Milky Mist

Thursday, 25 April 2024

சம்பளம் கொடுக்கவில்லை என்பதால் வேலையை விட்டு சொந்த தொழில் தொடங்கிய வேளாண்மை பொறியாளரின் வெற்றிக்கதை!

25-Apr-2024 By உஷா பிரசாத்
பெங்களூரு

Posted 31 Jan 2018

ஏழு சுற்றுகள்  இன்டர்வியூ முடிந்தபின் தான் நீர்ப்பாசன கருவிகள் விற்கும் அந்நிறுவனத்தில் அவருக்கு முதல் வேலை கிடைத்தது. சம்பளமும் குறைவு. ராஜீப் குமார் ராய் (50), தமது வாழ்க்கையில் நீண்ட தூரத்தைக்கடந்து வந்திருக்கிறார். இன்றைக்கு அவர், அக்ரிப்ளாஸ்ட் டெக் இந்தியா பிரைவேட் லிமிடெட் ( Agriplast Tech India), அக்ரிப்ளாஸ்ட் புரடெக்டடு கல்டிவேஷன் பிரைவேட் லிமிடெட் (Agriplast Protected Cultivation Pvt Ltd), த அக்ரி ஹப் (Theagrihub)  ஆகிய மூன்று நிறுவனங்களின் நிறுவனர் மற்றும் இயக்குனராக இருக்கிறார்.

மூன்று நிறுவனங்களும் சேர்ந்து 71 கோடி ரூபாய் ஆண்டு வருவாய் ஈட்டுகிறன்றன. அக்ரிப்ளாஸ்ட் டெக் இந்தியா லிமிடெட்டின் இரண்டு பிரிவுகளை, ஒரு லட்சம் ச.அடி கொண்ட சொந்த இடத்திலும், அக்ரிப்ளாஸ்ட் புரடெக்டடு கல்டிவேஷன் நிறுவனத்தை பெங்களூருக்கு அருகில் உள்ள தமிழகத்தின் ஓசூரில் 80,000 ச.அடி வாடகை இடத்திலும் அமைத்துள்ளார்.

https://www.theweekendleader.com/admin/upload/28-12-17-03rajeeb1.jpg

ராஜீப் குமார் ராய், அக்ரிப்ளாஸ்ட் எனும் தமது முதல் நிறுவனத்தை 2003-ம் ஆண்டு ஓசூரில் ஒரு சிறிய கார் ஷெட்டில் தொடங்கினார். (புகைப்படங்கள்: சிறப்பு ஏற்பாடு)


அக்ரிப்ளாஸ்ட் எனும் முதல் நிறுவனத்தை 2003-ம் ஆண்டு ஒரு சிறிய கார் ஷெட்டில் தொடங்கினார். கடந்த 15 ஆண்டுகளில் தமது வெற்றிப்பயணத்தைக் கடந்து வந்திருக்கிறார். 2017-18-ம் நிதியாண்டில் அவரது நிறுவனங்களின் ஆண்டு வருவாய் 130 கோடி ரூபாயைத் தொட வேண்டும் என்று இலக்கு வைத்திருக்கிறார்.

ஜினிகர் பசுமைக் குடில் ஃபிலிம், பசுமைக்குடிலுக்குத் தேவையான, வலைகள், பூச்சித் தடுப்பு வலைகள், சொட்டு நீர் பாசனத்துக்கான குழாய்கள் உள்ளிட்ட பொருட்களை உபயோகித்து பாலிதீன் குடில் மற்றும் காற்று வசதி உள்ள சுரங்கம் போன்ற அமைப்பை அக்ரிப்ளாஸ்ட் டெக் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் உருவாக்குகிறது. அக்ரிப்ளாஸ்ட் புரடெக்டடு கல்டிவேஷன் பிரைவேட் லிமிடெட் நிறுவனம், விவசாயப் பண்ணைகளுக்கான முழுமையான பாதுகாப்புத் திட்டங்களை வழங்குகிறது.

