Milky Mist

Thursday, 25 April 2024

ஒரு லட்சம் ரூபாயில் தொடங்கி 108 கோடி ரூபாய் குவித்த காமத்

25-Apr-2024 By சோமா பானர்ஜி
மும்பை

Posted 21 Sep 2017

கர்நாடகா மாநிலத்தில் உள்ள கிராமத்தில், ஏழ்மையான  சூழலில் ஒரு சிறு பழவியாபாரியின் மகனாக மண்குடிசையில் பிறந்தவர் முல்கி ரகுநந்தன் சீனிவாஸ் காமத். இன்றைக்கு அவர், கனவுகளின் பெருநகரமான மும்பையில் 108 கோடி  ரூபாய் வருவாய் ஈட்டும் ஐஸ்கிரீம் நிறுவனத்தின் தலைவராக இருக்கிறார். 

நேச்சுரல் ஐஸ்கிரீம்ஸ் எனும் தனித்தன்மை வாய்ந்த ஒரு பிராண்ட்டின் புகழுக்குப் பின்னால் இருப்பவர் ரகுநாதன் காமத். அவர் காமத்ஸ் அவர்டைம்ஸ் ஐஸ்க்ரீம்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் நிறுவனர். 

https://www.theweekendleader.com/admin/upload/apr23-16-LEAD1.jpg

ரகுநாதன் காமத்தின் இயற்கை ஐஸ்க்ரீம் நிறுவனம், பல்வேறு வகையான சுவைகளில் 60 பழவகைகள், அதே போல உலர் பழங்களில்  தயாரிக்கப்பட்ட ஐஸ்க்ரீம்களை விற்பனை செய்கிறது. (புகைப்படங்கள்; ரோஹன் போட்தார்)

 
பல்வேறு வகையான பழங்களைக் கொண்டு இயற்கையாகத் தயாரிக்கப்பட்ட ஐஸ்க்ரீம்களை விரும்பி உண்ணும் பாலிவுட் திரை உலகினர் உட்பட விசுவாசமான வாடிக்கையாளர்களால், இந்த நிறுவனம் பிரபலம் அடையத் தொடங்கியது.  

கர்நாடகா மாநிலத்தில் மங்களூர் அருகில் புத்தூர் தாலுகாவின் முல்கி கிராமத்தில் இருந்து வந்திருக்கும், காமத்தின் கடந்த கால வாழ்க்கை அவ்வளவு ஒன்றும் இனிப்பாக இருந்ததில்லை.  

மரங்களை குத்தகைக்கு விட்டும், பழங்களை விற்றும் மாதம் தோறும் வெறும் 100 ரூபாயை மட்டும்தான் காமத்தின் தந்தை சம்பாதித்து வந்தார். இந்த  குறைந்த வருமானமோ அல்லது அவரின் குடும்பத்துக்குச் சொந்தமான மிகக் குறைந்த அளவு நிலத்தில் விளையும் நெல் அல்லது காய்கறிகளோ காமத் மற்றும் அவருடைய ஆறு சகோதரர்களின் உணவுக்குப் போதுமானதாக இல்லை. 

இத்தகைய சூழலில் கறி சமைப்பது என்பதுகூட ஆடம்பரமாக இருந்த நிலையில், கருப்பட்டியில் தயாரிக்கப்பட்ட காஃபியுடன் சில பலா பழத் துண்டுகளை தமது குழந்தைகளுக்கு மாலை நேரத்து நொறுக்குத் தீனிகளாக காமத்தின் தாய் கொடுக்கமுடிந்தது.  

சட்டை அணியாமல் வெற்று உடம்போடுதான் இந்த குழந்தைகள் கிராமத்தில் திரிந்து கொண்டு இருப்பார்கள். “எங்கள் கிராமத்தில் சட்டை இல்லாமல் இருந்தால் இன்னும் குளிக்கவில்லை என்று அர்த்தம்,” என்று 62 வயதாகும் காமத் நினைவு கூர்கிறார். 

“ஆனால் அணிய எங்களிடம் ஆடைகள் இல்லை என்பதே நிஜம். அந்த உண்மையை இப்படிச் சட்டை அணியாமல் இன்னும் குளிக்கவில்லை என்ற வேஷம் போட்டு மறைப்போம்.  15 வயதில் நான் மும்பை வந்த போதுதான், செருப்புகள் அணியத் தொடங்கினேன்.” 

