Milky Mist

Saturday, 20 April 2024

இவர் சாதாரண பள்ளி ஆசிரியரின் மகன். ஆனால் இன்றோ இந்தியாவின் மகத்தான விஞ்ஞானிகளில் ஒருவர். இது எப்படி?

20-Apr-2024 By பி.சி. வினோஜ்குமார்
பெங்களூரு

Posted 29 Apr 2017

இந்தியாவின் விண்வெளி ஆய்வுத்திட்டங்கள் சர்வதேச கவனத்தைப் பெற்றவை.  இஸ்ரோ சில மாதங்கள் முன்பாக 104 செயற்கைக் கோள்களை ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஒரே சமயத்தில் விண்ணில் ஏவி  அனைவரையும் வியக்க வைத்தது. இதில் அமெரிக்காவின் 96 செயற்கைக் கோள்களும் அடங்கும்.

“இஸ்ரோவின் இன்னொரு வெற்றிகரமான சாதனை இது. குறைந்த செலவில் சிறப்பான முறையில் செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவுவதில் இஸ்ரோ உலக அளவில் புகழ்பெற்று வருகிறது,’’ என்று வாஷிங்டன் போஸ்ட் குறிப்பிட்டது.

https://www.theweekendleader.com/admin/upload/mar15-17-isro.jpg

சந்திரன், செவ்வாய் ஆகிய கோள்களை ஆராயும் இஸ்ரோவின் திட்டங்களில் செயல்படும் விஞ்ஞானி டாக்டர் மயில்சாமி அண்ணாதுரை. கோவை அருகே ஒரு கிராமத்தைச் சேர்ந்த இவர் குறைந்த செலவில் இத்திட்டங்களை நிறைவேற்றுவதில் வல்லவர்
( புகைப்படங்கள்: ஹெச்.கே.ராஜசேகர்)


2008ல் சந்திரனுக்கும் (சந்திராயன்1), 2013-ல் செவ்வாய்க்கும் (மங்கள்யான்) ஆய்வு விண்களை வெற்றிகரமாக அனுப்பிய சாதனை இஸ்ரோவுக்கு உண்டு. இந்த மூன்று திட்டங்களிலும் முக்கிய பங்கு ஆற்றியவர் இப்போதைய இஸ்ரோ இயக்குநர் டாக்டர் மயில்சாமி அண்ணாதுரை. சந்திராயன் 1, மங்கள்யான் 1 – இரண்டுக்குமே திட்ட இயக்குநர் இவர்தான்.

"செயற்கைக்கோள்கள் செய்வதிலும் ஏவுவதிலும் பிறநாடுகளுக்கு சேவை வழங்கக்கூடிய முக்கிய நாடாக இந்தியா உருவாகும்,” என்கிறார் அண்ணாதுரை. உலகில் வேறு யாரையும்விட குறைந்த செலவில் செயற்கைக்கோள்களை நம்மால் செய்யமுடியும் என்பதால் நம்பிக்கையுடன் இருக்கிறார். இவருக்கு 58 வயது என்றால் யாரும் நம்பமாட்டார்கள். அவ்வளவு இளமையாகத் தோற்றம் அளிக்கிறார்.

நாசாவின் செவ்வாய் விண்கலன் மேவன் மங்கள்யான் அனுப்பப்பட்ட அதே காலகட்டத்தில் அனுப்பப்பட்டது. மங்கள்யான் முழுத்திட்டத்துக்கு ஆன செலவான 450 கோடி ரூபாயைவிட பத்துமடங்கு அதிகமாக நாசா திட்டத்துக்கு ஆனது என்பதை அவர் சுட்டிக்காட்டுகிறார்.

உலக அளவில் செயற்கைக்கோள்களை விண்ணுக்கு அனுப்பும் பணிக்கான சந்தை மதிப்பு 330 பில்லியன் அமெரிக்க டாலர்கள். இதில் பெருமடங்கு பங்கைப் பெறவேண்டும் என்று இஸ்ரோ முயற்சி செய்கிறது. ஏனெனில் நம்முடைய தொழில்நுட்பம் விலைமலிவு; சிறந்தது. அண்ணாதுரை போன்ற ஒருவர் இஸ்ரோவின் முக்கியப் பொறுப்பில் இருப்பது இதற்கு உதவிகரமாக உள்ளது என்றே தோன்றுகிறது.

