Tuesday, 11 May 2021

பாதை மாறிய பாகார்யாவின் மணக்கும் மசாலா பிசினஸ்! ஆண்டு வர்த்தகம் ஐம்பது கோடி!

11-May-2021 By உஷா பிரசாத்
பெங்களூரு

Posted 25 Apr 2020

அது அவரது குடும்பமும், சமூகமும் பல தலைமுறைகள் கடினமாக அடி எடுத்து வைத்து  பயணித்த பாதை! பொருட்களை வாங்கி விற்பதே  மார்வாரிகளின் தொழில் ! அதில் இருந்து விலகிய நரேஷ் பாகார்யா, 1990-களில் ரூ.5 லட்சம் என்ற மிக குறைந்த முதலீட்டுடன் உற்பத்தி துறையில் கால்பதித்தார். தமது நிறுவனத்தை மிகப்பெரிய உயரத்துக்கு எடுத்துச் சென்று, 2019-ம் ஆண்டில் ஆண்டு வருவாய் ரூ.50 கோடியைத் தொட்டிருக்கிறார்.

மார்வாரி சமூகத்தினர் நிறைந்திருக்கும், கர்நாடக மாநிலம் சிக்பேட் பகுதியில் ஒரு சிறிய கடையில் தொடங்கப்பட்ட பாகார்யா ஃபுட்ஸ் இப்போது பெங்களூரில் சோமராஜ் பேட்டையைத் தலைமையிடமாகக் கொண்டு ஹாரோஹள்ளியில் 50,000 ச.அடி உற்பத்தி பிரிவைக் கொண்டு செயல்படுகிறது. 

https://www.theweekendleader.com/admin/upload/07-12-19-10kwal.jpg

வணிக குடும்பத்தில் இருந்து வந்த நரேஷ் பாகார்யா, தமது குடும்பத்தினரின் விருப்பத்துக்கு மாறாக துணிச்சலுடன் மசாலா பொருட்கள் உற்பத்தி தொழிலைத் தொடங்கினார். (புகைப்படங்கள்: விஜய் பாபு)

 

இளம் பாகார்யா, சிக்பேட்டை விட்டு வெளியே வந்ததுதான் முதல் விஷயமாக இருந்தது. “வர்த்தகர்களுக்கு மத்தியில் நான் இருக்க விரும்பவில்லை,” என்று நினைவு கூர்கிறார். “என்னுடைய  சிந்தனைகளில் மாற்றம் வேண்டும் என்பதில் நான் உறுதியாக இருந்தேன். நான் பெரிய சவால்களை எதிர்கொள்ள தயாரானேன்.”

சிக்பேட்டில் இருந்து வெளியே வந்தது அவருக்கு நிறைய அனுபவங்களைக் கற்றுக் கொடுத்தது.  அவருடைய தந்தை பவார்லால்ஜி பாகார்யா 1970-ல் ராஜஸ்தான் மாநிலம் பாலி மாவட்டம் சோஜாட்டில் இருந்து பெங்களூர் வந்து சிக்பேட்டில்  1970-ல் ஒரு சிறிய மளிகைக் கடையைத்  தொடங்கினார். 

அப்போது பவார்லால்ஜி பாகார்யா 20-களின் மத்திம வயதில் இருந்தார். வளர்ச்சியைத் தேடி  தென்னிந்திய நகருக்குப் புறப்பட்டார். சோஜாட்டில் அவருடைய சிறிய கடைசரியாகப் போகவில்லை. பாலைவன மாநிலமான ராஜஸ்தானில் வாழ்வாதாரத்துக்கு பெரும் வாய்ப்புகள் இல்லை.