 கிராமத்தில் பல்வேறு வயதினர் ஒன்றாக படிக்கும் ஒன்று அல்லது ஈராசிரியர்களைக் கொண்ட தனியார் பள்ளிக்கு, காமத் மற்றும் அவரது உடன் பிறந்தவர்கள் எப்போதாவது ஒருமுறைதான் செல்வார்கள். 

https://www.theweekendleader.com/admin/upload/apr23-16-LEADpacking.jpg

தொழிற்சாலையில் ஊழியர்கள் ஐஸ்க்ரீமை பேக்கிங் செய்கின்றனர்


“மூன்றாவது வகுப்பு கூட முடிக்காத நிலையில் எனக்கு 5-ம் வகுப்புப் பாடத்தைக் கற்றுக் கொடுத்தனர். இதன் மூலம் எந்த மாதிரியான கல்வியை நாங்கள் கற்றோம் என்பதை நீங்கள் புரிந்து கொள்ளலாம்,” என்கிறார் காமத்.

சீரற்ற கல்வி கற்பிக்கும் முறையால், காமத்துக்கு பள்ளி என்பது கடைசி சாய்ஸ் ஆகத்தான் இருந்தது. வகுப்பை கட் அடித்து விட்டு, குட்டையி்ல் மீன் பிடித்தல், நீந்துதல், புற்களால் செய்யப்பட்ட கால்பந்தை உதைத்து விளையாடுதல் என்று சக நண்பர்களுடன் திரிந்து கொண்டிருந்தார். 

மோசமான வானிலை காரணமாகவும், சிலர் திருட்டுத்தனமாக மரங்களில் இருந்து பழங்களைப் பறித்துச் சென்றதாலும் பழ மரங்களில் இருந்து உரிய வருமானம் கிடைக்கவில்லை. இந்த சூழலிலும் கூட  பெரும்பாலும் தன்தந்தையின் கழுத்தில் தொங்கிக் கொண்டும், மரத்தைத் தொற்றிக் கொண்டும் காமத் விளையாடிக் கொண்டிருப்பார். 

“பூக்கள் மலர்வதை சிலர் ரசனையோடு பார்ப்பதைப் போல, மரங்களின் கிளைகளில்  பழுத்துத் தொங்கிக் கொண்டிருக்கும் பழங்களைப்  பார்த்து ரசிப்பது எனக்கு விருப்பமான ஒன்றாக இருக்கிறது,” என்கிறார் காம்த். பத்தாம் வகுப்புக்குப் பின்னர் அவர் பள்ளிக்குச் செல்லவில்லை.  
 
பழங்களை விற்பதற்காக கிராமங்களில் நடக்கும் கண்காட்சிகளுக்கு தந்தையுடன் காமத் செல்வார். பின்னாட்களில் பழங்களைக் கொண்டு இயற்கையான முறையில், உள்ளார்ந்த ஈடுபாடுடன் ஐஸ்க்ரீம் தயாரிப்பதற்கான ஒரு வித தொடர்பு, அத்தகையை தருணங்களில் அவரை அறியாமலேயே அவருக்குள் ஏற்பட்டது. 

https://www.theweekendleader.com/admin/upload/apr23-16-LEADplant.jpg

கந்திவளி மேற்கில் சார்கோப்பில் இருக்கும் காமத்தின் தொழிற்சாலையில் தினமும் 20 டன் அளவுக்கு ஐஸ்க்ரீம் தயாரிக்கப்படுகிறது.


“பழங்களின் தரம், பழங்களை இருப்பு வைத்தல், முதிர்ந்த பழங்கள்,பழங்களை சரியான நேரத்தில் உபயோகிப்பது போன்ற பழங்கள் சார்ந்த அறிவை அந்த நாட்களில் எனக்குள் நான் சேகரித்து வைத்திருந்தேன்.  பின்னாட்களில் நான் ஐஸ்க்ரீம் தொழிலில் இறங்கியபோது, உள்ளார்ந்த அந்த அனுபவ அறிவை உபயோகித்துப் பார்ப்பது எனக்குக் கைவரப்பெற்றது,” என்கிறார் காமத்.  

