Milky Mist

Tuesday, 23 April 2024

13,000 ரூபாயில் தொடங்கி ஒரு கோடி ரூபாய் வருவாய் ஈட்டுகிறார் பீகார் கிராமத்திலிருந்து மும்பைக்கு வந்திருக்கும் இளம் பெண்!

23-Apr-2024 By தேவன் லாட்
மும்பை

Posted 31 Mar 2018

பத்து ஆண்டுகளுக்கு முன்பு, பந்தனா ஜெயின், பீகாரில் உள்ள தமது குடும்பத்தினரை விட்டு வீட்டில் இருந்து, வேலைக்காக வெளியேறிய முதல் பெண்.

இன்றைக்கு, மும்பையில் தொழில் முனைவோராக இருக்கும் 30 வயதாகும் அவர், அழகிய, சூழலுக்கு ஏற்ற கார்ட்போர்டு அட்டைகளால் (corrugated cardboard), ஃபர்னிச்சர்களை உருவாக்கும் தொழில் முனைவோராக அறியப்பட்டிருக்கிறார். அந்தேரியில் உள்ள தமது ஸ்டுடியோ மற்றும் ஆன்லைன் வழியாவும் ஃபர்னிச்சர்களை வி்ற்பனை செய்கிறார்.

https://www.theweekendleader.com/admin/upload/22-02-18-11ban1.JPG

சில்வின் ஸ்டுடியோவை 13,000 ரூபாய் முதலீட்டில் கடந்த 2013-ம் ஆண்டு உருவாக்கினார். (புகைப்படங்கள்:  மனோஜ் பாட்டீல்)


கடந்த 2013-ல் சில்வின் ஸ்டுடியோ நிறுவனத்தை பந்தனா தொடங்கினார். 2017-ம் ஆண்டில் ஒரு கோடி ரூபாய் அளவுக்கு வருவாய் கிடைத்தது. இது, அவரது எழுச்சியூட்டும் கனவை நனவாக்கிய உண்மை கதை.

 பீகாரில் உள்ள தாக்கூர்கஞ்ச்  எனும் சிறிய கிராமத்தில் உள்ள பெரிய வீட்டில் 50 குடும்ப உறுப்பினர்களுடன் பந்தனா வளர்ந்து வந்தார். அது ஒரு கூட்டுக்குடும்பம்.  “படிப்புக்காக ஆண்கள் மட்டும்தான் கிராமத்தை விட்டு  வெளியேறுவது வழக்கம்,” என்று பந்தனா நினைவு கூர்கிறார். “நான் மட்டும்தான் முதன் முதலாக எங்கள் குடும்பத்தில் இருந்து வெளியே வந்த பெண். 2008-ம் ஆண்டு என் திருமணத்துக்குப் பின்னர் நான் பீகாரை விட்டு வெளியேறினேன்.”

பந்தனா, தம் கிராமத்தில் உள்ள  புரஜக்ட் பெண்கள் உயர்நிலைப் பள்ளி எனும் அரசின் பள்ளி மற்றும் கல்லூரிக்குப் படிக்கச் சென்றார். ஆனால், பந்தனா எப்போதுமே கைவினைக்கலைகள் மீது ஆர்வம் கொண்டவராக, அதைத்தான் படிக்க வேண்டும் என்று விரும்பினார்.  “நான் குழந்தையாக இருக்கும் போதே, கலையிலும், கைவினைப்பொருட்கள் மீதும் ஆர்வம் ஏற்பட்டது,” என்று விவரிக்கிறார். “நான் துர்கா பூஜை நடக்கும் பந்தல்களுக்குச் செல்வேன். அங்கு செய்யபட்டிருக்கும் அழகிய வேலைப்பாடுகள் மற்றும் கலைவடிவங்களைக் கண்டு ஆச்சர்யப்படுவேன். அவைகள் எவ்வாறு செய்யப்படுகின்றன என்று தெரிந்து கொள்ள விரும்புவேன். ஆனால், அதனை செய்த எந்த ஒரு கலைஞரையும் சந்திக்க என்னை அனுமதிக்க மாட்டார்கள்.”