"எங்களின் அனைத்துத் தயாரிப்புகளும் விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கக் கூடும் வகையில் நல்ல தரமான மற்றும் நவீன தொழில் நுட்பம் கொண்டவை,” என்கிறார் ராஜீப்.

பீகார் மாநிலம் மதுபாணியில் இருந்து வந்த ராஜீப், இப்போது தமது மனைவி, இரண்டு குழந்தைகளுடன் பெங்களூருவில் வசிக்கிறார். 1987-ல் மகாராஷ்டிரா மாநிலம் மகாத்மா பூலே கிரிஷ் வித்யாபீத்தில் பி.டெக்.,வேளாண் பொறியியல் சேர்ந்து படித்து முடித்தார். அதன் பின்னர், 1993-ல் காரக்பூர் ஐ.ஐ.டி-யில் அறுவடைக்குப் பிந்தைய தொழில்நுட்பத்தில் எம்.டெக் பட்டம் பெற்றார். 2012-ல் பெங்களூர் ஐ.ஐ.எம்-இல் எக்ஸ்க்யூட்டிவ் ஜெனரல் மேனேஜ்மென்ட் படிப்பு முடித்தார்.

வேளாண் பொறியியலில் அறிவு கொண்டவராக இருந்த ராஜீப், பல்வேறு இடங்களில் உள்ள விவசாயிகளைப் பற்றி்த் தெரிந்து கொள்ள உலகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். 2003-ம் ஆண்டு அக்ரிப்ளாஸ்ட் நிறுவனத்தைத் தொடங்கும் முன்பு, ஜினிகர் பிளாஸ்டிக் புரடெக்ட்ஸ் லிமிடெட் என்கிற இஸ்ரேல் நிறுவனத்தில் மார்க்கெட்டிங் இயக்குனர் (இந்தியா)-வாகப் பணியாற்றினார். இந்தியாவின் பசுமைக்குடில் தொழிலில் ஜினிகரின் பிராண்ட்டை நிலை நிறுத்தினார்.

https://www.theweekendleader.com/admin/upload/28-12-17-03rajeeb5.jpeg

ராஜீப் பணிபுரிந்த நிறுவனம் நொடித்துப் போனதால், அந்த நிறுவனத்தில் பணியாற்றியவர்களுக்கு சம்பளம் தர முடியவில்லை. எனவே, ஒரு தொழில்முனைவோராக ராஜீப் மாறினார்.


ராஜீப்பின், முதல் வேலையில் 3000 ரூபாய் சம்பளம் கிடைத்தது. மூன்று மாதத்துக்குப் பிறகு 300 ரூபாய் சம்பள உயர்வு தரப்படும் என்று சொல்லப்பட்டது. “நான் பணியில் சேர்ந்ததில் இருந்து, கடுமையாக உழைத்தேன். சம்பள உயர்வு கிடைக்கும் என்று எதிர்பார்த்தேன். ஆனால், அவர்கள் ஒருபோதும் சம்பள உயர்வு தரவில்லை,”என்று நினைவு கூர்கிறார்.

அறுவடைக்குப் பிந்தைய தொழில்நுட்பத்தில்தான் ராஜீப்  நிபுணர் என்றாலும்கூட  அவர்  வெளியில் சென்றும், 48 டிகிரி வெப்பம் இருக்கும்  பசுமைக் குடில்களிலும்  பணியாற்ற ஒருபோதும் தயங்கியதில்லை.

ஒன்பது மாதங்களுக்குப் பின்னும் கூட ராஜீப்-க்கு சம்பள உயர்வு கிடைக்கவில்லை. அந்த சமயத்தில் ரஞ்சனா என்ற பெண்ணுடன் அவருக்குத் திருமணம் முடிந்தது. தமது மனைவியுடன் ஒரே ஒரு அறை கொண்ட வீட்டில் வாழ்ந்தார். அவரது மனைவி, 600 ரூபாய் சம்பளத்தில் ஒரு பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றினார்.

