Milky Mist

Thursday, 28 March 2024

வைகை நதிக்கரையில் தமிழ் நாகரிகம்

28-Mar-2024 By உதய் பாடகலிங்கம்
சென்னை

Posted 01 Jul 2017

வரலாறு என்று இதுவரை சொல்லப்பட்டுவந்தவை, இனி புனைவுகள் ஆகலாம். ஆதியில் நாம் எங்கிருந்தோம் என்று, தமிழர்கள் தங்களுக்குள் கேட்டுக்கொண்டிருக்கும் கேள்விகளுக்குப் பதில்கள் கிடைக்கலாம். மொத்தத்தில், தமிழ் இனம் எத்தனை பழமையான நாகரிகம் கொண்டது எனத் தெரிய வரலாம்.  தமிழகத்தின் ஆதாரபூர்வமான வரலாற்றை 3000 ஆண்டுகளுக்கு முன்பாகத்  தொடங்க வைத்திருக்கிறது தமிழ்நாட்டின் கீழடியில் நிகழ்ந்துவரும் அகழாய்வு.

கடந்த 2010ம் ஆண்டுக்குப் பின்பு வைகை தோன்றுமிடம் தொடங்கி கடலில் கலக்கும் இடம் வரை மத்திய அரசின் தொல்பொருள் ஆய்வுத்துறை (Archaelogical Survey of India)யைச் சார்ந்த அமர்நாத் ராமகிருஷ்ணன் உள்ளிட்ட சிலரால் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது.

தமிழர்கள் நீர் தேக்குவதற்காக தொட்டிகள் கட்டி பயன்படுத்தியதற்கான கீழடி சான்று (படங்கள்: பி.ஜி.சரவணன்)


ஒவ்வொரு ஊரிலும் ஏதாவது சான்றுகள் கிடைப்பது தொடர்ந்திருக்கிறது. இதன்பிறகே, வைகை நதிக்கரை முழுவதும் மக்கள் வாழ்ந்ததற்கான அடையாளங்கள் கிடைக்கக்கூடும் என்ற நம்பிக்கை உறுதிசெய்யப்பட்டு, கடந்த 2014ம் ஆண்டு கீழடியில் அகழாய்வு தொடங்கியது. ”சுமார் 580 கிராமங்கள்ல அகழாய்வு நடத்தலாம்னு முடிவு பண்ணாங்க. ஒரு நதிக்கரையோரமா இத்தனை ஊர் இருந்ததாகச் சொல்வதே புதுசு,” என்கிறார் கீழடி அகழாய்வு பற்றிய தகவல்களைத் தொகுத்துவரும் பேராசிரியர் பெரியசாமி ராஜா.

மேட்டுப்பகுதியில் ஆய்வு

அகழாய்வு செய்யவேண்டிய நிலம் சமபரப்புடைய கட்டங்களாகப் பிரிக்கப்பட்டு,ஒவ்வொன்றிலும் குழி தோண்டுவது தொல்பொருள்துறையின் வழக்கம். அந்த வகையில், கீழடியில் 3 மீட்டர் ஆழத்திற்குக் குழிகள் தோண்டப்பட்டன. குறைவான ஆழத்திலேயே, ஒவ்வொரு குழியிலும் விதவிதமான பொருட்கள் கிடைத்தன. இதற்குமுன் தமிழகத்தில் இவ்வாறு நிகழ்ந்ததேயில்லை.

மிகவும் கவனமாக மேற்கொள்ளப்படும் அகழாய்வுப்பணியில் ஈடுபடும் பணியாளர்


“பொதுவாக, வழக்கத்தைவிட மேடான பகுதிகள்லதான் தொல்பொருள் ஆய்வு நடத்துவோம். கரூர் பகுதிகள்ல எல்லாம், 3 மீட்டருக்கும் மேலே தோண்டுன பிறகுதான் சில சான்றுகள் கிடைத்தன. ஆனால் கீழடியில சில அடியிலயே பொருட்கள் கிடைச்சது ஆச்சர்யம். இங்கு அதிகளவுல மண் மூடாததும் இதற்குக் காரணமாக இருக்கலாம்,” என்கிறார் தமிழகத் தொல்பொருள்துறை ஆய்வாளர் மார்க்சியா காந்தி.