அவர், தமது சிறிய கடையில் இருந்து முக்கியமாக ஹோட்டல்கள் மற்றும் ரெஸ்டாரெண்ட்களுக்கு மளிகைப் பொருட்கள், மசாலாப் பொருட்களை விற்கத் தொடங்கினார். இந்த கடை 2001 ம் ஆண்டு மூடப்பட்டது. “அந்த நாட்களில் எம்டிஎச்., எவரெஸ்ட் ஆகிய இரண்டு பிராண்ட்கள்தான் இருந்தன. உணவுத்துறையில் மசாலாவுக்கு பெரும் தேவை இருப்பதாக அவர் விரைவிலேயே உணர்ந்தார். எனவேதான் மசாலா பொருட்கள் வர்த்தகத்தில் ஈடுபட வேண்டும் என்ற யோசனை அவருக்குள் உதித்தது,” என்கிறார் மூன்று மகன்களில் இளையவரான நரேஷ் பாகார்யா(45).

இவர் வளர்ந்தபோது தந்தை செய்த மசாலா வர்த்தகத்தை விடவும், அதன் உற்பத்திக்கு நல்ல வாய்ப்புகள் இருக்கின்றன என்று உணரத்தொடங்கினார். பெங்களூருவில் உள்ள புனித ஜோசப் கல்லூரியில்  சிறுதொழில் மேலாண்மையில் (பிபிஏ) இளநிலைப் பட்டம் பெற்றார். தமது கனவை பின்தொடர விரும்பினார். 

எனினும், அவரது தந்தை ஆரம்பகட்டத்தில் தமது மகன் சொந்த முயற்சியில் மசாலா பொருட்கள் உற்பத்தியை தொடங்குவதற்கு அனுமதிக்க தயங்கினார். பின்னர் தாம் பார்த்து வந்த மசாலா வர்த்தகம் தொய்வடையத் தொடங்கியதை உணரத் தொடங்கிய அவர், அதன் தொடர்ச்சியாக தமது மகனை திட்டமிட்டபடி செயல்பட அனுமதித்தார்.

“எங்கள் குடும்பத்தில் உள்ளவர்களின் விருப்பத்துக்கு மாறாக, உற்பத்தி துறைக்குள் நுழைந்த முதல் நபர் நான்தான். ஆனால், என் தந்தை மசாலாப் பொருட்கள் வணிகத்தில் இருந்ததால், சாட் மசாலா, சென்னா மசாலா, கரம் மசாலா, காசுரி மேதி ஆகிய நான்கு மசாலாப் பொருட்களுக்கு வித்திட்டது அவர்தான்,” என்கிறார் பாகார்யா.   

 

https://www.theweekendleader.com/admin/upload/07-12-19-10kwal3.jpg

அடுத்த மூன்று ஆண்டுகளில் 100 கோடி ரூபாய் ஆண்டு வருவாயை ஈட்ட வேண்டும் என்பதே பாகார்யாவின் இலக்காகும்.


நரேஷ் பாகார்யாவின் சகோதரர்கள் ஜூவல்லரி தொழிலில் ஈடுபட்டனர். பகாரியா 1998ம் ஆண்டு முழுவதுமாக மசாலா தொழிலை கையில் எடுத்துக் கொண்டார். குடும்ப உறுப்பினர்கள், உறவினர்களிடம் இருந்து பெற்ற ரூ.5 லட்சம் முதலீட்டை அதில் போட்டார்.

விற்பனை, சந்தைப்படுத்துதல் ஆகிய பணிகளை நரேஷ் மேற்கொண்டார். கொள்முதல், கணக்கு வழக்குகள் உள்ளிட்ட இதர நடவடிக்கைகளை அவரது தந்தை கவனித்துக் கொண்டார்.

இன்றைக்கு பாகார்யா பொருட்கள் குவாலிட்டி ஃபுட்ஸ் என்ற பிராண்ட் பெயரில் சந்தையில் புகழ்பெற்றுள்ளன. பாகார்யா, நிறுவனத்தின் மேலாண்இயக்குனராக இருக்கிறார். அவருடைய தந்தை ஓய்வு வாழ்க்கையில் ஈடுபட்டுள்ளார். ஆனால், தேவைப்படும் சமயங்களில் கவுரவ ஆலோசகராக  வழிகாட்டுகிறார்.