தமிழ்நாட்டில் கோவையிலிருந்து 25கிமீ தொலைவில் உள்ள கொத்தவாடி கிராமத்தைச் சேர்ந்த அண்ணாதுரைக்கு சிக்கனம் என்பது இயற்கையாகவே கூடப்பிறந்த பண்பு. அவரது இல்லத்தில் சிக்கனமாக வாழ்வதே வழக்கம்.  அவரது அப்பா ஆரம்பப்பள்ளி ஆசிரியர். மாத சம்பளம் 120 ரூபாய்தான்.

https://www.theweekendleader.com/admin/upload/mar11-17-annadurai1.jpg

சர்வதேச விண்வெளிச்சந்தையில் இந்தியாவுக்கு முக்கிய பங்கை இஸ்ரோ பெற்றுத்தந்துள்ளது.



சின்னவயதில் மூத்த பிள்ளையான அண்ணாதுரை தன் ஆடைகளை கிழியாமல் பத்திரமாக வைத்துக்கொள்ளவேண்டும். ஏனெனில் அவரது தம்பிகள் அவருக்குப் பிறகு அந்த ஆடைகளையே அணியவேண்டி இருக்கும்.

அவரது பள்ளிப் பாடபுத்தகங்கள் ஆண்டு முடிவிலும் கிறுக்கல், கிழிசல் இல்லாமல் புதிதாக இருக்கும். தம்பிகளின் பயன்பாட்டுக்காக

‘’தம்பிகளுக்குத் தேவைப்படும் என்று என் பெற்றோர் கூறுவர். எனவே அவற்றைப் பத்திரமாக வைத்திருப்பேன். பக்கங்களைக் கிழிக்காமல், கிறுக்காமல் வைத்திருப்பேன்,’’ என்கிறார் அண்ணாதுரை.

அவரது குடும்பத்துக்கு ஐந்து செண்ட் நிலம் இருந்தது. அதில்தான் வீடும் இருந்தது. ‘’அவ்வளவுதான் எங்கள் நிலம். விவசாய நிலம் எதுவும் இல்லை,’’ என்று  சொல்கிறார்.

சம்பளம் போதாது என்பதால் வீட்டில் தையல் எந்திரம் வைத்து துணிகளைத் தைத்து கூடுதலாக சம்பாதித்து தேவைகளைச் சமாளித்தார் அவரது தந்தை.

"பள்ளி வேலை முடிந்து வந்தபின்னர் தையல் வேலைகளைச் செய்வார். அதில் மாதம் நூறு ரூபாய் ஈட்டுவார். மகளிர் ஜாக்கெட், ஆண்களின் சட்டைகள், காற்சட்டைகள் தைப்பார்,’’ என்கிற அண்ணாதுரை தந்தைக்கு உதவியாக பட்டன்கள் தைத்துத்தருவார். அதற்கு சில பைசாக்கள் அவருக்குக் கிடைக்கும்.

‘’மூன்றாம் வகுப்பு படிக்கும்போதிருந்தே தந்தைக்கு உதவி செய்ய ஆரம்பித்துவிட்டேன். என் அப்பா ஒரு பிளவுஸ் தைக்க 50 பைசா அப்போது பெறுவார்,’’ நினைவு கூருகிறார்.

பண்டிகைக் காலங்களில் அவருக்கும் தங்கைக்கும் ஒரு புத்தாடை ஆண்டு தோறும் கிடைக்கும். ஊர்த்தலைவர் அவர் வீட்டுப் பிள்ளைகளுக்கு தைக்கக் கொடுக்கும் துணியிலிருந்து மிச்சமாகும் துணியை வைத்து இந்த ஆடைகளை அவரது தந்தை தைத்துவிடுவார்.

https://www.theweekendleader.com/admin/upload/mar11-17-annadurai3.jpg

கடினமான சூழலில் வளர்ந்தாலும் அண்ணாதுரை நன்றாகப் படித்தார்


 

"சட்டைகளுக்காக துணி வெட்டும்போது மிச்சமாகும் துணி எனக்கும் என் தங்கைக்கும் தைக்கும் அளவுக்கு வருமாறு வெட்டுவார் என் தந்தை.

“அடுத்த பண்டிகைக்கு இந்த ஆடையை அணிந்துகொள்வோம். எங்கள் இளைய சகோதரர்கள் அணிவதற்காக அவற்றைப் பத்திரமாக வைத்துக்கொள்வோம்,’’ சிரித்துக்கொண்டே கூறுகிறார் அண்ணாதுரை.

அப்பாவிடம் இருந்து பெறும் ஐந்து, மூன்று பைசாக்களை சேமித்துவந்தார் அவர். ஐந்து ரூபா சேர்த்ததும் கோழிகளை வாங்கி வளர்த்தார். உள்ளூர் அஞ்சல் அலுவலகத்தில் சேமிப்புக்கணக்கும் வைத்திருந்தார்.

