Milky Mist

Friday, 29 March 2024

விளம்பர நிறுவனம் முதல் குண்டர் சட்டம் வரை: திருமுருகன் காந்தியின் கதை!

29-Mar-2024 By ராதிகா கிரி
சென்னை

Posted 08 Jun 2017

நாஸ்தென்கா (Nasthenka) -  இது கோவையில் 2000-த்தில் தொடங்கப்பட்ட ஒரு விளம்பர நிறுவனம்.  நிறைய கனவுகளுடன் தன் 26 வயதில் முதல் தலைமுறை தொழில் முனைவோராக அந்நிறுவனத்தை தன் நண்பர்களுடன் சேர்ந்து ஆரம்பித்த இளைஞர் இப்போது தன் அரசியல் செயல்பாட்டுக்காக குண்டர் சட்டத்தில் சிறையில் இருக்கிறார்.

அவர் திருமுருகன் காந்தி. ஈழத்தில் இலங்கை அரசால் போரில்கொல்லப்பட்டோருக்காக மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்த சென்ற பொழுது சென்னை மெரினா கடற்கரையில் மே 21 அன்று கைது செய்யப்பட்டவர். மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர்.

ஈழத்தமிழர்களுக்காக மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தும் நிகழ்வை  2010 இலிருந்து செய்துவருகிறது மே 17 இயக்கம்


கைதுக்கு சில மணி நேரம் முன்பு அவர் சொன்ன வார்த்தைகள் தான் சம காலத்தில் எல்லோரையும் திரும்பி பார்க்க வைத்த வார்த்தைகள். "துப்பாக்கி சூடு நடத்தினாலும் நினைவேந்தல்தமிழர் கடற்கரையில் நடக்கும்." அதே போல அவர் கைதானாலும் 2017 மே 21 அன்று அவரது இயக்கத்தால் பெரும் போராட்டத்திற்கு பிறகு கூடுவது தடை செய்யப்பட்ட இடம் என காவல்துறையால் அறிவிக்கப்பட்ட அதே கடற்கரையில் பரபரப்பு ஓய்ந்த பின் அதே நாளில் அமைதியாக நினைவேந்தல்  கடைபிடிக்கப்பட்டது.

கொல்லப்பட்ட ஈழத்தமிழர்களுக்காக மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தும் நிகழ்வை  2010 இலிருந்து செய்துவருகிறது மே 17 இயக்கம். அதை இவ்வாண்டும் நிகழ்த்த  முயன்ற போது,  திருமுருகன் காந்தி  உள்ளிட்ட 17 பேர் தமிழக காவல் துறையால் கைது செய்யப்பட்டனர்.

சென்னை மெரினா கடற்கரையில்கூடுவது தடை செய்யப்பட்டுள்ளது  என காவல்துறை சொன்னாலும் கைது செய்யப்பட்ட 17 பேரில் திருமுருகன் மற்றும்,  மே 17 இயக்கத்தின் அழைப்பில் வந்த வேறு அமைப்புகளை சேர்ந்த அருண்குமார், டைசன், இளமாறன் ஆகிய நால்வர் மீது குண்டர்கள் தடுப்பு சட்டம் பதியப்பட்டு  சிறையில்  அடைக்கப்பட்டுள்ளனர். மற்றவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.  மனிதஉரிமை செயற்பாட்டாளர்கள் மீதான அரசாங்கத்தின் இந்த செயல்பாடு அனைவரையும் அதிர்ச்சிக்குளாக்கியது. அரசியல் கட்சிகள் முதல் சமூக செயல்பாட்டாளர்கள் வரை அனைவரும் இந்த நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

சமீப காலத்தில், எந்த அரசியல் பின்னணியும் இல்லாமல், சாதிய ஒருங்கிணைவாகவும் இல்லாமல் திரும்பி பார்க்கவைத்த ஒரு இளைய செயற்பாட்டாளர் திருமுருகன்.  இவர் யார் என்ற கேள்வி அதன் பிறகு பல மட்டங்களில் ஒலிக்க ஆரம்பித்தது. இத்தனைக்கும் பரிச்சயம் இல்லாத முகமாக கடந்த எட்டு ஆண்டுகளில் திருமுருகன் இருந்ததில்லை.

