Milky Mist

Friday, 29 March 2024

தள்ளுவண்டிக் கடையில் தளராத சாதனை! ஒரு கோடி ரூபாய் வருவாயை எட்டும் இளைஞர்கள்

29-Mar-2024 By ஜி சிங்
கொல்கத்தா

Posted 04 Apr 2018

கொல்கத்தாவில் 2014-ம் ஆண்டு த யெல்லோ ஸ்ட்ரா(‘The Yellow Straw’) என்ற ஒரு ஜூஸ் கடையை, தொடங்கிய பியூஷ் கன்காரியா மற்றும் விக்ரம் கின்வாசாரா இருவரின் வெற்றிகரமான பயணம் இது. இரண்டு ஆண்டுகள் எனும் குறுகிய காலகட்டத்துக்குள், அவர்கள் 6 சங்கிலித் தொடர் ஜூஸ் கடைகளைத் தொடங்கி, ஒரு கோடி ரூபாய் ஆண்டு வருவாய் ஈட்ட வேண்டும் என்பதை நோக்கி முன்னேறுகின்றனர்.

நெருங்கிய நண்பர்கள் மற்றும் தொழில் பங்குதாரர்கள் மட்டுமின்றி இருவரும் நெருங்கிய உறவினர்கள். விக்ரம்(37), பியூஷ்(32) இருவருக்கும், குளிர்பானங்களைக் காட்டிலும் பழ ஜூஸ் வகைகளைக் குடிக்கும், உடல் நலனில் அக்கறை உள்ள வாடிக்கையாளர்களே இலக்கு. அந்த வாடிக்கையாளர்களின் ஆதரவு குவிகிறது!

https://www.theweekendleader.com/admin/upload/feb8-17-Lead.jpg

த யெல்லோ ஸ்ட்ரா நிறுவனர்களான பியூஷ் கன்காரியா மற்றும் விக்ரம் கின்வாசாரா இருவரும் தங்கள் போட்டியாளர்களை விடவும் துணிச்சலான வித்தியாசமானவர்கள். கடைகளின் மூலமும், தள்ளுவண்டிகளிலும் விற்பனை செய்கின்றனர். (புகைப்படங்கள்: மோனிருல் இஸ்லாம் மல்லிக்)


இந்த இருவரும், தங்களின் போட்டியாளர்களிடம் இருந்து வித்தியாசப்பட்டு இருக்கின்றனர். எந்த ஒரு சிறப்பு அம்சங்களும் இன்றி, ஜூஸ் வகைகளை தள்ளுவண்டியில் விற்கின்றனர்.  கொல்கத்தாவின் முன்னணி கிளப்களில் ஒன்றான டோலிகுஞ்சே கிளப்பில் ஒரே ஒரு கடை வைத்துள்ளனர். அங்கு வார இறுதி நாட்கள், தேசிய விடுமுறை நாட்களில் மட்டும் ஜூஸ் விற்பனை.

“நான் உடலைக் கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்வதில் ஆர்வம் உள்ளவன். தொடர்ந்து உடற்பயிற்சிகள் செய்து வருகிறேன். குழந்தைப் பருவத்தில் இருந்தே, உடல்நலத்துக்கு கேடு விளைவிக்கும் காற்றடைக்கப்பட்ட குளிர்பானங்களைவிடவும், பழ ஜூஸ்களைக் குடிப்பதில் எனக்கு விருப்பம் உண்டு,” என்கிறார் விக்ரம். 37 வயதை விடவும், அவர் பார்ப்பதற்கு இளமையாகத் தோற்றம் அளிக்கிறார். உற்சாகத்துடன் இருக்கிறார்.

