Milky Mist

Thursday, 25 April 2024

ஒரு பைசா கூட முதலீடு இல்லாமல் 90 கோடி வருவாய்க்கு வித்திட்ட கல்லூரிக் கனவு! சாதித்த சங்கம் குழும வாரிசு!

25-Apr-2024 By சோபியா டேனிஷ்கான்
கோவை

Posted 10 Oct 2020

தென் இந்தியாவில்  சங்கம் குழும ஹோட்டல்கள் நடத்திவரும் வணிகக் குடும்பத்தில் பிறந்தவர் கார்த்திக் மணிகண்டன். குடும்ப வணிகத்தில் ஈடுபடுவதற்கு முன்பு தாமே சொந்தமாக ஏதேனும் செய்து சாதிக்க வேண்டும் என்ற  ஆசையுடன் இருந்தார்.

பி.டெக் படித்துக் கொண்டிருந்தபோது  கல்லூரிப் பயணங்களை ஏற்பாடு செய்யும் தொழிலைத்  தொடங்கினார். அந்த பணியே ஒரு வணிகமாக மாறியது. அவர் பட்டப்படிப்பு முடிக்கும் போது இந்த வணிகத்தில் இருந்து 25 லட்சம் ரூபாய் அளவுக்கு நிகர லாபம் கிடைத்தது.


கார்த்திக் மணிகண்டன் கல்லூரியில் தமது வணிகத்தைத் தொடங்கினார். இப்போது அதனை 90 கோடி ரூபாய் ஆண்டு வருவாய் ஈட்டும் நிறுவனமாக கட்டமைத்திருக்கிறார்.(புகைப்படங்கள்: சிறப்பு ஏற்பாடு)  
இப்போது அவருக்கு 32 வயதாகிறது. ஜிடி ஹாலிடே பிரைவேட் லிமிடெட் என்ற 90 கோடி ரூபாய் ஆண்டு வருவாய் உள்ள நிறுவனத்தைக் கட்டமைத்திருக்கிறார். இந்த நிறுவனம் பெருநிறுவன வாடிக்கையாளர்களுக்காக கூட்டங்கள், ஊக்க நிகழ்வுகள், கான்ஃபரன்ஸ்கள் மற்றும் கண்காட்சிகள் நடத்தித் தருகிறது. 

வீனஸ் ஹீட்டர்கள், காக்னிஸன்ட், நெர்லோக் பெயிண்ட்ஸ், பானசோனிக், பிலிப்ஸ் லைட்டிங், காட்பரி இந்தியா, கிராம்டன் கிரீவ்ஸ் மற்றும் பல புகழ்பெற்ற பிராண்ட்கள்தான் அவரது வாடிக்கையாளர்களாக உள்ளன.  கோவை, பெங்களூரு, சென்னை, கன்னியாகுமரி, ஈரோடு மற்றும் மதுரை அலுவலகங்களில் 60 பேர் பணியாற்றுகின்றனர். தம்முடைய சம்பாத்தியத்தில் இருந்து, ராமேஸ்வரத்தில் சொத்து ஒன்றை கார்த்திக் வாங்கியிருக்கிறார். ராமேஸ்வரம் கிராண்ட் என்ற ஹோட்டலை கட்டி அவரது குடும்பத்தினரின் வணிகமான ஹோட்டல் தொழிலிலும் நுழைந்திருக்கிறார்.

தமிழகத்தில் உள்ள கன்னியாகுமரி மாவட்டத்தில் 1968-ம்ஆண்டு கார்த்திக்கின் தாத்தா சங்கம் குழும ஹோட்டல்களை தொடங்கினார். தாத்தாவுக்குப் பின்னர், அவரது தந்தை மணி வணிகத்தைக் கவனித்துக் கொண்டார்.  கார்த்திக் கன்னியாகுமரியில்தான் பிறந்தார். சிறிய சுற்றுலா இடமான கன்னியாகுமரியில் வசதிகள் அதிகம் இல்லை. அருகில் உள்ள நாகர்கோவில் நகரில் கார்த்திக் 12-ம் வகுப்பு முடித்தார். 12-ம் வகுப்புப்பின்னர் தமது குடும்ப வணிகத்தை நடத்த உதவும் வகையில் சுவிட்சர்லாந்தில் ஹோட்டல் மேனேஜ்மெண்ட் படிக்க விரும்பினார். ஆனால், அவரது தந்தையோ கார்த்திக் பொறியியல் படிக்க வேண்டும் என்று விரும்பினார்.

