Milky Mist

Tuesday, 19 March 2024

இருபது வகையான அசைவ உணவுகள்... இஷ்டத்துக்கு வெட்டலாம்! ஈரோட்டு கிராமத்தில் வீட்டு உணவகம் நடத்தும் தம்பதி!

19-Mar-2024 By உஷா பிரசாத்
ஈரோடு

Posted 10 Mar 2018

கோயம்புத்தூரில் இருந்து 79 கி.மீ தொலைவில்  ஈரோடு மாவட்டத்தில் இருக்கும் சீனாபுரம் கிராமத்தில் எந்த தனிச்சிறப்பும் இல்லைதான். ஆனாலும் அக்கிராமத்துக்கு ஒரு மவுசு இருக்கிறது. அங்கே ஒரு தம்பதியினர் தங்கள் வீட்டில் நடத்தும் உணவகம் இந்தியாவின் உணவு வரைபடத்தில் அந்த கிராமத்தை இடம் பெற்றிருக்கச் செய்துள்ளது.

அந்த தம்பதி நடத்தும் யுபிஎம்(UBM) நம்ம வீட்டு சாப்பாடு என்ற ஹோட்டலில் பரிமாறப்படும் சிறப்பு அசைவ மதிய உணவு புகழ் பெற்றது. அந்த ஹோட்டலுக்கு சென்னை, பெங்களூரு போன்ற தூரமான நகரங்களில் இருந்தெல்லாம் வாடிக்கையாளர்கள் வருகின்றனர். 

https://www.theweekendleader.com/admin/upload/apr15-16-lead.jpg

யுபிஎம் நம்ம வீட்டு சாப்பாடு ஹோட்டலின் உரிமையாளர்கள் ஆர்.கருணைவேல், ஸ்வர்ணலட்சுமி தம்பதியினர், வாடிக்கையாளர்களுக்கு உணவு பரிமாறுகிறார்கள். (புகைப்படங்கள்: எச்.கே.ராஜசேகர்)


இந்த ஹோட்டலின் தனி சிறப்பு என்பது, அதன் ஆடம்பரமான அன் லிமிடெட் மதிய உணவில் இருக்கிறது. அதன்  விலை 600 ரூபாய் (சில தருணங்களில் மட்டும் 700 ரூபாய்). மட்டன், சிக்கன், மீன் , வான்கோழி உள்ளிட்ட மேலும் பலவற்றில்  இருந்து தயாரிக்கப்பட்ட 20 வகையான, பாரம்பர்யமான அசைவ உணவு வகைகளைப் பரிமாறுகின்றனர்.

7 அல்லது 8 அடி நீளமுள்ள வாழை இலையில்தான் உணவு பரிமாறப்படுகிறது. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 முதல் 5 பேர் ஒரே இலையின் முன்பு அமர்ந்து சாப்பிட முடியும். தனியாகச் சிறிய இலைதான் வேண்டும் என்றாலும் அவர்கள் அதிலும் பரிமாறுவார்கள்.

ஹோட்டலின் உரிமையாளர்களான ஆர்.கருணைவேல்(61), அவரது மனைவி ஸ்வர்ணலட்சுமி(54) இருவரும்தான் உணவு வகைகளைத் தயாரிக்கின்றனர். வார இறுதி நாட்களில் அதிக எண்ணிக்கையில் வாடிக்கையாளர்கள் வருகின்றனர். வார நாட்களில் சுமார் 50 பேர் வருவதாக அந்த தம்பதியினர் சொல்கின்றனர்.

https://www.theweekendleader.com/admin/upload/apr15-16-leadfeeding.jpg

ஒரு வாடிக்கையாளருக்கு கருணைவேல், சிக்கன் லெக் பீஸை ஊட்டி விடுகிறார்.


“வார இறுதி நாட்கள், விடுமுறைநாட்களில் 150 வாடிக்கையாளர்கள் வருவார்கள். 150 முதல் 200 கி.மீ தூரத்தில் இருந்து கூட பயணித்து குடும்பத்தினர், தங்களின்நாக்கின் சுவை நரம்புகள் தித்திக்கும் வகையில் இதயத்துக்கு இதமான உணவு வகைகளைச் சாப்பிட வருகின்றனர்.” 

“எங்கள் ஹோட்டலில் சாப்பிட்டு விட்டுச் செல்லும் வாடிக்கையாளர்களின் புன்னகை முகம்தான்,  மேலும், மேலும் அதிகம் பேர்களுக்கு உணவு அளிக்க வேண்டும் என்ற சக்தியை எனக்குக் கொடுக்கிறது,”என்கிறார் கருணைவேல்.