“என்னுடைய சொந்த நிறுவனத்தைத் தொடங்க வேண்டும் என்று நான் திட்டமிட்டபோது, அது உடல்நலத்தோடு தொடர்புடையதாக இருக்க வேண்டும் என்று நான் நினைத்தேன்,”  என்கிறார் மத்திய கொல்கத்தாவில் ஆர்.என்.முகர்ஜி சாலையில் உள்ள தமது கடையில் உட்கார்ந்தபடி.

https://www.theweekendleader.com/admin/upload/feb8-17-sjuice.JPG

தி யெல்லோ ஸ்ட்ரா, பைன்ஆப்பிள்,கிவி பழம்,பச்சை மிளகாய் ஆகியவை கலந்த சில்லி படாகா ஸ்ட்ரா என்பது போன்ற ஜூஸ் வகைகளையும்  வழங்குகிறது.


மூன்று குழந்தைகள் கொண்ட குடும்பத்தில் இரண்டாவதாக பிறந்த விக்ரமுக்கு இயல்பாகவே வணிகத்தில் நாட்டம் உண்டு. அவரது தந்தை எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் தொடர்பான வணிகம் செய்து வருகிறார். கொல்கத்தா பல்கலைக்கழகத்துக்கு உட்பட்ட சேத் ஆன்ந்த்ராம் ஜெய்பூரியா கல்லூரியில், இவர் வணிகத்தில் இளநிலை நிலைப்பட்டம் பெற்றிருக்கிறார்.

இதற்கு முன்பு அவர், மொபைல் போன் கடையை சொந்தமாக வைத்திருந்தார். இது தவிர, கார்மன்ட் தொழிலும் ஈடுபட்டார், அதற்கு முன்பாக 2004-ம் ஆண்டு ஒரு எம்.என்.சி முதலீட்டு நிறுவனத்தில் ரிலேஷன்ஷிப் எக்ஸ்க்யூட்டிவ் ஆகப் பணியில் சேர்ந்தார்.

“முதலீடு மற்றும் நிதி தொடர்பான ஒப்பந்தங்களில் நான் கற்றுக்குட்டியாகவே இருந்தேன். இந்த நிறுவனத்தில் சேர்ந்த பின்னர்தான், எனக்கு நிதி சந்தைகள் குறித்துப் பழக்கமானது. எப்படி தொழில் நடத்த வேண்டும் என்பதையும் கற்றுக்கொண்டேன்.”

“பத்து ஆண்டுகளுக்கு நெருக்கமாக அங்கு நான் பணியாற்றினேன். அங்கே நான் உதவி தலைவர் பதவிக்கான தகுதியை அடைவதற்கு முன்பாக இந்தியாவில் இருந்து அந்த நிறுவனம் தமது செயல்பாடுகளை முடிவுக்கு கொண்டு வர முடிவு செய்தது. எனவே, 2013-ம் ஆண்டு என்னுடைய பதவி விலகல் கடிதத்தைக் கொடுத்தேன்,” என்று நினைவு கூறுகிறார்.

இதன் தொடர்ச்சியாக,வேறு ஒரு எம்.என்.சி.நிறுவனத்தில் அவர் பணியில் சேர்ந்தார். “சொந்தத் தொழில் தொடங்குவதற்கான யோசனை, என் மனதில் ஏற்கனவே தோன்றியிருந்தது.”

இதற்கிடையே, பியூஷுக்கும் ஏறக்குறைய இதே போன்ற யோசனை தோன்றியது. அவர் அப்போது பெங்களூருவில் உள்ள ஒரு எம்.என்.சி. நிறுவனத்தில்  சாப்ட்வேர் இன்ஜினியராகப் பணியாற்றிக் கொண்டிருந்தார்.

 “சாப்பாட்டுப் ப்ரியன் என்பதால், ஒரு உணவு சங்கிலித் தொடர் நிறுவனம் தொடங்க வேண்டும் என்று விரும்பினேன்,”என்கிறார்.

இருவரின் ஆர்வமும் ஒரே திசையில் இருந்ததால், விக்ரம், பியூஷ் இருவரும் ஒரு ஜூஸ் கடை வைப்பது என்று முடிவு செய்தனர். இந்த தொழிலில் இறங்குவதற்கு முன்பு, சில ஆய்வுகளில் ஈடுபட வேண்டும் என்று பியூஷ் யோசனை கூறினார்.

https://www.theweekendleader.com/admin/upload/feb8-17-skitchen.JPG

ஆரம்ப கால கட்டங்களில், பியூஷ், விக்ரம் இருவருமே ஜூஸ் தயாரித்து வாடிக்கையாளர்களுக்கு தாங்களே வழங்கி வந்தனர்.