பந்தனா வளர்ந்தபிறகு, மும்பையில் உள்ள ஜே.ஜே.ஸ்கூல் ஆஃப் ஆர்ட் பற்றிக் கேள்விப்பட்டார். அங்கு எப்படியும் சேர்ந்து விட வேண்டும் என்று மனதில் நினைத்துக் கொண்டார். “கலை தொடர்பான படிப்புப் படிக்க மிகவும் விருப்பமாக இருந்தேன். ஆனால், நான் திருமணம் செய்து கொண்ட பின்னர்தான் அதைப் படிக்க வேண்டும் என்று என் குடும்பத்தினர் சொல்லிவிட்டனர்...,” என்கிறார் பந்தனா. காமர்ஸ் பிரிவில், பட்டப்படிப்பு முடித்தார். “எனவே திருமணம்தான் என்னை வீட்டில் இருந்து வெளியே செல்ல அனுமதிக்கும் என்று தீர்மானித்தேன். என்னுடைய கனவை நனவாக்க, அதுதான் வாய்ப்பு. என்னுடைய நண்பர் ( இப்போது கணவர்) மணிஷ், அப்போது ஐஐஎம் லக்னோவில் படித்துக் கொண்டிருந்தார். மும்பையில் ஒரு வேலையில் சேரும்படி அவரிடம் சொன்னேன்.”

திருமணத்துக்குப் பின்னர், பந்தனா, 2008-ம் ஆண்டு ஏப்ரலில் ஆன்லைன் மூலம் ஜே.ஜே.ஸ்கூல் ஆஃப் ஆர்ட்ஸில் சேர விண்ணப்பித்தார். ஜூன் மாதம் நுழைவுத்தேர்வு எழுதினார். “இடையில் ஒன்றரை மாதம் தான் இருந்தது. இந்தத் தேர்வு எளிதாக இருக்கும் என்று நினைத்தேன். ஆனால் எனக்கு ஒன்றுமே தெரியவில்லை,” என்று நினைவு கூறும் அவர், “ஜே.ஜே. ஆர்ட்ஸில் படித்த முன்னாள் மாணவர் ஒருவர் டியூசன் எடுப்பதாக யாரோ ஒருவர் என்னிடம் சொன்னார். எனவே, அவரிடம் நான் நாளொன்றுக்கு 12 மணி நேரம் படித்தேன்.”

டியூசன் எடுத்த ஜாவேத் முலானியிடம், பல்வேறு வித்தியாசமான முறைகளில் எப்படிச் சிந்திப்பது என்பதைக் கற்றுக்கொண்டார். தவிரவும், 2டி, 3 டி , மெமரி டிசைன் உள்ளிட்ட பல டிசைன்களைக் கற்றுக்கொண்டார். “மிகவும் கடினமாக உழைத்தேன்,”  என்றபடி சிரிக்கிறார்.

https://www.theweekendleader.com/admin/upload/22-02-18-11ban4.jpg

பந்தனா, குழந்தையாக இருக்கும் போது துர்கா பந்தலில் செய்யப்பட்டிருந்த அலங்காரங்களால் ஈர்க்கப்பட்டார். ஆனால் அதனை தயாரித்த கலைஞர்களை சந்திக்க அனுமதிக்கப்பட வில்லை.


மணிஷூக்கு, ஒரு பெரிய கார்ப்பரேட் நிறுவனத்தில் வேலை கிடைத்தது. அவர்கள் இருவரும் குர்லா பகுதியில் குடியிருந்தனர். “அந்த சமயத்தில் என் கணவர் மிகவும் ஒத்துழைத்து ஊக்குவித்தார்,” என்கிறார் பந்தனா.

பத்தனாவின் கடினமான படிப்புக்குப் பலன் கிடைத்தது. மகராஷ்டிரா மாநிலம் அல்லாத மாணவர்களுக்கு எட்டு இடங்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டிருந்தபோதிலும், பந்தனா அதில் ஒருவராகத் தேர்வானார்.