ஈழ உரிமை குறித்த விவாதமாகட்டும், தமிழ் மொழி, தமிழக உரிமை சார்ந்த விவாதமாகட்டும், தமிழக ஊடகம் மட்டுமன்றி தில்லியிலிருந்து இயங்கும் ஆங்கில வடஇந்திய ஊடகங்களிலும் பல முறை தோன்றியவர் தான் திருமுருகன். குறிப்பாக 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற சிங்கள போர் வெற்றிக்குப் பின் எழுந்த பல்வேறு செயல்பாட்டாளர்களில் தம்மை தனித்து அடையாளம் காட்டிக் கொண்டவர் இவர்.

மக்களின் பிரச்சனைகளுக்காக நின்றவர் திருமுருகன் காந்தி  


திருமுருகனின் முதல் வணிக முயற்சியே அவரது எண்ண  ஓட்டத்தின் சாட்சி என்கின்றனர் அவரது நட்பு வட்டத்தில் இருந்தவர்கள். காரணம் "நாஸ்தென்கா" என்ற பெயர் புகழ் பெற்ற ரஷ்ய  எழுத்தாளர்  தாஸ்தாவெஸ்கியின்  வெண்ணிற இரவுகள்  ( Fyodor Dostoyevsky - White Nights)  என்ற சிறுகதையில் வரும் ஒரு பெண்ணின் பெயர். தீவிர வாசிப்பில் ஈடுபாடு உடையவர்க்கு சட்டென இந்த பெயர் பிடிபடும்.

எனினும் கோவையில் அந்த நிறுவனம் நெடுங்காலம் நீடிக்கவில்லை. புதிய தலைமுறை தொழில் செய்வோர் சந்திக்கும் அதே சிக்கல்களை இதுவும் சந்தித்து அது மூடப்பட்டது. திருமுருகனும் சென்னைக்கு பயணமானார். இம்முறை மீண்டும் விளம்பரம் மற்றும் தொழில் ஆலோசனை நிறுவனத்தை  சென்னையில் நிறுவி அதில் வெற்றியும் கண்டார்.

பெரும்பான்மையான தனது பள்ளி படிப்பை கோயம்பத்தூரில் முடித்து, கோவை சி ஐ டி ( Coimbatore Institute of Technology )  யில் B. Sc  Applied Science  முடித்த பிறகு பெற்றோர் விருப்பத்தின் பேரில், வரலாறு படிக்க வேண்டும் என்ற தனது விருப்பத்திற்கு மாறாக, எம் சி ஏ படித்தவர் திருமுருகன்.

பள்ளி பருவத்திலேயே நன்றாக ஓவியம் வரையக் கூடியவராகவும் இருந்தார். மாடர்ன் ஆர்ட் என சொல்லக்கூடிய புதிய வரைக்கலையின் மீது மிகுந்த ஈர்ப்பு கொண்டவர். தன் பள்ளி படிப்பு முடியும் காலம் வரை ஓவியங்கள்  வரைந்து தன் வீட்டில் வைத்திருந்தார். பள்ளி காலம் முதற்கொண்டே தன்னை சுற்றி ஒரு தீவிர இலக்கிய / கலை வாசிப்பு கொண்ட ஒரு குழுவுடனேயே வலம் வந்தவர் என அவரது தந்தை ச. காந்தி குறிப்பிடுகின்றார்.

தமிழ்நாடு மின்சாரத் துறை பொறியாளராக பணியாற்றிய, தொழிற்சங்கவாதி மற்றும் மாநில உரிமை சார்ந்து இயங்கக் கூடியவருமான காந்தியின் மகன் தான் திருமுருகன். தொழிற்சங்க நடவடிக்கையால் அடிக்கடி மாற்றலுக்கு உள்ளாக்கப்பட்ட தனது தந்தையின் பணி காரணமாக திருமுருகன் ஆறாம் வகுப்பு பயிலும் முன்னர் ஐந்து பள்ளிகளுக்கு மாற்றப்பட்டார்,

ஒவ்வொன்றும் ஒவ்வொரு ஊரில் - சேலம், அவிநாசி, வத்தலக்குண்டு, மதுரை என ஆரம்ப பள்ளியை வெவ்வேறு ஊர்களில் படித்தவர். பிறகு ஆறாம்வகுப்பு முதல் கோவையிலேயே படித்தார். 1998 இல் சிறந்த மாணவன் என்ற சான்றிதழுடன் எம் சி ஏ பட்டத்துடன் வெளியேறிய திருமுருகன்  சென்னைக்கு வந்து சேர்ந்தார்.