“என் தந்தைதான் வெற்றி பெற்றார். நான் கோவையில் உள்ள பிஎஸ்ஜி தொழில்நுட்ப கல்லூரியில் பொறியியல் படிப்பில் சேர்ந்தேன்,” என்கிறார் கார்த்திக். “எனக்கு புரோக்கிராம் மற்றும் தொழில்நுட்பத்தில் ஆர்வம் இல்லை. நாடகம் உட்பட துணைப்பாட செயல்பாடுகளில் மிகவும் ஈடுபாடுடன் இருந்தேன். கல்லூரியில் தொழில்முனைவு பிரிவின் தலைவராகவும் இருந்தேன்.”

கார்த்திக் ஹோட்டல் மேனேஜ்மெண்ட் படிக்க வேண்டும் என்று விரும்பினார். ஆனால், அவரது குடும்பம் அவர் பொறியியல் படிக்க வேண்டும் என்று விரும்பியது.


அந்த நாட்களில் அவர் தமது வணிக திறனை கூர்மைப்படுத்திக் கொண்டார். “ஹோட்டல்கள் குறித்த என்னுடைய அறிவு மற்றும் என்னுடைய குடும்பப் பின்னணி காரணமாக, பயணங்கள் ஏற்பாடு செய்யும் பொறுப்பில் நான் தீவிரமாக ஈடுபட்டேன். அதே போல கல்லூரிக்கு வருகை தரும் சிறப்பு பேச்சாளர்கள் தங்குவதற்கான வசதிகளையும் கவனித்துக் கொண்டேன்.” 

பெங்களூரு நகரில் உள்ள ஒரு தொழில் நிறுவனத்தைப் பார்வையிட இவரது வகுப்பு மாணவர்கள் செல்வதற்கான பயணத்தை ஒருங்கிணைக்கும் பொறுப்புகளை இவர் எடுத்துச் செய்தது திருப்புமுனையாக அமைந்தது.  “அந்த ஆண்டு கல்லூரியில் இருந்த 13 துறைகளின் (தலா நான்கு குழுக்கள் வீதம்) சார்பில் 50 பயணங்களை நான் ஏற்பாடு செய்தேன்,” என்கிறார் அவர். “பயணத்திட்டம் முழுவதையும் மிகுந்த கவனமாகத் தயாரித்து அதனை உரிய முறையில் செயல்படுத்த  என்னுடைய நண்பர்கள் உதவினர். வாகனம், உணவு மற்றும் தங்குதல் ஆகியவை முதல்  அனைத்து சேவைகளையும் நாங்கள் ஏற்பாடு செய்தோம். ஒவ்வொரு பயணத்தின்போதும் குறைந்த பட்ச வருவாய் ஈட்டினேன்.”

இருப்பினும் அவர் கல்லூரி வகுப்புகளை எப்போதுமே தவற விடுவதில்லை. மெல்ல தமது தொழிலை கொஞ்சம், கொஞ்சமாக விரிவாக்கத் தொடங்கினார். இதர கல்லூரிகளுக்கும் பயண ஏற்பாடுகளை செய்து கொடுத்தார். 2009-ம் ஆண்டு கல்லூரிப் படிப்பை முடிக்கும்போது 100 கல்லூரிகளுக்கு மேல் பயண ஏற்பாடுகளை செய்துகொடுத்திருந்தார்.