தரமான பொருட்களை, குறைந்த விலையில் வழங்க வேண்டும் என்பதே எங்களின் முக்கியமான பலமாக இருக்கிறது. அதே நேரத்தில் எங்கள் வெற்றிக்கு உள்ளூர் உற்பத்தியும் காரணமாக இருக்கலாம்,” என்கிறார் பாகார்யா. அடுத்த இரண்டு ஆண்டுகளில் 100 கோடி ரூபாய் ஆண்டு வருவாய் இலக்கை எட்ட வேண்டும் என்பதுதான் அவரது நோக்கமாக இருக்கிறது.

கடந்து வந்த பாதையை திரும்பி பார்க்கும் வகையில் அவர் சொல்கிறார்; “பெங்களூரு மொத்த வியாபார சந்தை என்ற குறுகிய வட்டத்துக்குள் மாதம் ஒரு லட்சம் ரூபாய் என்ற வருவாயுடன் எங்கள் பயணம் தொடங்கியது. மெதுவாகவும், சீராகவும் தொழில் முன்னேற்றம் கண்டது.  மொத்த முகவர்கள், சில்லறை வியாபாரிகளுக்கும் நாங்கள் வழங்கினோம். கர்நாடகாவில் உள்ள பிற சந்தை வாய்ப்புகளிலும் நுழைந்தோம்.”

ஆரம்ப கட்டத்தில் மாகாடி சாலையில் உள்ள 300 ச.அடி வாடகை இடத்தில் உற்பத்தி தொடங்கப்பட்டது.  2000-ம் ஆண்டில் ராஜாஜி நகரில் உள்ள 1,200  ச.அடி இடத்துக்கு இடம் பெயர்ந்தது. தொழில் விரிவடைந்ததால், 2002-ம் ஆண்டு ஸ்ரீராமபுரத்தில் உள்ள மிகப் பெரிய இடத்தில் 4,500 ச.அடியில் உற்பத்தி இடத்தை மாற்றினர்.

சில ஆண்டுகள் கழித்து,2006-ம் ஆண்டு பாகார்யா மைசூர் சாலையில் 15,000 ச.அடி  கட்டடத்தில் இன்னொரு உற்பத்தி பிரிவைத் தொடங்கினார். ஆண்டுதோறும் தொழில் வளர்ச்சியடைந்தது. 2015-ம் ஆண்டு ஹாரோஹள்ளியில் இரண்டு ஏக்கர் இடம் வாங்கி புதிய கட்டடத்தை கட்டினார். இங்குதான் அனைத்து குவாலிட்டி உணவுப் பொருட்களும் தயாரிக்கப்படுகின்றன.

https://www.theweekendleader.com/admin/upload/07-12-19-10kwal1.jpg

குவாலிட்டி ஃபுட்ஸ் என்ற பிராண்ட் பெயரில் மசாலா வகைகள், காலை உணவு தானியங்கள், உடனடி மிக்ஸ்களை பாகார்யா தயாரிக்கிறார்.


இந்த உற்பத்திப்பிரிவு ஆண்டுக்கு 7,200  டன்கள் உற்பத்தி செய்யும் திறன் கொண்டது. ஆனால், இப்போது அதில் ஒரு பகுதி மட்டும் 4000 டன் உற்பத்தி செய்யும் அளவுக்கு மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.

“மேலும் விரிவாக்கம் செய்வதற்காக ஒரு ஏக்கரில் நான்கில் மூன்று பகுதி திறந்த வெளி உள்ளது,” என்கிறார். இங்கே குவாலிட்டி ஃபுட்ஸ் என்ற பிராண்ட்டின் பெயரில் உடனடி மிக்ஸ்கள், காலை உணவுக்கான தானியங்கள், மசாலாக்கள் தயாரிக்கப்படுகின்றன.