அடுத்த 9 மாதங்கள் அவர், நாடு முழுவதும் ஒரு விரிவான சுற்றுப்பயணம் மேற்கொண்டார். டெல்லி, லூதியானா, அகமதாபாத், அமிதசரஸ் போன்ற இடங்களில் உள்ள ஜூஸ் கடைகளுக்குச்சென்று பார்த்தார். பெங்களூரில் உள்ள ஜூஸி ஜங்ஷன், மும்பையில் உள்ள ஹஜ் அலி ஜூஸி சென்டர், பூஸ்ட் ஜூஸிபால் டெல்லி, ஜூஸி லாஞ்ச் அமிதசரஸ் ஆகிய புகழ்பெற்ற ஜூஸ்கடைகளுக்கும் சென்று பேசினர்,

”நல்ல யோசனைதான். ஆனால், இது கொல்கத்தா நகருக்குச் சரிப்படாது.  சாலை ஓரத்தில் உள்ள ஜூஸ் கடைகளில் குறைவான விலையில் ஜூஸ் குடிப்பதையே மக்கள் விரும்புகின்றனர் என்ற கருத்தை முன்வைத்தனர். இதனால், கொஞ்சம் நம்பிக்கை குறைவு ஏற்பட்டது. அதே நேரத்தில், இந்த யோசனை கொல்கத்தா நகரில் நன்றாக எடுபடும் என்றும் நாங்கள் நம்பினோம்,” என்று நினைவு கூறுகிறார் பியூஷ்.

உணவு மற்றும் பானங்கள் விற்பனைத்துறையில் அனுபவம் பெற வேண்டும் என்பதற்காக ஒரு ஃபாஸ்ட் ஃபுட் சங்கிலித் தொடர் நிறுவனத்தில் பியூஷ் 9 மாதங்கள் வரை பணியாற்றினார். 

2014-ம் ஆண்டு, தலா 10 லட்சம் ரூபாய் முதலீட்டில், நிறுவனத்தைத் தொடங்க அவர்கள் திட்டமிட்டனர்.

https://www.theweekendleader.com/admin/upload/feb8-17-semployees.jpg

த யெல்லோ ஸ்ட்ரா நிறுவனத்தின் கடைகளில் மொத்தம் 25 ஊழியர்கள் பணியாற்றுகின்றனர்.


“பல ஆண்டுகளாக சேமித்து வந்த பணத்தை இதற்காக நாங்கள் பயன்படுத்தினோம். அந்தப் பணத்தைக் கொண்டு கல்கத்தா ஐகோர்ட் அருகே சிறிய 26 ச.அடி இடத்தை நாங்கள் வாடகைக்கு எடுத்தோம். அடுத்தவர்களிடம் இருந்து வித்தியாசமாக நாங்கள் செயல்பட வேண்டும் என்பதால், என்னென்ன ரெசிபிக்கள் விற்பனை செய்யலாம் என்பதை முடிவு செய்ய ஆலோசகர்களை நியமித்தோம்,” என்கிறார் விக்ரம்.

‘உங்களுடைய பழத்தை அருந்துங்கள்’ என்ற வாசகத்துடன், த யெல்லோ ஸ்ட்ரா என்று தங்களது கடைக்கு இருவரும் பெயர் வைத்தனர். “சர்க்கரை, தண்ணீர் அல்லது வேறு எந்த பொருட்களையும் எங்களது தயாரிப்பில் சேர்க்கக் கூடாது என்ற  எங்களின் கொள்கையுடன், எங்களது நிறுவனத்தின் வாசகம் ஏற்றதாக இருந்தது. ஃபிரஷ்ஷான பழங்களை மட்டும் உபயோகித்து ஜூஸ் தயாரிக்க வேண்டும், அதைத்தவிர வேறு எதையும் செய்யக் கூடாது என்பதில் தீர்மானமாக இருந்தோம்,” என்கிறார் பியூஷ்.