“என்னுடைய கல்லூரி ஹாஸ்டல் அறை எண் 201-இல் என்னுடைய அலுவலகம் செயல்பட்டது. கல்லூரியில் இருந்த ஒவ்வொருவருக்கும் இது தெரியும். மூன்றாம் ஆண்டு படிக்கும்போது இத்தொழில் வளர்ச்சி பெற்ற உடன் கல்லூரிக்கு அருகில் உள்ள வாடகை இடத்தில் ஓர் அலுவலகத்தை திறந்தேன்,” என ஒரு தொழில்முனைவோராக தமது பயணத்தைக் குறித்து கார்த்திக் குறிப்பிட்டார். எந்த பாடத்திலும் தோல்வியடையக் கூடாது, ஒருபோதும் வகுப்புகளைத் தவறவிடக் கூடாது என்ற நிபந்தனையுடன் கல்லூரி நிர்வாகம் தொடர்ந்து அவருக்கு அனுமதி வழங்கி ஊக்குவித்தது. “மாலை 4 மணி வரை நான் வகுப்புகளில் பங்கேற்பேன். பின்னர் என்னுடைய அலுவலகத்துக்குச் செல்வேன். அலுவலகத்துக்காக மாதம் 3000 ரூபாய் வாடகை கொடுத்து வந்தேன். பெரும்பாலான பேருந்துகள் இரவு நேரத்தில்தான் பயணத்தைத் தொடங்கும்,” என்றார் அவர். பயணங்களுக்கு சில இரவுகளில் 8 பேருந்துகள் கூட கிளம்பும். அனைத்து ஏற்பாடுகளும் சரியாக செய்யப்பட்டிருக்கிறதா என்பதை உறுதி செய்வது என்பது மிகவும் கடினமான வேலை,” என்கிறார் அவர்.

வேலை முடிந்த பின்னர் தமது காரில் கல்லூரி ஹாஸ்டலுக்கு அவர் திரும்புவார். அடுத்த நாள் கல்லூரி வகுப்புகளுக்குத்  தொடர்ந்து செல்வார்.  


கார்த்திக் தமது  ஊழியர்கள் சிலருடன்


தமது நிறுவனம்  ஒரு பைசா முதலீடு கூட இல்லாமல் தொடங்கப்பட்டது என்கிறார் கார்த்திக். பின்னர், இதர கல்லூரிகளுக்கும் அதனை விரிவாக்கினார். அவரது சம்பாத்தியமும் அதிகரிக்கத்தொடங்கியது. சில துண்டறிக்கைகள், போஸ்டர்கள், விசிட்டிங் கார்டுகளை அச்சடித்து விநியோகித்தார். சுற்றுலா மற்றும் பயணத்துக்கு ஏற்பாடு செய்து கொடுப்பதற்கான உரிமத்தை கார்த்திக் குடும்பத்தினர் வைத்திருந்தனர். எனவே ஆரம்பத்தில் அவர் கோபி டிராவல்ஸ் என்ற பெயரில்  பணியாற்றினார். அப்போது சொந்த நிறுவனத்தின் பெயரைப் பதிவு செய்வதற்கு அவரது வயது மிகக் குறைவு.  

தொழில்முனைபவராக வளர்வதற்கே கார்த்திக் விதிக்கப்பட்டிருந்தார். தமது வாழ்க்கையின் ஆரம்ப கட்டத்திலேயே இதை அவர் உணர்ந்திருந்தார். திருவனந்தபுரத்தில் டிசிஎஸ் நிறுவனத்தில் அவருக்கு வேலை கிடைத்தது. 20 நாட்கள் மட்டுமே அங்கு பணியாற்றினார். அந்த வேலைக்காக தாம் படைக்கப்படவில்லை என்பதை அவர் உணர்ந்திருந்தார். அவரது சம்பளத்தைக் கூட அவர் பெற்றுக் கொள்ளவில்லை. அங்கிருந்து வெளியேறினார்.

தொடர்ந்து சுவிட்சர்லாந்தில் ஹோட்டல் மேனேஜ்மெண்ட் படிப்பில் சேர வேண்டும் என்று கார்த்திக்கின் தந்தை விரும்பினார். அந்த நாட்டில் உள்ள மிகச்சிறந்த கல்லூரியான சீசர் ரிட்ஜ் கல்லூரியில் ஒரு இடத்தையும் அவர் பெற்றுக் கொடுத்தார்.    எனினும், கார்த்தில்  வேண்டாம் என்று முடிவு செய்தார். தான் சிரமப்பட்டு கட்டமைத்த வணிகத்தை மேலும் வலுவாகத் தொடர முடிவு செய்தார். “என் வாடிக்கையாளர்களுடன் நல்ல உறவைக் கொண்டிருந்தேன். வெளிநாட்டில் படிக்கச் சென்று விட்டால், அந்த தொடர்புகள் எல்லாம் இரண்டு ஆண்டுகளுக்குள் கையைவிட்டுப் போய்விடும்,” என்று விவரிக்கிறார்.

