முப்பதாயிரம் ரூபாய் முதலீட்டில் பள்ளி தொடங்கி இன்று தன் ஆசிரியர்களுக்கு சம்பளமாகவே மாதம் ஒரு கோடி வரை தருகிறார்! ஓர் ஆசிரியையின் உணர்ச்சிகரமான வெற்றிக்கதை!

குருவிந்தர் சிங் Vol 2 Issue 12 புவனேஸ்வர் 19-Mar-2018

பாலி பட்நாயக், குழந்தையாக இருக்கும்போதே, ஒரு பள்ளிக் கூடம் தொடங்க வேண்டும் என்று விரும்பினார். குழந்தைகளை அதிகாலையிலேயே எழ வைக்காத, திறன் உள்ளவர்கள், திறன் இல்லாதவர்கள் என்று வித்தியாசப்படுத்தாத பள்ளியாகவும் அது இருக்கவேண்டும் என்றும் நினைத்தார். 

தன் குழந்தைகாலக் கனவை நனவாக்கும் வகையில் மதர்ஸ் பப்ளிக் ஸ்கூல் (Mothers Public School) என்ற பள்ளியை புவனேஸ்வர் நகரில் அவர் தொடங்கிஇருக்கிறார். குழந்தைகளின் திறன்களை வளர்ப்பதாகவும் அவர்களை ஊக்குவிக்கக் கூடியதாகவும் அந்தப் பள்ளி இருக்கிறது. 

http://www.tamil.theweekendleader.com/backend/web/article/images/14-02-18-03poly.JPG

30 ஆயிரம் ரூபாய் முதலீட்டில் ஐந்து ஆசிரியர்களுடன் மதர்ஸ் பப்ளிக் ஸ்கூலை பாலி பட்நாயக் 1992-ல் தொடங்கினார். (புகைப்படங்கள்: டிக்கான் மிஸ்ரா)


1992-ம் ஆண்டு 30 ஆயிரம் ரூபாய் முதலீட்டுடன், ஐந்து ஆசிரியர்களுடன் சிறிய பள்ளியாகத் தொடங்கினார். பாலியின் கனவுப் பள்ளியில் இப்போது 150 ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடக்கும் பள்ளியில், 2200 மாணவர்கள் படிக்கின்றனர்.

“நான் குழந்தையாக இருக்கும்போது, பள்ளிக்குச் செல்வதற்காக அதிகாலையில் எழுவது பெரும் பிரச்னையாக இருந்தது. அதிக நேரம் தூங்க வேண்டும் என்று எப்போதுமே நான் நினைப்பேன்,” என்று சொல்லி விட்டு சிரிக்கிறார். “ஒரு பள்ளி தொடங்க வேண்டும் என்றும், அங்கு குழந்தைகள் காலையில் தாமதமாக வந்தால் போதும் என்றும், ரிலாக்ஸ் ஆக உணர வேண்டும் என்று அடிக்கடி நான் நினைத்துக் கொள்வேன்.”

குழந்தையாக இருக்கும்போது இன்னொரு காரணத்துக்காகவும் பள்ளிக்குப் போவதற்கு அவருக்குத் தயக்கமாக இருந்தது. குழந்தைகள் நன்றாக படிக்காவிட்டால், அவர்களை ஆசிரியர்கள், புறக்கணிப்பது  அவரை வருத்தமடைய வைத்தது.

“குழந்தைகளின் கல்வி கற்கும் திறனை வைத்து எடை போடாமல், அனைத்து குழந்தைகளையும் சமமாகப் பாவித்து முறையான கவனம் செலுத்த வேண்டும் என்று எப்போதுமே நான் நினைப்பேன். ஒரு ஆசிரியரின் பணி என்பது, குழந்தைகளுக்கு வழிகாட்டியாக இருக்க வேண்டும். அவர்களை மரியாதைக் குறைவாக புறக்கணிக்கக் கூடாது,” எனும் பாலி, தமது பள்ளியின் அலுவலக அறையில் அமர்ந்தபடி நம்மிடம் பேசினார்.

ஒடிசா மாநிலம் கட்டக்கில் பிறந்த பாலி, அவரது குடும்பத்தின் நான்கு குழந்தைகளில் மூத்தவர். அவருடைய தந்தை மதுதன் நாயக், ஹிந்துஸ்தான் ஏரோநேட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் மூத்த அதிகாரியாக இருந்தார். கோராபுட் மாவட்டத்தில் பணியாற்றினார்.

http://www.tamil.theweekendleader.com/backend/web/article/images/14-02-18-03poly3.JPG

மதர்ஸ் பப்ளிக் ஸ்கூலில் 2200 மாணவர்கள் படிக்கின்றனர்.