பல ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது 1970-களின் தொடக்கத்தில், இயற்கையான முறையில் ஐஸ்க்ரீம் தயாரிப்பு எனும் பயணத்தைத் தொடங்குவதற்கு முன்பு, தமது தந்தை, இதர குடும்ப உறுப்பினர்களுடன் காமத் மும்பைக்கு இடம் பெயர்ந்தார். 

ஜூஹூ கோலிவாடா பகுதியில் பல குடும்பங்கள் தங்கியிருந்த மேன்ஷன் போன்ற ஒரு குடியிருப்பில் 12-க்கு 12 அடி அளவு கொண்ட சிறிய அறையில் அவரது குடும்பம் வசித்தது. அந்த அறையில் கட்டிலுக்குக் கீழேதான், காமத் படுப்பதற்கு இடம் கிடைத்தது.   

அவரைவிட 20 வயது மூத்தவரான ஜி.எஸ்.காமத் என்ற சகோதரர், பல ஆண்டுகளுக்கு முன்பே மும்பை வந்தவர். ஒரு சிறிய உணவகத்தை அவர்  நடத்தி வந்தார். கோகுல் ரெபரஷ்மெண்ட்ஸ் என்ற பெயரில் அந்த உணவகத்தில்  வீட்டிலேயே தயாரித்த ஐஸ்க்ரீம் மற்றும் தென் இந்திய உணவு வகைகளை விற்பனை செய்தார்.  

தமது சகோதரரின் உணவகத்தில் உதவியாளராக இருந்த காமத், அங்கு வரும் வாடிக்கையாளர்கள்  ஐஸ்க்ரீமை விரும்பி சாப்பிடுவதையும், ஒருவருக்கு ஒருவர் அதைப் பகிர்ந்து கொள்வதையும் கவனித்தார். 

செயற்கை வண்ணங்களோ, செயற்கையான பொருட்களோ சேர்க்காமல் இயற்கையாக விளையும் பழங்களின் கூழ், பழத்துண்டுகளில் இருந்து புதுமையான முறையில் ஐஸ்க்ரீம் தயாரித்து விற்றால், அது வாடிக்கையாளர்களை ஆச்சர்யப்படுத்தவும், மகிழ்ச்சியடையவும் செய்யும் என்ற ஒரு எண்ணம் அப்போது காமத்துக்குள் தோன்றியது.  

https://www.theweekendleader.com/admin/upload/apr23-16-LEADeating.jpg

ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்களைப் போல தமது ஐஸ்க்ரீமுக்கு காமத்தும் ஒரு பெரிய ரசிகர்தான்.


அவருடைய தொழில் யோசனையை, யாருமே சீரியஸ் ஆக எடுத்துக் கொள்ளவில்லை. எனவே, தமது யோசனையை செயல்படுத்துவதற்கு சரியான வாய்ப்பும், சரியான தருணமும் வரும் வரை காமத் காத்துக்கொண்டிருந்தார்.  அந்த சமயத்தில் அவருடைய சகோதரர், குடும்பச் சொத்தில் இருந்து காமத்துக்கு ஒரு அளவு தொகையை பங்காகத் தருவதாகச் சொன்னார். சிறிய அளவிலான ஒரு தொகையை மாதம் தோறும் வாங்குவதற்குப் பதிலாக,  ஒரு லட்சம் ரூபாய் தரும்படி சகோதரரிடம் காமத் கேட்டார். 

30-களின் தொடக்கத்தில் இருந்த காமத்துக்கு அப்போதுதான் திருமணம் முடிந்திருந்தது. ஒரு லட்சம் ரூபாயை ஆரம்ப முதலீடாகக் கொண்டு தொழில் தொடங்குவது நன்றாக இருக்குமா என்று அவர் சிந்திக்க ஆரம்பித்தார். எனினும், காமத்தின் தொழில் தொடங்கும் ஆர்வத்தை, தொலைநோக்குப் பார்வையை ஊக்குவிக்கும் வகையில் அவரது மனைவி அன்னபூர்ணா பேசினார்.   