“எங்களுடையது சேவை தொடர்பான நிறுவனம். அங்கே இடைவெளி விடுவது என்பது ஆகாது. எனவே, என்னுடைய தந்தையிடம் 10 ஆண்டுகள் கால அவகாசம் கேட்டேன். அதுவரை சொந்தமாக தொழில் செய்வது என்றும் அதன் பின்னர் குடும்ப வணிகத்தில் சேருவது என்றும் கூறினேன். அதற்கு அவர் ஒப்புக்கொண்டார்.

கோயம்புத்தூருக்கு திரும்பி வந்த கார்த்திக், ஜிடி ஹாலிடே பிரைவேட் லிமிடெட் என்ற பெயரைப் பதிவு செய்தார். தம்முடைய சேமிப்பில் இருந்து 12 லட்சம் ரூபாயை முதலீடு செய்து அலுவலகம் ஒன்றையும் திறந்தார். ஜஸ்ட் டயல் நிறுவனத்தில் தமது நிறுவனத்தைப் பதிவு செய்தார். அது அவருக்கு பெரிய திருப்பு முனையைக் கொடுத்தது. கோயம்புத்தூரை தலைமையிடமாகக் கொண்ட ஒரு எலக்ட்ரிக்கல் பொருட்கள் தயாரிக்கும் நிறுவனம் தமது 100 முகவர்களை மீட்டிங்கிற்காக ஒரு தொலைதூர இடத்துக்கு அழைத்துச் செல்ல திட்டமிட்டது.

“நாங்கள் மசினகுடிக்கு ஒரு பயணத்தை ஏற்பாடு செய்துகொடுத்தோம். இந்த வேலையில் இருந்து ஒரு சிறிய அளவு லாபம் மட்டுமே கிடைத்தது. ஆனால் இதன் மூலம் இதர நபர்களிடம் எங்களுக்கு தொடர்புகள் ஏற்பட்டன. அவர்கள் பல வேலைகளை எங்களுக்குக் கொடுத்தனர்,”என்று நினைவு கூர்ந்தார். பயணம் மற்றும் சுற்றுலா தொழில் பல பரபரப்பான தருணங்களைக் கொண்டது. “2009-ம்ஆண்டு 10-12 பேருந்துகள் கல்லூரி பயணத்துக்காக டெல்லி, மணாலி மற்றும் மும்பை சென்றன. அப்போது ஸ்வைன் ஃப்ளூ தொற்று தீவிரமாக இருந்தது. எனவே மாநில அரசுகள் திடீரென மாநில எல்லைகளில் போக்குவரத்தை நிறுத்தின. பின்னர் பல நபர்களைத் தொடர்பு கொண்டு எங்கள்  அனைத்து பஸ்களும் பாதுகாப்பாக புறப்பட்ட இடத்துக்கே திரும்ப வருவதை உறுதி செய்தேன்,” என்று நினைவு கூர்ந்தார்.

இன்னொருமுறை ஒரு பெருநிறுவனத்தின் குழுவைச் சேர்ந்த 100 பேர் நேபாளத்துக்கு சுற்றுலா சென்றனர். அந்த சமயத்தில் அங்கு நில அதிர்வு ஏற்பட்டது. “அங்கே பெரும் குழப்பம். ஆனால், அங்குள்ளவர்களைத் தொடர்பு கொண்டு அனைவரும் பாதுகாப்பாக ஊர் திரும்புவதை உறுதி செய்தேன்.”

கார்த்திக் மற்றும் அவரது மனைவி யாமினி. இருவருமே பயணப்பிரியர்கள்.

கார்த்திக் ஒரு பயண ஆர்வலர். தம்முடன் படித்த யாமினியை அவர் திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு இப்போது ஒரு மகள் இருக்கிறார். மகளுக்கும் பயணங்கள் பிடிக்கும். எனவே, கார்த்திக் அவ்வப்போது குடும்பத்துடன் பயணங்கள் மேற்கொள்கிறார்.

அவரது மிகவும் அண்மைக்கால விடுமுறைப் பயணம் துபாய். அவருக்கு விருப்பமான விடுமுறைக்கால இடம் என்றால், சந்தேகமே இல்லாமல் அது சுவிட்சர்லாந்துதான்.  