அவர்கள் தங்களுடைய முதல் கடையை, இரண்டு ஊழியர்களுடன் 2014-ம் ஆண்டு மே 2-ம் தேதி தொடங்கினர். ”ஆரம்பத்தில் எல்லா வேலைகளையும் நாங்களே செய்தோம். ஜூஸ் தயாரிப்பது, அதனை வாடிக்கையாளர்களுக்குக் கொடுப்பது ஆகியவை. முதன் முதலாகக் கடை திறந்த அன்று, 85 கிளாஸ் ஜூஸ்களை விற்பனை செய்தோம்,” என்று நம்மிடம் பகிர்ந்து கொள்கிறார் விக்ரம்.

பிரஷ் ஆப்பிள், கொய்யா ஜூஸ் வகைகளை, ஒரு சொட்டுத் தண்ணீர் கூட இல்லாமல் தயாரிக்கின்றனர். இதுதவிர, பைன் ஆப்பிள், கிவி பழம் மறும் பச்சை மிளகாய் ஆகியவற்றை கலந்து செய்யும் சுவையான சில்லி படாகா ஸ்ட்ரா போன்ற ஜூஸ்களையும் தயாரிக்கின்றனர். கீரை, ஆப்பிள், ஆரஞ்ச், பீட் ரூட் ஆகியவற்றை கலந்து பவர் பஞ்ச் ஸ்ட்ரா என்ற ஜூஸ், சுரைக்காய், மஞ்சள், இஞ்சி, பீட் ரூட் மற்றும் எலுமிச்சை ஆகியவற்றைக் கலந்து ஹெல்தி ஸ்ட்ரா உள்ளிட்ட ஜூஸ் வகைகளையும் தயாரிக்கின்றனர்.

ஜூஸ்களின் விலை 40 ரூபாய் முதல் 150 ரூபாய் வரை இருக்கிறது.

https://www.theweekendleader.com/admin/upload/feb8-17-stable.jpg

நாட்டில் உள்ள இரண்டாம் நிலை நகரங்களிலும், தங்கள் வணிகத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்று பியூஷ், விக்ரம் இருவரும் திட்டமிட்டுள்ளனர்.


தொழில் வளர்ச்சியடைந்து வருவதை அடுத்து, மத்திய கொல்கத்தாவின் டல்ஹவுசி பகுதியில் 2015-ம் ஆண்டு 250 ச.அடி இடத்தை வாடகைக்குப் பிடித்தனர். “ப்ரஷ் ஜூஸ், மில்க் ஷேக்ஸ் தவிர டோஸ்ட் வகைகள், சான்ட்விட்ச் வகைகளையும் நாங்கள் விற்கத் தொடங்கினோம்,” என்கிறார் பியூஷ்.

 “2015-16-ல் நாங்கள் 60 லட்சம் ரூபாய் ஆண்டு வருவாய் ஈட்டினோம். இப்போதைய நிதி ஆண்டில் ஒரு கோடி ரூபாய் ஆண்டு வருவாய் என்ற இலக்கைத் தாண்ட வேண்டும் என்று முடிவு செய்திருக்கிறோம். எங்களிடம் வரும் 70 சதவிகித வாடிக்கையாளர்கள் மீண்டும், மீண்டும் எங்கள் கடைகளுக்கு வருகின்றனர்,” என்று சொல்கிறார் விக்ரம்.

“எங்களிடம் 25 ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். தினம்தோறும் 600 கோப்பை ஜூஸ்கள் விற்பனை செய்கிறோம். நாடு முழுவதும் இரண்டாம் நிலை நகரங்களில் எங்கள் தயாரிப்புகளைத் தொடங்க வேண்டும் என்று திட்டமிட்டிருக்கிறோம்,” என்று இருவரும் சொல்கின்றனர். ஆம் நிச்சயமாக, சர்க்கரை சேர்க்காமலே அவர்களுக்கு வெற்றி இனிக்கிறது.