பாலி கோரபுட்டில் உள்ள சோனாபேரா எச்.ஏ.எல் வி.எஸ்.வி பள்ளியில் 1979-ம் ஆண்டு பள்ளிப்படிப்பை முடித்தார். பின்னர் புவனேஸ்வரில் உள்ள பி.ஜே.வி கல்லூரியில் ஹியூமானிடிஸ் படித்தார்.

இதன்பின்னர், அவர் 1981 முதல் 1985 வரை புவனேஸ்வர் நகரில் உள்ள கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கான மாநில கவுன்சில் (SCERT) கல்வி நிறுவனத்தில் ஆசிரியர் பயிற்சியில் பட்டமேற்படிப்பு படித்தார்.

“நான் தெளிவான ஒரு இலக்கைக் கொண்டிருந்தேன். நான் எஸ்.சி.இ.ஆர்.டி(SCERT)-யில் ஆசிரியர் பயிற்சி பெற்று, என்னுடைய கனவுக்கு முழுவடிவம் கொடுத்தேன்,”என்கிறார் பாலி. 

கோராபுட் திரும்பி வந்த பாலி, தாம் படித்த பள்ளியில் ஒரு ஆரம்ப பள்ளி ஆசிரியராகப் பணியில் சேர்ந்தார். 1985-ம் ஆண்டு முதன் முதலில் அவர் வேலைக்குச் சேர்ந்தபோது அவரது மாதச் சம்பளம் 1,700 ரூபாயாக இருந்தது.

புவனேஸ்வர் நகரைச் சேர்ந்த இன்டீரியர் டிசைனர் நாபாரஞ்சன் பட்நாயக் என்பவரை சில மாதங்கள் கழித்து பாலி திருமணம்செய்து கொண்டார். “திருமணத்துக்குப் பின்னர், இப்படித்தான் நான் மீண்டும் புவனேஸ்வர் வந்தேன்,” என்று விவரிக்கிறார். இந்தத் தம்பதியினருக்கு 1988-ல் ஒரு ஆண் குழந்தை பிறந்தது.

பாலி, வேலையில் இருந்து ராஜினாமா செய்து விட்டார். எனினும், திருமணத்துக்குப் பின்னரும் கூட, தமது ஆசிரியர் பணி எனும் விருப்பத்தை தொடர்ந்து தக்க வைத்துக் கொண்டிருந்தார். 1987-ம் ஆண்டு புவனேஸ்வர் நகரில் உள்ள கமலா நேரு கல்லூரியில் சேர்ந்தார். அங்கு அவர் பத்து ஆண்டுகளாக உளவியல்  பாடம் எடுத்தார்.

“திருமணத்துக்கு முன்பே என் கணவரிடம், ‘என்றாவது ஒரு நாள் நான்  பள்ளிக் கூடம் தொடங்குவேன். எனவே அதற்குச் சம்மதித்தால்தான் உங்களை நான் திருமணம் செய்து கொள்வேன்’ என்று முன் நிபந்தனை விதித்தேன். அதற்கு அவர் சம்மதம் தெரிவித்தார்,” என்று சிரிக்கிறார் பாலி.

1992-ம் ஆண்டு ஜூன் 20-ம் தேதி, ப்ராகிரித் (Prakrit) என்ற பள்ளியை பாலி தொடங்கினார். அப்போதும் கூட அவர், ஒரு ஆசிரியராகப் பணியாற்றி வந்தார். டேங்க் பாணி ரோடு பகுதியில் உள்ள தமது வீட்டின் அருகே காட்டேஜில் பள்ளியை நடத்தினார்.

http://www.tamil.theweekendleader.com/backend/web/article/images/14-02-18-03poly1.JPG

மதர் பப்ளிக் ஸ்கூலின் மாணவர்கள், பல்வேறு போட்டிகளில் பரிசுகள் பெற்றுள்ளனர்

“பள்ளிக்குக் கட்டடம் கட்டுவதற்கு பணம் இல்லை. எனவே, காட்டேஜ் அமைத்து, எனது பள்ளியைத் தொடங்கினேன்,”என்கிறார் பாலி. “புவனேஸ்வர் நகரில் அதுதான் முதல் டே கேர் பள்ளியாக இருந்தது. அங்கு படிக்கும் மாணவர்களுக்கு படிப்புடன் உணவும் வழங்கப்பட்டது. தவிர  போக்குவரத்து வசதியும் அளித்தோம்.”