மனைவியின் துணிச்சலான ஆதரவுடன், நண்பர்கள், உறவினர்களிடம் இருந்து மூன்று லட்சம் ரூபாய் வரை உதவியாகப் பெற்றார்.  இதன் பின்னர்தான், 1984-ம் ஆண்டில் இந்தியாவின் ஐஸ்க்ரீம் சந்தையில் காமத் கால் பதித்தார். அந்த தருணத்தில் தோன்றிய அவரது முக்கியத்துவம் வாய்ந்த யோசனை இப்போது 3,000 கோடி ரூபாய் மதிப்புடைய நிறுவனமாக உயர்ந்து நிற்கிறது.  

மும்பையில் இன்னொரு சகோதரரின் வீட்டில் வசித்து வந்த காமத்,  மேல்தட்டு மக்கள் வசிக்கும் மும்பை புறநகரின் மேற்பகுதியான ஜூஹூ வில்லே பார்லே வளர்ச்சித் திட்டத்தில் 350 ச.அடி கொண்ட மிகச் சிறிய இடத்தில், தமது முதலாவது ஐஸ்க்ரீம் கடையைத் தொடங்கினார்.

காமத், காமத்தின் மனைவி உட்பட ஆறு பேர்களும் 10 விதமான இயற்கை ஐஸ்க்ரீம் வகைகளை 10 முதல் 15 கிலோ வரை தயாரிக்கத் தொடங்கினர். அடுத்து வந்த வார இறுதி விடுமுறை நாட்களில் ஆயிரம் கப் ஐஸ்க்ரீம்களை காமத் விற்பனை செய்தார். 

காமத்தின், இயற்கையான  ஐஸ்க்ரீம் விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது. உள்ளூர்காரர்கள் முதல் சுற்றுலாப்பயணிகள் வரை அவரது கடைக்கு வந்த அனைவரும்,  ஐஸ்க்ரீமின் சுவை குறித்து பிறரிடம், சிலாகித்துக் கூறினர். இதனால், எந்த விதச் செலவும் இல்லாமல், வாடிக்கையாளர்களின் வாய் வழி விளம்பரமாக இது அமைந்தது. எனவே, அவரது கடையின் புகழ் குறுகிய காலத்தில் பலரிடமும் சென்றடைந்தது.  
 
“ஜூகு, பாந்த்ரா, பாலி ஹில் போன்ற உயர் வகுப்பினர் வசிக்கும் பகுதிகளில் சினிமா நட்சத்திரங்கள் மற்றும் இதர புகழ்பெற்ற நபர்கள் வசிக்கும் பங்களாக்களைப் பார்த்தபடி ஒருவித  பிரமிப்புடன் சைக்களில் சுற்றி வருவேன்,” என்று சொல்லும் காமத், இப்போது இரண்டு உயர் ரக மெர்சிடிஸ் கார் மற்றும்  ரிட்டிசி லோகந்த்வாலாவில் ஒரு பங்களாவுக்கு சொந்தக்காரராகவும் இருக்கிறார்.  

https://www.theweekendleader.com/admin/upload/apr23-16-LEADserving.jpg


“இயற்கையான ஐஸ்க்ரீமை தயாரித்து விற்பனை செய்யவேண்டும் என்று முடிவு செய்தபோதே, இந்தப் பகுதியில் கடை வைப்பது என தீர்மானித்து விட்டேன். இங்கே உள்ளவர்கள் எதிர்காலத்தில் என்னுடைய ஐஸ்க்ரீம்களுக்கு வாடிக்கையாளர்களாக மாறுவார்கள் என்றும் நம்பிக்கையோடு  இருந்தேன்.” 

ஐஸ்க்ரீம் தயாரிப்பைத் தொடங்கிய இரண்டாவது ஆண்டின் முடிவில் காமத்தின் வருவாய் 14 லட்சம் ரூபாயாக இருந்தது. ஆண்டு தோறும் இது உயர்ந்து 2010-2011ம் ஆண்டில் 40 கோடி ரூபாயைத் தாண்டியது. 25 ஆண்டுகளில் 50 கடைகள் என, தமது விற்பனையை விரிவாக்கம் செய்தார். 