தேவை எழும்பட்சத்தில் ஆல்ப்ஸ் மலையில்கூட ஒரு திருமணத்துக்காக தமிழ் விருந்து வழங்க அவரால் முடியும். சுற்றுலா இடங்களில் திருமணங்கள் நடத்துவதையும் அவர் ஏற்பாடு செய்ய தீவிரமாக திட்டமிட்டு வருகிறார்.

 
 
 
 
 

அதிகம் படித்தவை

  • How an IIM Gold Medalist  established a Rs 5 crore vegetable business

    வேர்களால் கிடைக்கும் வெற்றி

    அகமதாபாத் ஐஐஎம்மில் படிப்பு முடித்தால் கை நிறைய சம்பளத்துக்கு பன்னாட்டு நிறுவனத்துக்கு வேலை செய்யப்போவார்கள். ஆனால் கௌஷ்லேந்திரா, பீஹாரில் ஆண்டுக்கு 5 கோடி ரூபாய்க்கு காய்கறி விற்பனை செய்யும் நிறுவனம் நடத்துகிறார். ஜி.சிங் எழுதும் வெற்றிக்கதை

  • Inspiring story of crorepati entrepreneur who makes cloth blags from discarded hotel bed sheets

    குப்பையிலிருந்து கோடிகள்

    அமெரிக்காவில் தூக்கி எறியப்படும் படுக்கை விரிப்புகளை ஜெய்தீப் சஜ்தே வாங்குவார். இந்தியாவில் உள்ள தொழிற்கூடத்தில் அவற்றை வண்ணமிகு பைகளாக மாற்றுவார். கடந்த ஆண்டு அவர் இத்தொழிலில் பெற்றது 4 கோடி ரூபாய்கள். பி சி வினோஜ்குமார் எழுதும் கட்டுரை

  • How did daily wager son become crorepati

    கனவுகளைக் கட்டுதல்

    தினக்கூலியின் மகனான விபி லோபோ கையில் 50 ரூபாயுடன் மங்களூர் அருகே உள்ள ஒரு கிராமத்திலிருந்து மும்பை வந்தவர். ஆறு ஆண்டுகளில் 75 கோடி ரூபாய் வர்த்தகம் செய்திருக்கும் நிறுவனத்தை அவர் இப்போது நடத்துகிறார். இது எப்படி? சோமா பானர்ஜி எழுதுகிறார்

  • success story of son of  a farmer

    ஒரு கனவின் வெற்றி!

    வெறும் கைகள், மனதில் நிறைய கனவுகள். இவைதான் சந்திரகாந்த் போடே, மும்பை வந்தபோது அவரிடம் இருந்தவை. அவரது பெற்றோர் கூலித்தொழிலாளிகள். இந்த பின்னணி உடைய அவர் இன்றைக்கு வெற்றிகரமான லாஜிஸ்டிக் நிறுவனத்தின் அதிபர். அவரது நிறுவனம் இப்போது ஆண்டுக்கு ஏழு கோடி ரூபாய் வருவாய் ஈட்டுகிறது. நிதி ராய் எழுதும் கட்டுரை.

  • success story of a shampoo maker

    ஷாம்பூ மனிதர்!

    தமிழ்நாட்டின் ஒரு சிறிய நகரத்தில் சுதந்திரமாக சுற்றித்திரிந்த இளைஞர், 15 ஆயிரம் ரூபாய் முதலீட்டில் ஷாம்பூ தயாரிப்பு நிறுவனம் தொடங்கினார். அது கடின உழைப்பு, வித்தியாசமான விளம்பர உத்திகளால் இன்றைக்கு 1450 கோடி ரூபாய் ஈட்டும் நிறுவனமாகி இருக்கிறது. பி சி வினோஜ் குமார் எழுதும் கட்டுரை

  • How the son of a government school teacher became a great scientist

    ஒரு விஞ்ஞானியின் கதை

    குறைந்த செலவில் சந்திரனுக்கும் செவ்வாய்க்கும் விண்கலன்கள் அனுப்பியதற்காகப் பாராட்டப்படுகிறவர் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை. சின்னவயதில் அண்ணாதுரை ஏழ்மையைத் தன் சிக்கனத்தைக் கடைப்பிடிக்கும் திறனால் வென்றது பற்றி எழுதுகிறார் பி சி வினோஜ் குமார்