கல்லூரியில், பந்தனாவுக்கு அவரது சக மாணவர்கள் பெரும் ஆதரவும் ஊக்கமும் அளித்தனர். “திறமைவாய்ந்த மாணவர்களால் எப்போதும் சூழப்பட்டிருப்பேன். வாழ்க்கையில் என்ன தேவை என்பது அவர்களுக்குத் தெரியும். என்னைவிட சிறப்பான பலர் இருந்தனர். அவர்கள் எனக்கு பெரும் அளவில் உதவினர். கல்லூரி முடிந்த பின்னரும் கூட என் வீட்டுக்கு வந்தும்  கூட எனக்குக் கற்றுக் கொடுத்தனர். அவர்களிடம் இருந்து பெரும் அளவில் கற்றுக்கொண்டேன்.”

பந்தனா, கலைப் படிப்பை முடித்தார். சிறந்த மாணவியாகத் தேர்ச்சி பெற்றார். எனினும், படிப்புக்குப் பின்னர், அந்த பட்டப்படிப்பை வைத்துக் கொண்டு என்ன செய்யப்போகிறோம் என்று அவருக்குத் தெரியவில்லை.

“இந்த சமயத்தில் என்னுடைய கணவர், புது வீடு ஒன்று வாங்கினார். எனக்கு நிறைய நேரம் கிடைத்தது. எனவே, எங்கள் வீட்டுக்கான நாற்காலிகள் டிசைன் செய்தேன்,” என்கிறார் பந்தனா. “அட்டையை உபயோகித்து வித்தியாசமான முறையில் நாற்காலி செய்ய வேண்டும் என்று நினைத்தேன்.”

ஆனால், அவருக்கு எங்குமே, தரமான மறுசுழற்சி செய்யப்பட்ட அட்டைகள் கிடைக்கவில்லை.  “தாரவி முதல் கிராஃபோர்டு மார்க்கெட் வரை மூன்று மாதங்களாகத் தேடினேன். மும்பையின் ஒவ்வொரு பகுதிக்கும் சென்று, தேடினேன். அங்கெல்லாம் குப்பைக்கு விற்றதுதான் கிடைக்கும்,” என்று சிரிக்கிறார் பந்தனா.

கடைசியாக அவருக்கு ஒரு இடத்தில் அட்டைகள் கிடைத்தன (எங்கு கிடைத்தது என்று அவர் சொல்லவில்லை). மறு சுழற்சி செய்யப்பட்ட அந்த அட்டைகளை வெட்டுவது அவ்வளவு எளிதல்ல என்பது அவருக்குப் புரிந்தது.

https://www.theweekendleader.com/admin/upload/22-02-18-11ban3.JPG

பந்தனாவின் தொழிற்சாலை மற்றும் ஸ்டுடியோவில் மொத்தம் 18 பேர் பணியாற்றுகின்றனர்.

“அட்டையை சேதப்படுத்தாத பிளேடு ஒன்றை, ஆன்லைனில் பார்த்து நானே தயாரித்தேன்,” என்கிறார் பந்தனா. மூன்று மாதங்களுக்குப் பின், 4000 ஆயிரம் ரூபாய் செலவழித்து கடைசியாக ஒரு நாற்காலியை உருவாக்கினார்.

“இதனை நான் மிகவும் விரும்பினேன். எனினும் அது நல்ல யோசனையாக எனக்குத் தெரியவில்லை,” என்று பந்தனா சிரிக்கிறார்.

ஆனால், ஒரு கட்டத்தில் அதுவே ஒரு நல்ல ஐடியாவாக மாறியது. அவருடன் படித்த ராகுல் டோங்க்ரேவிடம் இது குறித்து கேட்டார். அவர் தற்போது பந்தனாவின் ஸ்டுடியோவில் மேனேஜராக இருக்கிறார்.

ராகுல், பந்தனாவின் ஐடியாவுக்கு ஆதரவு தெரிவித்தார். பந்தனா, 13,000 ரூபாய் முதலீட்டில் 2013-ம் ஆண்டு சில்வின் ஸ்டுடியோவைத் தொடங்கினார். சில்வின் என்பது ரோமன் வார்த்தை, மரங்களின் கடவுள் என்ற அர்த்தமாகும். அந்தக் கடவுள் காடுகளைக் காப்பாற்றுகிறார். சூழலுக்கு ஏற்ற மறுசுழற்சி செய்யும் வகையிலான ஃபர்னிச்சர் தயாரிப்புக்கு அந்தப் பெயர் பொருத்தமாக இருந்தது. 

