Milky Mist

Thursday, 25 April 2024

68 சொகுசுக் கார்களுடன் பரபரப்பான வாடகைக்கார் தொழில் ! ஒரு முடிதிருத்தும் கலைஞரின் வெற்றிக்கதை

25-Apr-2024 By பி.சி. வினோஜ்குமார்
பெங்களூரு

Posted 08 Aug 2017

ரமேஷ் பாபு நாட்டிலேயே மிகவும் பணக்கார முடிதிருத்துபவராக இருக்கலாம். ஆனால் அவர் முடிவெட்ட 75 ரூபாய் மட்டுமே வாங்குகிறார். பெங்களூருவில் செயிண்ட் மார்க் சாலையில் உள்ள நகரின் பழைய க்ளப்களில் ஒன்றான பிரபலமான பௌரிங் இன்ஸ்டிடியூட்டில் அவரது கடை உள்ளது.

42 வயதாகும் இந்த முடிதிருத்தும் கலைஞர் தினமும் எட்டு பேருக்கு முடிவெட்டுவார். காலையில் 2-3 மணி நேரம், மாலையில் 2-3 மணி நேரம் மட்டுமே இந்தவேலை செய்வார். ஆனால் இந்த இரு பணி நேரங்களுக்கு இடையில் அவர் என்ன செய்கிறார் என்பதுதான்  மிகமுக்கியம். அதில் தான் அதிசயம் நிகழ்கிறது.

https://www.theweekendleader.com/admin/upload/mar8-13-ramesh.jpg

ரமேஷ் பாபுவிடம் 68 சொகுசு கார்கள் உள்ளன


பௌரிங் கிளப்பில் கத்தரிக்கோல் பிடிக்கும் இந்த மனிதர் இந்த இடைவெளி நேரத்தில் வாடகைக்கு சொகுசு கார்கள் விடும் நிறுவனத்தின் சிஇஓவாக வேறொரு அலுவலகத்தில் அமர்கிறார். இந்த நிறுவனத்திடம் 3.3 கோடி மதிப்புள்ள ரோல்ஸ் ராய்ஸுடன் மெர்சிடிஸ், பிஎம்டபிள்யூ, போக்ஸ்வாகன், இன்னோவா போன்ற கார்களும் உள்ளன.

ரமேஷ் டூர்ஸ் அண்ட் ட்ராவல்ஸ் பிரைவேட் லிமிடட் என்கிற அவரது இந்த நிறுவனத்திடம் 127 கார்கள் உள்ளன. 120 பேர் வேலை செய்கிறார்கள். இவர்களில் பெரும்பாலானோர் மாதம் 14,000த்துக்கும் குறையாமல் சம்பளமும் கூடுதலாக படிகளும் பெறும் ஓட்டுநர்கள்.

“இந்த துறையில் நாங்கள் முதன்மை நிறுவனங்களில் ஒன்றாக இருக்கிறோம்,” என்கிறார் ரமேஷ். இவர் தன் ஏழு வயதில் தந்தையை இழந்து, வறுமையுடன் போராடி இந்த நிலைக்கு வளர்ந்தவர்.

அவரது வளர்ச்சி கடும் உழைப்பு, வெற்றி மீதான தீவிர ஆசை, சில நல்லிதயம் கொண்டவர்களின் உதவி ஆகியவற்றால் உருவானது.


“எங்களுக்கு பிரிகேடியர் சாலையில் ஒரு முடி திருத்தும் நிலையம் இருந்தது. மாடர்ன் ஹேர் ட்ரெஸ்ஸர்ஸ் என்று பெயர். அது எங்கள் தாத்தா 1928-ல் ஆரம்பித்தது. என் அப்பா மரணம் அடையும் வரை அதை நடத்திக்கொண்டிருந்தார். அப்போது எனக்கு வயது 7. இரண்டு தம்பிகளும் இருந்தார்கள்.
 

“அவர் இறந்த பின் எங்களை வளர்க்கும் பொறுப்பு  அம்மா மீது விழுந்தது. அவர் பல வீடுகளில் வேலைக்குச் சென்றார். பல ஆண்டுகள் வீட்டில் ஒரு வேளைதான் சாப்பாடு. அது எனக்குப் பழகிவிட்டது. இப்போது கூட காலை உணவு நான் சாப்பிடுவது இல்லை’’.


வீட்டில் இப்படிச் சூழல் இருக்கையிலும் ரமேஷ் நன்றாகப் படித்தார். முதல் மூன்று ரேங்குகளுக்குள் வருவார். விளையாட்டிலும் ஆர்வம் காட்டினார். பள்ளியில் கால்பந்து விளையாடினார். கர்நாடகா சார்பில் 1500 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் ஜூனியர் அணியில் தேசியப்போட்டியில் கலந்துகொண்டார்.
 

13 வயதில் அவர் செய்தித்தாள் போடும் வேலையையைச் செய்து மாதம் 60 ரூ சம்பாதித்தார். அவரது அம்மா கூடுதலாக சின்ன சின்ன டெய்லரிங் வேலையும் செய்தார். ஆனாலும் குடும்ப சூழல் மாறவில்லை.