பள்ளிக்கூடம் தொடங்குவதற்காக பாலி, தமது சேமிப்பில் இருந்து 30 ஆயிரம் ரூபாயை முதலீடு செய்தார். 10,000 சதுர அடிப்பரப்பில் பள்ளி இருந்தது. குழந்தைகள் மற்றும் சிறு குழந்தைகளுக்கான கிரச் ஆகவும் அதுவே செயல்பட்டது.  

“17 மாணவர்கள், 5 ஆசிரியர்களுடன் நாங்கள் கின்டர் கார்டன் பள்ளியை (pre-nursery)த் தொடங்கினோம். டியூஷன், உணவு, போக்குவரத்து ஆகியவற்றுக்காக 300 ரூபாய் வசூலித்தோம். நாங்கள் எப்போதுமே, குறைந்த அளவு கட்டணமே வசூலித்தோம். சமூகத்தில் அனைத்துப் பிரிவைச் சேர்ந்த பெற்றோர்களும், குழந்தைகளுக்குத் தரமான கல்வியை பெற முடியும்,” என்கிறார் பாலி.

பாலியின் பள்ளி, மெதுவாக வளர்ச்சி அடைந்தது. மூன்று ஆண்டுகள் கழித்து மாநில அரசு சார்பில், முறையான பள்ளி நடத்த அவருக்கு ஒரு ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டது.

“அந்த நாட்களில், கல்வி நிறுவனங்கள், பள்ளிகள் தொடங்குவதற்காக மாநில அரசு இலவசமாக நிலம் கொடுத்தது. அதன்படி எங்களுக்கு ஒரு ஏக்கர் நிலம் கிடைத்தது. புவனேஸ்வர் நகரில் 1995-ம் ஆண்டு அமைக்கப்பட்ட  எங்கள் தற்போதைய பள்ளி அரசு கொடுத்த நிலத்தில்தான் இருக்கிறது,” என்று விவரிக்கிறார் பாலி.

பள்ளியில் கட்டடம் கட்டுவதற்காக போதுமான பணம், அப்போது அவரிடம் இல்லை. எனவே, பள்ளிக்காக தற்காலிக ஷெட் அமைக்கப்பட்டது. 

“இந்த பள்ளி உண்மையில் ப்ராகிரித்தின் விரிவாக்கம்தான். ஆகவே ஐந்தாம் வகுப்புடன் பள்ளியைத் தொடங்கினோம். நாங்கள் எந்த ஒரு கடனும் வாங்கவில்லை. அதற்குப் பதில் ப்ராகிரித்தில் இருந்து கிடைத்த பணத்தை இங்கு முதலீடு செய்தோம்,” என்று சொல்கிறார்.

http://www.tamil.theweekendleader.com/backend/web/article/images/14-02-18-03poly7.JPG

பள்ளியில், ஆசிரியர்களுடன் பாலி


மதர்ஸ் இன்ஸ்டியூட் ஆப் இன்டகிரல் எஜூகேஷன் (Mother’s Institute of Integral Education) என்ற அமைப்பு நடத்திய சிறிய பள்ளி உபயோகித்து வந்த நிலம்தான் பாலியின் பள்ளிக்கு அரசு சார்பில் ஒதுக்கப்பட்டது. எனவே, அந்தப் பள்ளியின் நினைவாக மதர்ஸ் பப்ளிக் ஸ்கூல் என்று அவர் பெயர் வைத்தார். “நிதி இல்லாததால், நாங்கள் பாதிக்கப்பட்டோம். ஒவ்வொரு ஆண்டும் ஒரு வகுப்பை அதிகரித்து, மாணவர்களின் கட்டணத்தில் இருந்து பணம் பெற்றோம்,” என்று தமது பள்ளி எப்படி படிப்படியாகக் கட்டப்பட்டது என்பதை பாலி விவரிக்கிறார்.

அவர் தொடர்ந்து ஆசிரியராகப் பணியாற்றி வந்தார். 1997-ம் ஆண்டில்தான் தமது பணியை ராஜினாமா செய்தார்.