மட்டன் குழம்பு, ரத்தப் பொறியல், குடல் கறி, தலைக்கறி, ஈரல், பிராய்லர் சிக்கன், நாட்டுக்கோழி சிக்கன் வகைகள், மீன் குழம்பு, ஆகிய பல்வேறு வகையான அசைவ உணவு வகைகளுடன் அரிசி சோறு, ரசம், தயிர் ஆகியவையும் பரிமாறுகின்றனர்.

குழந்தைகளுக்காக, காரம் இல்லாமல் பருப்பு சேர்த்து, சிறப்பான முறையில் சிக்கன் கிரேவி தயாரித்துக் கொடுக்கின்றனர்.

திருமண விருந்தினைப் போல,ஒரே நேரத்தில் 50 பேர் சாப்பிடுவதற்கு பரிமாறுகின்றனர். 20 பேர் அவர்களது வீட்டில் அமர்ந்து சாப்பிட முடியும். மீதம் 30 பேருக்கு வீட்டின் அருகே அமைக்கப்பட்டுள்ள தனிப்பட்ட இடத்தில் சாப்பிடுகின்றனர்.

https://www.theweekendleader.com/admin/upload/apr15-16-leadcrowds.jpg

வாடிக்கையாளர்கள், விருந்து சாப்பிடுவதற்காக காத்திருக்கின்றனர்.


மதிய உணவு நேரத்தில் யுபிஎம் ஹோட்டலைச் சுற்றி உள்ள பகுதிகளைப் பார்க்கும் போது அது ஒரு கிராமச்சூழல் என்பதே தெரியாத அளவுக்கு இருக்கிறது. அந்த அளவுக்கு ஹோட்டலுக்கு வெளியே கார்களின் நீண்ட வரிசையை நீங்கள் பார்க்கலாம். காத்திருக்கும் அறையில் குடும்பத்துடன் வந்தவர்கள் உட்கார்ந்திருக்கின்றனர். இது தவிர மேலும் பலர் மர நிழலில் போடப்பட்டுள்ள இருக்கைகளில், தங்களின் முறை வரும் வரைக் காத்திருக்கின்றனர்.

மதிய உணவுக்காக மட்டும் யுபிஎம் ஹோட்டல் மதியம் 12.30 மணியில் இருந்து மாலை 3 மணி வரை திறந்திருக்கும். இதயத்துக்கு இதமான மதிய உணவை  நீங்கள் உறுதியாக உண்ண வேண்டும் என்றால், முன்கூட்டியே  தொலைபேசியில் தொடர்பு கொண்டு, உங்கள் இருக்கையை  முன்பதிவு செய்ய வேண்டும்.

கருணைவேல்,அவரது மனைவி ஸ்வர்ணலட்சுமி இருவரும், முழுமையான சைவம் என்பது ஓர் ஆச்சர்யமான செய்தி.

“நான் முழுமையான சைவம். முட்டை கூட சாப்பிட மாட்டேன். தினமும் மாலை 5 மணிக்கு ஒரே ஒரு முறை மட்டும், எளிமையான வகையில் சைவ உணவு உண்பேன். அந்த உணவை எனது 8 வயது பேத்தி எனக்குப் பரிமாறுவார்.”

“எட்டு ஆண்டுகளுக்கு முன்பே என் மனைவி அசைவம் சாப்பிடுவதை நிறுத்தி விட்டார். எங்களுடைய பல ஆண்டுகால அனுபவத்தில் இருந்து இந்த உணவு வகைகளைச் சமைக்கிறோம்,” என்கிறார் கருணைவேல்.

வீட்டில் இருந்தபடியே ஒரு ஹோட்டல் நடத்தும் யோசனை எப்போது அவர்களுக்குத் தோன்றியது?

https://www.theweekendleader.com/admin/upload/apr15-16-leadready.jpg

கருணைவேல், அவரது மனைவி இருவரும், தாங்கள் சமைத்த உணவு வகைகளை வாடிக்கையாளர்களுக்கு அவர்களின் இதயத்துக்கு இதமான வகையில் பரிமாறுகின்றனர்..


“வீட்டுக்கு வருபவர்களுக்கு விருந்தோம்பல் செய்வதில், எங்கள் குடும்பம் எப்போதுமே சிறந்து விளங்குகிறது. எங்கள் வீட்டுக்கு வருபவர்கள், பசியோடு திரும்பிப் போகக் கூடாது என்பதில் என்னுடைய மூதாதையர்கள் கவனமுடன் இருந்தனர். அதே பாரம்பரியத்தை நாங்கள் தொடர்கிறோம்,” என்கிறார் கருணைவேல்.