இங்கே அவரது நிறுவனம் வெற்றிகள் பல குவிக்கிறது. பல அறியப்பட்ட நிறுவனங்கள் அவருக்கு தமது விளம்பர படம் தயாரிப்பு வேலைகளை ஒப்படைக்கின்றனர். அடிப்படியில் அவர் ஒரு சிறந்த "கண்டிப்பான" வடிவமைப்பாளர் என்கின்றனர் அவரை அறிந்தவர்கள்.  

சிறு விளம்பர பட நிறுவனங்களில் ஒரு அறியப்படும் இடத்தை அடைகிறது அவரது நிறுவனம். அதுவே அவரை இந்தியா டுடே தமிழ் பதிப்பின் ஒரு கட்டுரையில் பதிய வைக்கிறது. தாவீது கோலியாத்து கதையின் (David vs Goliath) உள்ளடக்கமாக அடிக்கோடிடப்பட்ட தமிழக நிறுவனங்கள் பற்றிய கட்டுரையில் 2005 இல் பெரு நிறுவனங்களை வீழ்த்தும் சிறு நிறுவனங்கள் என்ற வரிசையில் திருமுருகனின் நிறுவனமும் நின்றது அன்று.

அதனை எழுதிய அன்றைய இந்திய டுடேயின் ஊடகவியலாளர் சரவணன் சந்திரன் கூறுகையில் : "அந்த கட்டுரை எழுதும் முன்னரே அவருடன் ஒரு சிறிய அறிமுகம் எனக்கிருந்தது. பெரிய நிறுவனங்களை அசைத்துப் பார்க்கும் சிறிய நிறுவனம் என நான் கட்டுரை வடிக்கும் பொழுது அவர் தொழிலில்  வேகத்துடன் வலம் வந்து கொண்டிருந்தார்.  அவரிடம் பணப்புழக்கமும் அதிகமாக இருந்தது. கட்டுரைக்கு பிறகும் தொடர்ந்து அவரை கவனித்து வருகின்றேன். அவரது தொழில் தேக்கம் துவங்கியது 2009 இல்."

காளீஸ்வரி போன்ற பெரிய வளரும் நிறுவனத்திற்கும் கூட விளம்பர படம் தயாரித்துக் கொடுத்துக் கொண்டிருந்தது அவரது நிறுவனம். அவரது தொழில் சீராக செல்ல துவங்கியிருந்தது. இதன் இடையிலும் அவர் சென்னையில் அரங்கேற்றப்பட்ட எழுத்தாளர் வளர்மதியின் "பரமபதம்" போன்ற கூர்மையான வாசிப்புத் தளத்திற்கான தமிழ் நாடகங்களை பார்ப்பது, அந்தசெயல்பாட்டிற்கு நிதியுதவி செய்வது போன்ற செயல்பாடுகளிலும் ஈடுபாட்டை ஒரு வாடிக்கையாகவே கொண்டிருந்தார்.

பத்திரிகையாளர் சந்திப்பில் திருமுருகன் 


ஆனால், 2009 எல்லாவற்றையும் புரட்டிப் போட்டது. முத்துக்குமார் தீக்குளித்து இறந்த மூன்று நாட்களும் திருமுருகன் முத்துக்குமாரின் உடல் இருந்த இடத்திலேயே இருந்தார். எதை பற்றியும் அந்த மூன்று நாட்களில்  அவருக்கு அக்கறை இல்லை.