ஊதிய உயர்வு கிடைக்காததால், வேலை பார்த்த நிறுவனத்தில் இருந்து விலகுவது என்று ராஜேஷ் தீர்மானித்தார். சண்டிகரில் நடைபெற்ற ஒரு கண்காட்சி நிகழ்வுக்கு, நாள்படியாக 40 ரூபாய் மட்டுமே கொடுத்தனர். அந்த அளவுக்கு நிலைமை மோசமானது. “ஐ.ஐ.டி டிகிரியைக் கையில் வைத்துக் கொண்டு, இப்படியான ஒரு சூழலில் தொடர்ந்து பணியாற்றுவது அவமானகரமாக இருந்தது. எனவே, அந்த கம்பெனியில் இருந்து விலகுவது என்று முடிவு செய்தேன்,” என்கிறார் ராஜீப்.

சண்டிகரில் நடந்த அந்த கண்காட்சி நிகழ்வில், சென்னை நிறுவனம் ஒன்று ஸ்டால் அமைத்திருந்தது. அவர்கள் ஒரு பசுமைக் குடில் பிரிவைத் தொடங்கத் திட்டமிட்டிருந்தனர். அந்த நிறுவனத்தில் சீனியர் இன்ஜினியராக ராஜீப் சேர்ந்தார். இதனால், அவர் சென்னைக்கு இடம் பெயர்ந்தார். அந்த நிறுவனத்துக்காக பசுமைக்குடில் பிரிவைத் தொடங்கினார்.

“என்னுடைய சம்பளம் 300 சதவிகிதம் அளவுக்கு உயர்ந்தது. எனக்கு அவர்கள் 10,000 ரூபாய் சம்பளம் கொடுத்தனர்,” என்கிறார் ராஜீப்.

இந்த நல்ல நாட்களும், நீண்டநாளைக்கு நீடிக்கவில்லை. அந்த நிறுவனம் நஷ்டத்தைச் சந்தித்தது. ஊழியர்களுக்கு இரண்டுமாதங்களாக அவர்கள் சம்பளம் தரவில்லை. அக்காங்ஷா என்ற பெண்குழந்தை அவர்களுக்குப் பிறந்திருந்தது. அந்த சமயத்தில் ராஜீப்பும், அவரது மனைவி ரஞ்சனாவும் மிகவும் கஷ்டப்பட்டனர்.

https://www.theweekendleader.com/admin/upload/28-12-17-03rajeeb2.jpg

முள்ளாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியுடன், ராஜீப் மற்றும் அவரது மனைவி ரஞ்சனா.


அந்த கடினமான சூழலில் இரவு உணவு கூட உண்ணமுடியாத நிலையில் வெறும் வயிற்றுடன்தான்  ராஜீப் மற்றும் அவரது மனைவி, குழந்தையும் தூங்கினர். மிகவும் மோசமான சூழ்நிலை காரணமாக, ராஜீப் தமது கம்பெனியின் உரிமையாளரின் வீட்டுக்குச் சென்று, தமது சம்பளத்தைக் கொடுக்குமாறு கேட்டார். ஆனால், ராஜீப் அவமானப்படுத்தப்பட்டார்.  சம்பளம் இல்லாமல் பணியாற்றுவதை விட, வேலை இல்லாமல் இருப்பது மேல் என்று அவர் நினைத்தார்.

இரண்டாவது வேலையில் இருந்தும் விலகிய ராஜீப், இஸ்ரேலிய நிறுவனமான பாலியான் பார்கைய் இன்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தில் சேர்ந்தார். இந்தியாவில், அவர்களின் பசுமைக் குடில் கவர்களை விற்பனை செய்வதற்கான விநியோக உரிமையை வழங்கினர்.

“அப்போது எனக்கு 500 அமெரிக்க டாலர்கள் (அப்போது இந்திய ரூபாய் மதிப்பில் 22,000 ரூபாய்) சம்பளமும், விற்பனையில் இருந்து 10 சதவிகித ஊக்கத்தொகையும் வழங்கினர்,” என்கிறார் ராஜீப். 1996-ல் அந்த வேலையில் சேர்ந்தார். முதல் ஆண்டு மட்டும் 50 லட்சம் ரூபாய் ஆர்டர் அவருக்குக் கிடைத்தது.