“அடுத்ததாக நாங்கள், ஐந்து பேர் அமரக் கூடிய சோஃபாவை தயாரித்தோம். அதனை இன்னும் கூட நாங்கள் வீட்டில் உபயோகிக்கிறோம்,” என்கிறார் பந்தனா.

பரிசோதனை முயற்சியாக விளக்குகள் செய்ய ஆரம்பித்தார். 10-12 விளக்குகள் செய்த உடன், தம்முடைய வீட்டிலேயே ஒரு கண்காட்சி வைத்தார். அதற்கு தன் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர், தவிர கலைத்துறையைச் சேர்ந்தவர்களையும் அழைத்தார். இது பெரும் வெற்றி பெற்றது.

கோரெகாவ், என்.எஸ்.இ மைதானத்தில் நடைபெற்ற கண்காட்சியில் அவர் இடம் பெற்றார். “அதில் இடம் பெறுவதற்காக 35,000 ரூபாய் கொடுத்தோம். ஆனால், அங்கே என்ன செய்வது என்று தெரியவில்லை,” என்றார் பந்தனா.

 “உதவிக்கு ஒரு ஆள் பணியமர்த்திவிட்டு இதர ஸ்டால்களுக்குச் சென்றேன். அவர்கள் என்ன செய்து கொண்டிருக்கின்றனர். எப்படித் தொழில்களை நடத்துகின்றனர் என்பதைத் தெரிந்து கொண்டேன்.”

இது ஒரு நல்ல அனுபவமாக அவருக்கு அமைந்தது. இதன் பின்னர், பெப்பர்ஃப்ரை, அமேசான் போன்ற ஃபர்னிச்சர் இணையதளங்களில் சில்லறை விற்பனையைத் தொடங்கினர்.  ஓரளவு வருவாய் கிடைக்கத் தொடங்கியது.

https://www.theweekendleader.com/admin/upload/22-02-18-11ban2.JPG

தான் வடிவமைத்த ஒரு விளக்கு முன்பு பந்தனா அமர்ந்திருக்கிறார்.


சில்வினுக்கு இப்போது வாசாய் பகுதியில் ஒரு தொழிற்சாலை இருக்கிறது. ராகுல் இதனை கவனித்துக்கொள்கிறார். அங்கு உள்ளூரைச் சேர்ந்த 10 பெண்கள் பணியாற்றுகின்றனர். மொத்தமாக தொழிற்சாலை மற்றும் ஸ்டூடியோவில் 18 பேர் பணியாற்றுகின்றனர்.

மறு சுழற்சி செய்யப்பட்ட அட்டைகளை உபயோகித்து தயாரிக்கும் பொருட்கள்தான், பந்தனா நிறுவனத்தின் தனிச் சிறப்பு வாய்ந்த விற்பனையாகும் (USP). அவர் தயாரிக்கும் விளக்குகள் 4500 ரூபாய் முதல் 7000 ரூபாய் வரை விற்பனை ஆகின்றன. அவர் தயாரிக்கும் சோஃபா 5 லட்சம் ரூபாய் வரை விற்பனை ஆகிறது.

சில்வின் ஸ்டுடியோவின் ஆண்டு வருவாய் என்பது இன்றைக்கு ஒரு கோடி ரூபாய் ஆக இருக்கிறது. 2020-ம் ஆண்டில் தம்முடைய நிறுவனத்தை சர்வதேச அளவுக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்று பந்தனா விரும்புகிறார். “சில்வின் நிறுவனத்தை சர்வதேச அளவில் நடக்கும் ஃபர்னிச்சர்கள் கண்காட்சியான மிலன் சலூன் டெல் மொபைலுக்கு (Milan Salone Del Mobile) எடுத்துச் செல்ல வேண்டும்,”என்கிறார்.