மட்பாண்டங்கள்

தமிழகத்தின் எந்தப்பகுதியில் தோண்டினாலும் மட்பாண்டம் உள்ளிட்ட சில பொருட்கள் கிடைப்பது இயல்பு. ஆனால், கீழடியில் அகழாய்வுக்காகத் தோண்டப்பட்ட இடங்களில் எல்லாம் மண்பாண்டங்கள் மிக அதிகமாகக் கிடைத்தன. இதுவரை சுமார் 1000 கிலோ மண்பாண்டங்கள் கிடைத்ததாகத் தகவல். இவை அனைத்தும் சங்ககாலத்திற்கு முன்னால் உருவாக்கப்பட்டிருக்கலாம்.

தற்போது நாம் பயன்படுத்துவதை விட நீளமும் அகலமும் அதிகம்கொண்ட செங்கல்களை பண்டைத் தமிழர்கள் பயன்படுத்தியிருக்கின்றனர்


வழக்கமான மண் பானைகள் வெளியே கருப்பாகவும் உள்ளே சிவப்பாகவும் இருக்கும். ஆனால், தமிழகம் உள்ளிட்ட தென்னிந்தியப் பகுதிகளில் வெளியே சிவப்பாகவும் உள்ளே கருப்பாகவும் உள்ள பானைகள் கிடைத்திருக்கின்றன. இந்தியாவின் வேறு பகுதிகளில் இப்படிப்பட்ட பானைகள் கிடைத்ததில்லை. சில வேதியியல் செய்முறைகளினாலோ மண்பானையை உள்புறமாக வெப்பப்படுத்துவதாலோ இப்படியொரு மாற்றம் நிகழலாம் என்று சொல்லப்படுகிறது.

”முட்டை ஓடு மாதிரி, ரொம்பவும் மெல்லிசா இருந்த பானைகளைக் கண்டெடுத்ததா சொல்றாங்க. இத்தனை வருஷம் பூமிக்குள்ள புதைஞ்சிருந்தும் உடையாத அளவுக்கு அந்த பானைகளின் தரம் இருந்திருக்குது,” என்கிறார் தொல்லியல் ஆர்வலரான பி.ஜி.சரவணன். 

அகழாய்வு மேற்கொள்ளப்பட்ட இடத்தில் இருந்து அகற்றப்படும் மண் ஓரிடத்தில் கொட்டப்படுகிறது


உறைகிணறுகள்

பட்டினப்பாலை உள்ளிட்ட சங்ககால நூல்களில் குறிப்பிட்டுள்ளபடி, இங்கு உறைகிணறுகள் இருந்ததற்கான அடையாளங்கள் கிடைத்துள்ளன. நீர்நிலைகளுக்கு அருகே சிறிய, ஆழமான  கிணறு தோண்டிப் பயன்படுத்துவது நம் முன்னோர்களின் வழக்கமாக இருந்ததை அறிய முடிகிறது.

கட்டிட அமைப்பு

தமிழகம் மட்டுமல்ல, தென்னிந்தியாவில் அகழாய்வு நடத்தப்பட்ட எந்த இடத்திலும் மனிதர்கள் வாழ்ந்ததற்கான கட்டிடச்சான்றுகள் கிடைத்ததில்லை. அதனை உடைத்திருக்கிறது கீழடி அகழாய்வு. இங்கு கண்டறியப்பட்ட கட்டிடங்கள் பெரிய செங்கற்களால் கட்டப்பட்டிருக்கின்றன. ”மட்பாண்டங்களோ, மணிகளோ தமிழ்நாட்டின் வேறு பகுதிகள்லயும் கிடைச்சிருக்குது. ஆனா, கீழடியின் சிறப்பே இந்த கட்டுமானங்கள் தான். இங்கு கிடைத்திருக்கும் பெரிய செங்கற்கள் சங்க காலத்திற்கும் முற்பட்டதாக இருக்கலாம்,” என்கிறார் மார்க்சியா காந்தி. ஆனால் இவை வாழ்விடமாக இருந்தனவா என்பது இன்னும் உறுதிசெய்யப்படவில்லை.