உயர்நிலைப்பள்ளிக்குச் சென்றபோது பேருந்துக்கு வீட்டில் கொடுத்த கட்டணத்தை நடந்து சென்று சேமித்தார்.

சில சமயங்களில் தன் டிக்கெட் கட்டணத்தைச் சேமிக்க ஒரு புதுவழியும் அவர் கையாண்டார்.  "பேருந்து நிலையத்துக்குச் சீக்கிரமே சென்று மாணவர்களிடம் டிக்கெட் கட்டணத்தை வசூலிப்பேன். ஆறு அல்லது ஏழு பைசா டிக்கெட் கட்டணம். நடத்துனர் சில்லறை தரமாட்டார்.

‘’சரியாகத் திட்டமிட்டால் ஐந்து அல்லது ஆறு பேருக்கு டிக்கெட் எடுத்தால் எனக்கு டிக்கெட் கிடைத்துவிடும். எனக்கும் நடத்துநருக்கும் மாணவர்களுக்கும் என எல்லோருக்கும் பலன் கிடைக்கும்,’’ அவர் கூறுகிறார்.

இஸ்ரோ வணிகரீதியில் பிறநாட்டு செயற்கைக்கோள்களை அனுப்புவதில் செய்வதும் அண்ணாதுரை தன் பேருந்து டிக்கெட்டுக்கான கட்டணத்தைப் பெற்ற டெக்னிக்தான். இஸ்ரோவின் முயற்சிகள் வெற்றிபெற்றால் நமது செயற்கைக்கோள் திட்டங்களை இதில் கிடைக்கும் வருவாயிலேயே நிறைவேற்றிக்கொள்ள முடியும்.

ஒரு பக்கம் அண்ணாதுரை பணத்தைச் சேமிக்க முயன்றுகொண்டிருந்தார். இன்னொரு பக்கம் படிப்பிலும் வல்லவராக திகழ்ந்தார். உயர்நிலைக் கல்விக்கு ஆண்டுக்கு 1000 ரூபாய் உதவித்தொகையும் உயர்கல்விக்கு மாதம் 110 ரூபாயும் பெற்றார்.

அவரது ஆரம்ப்பள்ளிப் படிப்பு கிராமத்தில்தான். ஒரு மாட்டுத் தொழுவமே பள்ளிவகுப்பறையாகச் செயல்பட்டது.

https://www.theweekendleader.com/admin/upload/mar11-17-annadurai4.jpg

விண்வெளித்தொழிலில் இந்தியாவை முதன்மை ஆக்குவது இவரது கனவு


“மாடுகளை வெளியே ஓட்டிவிட்டு, சாணத்தைச் சுத்தம் செய்துவிட்டு அமர்வோம். மூன்றாம் வகுப்பு படிக்கும்போது எங்களுக்கு புது கட்டடம் வந்தது. ஆனால் விளையாட்டு மைதானம் இல்லை. சுற்றுப்புறத்தைச் சுத்தம் செய்து நாங்களே ஓரிடத்தை உருவாக்கிக்கொண்டோம்.’’

எஸ்.எஸ்.எல்.சியில் அவர் மாவட்ட முதல்வனாக வந்தார். பொள்ளாச்சியில் நல்லமுத்து கவுண்டர் மகாலிங்கம் கல்லூரியில் பியூசி படித்தார். அங்கும் முதல் மாணவராக வந்தார்.

கோவை அரசுக்கல்லூரியில் பி.இ. படித்தார். பிஎஸ்ஜி தொழில்நுட்பக் கல்லூரியில் முதுநிலைப் படிப்பும் அண்ணா பல்கலைக்கழகத்தில் பிஎச்டியும் முடித்தார்.

திமுக நிறுவனரும் முன்னாள் முதல்வருமான சி.என். அண்ணாதுரையின் பெயரே இவருக்குச் சூட்டப்பட்டது.  கடமையைச் செய்துகொண்டே இரு, பலன்கள் தன்னால் வரும் என்கிற கீதா வாசகமே இவரை வழி நடத்துகிறது.

இவரது மனைவி வசந்தி இல்லத்தரசி.  “அவர்தான் சேமிப்புகளை, கடன் அட்டைகளை நிர்வகிக்கிறார். எல்லா வேலைகளையும் அவர் பார்த்துக்கொள்வதால் நான் சந்திராயன், மங்கள்யான் என்று பேசிக்கொண்டிருக்கிறேன்,’’ என புன்னகை செய்கிறார் அண்ணாதுரை. அவரது மகன் கோகுல் கண்ணன், 26, பெங்களூருவில் வேலை செய்கிறார்.