இன்றைக்கு, கந்திவாலி மேற்கில் உள்ள சார்க்காப் பகுதியில் 25,000 சதுர அடி இடத்தில் நவீன இயந்திரங்களுடன் கூடிய தொழிற்சாலைக்கு சொந்தக்காரராக காமத் இருக்கிறார்.

காமத் மனைவி அன்னபூர்ணா, இரண்டு மகன்களான ஸ்ரீனிவாஸ், சித்தாந்த் ஆகியோரும் அவரது நிறுவனத்தில் இயக்குனர்களாக இருக்கின்றனர்.  மகாராஷ்டிரா, குஜராத், மத்தியப் பிரதேசம், கர்நாடகா, தெலுங்கானா, சத்தீஸ்கர், டெல்லி, ராஜஸ்தான் மாநிலங்களில் 125 இடங்களில் காமத்துக்குச் சொந்தமான கடைகள் அல்லது அங்கீகாரம் பெற்ற ஏஜென்சிகளுக்குச் சொந்தமான கடைகள் தொடங்கப்பட்டிருக்கின்றன. இந்த கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை தினந்தோறும் அதிகரித்து வருகிறது.   

இயற்கையாக விளையும் 60 வகையான பழங்களின் கூழ்கள், உலர் பழங்கள் ஆகியவற்றுடன் 20 டன் ஐஸ் க்ரீமைச் சேர்த்து தினமும் 100 வகையான சுவைகளில் ஐஸ்க்ரீம்கள் தயாரிக்கப்படுகின்றன.  ஐஸ்க்ரீம் தயாரிப்பில் 125 ஊழியர்கள் ஈடுபடுகின்றனர். 
 
சீத்தாபழம், சப்போட்டா, இளநீர்,பப்பாளி, அன்னாசிபழம், வாழைப்பழம், மாம்பழம், அனைத்து வகையான செர்ரி பழங்கள் ஆகியவற்றைக் கொண்டு தினமும்  30 வகையான ஐஸ்க்ரீம்களை வெவ்வேறு வகையான சுவைகளில் தயாரிக்கின்றனர், இவை தவிர காரமெல் வால்நட், மாதுளை, மஞ்சள், வெள்ளரிக்காய், கஜார் ஹல்வா போன்ற வித்தியாசமான சுவைகளுடன் கூடிய ஐஸ்க்ரீம்களையும் தயாரிக்கின்றனர். 

https://www.theweekendleader.com/admin/upload/apr23-16-LEADproducts.jpg

மாம்பழம், peach, வாழைப்பழம், அன்னாசிபழம், சீத்தாபழம், சப்போட்டோ போன்ற 30 வகையான பழங்களில் இருந்து தினமும் 100 சுவைகளில் இயற்கையான முறையில் ஐஸ்க்ரீம் கள் தயாரிக்கப்படுகின்றன.


“நான் குழந்தையாக இருந்தபோது, எங்கள் கிராமத்துக்கு மேலே பறந்து செல்லும் விமானங்களை ஆச்சர்யத்துடன் பார்த்துக் கொண்டிருப்பேன்,” என்கிறார் காமத்.

“பள்ளியில் வகுப்பு நடந்து கொண்டு இருக்கும் போதே, விமானங்கள் பறந்து செல்லும் ஓசையைக் கேட்டு அதனைப் பார்ப்பதற்காக அடிக்கடி வெளியே ஓடிப்போய் விடுவேன். இதனால், பல முறை ஆசிரியரிடம் அடிவாங்கி இருக்கிறேன். பிரிதொரு நாள், அது போன்ற விமானத்தில் நானும் பயணிப்பேன் என்றோ, அதுவும் பிசினெஸ் க்ளாஸ் பயணியாகச் செல்வேன்  என்றோ, பயணத்தின் போது, கீழே புள்ளியாகத் தெரியும் நான் படித்த பள்ளியைப் பார்ப்பேன் என்றோ  ஒருபோதும் நான் கற்பனைகூட செய்து பார்த்ததில்லை.”  