“எங்கள் குடும்பம் நல்ல நிலைக்கு வந்தபோதிலும், அசைவ உணவு வகைகள் சமைப்பது மிகவும் செலவு பிடிக்கக் கூடியது. எனவேதான் இலவசமாக உணவு கொடுக்கவில்லை,” என்று மேலும் கூறுகிறார்.

அவர் இளைஞராக இருக்கும்போது, வீட்டில் பல்வேறு சுவையான உணவு வகைகளைச் சாப்பிட்டு வளர்ந்தவர்.

“சுவை மற்றும் நம்பகத்தன்மையில் ஒரு போதும் நாங்கள் விட்டுக் கொடுப்பதில்லை. பாரம்பரியமான செய்முறைகளின் படி இந்த அசைவ உணவு வகைகள் செய்யப்படுகின்றன,” என்கிறார் கருணைவேல். 

https://www.theweekendleader.com/admin/upload/apr15-16-leadkitchen.jpg

ஸ்வர்ணலட்சுமி,சமையல் அறையில்உணவினை சுடச் சுட சமைக்கிறார்.


1992-93-ல் கருணைவேல் குடும்பம், அவர்களின் கிராமத்தில் உள்ள ஒரு மர அறுவை மில்லில் கேன்டீன் ஒன்றைத் தொடங்கியது. ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு இந்தத் தொழிலை வீட்டில் இருந்து நடத்துவது என்று தீர்மானித்தனர்.

“முக்கிய நெஞ்சாலையில் எங்கள் வீடு அமைந்துள்ளதால், இந்த வழியே செல்லும் அரசு ஊழியர்கள்  மதிய உணவுக்காக இங்கு  சாப்பிட வந்தனர். அவர்களின் வாய்வழி விளம்பரத்தால், மேலும் அதிக வாடிக்கையாளர்கள் எங்கள் ஹோட்டலுக்கு வரத்தொடங்கினர்,” என்கிறார் கருணைவேல்

இந்தத் தம்பதியினர், சமைப்பதற்கான பொருட்களை உள்ளூரிலேயே வாங்குகின்றனர். இறைச்சி, மீன் ஆகியவற்றின் தரத்தைச் சரிபார்த்து கருணைவேல் வாங்குகிறார். மசாலா பேஸ்ட் வகைகள் மற்றும் கலவைகளை தயாரிப்பது குறித்து தமது மனைவிக்கு முறையான உத்தரவுகளைப் பிறப்பிக்கிறார்.

“வீட்டிலேயே நடத்தப்படும் ஹோட்டல் என்பதால், என் மனைவிதான் சமையல் பொறுப்பை ஏற்றிருக்கிறார். எனவே உணவு தயாரிப்பின்மீது எங்களுக்குப் பெரும் கட்டுப்பாடு இருக்கிறது. எனவேதான், தரம் மற்றும் சுவையை எப்போதும் ஒரே மாதிரியாக கையாள முடிகிறது,” என்று சொல்கிறார்.

https://www.theweekendleader.com/admin/upload/apr15-16-leadfamily.jpg

சுவையான உணவு பரிமாறப்படும் தருணத்துக்காக ஒரு குடும்பம் காத்திருக்கிறது.


“ஒட்டு மொத்த குடும்பத்துக்கும் சொந்த வீட்டில் இருந்து சாப்பிடுவது போன்ற உணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பதுதான் எங்கள் நோக்கம்.மேலும், ஒரே வரிசையில் உட்கார்ந்து, ஒரே இலையில் உணவைச் சுவைத்து சாப்பிடும் அனுபவத்தையும் வாடிக்கையாளர்களுக்குக் கொடுக்கிறோம்,” என்கிறார் கருணைவேல்.

இங்கே நீங்கள் சைவமாக இருந்தாலும், கவலைப்பட வேண்டியதில்லை. ”எல்லா நாட்களிலும், 5 பேர் வரை சாப்பிடும் வகையில் போதுமான சைவ உணவு தயாரிக்கப்படுகிறது. “எங்கள் வீடு தேடி வந்த யாரும், எதையும் சாப்பிடாமல் திருப்பி அனுப்பப்படமாட்டார்கள்,” என்றார் அவர்.

https://www.theweekendleader.com/admin/upload/apr15-16-leadcars.jpg

ஹோட்டலின் முன்பக்கத் தோற்றம்.