பாலியான் நிறுவனம், பின்னர் இன்னொரு இஸ்ரேல் நிறுவனமான ஜினிகர் பிளாஸ்டிக் புரடக்ட்ஸ் நிறுவனத்துடன் இணைந்து விட்டது. 1997-ம் ஆண்டு, ஜினிகர் நிறுவனத்தின் மார்க்கெட்டிங் இயக்குனர்(இந்தியா)- ஆக ராஜீப் நியமிக்கப்பட்டார்.

கொஞ்சகாலத்துக்கு எல்லாம் சரியாகச் சென்று கொண்டிருந்தது. அதே நேரத்தில் 2003-ம் ஆண்டு எதிர்பாராத ஒரு பிரச்னையை ராஜீப் சந்தித்தார். வருமானவரிப் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் அவரது வீட்டில் சோதனை நடத்தினர். அவரது வாடிக்கையாளர் ஒருவரிடம் கிடைத்த ரசீது அடிப்படையில் ஒரு இறக்குமதி வழக்குத் தொடர்பாக அவர்கள் சோதனையிட்டனர்.

“இந்த சமயத்தில், கருவுற்றிருந்த என் மனைவிக்கு அதிர்ச்சி காரணமாக கருசிதைவு ஏற்பட்டது,” என்று நினைவு கூறும் ராஜீப், “பல வாரங்களாக என்னால் தூங்கக்கூட முடியவில்லை. என்னுடைய நேர்மைதான் என்னை காப்பாற்றியது என்று சொல்லமுடியும்.”

https://www.theweekendleader.com/admin/upload/28-12-17-03rajeeb3.jpg

ராஜீப் நிறுவனம், பசுமைக் குடிலுக்கான உபகரணங்களை விற்பனை செய்கிறது.


அந்த சமயத்தில், சொந்தமாக இறக்குமதி தொழிலில் ஈடுபட வேண்டும் என்று ராஜீப் தீர்மானித்தார். சென்னையில் உள்ள வீட்டை விற்பனை செய்தார். தவிர, ஆண்டுக்கு 24 சதவிகித வட்டியுடன், உறவினர்கள், நண்பர்களிடம் இருந்து 20 லட்சம் ரூபாய் கடன் வாங்கினார். இதை வைத்து, 2004-ம் ஆண்டு ஜனவரி 13-ம் தேதி தமது பிறந்த நாளன்று, தமிழகத்தில் ஓசூரில் ஒரு சிறிய கார் ஷெட்டில் அக்ரிப்ளாஸ்ட் டெக் இந்தியா (ப்ரோப்பரைட்டர்ஷிப் நிறுவனமாக) நிறுவனத்துக்கு அடித்தளமிட்டார்.

பசுமைக்குடில் தேவைப்படும் பெரும்பாலான வாடிக்கையாளர்கள், பெங்களூரு அருகில்தான் இருந்தனர். முதல் ஆண்டில் மட்டும், அவரது நிறுவனம் ஒரு கோடி ரூபாய் ஆண்டு வருவாய் ஈட்டியது.

2011-ம் ஆண்டு, அக்ரிப்ளாஸ்ட் நிறுவனம் பிரைவேட் லிமிடெட் கம்பெனியாக மாறியது. இதன் தொடர்ச்சியாக, அக்ரிப்ளாஸ்ட் புரடெக்டடு கல்டிவேஷன் நிறுவனத்தை 2013-ம் ஆண்டு தொடங்கினார். விவசாயப் பண்ணைகளுக்கான முழுமையான பாதுகாப்புகளை வழங்கினார். அவரது இரண்டு நிறுவனங்களும், உலகம் முழுவதிலும் இருந்த, புதிய பண்ணைத் தொழில்நுட்பங்களை இந்தியாவில் அறிமுகம் செய்தன. அக்ரிப்ளாஸ்ட் புரடெக்டடு கல்டிவேஷன் நிறுவனம், சில தயாரிப்புகளை நேபாளம், கென்யா மற்றும் உகாண்டா நாடுகளுக்கு ஏற்றுமதி செய்தது. ஆஸ்திரேலியாவில் உள்ள சில நிறுவனங்களுடன் ராஜீப் நிறுவனம் ஏற்றுமதி தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. 