ஆனால், ஆரம்பகாலகட்டம் அவ்வளவு எளிதாக இல்லை. “எங்களுடைய ஒட்டு மொத்த சமூகத்துக்கும் சேர்த்து உற்பத்தி தொழிலில் இறங்கிய முதல் நபர் நான்தான். குடும்பத்தையும், நான் சார்ந்த சமூகத்தையும் சம்மதிக்க வைக்க எனக்கு பெரிய சவால்கள் இருந்தன. அவர்கள் என்னைப் பார்த்து சிரித்தனர், கேலி செய்தனர். அவர்களில் பலர், வங்கிக்கடன் வாங்கி தொழில் செய்யும் யோசனையை வெறுத்தனர்.”

ஆனால், அவர் தொழிலை தொடங்கியதும்  அது இரண்டு ஆண்டுகளில் ஆறுமடங்காக வளர்ந்தது.

“மூன்று ஆண்டுகளுக்குள், இந்த பிராண்ட்டின் கீழ் 22 பொருட்களுடன் மாதத்துக்கு ரூ.15 லட்சம் ரூபாய்க்கும் அதிகமான வணிகத்தைக் கண்டோம், “  என்கிறார் அவர்.   

சந்தையை நெருக்கமாக கவனிக்கும் இவர் மிகவும் புகழ்பெற்ற ஒரு தானிய பிராண்ட் , காலை உணவாக தானிய உணவை அறிமுகப்படுத்தத் தொடங்கியதை அறிந்தார். அதில் நல்ல வாய்ப்புகள் இருப்பதை கண்டார்.  உடனே 2003-04-ம் ஆண்டில் பல்வேறு வகையான தானிய உணவுகளை உற்பத்தி செய்யத் தொடங்கினார். ஆரம்பத்தில், இதர நிறுவனங்களிடம் இருந்து தானிய உணவுகளைக் கொள்முதல் செய்தார். பின்னர் அதனை குவாலிட்டி ஃபுட்ஸ் என்ற பிராண்ட்டில் விற்பனை செய்தனர். நான்கு ஆண்டுகள் கழித்து சொந்தமாகவே உற்பத்தியைத் தொடங்கினர்

. “தானிய வகைகள், சில்லறை வணிகத்துக்கு தேவையான உந்துதலைக் கொடுத்தன,”  என்கிறார் அவர். “எங்களுடைய பெரும்பாலான பொருட்கள், மொத்த வியாபாரத்தில் ஆதிக்கம் செலுத்தின. தானிய உணவுகள்தான் சில்லறை விற்பனையில் எங்கள் வணிக இருப்பை நிலை நிறுத்த உதவி.”

https://www.theweekendleader.com/admin/upload/07-12-19-11kwal2.jpg

பாகார்யா ஃபுட்ஸ் நிறுவனத்தில் 240 ஊழியர்கள் உள்ளனர்.


மகாராஷ்டிராவின் ஒரு பகுதியுடன் சேர்த்து தென் இந்தியா முழுவதும் நிறுவனம் விரிவாக்கம் கண்டது. துபாயை மையமாகக் கொண்டு மத்திய கிழக்கு சந்தைக்கும், 2014-ல் ஏற்றுமதி செய்தனர். இன்றைக்கு, பாகார்யா ஃபுட்ஸ் நேபாளம், இலங்கை, தான்சானியா மற்றும் கென்யா உட்பட 21 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறது. 

டிமார்ட், ரிலையன்ஸ், பிக்பஜார் ஆகிய சங்கிலித்தொடர் கடைகளிலும் அவர்கள் ஆதிக்கம் செலுத்துகின்றனர். அமேசான், ஃபிளிப்கார்ட், பிக் பாஸ்கெட் போன்ற இ-வணிக தளங்களிலும் அவர்களின் பொருட்கள் கிடைக்கின்றன.