“யுபிஎம் நம்ம வீட்டு சாப்பாடு என்பது, திரும்பத் திரும்ப வரும் வாடிக்கையாளர்களின் மத்தியில் பிரியமானதாக மாறிவிட்டது. இதை என் உழைப்புக்குக் கிடைத்த பரிசாக நினைக்கிறேன்.”

“வெறுமனே பணம் சம்பாதிப்பதற்கான ஹோட்டல் மட்டும் அல்ல இது. மாறாக சேவை வழங்குவதை நோக்கமாக க் கொண்டிருக்கிறோம். இதுதான் எப்போதுமே என் விருப்பம்,” என்கிறார் கருணைவேல்.


 
 
 
 
 

அதிகம் படித்தவை

  • Cleaning the City

    அசத்தும் ஐஏஎஸ்!

    மருத்துவரான அல்பி ஜான்,  குடிமைப்பணித் தேர்வு எழுதி முதன்முயற்சியிலேயே ஐ ஏ எஸ் ஆனவர்.  துணை ஆட்சியராக தமிழ்நாட்டில் பணியைத் தொடங்கிய‍ அவர், திடக்கழிவு மேலாண்மை நிர்வகிப்பில் சிறந்து விளங்குகிறார். சென்னை மாநகரை மேம்படுத்தும் மியாவாகி காடுகளை உருவாக்கும் திட்டத்தையும் நிறைவேற்றுகிறார். உஷா பிரசாத் எழுதும் கட்டுரை.

  • Successful pursuit of Happiness

    மில்லியன் டாலர் கனவு

    அமெரிக்காவைச் சேர்ந்த கிறிஸ் கார்ட்னர், சிறுவயதில் அனுபவிக்காத துன்பம் ஏதும் இல்லை. அவரது தாயின் இரண்டாவது கணவரால் பெரும் துன்பத்துக்கு உள்ளாக்கப்பட்டார். அவர் பின்னாளில் மில்லியன் டாலர்களை சம்பாதிக்க வேண்டும் என்ற தன் இலக்கை வெற்றிகரமாக அடைந்தார். பி.சி. வினோஜ் குமார் எழுதும் கட்டுரை

  • Madurai to Tokyo

     ஒலிம்பிக் தமிழச்சி!

    மதுரை மாவட்டத்தின் சின்னஞ்சிறிய கிராமமான சக்கிமங்கலத்தை சேர்ந்தவர் ரேவதி. பள்ளி அளவிலான தடகளப் போட்டிகளில் விளையாட்டு போக்கில் பங்கேற்றார். அவருக்குள் மறைந்திருந்த திறமையை கண்டறிந்த பயிற்சியாளர் கண்ணன் ரேவதியை ஒலிம்பிக் தகுதி வரை உயர்த்தியிருக்கிறார். ரேவதியின் வெற்றிக்கதை.    

  • Smooth sailing

    நினைத்ததை முடிப்பவர்

    ஹைதராபாத்தில் ஒரே ஒரு கடையுடன் தொடங்கப்பட்ட ட்ரங்கன் மங்கி நிறுவனம் இன்று ஐந்து ஆண்டுகளில் 110 கடைகளுடன் 60கோடி ரூபாய் ஆண்டுவருவாய் ஈட்டுகிறது. இதன் நிறுவனர் சாம்ராட் ரெட்டியின் வெற்றிக்கதையை எழுதுகிறார் சோபியா டேனிஷ்கான்

  • Glossy in glass

    கண்ணாடியால் ஜொலிப்பவர்!

    ஷாதன் சித்திக் பிறந்தது ஒரு நடுத்தரக் குடும்பம்.  அவர்  12 ஆம் வகுப்புப் படிக்கும்போது தந்தை இறந்து விட்டார். பிறகு சகோதரர் உதவியுடன் பொறியியல் பட்டப்படிப்பை முடித்தவர், இப்போது கண்ணாடி விற்பனைத் தொழிலில் ஜொலிக்கிறார். குருவிந்தர் சிங் எழுதும் கட்டுரை.

  • Friends from corporate background start meat business and make crores of rupees

    கறி விற்கும் கார்ப்பரேட்!

    பெரு நிறுவனங்களில் நல்ல பணியில் இருந்த இரு நண்பர்கள் அதைவிட்டுவிட்டு தரமான இறைச்சியை ஆன்லைனில் விற்பனை செய்ய இறங்கினார்கள். லிசியஸ் என்ற அந்த பிராண்ட் இரண்டே ஆண்டுகளில் 15 கோடிக்கும் மேல் வர்த்தகம் செய்கிறது. இந்த வெற்றிக்கதையை விவரிக்கிறார் உஷா பிரசாத்