2016-ல் பத்மஸ்ரீ விருது இவருக்கு வழங்கப்பட்டிருக்கிறது. இப்போது இந்தியாவை உலக விண்வெளித்துறை முதலிடம் பெறச் செய்யவேண்டும் என்ற தன் கனவை நனவாக்க உழைத்துக்கொண்டிருக்கிறார்!


 
 
 
 
 

அதிகம் படித்தவை

  • Young Mattress seller success story

    மெத்தைமேல் வெற்றி!

    கொல்கத்தாவை சேர்ந்த கபீர் சித்திக் என்ற இளைஞர், மெத்தைகள் விநியோகஸ்தராக இருந்து, தொழிலில் நஷ்டம் அடைந்தார். அதிலிருந்து பாடம் கற்றுக் கொண்டு சிறிய பெட்டியில் எடுத்துச் செல்லும் புதுமையான மெத்தைகளை தயாரித்து வெற்றி பெற்றிருக்கிறார். சோபியா டேனிஷ்கான் எழுதும் கட்டுரை

  • used furniture

    பழையதில் பிறந்த புதிய ஐடியா!

    டெல்லியில் பிறந்து வளர்ந்த சகோதரர்களான கவுரவ் கக்கர், அங்குர் கக்கர் இருவரும் பெருநிறுவனங்களில் அதிக சம்பளம் தரும் பணிகளில் இருந்தனர். வெளிநாட்டு தூதர்கள் நம் நாட்டில் இருந்து வெளியேறும் போது விற்பனை செய்யும் பழைய மரச்சாமான்களை வாங்கி விற்கும்  தொழில் வாய்ப்பை பயன்படுத்தி இந்த சகோதரர்களும் முன்னேறினர். உஷா பிரசாத் எழுதும் கட்டுரை

  • No soil, no land, agriculture revolution in terrace in chennai

    மண்ணில்லா விவசாயம்

    ஹைட்ரோபோனிக்ஸ் என்கிற மண் இல்லாமல் விவசாயம் செய்யும் நவீன தொழில்நுட்பத்தை தொழில்முயற்சியாகக் கைக்கொண்டு வெற்றிபெற்றுள்ளார் சென்னையைச் சேர்ந்த ஸ்ரீராம் கோபால். ப்யூச்சர் பார்ம்ஸ் என்கிற அவரது நிறுவனம் வேகமாக வளர்கிறது. பி சி வினோஜ்குமார் எழுதும் கட்டுரை

  • with amla cultivation, he is making money grow on trees

    பணம் காய்க்கும் மரங்கள்

    மரத்தில் பணம் காய்க்குமா? ஆம், ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள அமர் சிங் என்கிற தொழிலதிபரின் பண்ணையில் உள்ள நெல்லி மரங்கள் ஆண்டுக்கு 28 லட்சம் ரூபாய் வருவாய் தருகின்றன. நெல்லியைப் பதப்படுத்தி பல்வேறு வகை உணவுப் பொருட்களையும் தயாரிக்கிறார். பார்தோ பர்மான் எழுதும் கட்டுரை

  • Kngs of good tea

    தேநீர் மன்னர்கள்!

    பாரம்பர்ய காஃபி சுவையில் இருந்த சென்னை நகரத்தை தங்களின் வகை, வகையான தேநீரால் கைப்பற்றி இருக்கின்றனர் சாதிக், சடகோபன் இருவரும். ஐடி நிறுவனங்களில் பணியாற்றிய இவர்கள் இருவரும், சில தொழில்களுக்குப் பின் சங்கிலித் தொடர் தேநீர் கடைகளைத் தொடங்கி வெற்றி பெற்றிருக்கின்றனர். ராதிகா சுதாகர் எழுதும் கட்டுரை

  • A Sweet Success

    அடையாற்றின் கரையில்..

    விவசாய நிலம் புழுதிப் புயலால் அழிந்தது. இனிப்புக்கடையிலும் வருவாய் இல்லை. மீண்டும் அடிமட்டத்தில் இருந்து வாழ்க்கையைத் தொடங்க அந்த குடும்பம் பெங்களூரு சென்றது. இன்றைக்கு உலகம் முழுவதும் கிளைபரப்பி இருக்கும் சங்கிலித் தொடர் இனிப்புக்கடைகளின் வெற்றிக்கு பின்னணியில் அந்த குடும்பத்தின் உழைப்பு இருக்கிறது. பி.சி.வினோஜ் குமார் எழுதும் கட்டுரை