அன்றிலிருந்து அவரது முழு கவனம் தொழிலிலிருந்து சற்றே மாற ஆரம்பித்தது. அரசியல் ஈடுபாடு அதிகரித்தது. ஈழத்தமிழர் பிரச்னையில் 40 தமிழக எம்பிக்கள் தமது பதவிகளிலிருந்து விலகுவார்கள் என்ற அறிவிப்பிற்குப் பின் என்ன நடக்கும் என்பது யாருக்குமே தெரியாத ஒன்றாகி போனது.  அதிலிருந்து கூர்ந்து கவனிக்க ஆரம்பித்திருந்தார் திருமுருகன்.  முத்துக்குமாரின் மரணம் ஒரு முடிவுக்கு அவரைத் தள்ளியது.  2009 இல் இனப்படுகொலைக்கு பின்னர் துவங்கியதே அவர் ஒருங்கிணைத்த மே பதினேழு இயக்கம்.

நடைமுறை வாழ்க்கைக்காக ஓரங்கட்டப்பட்ட அவரது இலக்கிய / அரசியல் / சமூக வாசிப்பு எல்லாம் முத்துக்குமாரின் மரணத்திற்கு பிறகு மேலோங்க துவங்கியது எனலாம்.

2009-க்குப் பின் ஈழம் குறித்த அவரது செயல்பாடு வெகு தீவிரம் அடைந்தது. மெரினா கடற்கரையில் வருடந்தோறும் போரில் பலியான ஈழத்தமிழர்க்கு மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலிசெலுத்துவதை  ஒரு வழக்கமாகவே மே 17 இயக்கம் கடைபிடித்தது. கூடவே தமிழகம் சார்ந்த ஏனைய சமூக செயல்பாடுகளையும் கையிலெடுத்தது அந்த இயக்கம்,

அது நீர் தனியார் மயமாவதை எதிர்ப்பதாகட்டும், கூடங்குளம், மீத்தேன் எரிவாயு எதிர்ப்பாகட்டும், சாதிக்கு எதிரான போராட்டமாகட்டும் அல்லது சல்லிக்கட்டுக்கு ஆதரவான மற்றும் மத்தியஅரசை எதிர்த்து வரி செலுத்த கூடாது என்ற போராட்டம் ஆகட்டும், இவையனைத்திலும் மே 17 இயக்கம்  தெருவில் இறங்கி போராடி வேகம் காட்டியது. அது சமூக தளத்தில் புதிய சிந்தனையை பாய்ச்சியது என்பது கவனிக்கப் படாமலும் இல்லை.  தமிழகத்தின் புதிய நம்பிக்கை என மைய நீரோட்ட பெரும்பான்மை ஊடகங்களும் கவனித்து பாராட்டி விருது வழங்கி அங்கீகரிக்கப்பட்டவர் தான் திருமுருகன்.

திருமுருகன் உடன் தனக்கு ஏற்பட்ட முதல் அறிமுகத்தை நினைவு கூர்ந்த பதிப்பாளர்-செயல்பாட்டாளர் லேனா குமார் கூறுகையில்: "2010 இல் திருமுருகனிடமிருந்து ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அப்பொழுது நான் ஒரு சர்வதேச திரைப்பட விழா ஒருங்கிணைப்பின் கடைசி கட்ட வேளையில் இருந்தேன். திருநெல்வேலியில் ஒரு நிகழ்வு நடத்துவது குறித்து பேசினார். திரைப்பட வேலை முடித்துவிட்டு திருநெல்வேலி திரும்பியதும் அது குறித்த வேலையில் இறங்குவோம் என்று சொன்னேன். விழா முடிந்து நான் திருநெல்வேலி திரும்பிய பொழுது, திருமுருகன் குறிப்பிட்ட நிகழ்வு தயாரிப்பு அனைத்தும் முடிந்திருந்ததார். நான் நேராக வந்து கலந்து கொள்வதாக அமைந்து விட்டது. அவரது வேகம் பார்த்து நான் மலைத்துப் போனேன். யாருக்கும் காத்திருக்காமல்  செயல்பாடும்   என்னை ஈர்த்தது. அதன் பின் அவருடன் போராட்டங்களில் பயணிக்க ஆரம்பித்தேன்."

ஈழ இனப்படுகொலை  குறிப்பாக  ஆங்கில ஊடகங்களினால் மறைக்கப்படுவது குறித்தான நாடகமாக அந்த 2010  நிகழ்வு அமைந்தது. அதன்பிறகு பல்வேறு தேசிய தமிழக ஒருங்கிணைவுகளை இருவரும் இணைந்துநடத்தியுள்ளனர். ஊடகம் குறித்த பார்வையும் அவரிடம் தீவிரமாகவே இருந்தது.  பின்னாளில் ஈழ இனப்படுகொலை குறித்து ஆங்கில ஊடகங்களில் கவனிக்கத்தக்க வகையில் பேசிக்கொண்டிருந்தார் என்பதும் ஒரு யதார்த்தம்.