ஐந்தாம் வகுப்புப் படிக்கும்போது நடந்த சம்பவம் அது. குடும்ப சலூனை அவரது சித்தப்பா நடத்திக்கொண்டிருந்தார். தினமும் இவர்கள் பங்காக 5 ரூ கொடுப்பார்.
 

https://www.theweekendleader.com/admin/upload/mar8-13-ramesh1.jpg

பெங்களூருவுக்கு வரும்போது பாலிவுட் நடிகர்களும் முக்கிய தொழிலதிபர்களும் இவரது கார்களையே பயன்படுத்துகிறார்கள்


 

“ஐந்தாம் வகுப்புப் படித்தபோது முதன்முதலாக மை பேனாக்கள் வாங்க வேண்டி வந்தது. நாங்கள் அதுவரை பென்சில்கள் மட்டும் பயன்படுத்திக்கொண்டிருந்தோம்.  நான் எங்கள் கடைக்குச் சென்று அங்கு வேலை பார்த்தவரிடம் பேனா வேண்டும் என்று கூறினேன்.

"அவர் 3.50 ரூபாய் கொடுத்தார். அதைக்கொண்டு ஒரு பைலட் பேனா வாங்கினேன். அன்று மாலை அங்கு சென்றபோது என் சித்தப்பா கோபமாக இருந்தார். அவர் என் பேனாவைப் பிடுங்கிக்கொண்டு உனக்கு இதுபோன்ற விலை உயர்ந்த பேனா தேவை இல்லை என்று சொல்லி சாதாரண பேனா ஒன்றைத் திணித்தார். வாழ்க்கையில் வெற்றி பெறவேண்டும் என்று என்னை வெறிகொள்ள வைத்தது அச்சம்பவம்,” என்கிறார் ரமேஷ். அவர் தன் குழந்தைகளை இன்று  உயர்ந்த பள்ளிகளில் படிக்க வைக்கிறார்.

அவருக்கு இரு மகள்கள், ஒரு மகன். மூத்த மகள் பத்தாம் வகுப்பு படிக்கிறார். கோத்தகிரியில் ஒரு பள்ளியில் படிக்கும் அவருக்கு ஆண்டுக்கு 1.5 லட்சரூபாய் கல்விக்கட்டணம் ஆகிறது.

ஆரம்பத்திலேயே ரமேஷ் முடிதிருத்தக் கற்றுக்கொண்டுவிட்டார். 1990-ல் தங்கள் குடும்பக் கடையின் பொறுப்பை ஏற்றார். அதற்கு இன்னர்ஸ்பேஸ் என்று பெயர் மாற்றம் செய்தார். இளைஞர்கள் அவர் கடையை மொய்த்தனர். சிலசமயம் விடிகாலை 3 மணி வரைக்கும் கூட அவர் வேலை செய்ய வேண்டி இருந்தது.

அவர் பியுசி படிப்பை  முடிக்கவில்லை. ஆனாலும் பின்னர் எலெக்ட்ரானிக்ஸில் ஒரு பட்டயம் படித்து முடித்தார்.

சில ஆண்டுகள் அவர் ஒரு தனியார் நிறுவனத்தில் விற்பனையாளராகவும் வேலை பார்த்தார். 1995-ல் ஒரு மாருதி ஆம்னியை கடன் வாங்கி எடுத்தது திருப்புமுனை. தன் நலம் விரும்பிகள் ஆலோசனைப்படி அதை வாடகைக்கு விட்டார்.

அவரது முதல் வாடிக்கையாளர் இண்டெல். பெங்களூரில் சின்ன அலுவலகம் அதற்கு இருந்தது. இண்டல் வளர்ந்தபோது அவரது தொழிலும் வளர்ச்சி பெற்றது.

“நாங்கள் கார் கொடுத்தபோது இண்டலில் 4 பணியாளர்கள் மட்டும் இருந்தனர். ஆனால் அது வேகமாக வளர்ந்தது. 2000 ஆண்டு வரை அவர்களின் போக்குவரத்துக்கு நாங்களே வாகனங்கள் அளித்தோம். அப்போது அவர்களிடம் 250 பணியாளர்கள் இருந்தனர். எங்களது 25 கார்கள் அவர்களுக்குப் பணிபுரிந்தன,” அவர் நினைவு கூர்கிறார்.

 

https://www.theweekendleader.com/admin/upload/mar8-13-ram.jpg

ரமேஷ் எப்போதும் கடந்துவந்த பாதையை மறப்பதில்லை



இந்நிலையில் ரமேஷின் வாடிக்கையாளர் பட்டியல் நீண்டுகொண்டே போனது. 2004-ல் அவர் தன் முதல் மெர்சிடிஸ் பென்ஸ் காரை வாங்கி சொகுசு கார்கள் வாடகைத் தொழிலில் நுழைந்தார். இன்று அவரிடம் 68 சொகுசு கார்கள் உள்ளன. பாலிவுட் நடிகர்கள், பிரபலங்கள், முக்கிய தொழிலதிபர்கள் பெங்களூரு வரும்போது இவரது காரில்தான் பயணம் செய்கிறார்கள்.

