Milky Mist

Thursday, 28 March 2024

30 ரூபாயுடன் மும்பை வந்த நாராயண், இன்று 20 கோடி ரூபாய் வருவாய் ஈட்டுகிறார்!

28-Mar-2024 By தேவன் லாட்
மும்பை

Posted 28 Dec 2017

மும்பைக்குச் செல்லவேண்டும் என்றே கனவு கண்டுகொண்டிருந்த 13 வயது சிறுவன் தன் கனவு நகருக்கு வந்து வாழ்க்கையில் வெற்றி பெறுகிறான். சினிமா படக் கதைக் கருபோல் இருக்கும் இதுபோல் தான் நாராயண் பூஜாரியின் உண்மை வாழ்க்கையும் இருக்கிறது. ஷிவ் சாகர் என்ற மும்பையின் அடையாளமாகத் திகழும் ரெஸ்டாரண்ட் பிராண்டின்வெற்றிக்குப் பின்னால் இவர் இருக்கிறார்.

புகழ் பெற்ற சைவ உணவகமாக திகழும் ஷிவ் சாகர் ரெஸ்டாரெண்டுக்கு ( Shiv Sagar Restaurant) மும்பை முழுவதும் 16 கிளைகள் இருக்கின்றன. நாராயணுக்குச் சொந்தமான ஷிவ் சாகர் ஃபுட்ஸ் மற்றும் ரிசார்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் இந்த ஆண்டுக்கான ஆண்டு வருவாய் 20 கோடி ரூபாயைத் தாண்டி இருக்கிறது.

https://www.theweekendleader.com/admin/upload/07-12-17-02M1.jpg

ஒரு கேன்டீனில் வெயிட்டராக சில ஆண்டுகாலம் பணியாற்றிய நாராயண் பூஜாரி, கஃபே பரேட் பகுதியில் 20 பேர் அமரக் கூடிய கேன்டீனைத் தொடங்கினார். அதன்பிறகு,வாழ்க்கையில் அவர் முன்னேறிச் சென்றார்.

 

இது எல்லாவற்றுக்கும், மும்பை கெம்ஸ் கார்னரில் உள்ள ஐஸ்க்ரீம் பார்லர்தான் தொடக்கமாக அமைந்தது. கர்நாடகா மாநிலம் குந்தபுராவில் 1967-ல்  நாராயண் பிறந்தார். மும்பை மாநகரத்தின் மீது நாராயணுக்கு எப்போதுமே ஒரு ஈர்ப்பு இருந்து கொண்டே இருந்தது. அவருடைய கிராமத்தில் இருந்து மும்பைக்குச் சென்று வாழ்பவர்கள் அல்லது மும்பையில் பணியாற்றுபவர்கள் ஊருக்கு வந்து, மும்பை மாநகரம் பற்றி கதை, கதையாகச் சொல்வார்கள். இதைக் கேட்கும் போதெல்லாம், அந்தக் கனவு நகரத்துக்கு ஒரு முறையாவது சென்று வர வேண்டும் என்று நாராயண் கனவு காணத்தொடங்கினார்.

நடுத்தரக்குடும்பத்தின் கூட்டுக்குடும்பச் சூழலில், விவசாய வருமானத்தை மட்டுமே நம்பி வாழும் சூழலில் நாராயணின் கனவு நனவாவது சிரமமானது. எனினும், 1980-ம் ஆண்டில் 13-வது வயதில், பள்ளிக்கு செல்வதை நிறுத்தி விட்டு, மும்பை போக வேண்டும் என்று தீவிரமாகத் திட்டமிடத் தொடங்கினார் நாராயண்.

“நான் ஐந்தாம் வகுப்பு படிக்கும்போது, என் தந்தையிடம், நான் மும்பை சென்று அங்கு வேலைக்குப் போகப் போகிறேன் என்று சொன்னேன்,” என்று நினைவு கூர்கிறார். “ஆறு குழந்தைகளைக் கொண்ட குடும்பத்தில் மூத்தவனாக நான் இருந்தேன். எனவே, வேலைக்குச் செல்ல வேண்டிய நேரம் வந்து விட்டதாக நான் கருதினேன்.”