ஈழ தமிழர்களுக்காக தொடர்ந்து குரல் கொடுத்தவர் திருமுருகன் 


ஈழம் மற்றும் மனித உரிமைகள் தளத்தில் தொடர்ச்சியான  அவரது செயல்பாடுகள் அவரை பல முறை ஐ நா மற்றும்  ஏனைய சர்வதேச அரங்கிற்கும் ஈழ இனப்படுகொலைக்காக நியாயம்கேட்க  இட்டுச்  சென்றது.  2014, 2015, 2016. ஐநாவின் சார்பு   கூட்டங்களிலும்  மற்றும் 2013 இல் ஜெர்மன் நாட்டில், பிரீமேன் நகரில் நடந்த நிரந்தர மக்கள் தீர்ப்பாயம் (Permanent People Tribunal), 2013 இல் இந்தியா அமெரிக்கா உட்பட பல்வேறு நாடுகள் மீதான இலங்கை இனப்படுகொலைக்கான விசாரணை,  சர்வதேச நீதிபதிகள், முன்னாள் ஐநா மன்ற தலைமை பதவிகளில் இருந்தவர்களைக் கொண்டு நடைப்பெற்ற பொழுது, அதில் கலந்து கொண்டு ஈழ இனப்படுகொலைக்கு தனது சாட்சியத்தை, பல்வேறு நாடுகளிலிருந்து வந்திருந்த மனித உரிமைசெயல்பாட்டாளர்களுடன் திருமுருகனும் அளித்தார்.  ஈழத்தில் நடைபெற்றது இனப்படுகொலைதான் என பிரீமேன் 2013  தீர்ப்பாயம் தீர்ப்பு கூறியது .

தொண்ணூறுகளின் பிற்காலத்திலிருந்து அவரைப் பற்றி அறிந்த நண்பர்கள் அவரைப் பற்றி, "அடிப்படையில் ஒரு நல்ல வாசிப்பாளர். தமிழகத்தின் வரலாறு, மக்கள், மொழி குறித்த ஆர்வமும், பொதுவுடைமை, பெரியாரிய சிந்தனையும், பரவலாக வாசிப்பும் உள்ளவர். அப்போதே சமூக பிரச்சனைகளில் தீவிரமாக சிந்திக்க கூடியவர் என்றாலும் தற்போதுஅவரது சிந்தனை  கூர்மை  பெற்றிருக்கிறது. உறுதியாக செயலாற்றக் கூடியவர். உரிமை மீறல்களை இடம் பொருள் பாராமல் எங்கேயும் அவ்வப்போதே கேட்கும் ஆளுமை உள்ளவர்," என்று அடையாளப்படுத்துகின்றனர்.

வட இந்திய தொலைக்காட்சிகள் முதல் தமிழக தொலைக்காட்சிகள் வரை பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்களை தன் உடனடி கேள்விகள், விவாதங்கள், பேச்சுக்கள், பதில்கள் மூலம் பல நேரங்களில் அவர் திணறடிப்பார். ஒரு முறை காங்கிரசு பிரமுகருடன் ஈழ இனப்படுகொலை விவாதத்தில் பேசும்போது அந்த காங்கிரசு பிரமுகர் ஈழத்தில் நாங்கள் பணம் மற்றும் உதவிகள் செய்கின்றோம் என்று சொல்ல, திருமுருகன் உடனடியாக, சரி நியாயத்திற்கு பதில் பணம் என்றால், ராஜிவ் படுகொலைக்கு சோனியா குடும்பத்திற்கு நாங்கள் பணம் கொடுக்கின்றோம். இனி ராஜிவ் கொலையை பற்றி பேசாதீர்கள் என்றார். இது ஒரு சான்றே.