விற்பனை மற்றும் சந்தையின் உத்திகளைப் பற்றி அவர் கூறுகையில்,”தரமான பொருட்களை ஏற்றவிலையில், கவர்ச்சிகரமான பேக்கேஜிங்கில் தருவது மற்றும் எங்கள் பங்குதாரர்களுக்கு கண்ணியமான லாபம் தருதல் ஆகியவற்றில்தான் எங்களின் வலிமை அடங்கி இருக்கிறது.”

நிறுவனத்தில் 240 ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். 80 பேர் விற்பனை குழுவிலும், 120 பேர் தொழிற்சாலையிலும், மீதம் இருப்பவர்கள் பின்னணி பணிகளிலும் இருக்கின்றனர். கர்நாடக மாநிலம் முழுவதும், மகாராஷ்டிரா மற்றும் குஜராத்தில் ஒரு பகுதி என 20, 000 சில்லறை வணிக கடைகளுடன் தொடர்பில் இருக்கும் 400 விநியோகஸ்தர்கள் இருக்கின்றனர்.

தரத்தை உறுதி செய்ய, நாடு முழுவதிலும் இருந்து உயர் தரமான பொருட்களையே கொள்முதல் செய்கின்றனர். அதில் சிலவற்றை இறக்குமதியும் செய்கின்றனர்.

மைல்கல் ஆக இருக்கும் சில முக்கியமான பொருட்களை அறிமுகம் செய்ததைப் பற்றிப் பேசும்போது, “கோபி மஞ்சூரியன் மிக்ஸ், பாஸ்தா மசாலா, நூடூல்ஸ் மசாலா ஆகியவற்றை நாட்டிலேயே முதன் முறையாக நாங்கள்தான் தொடங்கினோம்,” என்கிறார் பகாரியா பெருமையுடன்.

விரைவிலேயே மேலும் இரண்டு முதல் மூன்று பொருட்களை அறிமுகம் செய்வதற்கான பணிகளில் இந்த நிறுவனம் ஈடுபட்டுள்ளது. இஞ்சிப் பூண்டு விழுதுபோன்ற திரவ வடிவிலான பேஸ்ட்கள், மாயோனிஸ், சீஸ் ஆகியவை தவிர பதப்படுத்தப்பட்ட காய்கறிகள், ஜூஸ் வகைகளும் அறிமுகம் செய்யப்பட உள்ளன.

https://www.theweekendleader.com/admin/upload/07-12-19-11kwal4.jpg

தங்கள் நிறுவனத்தின் பொருட்களுடன் பாகார்யா


மசாலாக்கள், நறுமணப் பொருட்கள் வணிகம் 50 சதவிகிதமும், காலை உணவு தானியம், உடனடி மிக்ஸ்கள் முறையே 35 சதவிகிதம், 15 சதவிகிதமும்  வணிகம் நடக்கிறது. 

பாகார்யா ஃபுட்ஸ், தொடங்கப்பட்டதில் இருந்தே கடன் இல்லாத நிறுவனமாக இருந்தது. 2012-ம் ஆண்டு விரிவாக்கத்துக்கு  வங்கிக் கடன்கள் வாங்கினர். பவார்லால்ஜி பாகார்யா நிறுவனத்தின் இயக்குனர்களில் ஒருவர். நரேஷ் பாகார்யாவின் உறவினர் தீரஜ் ஜெயின் விற்பனை, சந்தை ஆகியவற்றைக் கவனித்துக் கொள்கிறார்.

“தென் இந்தியாவில் குவாலிட்டி ஃபுட்ஸ் நிறுவனம் மூன்றாவது பெரிய நிறுவனமாக இருக்கிறது. மசாலாவில் உயரிய இடத்தைப் பிடிக்க எங்களுக்கு இன்னும் கடின உழைப்புத் தேவைப்படுகிறது,” என்கிறார் பாகார்யா.