அந்த ஆண்டின், ஏப்ரல் மாதத்தில் நாராயணின், தாய்வழி பாட்டி அவருக்கு 30 ரூபாய் கொடுத்தார். அதை வைத்துக் கொண்டு தனியார் சுற்றுலா பஸ்ஸில் தம்முடைய கனவு நகரான மும்பைக்குச் சென்றார். மும்பை சாண்டாகுரூஸ் பகுதியில் அவரது தந்தையின் சகோதரி வீடு இருந்தது. அங்கே அவர் தங்குவதற்கு இடம் கிடைத்தது.

 உறவினர் ஒருவரின் உதவியுடன், தெற்கு மும்பையின் பாலார்டு எஸ்டேட் பகுதியில் ஒரு அலுவலகத்தின் கேன்டீனில்,  நாராயணுக்கு வெயிட்டர் வேலை கிடைத்தது.

“அந்த கேன்டீனில் என்னை வேலைக்குச்சேர்த்து விட்ட உறவினர், கேன்டீன் உரிமையாளரிடம், என்னை இரவுப் பள்ளியில் படிப்பதற்கு அனுமதிக்க வேண்டும் என்றும், எக்காரணத்தைக் கொண்டும் நான் பள்ளியில் இருந்து இடையில் நின்றுவிடக் கூடாது என்று தம் விருப்பதைக் கூறினார்,”என்று தம்முடைய ஆரம்ப கால கட்டத்தை நம்மிடம் பகிர்ந்து கொள்கிறார் நாராயண்.

“காலை 9 மணியில் இருந்து மாலை 6 மணி வரை பணியாற்றுவதற்கு தினமும் எனக்கு 40 ரூபாய் சம்பளம் கிடைத்தது. இரவுப் பள்ளிக்கு சென்று திரும்பிய பின்னர் கேன்டீனிலேயே படுத்துக் கொள்வேன். என்னுடைய அத்தையின் வீடு தொலைவில் இருந்ததால், தினமும் அங்கு சென்று வருவது சிரமமாக இருந்தது. சனி, ஞாயிறு விடுமுறை தினங்களில்,என்னுடன்கேன்டீனில் வேலை பார்க்கும் பிறருடன் சேர்ந்து ஃபுட்பால், கிரிக்கெட் விளையாடுவேன்.”

https://www.theweekendleader.com/admin/upload/07-12-17-02m4.jpg

லாபத்தைப் பங்கிட்டுக் கொள்வது என்ற அடிப்படையில், ஷிவ் சாகர் என்ற ஐஸ்கிரீம் பார்லரை நடத்தும்படி 1990-ம் ஆண்டில் நாராயணனுக்கு ஒரு நல்ல வாய்ப்புக் கிடைத்தது. பின்னர் அவரே ஷிவ் சாகர் பிராண்ட்டின் உரிமையாளர் ஆனார்.

மும்பையில் உள்ள போரா பஜாரில் இருக்கும் மதர் இந்தியா எனும் இலவச இரவு நேர உயர் நிலைப் பள்ளியில் நாராயண் படித்தார். சில மாதங்கள் கழித்து கேன்டீன் வெயிட்டர் வேலையில் இருந்து விலகியவர், பொதுப்பணித்துறை அலுவலகத்தில் இருக்கும் கேன்டீனில் சேர்ந்தார்.

10-ம் வகுப்புப் படிக்கும் வரை, இரண்டு ஆண்டுகள் அங்கு வேலை பார்த்தார். அப்போது 20 பேர் அமர்ந்து சாப்பிடும் வகையிலான கஃபே பரேட் பகுதியில் 25 ஆயிரம் ரூபாய் முதலீட்டில் கேன்டீன் நடத்தும் வாய்ப்பைப் பெற்றார்.

“அந்த கேன்டீனை நடத்தும் போது, தொழிலின் நிர்வாக ரீதியிலான விஷயங்களைக் கற்றுக் கொண்டேன்,”என்று சொல்லும் நாராயண், “ஒரு ரெஸ்டாரெண்டை எப்படி நடத்துவது என்பதைப் புரிந்து கொண்டேன்” என்கிறார்.