கீழடியில் அணிகலன்கள் செய்யுமிடம் அல்லது சாயப்பட்டறை அல்லது ஏதோ ஒரு தொழிற்சாலை இயங்கியதை சுட்டிக்காட்டும் கட்டிட அமைப்புகள்


மூன்றாவது கட்ட ஆய்வுக்கு முன்னதாக, கட்டிட அமைப்புகள் கண்டெடுக்கப்பட்ட குழிகள் மூடப்பட்டது. இதுபற்றிய வரைபடம் மற்றும் தகவல்கள் தொல்பொருள் துறையினரால் சேகரிக்கப்பட்டுள்ளதாகவும், ஏற்கனவே தோண்டப்பட்ட குழியின் அருகில் அந்த கட்டிடத்தின் தொடர்ச்சி பற்றி அகழாய்வு செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது.

நீர் நிர்வாகம்

ஓர் இடத்தில் நீரைத் தேக்கிவைத்தது, அதனை ஒவ்வொரு இடத்திற்கும் கொண்டுசென்றது, அங்கிருந்து கழிவுநீரை வெளியேற்றியது என்று பல தகவல்கள் கீழடியில் கண்டறியப்பட்டிருக்கிறது. மிகவும் நேர்த்தியான இந்த கட்டமைப்பு, சுமார் 2200 ஆண்டுகளுக்கு முன்னரே தமிழ் மண்ணில் நகர நாகரிகம் இருந்ததாகச் சொல்கிறது. இது ஊருக்கு வெளியே இயங்கிய தொழிற்சாலையின் ஒரு பகுதியாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

நீர் செல்லும் பாதை ஒழுங்குடன் அமைக்கப்பட்டதைக் குறிப்பிடும் வாய்க்கால் அமைப்பு


சாயப்பட்டறையா?

“மதுரைக்கு அருகே கீழடியில் இந்தக் கட்டுமானங்கள் கண்டறியப்பட்டிருப்பதால், இது ஊருக்கு வெளியேயிருந்த தொழிற்சாலையாக இருக்கலாம். இந்தப்பகுதியிலிருந்து வெளிநாடுகளுக்கு மஸ்லின் துணி ஏற்றுமதி செய்யப்பட்டிருப்பதால், அது தொடர்பான தொழில்கள் நடந்திருக்கலாம் என்பதை வைத்து சாயப்பட்டறை இந்த இடத்தில் இயங்கியிருக்கலாம் என்ற யூகமிருக்கிறது. இங்கிருந்து எடுக்கப்பட்ட மாதிரிகளைச் சோதித்தால்தான், மீதமுள்ள உண்மை தெரியவரும்,” என்கிறார் பெரியசாமி ராஜா.

கீழடியில் இருந்து இதுவரை சுமார் ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகத் தகவல். ஆனால், அவற்றில் இரண்டுபொருட்கள் மட்டுமே இதுவரை கார்பன் 14 ஆய்வுக்கு அனுப்பப்பட்டிருக்கின்றன. ”சாயப்பட்டறையா, இரும்புப் பட்டறையா என்பதெல்லாம் ஆய்வுமுடிவுகள் வந்தால் தான் தெரியவரும். துகள்களின் மாதிரி அனுப்பி வைக்கப்பட்டிருக்கின்றன,” என்கிறார் எழுத்தாளர் சு.வெங்கடேசன். கீழடி அகழாய்வுகுறித்து தொடர்ந்து உன்னிப்பாகக் கவனித்து, தமிழ் வெளியில் அதுபற்றி எழுதிவருகிறார்.

கீழடியில் தென்னந்தோப்புக்கு நடுவே குழிகள் தோண்டப்பட்டு அகழாய்வு நடத்தப்பட்ட இடம்


ஆபரணங்கள்

பெண்களின் அழகுசாதனப்பொருட்களும் கீழடியில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. யானைத்தந்தத்தினால் செய்யப்பட்ட சீப்பு மற்றும்தாயக்கட்டைகள், புருவம் தீட்டும் கருவி, மணிகள் கோர்த்த அணிகலன்கள், முத்துகள் உட்பட பல பொருட்கள் அதிகளவில் கிடைத்துள்ளன. ”சேலம், தர்மபுரி பகுதிகளில் வண்ண மணிகள் மண்ணிலிருந்து கிடைக்கின்றன.அவற்றை வைத்து ஆபரணம் செய்வது, அப்போது பெரிய தொழிலாகஇருந்திருக்கலாம்,” என்று இதன் பின்னணி பேசுகிறார் மார்க்சியா காந்தி.