அவரது வார இறுதி நாள் சனிக்கிழமை பிற்பகலில் தொடங்குகிறது. குடும்பத் தலைவியான தம்முடைய மனைவி கவிதா பாகார்யாவுடன் நேரம் செலவிடுவதை விரும்புகிறார். அவர்களுக்கு சச்சின், ஷாகில் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். 

பாகார்யா உடல்நலனில் ஆர்வம் உள்ளவர். யோகா பயிற்சி, காலை நேர நடைபயிற்சியுடன் நாளினைத் தொடங்கும் அவர்தமது மகன்களுடன் பாட்மிட்டன், டேபிள் டென்னிஸ் விளையாடுகிறார். பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சனின் மிகப் பெரிய ரசிகராக இருக்கிறார். பாலிவுட் திரைப்படங்கள் பார்ப்பதையும் விரும்புகிறார்.


Milky Mist
 

அதிகம் படித்தவை

 • Redesigning small shops

  மளிகையில் மலர்ச்சி!

  தந்தையின் மளிகைக்கடையை புதுப்பித்து விற்பனையை அதிகப்படுத்தினார்  வைபவ் என்ற இளைஞர். இதே போல் பிற மளிகைக் கடைகளையும் நவீனப்படுத்தும் தொழிலைத் தொடங்கி இரண்டு ஆண்டுகளிலேயே ஒரு கோடிக்கும் மேல் வருவாய் ஈட்டி உள்ளார் இவர். சோபியா டேனிஷ் கான் எழுதும் கட்டுரை.

 • Success through low price

  குறைந்த விலையில் நிறைந்த லாபம்!

  ஒரு தேநீரின் விலையில் டீஷர்ட் என்ற விற்பனை தந்திரத்தின் மூலம் வெற்றியைத் தொட்டிருக்கிறார் சி.எம்.ஃபைசல் அகமது. மதுரையைச் சேர்ந்த ஜவுளித் தொழில் குடும்பத்தைச் சேர்ந்த இவர், குடும்பத்தை மீட்டெடுக்க கல்லூரியில் படிக்கும்போதே தொழில் அதிபராகவும் ஆனவர். பி.சி.வினோஜ் குமார் எழுதும் கட்டுரை.

 • The Success Story of Narayan

  கனவின் வெற்றி

  மும்பை என்ற கனவு நகரத்தின் மீதான ஈர்ப்பால், 30 ரூபாயுடன் வந்த நாராயண் முதலில் கேன்டீன் வெயிட்டராக வாழ்க்கைத் தொடங்கினார். இன்று மும்பையில் 16 கிளைகளைக் கொண்ட ஷிவ் சாகர் எனும் ரெஸ்டாரெண்ட் உரிமையாளராக 20 கோடி ரூபாய் வருவாய் ஈட்டுகிறார். தேவன் லாட் எழுதும் கட்டுரை

 • Dream come true

  நனவான தொழில் கனவு

  பள்ளிப்படிப்பை முடித்ததும், தொழிலில் ஈடுபட விரும்பினார் இளங்கோவன். குடும்பத்தினர் அதை விரும்பாததால் தொடர்ந்து படித்த அவர், கால்நடைமருத்துவரானார். ஆனாலும் அதன் பின்னர் தமது இதழியல் மற்றும் தொழில் முனைவுக் கனவுகளை நனவாக்கிய அவர் இன்று வெற்றிகரமான தொழில் அதிபராக உயர்ந்திருக்கிறார். உஷா பிரசாத் எழுதும் கட்டுரை.

 • Aligarh to Australia

  கடல்கடந்த வெற்றி!

  உத்தரபிரதேச மாநிலத்தில் ஒரு நடுத்தரக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர் அமீர். தொழில்தொடங்கும் லட்சியத்துடன் ஆஸ்திரேலியா சென்றவர் தூய்மை பணியாளராக பணியாற்றி, சேமித்து,  சொந்த நிறுவனத்தை தொடங்கி வெற்றி பெற்றிருக்கிறார். சோஃபியா டேனிஷ் கான் எழுதும் கட்டுரை.