நாராயண், இரவுப் பள்ளியில் படித்து 12-ம் வகுப்புத் தேர்ச்சி பெற்றார். அடுத்த சில ஆண்டுகள் அந்த கேன்டீனை அவர் நடத்தினார். மகேஷ் லஞ்ச் ஹோம் ரெஸ்டாரெண்ட் உரிமையாளர் சுருகார்கேரா-வுக்காவும் அவர் பணியாற்றினார்.

1990-ம் ஆண்டில் அவரது வாழ்க்கையில் ஒரு புதிய திருப்பம் ஏற்பட்டது. பாகுபாய் பாட்டீல் என்பவர்நாராயணிடம், தெற்கு மும்பையில் உள்ள கெம்ப்ஸ் கார்னரில் இருக்கும் தனக்குச் சொந்தமான ஷிவ் சாகர் எனும் ஐஸ்கிரீம் பார்லரை நடத்த முடியவில்லை. அதை நடத்த முடியுமா என்று கேட்டார்.

ஐஸ்கிரீம் பார்லரின் பங்குதாரராக இருக்க நாராயண் சம்மதித்தார். தாம் 25 சதவிகித லாபத்தை எடுத்துக் கொள்வது என்றும், மீதி 75 சதவிகிதத்தை பாகுபாயிடம் கொடுப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது.

”அந்தக் கடை போதுமான அளவுக்குப் பெரிதாக இருந்தது. மேலும் அது நல்ல தொழிலாகவும் இருந்தது. அந்தக் கடையிலேயே பாவ் பஜ்ஜியை ஒரு மெனுவாகச் சேர்த்தேன். மக்கள் அதை விரும்பிச் சாப்பிட்டனர்,”என்று நினைவு கூறும் நாராயண், “விரைவிலேயே முழு அளவிலான சைவ உணவு ரெஸ்டாரெண்டாக  அதை மாற்றினோம். எங்கள் கடைக்கு வந்த வாடிக்கையாளர்களில் பெரும்பாலானோர் குஜராத்திகள்.”

சர்ச்கேட் பகுதியில் இன்னொரு கிளை திறப்பது என்று நாராயண் முடிவு செய்தார். முன்பு இந்த ரெஸ்டாரெண்ட் ஆண்டுக்கு மூன்று லட்சம் ரூபாய் வரை மட்டும்தான் வருமானம் தந்தது. நாராயண் எடுத்து நடத்த ஆரம்பித்ததும், ஒரு ஆண்டிலேயே ஆண்டு வருமானம் ஒரு கோடி ரூபாயைத் தொட்டது.

https://www.theweekendleader.com/admin/upload/07-12-17-02m2.jpg

மும்பையில் ஷிவ் சாகர் ரெஸ்டாரெண்டுக்கு இப்போது 16 கிளைகள் இருகின்றன. இது தவிர மகேஷ் லஞ்ச் ஹோம் எனும் அசைவ உணவகத்தின் சங்கிலித் தொடர் கடைகளில் 50 சதவிகித பங்குகளையும் நாராயண் வைத்திருந்தார்.

“இதன் பிறகு உடனடியாக என்னுடைய வாழ்க்கையில் மாற்றம் ஏற்பட்டது,”எனும் நாராயண், “நான் பணக்காரர் ஆனேன்” என்கிறார் மகிழ்ச்சியுடன்.

1990 முதல் 1994ம் ஆண்டு வரையிலான காலகட்டம் அவரது வாழ்க்கையில் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது. ஷிவ் சாகர் ரெஸ்டாரெண்டில் பெரும் அளவிலான பங்குகளை வாங்கினார். எனினும் பாட்டீலும் இந்த நிறுவனத்தில் தொடர்ந்து ஒரு பங்குதாரராக இருக்கிறார். பெரும் அளவிலான பங்குகளை வைத்திருந்ததால் நாராயண் உரிமையாளராக மாறினார். சர்ச்கேட் பகுதியில் புதிய கிளை தொடங்குவதற்கு தினமும் 16 மணிநேரம் வரை உழைத்தார். 1994-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

“அந்த நான்கு ஆண்டுகள், எனக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது. ஷிவ் சாகரை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்ற என் கனவும் நனவானது. இந்தத் தொழிலை நடத்துவதற்கு என் மனைவியும் எனக்கு உதவிகள் செய்தார். அவர் இப்போது, என்னுடைய நிறுவனத்தில் ஒரு இயக்குனராக இருக்கிறார்,”என்கிறார் நாராயண்.