2006 இல் அவரது திருமணத்திற்கு சென்ற அவரது நண்பர்கள் பெரியாரியவாதியாக வாசிப்பின் மூலம் மாறிய திருமுருகன் தாலிகட்டுதலை தனது திருமணத்தில் ஏற்றுக்கொண்டதே உறவினரின் நெருக்குதலினால்  தான் என்கின்றனர். மற்றபடி அவரது திருமணம் ஒரு தமிழ் திருமணமாக, திருக்குறள் வாசிப்புடன் அறத்துப் பால், மனை மாட்சி வாசிப்புடன் தான்  நிகழ்ந்தது. அந்நிகழ்வில்  சூழலியலும் கருத்தில் கொள்ளப்பட்டிருந்தது. திருமணத்திற்கு வந்தவர்களுக்கு தேங்காய், பழம் மாற்றாக நெல்லி, எலுமிச்சை, சரக்கொன்றை மரக் கன்றுகள் வழங்கப்பட்டு அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

திருமுருகன் எப்போது சிறையிலிருந்து வருவார் என்று அவரது மனைவி மற்றும் அவரது ஒன்பது வயது மகள் காத்திருக்கின்றனர்


இன்றும் பெரியாரின் புத்தகங்கள், வரைபடங்கள் ஆகியவை  விளம்பர அழகியலுக்குக்  கிடைத்த கார்பொரேட் பீங்கான் கோப்பை அங்கீகாரங்களின்  மத்தியில் அவரது அலுவலகத்தில் காட்சியில் இருக்கின்றன.

இதையெல்லாம் தாண்டி அவர் சில காலம் வரைக்கலையின் ஆர்வம் காரணமாக 1999-2000 வாக்கில் இந்தியாவின் பல நகரங்களை சுற்றி வந்தவர். தில்லியிலும் சில காலம் தங்கினார்.

அவரது அரசியல் வாழ்க்கை குறித்த திகைப்பு இல்லையென்றாலும் தற்போது அவரது வருமானம் ஈட்டும் தொழில் என்னவாகும் என்ற கவலை மனதின் ஓரத்தில் அவரது குடும்பத்தில் இருக்கின்றது. 2007 இல் தவறான மருத்துவ சிகிச்சையால் தனது தாயை இழந்த திருமுருகனுக்கு, ஒரு திருமணமான தங்கை உண்டு.

அவர் எப்போது சிறையிலிருந்து மீண்டு வருவார் என்று ஒரு விளையாட்டுவீராங்கனையான அவரது மனைவி மற்றும் அவரது ஒன்பது வயது மகள் காத்திருக்கின்றனர். தொழிற்சங்கவாதியான அவரது தந்தைக்கு மட்டுமே தனது மகனின் செயல்பாடு எந்ததிகைப்பையும் கொடுப்பதில்லை.  

அதற்கு காரணங்களும் உண்டு. மொத்தம் 40 ஆண்டு காலம் தொழிற்சங்கவாதியாகவே இருந்த அவர் தன்  சங்க நடவடிக்கை காரணமாகஅடிக்கடி மாற்றலுக்கு உள்ளாக்கப்பட்டு பல்வேறு நெருக்கடிகளை சந்தித்து 2003 இல் தமிழ்நாடு மின்சார வாரிய கடைநிலை பொறியாளராகவே  பணியிலிருந்து  ஓய்வு பெற்றார்.

ஓய்வுஊதியம் கூட மறுக்கப்பட்டு பின் நீதிமன்றம் சென்று கிடைக்கப்பெற்றது தான். பணி ஓய்விற்குப் பிறகும் ஓய்ந்துவிடவில்லை காந்தி. மின்சார வாரியத்தில் ஊழல் குறித்த புத்தகம் வெளியிட்ட அவர் தொடர்ந்து தமிழகம் சந்திக்கும் நெருக்கடிகள் குறித்து அவ்வப்போது குறிப்புகள் வெளியிட்டும் செயல்பட்டும் இருந்த வண்ணமே உள்ளார்.