 
 
 
 
 

அதிகம் படித்தவை

  • Tea stall entreprenuer

    தேநீர் விற்கும் ஆடிட்டர்

    புது டெல்லியைச் சேர்ந்த ஆடிட்டரான ராபின் ஜா சம்பந்தமே இல்லாத ஒரு வேலையைச் செய்துவருகிறார். ஆம்... அது தேநீர் விற்பனை! டீபாட் எனும் சங்கிலித்தொடர் தேநீர் விற்கும் கடைகளைத் தொடங்கி மாதம் 50 லட்சம் ரூபாய் வருவாய் ஈட்டுகிறார். நரேந்திர கவுசிக் எழுதும் கட்டுரை

  • From Pavement to pedastal

    இருளில் இருந்து வெளிச்சத்துக்கு

    கொல்கத்தாவின் ஆயிரக்கணக்கான நடைபாதை வாசிகளைப் போல மிகவும் ஏழ்மையான வாழ்க்கை வாழ்ந்தவர் ஜிலியன். இன்றைக்கு ஆண்டுக்கு கோடிக்கணக்கான ரூபாய்களைக் குவிக்கும் எழுத்தாளராக, பேச்சாளராக இருக்கிறார். ஜி.சிங் எழுதும் கட்டுரை

  • Speed gears

    வேகமும் வெற்றியும்

    திருச்சி கைலாசபுரத்தில் பிறந்து வளர்ந்த அன்சார், சிறுவயதில் மெக்கானிக் ஷாப்புகளில் பொழுதைப் போக்குவது வழக்கம். இன்றைக்கு இந்தியாவின் முன்னணி ரைடிங் கியர்கள் உற்பத்தி நிறுவனத்தின் உரிமையாளராக உயர்ந்திருக்கிறார். ரூ.10 கோடி ஆண்டு வருவாய் ஈட்டும் வகையில் அவரது நிறுவனம் வளர்ந்திருக்கிறது. உஷா பிரசாத் எழுதும் கட்டுரை

  • Beauty as Business

    எடை, தடை, அதை உடை!

    தீக்‌ஷா சாப்ரா என்ற இளம் பெண் திருமணத்துக்குப் பின் குண்டாகி விட்டார். ஒரு கட்டத்தில் அவருக்கு, ஆத்தாடி, நாம இவ்ளோ குண்டாகிவிட்டோமே என்று தோன்ற, உடல் எடையைக் குறைத்து மீண்டும் அழகியாக மீண்டார். தன் அனுபவத்தைக் கொண்டு அதையே மற்றவர்களுக்கு ஆலோசனையாக வழங்கி இப்போது பணம் ஈட்டுகிறார். சோஃபியா டேனிஷ் கான் எழுதும் கட்டுரை.

  • வறுமையில் இருந்து செழிப்புக்கு

    இப்போது 3600 கோடி ரூபாய் மதிப்புள்ளதாக இருக்கும் தைரோகேர் நிறுவனத்தை உருவாக்கியவரான ஆரோக்கியசாமி வேலுமணி, ஒரு கையில் சிலேட், மறு கையில் மதிய உணவு சாப்பிட தட்டு- ஆகியவற்றுடன் அரசுப்பள்ளிக்குச் சென்றவர். அவரது வெற்றிக்கதையை விளக்குகிறார் பி சி வினோஜ் குமார்

  • The success story of a hair stylist who owns a car rental business with 68 luxury cars

    வெற்றிக்கலைஞன்

    பள்ளியில் பைலட் பேனா வைத்திருக்கத் தகுதி இல்லை என்று சொல்லப்பட்ட ஒரு சிறுவன் வளர்ந்து இன்று 127 கார்கள் வைத்திருக்கிறார். கடும் உழைப்பால் இந்நிலையை எட்டி இருக்கும் முடி திருத்தும் கலைஞரான வி. ரமேஷ் பாபுவின் வெற்றிக்கதை. கட்டுரை: பி சி வினோஜ் குமார்