இதனால்தான், காமத் இளைஞர்களுக்கு கீழ் கண்டவாறு அறிவுரை கூறுகிறார், “பாடத்தை வெறுமனே மனப்பாடம் செய்து மட்டும் தேர்வு எழுதாதீர்கள். படித்ததை வாழ்க்கையோடு பொறுத்திப் பாருங்கள். கடினமாக உழையுங்கள். தொழில் முனைவோராக மாறுங்கள். அப்போதுதான் வறுமையையும், செல்வத்தையும் இணைக்கும் பாலத்தை நீங்கள் உருவாக்க முடியும்.” 


 
 
 
 
 

அதிகம் படித்தவை

  • Girl from Mountain

    மலைக்க வைக்கும் வளர்ச்சி!

    உத்தரகாண்ட் மாநிலத்தின் குக்கிராமத்தில் பிறந்தவர் கீதா சிங். ஐம்பதாயிரம் ரூபாய் முதலீட்டில் தொடங்கி,  இன்றைக்கு டெல்லியில் ஆண்டுக்கு 7 கோடி ரூபாய் வருவாய் தரும் நிறுவனத்தின் உரிமையாளராக இருக்கிறார். சோபியா டேனிஷ்கான் எழுதும் கட்டுரை

  • Former child worker in a flower farm is now a rich man

    பூக்களின் சக்தி

    தெலுங்கானாவில் இருக்கும் தன் ஊரைவிட்டு பதினாறு வயதில் பொல்லாபள்ளி ஸ்ரீகாந்த் பெங்களூர் மலர்ப்பண்ணை ஒன்றில் வேலை பார்க்க வந்தார். மாத சம்பளம் 1000 ரூ. இன்று அவர் ஆண்டுக்கு 70 கோடி ருபாய்க்கு விற்பனை செய்யும் முன்னணி மலர் உற்பத்தியாளர். உஷா பிரசாத் எழுதும் கட்டுரை

  • Daughter of Punjab

    மண்ணின் மகள்

    பஞ்சாப் மாநிலத்தில் தன் கிராமத்தில் ஐடி நிறுவனம் தொடங்கிய சித்து, இன்றைக்கு ஆண்டுக்கு இரண்டு கோடி ரூபாய் வருவாய் ஈட்டும் அளவுக்கு அந்த ஐடி நிறுவனத்தை கட்டமைத்து வெற்றிகரமாக நடத்தி வருகிறார். சோபியா டேனிஷ் கான் எழுதும் கட்டுரை

  • success story of a shampoo maker

    ஷாம்பூ மனிதர்!

    தமிழ்நாட்டின் ஒரு சிறிய நகரத்தில் சுதந்திரமாக சுற்றித்திரிந்த இளைஞர், 15 ஆயிரம் ரூபாய் முதலீட்டில் ஷாம்பூ தயாரிப்பு நிறுவனம் தொடங்கினார். அது கடின உழைப்பு, வித்தியாசமான விளம்பர உத்திகளால் இன்றைக்கு 1450 கோடி ரூபாய் ஈட்டும் நிறுவனமாகி இருக்கிறது. பி சி வினோஜ் குமார் எழுதும் கட்டுரை

  • The LED Magician of Rajkot

    ஒளிமயமான பாதை

    மாதம் ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் ரப்பர் ஸ்டாம்ப் விற்கும் நபராக இருந்தவர் ஜிதேந்திர ஜோஷி. இந்தியாவுக்கு எல்.இ.டி தொழில் நுட்பத்தை அறிமுகப்படுத்தியவர். இப்போது 8 கோடி ரூபாய் ஆண்டு வருவாய் தரும் எல்.இ.டி உற்பத்தியில் ஈடுபட்டு வருகிறார். மாசுமா பார்மால் ஜாரிவாலா எழுதும் கட்டுரை

  • Smooth sailing

    நினைத்ததை முடிப்பவர்

    ஹைதராபாத்தில் ஒரே ஒரு கடையுடன் தொடங்கப்பட்ட ட்ரங்கன் மங்கி நிறுவனம் இன்று ஐந்து ஆண்டுகளில் 110 கடைகளுடன் 60கோடி ரூபாய் ஆண்டுவருவாய் ஈட்டுகிறது. இதன் நிறுவனர் சாம்ராட் ரெட்டியின் வெற்றிக்கதையை எழுதுகிறார் சோபியா டேனிஷ்கான்