யக்கூடாது. திட்டமிட்டு, முறையாக முதலீடு செய்யவேண்டும்.  மழைக்கு முன்னால் திட்டமிட்டு நிலத்தில் விழும் ஒவ்வொரு துளியையும் சேமிக்கவேண்டும். நிலத்தை நீர் சேமிப்புக் கிண்ணமாக மாற்றவேண்டும்.’’

வெறும் பேச்சு மட்டும் இல்லை. மசாகி செய்து காட்டி உள்ளார். மழைக்காடுகளில் வளரும் காபி, ரப்பர் ஆகியவற்றை சமவெளியிலும் வளர்த்துள்ளார்.  நவீன நீர்சேமிப்பு முறைகளை ஆய்வு செய்ததோடு அன்னா ஹசாரே, ராஜேந்திர சிங் போன்ற நிபுணர்களையும் சந்தித்து, தன் தேவைக்கு ஏற்ப ஆழ்துளைக் கிணறுகளில் நீர் சேமிக்கும் முறைகளை உருவாக்கி உள்ளார்.

https://www.theweekendleader.com/admin/upload/sep18-15-LEAD3.jpg

தன் ஒரு பணியிடத்தில் மசாகி. வறண்ட பூமி பசுமையாக…


பல ஆண்டுகளாக நீர் சேமிப்பை வலியுறுத்த பிரச்சாரம் செய்து வருகிறார். பயிற்சி வகுப்புகள், பயிலரங்குகள், செய்தித்தாள்களில் கட்டுரைகள் மற்றும் தெருநாடகங்கள் மூலமாக  அவர் இதைச் செய்கிறார். இதற்காக சிறு கவிதைகள் எழுதுவதுடன் பகீரதா என்கிற தொலைக்காட்சிப் படமும் எடுத்துள்ளார்.  நிலா, ஜலா, ஜனா(நிலம், நீர், மக்கள்) என்ற நூலும் எழுதி உள்ளார்.

மசாகி கர்நாடகத்தில் அடிக்கடி வறட்சிக்குள்ளாகும் கடக் என்ற மாவட்டத்தைச் சேர்ந்தவர். பெங்களூருவில் இருந்து 70 கிமீ தொலைவில் உள்ளது இது. கடுமையான வறுமையில் வளர்ந்தார். கேரட் விவசாயம் செய்த குடும்பம். நாள் முழுக்க இவரது அம்மா, கேரட்டுகளை சுத்தம் செய்வார். கைக்குழந்தையாக இருந்த மசாகியின் சப்தம் கேட்கக்கூடாது என்பதற்காக கேரட் இலைகளைப் போட்டு இவரது அப்பா மூடிவிடுவாராம்.

நான்கு வயதாக இருக்கையில் மசாகியை  காலையில் 3 மணிக்கே எழுப்பிவிடுவார்கள். அவர் அம்மாவுடன் பல மைல்கள் நீர் எடுக்கச் செல்லவேண்டும். அவர் அதை மறக்கவில்லை. ‘’அது தான் என்னை நீர் சேமிப்பு குறித்து சிந்திக்கத் தூண்டியது.’’

வறுமை மிகக்கொடியது. இரவில் மண்ணெண்ணெய் விளக்கை எரியவிட்டுப் படித்ததற்காக மசாகியை அவர் அப்பா அறைந்துவிட்டார். அப்போது ஆறாம் படிவம் படித்துக்கொண்டிருந்த அவர், வீட்டை விட்டு ஓடினார்.

பல வீடுகளில் வேலை பார்த்துக்கொண்டே தன்படிப்பையும் விடாமல் தொடர்ந்தார். கடக் நகரில் ஐடிஐ – பிட்டர் படிப்பு படிக்கும் வரை தன் படிப்புக்கு அவரே தான் சம்பாதித்துக்கொண்டார். பாரத் எர்த் மூவர்ஸ் லிமிடட் நிறுவனத்திலும் பின்னர் எல் அண்ட் டி கொமாட்சுவில் 1983-லும் வேலைக்குச் சேர்ந்தார். மெக்கானிகல் எஞ்சினியரிங் மற்றும் ஸ்டாட்டிடிகல் குவாலிட்டி கண்ட்ரோல் டிப்ளமோ படித்தது அவருக்கு பதவி உயர்வையும் கொடுத்தது. 2002-ல் அவர் ப்ரொஜக்ட் மேனேஜராக மாதம் 55,000 சம்பாதித்தார்.