1997-ல் பௌரிங் இன்ஸ்டிடியூட்டில் முடிதிருத்தும் நிலையத்தை அவர் தொடங்கினார். முன்பு நடத்திய கடையை பார்க்கிங் இடம் இல்லாததால் மூடிவிட்டாலும் இந்த கடையை அவர் மூடுவதாக இல்லை.

ஏன் இன்னமும் முடி திருத்தும் தொழிலைச் செய்கிறீர்கள் என்று கேட்டோம்.

“என் செய்யக்கூடாது? என்னை உருவாக்கிய தொழிலை நான் எப்படி மறக்கமுடியும்?”

அவர் தனக்கு கஷ்ட காலத்தில் உதவி செய்தவர்களையும் மறக்கவில்லை. இரண்டு பெயரை அவர் சிறப்பாகக் குறிப்பிடுகிறார்: திருமதி நந்தினி அசோக், திரு பிலிப் லூயிஸ்.


நந்தினிக்கும் பிலிப்புக்கும் தலைவணங்குகிறோம். நீங்கள் தகுதியான ஒருவருக்கே உதவி செய்துள்ளீர்கள்!


 
 
 
 
 

அதிகம் படித்தவை

  • வறுமையில் இருந்து செழிப்புக்கு

    இப்போது 3600 கோடி ரூபாய் மதிப்புள்ளதாக இருக்கும் தைரோகேர் நிறுவனத்தை உருவாக்கியவரான ஆரோக்கியசாமி வேலுமணி, ஒரு கையில் சிலேட், மறு கையில் மதிய உணவு சாப்பிட தட்டு- ஆகியவற்றுடன் அரசுப்பள்ளிக்குச் சென்றவர். அவரது வெற்றிக்கதையை விளக்குகிறார் பி சி வினோஜ் குமார்

  • Best seller

    கூச்சத்தை வென்றவர்

    டெல்லியைச் சேர்ந்த பாவனா ஜூனேஜா சிறுவயதில் மிகவும் கூச்சம் சுபாவம் கொண்டவராக இருந்தவர். அவருடைய தாயின் வழிகாட்டலில் சிறந்த விற்பனையாளராக மாறி சாதனை புரிந்தார். இன்றைக்கு அவர் ரூ.487.5 கோடி ரூபாய் ஆண்டு வருவாய் ஈட்டும் வணிக சாம்ராஜ்யத்தையே உருவாக்கி இருக்கிறார். சோஃபியா டேனிஷ்கான் எழுதும் கட்டுரை.

  • success through Kitchen

    பணம் சமைக்கும் குக்கர்!

    வெவ்வேறு மாநிலங்களை சேர்ந்த இரு இளைஞர்கள் சென்னையில் பொறியியல் படிக்கும்போது நண்பர்களாகினர். கொரோனா ஊரடங்கின்போது வேலை இல்லை. எனவே  சொந்தமாக தொழிலைத் தொடங்கி இ-வணிகத்தில் லாபம் ஈட்டி எட்டுமாதத்துக்குள் 67 லட்சம் ரூபாய் ஆண்டு வருவாய் பெற்றிருக்கின்றனர். பார்த்தோ பர்மன் எழுதும் கட்டுரை

  • He quit Rs 70,000 salaried job to start a business that is nearing Rs 10 crore turnover

    விளம்பரங்கள் தந்த வெற்றி

    நடுத்தரக் குடும்பத்தில் பிறந்து, மாதம் 70 ஆயிரம் ரூபாய் சம்பளத்துடன் பணியில் இருந்த தீபக், தமது வேலையை ராஜினாமா செய்து விட்டு டிஜிட்டல் விளம்பர நிறுவனம் தொடங்கினார். அவரது நிறுவனம் இந்த நிதியாண்டில் 10 கோடி ரூபாய் வருவாய் ஈட்ட திட்டமிட்டுள்ளது. ஜி.சிங் எழுதும் கட்டுரை

  • Flying top

    பீனிக்ஸ் பறவை!

    போபாலை சேர்ந்த இளம்பெண் கனிகாவுக்கு இளம் வயதில் கேன்சர் நோய் ஏற்பட்டது. எனினும் அதை நினைத்து முடங்கி விடாமல், அதோடு போராடி வென்றவர், விமான போக்குவரத்து நிறுவனம் தொடங்கி ஆண்டுக்கு ரூ.150 கோடி வருவாய் ஈட்டுகிறார். சோபியா டேனிஷ்கான் எழுதும் கட்டுரை

  • Jute entrepreneur

    சணலில் ஒரு சாதனை

    பிறரிடம் சம்பளம் வாங்கும் வேலையை விட சொந்த தொழில் சிறந்தது என்ற எண்ணம் தோன்றியதால், வேலையை விட்டு விலகியவர் சவுரவ் மோடி எனும் இளைஞர். இன்றைக்கு சணல் பைகள் தயாரிக்கும் தொழிலில் வெற்றி பெற்றிருக்கிறார். உஷா பிரசாத் எழுதும் கட்டுரை