மும்பையிலும், மும்பை புறநகர் பகுதியிலுமாக இப்போது அவர்களுக்கு 16 கிளைகள் இருக்கின்றன. தவிர மகேஷ் லஞ்ச் ஹோமில்( MLH), அதை  நிறுவிய கார்கேராவுக்காக 50 சதவிகிதம் அளவுக்கு முதலீடுm செய்துள்ளார்.

”ஷிவ் சாகர் என்பது முழுக்க, முழுக்க சைவத்துக்கான ஒரு பிராண்ட். மகேஷ் லன்ஞ்ச் ஹோம் என்பது அசைவத்துக்கான பிராண்ட். எனவே, இரண்டையும் சம அளவில் நடத்துகிறேன்,”எனும் நாராயண், “திரு.கார்கேரா எனக்கு காட்ஃபாதர் போல. எனவே, MLH-ம் என் குடும்பத்தின் அங்கமாகத்தான் இருக்கிறது.”

இன்றைக்கு ஷிவ் சாகர் ஒரு பெரிய சைவத்துக்கான பிராண்ட் ஆக இருக்கிறது. தரத்துக்காகவும், அதன் சேவைக்காகவும் ஒவ்வொருவரின் நம்பிக்கையையும் பெற்றுள்ளது.

“என்னுடைய கவனம் எல்லாம், எப்போதுமே ருசியான உணவு வழங்க வேண்டும் என்பதுதான்,”எனும் நாராயண், “தரமான உணவு வழங்குவதற்காக தொழிற்முறை சார்ந்த கார்ப்பரேட் செஃப்-களை பணியமர்த்தி இருக்கிறோம். ஷிவ் சாகர் உணவு வகைகளை பெரும்பாலான பிரபலங்கள் விரும்புகின்றனர். எங்கள் உணவகத்தின் பாவ் பஜ்ஜியை கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் விரும்பிச் சாப்பிடுவார். ஜாக்கி ஷெராப்புக்கு இட்லி மற்றும் சட்னி பிடிக்கும். மும்பை ரஞ்சி கிரிக்கெட் டீம் வீரர்கள் சர்ச்கேட்டில் உள்ள ஷிவ் சாகர் ரெஸ்டாரெண்ட் வாடிக்கையாளர்களாக இருக்கின்றனர்.

ஆரம்ப காலகட்டங்களில், கேன்டீன் வெயிட்டராக வாழ்க்கையைத் தொடங்கியபோதில் இருந்து மட்டுமின்றி, இன்றும் கூட நாராயணின் தினசரி நடவடிக்கைகள் காலை 6.30-க்குத் தொடங்குகிறது. ஆனால், அவரது தின அட்டவணை மட்டும் இப்போது மாறியிருக்கிறது. தமது பணிகளை ஒழுங்கமைத்துக் கொண்டு, 9.30-க்கு வீட்டை விட்டு வெளியேறும் அவர், தமது ரெஸ்டாரெண்ட்களைச் சுற்றி வருவார். தேர்ந்தெடுத்து ஒரு சில ரெஸ்டாரெண்ட்டுகளுக்கு நேரில் சென்று கண்காணிப்பார்.  