ஸ்டார்ட்அப்-இந்தியா, டிஜிட்டல் இந்தியா இயங்கங்களில் கவரப்பட்டு, த‍ அக்ரிஹப் என்ற விவசாயப் பொருட்களுக்கான இ-காமர்ஸ் தளத்தை ராஜீப் தொடங்கினார். 

அவருடைய மகள், அக்காங்ஷா (22), பெங்களூருவில் ஷாஜ் என்ற பேஷன் டிசைன் ஸ்டுடியோவை நடத்தி வருகிறார். அவரது மகன் அபினய்(16), வளர்ந்து வரும் கிரிக்கெட் வீரராக இருக்கிறார். படித்து வருகிறார். ராஜீப்பின் மனைவி, இப்போது மகளின் தொழிலுக்கு உதவிகள் செய்து வருகிறார்.

அதேபோல ராஜீப் சமூகப் பணிகளில் ஈடுபாடு கொண்டிருக்கிறார். ஏழ்மை நிலையில் இருப்பவர்களுக்கு உதவி செய்வதற்காக, ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின் உயர் நிர்வாகத்தில் இருப்பவர்களுடன் இணைந்து பணியாற்றுகிறார். ஏழைகளுக்கும், தேவைப்படுவோருக்கும் குறைந்த விலையில் பெட் சிடி (PET CT) ஆய்வக வசதி கிடைப்பதற்காக, பெங்களூரில் உள்ள ஸ்ரீசங்கரா கேன்சர் மருத்துவமனை மற்றும் ஆய்வு மையத்திற்குத் தேவையான நவீன பெட் சிடி ஸ்கேன் கருவியை, 8.6 கோடி ரூபாய் செலவில் வாங்குவதற்கான பணிகளை ராஜீப் ஒருங்கிணைத்தார்.

https://www.theweekendleader.com/admin/upload/28-12-17-03rajeeb4.jpg

மனைவி, மகள், மகனுடன் ராஜீப்


மேரிகோமின், மண்டல குத்துச்சண்டை பயிற்சி பவுண்டேஷனுடன் இணைந்து, மேரிகோம் பரிந்துரையின் படி, ஆண்டுக்கு இரண்டு சாதனை மாணவர்களுக்கு ஆதரவு அளிக்கிறார்.

மறைந்த ராஜீப்பின் பெற்றோர்களான டாக்டர் பரமானந்த் ராய், சியாமா தேவி ஆகியோர் ராஜீப்பை சரியாக வளர்த்தது மட்டும் அல்லாமல், வாழ்க்கையின் அடிப்படை மதிப்பீடுகளையும் கற்றுக் கொடுத்திருக்கின்றனர். இதற்காக தம் பெற்றோருக்கு கடன் பட்டிருப்பதாக ராஜீப் கூறுகிறார்.

“என் வாழ்க்கையில் என் தந்தைதான் எனக்கு மிகப்பெரிய உத்வேகத்தை அளித்துள்ளார்,” எனும் ராஜீப், “அவர் மதுபாணியில் உள்ள பி.கே. கல்லூரியில் தத்துவவியல் பேராசிரியராக இருந்தார். அவரது குழந்தை பருவம் என்பது கடினமான வாழ்க்கைச் சூழலைக் கொண்டிருந்தது. மாடுகள் மேய்த்திருக்கிறார். ஆனாலும், அத்தனை கஷ்டங்களையும் தாண்டி, கடினமாக உழைத்து பேராசிரியராக உயர்ந்தார்.”

தமது வெற்றிகரமான பயணத்தைத் திரும்பிப் பார்க்கிறார் ராஜீப். அவை பல்வேறு தடைகளையும், கடினமான சூழல்களையும் கொண்டிருந்தன. “முடியாதது ஒன்றும் இல்லை,” என்பதை ராஜீப், உண்மையாகவே நம்புகிறார்.