இருப்பினும் அவரது மனம், நீர் மீது நாட்டம் கொண்டிருந்தது. சிறுவயதில் நீருக்காக நடந்ததை அவரால் மறக்க முடியவில்லை. வேலையை விட்டுவிட்டு நீர்சேகரிப்புத் திட்டங்களில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார்.

https://www.theweekendleader.com/admin/upload/sep18-15-LEAD4.jpg

மழை நீர் சேகரிக்கும் அமைப்பின் அருகே மசாகி

அவரது மனைவி அவரை முட்டாள் என்று அழைத்தார். ‘’எங்களுக்கு நான்கு குழந்தைகள். நான் அவர்களைக் கைவிடுவதாக அவள் நினைத்தாள். நாம் காலத்தால் முன்னோக்கி இருக்கும்போது நம்மை பைத்தியக்காரன் என்றுதான் உலகம் நினைக்கும். நான் நீரால் இயக்கப்பட்டேன். ஒரு நாள் என்னை புரிந்துகொள்வார்கள் என்று நம்பினேன்," என்கிறார் மசாகி.

அவருக்கு அங்கீகாரம் அசோகா உதவித்தொகை மூலம் வந்தது. அவரது ஆய்வுக்கும் திட்டங்களுக்கும் நிதி கிடைத்தது. 2005-ல் நீர் அறிவு அறக்கட்டளை பிறந்தது.  2008-ல் மழைநீர்த் திட்டங்களுக்காக ஒரு தனியார் நிறுவனத்தையும் உருவாக்கினார். அறக்கட்டளைக்கு நிதி உருவாக்க இந்த நிறுவனம். அடுக்குமாடி குடியிருப்புகள், வில்லாக்கள், தொழிற்சாலைகளில் மழைநீர் சேகரிப்புத் திட்டங்கள் உருவாக்கி அதன் மூலம் வரும் நிதி அறக்கட்டளையின் பணிகளுக்குச் செல்கிறது. தனித்துவம் மிக்க நீர்சேமிப்பு முறைகளால் நகர்ப்புறம், தொழில்துறை மற்றும் கிராமப்புறம் ஆகிய மூன்று பிரிவுகளிலும் நீர்த்தேவையைச் சமாளிக்க முடியும் என்று நிரூபித்துள்ளார்.

நீர் சேமிப்பு, வெள்ள மேலாண்மை, நீர் தர பாதுகாப்பு, நீர் பரிமாற்றம், நிலத்தடி நீர் மேலாண்மை, நீரை மறுசுழற்சி செய்தல், பொதுமக்கள் பங்கேற்பு, திறன் உருவாக்கல், ஆகியவை மசாகி செயல்படுத்தும் அம்சங்கள்.

பெங்களூருவில் உள்ள சஹாக்கர்நகரில் இருக்கும் இவர்களின் தலைமையகம் செய்திருக்கும் பணிகள் இதற்குச் சான்றாக உள்ளன.

கடந்த ஏழெட்டு ஆண்டுகளில் 4200 இடங்களுக்கும் மேல் இவர்கள் மழை நீர் சேகரிப்பு செய்துள்ளார்கள். அதில்  70க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள், 200க்கும் மேற்பட்ட அடுக்குமாடிக் குடியிருப்புகள், 50க்கும் மேற்பட்ட கல்வி நிலையங்கள் அடங்கும். 3000க்கும் மேற்பட்ட வீடுகளும் இதில் இடம்பெறுகின்றன. 1600க்கும் மேற்பட்ட நீர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடத்தி உள்ளனர். இதன் பின்னால் இருப்பது இந்த தனிமனிதரின் கனவுதான்.

கர்நாடகாவிலிருந்து ஆந்திரபிரதேசம் வரை இவரது வாடிக்கையாளர் பட்டியல் பெரிது.  விப்ரோ, டாடா, ராடெல் எலெக்ட்ரானிக்ஸ், எல் அண்ட் டி, எல் அண்ட் டி கொமாட்ஸு,  பெப்சி, நெஸ்ட்லே, எம்டிஆர் புட் லிமிடட், ஜிண்டால், ஏசிசி சிமிண்ட் போன்றவை இப்பட்டியலில் சில.