“கெம்ஸ்கார்னர் மற்றும் சர்ச்கேட்டில் உள்ள கிளைகளுக்கு எப்போதுமே என் இதயத்தில் சிறப்பான இடம் உண்டு,”எனும் நாராயண், “அந்த ரெஸ்டாரெண்ட்களில்தான் பொதுவாக நான் இருப்பேன். ஆனால், குறிப்பிட்ட சில ரெஸ்டாரெண்ட்களைத் தேர்வு செய்து அங்கும் கண்காணிப்பை மேற்கொள்வேன். வாடிக்கையாளர்களிடம் தொடர்ந்து தொடர்பில் இருப்பதற்கும், வாடிக்கையாளர்களின் மாறுபட்ட சுவைகளை உடனுக்குடன் அறிந்து கொள்வதற்கும் இது உதவுகிறது.”

https://www.theweekendleader.com/admin/upload/07-12-17-02m3.jpg

நாராயண் மகள் நிகிதா, பிஷ் &பெய்ட் எனும் அசைவ உணவு ரெஸ்டாரெண்டடை பந்த்ரா காம்ப்ளக்ஸில் திறந்திருக்கிறார்.

நாராயணுக்கு, நிகிதா மற்றும் அங்கிதா என்று இரண்டு மகள்கள் உள்ளனர். நாராயண் இப்போது, சாண்டாகுரூஸ் பகுதியில் வசிக்கிறார். அவரது மனைவி யசோதா மற்றும் அவரது மகள் நிகிதா இருவரும் ஷிவ் சாகர் ஃபுட்ஸ் மற்றும் ரிசார்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் இயக்குனர்களாக இருக்கின்றனர். சுவாமி விவேகானந்தா கல்லூரியில் இன்ஸ்ரூமென்டல் இன்ஜினியரிங் பிரிவில் நிகிதா பட்டம் பெற்றுள்ளார். அண்மையில், தந்தையின் தொழிலில் அவரும் நுழைந்துள்ளார். பந்த்ரா குர்லா காம்ப்ளக்சில் பிஷ்&பெய்ட் எனும் அசைவ உணவு ரெஸ்டாரெண்டடை நடத்தி வருகிறார்.

“நான் படிக்கவில்லை. ஆனால், என் குழந்தைகள் படிக்க வேண்டும் என்றும், என்னுடைய தொழிலை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்றும் எப்போதுமே நான் விரும்புகிறேன்,”எனும் நாராயண், “அதற்காக அவர்களை நான் கட்டாயப்படுத்த மாட்டேன். அவர்களுக்கு இதில் ஆர்வம் ஏற்படும் என்று எனக்குத் தெரியும். மிகவும் வித்தியாசமான ஒரு உணவகத்தை நிகிதா திறந்திருப்பதை எண்ணி நான் பெருமை கொள்கிறேன். புதிய ஷிவ் சங்கர் கிளையைத் திறப்பதற்கு பதில் வித்தியாசமான பாதையை அவர் தேர்தெடுத்த தை நினைத்து உண்மையில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.”

அவரது இரண்டாவது மகளும் அவருடன் தொழிலில் ஈடுபடத் திட்டமிட்டுள்ளார்.

மும்பையைத் தவிர புனே, மங்களூரு பகுதிகளிலும் ஷிவ் சாகர் கிளைகள் திறக்கப்பட்டுள்ளன. 2018-ம் ஆண்டில், மேலும் இரண்டு அல்லது மூன்று கிளைகளைத் திறப்பது என நாராயண் திட்டமிட்டுள்ளார். இந்தியாவுக்கு வெளியே வெளிநாடுகளிலும் தமது தொழிலை விரிவாக்கம் செய்ய அவர் திட்டமிட்டுள்ளார்.

நாராயண் மும்பைக்கு வரும் போது அவரது பாக்கெட்டில் வெறும் 30 ரூபாய்தான் இருந்தது. இப்போது அவர் ஷிவ் சங்கர் ரெஸ்டாரெண்ட்களுக்கு உரிமையாளர். மும்பையில் ஒரு வீட்டின் உரிமையாளர். அவருக்குச் சொந்தமாக நான்கு கார்கள் இருக்கின்றன. கடின உழைப்புடன், எப்போதும் உங்கள் கனவுகளைப் பின் தொடர்ந்து செல்லுங்கள் என்பதைத்தான் அவரது கதை அறிவுறுத்துகிறது