 
 
 
 
 

அதிகம் படித்தவை

  • How a rickshaw puller became a crorepati in Ranchi

    அதிர்ஷ்டத்தைக் கொடுத்த பன்றிகள்

    மோஹர் சாகு, தம்முடைய 12 வயதில், ஒரு கூலி தொழிலாளியாக அவரது வாழ்க்கையைத் தொடங்கினார். இப்போது 51 வயதில் ஒரு பன்றி வளர்ப்புப் பண்ணையின் உரிமையாளராக ஆண்டுக்கு ஒரு கோடி ரூபாய் வருவாயைத் தொடும் அளவுக்கு உயர்ந்திருக்கிறார். ஜி.சிங் எழுதும் கட்டுரை!

  • The kid who ran away from his home in Udipi is now owner of a Rs 200 crore hotel chain

    ருசியின் பாதையில் வெற்றி!

    சிறுவனாக இருக்கும்போது உடுப்பியிலிருந்து ஒருநாள் வீட்டை விட்டு மும்பை ஓடி வந்தார் ஜெயராம் பானன். இன்று  சாகர் ரத்னா ஹோட்டல்கள் நடத்தும் ஜேபி குழுமத்தின் தலைவராக 200 கோடி மதிப்பில் வர்த்தகம் செய்யுமளவுக்கு வளர்ச்சி! பிலால் ஹாண்டூ எழுதும் கட்டுரை

  • fresh farm produce

    பண்ணையிலிருந்து வீட்டுக்கு!

    கிராமத்தில் பிறந்து வளர்ந்த செல்வகுமார் தன் வேர்களுக்குத் திரும்பி இருக்கிறார். பெங்களூரு நகரில் பார்த்த வேலையை விட்டுவிட்டு கோவைக்குத்  திரும்பி வந்து வில்ஃபிரஷ் நிறுவனத்தைத் தொடங்கி விவசாயிகளுக்கும் வாடிக்கையாள்ர்களுக்கு பலன் தரும் முயற்சியில் வெற்றி பெற்றுள்ளார். உஷா பிரசாத் எழுதும் கட்டுரை.

  • An Auditor shows the way in Education

    கல்வி எனும் கைவிளக்கு

    ஏழ்மையான பின்னணியில் இருந்து வந்தாலும் திறம்பட கல்வி கற்று, ஆடிட்டர் ஆனவர் பிஜய் குமார். இன்று ஆடிட்டர் பணியைத் துறந்து, வருங்கால சந்ததியினர் முழுமையான கல்வியை கற்கும் வகையில் சாய் சர்வதேச பள்ளியைத் தொடங்கி வெற்றிகரமாக நடத்துகிறார். குர்விந்தர் சிங் எழுதும் கட்டுரை.

  • Success story of ID Fresh owner P C Mustafa

    மாவில் கொட்டும் கோடிகள்

    தினக்கூலி ஒருவரின் மகன் பிசி முஸ்தபா. மின்சாரமும் சாலைகளும் அற்ற கேரள குக்கிராமத்தில் அன்றாடம் செலவுக்கே சிரமப்பட்டு ஏழ்மையில் வளர்ந்த இவர் இன்று தன் உழைப்பால் வளர்ந்து 100 கோடி விற்பனை செய்யும் நிறுவனம் நடத்துகிறார். உஷா பிரசாத் எழுதும் கட்டுரை

  • overseas educator

    ஆந்திர சிவாஜி!

    தொழில் தொடங்கும் ஆசையில் அதிக சம்பளம் தரும் அமெரிக்க வேலையை விட்டுவிட்டு ஆந்திராவில் தொழில் தொடங்கினார் அரவிந்த் அரசவில்லி என்னும் இளைஞர். ஒன்பது ஆண்டுகள் ஆனநிலையில் 30 கோடி ரூபாய் வர்த்தகம் செய்யும் நிறுவனங்களின் உரிமையாளராக உள்ளார்.  சோபியா டேனிஷ்கான் எழுதும் கட்டுரை