அவர் செய்திருக்கும் சாதனைகளை எழுதினால் ஒரு புத்தகமே போதாது. கென்னா மெட்டல் விடியா பிரைவேட் லிமிடட் என்ற நிறுவனம் பெங்களூருவில் உள்ளது.  அங்கு 25 லட்ச ரூபாய் நீருக்கான செலவு மிச்சப்படுத்தப்பட்டது. வறண்ட ஆழ்குழாய் கிணறுகள் நிறைந்தன. கனநீர் மென் நீராக மாறியது. அந்த நிறுவனத்துக்கு தேசிய நீர் சேமிப்பு விருது 2009-ல் கொடுக்கப்பட்டது.

அஜாக்ஸ் பியோரி எஞ்சினியரிங் பிரைவேட் லிமிடட் 96 லட்சம் லிட்டர் மழை நீரை சேமிக்கிறது. வறண்ட காலங்களில் சுற்றி இருக்கும் மக்களுக்கு நீர் அளிக்கிறது.

தார்வாடில் உள்ள இஸ்கான் அக்‌ஷய பாத்ரா அறக்கட்டளையில் நீருக்கான செலவு குறைந்ததால் மதிய உணவு செலவு ஏழு ரூபாயில் இருந்து மூன்று ரூபாயாகக் குறைந்தது.  அங்கு ஒரு ஏரி உருவாக்கியதால் சுற்றுப்புறத்தில் 2 கிமீ தொலைவில் உள்ள  கிணறுகளில் நீர் உள்ளது.

https://www.theweekendleader.com/admin/upload/sep18-15-LEAD5.jpg

 ‘வறண்ட ஆழ்குழாய் கிணறுகளின் மருத்துவர்’ என்று அகமதாபாத் ஐஐடி பாராட்டியது

யெலகங்காவில் உள்ள ஜனப்ரியா ஹெவன்ஸ் குடியிருப்பில் அனைத்து கிணறுகளிலும் ஆண்டு முழுக்க நீர் உள்ளது. இந்த வெற்றிக்கதை நேஷனல் ஜியகிரபி சானலில் ஒளிபரப்பானது.

ஜம்னாலால் பஜாஜ் விருது, கர்நாடக அரசின் ராஜ்யோஸ்தவா விருது, ஆக்ஸ்பாம் பெலோஷி போன்றவை அவர் பெற்ற விருதுகளில் சில.

பெங்களூர் அறக்கட்டளை அவரை தண்ணீர் காந்தி என்று அழைத்தது. ஏஐடபிள்யூஏ அவரை ஜல ஜகத்குரு என்றது. அகமதபாத்  ஐஐஎம், வறண்ட ஆழ்குழாய் கிணறுகளின் மருத்துவர் என்று பாராட்டியது.
இவ்வளவு பாராட்டுகள் இருந்தாலும் அரசு அவர் உருவாக்கி உள்ள நீர்ச்சேமிப்பு முறைகளில் அக்கறை காண்பிக்கவில்லை.

அவரது நான்கு பிள்ளைகளும் மசாகியின் பணிகளில் தங்களை ஈடுபடுத்திக்கொண்டுள்ளனர். இரண்டாவது மகளும் அவரது கணவரும்  சிலமாத்தூர் பண்ணையில் பணிபுரிகின்றனர். நான்காவது மகன் நவீன் சந்திரா சென்னையில் கிளைப்பணிகளைக் கவனிக்கிறார்.

"நாம் ஏழ்மையில் பிறந்திருக்கலாம். நாம் இறப்பதற்கு முன்னால் செய்யும் நற்செயல்களே முக்கியமானவை,’’ என்கிறார் மசாகி. அவரது நற்செயல்களை நீரைப்போல் நிற்காமல் வழிந்தோடிக்கொண்டே இருக்கின்றன.


 
 
 
 
 

அதிகம் படித்தவை

  • Man who dedicated his life for water conservation

    நீர் சேமிப்பாளர்

    4200 இடங்களுக்கும் அதிகமாக நீர் சேமிப்புத் திட்டங்களைச் செயல்படுத்துவது சாமான்ய வேலை இல்லை. ஆனால் அய்யப்பா மசாகி இதை விட அதிகமாகச் செய்துள்ளார். 119 கிமீ பயணம் மேற்கொண்ட பின் இந்த ‘ஆழ்துளைக் கிணறுகளின் மருத்துவர்’ பற்றி ருச்சிதா எஸ் எழுதுகிறார்