 
 
 
 
 

அதிகம் படித்தவை

  • The Success Story of Narayan

    கனவின் வெற்றி

    மும்பை என்ற கனவு நகரத்தின் மீதான ஈர்ப்பால், 30 ரூபாயுடன் வந்த நாராயண் முதலில் கேன்டீன் வெயிட்டராக வாழ்க்கைத் தொடங்கினார். இன்று மும்பையில் 16 கிளைகளைக் கொண்ட ஷிவ் சாகர் எனும் ரெஸ்டாரெண்ட் உரிமையாளராக 20 கோடி ரூபாய் வருவாய் ஈட்டுகிறார். தேவன் லாட் எழுதும் கட்டுரை

  • juice at low price

    பத்து ரூபாய் பழரசம்!

    பிரபு காந்திகுமார் அமெரிக்காவில் ஆண்டுக்கு ரூ.48 லட்சம் சம்பளம் வாங்கிக் கொண்டிருந்தார். குடும்பத்தொழிலைக் கவனிக்க கோவை திரும்பினார். இப்போது பழரசங்கள் தயாரிக்கும் தொழிலில் ஆண்டுக்கு ரூ. 35 கோடி வருவாய் தரும் சாம்ராஜ்யத்தை ஐந்தே ஆண்டுகளில் கட்டமைத்திருக்கிறார். உஷா பிரசாத் எழுதும் கட்டுரை.

  • The colour of success is green

    ஏற்றம் தந்த பசுமை

    ஐ.ஐ.டியில் பட்டம் பெற்றவர் வெறும் மூவாயிரம் ரூபாய் சம்பளத்துக்கு வேலையில் சேர்ந்து, கடினமாக உழைத்து இன்றைக்கு மூன்று நிறுவனங்களின் உரிமையாளராக உயர்ந்திருக்கிறார். அவரது நிறுவனங்களின் ஆண்டு வருவாய் 71 கோடி ரூபாய். உஷா பிரசாத் எழுதும் கட்டுரை.

  • The success story of a Small-Time Contractor who became owner of a Rs 2,000 Crore Turnover Company

    போராடு, வெற்றிபெறு!

    பள்ளியில் படிக்கும்போதிலிருந்தே வீட்டின் வசதியின்மை காரணமாக சின்ன சின்ன வேலைகள் செய்து சம்பாதித்துப் படித்தவர் ஹனுமந்த் கெய்க்வாட். இன்று பிரதமர் இல்லம், நாடாளுமன்றம் உள்ளிட்ட பல இடங்களில் ஒப்பந்தப் பணிகளை எடுத்துச் செய்யும் பிவிஜி என்ற நிறுவனத்தை நடத்துகிறார். ஆண்டு வருவாய் 2000 கோடி! தேவன் லாட் எழுதும் வெற்றிக்கதை

  • He Lost heavily two times, but bounced back to build Rs 250 Crore turnover business

    தோல்விகளில் துவளாத வெற்றியாளர்

    தந்தையின் உணவகத்தில் உதவியாளராக இருந்த சரத்குமார் சாகு, இன்றைக்கு 250 கோடி ரூபாய் ஆண்டு வர்த்தகம் செய்யும் நிறுவனத்தின் உரிமையாளராக இருக்கிறார். ஆரம்ப கட்டத்தில் தோல்விகளைச் சந்தித்தபோதும் அதனால் அவர் துவண்டு விடவில்லை. ஜி.சிங் எழுதும் கட்டுரை

  • rags to riches builder

    தோல்வியில் இருந்து மீண்டெழுந்தார் !

    கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த சரத் சோமன்னா, முதன் முதலில் செய்த கட்டுமான திட்டம் வெற்றி. ஆனால், அதனைத் தொடர்ந்து செய்த திட்டம் படு தோல்வி. ஆனால் மனம் தளராமல், அதில் இருந்து பாடம் கற்று இன்றைக்கு பெரும் கட்டுமான நிறுவனத்தின் உரிமையாளராக உயர்ந்திருக்கிறார். உஷா பிரசாத் எழுதும் கட்டுரை