கீழடியில் அகழாய்வு செய்வதற்காக வெட்டப்பட்ட ஒரு குழியில் மட்டும், இதுபோன்று சுமார் 3000மணிகள் கிடைத்திருக்கிறது. இதனை வைத்து, அவை அதிகாரத்தில் உள்ள ஒருவரால் சேமிக்கப்பட்டதாகவோ அல்லது அணிகலன் செய்யும் இடத்தில் கண்டெடுக்கப்பட்டதாகவே கருத முடியும்.

அகழாய்வில் கிடைத்த மண்பானை


ரோம் உறவு

யவனர்களுடன் தமிழர்களுக்கு கடல்வழி வாணிக உறவு இருந்தது என்கின்றன சங்ககால குறிப்புகள். ஆனால், அதற்கு முன்னரே வணிக உறவுஇருந்திருக்கிறது என்பதைக் குறிப்பால் உணர்த்துகின்றன கீழடியில் கிடைத்த தாமிரத்தாலான நாணயங்கள். ”அது மட்டுமல்ல,சங்ககாலத்தில் மட்டும்தான் சதுர வடிவ நாணயங்கள் இருந்தன. அதன்பின் கிடைத்த எல்லா நாணயங்களுமே வட்டவடிவிலானவை,” என்கிறார் மார்க்சியா காந்தி.

சமயநெறி இருந்ததா?

கீழடியில் கண்டறியப்பட்ட எந்த ஒன்றிலும் இதுவரை சமய வழிபாடு குறித்த தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை. ”ஆதிச்சநல்லூரில் மேற்கொள்ளப்பட்டஆய்வில் தாய் தெய்வங்களில் சிலைகள் கிடைத்தன. ஆனால் கீழடியில் இதுவரை அப்படி ஒரு சான்றும் கிடைக்கவில்லை,” என்கிறார் மார்க்சியாகாந்தி. வைகைநதி நாகரிகத்தில் சமயத்திற்கென்று தனித்த இடம் இல்லை என்ற வாதத்தை வலுவாக்கியிருக்கிறது இது.

கீழடியில் கிடைத்த தடித்த சிவப்புநிற மண்பானைகள்

மக்களின் ஆவணம்

இதுவரை கண்டறியப்பட்ட கல்வெட்டுகள் எல்லாமே, இந்த மண்ணில் வாழ்ந்த அரசர்களின் பெருமைகளைத் தாங்கிய ஆவணங்களாகவே இருந்துவருகிறது. ஆனால், கீழடியில் கிடைத்த பொருட்கள் மட்டுமே மக்களின் வாழ்க்கையைச் சொல்பவையாக இருக்கின்றன என்ற கருத்தை முன்வைக்கிறார் பெரியசாமி ராஜா. இனிவரும் நாட்களில், தமிழர்கள் ஒன்றுகூடி மேம்பட்ட சமுதாயமாக வாழ்ந்ததற்கான தடயங்கள் இங்கு கிடைக்கக்கூடும்.

கீழடி ஆய்வு தொடருமா?

“இந்த ஆய்வு குறைந்தபட்சம் 10 ஆண்டுகளுக்காவது தொடரவேண்டும். அப்போதுதான், ஓரளவுமுழுமை பெறும்,” என்கிறார் எழுத்தாளர் சு.வெங்கடேசன்.

அகழாய்வில் கிடைத்த பல்வேறு வண்ண மணிகள் மற்றும் சுடுமண் சிற்பங்கள்


“ஒரு நதிக்கரை முழுவதுமே அகழாய்வு நடத்தவேண்டிய சாத்தியங்கள் இருப்பது கீழடிஆராய்ச்சியின் சிறப்பு. இதனால ரொம்பப் பெரிய விஷயங்கள் கிடைக்கலாம்; அது உலகில்வேறெங்கும் கிடைக்காததாகவும் இருக்கலாம். அது நடக்குமா என்று தெரியவில்லை,” என்கிறார்பெரியசாமி ராஜா.

“நாம் ஒரு வீட்டோட மத்தியப்பகுதியில நேராக இறங்கியிருக்கிறோம். அந்த வீட்டின் வாசலிலோ,தெருவிலோ இன்னும் நுழையவே இல்லை,” என்கிறார் அப்பகுதியில் ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வுபெற்றிருக்கும் ஆசிரியரும் கீழடி ஆர்வலருமான பாலசுப்பிரமணியம்.