இவர் பத்து ஆண்டுகளுக்கு முன்புதான், பீகாரில் உள்ள குடும்பத்தில் இருந்து வெளியே வந்த பெண் என்பதைப் பார்க்கையில் அவர் இன்னும் பெரிய உயரங்களைத் தொடுவார் என்றே தோன்றுகிறது.


 
 
 
 
 

அதிகம் படித்தவை

  • born in a small town he is now fighting brands like reebok and nike

    விளையாட்டாக ஒரு வெற்றி!

    அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ரோஷன் பெய்த், விளையாட்டு ஆர்வம் கொண்டவர். இன்றைக்கு விளையாட்டு வீரர்களுக்கான ஆடைகள் உற்பத்தி செய்யும் இரண்டு வெற்றிகரமான நிறுவனங்களின் உரிமையாளர். சோபியா டேனிஷ்கான் எழுதும் கட்டுரை

  • How a grocer's son started a biscuit factory and became a crorepati

    பிஸ்கட்டில் விளைந்த தங்கம்!

    அவர் சாதாரண மளிகைக்கடைக்காரரின் மகன். குடும்பத்துக்குப் போதுமான அளவுக்கு வருமானம் இல்லை. இருந்தும் பெரிதாக யோசித்து பிஸ்கட் நிறுவனம் தொடங்கினார். இன்று 100 கோடிக்கும் மேல் விற்பனை செய்யும் ப்ரியா புட் ப்ராடக்டஸ் உருவான கதை இது. கட்டுரை: ஜி சிங்

  • Rags to riches in Kolkatta

    நிஜ ஹீரோ

    கொல்கத்தாவில் சலவைத் தொழிலாளியின் மகனாகப் பிறந்த பிகாஷ், ஒரு கிரிக்கெட் வீரர் குடும்பத்தின் உதவியுடன், படித்து சமூகத்தில் உயர்ந்த இடத்தைத் தொட்டிருக்கிறார். பிரபலமான வங்கிகளில் பணியாற்றியவர் இப்போது பெருநிறுவனம் ஒன்றில் உயர்பதவியில் இருக்கிறார். சோமா பானர்ஜி எழுதும் கட்டுரை

  • The success story of sailor who became an entrepreneur

    வெற்றிமேல் மிதப்பவர்

    உலகெல்லாம் பயணம் செய்யவேண்டும் என்ற ஆசையுடன் கப்பலில் வேலைக்குச் சேர்ந்தவர் பீஹாரில் முசாபர்பூரைச் சேர்ந்த புர்னேந்து சேகர். இன்று மும்பையில் சுமார் 100 கோடி வரை வர்த்தகம் செய்யும் தொழிலதிபராக உயர்ந்துள்ளார். தேவன் லாட் எழுதும் வெற்றிக்கதை

  • Former child worker in a flower farm is now a rich man

    பூக்களின் சக்தி

    தெலுங்கானாவில் இருக்கும் தன் ஊரைவிட்டு பதினாறு வயதில் பொல்லாபள்ளி ஸ்ரீகாந்த் பெங்களூர் மலர்ப்பண்ணை ஒன்றில் வேலை பார்க்க வந்தார். மாத சம்பளம் 1000 ரூ. இன்று அவர் ஆண்டுக்கு 70 கோடி ருபாய்க்கு விற்பனை செய்யும் முன்னணி மலர் உற்பத்தியாளர். உஷா பிரசாத் எழுதும் கட்டுரை

  • No soil, no land, agriculture revolution in terrace in chennai

    மண்ணில்லா விவசாயம்

    ஹைட்ரோபோனிக்ஸ் என்கிற மண் இல்லாமல் விவசாயம் செய்யும் நவீன தொழில்நுட்பத்தை தொழில்முயற்சியாகக் கைக்கொண்டு வெற்றிபெற்றுள்ளார் சென்னையைச் சேர்ந்த ஸ்ரீராம் கோபால். ப்யூச்சர் பார்ம்ஸ் என்கிற அவரது நிறுவனம் வேகமாக வளர்கிறது. பி சி வினோஜ்குமார் எழுதும் கட்டுரை