இதை  வைத்து  வேண்டுமானால், திருமுருகன் காந்திக்கு ஒரு அரசியல் பின்புலம்  உள்ளது  என்று சொல்லலாம். அது  ஊடக  வெளிச்சம் இன்றி  அதிகம்  அறியப்படாமல்  இப்போதும்  செயலாற்றும்  அவரது  தந்தை  காந்தியின்  பின்புலம். இதைத் தவிர்த்தால் திருமுருகன் காந்தி தமிழக அரசியலில் சுயம்புவாக, எழுந்துவரும் செயற்பாட்டாளர். குண்டர் சட்டத்திலிருந்து மீண்டு வரும்போது திருமுருகன் மேலும் வலுவுடன் வருவார் என்கின்றனர் அவரது நண்பர்கள்.


 
 
 
 
 

அதிகம் படித்தவை

  • Saraf wants to offer quality medical care at low prices in Kolkata and other cities

    உதவிக்கு சபதமிட்டவர்

    1963-ல் தன் சகோதரனின் சிதையில் ஏழைகள் யாரும் இனி மருத்துவ சேவை கிடைக்காமல் உயிரிழக்கக்கூடாது என்று தியோ குமார் சராஃப் முடிவெடுத்தார். இன்று அவரது மருத்துவமனை, கார்பரேட் மருத்துவமனைகளுக்கு குறைந்த கட்டணத்துடன் சவால் விடுகிறது. ஜி சிங் கட்டுரை

  • Mentoring civil service aspirants

    ஆட்சிக் கனவு

    ஐ.ஏ.எஸ் அதிகாரி ஆக வேண்டும் என்ற கனவுடன் இரண்டு முறை நேர்முகத்தேர்வு வரை சென்றவர் கனகராஜ். ஆனால், அவரது கனவு நனவாகவில்லை. எனினும் சோர்ந்து போகாமல், பல இளைஞர்களின் ஐ.ஏ.எஸ் கனவை நனவாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார். பி.சி.வினோஜ் குமார் எழுதும் கட்டுரை

  • Super cop Roopa

    அதிரடி ஐபிஎஸ் ரூபா!

    ஐ.பி.எஸ் அதிகாரி ஆக வேண்டும் என்ற கனவுகளுடன் வளர்ந்தவர் ரூபா. கனவு நனவாகிய பின்னர், நேர்மையாகப் பணியாற்றிய இந்த கர்நாடக் பெண் ஐபிஎஸ் அதிகாரிக்குப் பலனாகக் கிடைத்தது அடிக்கடி பணியிட மாற்றங்களே. எனினும், தன் பாதையில் இருந்து அவர் விலகவில்லை. உஷா பிரசாத் எழுதும் கட்டுரை.

  • Rice ATM

    அரிசி ஏடிஎம்!

    ஹைதராபாத்தை சேர்ந்த ராமு தோசபதி 2006-ஆம் ஆண்டு ஒரு சாலை விபத்தை எதிர்கொண்டார்.  அதில் இருந்து உயிர் பிழைத்து வந்ததில் இருந்து நற்கொடையாளராக மாறி விட்டார். புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு அவர் ஏற்படுத்திய அரிசி ஏடிஎம் பேருதவியாக இருந்திருக்கிறது. உஷா பிரசாத் எழுதும் கட்டுரை.  

  • Philanthropist who conducts weddings of fatherless girls

    நல்ல மனம்

    குஜராத்தைச் சேர்ந்த வைர வியாபாரி மற்றும் ரியல் எஸ்டேட் உரிமையாளர் மகேஷ் சவானி பெற்றோர்கள் இல்லாத பெண்களுக்கு திருமணம் செய்து வைக்கிறார். இதுவரை 3000 திருமணங்களை நடத்தி வைத்திருக்கும் அவர், அவர்களின் திருமணச் செலவுகளை முழுமையாக ஏற்றுக் கொள்கிறார். தேவன் லாட் எழுதும் கட்டுரை

  • From running an Advertising agency to detention under Goondas Act: Thirumurugan Gandhi's story

    வேகமான செயல்பாட்டாளர்!

    சமீப காலத்தில், எந்த அரசியல் பின்னணியோ, சாதிய பின்புல அணிதிரட்டலோ இல்லாமல், தமிழக அரசியலில் திரும்பிப் பார்க்கவைத்த ஓர் இளம்  செயற்பாட்டாளர் திருமுருகன் காந்தி. குண்டர் சட்டத்தில் சிக்க வைக்கப்பட்டிருக்கும் இவரைப் பற்றி எழுதுகிறார் ராதிகா கிரி