 
 
 
 
 

அதிகம் படித்தவை

  • water from thin air

    காற்றிலிருந்து குடிநீர்!

    தலைப்பைப் பார்த்து வாயைப் பிளக்கிறீர்களா?  இது உண்மைதான்!  ஏர் ஓ வாட்டர் என்ற மிஷின் மூலம் காற்றிலிருந்து தண்ணீர் தயாரிக்கிறார் சித்தார்த் ஷா என்ற இளைஞர். அமெரிக்காவில் இருந்து இதற்கான தொழில்நுட்பத்தை வாங்கி, இந்தியாவில் இக்கருவியை வெற்றிகரமாக விற்று வருகிறார். தேவன் லாட் எழுதும் கட்டுரை.

  • From Pavement to pedastal

    இருளில் இருந்து வெளிச்சத்துக்கு

    கொல்கத்தாவின் ஆயிரக்கணக்கான நடைபாதை வாசிகளைப் போல மிகவும் ஏழ்மையான வாழ்க்கை வாழ்ந்தவர் ஜிலியன். இன்றைக்கு ஆண்டுக்கு கோடிக்கணக்கான ரூபாய்களைக் குவிக்கும் எழுத்தாளராக, பேச்சாளராக இருக்கிறார். ஜி.சிங் எழுதும் கட்டுரை

  • iron man of trichy

    தரம் தந்த வெற்றி!

    தந்தையின் பழைய இரும்புக்கடையில் தொழில்நுணுக்கங்களை கற்று, முறுக்கு கம்பிகள் தயாரிக்கும் தொழிற்சாலையை நிறுவி வெற்றிகரமாக நடத்தி வருகிறார் சோமசுந்தரம். தமது நிறுவனத்தை ஆண்டுக்கு 800 கோடி ரூபாய் வருவாய் ஈட்டும் வகையில் வளர்த்தெடுத்ததில் அவரின் அயராத உழைப்புக் கொட்டிக்கிடக்கிறது.

  • The Success Story of Narayan

    கனவின் வெற்றி

    மும்பை என்ற கனவு நகரத்தின் மீதான ஈர்ப்பால், 30 ரூபாயுடன் வந்த நாராயண் முதலில் கேன்டீன் வெயிட்டராக வாழ்க்கைத் தொடங்கினார். இன்று மும்பையில் 16 கிளைகளைக் கொண்ட ஷிவ் சாகர் எனும் ரெஸ்டாரெண்ட் உரிமையாளராக 20 கோடி ரூபாய் வருவாய் ஈட்டுகிறார். தேவன் லாட் எழுதும் கட்டுரை

  • paper flowers

    காகிதத்தில் மலர்ந்த கோடிகள்

    வெளிநாடுகளில் விதவிதமான பணிகள், தொழில்களில் ஈடுபட்ட ஹரிஷ், ராஷ்மி தம்பதி, இந்தியா திரும்பி வந்து காகிதப்பூக்களை தயாரித்து விற்பனை செய்கின்றனர். பல நாடுகளுக்கும் காகிதப்பூக்களை ஏற்றுமதி செய்கின்றனர். காகிதப்பூவில் உண்மையில் வாசனை இல்லை. ஆனால், இந்த தம்பதி தயாரித்து விற்கும் காகிதப்பூக்களால் பலரது வாழ்வில் வசந்தம் வீசியிருக்கிறது. உஷா பிரசாத் எழுதும் கட்டுரை

  • success story of milind borate

    போராடே என்னும் போராளி!

    எதிர்பாராதவிதமாக தொழில் அதிபர் ஆனவர் மிலிந்த் போராடே. இவர் தொடங்கிய தமது துருவா நிறுவனம் கடந்த ஆண்டு 700 கோடி ரூபாய் வருவாய் ஈட்டி உள்ளது. டிப்ளமோ படிப்பில் சேர்ந்தவர், தன் பேராசிரியரின் உந்துதலால் பட்டப்படிப்பு முடித்து, பின்னர் பட்டமேற்படிப்பும் முடித்து இதைச் சாதித்திருக்கிறார். அன்வி மேத்தா எழுதும் கட்டுரை.