முறையே 2002-ம் ஆண்டு மற்றும் 2004-ம் ஆண்டுகளில் 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு சி.பி.எஸ்.இ அங்கீகாரம் கிடைத்தபின்னர்தான், திருப்பம் ஏற்பட்டது. “சி.பி.எஸ்.இ அங்கீகாரம் கிடைத்தபின்னர்தான், ஒரு கோடி ரூபாய் லோன் வாங்கிக் கட்டடம் கட்டினேன்,”என்கிறார் பாலி. 

2015-ம் ஆண்டில், மதர்ஸ் பப்ளிக் ஸ்கூல் தம்முடைய முதல் கிளையைத் தொடங்கியது. பூரி நகரில் 20 லட்சம் ரூபாய் செலவில் 7 ஏக்கர் நிலத்தை பாலி வாங்கினார். நர்சரியில் இருந்து 9 ம் வகுப்பு வரை அங்கு வகுப்புகள் நடைபெறுகின்றன. ஆரம்பத்தில் அங்கு 300 மாணவர்கள் சேர்ந்தனர்.

“ஐந்து ஏக்கரில் பள்ளிக்குக் கட்டடம் கட்டப்பட்டது. மீதம் உள்ள இரண்டு ஏக்கர் நிலத்தில், மூத்த குடிமக்களுக்காக ஓய்வு விடுதிகள் கட்டத் திட்டமிட்டுள்ளோம்,” என்கிறார் பாலி.

2012-ம் ஆண்டு, முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியிடம் இருந்து ஆசிரியருக்கான தேசிய விருது பெற்றார்.

இன்றைக்கு, மதர்ஸ் பப்ளிக் ஸ்கூல், புவனேஸ்வர் நகரில் சிறந்த பள்ளிகளில் ஒன்றாக உள்ளது. ஆண்டு தோறும் 100 சதவிகிதம் தேர்ச்சியைப் பெற்று கல்விச் சாதனை படைக்கிறது.

http://www.tamil.theweekendleader.com/backend/web/article/images/14-02-18-03poly6.JPG

பாலி, அதிக அளவுக் கட்டணம் வசூலிப்பதில்லை. ஒவ்வொரு ஆண்டும் குறைந்த எண்ணிக்கையிலான விண்ணப்பங்களை மட்டுமே விற்பனை செய்கிறார்

பள்ளியைத் தொடர்ந்து நடத்துவதற்கு போதுமான பணம் கிடைத்திருக்கிறது. இப்போது பாலி, ஆடம்பர கார் ஒன்றை உபயோகிக்கிறார். 150 ஆசிரியர்களுக்கு ஒவ்வொரு மாதமும்  சம்பளம் தரவே ஒரு கோடி ரூபாய் வரை ஒதுக்க முடிகிறது. இப்போது அவர் ஒரு வசதியான வாழ்க்கை  வாழ்கிறார்.

“ஆனால், பணம் சம்பாதிப்பதை இங்கு நோக்கமாகக் கொண்டிருக்கவில்லை,” என்று சொல்கிறார். “கின்டர் கார்டனுக்கு, நான் 200 விண்ணப்பங்கள் விற்பனை செய்கிறேன். 60 பேர் மட்டும் சேர்த்துக் கொள்கிறேன். உயர் வகுப்புகளில், நான் மாணவர்கள் சேர்ப்பதில்லை. இங்கு படிக்கும் மாணவர்கள் வேறு பள்ளிக்கு மாறிச் செல்லும்போது காலியிடம் ஏற்பட்டால் மட்டுமே உயர் வகுப்பில் மாணவர்கள் சேர்க்கிறோம். பிறரைப் போல பணம் சம்பாதிப்பதற்காக விண்ணப்பங்கள் விற்பதில்லை. எங்களுடைய கல்விக் கட்டணம் மாதம் தோறும் 2000 ரூபாய் முதல் 4000 ரூபாய் வரைதான் இருக்கிறது. பிற பள்ளிகளுடன் ஒப்பிடும் போது இது மிகவும் குறைவு.”

பாலியிடம் இருந்து அறிவுரையாக ஒரு வார்த்தை: “ஒரு பெண் எதையும் சாதிக்கமுடியும். பணத்துக்காக தன் கணவரையோ அல்லது பிற ஆண்களையோ சார்ந்திருக்க வேண்டியதில்லை. நம்பிக்கையுடன் பணியாற்றினால் பணம் தன்னால் வரும்.’’

அதிகம் படித்தவை

  • Monday, April 06, 2020